Friday, September 30, 2022

மகிழுங்கள்

இன்றைய (1 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 10:17-24)

மகிழுங்கள்

இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் 'சுபம்' என்று முடிகிறது. யோபு கடவுளுடன் உரையாடும் பகுதி நிறைவு பெறுகிறது. இறுதியில் இழந்த அனைத்தையும் யோபு இரு மடங்காகப் பெற்றுக்கொள்கின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவால் பணிக்கு அனுப்பப்பட்ட சீடர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பி வருகின்றனர். அவர்களுடைய மகிழ்ச்சி கண்டு இயேசுவும் தன் வானகத் தந்தையைப் புகழ்கின்றார். 

யோபுவின் வாழ்க்கையில் அவருக்கு எல்லாம் திரும்பக் கிடைத்தது போல எல்லாருக்கும் திரும்பக் கிடைப்பதில்லை. சிலர் தங்கள் வாழ்வில் துன்பங்கள் மட்டுமே அனுபவித்து - தாங்கள் செய்யாத தவறுக்காக - புன்னகையுடன் மறைந்து போகவே செய்கிறார்கள் - உரோமையின் ரோசாப் பாட்டி போல! வாழ்க்கையின் இறுதி திரைப்படத்தின் இறுதி போல சுபம் என்று இல்லை என்றாலும், அந்த நேரத்திலும் புன்முறுவல் செய்வதற்கு நிறையத் துணிச்சலும் நேர்முகமான பார்வையும் தேவை.

'உண்மையில் நான்தான் புரியாதவற்றைப் புகன்றேன்' என்பதே யோபுவின் இறுதிச் சொற்களாக இருக்கின்றன. வாழ்வின் புரியாத பிடிபடாத எதார்த்தங்களை நாம் எப்படியாவது புரிந்துகொள்ள விழைகின்றோம். ஆனால், நாம் காணும் விடைகள் மேலும் கேள்விகளை எழுப்புகின்றன. அல்லது விரல்களிடையே தண்ணீர் போல நம் கைகளில் நிற்காமல் மறைந்துவிடுகின்றன. 

யோபு கொண்டிருக்கும் இதே மனநிலை வந்துவிட்டால் வாழ்வின் எந்தப் பிரச்சினைகளையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் சீடர்கள் பணி முடித்துத் திரும்ப வருகின்றார்கள். பணிக்கு அவர்களை அனுப்பும்போது, 'எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம். யாருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்' எனச் சொல்லி அனுப்புகின்றார். இதை வாசிக்கும்போது சீடர்களை நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. அதாவது, எல்லாம் பேக்கிங் செய்து தயாராக இருக்கிறார்கள். அப்போது அங்கே வருகிற இயேசு, 'இது என்ன? அது என்ன? இது எதற்கு? அது எதற்கு? இதை வைத்துவிட்டுப் போங்கள்!' என்று சொல்வதுபோல கற்பனை செய்து பாருங்களேன். சீடர்கள் இயேசுவிடம் எதிர்கேள்வி கேட்கவில்லை என்றாலும், தங்களுக்குள்ளே புலம்பியிருப்பார்கள், முணுமுணுத்திருப்பார்கள். 'இது இல்லாம என்ன செய்ய முடியும்? இது இல்லாம என்னால இருக்க முடியாது!' என்று கூட நினைத்திருப்பார்கள். ஆனால், தங்கள் பணி முடிந்து வரும்போது தங்களிடம் எதுவும் குறைவுபட்டதாக அவர்கள் கருதவே இல்லை. அவர்கள் இதுவரை சுமந்த சுமைகள் எல்லாம் தேவையற்ற சுமைகளாகவே அவர்களுக்குத் தெரியத் தொடங்குகின்றன. தங்களை அறியாமலேயே ஏதோ ஒரு சுதந்திரமும் கட்டின்மையும் தங்களைத் தழுவிக்கொண்டதை அவர்கள் உணர்கிறார்கள். 

இயேசுவின் அறிவுரைகள் அவர்களுக்குப் புரியவில்லை என்றாலும் அவரின் சொற்களுக்குச் சராணகதி அடைகின்றனர். விளைவு, மகிழ்ச்சியும் மனச்சுதந்திரமும் அடைகின்றனர்.

இன்று நாம் சிறுமலர் குழந்தை தெரசாவின் (சின்ன ராணி, மௌனப்புன்னகையாள்) திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். 'சிறிய வழி' என்னும் அரிய வழியைக் கற்றுக்கொடுத்தவர் இவர். குழந்தை போன்ற உள்ளம் கொண்டிருத்தலும், வாழ்வின் பெரியவற்றை விட சிறியவற்றைத் தழுவிக்கொள்வதே நலம் என்றும் கற்றுத் தருகின்றார் இவர்.

குழந்தைகள் தங்களுக்குப் புரியாதவற்றை புரியவில்லை என்றே ஏற்றுக்கொள்கின்றனர். வயது வந்த நாம்தான் புரியாதவற்றைப் புரிந்துகொள்ள மெனக்கெடுகிறோம். அல்லது புரிந்துகொண்டதுபோல நடிக்கிறோம்.

புரியாதவை புரியாதவைகளாக இருக்கும்போதும் மகிழ்ச்சி கிடைக்கிறது எனக் கற்றுக்கொடுக்கிறது இந்த நாள்.

பிறக்கின்ற இந்தப் புதிய மாதம் இனிய மாதமாக அமையட்டும்.


Wednesday, September 28, 2022

அதிதூதர்கள்

இன்றைய (29 செப்டம்பர் 2022) திருநாள்

அதிதூதர்கள்

அதற்கு இயேசு, 'இதைவிட பெரியவற்றைக் காண்பீர். வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று நத்தனியேலிடம் கூறினார். (யோவான் 1:51)

இன்று அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

வானதூதர்கள் பற்றிய நம்பிக்கை எப்படி உருவானது?

முதல் ஏற்பாட்டு நூல்களில் விடுதலைப்பயணம், நீதித்தலைவர்கள், தானியேல் போன்ற நூல்களில் அடிக்கடி வரும் ஒரு நபர் 'மலாக் எலோகிம்' (கடவுளின் தூதர்). ஆனால் 'மலாக் எலோகிம்' வானதூதர் அல்ல. முதல் ஏற்பாட்டு நூலின் ஆசிரியர்கள் கடவுள் என்ற பெயரை பயன்படுத்தாமல் சில நேரங்களில் 'கடவுளின் பிரசன்னம்' மற்றும் 'கடவுளின் தூதர்' என்னும் வார்த்தைகளை மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்தினர்.

