கிறிஸ்து அரசர் பெருவிழா
I. 2 சாமுவேல் 5:1-3 II. கொலோசையர் 1:12-20 III. லூக்கா 23:35-43
நினைவிற்கொள்ளும் அரசர்!
ஒரு சாதாரண கதையோடு தொடங்குவோம்.
சிறுவன் ஒருவனுக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை. ஐஸ்க்ரீம் பார்லர் செல்கின்றான். ஒரு நாற்காலியைப் பார்த்து அமர்ந்த அவனிடம் வருகின்ற கடை ஊழியர், 'என்ன ஃப்ளேவர் வேண்டும்?' எனக் கேட்கின்றார். 'வெனில்லா' என்கிறான் சிறுவன். 'இரண்டு வகைகள் உள்ளன. ஒன்றின் விலை ரூ 45. மற்றொன்றின் விலை ரூ 55' என்கிறார் ஊழியர். 'இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?' கேட்கின்றான் சிறுவன். 'இரண்டாம் வகை ஐஸ்க்ரீமில் நிறைய முந்திரி மற்றும் பாதாம் பருப்புக்கள் சேர்க்கப்படும். அத்துடன் ஒரு சிறிய கார் பொம்மையும் இலவசமாகக் கிடைக்கும்' என்கிறார் ஊழியர். தன் பைக்குள் கையை விடுகின்ற சிறுவன் தன் பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு, 'ரூ 45க்கு உள்ள ஐஸ்க்ரீம் கொடுங்கள்' என்று ஆர்டர் செய்கிறான். 'இவனிடம் காசு இவ்வளவுதான் இருக்கிறதுபோல!' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே ஊழியர் ஐஸ்க்ரீம் கொண்டுவருகின்றார். சாப்பிட்டுவிட்டு, 'நன்றி!' என்று சொல்லிவிட்டுச் செல்கின்றான் சிறுவன். காலிக் கோப்பையை எடுக்க வந்த ஊழியர், ரூ 55ஐ சிறுவன் விட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கிறான். தனக்கு விருப்பமான ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த நேரத்தில், தன் ஆசையை விலக்கிவிட்டு, ஊழியரை நினைவுகூர்ந்து அவருக்காக டிப் வைத்த சிறுவனை நினைத்து ஆச்சர்யப்பட்டார் ஊழியர்.
நினைவுகூரும் அனைவரும் அரசர்களே!
அல்லது
நினைவுகூருபவரே அரசர்!
தன்னுடைய விருப்பம் அல்லது நலனை முதன்மைப்படுத்தாமல் தேவையில் இருக்கும் பணியாளரை நினைவுகூர்ந்த அந்த இளவல் தன்னை அறியாமலேயே அந்தப் பணியாளரின் அரசர் ஆகின்றார்.
திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிற்றுக் கிழமையை இயேசு கிறிஸ்து அனைத்துலகுக்கும் அரசர் என்று கொண்டாடுகின்றோம்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 சாமு 5:1-3) வடக்கு இஸ்ரயேலுக்கு தெற்கு யூதாவுக்கும் ஏழு ஆண்டுகள் நடந்த கொடுமையான போர் முடிந்து, வடக்கு இஸ்ரயேலின் தலைவர்கள் தன்னுடைய ஊரான எபிரோனில் குடியிருந்த தாவீதிடம் செல்கின்றனர். தங்களை ஆள்வதற்கு தாவீதே சிறந்த அரசர் என்று முடிவெடுக்கின்றனர். தாவீதிடம் இருந்த பண்புநலன்களும் குணநலன்களும் ஆண்டவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட அரசர் அவர் என்று மற்றவர்களுக்குக் காட்டின. தாவீது பிலிஸ்தியர்களைக் கொன்றார் (காண். 1 சாமு 18:14-16). இப்படி நிறைய சாதனைகள் புரிந்தார். மேலும், ஆபிரகாம் முதன்முதலில் உரிமையாக்கிக் கொண்ட எபிரோன் பகுதியில் தாவீது இருந்ததாலும் வடக்கு இஸ்ரNயுல் தலைவர்கள் அவரை நாடி வந்து தங்களை அரசாளுமாறு வேண்டுகிறார்கள்.
