வாழ்வின் இரட்டைத்தன்மை
மனிதர்கள் பார்க்கும் விதத்தை வருணிக்க கதை ஒன்று சொல்லப்படுவதுண்டு:
முனிவன் ஒருவன் அரசவீதியில் நடந்துசென்றுகொண்டிருந்தான். அது அரசன் வரும் நேரம். முனிவனை விலகி நடக்கச் சொல்லுமாறு குதிரையில் வாளேந்திய வீரன் ஒருவன் வேகமாகச் சென்று முனிவன் அருகில் நிற்கிறான். 'அரசன் குதிரையில் வருகிறான். விலகி நடங்கள்!' என்று மூச்சிரைக்க வீரன் சொன்னபோது, முனிவன் திரும்பிப் பார்த்து, 'வருவதில் யார் அரசன்?' எனக் கேட்கிறான். 'மேலிருப்பது அரசன், கீழிருப்பது குதிரை' என்கிறான் வீரன். 'மேல் எது? கீழ் எது?' தொடர்கிறான் முனிவன். 'நான் இருப்பது மேல். நீ இருப்பது கீழ்' என வீரனும் தொடர்கிறான். 'நான் எது? நீ எது?' என முனிவன் கேட்க, அமைதி காக்கிறான் வீரன்.
முனிவன் அனைத்தையும் இணைத்தே பார்த்தான். வீரன் அனைத்தையும் பிரித்தே பார்த்தான். இருவருடைய பார்வையும் வௌ;வேறாகத் தெரிந்தாலும் பார்வை ஒன்றுதான். எப்படி? ஒரு குச்சியை எடுத்து, அதில் இரண்டு நுனிகள் உள்ளன என்று வீரன் சொன்னால், அது ஒரே குச்சிதான் என்கிறான் முனிவன். இரண்டு நுனிகளும் இணைவது குச்சியில்தான். ஆக, குச்சியின் நுனிகள் ஒன்றுக்கொன்று எதிர்திசையில் இருந்தாலும், அவை ஒன்றையொன்று இணைக்கின்றன அல்லது ஒன்றோடொன்று பொருந்துகின்றன.
வாழ்வின் இரட்டைத்தன்மையை மிக அழகாக உணர்ந்தவர்களும், இரட்டைத்தன்மையின் இயல்பு, பிரிப்பது அல்ல, இணைப்பது என்பதையும் உணர்ந்தவர்கள் நாம் விவிலியத்தின் முதல் (பழைய) ஏற்பாட்டில் காணும் சபை உரையாளரும், நம் தமிழ் மண்ணில் வாழ்ந்த பட்டினத்தாரும் ஆவர். ஏறக்குறைய கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எபிரேய ஞான நூல் ஆசிரியர் சபை உரையாளரும் (எபிரேயத்தில், 'கொஹெலத்'), கி.பி. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்த் துறவுக் கவிஞர் பட்டினத்தாரும், வாழ்வின் தெளிவற்ற தன்மை, நிலையாத்தன்மை, உடையுமை, தெளிவற்ற நிலை, உறுதியற்ற நிலை, மற்றும் நொறுங்குநிலை ஆகியவற்றை உணர்ந்து, தங்கள் சமகாலத்து மாந்தர்கள் வாழ்வின் இந்நிலையிலும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் எனவும், தங்களைப் படைத்தவரை என்றும் நினைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
'பிறப்புக்கு ஒரு காலம். இறப்புக்கு ஒரு காலம்.
நடவுக்கு ஒரு காலம். அறுவடைக்கு ஒரு காலம்.
கொல்லுதலுக்கு ஒரு காலம். குணப்படுத்துதலுக்கு ஒரு காலம்.
இடித்தலுக்கு ஒரு காலம். கட்டுதலுக்கு ஒரு காலம்.
அழுகைக்கு ஒரு காலம். சிரிப்புக்கு ஒரு காலம்.
துயரப்படுதலுக்கு ஒரு காலம். துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்.
கற்களை எறிய ஒரு காலம். கற்களைச் சேர்க்க ஒரு காலம்.
அரவணைக்க ஒரு காலம். அரவணையாதிருக்க ஒரு காலம்.
தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம். இழப்பதற்கு ஒரு காலம்.
காக்க ஒரு காலம். தூக்கியெறிய ஒரு காலம்.
கிழிப்பதற்கு ஒரு காலம். தைப்பதற்கு ஒரு காலம்.
பேசுவதற்கு ஒரு காலம். பேசாதிருப்பதற்கு ஒரு காலம்.
அன்புக்கு ஒரு காலம். வெறுப்புக்கு ஒரு காலம்.
போருக்கு ஒரு காலம். அமைதிக்கு ஒரு காலம்.'