முதன்முதலாக முதல் ஏற்பாட்டில் வானதூதர் என்ற சிந்தனை இஸ்ரயேல் மக்களின் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்பே வந்தது. யூப்ரடிஸ், டைக்ரீஸ் நதியோரங்களில் வாழ்ந்த மக்கள் கடவுள் நம்பிக்கையை விட கடவுளின் தூதர்கள் மேல் நம்பிக்கை வைத்தனர். இறக்கும் நம் முன்னோர் அனைவரும் கடவுளி;ன் தூதர்களாக மாறிவிடுகிறார்கள் என்பதும் அவர்களின் நம்பிக்கை. இந்தக் கடவுளின் தூதர்கள் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையே தூது செல்பவர்கள்.

தூதர்கள் என்பவர்களின் தலைவர்களே அதிதூதர்கள்.

வானதூதர்களின் மேல் உள்ள நம்பிக்கை கிறித்தவ மதத்தில் மட்டுமல்ல, மத்திய கிழக்கில் பிறந்த அனைத்து மதங்களுமே வானதூதர்கள் இருப்பதாக நம்புகின்றன. கிறித்தவர்களுக்கு, அதுவும் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல் என்னும் மூன்று அதிதூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் 'ஆர்த்தடாக்ஸ்' எனப்படும் கிறித்தவர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல், உரியேல், செயால்தியேல், யெகுதியேல், பராக்கியேல் மற்றும் யெராமியேல் என்னும் எட்டு அதிதூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள்.

யூத மரபில் ஏழும், இசுலாமில் நான்கும், ஸோராஸ்டிரியத்தில் ஏழும் கடவுளின் அதிதூதர்களின் எண்ணிக்கை.

மிக்கேல் என்றால் 'மிக்கா ஏல்', அதாவது 'கடவுளுக்கு நிகர் யார்?' என்பது பொருள். பாரம்பரியமாக வலது கையில் ஒரு அம்பை வைத்து லூசிஃபர் என்னும் சாத்தானின் தலைவனை தன் காலடியில் போட்டிருப்பவராகவும், மற்றொரு கையில் சில நேரங்களில் தராசும், சில நேரங்களில் ஒலிவக் கிளையும் ஏந்தியவராகச் சித்தரிக்கப்படுகிறார். யாக்கோபு 1:9, தானியேல் 10:13, 12:1 மற்றும் திவெ 12:7 ஆகிய இடங்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.

கபிரியேல் என்றால் 'கபார் ஏல்', அதாவது 'கடவுளின் வல்லமை'. 'கடவுள் வல்லமையானவர்' என்றும் மொழிபெயர்க்கலாம். மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் வரும் இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளில் சக்கரியாவுக்கு, மரியாவுக்கு, யோசேப்புக்கு மற்றும் வானதூதர்களுக்கு 'மங்கள வார்த்தை' சொல்பவர் இவரே.

ரபேல் என்றால் 'ரஃபா ஏல்', அதாவது 'கடவுள் குணமாக்குகிறார்' என்பது பொருள். தோபித்து நூலில் (3:17, 12:15) தோபியாவின் கண்ணுக்குப் பார்வை அளிப்பவராக, தோபித்தின் மனைவி சாராவைப் பிடித்திருந்த பேயை வெளியேற்றுபவராக வருகிறார். தோபித்தின் பயணத்தில் உடனிருப்பவர் இவரே.

நாம் அன்பு செய்யும் அனைவருமே நம்மைச் சுற்றியிருக்கும் தூதர்கள் தாம். நாம் முன்பின் பார்த்திராத கடவுளை நமக்குக் காட்டுபவர்கள் இவர்களே. இவர்களே நமக்கு கடவுளாகவும், கடவுளின் வல்லமையாகவும், குணமாக்குபவர்களாகவும் நம் அருகில் வருகிறார்கள்.

இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள்.

கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள்.

என்னைப் பொறுத்தவரையில் நம் குடும்பங்களில் அல்லது நம் நண்பர்கள் வட்டத்தில் இறந்த நம் முன்னோர்களும் காவல்தூதர்களே. இவர்கள் எந்நேரமும் நம்மைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். நாம் நம் அறையில் தனியாக இருந்தாலும், நெடுந்தூரம் பயணம் செய்தாலும் இவர்கள் அருகில் இருக்கிறார்கள்.

ஆக, அதிதூதர்கள் தரும் முதல் செய்தி 'உடனிருப்பு.'

நாம் தனிமையில் இல்லை. அவர்கள் என்றும் நம் உடனிருக்கிறார்கள்.

இரண்டாவது, நாமும் இந்த அதிதூதர்கள் போல பிறர்வாழ்வில் உடனிருக்க நம்மை அழைக்கிறார்கள்.

இன்று பல நேரங்களில் நமக்கு எல்லாம் இருப்பது போல இருக்கும். ஆனால், ஏதோ ஒரு தனிமை கன்னத்தில் அறைந்துகொண்டே இருக்கும். நான் தனிமையாக இருக்கிறேன் என புலம்புவதை விட்டு, அடுத்தவரும் அப்படித்தானே நினைத்துக் கொண்டிருப்பார் என அவரின் அருகில் சென்றால் நாமும் அதிதூதர்களே.

'கடவுளின் தூதர் ஏறுவதையும் இறங்குவதையும்' காட்சியில் காண்கிறார் யாக்கோபு (காண். தொடக்கநூல் 28:12).

தன் அண்ணன் ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமை மற்றும் தந்தையின் ஆசியைப் பெற்றுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் யாக்கோபு பெத்தேலில் கனவு காண்கின்றார். அந்தக் கனவில்தான் இந்தக் காட்சியைக் காண்கிறார்.

'நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு திரும்பிவரச் செய்வேன்' என்று கடவுள் அவருக்கு வாக்குறுதி கொடுப்பதும் இக்காட்சியில்தான்.

