சீடத்துவப் பயணம்
தான் சமாரியர்களால் நிராகரிக்கப்பட்ட இடத்தில், தன்னைப் பின்பற்றி வருபவர்கள் கொண்டிருக்க வேண்டிய சீடத்துவம் பற்றி எடுத்துரைக்கின்றார் இயேசு.
'நீர் எங்கு சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்' என்று தன்னிடம் சொன்ன ஒரு இளவலிடம், சீடத்துவத்தின் சவால்களை முன்வைக்கிறார் இயேசு.
மற்ற இரு இளவல்களிடம், 'என்னைப் பின்பற்றி வாரும்,' என இயேசுவே சொல்ல, அவர்களில் ஒருவர் தன் தந்தையை அடக்கம் செய்வதிலும், மற்றவர் தன் வீட்டில் பிரியாவிடை பெறுவதையும் முன்வைக்கின்றனர்.
'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் உழுவதற்கு தகுதியற்றவர்' என்ற தன் சமகால பழமொழியால் அவர்களுக்கு விடை பகர்கின்றார் இயேசு.
இது ஒரு விவசாய உருவகம். கலப்பை என்பது இன்றைய நவீன டிராக்டர் கலப்பை, சட்டி கலப்பை, ஜே.சி.பி, பொக்லைன் என மாறிவிட்டது.
கலப்பையில் கை வைத்து உழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப் பார்த்தால் என்ன நடக்கும்?
அ. கலப்பை நேர் கோட்டில் செல்லாது
ஆ. உழுத இடத்தையே உழுது கொண்டிருக்கும் நிலை வரும்
இ. உழுகின்ற நபரின் காலையே கலப்பை நோகச் செய்துவிடும்
இது இயேசுவைப் பின்பற்றும் சீடத்துவத்திற்கும் பொருந்தும்.
அ. வாழ்க்கை நேர் கோட்டில் செல்லாது.
ஆ. புதியதாக எதுவும் செய்யாமல் செய்ததையே திரும்ப செய்வதில் இன்பம் காண வைக்கும்.
இ. சீடருக்கே அது ஆபத்தாக முடியும்.
மேலும், திரும்பிப் பார்க்கும்போது நாம் இறந்த காலத்திற்குள் மீண்டும் செல்கின்றோம். நாம் பழையவற்றில் இன்பம் காண எத்தனிக்கிறோம். ஆனால், வாழ்வு என்பது நிகழ்காலத்திலும், புதியது தரும் சவாலை எதிர்கொள்வதிலும் இருக்கிறது என்கிறார் இயேசு.
சீடத்துவத்தின் மூன்று முக்கிய பண்புகளைக் குறிப்பிடுகின்றார் இயேசு:
அ. 'நரிகளுக்கு பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை'
நாம் வசிக்கும் வீடு நமக்கு ஒரு முக்கியமான இடம். இந்த உலகத்தில் எங்கு நமக்கு இடம் இல்லை என்றாலும் நம்முடைய வீட்டில் நமக்கு இடம் உண்டு. பசியாய், தாகமாய் இருந்தாலும் வீட்டில் நாம் தங்கிக்கொள்ள முடியும். யாருடைய துணையும் இல்லாமல் வீட்டிற்குள் நம்மால் இருந்துகொள்ள முடியும். ஆக, வீடு நமக்கு உறுதித்தன்மையையும், பாதுகாப்பு உணர்வையும் தருகிறது. ஆனால், இயேசு தனக்கு உறுதித்தன்மையும், பாதுகாப்பு உணர்வும் இல்லை என்றும், தன்னுடைய சீடர்களும் அதே மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் சொல்கிறார். ஏன்? வீடு நமக்கு எந்த அளவுக்கு உறுதித்தன்மையையும், பாதுகாப்பு உணர்வையும் தருகிறதோ அந்த அளவுக்கு நம்மைச் சிறைபிடித்தும் விடுகிறது. சிலர் தாங்கள் வீடு கட்டி விட்டதால் அந்த இடத்தை விட்டு புலம் பெயர வாய்ப்பு கிடைத்தாலும் புலம் பெயராமல் வீட்டை மட்டுமே பற்றிக்கொண்டு இருந்துவிடுகின்றனர். சீடராக இருப்பவர் வாழ்வின் உறுதியற்ற தன்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் அனுபவிப்பவராக இருக்க வேண்டும்.
ஆ. 'வருகிறேன். ஆனால், அப்பாவை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன்'
இரண்டு அர்ப்பணங்கள் ஆபத்தானவை. இந்த நபர் இரண்டு மான்களை ஒரே நேரத்தில் விரட்ட முனைகின்றார். சீடத்துவத்திற்கான அர்ப்பணம் முழுமையானதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் இயேசு.
இ. 'கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்த்தல் கூடாது'
கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்த்தல் உழுதலைத் தாமதமாக்கும், கோணல் மாணலாக்கும். அதைவிட, உழுபவரின் காலில் ஏர் பாய்ந்து கால் புண்படும். புளிப்பு மாவு போன்றது இது. புளிப்பு மாவை கலந்து மாவில் வைத்துவிட்டால் அவ்வளவுதான். அது தன்னுடைய பாதையில் முன்னோக்கிச் செல்லும். புளிக்காரத்தை நிறுத்தவோ, அதை திரும்ப சரி செய்யவோ இயலாது.
உறுதியற்ற தன்மையை ஏற்றல், முழுமையான அர்ப்பணம் தருதல், முன்னோக்கிச் செல்தல் - இவை மூன்றும் சீடத்துவத்திற்கான பண்புகள்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். யோபு 9:1-12,14-16) யோபு கடவுள்முன் மனிதரின் இயலாமை அல்லது கையறுநிலை பற்றி முறையிடுகின்றார். அவரோடு ஒப்பிடப்பட மனிதர்கள் தகுதியற்றவர்கள் எனவும், அவரின் இரக்கம் நம்மை அவர் அருகில் அழைத்துச் செல்கிறது என்றும் சொல்கிறார்.
தூரமாக இருக்கும் கடவுள் இயேசுவில் நமக்கு அருகில் வருகிறார். அவரோடு பேசவும், அவரைப் பின்பற்றவும் நம்மால் முடிகிறது.
அவரோடு செல்லும் சீடத்துவப் பயணம் அவர்மேல் மையம் கொண்டதாக இருந்தால் நம் கலப்பை நேராக உழும்.
No comments:
Post a Comment