தொலைத்தலின் வலி
இன்றைய நற்செய்தியில், தொலைத்தலின் வலியை இரண்டு உருவகங்கள் வழியாக முன்மொழிகின்றார் இயேசு.
இரண்டு பேர் தங்களிடம் உள்ளதைத் தொலைக்கின்றனர்.
முதலாமவர், ஓர் ஆண். இவர் தன் 100 ஆடுகளுள் ஒன்றைத் தொலைக்கின்றார்.
இரண்டாமவர், ஒரு பெண். இவன் தன் 10 நாணயங்களுள் ஒன்றைத் தொலைக்கின்றார்.
இருவருக்கும் பொதுவான சில பண்புகளை நாம் கண்டறிய முடியும்:
(அ) காணாமல் போன ஆடு மற்றும் நாணயத்திற்கு அவர்கள் பொறுப்பேற்கின்றனர்.
(ஆ) தொலைந்தவை கிடைக்கும் வரை அவற்றைத் தேடுகின்றனர்.
(இ) தேடிக் கண்டவை பற்றி மகிழ்ந்து அக்களிக்கின்றனர்.
முல்லா கதை ஒன்றின் வழியாக, 'நாம் எதை எங்கு தொலைத்தோமோ அதை அங்கு தேட வேண்டும்' என நாம் கற்றுள்ளோம். ஆனால், மேற்காணும் இருவரும் எங்கெங்கோ தேடுகின்றனர். ஏனெனில், ஆடு பயணம் செய்யும் தொலைவு அதிகம். நாணயம் குதித்துச் செல்லும் தூரம் அதிகம். ஆக, கண்டடையும் வரை தேடுதலும் நன்று.
தொலைந்தவற்றைத் தேடுதல் நம் வாழ்வியல் அனுபவமும் கூட.
தொலைந்த பணம், கம்மல், புத்தகம், பேனா, ஃப்ளாஸ்க், பைக், சைக்கிள் என பலவற்றை நாம் தேடியுள்ளோம். தேடும் வரை உள்ள பதைபதைப்பு, தேடிய பொருள் கிடைத்தவுடன் மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.
இன்று நம்மிடம் உள்ள எதுவும் தொலைந்து போகாமல் ட்ராக் செய்ய க்யூஆர் கோட் உள்ளது. நம்மிடமிருந்து எதுவும் தொலைந்து போகாதவாறு நாம் பார்த்துக்கொள்கிறோம்.
ஆனாலும், பொருள்கள் தொலைந்துபோகின்றன.
ஒரு பொருள் தொலைந்துவுடன் நம் மனம் கலங்குகிறது. பின் தேடலைத் தொடங்குகிறது. தேடுவது கிடைக்குமா? என்ற குட்டி பயம் வந்து உட்கார்ந்துகொள்கிறது. நம் கவனக்குறைவு பற்றி நம் மனம் நம்மைச் சாடிக் குற்றவுணர்வைத் தூண்டுகிறது. மற்றவரோடு ஒப்பிட்டு, தன்பரிதாபம் கொள்ளச் செய்கிறது. இவைதான் தொலைத்தலின் வலிகள்.
இந்த வலிகளை அனுபவிப்பவர் நாம் மட்டுமல்ல, நம் கடவுளும்தான் என்கிறார் இயேசு.
மனம் மாறிய ஒருவரைக் குறித்து, தொலைந்த நபர் கடவுளின் கைகளில் கிடைப்பது குறித்து அவர் மகிழ்ந்து கொண்டாடுகிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். பிலி 3:3-8), சில நேரங்களில் தொலைத்தலும் நலம் என்கிறார் பவுல். தன் சமய நம்பிக்கை, சமூக அடையாளம், குலப் பெருமை, செயல் வீரம், கடந்த வாழ்க்கை என அனைத்தையும் தொலைக்கின்றார். எதற்காக? 'ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவு என்னும் ஒப்பற்ற செல்வத்தைக் கண்டடைவதற்காக.' இன்னொரு பக்கம், தான் இவற்றில் தொலைத்த தன் ஆண்டவரை இறுதியில் கண்டுகொள்கின்றார் பவுல்.
ஆடு மேய்ப்பவர், தொலைந்த ஓர் ஆட்டுக்காக, தொன்னூற்றொன்பது ஆடுகளைக் குப்பை எனக் கருதுகிறார்.
இளவல் ஒருத்தி, தொலைந்த ஒரு நாணயத்துக்காக, ஒன்பது நாணயங்களைக் குப்பை எனக் கருதுகிறார்.
பவுல், தான் தொலைத்த கிறிஸ்து என்னும் செல்வத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, எல்லாவற்றையும் குப்பையெனக் கருதுகிறார்.
ஏனெனில், தொலைத்தலின் வலி அறிந்தவர்கள் இவர்கள்.
Dear Fr Yesu
ReplyDeleteThank you
Good
ReplyDelete