ஆக, முதல் ஏற்பாட்டிலும் இரண்டாம் ஏற்பாட்டிலும் கடவுளின் தூதர்கள் பற்றிய செய்தி 'கடவுளின் உடனிருப்பை' நமக்கு உறுதி செய்கிறது.

இன்று ஒட்டுமொத்தமாக நம் எண்ணத்தில் குறைவுபடுவது இந்த உடனிருப்பு உணர்வே. இதை இன்றைய திருநாள் நிறைவுசெய்வதாக.


Tuesday, September 27, 2022

சீடத்துவப் பயணம்

இன்றைய (28 செப்டம்பர் 2022) நற்செய்தி (லூக் 9:57-62)

சீடத்துவப் பயணம்

தான் சமாரியர்களால் நிராகரிக்கப்பட்ட இடத்தில், தன்னைப் பின்பற்றி வருபவர்கள் கொண்டிருக்க வேண்டிய சீடத்துவம் பற்றி எடுத்துரைக்கின்றார் இயேசு.

'நீர் எங்கு சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்' என்று தன்னிடம் சொன்ன ஒரு இளவலிடம், சீடத்துவத்தின் சவால்களை முன்வைக்கிறார் இயேசு.

மற்ற இரு இளவல்களிடம், 'என்னைப் பின்பற்றி வாரும்,' என இயேசுவே சொல்ல, அவர்களில் ஒருவர் தன் தந்தையை அடக்கம் செய்வதிலும், மற்றவர் தன் வீட்டில் பிரியாவிடை பெறுவதையும் முன்வைக்கின்றனர்.

'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் உழுவதற்கு தகுதியற்றவர்' என்ற தன் சமகால பழமொழியால் அவர்களுக்கு விடை பகர்கின்றார் இயேசு.

இது ஒரு விவசாய உருவகம். கலப்பை என்பது இன்றைய நவீன டிராக்டர் கலப்பை, சட்டி கலப்பை, ஜே.சி.பி, பொக்லைன் என மாறிவிட்டது.

கலப்பையில் கை வைத்து உழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப் பார்த்தால் என்ன நடக்கும்?

அ. கலப்பை நேர் கோட்டில் செல்லாது

ஆ. உழுத இடத்தையே உழுது கொண்டிருக்கும் நிலை வரும்

இ. உழுகின்ற நபரின் காலையே கலப்பை நோகச் செய்துவிடும்

இது இயேசுவைப் பின்பற்றும் சீடத்துவத்திற்கும் பொருந்தும்.

அ. வாழ்க்கை நேர் கோட்டில் செல்லாது.

ஆ. புதியதாக எதுவும் செய்யாமல் செய்ததையே திரும்ப செய்வதில் இன்பம் காண வைக்கும்.

இ. சீடருக்கே அது ஆபத்தாக முடியும்.

மேலும், திரும்பிப் பார்க்கும்போது நாம் இறந்த காலத்திற்குள் மீண்டும் செல்கின்றோம். நாம் பழையவற்றில் இன்பம் காண எத்தனிக்கிறோம். ஆனால், வாழ்வு என்பது நிகழ்காலத்திலும், புதியது தரும் சவாலை எதிர்கொள்வதிலும் இருக்கிறது என்கிறார் இயேசு.

சீடத்துவத்தின் மூன்று முக்கிய பண்புகளைக் குறிப்பிடுகின்றார் இயேசு:

அ. 'நரிகளுக்கு பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை'

நாம் வசிக்கும் வீடு நமக்கு ஒரு முக்கியமான இடம். இந்த உலகத்தில் எங்கு நமக்கு இடம் இல்லை என்றாலும் நம்முடைய வீட்டில் நமக்கு இடம் உண்டு. பசியாய், தாகமாய் இருந்தாலும் வீட்டில் நாம் தங்கிக்கொள்ள முடியும். யாருடைய துணையும் இல்லாமல் வீட்டிற்குள் நம்மால் இருந்துகொள்ள முடியும். ஆக, வீடு நமக்கு உறுதித்தன்மையையும், பாதுகாப்பு உணர்வையும் தருகிறது. ஆனால், இயேசு தனக்கு உறுதித்தன்மையும், பாதுகாப்பு உணர்வும் இல்லை என்றும், தன்னுடைய சீடர்களும் அதே மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் சொல்கிறார். ஏன்? வீடு நமக்கு எந்த அளவுக்கு உறுதித்தன்மையையும், பாதுகாப்பு உணர்வையும் தருகிறதோ அந்த அளவுக்கு நம்மைச் சிறைபிடித்தும் விடுகிறது. சிலர் தாங்கள் வீடு கட்டி விட்டதால் அந்த இடத்தை விட்டு புலம் பெயர வாய்ப்பு கிடைத்தாலும் புலம் பெயராமல் வீட்டை மட்டுமே பற்றிக்கொண்டு இருந்துவிடுகின்றனர். சீடராக இருப்பவர் வாழ்வின் உறுதியற்ற தன்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் அனுபவிப்பவராக இருக்க வேண்டும்.

ஆ. 'வருகிறேன். ஆனால், அப்பாவை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன்'

இரண்டு அர்ப்பணங்கள் ஆபத்தானவை. இந்த நபர் இரண்டு மான்களை ஒரே நேரத்தில் விரட்ட முனைகின்றார். சீடத்துவத்திற்கான அர்ப்பணம் முழுமையானதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் இயேசு.

இ. 'கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்த்தல் கூடாது'

கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்த்தல் உழுதலைத் தாமதமாக்கும், கோணல் மாணலாக்கும். அதைவிட, உழுபவரின் காலில் ஏர் பாய்ந்து கால் புண்படும். புளிப்பு மாவு போன்றது இது. புளிப்பு மாவை கலந்து மாவில் வைத்துவிட்டால் அவ்வளவுதான். அது தன்னுடைய பாதையில் முன்னோக்கிச் செல்லும். புளிக்காரத்தை நிறுத்தவோ, அதை திரும்ப சரி செய்யவோ இயலாது.

உறுதியற்ற தன்மையை ஏற்றல், முழுமையான அர்ப்பணம் தருதல், முன்னோக்கிச் செல்தல் - இவை மூன்றும் சீடத்துவத்திற்கான பண்புகள்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். யோபு 9:1-12,14-16) யோபு கடவுள்முன் மனிதரின் இயலாமை அல்லது கையறுநிலை பற்றி முறையிடுகின்றார். அவரோடு ஒப்பிடப்பட மனிதர்கள் தகுதியற்றவர்கள் எனவும், அவரின் இரக்கம் நம்மை அவர் அருகில் அழைத்துச் செல்கிறது என்றும் சொல்கிறார்.

