ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு
சீராக்கின் ஞானம் 15:15-20 1 கொரிந்தியர் 2:6-10 மத்தேயு 5:17-37
இதய உருவாக்கம்!
இயேசுவின் சீடர்கள் தங்களுடைய நம்பிக்கையை இந்த உலகத்தில் வாழ்வாக்கி உப்பாக இவ்வுலகோடு கலந்து அதற்குச் சுவையூட்டவும், ஒளியாகக் கடந்து நின்று தன்னகத்தே ஈர்க்கவும் செய்கிறார்கள் என்று கடந்த வார ஞாயிறு வழிபாடு (நற்செய்தி வாசகம்) நமக்கு நினைவூட்டியது. நம்முடைய பிரசன்னம் வெளிப்புறத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறித்து இது நமக்கு அறிவுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக வரும் இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 5:17-27) இயேசுவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை சீடரின் உள்ளத்தில் உள்ளார்ந்த மாற்றத்தை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை எடுத்தியம்புகிறது. அல்லது இதய உருவாக்கமே சீடத்துவத்தின் நோக்கம் என்று சொல்கிறது.
இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 15:15-20) சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாகவும், ஞானநூல்களில் ஒன்றாகவும் உள்ளது இந்நூல். 'ஞானம்' என்பதை இப்படி வரையறுக்கலாம்: 'நம்முடைய நலத்திற்கும், வளத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் ஏற்றபடியான தெரிவுகளைச் செய்யும் கலை.' ஒவ்வொரு மனிதரும் தான் விரும்புவதைச் செய்யும் விருப்புரிமை பெற்றிருக்கின்றார் எனவும், நன்மை எது தீமை எது என்பதைப் பகுத்தாய்ந்து தீமையை விலக்கி நன்மையைப் பற்றிக்கொள்ளும் ஆற்றல் அவருக்கு உண்டு என்றும், தன்னுடைய நடத்தை பற்றிய தெரிவுகளை மேற்கொள்ளும் முழுச் சுதந்திரத்தை அவர் பெற்றிருக்கின்றார் என்றும் ஞானநூல்கள் ஏற்றுக்கொள்கின்றன. மேலும், 'ஞானம்' மற்றும் 'மதிகேடு' என்ற இரு பெரும் பிரிவுகளாக மனித தெரிவுகளைப் பிரித்து, 'ஞானம்' நிறைவான மற்றும் ஆசீர்பெற்ற வாழ்வுக்கும் ஒருவரை அழைத்துச் செல்கிறது என்றும், 'மதிகேடு' இறப்பிற்கு அழைத்துச் செல்கிறது என்றும் கற்பிக்கின்றன. இப்படிப்பட்ட கற்பித்தலைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.
இன்றைய வாசகத்தின் பாடச் சூழல் மனிதர்கள் கொண்டிருக்கின்ற விருப்புரிமை என்ற மேலான கொடையைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாசகத்தின் முதல் பகுதி மனிதர்கள் பெற்றிருக்கின்ற விருப்புரிமையையும் தன்னார்வ மனத்தையும் அடிக்கோடிடுகிறது. கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் ஒவ்வொரு மனிதருக்கும் சுதந்திரம் உண்டு. 'நீர் - நெருப்பு,' 'வாழ்வு - சாவு' என்னும் இரண்டு எதிர்துருவங்கள் நம் முன் நிற்க, நான் கையை நீட்டி எனக்கு 'விருப்பமானதை' நான் தெரிவு செய்ய வேண்டும். வாசகத்தின் இரண்டாம் பகுதி கடவுளுக்கு ஏற்ற வழிகளைத் தெரிவு செய்ய என்னைத் தூண்டுகிறது. இதையே 'ஆண்டவரின் ஞானம்' என்கிறார் ஆசிரியர். இது திருச்சட்டங்களில் காணப்படுகிறது. மனிதர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்த கடவுள் அவர்கள் தீமையில் உழல வேண்டும் என்று கட்டளையிடவோ, பாவம் செய்ய அனுமதிகொடுக்கவோ இல்லை. இந்த உலகின் இயக்கத்தை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அவர் மனித தெரிவுகள் அவர்களுக்கு அதற்கேற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்கிறார்.