அவர்களோடு தாவீது உடன்படிக்கை செய்துகொள்கின்றார். உடன்படிக்கை என்பது ஒருவர் மற்றவருக்கு இடையே இருக்கும் உறவுநிலையின் வெளிப்புற அடையாளம். அந்த அடையாளத்தைக் காணும்போதெல்லாம் ஒருவர் மற்றவர் மேலுள்ள கடமைகளையும் உரிமைகளையும் நினைவுகூர்வர். எடுத்துக்காட்டாக, வெள்ளப்பெருக்கிற்குப் பின் கடவுள் நோவாவுடன் உடன்படிக்கை செய்துகொள்கின்றார். அந்த உடன்படிக்கையின் அடையாளமாக கடவுள் தன்னுடைய வில்லை (வானவில்லை) பூமிக்கு மேல் நிலைநிறுத்துகிறார். அந்த வில்லைப் பார்க்கும்போதெல்லாம் அவர் நோவாவுடன் தான் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து பூமியை வெள்ளப்பெருக்கிலிருந்து காக்கின்றார்: 'என் வில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன். அதன் வில் தோன்றும்போது என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன் ... உடன்படிக்கையின் அடையாளம் இதுவே' (காண். தொநூ 9:13-17).
ஆக, தாவீது தன்னுடைய அரசாட்சியை உடன்படிக்கை என்ற நிகழ்வின் வழியாகத் தொடங்குகிறார். இந்த உடன்படிக்கையால் இவர் தன்னுடைய மக்களை என்றென்றும் நினைவுகூர்கின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 1:12-20) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், பவுல் மூன்று விடயங்களுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்: (அ) கொலோசையர்களைக் கடவுள் இமைக்களுக்கான ஒளிமயமாக உரிமைப்பேற்றில் பங்குபெற அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார், (ஆ) இதன் வழியாக அவர்கள் இருளிலிருந்து விடுவிக்கப்பட்டு அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டனர், மற்றும் (இ) அம்மகனால் அவர்கள் பாவமன்னிப்பு என்னும் மீட்பைப் பெறுகின்றனர். இரண்டாம் பகுதி, ஒரு கிறிஸ்தியல் பாடலாக அமைந்துள்ளது. கிறிஸ்துவைக் கடவுளின் சாயல் என்று வர்ணிக்கும் பாடல் ஆட்சியாளர், அதிகாரம் கொண்ட அனைவரும் அவரால்தான் படைக்கப்பட்டனர் என்றும், அவரே திருச்சபையின் தலையும் தொடக்கமும் என்று விளக்குகிறது.
கிறிஸ்து வழியாகக் கடவுள் அனைத்தையும் ஒப்புரவாக்கினார் என நிறைவு செய்கிறார் பவுல். 'ஒப்புரவு செய்தல்' என்னும் நிகழ்வில் அடுத்தவர் நினைவுகூரப்படுகின்றார். மேலும், 'ஆட்சியாளர்கள், அதிகாரம் கொண்டவர்கள் அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர்' என்று சொல்வதன் வழியாக, கிறிஸ்துவை ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளர்கள் என்று சொல்கிறார் பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 23:35-43) இயேசுவின் பாடுகள் வரலாற்றுப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்படுகின்றார். அவர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கீழே இருப்பவர்கள் பார்க்கிறார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறவர்களும் பார்க்கிறார்கள். இவ்விருவரின் எதிர்வினைகளைப் பதிவு செய்கிறார் லூக்கா. சிலுவைக்குக் கீழே நிற்கின்ற 'ஆட்சியாளர்கள்,' 'நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்' என்று எள்ளி நகையாடுகின்றனர். இவர்கள் கொஞ்ச நேரத்திற்கு முன் பிலாத்துவின் அரண்மனையில், 'எங்களுக்கு சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை' என்று சொன்னார்கள். மேலும், இவர்களின் வார்த்தைகளைக் கிண்டல் செய்யும் விதமாக பிலாத்துவும், 'இவன் யூதரின் அரசன்' என எழுதுகிறான். இந்தப் பலகையைப் பார்த்தவர்கள் இயேசுவைத் தங்களுடைய அரசனாக ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு இடறலாகப்பட்டது. தொடர்ந்து, சிலுவையில் அறையப்பட்டவர்களில் ஒருவர், 'நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று!' என்று பழித்துரைக்கிறார். ஆனால், மற்றவர் அவரைக் கடிந்துகொள்கிறார். மேலும், 'இயேசுவே நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்' என்று சொல்லும் அவரிடம், 'இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்' என வாக்களிக்கிறார் இயேசு. தன்னுடைய பணிக்காலத்தில் மக்கள் தன்னை அரசானக்க நினைத்தபோது தப்பி ஓடிய இயேசு, 'நீ யூதர்களின் அரசனோ?' என்று பிலாத்து கேட்டபோது அமைதி காத்த இயேசு, 'நீர் என்னை நினைவிற்கொள்ளும்' என்று ஒரு கள்வன் சொன்னவுடன், தன்னுடைய அரசாட்சியை அவனிடம் ஆமோதிக்கிறார். மேலும், லூக்கா நற்செய்தியில் இயேசுவை அவருடைய பெயரைச் சொல்லி அழைத்த ஒரே நபர் இக்கள்வன் மட்டுமே.
