இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு
உரோமை மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இருக்கின்ற புனித யோவான் இலாத்தரன் பேராலயம் திருத்தந்தையின் அதிகாரப்பூர்வமான இருக்கையைக் கொண்டுள்ளது. திருஅவையின் நம்பிக்கை மற்றும் அறநெறி சார்ந்த கொள்கைத்திரட்டை இந்த இருக்கையில் அமர்ந்தே திருத்தந்தை வெளியிடுவார். புனித மீட்பர் பேராலயம், அல்லது புனித திருமுழுக்கு யோவான் பேராலயம் என்னும் பெயர்களிலும் இப்பேராலயம் அழைக்கப்படுவதுண்டு. தொடக்ககால உரோமைத் திருச்சபையில் அனைவருக்கும் இங்குதான் திருமுழுக்கு வழங்கப்பட்டது. கான்ஸ்டான்டின் பேரரசரால் கட்டப்பட்டு, 324ஆம் ஆண்டு திருத்தந்தை சில்வெஸ்டர் அவர்களால் நேர்ந்தளிக்கப்பட்டது. உலகெங்கும் உள்ள அனைத்துப் பேரலாயங்களின் தாய் ஆலயம் இது.
இந்த நாளின் இறைவார்த்தை வழிபாடு, 'ஆலயம்' என்னும் வார்த்தை பற்றிய இரு புரிதல்களை நமக்குத் தருகின்றது.
முதல் வாசகத்தில் (காண். எசே 47:1-2,8-9,12), 'ஆலயம்', புதிய வாழ்வின் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. பாபிலோனியாவின் அடிமைத்தனத்தின்போது ஆண்டவரின் மாட்சி எருசலேம் கோவிலை விட்டு அகல்கின்றது. மக்கள் திரும்பி வந்தபோது ஆண்டவர் மீண்டும் நகருக்குள் வருகின்றார். ஆண்டவரின் மாட்சி குடிகொள்ளும் இடத்திலிருந்து பொங்கி வழியும் தண்ணீர் அனைத்துலகையும் புதுப்பிப்பதாகவும், அதற்குப் புத்துணர்வு அளிப்பதாகவும் காட்சி காண்கிறார் இறைவாக்கினர் எசேக்கியேல்.
நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 2:13-22), 'ஆலயம்' என்பது 'இடம் சார்ந்த பிரசன்னம்' என்ற புரிதலைச் சற்றே மாற்றி, அது 'ஆள் சார்ந்த பிரசன்னம்' என்ற புதிய புரிதலைத் தருகின்றார். எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வில் இயேசு, தன்னுடலை ஆலயத்திற்கு உருவகப்படுத்துகிறார். ஆனால், மற்ற யூதர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை.
இன்றைய நாள் நமக்குக் கொடுக்கும் செய்தி என்ன?
அ. 'கடவுள் நம் நடுவில் வாழ்கிறார்'
கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதன் காணக்கூடிய அடையாளம்தான் ஆலயம். 'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது பழமொழி. இங்கே, 'கோ-இல்' என்பது, 'அரசனின் இல்லத்தை' குறிக்கிறது. அதாவது, அரசன் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஏனெனில், அரசன் இல்லாத மக்கள் காட்டுமிராண்டித்தனமாக நடப்பார்கள், தான்தோன்றித்தனமாக இருப்பார்கள் (காண். நீத 24). நம் வாழிடத்தின் அரசராக இருப்பவர் இறைவன்.
ஆ. 'நம் எண்ணங்கள் உயர்கின்றன'
பெரிய ஆலயங்கள், பெரிய கோபுரங்கள், பெரிய தூண்கள் என என அமைந்திருக்கும் ஆலயங்களை நாம் உயர்ந்து பார்க்கும்போது நம் கண்கள் மட்டுமல்ல, நம் எண்ணங்களும் உயர்கின்றன. தாழ்வானவற்றை விடுத்து உயர்வானவற்றைப் பற்றிக்கொள்ள ஆலயங்கள் அழைப்பு விடுக்கின்றன.
இ. 'ஆலயம் நம் ஒவ்வொருவரின் தொப்புள்கொடி'
இறைவனையும் நம்மையும் இணைக்கும் தொப்புள்கொடியே ஆலயம். இதன் வழியாகவே இறையருள் நமக்குக் கிடைக்கிறது. திருமுழுக்கின்போது நாம் பெறும் உறவுப் பிணைப்பு, நாம் இறந்தபின்னும் இந்த ஆலயத்தின் வழியே தொடர்கிறது.
இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு நாளில், நம் பங்கு அல்லது மறைமாவட்டத்தின் ஆலயத்தின் நேர்ந்தளிப்பையும் நினைவுகூர்வோம். நம் ஒவ்வொருவரின் நேர்ந்தளிப்பையும் நினைவுகூர்வோம்.
நாமே ஆலயம்! நமக்கோர் ஆலயம்!
No comments:
Post a Comment