தூரமாக இருக்கும் கடவுள் இயேசுவில் நமக்கு அருகில் வருகிறார். அவரோடு பேசவும், அவரைப் பின்பற்றவும் நம்மால் முடிகிறது.

அவரோடு செல்லும் சீடத்துவப் பயணம் அவர்மேல் மையம் கொண்டதாக இருந்தால் நம் கலப்பை நேராக உழும்.


Monday, September 26, 2022

வானத்திலிருந்து தீ

இன்றைய (27 செப்டம்பர் 2022) நற்செய்தி (லூக் 9:51-56)

வானத்திலிருந்து தீ

இயேசுவுடைய சீடர்கள் ரொம்ப கோபக்காரங்களா இருக்காங்க! அவர்களைச் சமாளிப்பதே இயேசுவுக்கு மிகப் பெரிய வேலையாக இருந்திருக்கும்!

தங்களைச் சாராத ஒருவர் பேய் ஓட்டுவதைக் கண்டு நிறுத்தப் பார்க்கின்றனர். இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சமாரிய நகர்மேல் தீ விழுமாறு செய்யவா? எனக் கேட்கின்றனர். இருமுறையும் இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார். 

'விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே இயேசு எருசலேமுக்குச் செல்லத் தீர்மானித்தார்' எனப் பதிவு செய்கின்றார் லூக்கா. லூக்காவின் நற்செய்தி பயணத்தின் நற்செய்தி என அழைக்கப்படக் காரணம் இந்த வாக்கியமே. ஏனெனில், லூக்காவின் இயேசு பயணம் செய்துகொண்டே இருக்கின்றார். அவருடைய போதனைகள் மற்றும் வல்ல செயல்கள் அனைத்தும் அவருடைய பயணத்தின் நிகழ்வுகளாக அமைகின்றன. 

சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். ஏனெனில், இயேசு தங்களைக் கடந்து செல்வதை அவர்கள் விரும்பவில்லை. ஒருவேளை, அவர் தங்களுடன் தங்கவில்லை என்று அவர்மேல் கோபித்திருக்கலாம். வழக்கமாக, கலிலேயாவிலிருந்து (வடக்கிலிருந்து) யூதேயாவுக்கு (தெற்கு நோக்கி) பயணம் செய்யும் யூதர்கள், சமாரியா நிலப்பகுதியைத் தவிர்த்து, யோர்தானை ஒட்டிய பகுதியில் நடந்துசெல்வார்கள். ஏனெனில், சமாரிய நிலப்பகுதி தீட்டானது என்பது அவர்களுடைய நம்பிக்கை. இயேசு அந்த நம்பிக்கையை உடைக்கின்றார். சமாரியப் பகுதி வழியாகப் பயணம் செய்ய விரும்புகின்றார். 

சமாரியர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதைக் கண்டு, தங்கள் போதகரிடம் 'வெரி குட்' வாங்குவதற்காக, 'சமாரியக் கிராமத்தின்மேல் வானத்திலிருந்து தீ விழுமாறு செய்யவா?' எனக் கேட்கின்றனர்.

இயேசு தன் ஆற்றலை ஒருபோதும் தனக்காகவோ, அல்லது யாரையும் பழிதீர்க்கவோ பயன்படுத்தவில்லை. சாத்தான் அவரைப் பாலைவனத்தில் சோதித்தபோது, முதல் சோதனை அதுதான். கற்களை அப்பமாக மாற்றி பசியாற்றிக்கொள்ளுமாறு சாத்தான் தூண்டியபோது இயேசு மறுக்கின்றார்.

இங்கே, சீடர்கள் மற்றவர்கள்மேல் பழிதீர்த்துக்கொள்ள தங்கள் ஆற்றலைப் பயன்படுத்த நினைப்பதை இயேசு விரும்பவில்லை. 

அதற்கும் முன்னதாக, தீமைக்குப் பதில் தீமை செய்வதோ, அல்லது உணர்வுப் பெருக்கில் ஒருவர் வினையாற்றும்போது அதே உணர்வுப் பெருக்கில் எதிர்வினை ஆற்றுவதோ தவறு என்பது இயேசுவின் புரிதலாக இருக்கின்றது.

இயேசு எதிர்வினை ஆற்றுவதற்குப் பதிலாக, அடுத்த முயற்சி என்ன என்பதைப் பார்க்கின்றார். வேறு ஊர் வழியாகப் பயணம் செய்கின்றார். எதிர்வினை ஆற்றி தன் ஆற்றலை விரயம் செய்ய அவர் விரும்பவில்லை.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) தூய்மை-தீட்டு என்ற நிலையிலோ, அல்லது அடிமைப்படுத்தும் நிலையிலோ சமூகம் அல்லது நாம் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளையும், மரபுகளையும் மீறுவது. ஏனெனில், தூய்மை-தீட்டு, மேட்டிமை-தாழ்மை என்பது நம் உள்ளத்து உணர்வுகளே தவிர வெளியில் அப்படி எதுவும் இல்லை.

(ஆ) நம் வாழ்க்கை என்பது ஒரு பயணம் என்பதை உணர்வது. இந்தப் பயணத்தில் தடைகள் வரலாம். நம்முடன் பயணம் செய்பவர்கள் நமக்கு இடர்கள் தரலாம். ஆனால், பயணம் தடைபடக் கூடாது. ஒரு பாதை அடைக்கப்பட்டால் மறு பாதையைக் கண்டுபிடித்து நாம் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். விண்ணேற்றம் ஒன்றே – அதாவது, மேன்மை அல்லது வெற்றி ஒன்றே – நம் இலக்காக இருக்க வேண்டும்.

