அறிவின் நோக்கம்
'எல்லாவற்றுக்கும் மேலாக, உனக்கு நீயே பொய்யுரைக்காதே! தனக்குத்தானே பொய்யுரைத்து, அந்தப் பொய்க்குச் செவிகொடுக்கும் ஒருவர் காலப்போக்கில் தனக்குள்ளே உள்ள உண்மையையும், தனக்கு வெளியே உள்ள உண்மையையும் ஆய்ந்தறிய இயலாமல்போய்விடுவார். இவ்வாறாக, தன்மேல் உள்ள மதிப்பையும் பிறர்மேல் உள்ள மதிப்பையும் இழந்துவிடுவார். மதிப்பை இழந்துவிடுவதால் அன்பு செய்வதும் அவருக்கு இயலாமல் போய்விடும்!'
'கரமசோவ் சகோதரர்கள்' (The Brothers Karamazov) என்னும் நாவலில் ரஷ்ய எழுத்தாளர் ப்யோடோர் டோஸ்டாவ்ஸ்கி, மடாதிபதி ஒருவரைச் சந்திக்க சகோதரர்கள் கூடியிருக்கும் சூழலில் எழுதுகின்றார்.
ஒருவர் தன் இயல்பு என்ன என்பதை மறந்து, பொய்யான ஓர் இயல்பைப் பற்றிக்கொண்டு வாழ்வது தவறு என்பதும், பல நேரங்களில் அறிவு என நாம் எண்ணுவது உண்மையிலிருந்து முற்றிலும் மாறுபடக் கூடியது என்பதும் இதன் பொருள் ஆகும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் இயேசு விளக்கு உவமையைக் குறிப்பிடுகின்றார். விளக்கை ஏற்றும் ஒருவர் அதைப் பாத்திரத்தால் மூடிவைத்தால், அல்லது கட்டிலின் அடியில் வைத்தால், அவர் விளக்கின் இயல்பை முழுமையாக அறியாதவராக இருக்கின்றார். அல்லது தான் பெற்ற அறிவுதான் சரி என்ற நிலையில் அப்படிச் செய்கின்றார். ஆனால், விளக்கு ஏற்றப்படுவதன் நோக்கம் விளக்குத் தண்டின்மீது வைத்து அனைவரும் ஒளி பெறுவதற்கே. இந்த உண்மையை அவர் மறந்து தன் அறிவின்படி மட்டும் செயல்பட்டால் அவர் தனக்குத்தானே பொய்யுரைப்பவராக மாறுகின்றார்.
எடுத்துக்காட்டாக, ஒர் அருள்பணியாளரின் இயல்பு அல்லது நிலை என்பது அனைவருக்கும் ஒளிதருகின்ற விளக்கு போல இருப்பது. ஆனால், அவர் தன் ஒளியைத் தனக்குத்தானே சுருக்கிக் கொண்டால், அல்லது தன் தவறான முதன்மைகள் என்னும் பாத்திரங்களால் அவற்றை மூடிக்கொண்டால், அவர் தனக்குத்தானே பொய்யுரைப்பவராக மாறுகின்றார். ஏனெனில், அவர் தன் இயல்பை மறுதலிக்கின்றார்.
தொடர்ந்து இயேசு, நம் மனநிலை குறித்துக் கவனமாக இருக்குமாறு நமக்குச் சொல்கின்றார். நீதிமொழிகள் நூலில் நாம் இதையொத்த அறிவுரை ஒன்றை வாசிக்கின்றோம்: 'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய். ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்' (4:23). இதயத்தில் எழும் எண்ணங்கள் பற்றி நாம் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். பல நேரங்களில் நம் எண்ணங்கள் கட்டுக்கடங்காத குதிரைகள் போல இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இரவில் நாம் தூங்கும்போதும் நம் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. நம் எண்ணங்கள்தாம் உண்மை என நாம் நினைக்கின்றோம். ஆனால், பல நேரங்களில் நம் எண்ணங்கள் நம்மை ஏமாற்றிவிடுகின்றன. ஆக, நம் எண்ணங்களைப் பற்றி மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். அதீத எண்ணங்கள் நம் அனுமதி இல்லாமல் பிறப்பதில்லை. நாம் அவற்றுக்குத் தீனி போட போட அவை எண்ணெய் ஊற்றப்பட்ட திரிபோல எரிய ஆரம்பிக்கின்றன.
இறுதியாக, இயேசு, 'உள்ளவருக்குக் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென அவர் நினைப்பது எடுத்துக்கொள்ளப்படும்' என எச்சரிக்கின்றார். இல்லாத நிலையில் இருப்பது கூடப் பிரச்சினையில்லை. மாறாக, 'தமக்கு உண்டென நினைத்துக்கொண்டு' ஒரு போலி இருத்தல் நிலையில் இருப்பதும் தனக்குத்தானே பொய்யுரைப்பதே. போலி இருத்தல் மனநிலையைக் கொண்டிருப்பவர் புதிதாக எதையும் தேடமாட்டார். ஏனெனில், தன்னிடம் எல்லாம் இருப்பதாக தன் மூளைக்குச் சொல்லிக்கொள்வார். அல்லது அவருடைய மூளை அவருக்குச் சொல்லி அவரை ஏமாற்றும்.
மொத்தத்தில், இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு நாமே உண்மையாக இருக்க நம்மை அழைக்கின்றது. நம் இயல்பு தண்டில் ஏற்றிவைக்கப்பட்ட விளக்கு போல எரிய வேண்டும். தண்டில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு தன் பாதுகாப்பற்ற தன்மையை உணர வேண்டும். பாத்திரத்தின் பாதுகாவலும், கட்டிலுக்கு அடியில் உள்ள பாதுகாவலும் தனக்குப் போதும் என நினைத்தால் அது தன் இயல்பை மறுதலிப்பதோடு, பாத்திரத்திற்கும் கட்டிலுக்கும் சேதம் விளைவித்துவிடும்.
நாம் நம்மைப் பற்றிப் பெற்றுள்ள அறிவு உண்மையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லட்டும். அறிவு என்பது வெறும் வழியே. உண்மை என்பதே இலக்கு. அந்த இலக்கே நமக்கு வாழ்வு தரக்கூடியது. 'நானே வழியும் உண்மையும் வாழ்வும்' என்று சொன்ன இறைமகன் இயேசு இப்பயணத்தின் வழியாகவும், வழித்துணையாகவும் நமக்குத் திகழ்வாராக!
No comments:
Post a Comment