(சபை உரையாளர் 3:2-8)
பிறப்பும் இறப்பும் இரண்டு என்றாலும் வாழ்க்கை என்றால் ஒன்றுதான். நடவும் அறுவடையும் இரண்டு என்றாலும் பயிர் என்றால் ஒன்றுதான். கொல்லுதலும் குணப்படுத்துதலும் இரண்டு என்றாலும் உடல் என்றால் ஒன்றுதான். இடித்தலும் கட்டுதலும் இரண்டு என்றாலும் கட்டடம் என்றால் ஒன்றுதான். அழுகையும் சிரிப்பும் இரண்டு என்றாலும் பதிலுணர்வு என்றால் ஒன்றுதான். துயரமும் மகிழ்ச்சியும் இரண்டு என்றாலும் மனப்பாங்கு என்றால் ஒன்றுதான். கற்களை எறிதலும் சேர்த்தலும் இரண்டு என்றாலும் குவியல் என்றால் ஒன்றுதான். அரவணைத்தலும் அரவணையாதிருத்தலும் இரண்டு என்றாலும் நெருக்கம் என்றால் ஒன்றுதான். தேடிச் சேர்ப்பதும் இழப்பதும் இரண்டு என்றாலும் தேடல் என்றால் ஒன்றுதான். காத்தலும் எறிதலும் இரண்டு என்றாலும் பொருள் என்றால் ஒன்றுதான். கிழிப்பதும் தைப்பதும் இரண்டு என்றாலும் ஆடை என்றால் ஒன்றுதான். பேசுதலும் பேசாதிருத்தலும் இரண்டு என்றாலும் மொழி என்றால் ஒன்றுதான். அன்பும் வெறுப்பும் இரண்டு என்றாலும் உறவு என்றால் ஒன்றுதான். போரும் அமைதியும் இரண்டு என்றாலும் வரலாறு என்றால் ஒன்றுதான்.
'பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்
அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்'
(பட்டினத்தார், கோயிற்றிருவகவல், 1)
உயிர் என்றால் ஒன்று, பிறப்பும் இறப்பும் இரண்டு. கதிரவன் என்றால் ஒன்று, தோன்றுதலும் மறைதலும் இரண்டு. மலர் என்றால் ஒன்று, பெருத்தலும் சிறுத்தலும் இரண்டு. நினைவு என்றால் ஒன்று, உணர்தலும் மறத்தலும் இரண்டு. உறவு என்றால் ஒன்று, இணைதலும் பிரிதலும் இரண்டு. உணர்வு என்றால் ஒன்று, உவப்பும் வெறுப்பும் இரண்டு. மேலும், இங்கே பட்டினத்தார், நாம் அருந்தியது சில நிமிடங்களில் கழிவாகிவிடுகிறது என்றும், நாம் உடுத்தியது சில நிமிடங்களில் அழுக்காகி விடுகிறது என்றும் சொல்லும்போதும், அருந்துவதும் கழிவதும் இரண்டு என்றாலும், உணவு என்றால் ஒன்று எனவும், உடுத்துவதும் அழுக்காவதும் இரண்டு என்றாலும், உடை என்றால் ஒன்று எனவும் கூறுகின்றார்.
நாம் விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ நம் வாழ்வியல் அனுபவங்கள் எல்லாமே இரட்டைத்தன்மை கொண்டே இருக்கின்றன. வேலை-ஓய்வு, பகல்-இரவு, விழிப்பு-தூக்கம், தொடக்கம்-முடிவு என வாழ்க்கை நகர்கிறது. நாம் திறந்த புத்தகத்தை மூடுகிறோம், மூடிய புத்தகத்தைத் திறக்கிறோம். அலைபேசியில் ஓர் அழைப்பைத் தொடங்குகிறோம், அதே அழைப்பை முடிக்கிறோம். வாகனத்தை இயக்குகிறோம், அதன் இயக்கத்தை நிறுத்துகிறோம்.
மேற்காணும் ஞானியரின் வாழ்வின் இரட்டைத்தன்மை பற்றிய புரிதல் நமக்கு வழங்கும் பாடங்கள் மூன்று: (அ) இரட்டைத்தன்மையின் பொருந்துநிலையைப் பார்த்தல். அதாவது, இன்று நான் ஒருவர் என்மேல் கோபப்படுவதைப் பார்த்தால், அவர் என்மேல் அன்புகாட்டிய நேரத்தையும் எண்ணிப் பார்த்தல். (ஆ) ஒன்றை மட்டும் பற்றிக்கொள்ளாதிருத்தல். அதாவது, அவரின் கோபத்தை மட்டுமே பற்றிக்கொண்டு அவர்மேல் பகைமை வளர்க்காமல், அவரை மன்னித்தல். (இ) ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும் போது அடுத்தது வேகமாக வந்துவிடுகின்ற வாழ்வின் நிலையாத்தன்மையைக் கொண்டாடுதல். கோபமும், அன்பும் மறையக்கூடிய, மாறக்கூடிய உணர்வுகள் என அறிந்துகொண்டு, அவற்றைக் கொண்டிருக்கும் அந்த இனியவரைக் கொண்டாடுதல்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 9:18-22), பேதுருவின் நம்பிக்கை அறிக்கையை வாசிக்கின்றோம். 'நீர் கடவுளின் மெசியா' என அறிக்கையிடுகின்றார் பேதுரு. ஆனால், அந்த மெசியா நிலைக்கான வழி துன்பம் என அதன் மறுதுருவத்தை எடுத்துரைக்கின்றார் இயேசு. வாழ்வின் ஒரு பக்கத்தை பார்ப்பவர்கள் நடுவில் அதன் மறுபக்கத்தையும் இணைத்தே பார்க்கின்றனர் ஞானியர்.
No comments:
Post a Comment