ஆக, ஆண்டவரின் ஞானத்தைப் பெறுதலும், அந்த ஞானத்தின் பின்புலத்தில் 'நீரை,' 'வாழ்வைத்' தெரிவு செய்தலே இதய உருவாக்கம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 2:6-10), கொரிந்து நகரத் திருஅவையில் இருந்த பிரிவுகளையும் வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் களையுமாறும், அவர்களுடைய குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டு பிரிவுகளைக் கடந்து நிற்குமாறும் அறிவுறுத்தும் பவுல், தன் கருத்தை வலியுறுத்த கடவுளின் ஞானம் என்னும் கருதுகோளை முன்னெடுக்கின்றார். யூத ஞான இலக்கியம் சொல்வதுபோல, கடவுளின் ஞானம் எல்லாவகை மனித புரிதல்களுக்கும் அப்பாற்பட்டது என்றும், அது மறைபொருளாய் ஒளித்துவைக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்றுக்கொள்கின்றார். படைப்பின் தொடக்கத்திலிருந்தே ஞானம் கடவுளோடு இருந்தது. கடவுள் தாம் விரும்புகிறவருக்கு அந்த ஞானத்தை வெளிப்படுத்துகின்றார். கடவுளின் ஞானம் உலகுசார் வாழ்க்கைமுறையையும் தாண்டி, எல்லாவற்றின் இறுதியை நோக்கியதாக இருக்கிறது. மேலும், இவ்வகை ஞானம் மனித வாழ்க்கையை மாட்சியை நோக்கி - அதாவது, கடவுளின் வாழ்விலேயே நாம் பங்குபெற - நகர்த்துகிறது.
இப்படிப்பட்ட மேன்மையை அல்லது மாட்சியை நோக்கி நகரும் கொரிந்து நகரத் திருஅவை தனக்குள் பிளவுகளையும் பிரிவினைகளையும் எப்படி வைத்துக்கொள்ள இயலும்? என்று அவர்களைச் சிந்திக்க அழைக்கின்ற பவுல், ஒளிந்திருக்கும் மறையுண்மையான ஞானத்தைக் கண்டடையும் வழியையும் சொல்கின்றார்: 'இந்த ஞானமும் அறிவும் நமக்கு தூய ஆவியாரிடமிருந்து வருகிறது.' தூய ஆவியாரின் செயல்பாட்டின்படி வாழ்பவர் முதிர்ச்சி அடைகிறார். இந்த உலகின் ஞானத்தின்படி வாழ்வோரிடமிருந்து உயர்ந்து நிற்கிறார். இவ்வுலக ஞானத்தின்படி வாழ்பவர்களின் வாழ்க்கை வேகமாக ஓடிக் கரைந்துவிடும். ஆக, தூய ஆவியாரின் இயக்கத்தின்வழி வாழ்பவர் இறைஞானத்தைப் பெற்றவராக இருப்பார். அவருடைய வாழ்க்கை அவர் அடையப் போகும் மாட்சியை நோக்கியதாக இருக்கும்.
ஆக, கடவுளுடைய ஞானத்தின்படி வாழுமாறு தூய ஆவியாரின் இயக்கத்திற்கு நம்மையே கையளிப்பதே இதய உருவாக்கம்.
மலைப்பொழிவின் ஒரு நீண்ட பகுதியை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:17-37) வாசிக்கின்றோம். முதலில், இயேசு, 'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வரவில்லை, மாறாக, நிறைவேற்றவே வந்தேன்' என்பதை வலியுறுத்துகின்றார். ஆக, இயேசுவின் பணி ஏற்கனவே கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குத் தொடங்கியுள்ள வெளிப்பாட்டின் நீட்சியே தவிர, அதன் அழித்தல் இல்லை என்பதை உறுதி செய்கிறார். இயேசுவின் பணியின் புதுமை என்பது மனித வாழ்வின் வழிகாட்டுதலுக்கான புதிய நெறிமுறைகளை வழங்குவதில் அல்ல, மாறாக, ஏற்கனேவே உள்ள வழியின் தொடர்ச்சியாக இருக்கிறது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மூன்று கட்டளைகளை எடுத்து, அவற்றின் பின்புலத்தில் சரியான வழி என்ன என்பதை வரையறை செய்கிறார் இயேசு. இந்த மூன்று கட்டளைகளும் மனித வாழ்வின் சவால் நிறைந்த பகுதிகள்: கோபம், பாலுணர்வு, மற்றும் தனிநபர் நாணயம்.
'கொலை செய்யாதே!' என்ற கட்டளையோடு தொடங்குகிறார் இயேசு. மனித உயிர்களை அழிக்கும் குழுமங்களைச் சிதைக்கும் முதன்மையான காரணி வன்மம் அல்லது வன்முறை. இது சமூகத்தின் ஒருமைப்பாட்டையும் அமைதியையும் நலனையும் சீர்குலைக்கிறது. வன்முறையின் வேர் கோபம். கோபமின்றி வன்முறையும், கொலையும் நிகழ்வதில்லை. கோபத்தைத் தடுப்பதன் வழியாக வன்முறை மற்றும் கொலையைத் தடுக்க முடியும். மேலும், சின்னச் சின்ன மனத்தாங்கல்கள், உள்ளக்கீறல்கள் ஆகியவற்றையும் சரி செய்தபின் பலி செலுத்துதலே சால்பு என்றும் அறிவுறுத்துகிறார் இயேசு.