(இ) எதிர்வினை ஆற்றுதல் பெரிய ஆற்றல் விரயம் என்பதை உணர்வது. சமாரியர்கள் இயேசுவின்மேல் எதிர்வினை ஆற்ற, சீடர்கள் சமாரியர்கள்மேல் எதிர்வினை ஆற்றுகின்றனர். ஆனால், இயேசு இரு நிலைகளிலும் தன் ஆற்றலைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கின்றார். நாம் பல நேரங்களில் நம்மை அறியாமல் எதிர்வினை ஆற்றிக்கொண்டே, அல்லது தேவைற்றவற்றுக்குப் பதிலிறுப்பு செய்துகொண்டே நம் ஆற்றலை வீணாக்குகின்றோம். ஆற்றலைத் தற்காத்தல் மிகப் பெரிய அவசியம். ஏனெனில், ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஓர் ஆற்றலை இன்னொரு ஆற்றலாக மட்டுமே மாற்ற முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில் (யோபு 3:1-4,11-17,20-23), யோபு தன் பிறந்த நாளைச் சபிக்கத் தொடங்குகின்றார். 'ஒளி' என்னும் சொல் 'பிறப்பைக் குறிக்க' உருவகமாக இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. நம் வாழ்வின் கதவுகள் அடைக்கப்பட்டது போல நாம் உணரும்போது நாம் தொடங்கிய பயணத்தை நினைத்து வருந்துவது இயல்பு. தன் பிள்ளைகளை இழந்து, தன் உடைமைகளை இழந்து, தன் உடல்நலத்தையும் இழந்து அமர்ந்திருக்கின்றார் யோபு. அவரைக் காண வந்திருக்கின்ற அவருடைய நண்பர்கள் மௌனமாக அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் உரையாடலைத் தொடங்கி வைப்பதற்காக, யோபுவே ஒரு தன்புலம்பல் செய்வதாக ஆசிரியர் இந்த பாடப்பகுதியைக் கையாளுகின்றார். யோபுக்கு ஏன் இப்படி நடந்தது என்பதை கடவுள் அறிவார், அவர் அனுப்பிய சாத்தான் அறிவார், வாசகராகிய நாம் அறிவோம். ஆனால், யோபுவும் அவருடைய நண்பர்களும் அறியவில்லை. யோபு தானாகவே தன் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்கின்றார். தொடர்ந்து அவருடைய நண்பர்களும் தங்களுக்குத் தெரிந்த காரணங்களை முன்வைக்கின்றனர். 

நம் கண்முன் மட்டும் இருப்பதைப் பார்க்கும்போது நாமும் யோபு போல, இயேசுவின் சீடர்கள்போல குறுகிய பார்வை கொண்டிருக்கின்றோம். ஆனால், பாதை நீண்டது எனத் தெரிந்தவுடன் பார்வை மாறுகிறது. 


Saturday, September 24, 2022

அக்கறையின்மை

ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு

ஆமோஸ் 6:1, 4-7 1 திமொத்தேயு 6:11-16 லூக்கா 16:19-31

அக்கறையின்மை

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் வாசிக்கும் வாசகங்கள் கடந்த வார வாசகங்களின் தொடர்ச்சியாக அமைகின்றன. கடந்த வாரம் செல்வத்தைக் கையாள்வது பற்றி வாசித்தோம். செல்வத்தால் வரும் மிகப்பெரிய ஆபத்தான அக்கறையின்மை பற்றி இந்த ஞாயிறு நம்மை எச்சரிக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஆமோ 6:1, 4-7) தன்னுடைய சமகாலத்து செல்வந்தர்களைத் தொடர்ந்து சாடுகின்றார் ஆமோஸ். தன்னுடைய இறைவாக்குப் பாடலை, 'ஐயோ!' என்று தொடங்குகின்றார் ஆமோஸ். 'ஐயோ!' என்பது புலம்பலையும், சாபத்தையும் குறிக்கும். 'இன்பத்தில் திளைத்திருப்போர்,' 'கவலையற்றிருப்போர்,' 'உயர்குடி மக்கள்,' 'பெருமைவாய்ந்தவர்கள்' என வௌ;வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் அனைத்தும் அவருடைய சமகாலத்து மேட்டுக்குடி மக்களையே குறிக்கிறது. விருந்து என்னும் உருவகம் வழியாக அவர்கள் வாழ்ந்த ஆடம்பரமான வாழ்க்கையையும் மற்றவர்கள்மேல் அவர்கள் காட்டிய அக்கறையின்மையையும் சுட்டிக்காட்டுகின்றார் இறைவாக்கினர். அவர்கள் 'தந்தத்தாலான கட்டிலில் படுத்துக்கொண்டு, பஞ்சணைமீது சாய்ந்துகொண்டு, கிடையிலிருந்து வரும் ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்கின்றனர்.' தந்தம் வெகு அரிதான பொருள். பாலைவனத்தில் பஞ்சணையில் தூங்குவது என்றால் அறைகள் குளிரூட்டப்பட வேண்டும். ஆட்டுக்குட்டிகள் திருவிழா நேரங்களில் மட்டுமே உண்ணப்பட்டன. இவற்றை அதிகம் சாப்பிடுவது என்பது சாதாரண மக்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் செய்துவிடுவது போலாகும். கன்றுக்குட்டிகள் வளர்க்கப்பட்டு விவசாயத்திற்கும், போக்குவரத்திற்கும் பயன்பட்டன. அவற்றையும் உணவாக்குகின்றனர் இவர்கள். மேலும், கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டிய கன்றுக்குட்டிகளை உண்பதன் வழியாகவும், கடவுளுக்கு மட்டுமே இசைக்கப்பட்ட பாடல்களை - தாவீது இசைத்தது போல - தங்களுக்கே இசைத்துக்கொள்வதன் வழியாகவும் அவர்கள் தங்களைக் கடவுளுக்கு இணையாக்கிக்கொள்கிறார்கள். 

விருந்து, இசை, திராட்சை இரசம், நறுமணத்தைலம் போன்ற உருவகங்களால் ஆமோஸ் செல்வந்தர்களின் மேட்டிமை வாழ்வைச் சுட்டிக்காட்டுவதோடு, இவை யாவும் இவர்களைச் சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படுத்தின என்றும், இதற்காக இவர்களே முதலில் நாடுகடத்தப்பட்டு அந்நியப்படுத்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கின்றார். மக்களுக்கும் கடவுளுக்கும் உரியதை இவர்கள் தங்களுடையதாக்கிக்கொண்டார்கள். இவ்வாறு மக்களையும் கடவுளையும் அவமானப்படுத்தினார்கள்.

