Thursday, September 8, 2022

மரக்கட்டையும் துரும்பும்

இன்றைய (9 செப்டம்பர் 2022) நற்செய்தி (லூக் 6:39-42)

மரக்கட்டையும் துரும்பும்

தன் சீடர்கள் மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்குமுன் தங்கள் தவறுகளைச் சரிசெய்துகொள்ள வேண்டும் என்பதை இயேசு இரு உருவகங்கள் வழியாக எடுத்துச்சொல்கின்றார்: (அ) பார்வையற்ற நபர் இன்னொரு பார்வையற்ற நபருக்கு வழிகாட்டுதல். (ஆ) தன் கண்ணில் மரக்கட்டையை வைத்துக்கொண்டு அடுத்தவரின் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்க முயற்சி செய்தல்.

மேற்காணும் உருவகங்களில் வரும் இருவரின் நோக்கங்களும் சரியானவை. இருவருமே மற்றவருக்கு உதவிசெய்யவே விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் நோக்கங்களை அடைய இயலாதவாறு தங்களுக்குள்ளேயே தடைகளை வைத்திருக்கின்றனர். அத்தடைகளை அவர்கள் தகர்த்தாலன்றி தங்கள் நோக்கங்களை அவர்கள் அடைய இயலாது.

இன்று நம் வாழ்வில் உள்ள நோக்கங்களை நாம் அடைய இயலாதவாறு நம்மைத் தடுக்கின்ற தடைகள் எவை? மற்றவர்களின் குறைகளை நாம் சுட்டிக்காட்டுவதற்குமுன் நம்மிடம் உள்ள குறைகளைக் களைய முற்படுகின்றோமா?

இன்றைய முதல் வாசகத்தில் (1 கொரி 9), 'பரிசு பெறுவதற்காகவே ஓடுங்கள்' என்கிறார். பந்தயத்திடலுக்கு வருவதன் நோக்கம் பரிசு பெறுவதற்கே. இந்த நோக்கத்தை அடைவதற்கு விளையாட்டு வீரர் தன்னடக்கப் பயிற்சியில் ஈடுபடுகின்றார். தன்னடக்கப் பயிற்சியின் வழியாக அவர் தன் வெற்றிக்கான தடைகளை வெல்கின்றார்.


No comments:

Post a Comment