இரண்டாவதாக, 'விபசாரம் செய்யாதே!' கட்டுப்படுத்தப்படாத பாலுணர்வு குடும்ப உறவைச் சிதைக்கிறது. பாலுணர்வுப் பிறழ்வின் அடிப்படையான உணர்வு காமம் என்பதை அடையாளம் காட்டுகிறார் இயேசு. 'கண்களைப் பிடுங்குதல் மற்றும் கைகளை வெட்டுதல்' போன்ற உருவகங்கள் வழியாக, காமஉணர்வைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் அது குடும்ப உறவைப் பிடுங்கி எரிந்தும், வெட்டியும் விடும் என எச்சரிக்கின்றார். மேலும், மணமுறிவு அல்லது மணவிலக்கும் குடும்ப உறவைப் பாதிக்கும் என்பது இயேசுவின் தொடர்பாடமாக இருக்கிறது.
தொடர்ந்து, 'பொய்யாணை இடாதீர்!' அல்லது 'பொய்ச்சான்று சொல்லாதே!' என்ற கட்டளை பற்றிப் பேசுகின்றார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் ஆணையிடுதல் என்பது ஒரு சாதாரண செயலாக, நிகழ்வாக இருந்தது. ஒருவர் தான் சொல்வது உண்மை என்று உறுதி செய்யவும், அல்லது தான் ஒரு செயலைச் செய்வது உறுதி என்று அறிக்கையிடவும் ஆணையிடுவது மரபு. இதில் என்ன பிரச்சினை என்றால், இப்படி ஆணையிடுபவர் தன்னுடைய தனிநபர் நாணயத்தன்மையை மறந்து, தன் நாணயத்தன்மையை உறுதிசெய்ய கடவுளையோ, இன்னொருவரையோ துணைக்கு அழைக்கிறார். மேலும், தன் ஆணையை நிறைவேற்ற முடியாமற்போக அவர் கடவுளையும் மற்றவரையும் கூட பொய்யராக்கிவிடுகிறார். இதற்கு மாற்றாக, ஆணையிடுதலையே தவிர்க்குமாறு அழைக்கிறார் இயேசு. ஒருவரின் தனிநபர் நாணயம்தான் உண்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிசெய்ய வேண்டுமே தவிர, வெளிப்புறத்திலிருந்து வரும் ஒருவர் அல்ல என்று அறிவுறுத்துகிறார்.
ஆக, இந்த மூன்று கட்டளை நீட்சிகளிலும் ஒன்று மட்டும் பொதுவாக இருக்கிறது. அல்லது இவற்றை ஒரே கருத்துருக்குள் அடக்கிவிடலாம்: 'இதய உருவாக்கம்' - கட்டளைகள் செயல் வடிவம் பெறவேண்டுமெனில் இதயம் உருவாக்கம் அவசியம். கோபத்தையும் காமத்தையும் உள்ளத்திலிருந்து அகற்றும்போது கொலை மற்றும் விபச்சாரம் என்னும் ஆபத்துக்கள் மறைந்துவிடும். தனிநபர் நாணயம் என்பதும் இதய உருவாக்கத்தின் ஓர் அங்கமே. இதையே மனப்பாங்கு புதுப்பித்தல் என்கிறோம். மனப்பாங்கு புதுப்பிக்கப்படாமல் வெறும் செயல்களை மட்டும் சரி செய்தல் நீண்ட பலனைத் தராது. ஆனால், ஆண்டவரின் ஞானத்தின் வழிகளுக்கேற்ப உள்ளம் உருவாக்கம் அடைந்தால் கட்டளைகளை நிறைவேற்றுவது எளிதாகும். இயேசு கட்டளைகளை மாற்றவில்லை. ஆனால், இதயம் மற்றும் மனப்பாங்கு புதுப்பித்தல் வழியாக கட்டளைகளை நிறைவேற்ற முடியும் என்று சொல்வதன் வழியாக கடவுளின் கட்டளைகளை புதிய மற்றும் ஆழமான நிலைக்கு எடுத்துச் செல்கிறார் இயேசு.
இவ்வாறாக,
கட்டளைகளைக் கடைப்பிடிக்க இதய உருவாக்கம் அவசியம் என்பதை நற்செய்தி வாசகமும், நன்மையைத் தேர்ந்து தெளிதல் இதய உருவாக்கத்தின் முதல் படி என்பதை முதல் வாசகமும், தூய ஆவியாரின் உடனிருப்பு அதன் இரண்டாம் படி என்பதை இரண்டாம் வாசகமும் நமக்குச் சொல்கின்றன.
இன்று நம்முடைய இதயங்கள் உருவாக்கப்படுகின்றனவா? என்பதுதான் கேள்வி.