ஆக, இஸ்ரயேலின் செல்வந்தர்களின் மேட்டிமை வாழ்வும், அதனால் அவர்கள் மற்றவர்கள்மேலும் கடவுள்மேலும் காட்டிய அக்கறையின்மையும் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஒருசேர அழிவைக் கொண்டுவருகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 திமொ 6:11-16), நம்பிக்கையில் தான் பெற்றெடுத்த அன்புப் பிள்ளையான திமொத்தேயுவிடம் செல்வம் பற்றியும் அது கொண்டுவரும் ஆபத்து பற்றியும் மனம் திறந்து, செல்வத்திலிருந்து தப்பி ஓடவும், இறைவனுக்கு உகந்த சில மதிப்பீடுகளை நாடித்தேடவும் அறிவுறுத்தின்றார் பவுல். இதற்கு முந்தைய பகுதியில் (1 திமொ 6:3-10) எபேசு திருச்சபையில் இருந்த சில மனிதர்களின் நெறிகேடான வாழ்க்கைமுறை பற்றியும், அவர்கள் செல்வத்தைச் சேகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் எச்சரிக்கின்றார். 'பண ஆசையே அனைத்து தீமைகளுக்கும் ஆணிவேர். இதனால் பலர் நம்பிக்கையிலிருந்து நெறிபிறழ்ந்தனர்' என்று ஆணித்தரமாகச் சொல்கின்றார். அவர்களைப் பற்றிப் பேசி முடித்தவுடன், 'ஆனால் ... நீ இவற்றிலிருந்து தப்பி ஓடு!' என்று தன் அறிவுரையைத் தொடர்கின்றார். 'நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, அன்பு, மனவுறுதி, கனிவு' ஆகிய ஆறு மதிப்பீடுகளை திமொத்தேயு தனதாக்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றார். மேற்கானும் ஆறு மதிப்பீடுகளும் ஒருவரிடம் இருக்கும் அக்கறையின்மை அகற்றுவதற்கான மாத்திரைகள். தன்னலம், தன்மையம் என்னும் நம்முடைய மனிதஇயல்பியல் பண்புகள் நம்மை அறியாமலேயே நம்மேல் ஒரு செதிலை உருவாக்கி மற்றவர்களிடமிருந்து நம்மை அந்நியமாக்கிவிடுகின்றன. இம்மாத்திரைகளை நாம் உண்ணும்போது படிப்படியாக இச்செதில்களை நாம் உதிர்க்கின்றோம். 

மேலும், இம்மதிப்பீடுகள் வழியாகவே திமொத்தேயு நிலைவாழ்வைப் பற்றிக்கொள்ளவும், மற்றவர்களுக்கு நம்பிக்கை வாழ்வின் சாட்சியாகவும் திகழ முடியும். நீடித்த அர்ப்பணமும் நிலையாக அக்கறையுமே ஒரு நல்ல தலைவரை உருவாக்க முடியும். பேராசையும் தன்னலமும் இந்த அர்ப்பணத்தைக் குலைத்துவிடும். எனவேதான் பவுல் திமொத்தேயுவை, அக்கறையின்மை காலப்போக்கில் குழுமத்தையே அழித்துவிடும் என்று மறைமுகமாக எச்சரிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 16:19-31) நமக்கு மிகவும் அறிமுகமான பகுதி. இதை ஒரு உருவகமாக பரிசேயர்களுக்குச் சொல்கின்றார் இயேசு. இரு கதைமாந்தர்கள். ஒருவர் செல்வந்தர். இவர் 'விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து தினமும் விருந்துண்கிறார்.' 'செந்நிற மெல்லிய ஆடை' பகட்டின் அடையாளம். 'செந்நிறம் கம்பளம்' ஆடம்பரமான வரவேற்பைக் குறிப்பது போல. ஆனால், இந்த நபருக்குப் பெயர் இல்லை. மற்றவர் இலாசர். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் - அதாவது, செல்வந்தரின் எச்சில் தட்டிலிருந்து கிடைப்பற்றைக் கொண்டு - பசியாறினார். நாய்கள் கூட வந்து நக்கும் அளவுக்குப் புண்கள் திறந்து கிடந்தன. இவ்வாறாக, இன்னும் அதிகமாக அவர் தீட்டுப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு விடயங்கள் பொதுவாக இருந்தன: (அ) இருவருமே யூதர்கள் அல்லது இஸ்ரயேல் மக்கள், (ஆ) இருவருமே ஆபிரகாமின் மகன்கள் அல்லது மக்கள். மோசேயின் சட்டப்படி (காண். இச 15:7-9) ஒவ்வொரு இஸ்ரயேலரும் தனக்கு அடுத்திருக்கும் இஸ்ரயேலரின்மேல் குறிப்பாக நலிவுற்றவர், வறியவர்மேல் அக்கறை கொண்டுவாழவும், அவர்களுக்கு உரியவற்றைச் செய்யவும் அழைக்கப்பட்டனர். தன் வாசலில் படுத்துக்கிடந்த இலாசர்மேல் காட்டிய அக்கறையின்மையால், கண்டுகொள்ளாத்தன்மையினால் மோசேயின் சட்டத்தை மீறியவராகின்றார் செல்வந்தர்.

இருவருமே இறக்கின்றனர். இறப்பு இவர்கள் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. 'என் கடவுள் உதவி செய்கின்றார்' என்று பொருள்தரும் பெயர் கொண்ட இலாசர் ஆபிரகாமின் மடிக்குத் தூக்கிச் செல்லப்படுகின்றார். செல்வந்தரோ பாதாளத்தில் தனிமையில் வதைக்கப்படுகின்றார். அவர் இலாசர்மேல் காட்டிய அக்கறையின்மை அவருக்கு அழிவைக் கொண்டுவருகிறது.

