Wednesday, February 1, 2023

நெருக்கமும் நம்பிக்கையும்

இன்றைய இறைமொழி 

புதன், 1 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 4ம் வாரம்

எபி 12:4-7, 11-15. மாற் 6:1-6.

நெருக்கமும் நம்பிக்கையும்

இயேசுவும் தம் சீடர்களுடன் சொந்த ஊருக்கு வருகின்றார். ஓய்வு நாள் ஒன்றில் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கின்றார். அவருடைய போதனை வித்தியாசமான உணர்வலைகளை ஏற்படுத்துகிறது. சிலர் அவருடைய போதிக்கும் திறன் கண்டு வியப்படைகின்றனர். தச்சராக இருந்த அவர் போதகராக மாறியிருப்பது கண்டு மகிழ்கின்றனர். இளவலாக தங்கள் தெருக்களில் ஓடி விளையாடிய இயேசு அவர்கள் கண்கள் முன் வந்து போகின்றார். இப்படி மாறிவிட்டாரே என்று நினைத்துக்கொண்டிருந்த சிலர் இயேசுவின் எளிய பின்புலம் கண்டு அவரைக் குறித்து இடறல்படுகின்றனர். 'மரியாவின் மகன்தானே!' என்று கேலி பேசுகின்றனர். யூத மரபில் தந்தையரின் பெயர்களைக் கொண்டே பிள்ளைகள் அடையாளப்படுத்தப்படுவர். இயேசுவின் கன்னிமைப் பிறப்பைக் கேலி செய்வதாக இருக்கின்றது அவர்களுடைய சொல்லாடல். 

இறைவாக்கினர்கள் தங்கள் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்னும் தன் சமகாலத்துப் பழமொழி ஒன்றை அவர்களுக்கு நினைவூட்டுகின்றார் இயேசு. இறைவாக்கினர் பணி என்பது முன்நின்று உரைக்கும் பணி. முன்நிற்கும் ஒருவரை அவருடைய நிகழ்காலத்தில் பார்க்காமல் இறந்த காலத்தில் பார்க்கத் தூண்டுகிறது அவரோடு உள்ள நெருக்கம். விளைவு, அவரை இறைவாக்கினராக ஏற்றுக்கொள்வதற்கு மனம் தயக்கம் காட்டுகிறது. மேலும், ஒருவரின் நிகழ்காலத்தை நாம் ஏற்றுக்கொள்ள இயலாதபோது, அவருடைய கடந்த காலத்தைத் தேடிப் பார்ப்பதும் மனித இயல்பு. இயேசுவால் அங்கே எந்த வல்ல செயலும் செய்ய இயலவில்லை எனப் பதிவு செய்கின்றார் மாற்கு.

சிந்திப்போம்,

நெருக்கத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு உள்ளது. அந்தக் கோட்டைச் சரியாக நிர்ணயிக்கும் ஒருவர்தான் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ள முடியும். நம் அன்றாட திருப்பலிக் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், நவநாள்கள், பக்தி முயற்சிகள் போன்றவை ஒரு வகையான நெருக்கத்தை ஏற்படுத்தி நம்பிக்கையிலிருந்து நம்மை நகர்த்திவிடலாம். அல்லது நம் நம்பிக்கையை எந்திரமயமாக்கிவிடலாம். நம்பிக்கை எப்போதும் தனிநபர் சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.

தன் வாழ்வில் நன்றாக முன்னேறிக்கொண்டிருக்கும் ஒருவரை, அல்லது வெற்றியாளர் ஒருவரை, அல்லது நல்ல நிலையில் இருக்கும் என் நண்பரை நான் பார்க்கும்போது என் மனம் எப்படி இருக்கிறது? அவரைக் குறித்து நான் வியப்படைகின்றேனா? அல்லது அவருடைய எளிய தொடக்கம் நினைத்து இடறல்படுகின்றேனா? அவருக்கும் எனக்கும் உள்ள நெருக்கமே என்னை அவரிடமிருந்து தூரமாக்கிவிடுகிறதா?

வல்ல செயல்களை நம்புகிறவர்களுக்கே வல்ல செயல்கள் நடக்கின்றன. இயேசுவின் ஊரார் ஒரு போதகரில் தச்சரையும், இறைமகனில் மரியாவின் மகனையும் கண்டனர். அவர்களால் அவ்வளவுதான் காண முடிந்தது. வல்ல செயல்களுக்கு அடிப்படையாக இருப்பது நம்பிக்கைப் பார்வை. நம்பிக்கைப் பார்வையே நம்மை சாதாரணவற்றிலிருந்து உயர்த்துகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், எபிரேய விவிலியத்திலிருந்து பல கதைமாந்தர்களை நம்பிக்கையின் முன்மாதிரிகளாகச் சுட்டிக்காட்டுகின்ற ஆசிரியர், துன்பங்களுக்கு நடுவிலும் நம்பிக்கையில் நிலைத்திருக்குமாறு கற்பிக்கின்றார். நம்பிக்கைக்கு அவசியம் விடாமுயற்சி. நெருக்கம் விடாமுயற்சியின் எதிரியாக இருக்கிறது. 


No comments:

Post a Comment