இன்று நாம் பல நேரங்களில் மேலோட்டமாகவே வாழ்கிறோம். நல்லா இருக்கணும், நல்லதே செய்யணும், கோபப்படக் கூடாது, தவறான அல்லது தீய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது, பொய் பேசக்கூடாது என்றெல்லாம் நினைக்கிறோம். அதன்படி நடக்கவும் செய்கிறோம். ஆனால், நம்முடைய வாழ்வின் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடுகிறது. மீண்டும் செய்த தவறுகளையே செய்ய ஆரம்பிக்கின்றோம். விரைவாகத் தீர்ந்துவிடும் பேட்டரிகளை அகற்றிவிட்டு, நீடித்த இறைவனோடு தொடர்பில் இருப்பதுதான் இதயத்தைப் புதுப்பிப்பது, அல்லது இதயத்தை உருவாக்குவது. இதயம் உருவாக்கப்பட்டுவிட்டால் நம்முடைய செயல்கள் நற்செயல்களாகத் துலங்க ஆரம்பிக்கும்.
இன்று இதய உருவாக்கம் பெற நாம் சந்திக்கும் சவால்கள் எவை?
1. நம்மையே சூழ்நிலைக் கைதி என உணர்வது
சில நேரங்களில் நான் என்னுடைய வாழ்வு இப்படி இருக்கக் காரணம் என்னுடைய சூழல் அல்லது வளர்ப்பு அல்லது சேர்க்கை என என் பொறுப்புணர்வைத் தட்டிக்கழிக்கிறேன். நான் இப்படி இருக்குமாறு கடவுள்தான் எழுதிவைத்துள்ளார் என்று கடவுள்மேல் பழிசுமத்தும் மனநிலையும் சில நேரங்களில் இருக்கிறது. ஆனால், இன்றைய முதல் வாசகம் தெளிவாகச் சொல்கிறது. நெருப்பையோ அல்லது நீரையோ கைநீட்டித் தேர்ந்துகொள்வது நான்தான். ஆக, தீதும் நன்றும் பிறர்தர வருவதில்லை. நான் என் வாழ்வின் சூழல் கைதி என்னும் மனநிலை விடுக்க நான் என் வாழ்விற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
2. குறுகிய எண்ணம் கொண்டு வாழ்வது
கொரிந்து நகர திருஅவையினர் கிறிஸ்துவின்மேல் தாங்கள் கொண்ட நம்பிக்கையால் அடைந்த மாட்சியை மறந்துவிட்டு, தங்களுக்கு நற்செய்தி அறிவித்த பவுல், கேபா, அப்பொல்லோ ஆகியோரின் பெயர்களைக் கொண்டு சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துகொண்டு ஒருவர் மற்றவர்மேல் பகைமை பாராட்டுகின்றனர். குறுகிய எண்ணம் கொண்டவர்கள் வாழ்வின் முழுப்படத்தைப் பார்க்க மாட்டார்கள். மற்றவர்களையும் மிகவும் குறைத்தே மதிப்பிடுவார்கள். ஆக, குறுகிய எண்ணத்திலிருந்து நான் விடுபட்டு பரந்த உள்ளம் கொண்டிருக்க வேண்டும்.
3. மேலோட்டமாக வாழ்வது
நான்தான் யாரையும் கொலை செய்வதில்லையே? விபச்சாரம் செய்வதில்லையே? பொய்யாணை இடுவதில்லையே? என்று நான் மேலோட்டமாகப் பெருமை பாராட்டிக்கொண்டு, என் உள்ளத்தில் பகைமை, எரிச்சல், கோபம், காம உணர்வு, பேராசை, பொய் ஆகியவற்றை ஏந்திக்கொண்டு நடந்தால் நான் மேலோட்டமாக வாழ்கிறேனே அன்றி ஆழமாக வாழ்வதில்லை. கடலில் மூழ்கிக் கிடக்கும் பனிப்பாறையின் மேல்பகுதி போல, வெளியே தெரிகின்ற பகுதியை மட்டும் நன்றாக வாழ்ந்துவிட்டு உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை பெறுகிறேன். அப்படி இருந்தால் மறைந்திருக்கும் அந்த 95 சதவிகித பாறையின்மேல் மோதுகின்ற வாழ்க்கை என்ற டைட்டானிக் கப்பல் உடைந்து தரைதட்டிவிடும்.
இறுதியாக,
'என் உள்ளத்தில் பகைவர்கள் இல்லையென்றால் வெளியிலிருக்கும் பகைவர்கள் என்னைக் காயப்படுத்த முடியாது!' என் உள்ளத்தின் பகைவர்களை அழிக்கும் ஒவ்வொரு நாளும் என் இதயம் உருவாக்கம் பெறுகிறது. அந்தப் பயணத்தில் நானும் திருப்பாடல் ஆசிரியர்போல, 'உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!' (காண். திபா 119:5).