ஆனால், இறந்தபின்னும் அச்செல்வந்தர் தன்னுடைய தவற்றை உணரவில்லை. செருக்கோடும் தன்னலத்தோடும் தொடர்ந்து முறையிடுகின்றார். இலாசரைத் தன்னுடைய பணியாளனாகவும் தூதனாகவும் ஆக்கிக்கொள்ள விரும்புகின்றார். தனக்குத் தண்ணீர் தருமாறு இலாசரைப் பணிக்கவம், தம் இல்லத்திற்குத் தூதனுப்பவும் ஆபிரகாமிடம் வேண்டுகின்றார். செல்வந்தரின் அக்கறையின்மை அவருக்கும் ஆபிரகாம்-இலாசருக்கும் இடையே பெரிய பிளவை ஏற்படுத்திவிடுகிறது - 'இங்கிருப்பவர் அங்கும் அங்கிருப்பவர் இங்கும் கடந்து வர இயலாமல் போய்விடுகிறது.'

இவ்வாறாக, அக்கறையின்மையின் விளைவு அழிவு என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன இன்றைய வாசகங்கள். முதல் வாசகத்தில் மேட்டுக்குடி செல்வந்தர்களின் வாழ்வு அவர்களுக்கும் ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களுக்கும் நாடுகடத்தலைக் கொண்டுவருகிறது. இரண்டாம் வாசகத்தில் செல்வம் ஒருவரை அர்ப்பணத்திலிருந்து தவறிவிழச் செய்கிறது. மூன்றாம் வாசகத்தில் அக்கறையின்மை செல்வந்தரை அழிவில் தள்ளுவதோடு பெரிய பிளவையும் சமூகத்தில் ஏற்படுத்திவிடுகிறது. இதற்கு மாறாக, அக்கறை காட்டும் ஒருவர், இன்றைய திருப்பாடல் (146) குறிப்பிடும் ஆண்டவர் போல, 'நீதியை நிலைநாட்டுகின்றார், பசித்திருப்போருக்கு உணவளிக்கின்றார், அநாதைப் பிள்ளைகளையும்  கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்.'

அழிவுதரும் அக்கறையின்மையை நாம் எப்படி கடப்பது? அல்லது மற்றவர்மேல் எப்படி அக்கறை காட்டுவது?

மற்றவர்கள்மேல் அக்கறைகாட்டுவதிலும் சிக்கல் இருக்கிறது. அடுத்தவர்கள் என்னிடம் முதலில் கேட்கட்டும் என்று சொல்லி சிலர் அக்கறை காட்ட மறுப்பர். அல்லது சிலர் மற்றவர்கள்மேல் அக்கறை காட்டியதால் மிகவும் இக்கட்டான சூழலில் சிக்கியிருக்கக் கூடும். இருந்தாலும் அக்கறையின்மையைவிட அக்கறை மேலானது.

நம்மிடம் பின்வரும் இரண்டு கேள்விகள் இருந்தால் நம்மால் மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட முடியாது.

அ. விதிப்படிதானே எல்லாம் நடக்கும்?

'நான் நன்றாக இருக்கிறேன் என்றால், நீ ஏழையாக இருக்கிறாய் என்றால் அது விதி' என்று நினைப்பவர்களும், 'நான் நன்றாக இருக்கிறேன் என்றால் உழைக்கிறேன். நீயும் உழைத்தால் நன்றாக இருப்பாய்' என்று நினைப்பவர்களும் மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட முடியாது. இன்றைய முதல் வாசகத்தில் நாம் கண்ட செல்வந்தர்கள் இத்தகைய மனநிலையைத்தான் கொண்டிருந்தனர். தாங்கள் செல்வராய் இருப்பதே கடவுளின் ஆசீர் என்றும், அந்த ஆசீரை அவர்கள் கொண்டாட வேண்டும் என்றும் நினைத்தார்கள். ஆக, தங்களுடைய வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் தாங்கள் செய்து கொள்வதை அவர்கள் இதன் அடிப்படையில் நியாயப்படுத்தினார்கள். ஆனால், இது சரியான மனநிலை அன்று. ஒருவேளை அம்பேத்கார் இப்படி நினைத்திருந்தால் தன்னுடைய மக்களின் உரிமைக்காக அவர் போராடியிருக்க முடியுமா? 

ஆ. நான் யாருக்கும் தீமை செய்யவில்லையே?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் செல்வந்தர் யாருக்கும், குறிப்பாக இலாசருக்குத் தீமை செய்யவில்லை. தன்னுடைய உழைப்பில் தான் பெற்ற செல்வத்தைக் கொண்டு உண்டு மகிழ்ந்தார். யாருக்கும் அவர் தீமை செய்யவில்லை. இலாசரின் உழைப்பை உறிஞ்சவில்லை. இலாசரைத் தன் பார்வையிலிருந்து விரட்டியடிக்க வில்லை. ஆக, தீமை செய்யாமல் இருந்தால் மட்டும் போதுமா? இல்லை. நன்மை செய்யாமல் இருப்பதும் பாவம்தான். நான் யாருடைய வம்புக்கும் போவதில்லை, நான் நடுநாயகமானவன் என்று நினைப்பதெல்லாம் அடக்குபவருக்கு இடம் கொடுப்பதாக அமையும்.

மேலும், நமக்குத் தேவைகள் அன்றாடம் கூடிக்கொண்டே வருகின்றன. வழக்கமாக நமக்கு மேலிருப்பவர்களோடு நம்மையே ஒப்பிட்டுக்கொண்டே நம்மிடம் இல்லாதவை பற்றி நாம் புலம்புகின்றோம். இப்படிப்பட்ட புலம்பல் இருப்பவர்கள் ஒருபோதும் மற்றவர்கள்மேல் அக்கறைகாட்ட இயலாது. ஆனால், நமக்குக் கீழிருப்பவர்களோடு நம்மையே ஒப்பிடத் துணிந்தால் நம்மால் எளிதில் மற்றவர்கள்மேல் அக்கறைகாட்ட முடியும்.

இவ்விரண்டு கேள்விகளை விடுப்பவர்தாம் மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட முடியும். நேர்முகமான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், நான் எனக்கும் மற்றவருக்கும் இடையே இருக்கின்ற சார்புநிலையை உணர்ந்தால்தான் அக்கறைகாட்ட முடியும். 'கடவுளின் மனிதனாகிய நீ இவற்றிலிருந்து தப்பி ஓடு' என்று திமொத்தேயுவுக்குச் சொல்கின்ற பவுல், 'நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, அன்பு, மனவுறுதி, கனிவு' ஆகியவற்றை நாடித்தேடு என்கிறார். ஒன்றிலிருந்து நான் ஓடும்போது மற்றதை நான் நாட வேண்டும். எதையாவது பிடித்துக்கொண்டே இருந்தால்தான் வாழ முடியும். ஆக, நான் மற்றவர்களோடு தொடர்பில் இருக்கிறேன் என்றும், மற்றவரின் வயிறு வாடியிருக்கும்போது, என் தட்டு நிரம்பி வழிந்தால் நான் மற்றவருக்கு உரியதையும் உண்கிறேன் என்றும் உணர்ந்தால் என்னால் அடுத்தவர்மேல் அக்கறைகாட்ட முடியும்.