'நினைவிற்கொள்ளுதல்' அல்லது 'நினைவுகூர்தல்' என்பது முதல் ஏற்பாட்டில் கடவுளின் உடன்படிக்கையைக் குறிக்கும் சொல்லாடல். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் துன்பம் அனுபவிப்பதை நினைவுகூர்ந்த கடவுள் கீழே இறங்கி வருகிறார் (காண். விப 2:24). இஸ்ரயேல் மக்கள் சீனாய் மலையில் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபட்டபோது அவர்கள்மேல் கோபம் கொண்டு எழுந்த கடவுள், தம்முடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்து அமைதியாகின்றார் (காண். விப 32:13).
ஆக, இன்றைய முதல் வாசகத்தில் தாவீது தான் கடவுளின் திருமுன் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து அவர்களை ஆட்சி செய்கின்றார். இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்துவின் ஒப்புரவுப் பணி நினைவுகூரும் பணியாக இருக்கின்றது. நற்செய்தி வாசகத்தில், நல்ல கள்வனை நினைவுகூறும் அரசராக இருக்கிறார் இயேசு.
நம்முடைய குடும்பம் மற்றும் பங்குத் தளங்களில் உள்ள தலைமைத்துவத்திலும் இதே பிரச்சினைதான் காணப்படுகிறது. குடும்பத் தலைவர் அல்லது தலைவி தன்னுடைய குடும்பத்தை நினைவுகூறும்போது நல்ல தலைவராக தலைவியாக இருக்க முடியும்.
நினைவுகூருதலுக்கு எதிர்ப்பதம் மறத்தல்.
நாம் எப்போதெல்லாம் மறக்கிறோம்? தேவையில்லாதது என நினைப்பவற்றை மறக்கிறோம், கண்டுகொள்ளாத்தன்மையால் மறக்கிறோம், அல்லது நம்மை மட்டுமே அதிகமாக நினைவுகூரும்போது மற்றவர்களை மறக்கிறோம்.
'இயேசு அரசரா? யூதர்களின் அரசரா?' என்பது இன்றைய கேள்வி அல்ல. நான் அவரை அரசராக ஏற்றுக்கொள்கிறேனா? என்பதுதான் கேள்வி.
இன்றைய நாளில் நான் அந்தக் கள்வன் போல, 'என்னை நினைவுகூரும்' என்று இயேசுவிடம் சொல்லும்போது நான் அவரை என் அரசராக ஏற்றுக்கொள்ள முடியும்.
இதை எப்படி என்னால் சொல்ல முடியும்?
நான் என் நொறுங்குநிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்ல கள்வன் தன்னுடைய வலுவற்ற நிலையில் இயேசு மட்டுமே துணைவர முடியும் என்று நம்பினான். அவனுடைய வலுவற்ற நிலையில் அவன் இயேசுவின் வல்லமையை நாடி நின்றான்.
இன்றைய உலகில் ஒவ்வொருவரும் தன்னையே வல்லமையாகக் காட்டிக்கொள்ளவும், வல்லமை உடையவர்களோடு தங்களையே அடையாளப்படுத்திக்கொள்ளவுமே விழைகின்றனர். ஆனால், வலுவற்ற கள்வன் வலுவற்ற இயேசுவில் வல்லமையைக் கண்டான்.
அந்தச் சிறுவன்போல.
வலுவற்ற அந்தச் சிறுவன் தன் வலுவற்ற நிலையில் தேவையிலிருக்கும் அப்பணியாளரைப் பார்த்தான்.
இன்று இயேசுவை நாம் அரசராகக் கொண்டாடுகிறோம். நம்முடைய வலுவின்மையை எண்ணிப் பார்ப்போம். வலுவற்ற நிலையில் சிலுவையில் தொங்கும் அவர் நம் வலுவின்மையை அறிந்தவர்.
தன்னுடைய வலுவின்மையை அறிந்த ஒருவர்தான் திருப்பாடல் ஆசிரியர்போல, ''ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்' (122:1) என்று பாட முடியும். ஆண்டவருடைய இல்லத்தில் நுழையும் நம்மை அவர் ஆள்வார்.
அவரின் ஆளுகைக்கு நாம் உட்படும்போது அவர் நம்மை நினைவுகூர்வார். ஏனெனில், நாம் அங்கே நம்முடைய நொறுங்குநிலையை நினைவுகூர்கிறோம்.
No comments:
Post a Comment