புனித அந்திரேயா
புனித பேதுருவின் சகோதரர் என்று விவிலியத்திலும் வரலாற்றிலும் அறியப்படுகின்ற புனித அந்திரேயாவின் திருநாளை இன்று கொண்டாடுகின்றோம். 'அனெர்' அல்லது 'ஆன்ட்ரோஸ்' என்னும் கிரேக்கப் பதத்திலிருந்து இந்தப் பெயர் வருகின்றது. கிரேக்கத்தில் 'ஆண்மை' அல்லது 'பலம்' என்று பொருள். இவர் தமிழ் மரபில் 'பெலவேந்திரர்' என்றும் அழைக்கப்படுகின்றார்.
கீழைத் திருச்சபைகளில் 'முதலில் அழைக்கப்பட்டவர்' என்று இவர் அறியப்படுகின்றார். ஏனெனில், யோவான் நற்செய்தியின்படி இவரே இயேசுவின் முதற்சீடர். ஒத்தமைவு நற்செய்திகள் முதற்சீடர்களை, 'பேதுரு, அந்திரேயா' என்று இணைத்தே குறிப்பிடுகின்றன. கான்ஸ்தாந்திநோபில் திருஅவையின் முதல் திருத்தந்தை என்றும் கீழைத்திருஅவை இவரைக் கொண்டாடுகிறது. ஒத்தமைவு நற்செய்திகளின்படி இயேசுவால் அழைக்கப்படும்போது பேதுருவும் அந்திரேயாவும் மீன் பிடித்துக்கொண்டு இருக்கின்றனர். யோவான் நற்செய்தியில் அந்திரேயா திருமுழுக்கு யோவானின் சீடராக ஏற்கெனவே இருந்ததாக அறிமுகம் செய்யப்படுகின்றார். ஆங்கில 'எக்ஸ்' வடிவ சிலுவையில் இவர் அறையப்பட்டுக் கொல்லப்பட்டதாக மரபு சொல்கிறது. ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் பாதுகாவலராக இவர் கொண்டாடப்படுகின்றார்.
முதல் வாசகத்தில் (உரோ 10:9-18) அனைவருக்கும் கிறிஸ்து அறிவிக்கப்பட்டதை உரோமைத் திருஅவைக்கு நினைவூட்டுகின்ற பவுல், 'நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்?' எனக் கேட்கின்றார். இவ்வாறாக, 'மன்றாடுதல், நம்பிக்கை கொள்தல், அறிவிக்கப்படுதல், அனுப்பப்படுதல்' என்று அனைத்தையும் இணைக்கின்றார். திருத்தூதர்கள் இயேசுவால் அனுப்பப்படுகின்றனர். அவர்கள் செய்யும் நற்செய்திப் பணியின் பயனாக நம்பிக்கையாளர்கள் இறைவனோடு தங்களையே இணைத்துக்கொள்கின்றனர். இயேசுவுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துபவர்கள் திருத்தூதர்களே. 'நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன' என்று எசாயா இறைவாக்கு நூலை மேற்கோள் காட்டுகின்றார் பவுல். திருத்தூதர்கள் அறிவித்த ஒற்றைச் சொல்லும் காற்றோடு காற்றாகக் கலந்து அனைவரையும் சென்றடைகின்றது.
நற்செய்தி வாசகத்தில் (மத் 4:18-22), இயேசுவால் அழைக்கப்படுகின்ற அந்திரேயா (மற்றும் பேதுரு) தனது வலையை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகின்றார். இயேசுவின் அழைத்தல் திடீரென வருகின்றது. மனிதர்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது அது வருகிறது. அழைப்பு வந்தவுடன் அழைக்கப் பெற்றவர்கள் உடனடியாகப் பதிலிறுப்பு செய்கின்றனர்.
யோவான் நற்செய்தியில் புனித அந்திரேயா பேதுருவையும் (யோவா 1:42), அப்பம் வைந்திருந்த இளவலையும் (6:9), கிரேக்கர்களையும் (12:22) இயேசுவிடம் கொண்டு வருகின்றார். இயேசுவின் உயிர்ப்புக்கு முன்னர் மற்றவர்களை இயேசுவிடம் கொண்டு வருகின்ற அந்திரேயா, உயிர்ப்புக்குப் பின்னர் இயேசுவை மற்றவர்களிடம் கொண்டு போகின்றார். சீடத்துவத்தின் இரு புலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளார் அந்திரேயா.
'படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது' என்று பாடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 19). நாம் நம்மை அறியாமலேயே நம் சொல்லாலும் செயலாலும் இயேசுவை அறிவித்துக்கொண்டே இருக்கின்றோம். இந்த அறிவித்தல் உலகெங்கும் சென்றுகொண்டே இருக்கின்றது. திருமுழுக்கின் வழியாக நாம் பெற்றுக்கொண்ட அழைப்பை உணர்ந்து, சின்னச் சின்ன வழிகளிலும் நற்செய்தி அறிவித்தால் எத்துணை நலம்!
No comments:
Post a Comment