இறுதியாக, இன்று நான் மற்றவர்கள்மேல் அக்கறையோடு இருக்கின்றேனா? அல்லது அக்கறையற்று இருக்கின்றேனா? அக்கறையின்மையில் வாழ்கிறேன் என்றால், எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே வெள்ளிப்பூச்சு இருக்கிறது என்பதே உண்மை. இந்த வெள்ளிப்பூச்சு அதிகமாகிக்கொண்டே போனால் எனக்கும் அவருக்கும் - ஆண்டவருக்கும் - இடையே உள்ள பிளவும் அதிகமாகிக்கொண்டே போகும்.

அக்கறையின்மை என்னையும் பிறரையும் அழிக்கும் என்றால்,

நான் மற்றவர்கள்மேல் காட்டும் அக்கறை பிறரையும் என்னையும் வாழ வைக்கும்.

இவ்வாறாக, நான் காட்டும் அக்கறையே நான் அக்கரை சேர்வதற்கான படகும் துடுப்பும் ஆகும்!


Friday, September 23, 2022

படைத்தவரை நினை

இன்றைய (24 செப்டம்பர் 2022) முதல் வாசகம் (சஉ 11:9-12:8)

படைத்தவரை நினை

இன்றைய முதல் வாசகப் பகுதிதான் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக நான் எடுத்த விவிலியப் பகுதி. இந்தப் பகுதியையும், நம் மண்ணின் பட்டினத்தாரின் 'உடற்கூற்றுவண்ணம்' என்னும் பாடலையும் ஒப்பீடு செய்தேன். இன்றைய முதல் வாசகப் பகுதி, உரைநடை போல இருந்தாலும் இது ஓர் எபிரேயப் பாடல். 

'கதையாடல் செய்யுள்' அல்லது 'கதையாடல் பாடல்' என்னும் இலக்கியக் கூற்றைக் கொண்டது. இதன்படி, ஒரு கதையானது பாடல் வடிவில் பாடப்படும். இங்கே பாடப்படுவது யாருடைய கதை?

உங்கள் மற்றும் என் கதை இது. ஆம்! தனிமனிதரின் வாழ்வியல் பயணத்தை கதைப்பாடலாக எழுதுகிறார் சபை உரையாளர். பிறப்பிலுருந்து இறப்பு வரை மனிதர்கள் நான்கு நிலைகளாகப் பயணம் செய்கிறார்கள்: தாயின் வயிற்றுப் பருவம், குழந்தைப் பருவம், இளமைப் பருவம், மற்றும் முதிய பருவம்.

இந்தப் பாடலில் உள்ள சில கருத்துருக்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

1. 'இளையோரே!'

'இளையோரே!' என இங்கே விளிப்பது ஓர் இலக்கிய நடை. அதாவது, ஞானநூல் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யும்போது, தங்களுக்கு முன்னால் உள்ள மாணவர்களை மனத்தில் வைத்தோ, அல்லது நேரிடையாக நிறுத்தியோ கூறுவர். இந்தப் பின்புலத்தில்தான் நீதிமொழிகள் நூல் ஆசிரியரும், 'பிள்ளாய்!' என விளிக்கிறார். மேலும், 'இளமை' என்பது நாம் எப்போதும் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் ஒரு பருவம். ஆக, தன் வாசகர்கள் அனைவரிடமும் இருக்கும் இளமை உணர்வை நினைவூட்டுவதற்காகவும், 'இளையோரே' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் சபை உரையாளர்.

2. 'மகிழ்ச்சியோடு இருப்பதற்கே'

'மகிழ்ச்சி' என்பது சபை உரையாளர் நூலின் சில இடங்களில் 'வீண்' என்று அழைக்கப்பட்டாலும், 'மகிழ்ச்சி' என்பது மட்டுமே வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும் என்பதே சபை உரையாளரின் அறிவுரை. மகிழ்ச்சி எப்போது வரும்? 'மனக்கவலை ஒழியும்போது,' 'உடலுக்கு ஊறு வராதபோது.' இங்கே, மகிழ்ச்சி என்பது முதலில் மனம் சார்ந்த விடயம் என்பதையும் சபை உரையாளர் சுட்டிக்காட்டுகிறார்.

3. 'படைத்தவரை மறவாதே'

எபிரேயத்தில் கடவுள் என்பதற்கு, 'எலோஹிம்' என்ற பதமும், ஆண்டவர் என்பதற்கு 'யாவே' என்ற பதமும் பயன்படுத்தப்படுகிறது. சபை உரையாளர் இந்த இரண்டு வார்த்தைகளையும் பயன்படுத்தாமல், 'படைத்தவர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ஆக, கடவுள் என்று ஒரு பெயரைச் சொல்லி அவரை அந்நியப்படுத்தாமல், கடவுளுக்கும் நமக்குள் உள்ள உறவை முன்வைத்து, 'படைத்தவர்' என அழைக்கிறார். மேலும், படைத்தவர் என்பவர் எந்தவொரு மதத்திற்கும் உரியவர் அல்லர். மாறாக, அனைவருக்கும் பொதுவானவர். மனிதர்களில் யாரும் சுயம்பு கிடையாது. அதாவது, தாங்களாகவே உதித்தவர்கள் அல்லர். நமது இருத்தலுக்கும் இயக்கத்திற்கும் இறைவனையே சார்ந்திருக்கிறோம்.

4. 'வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே' 

'வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே' என்று சொல்லும் நாள்கள் என்பது முதுமைப் பருவத்தின் நாள்கள். ஏனெனில், முதுமைப் பருவத்தில் உடல் சோர்கிறது, உள்ளம் வாடுகிறது. அந்த நாள்கள் விரைவில் வரும் என்பது சபை உரையாளரின் கருத்து.

5. 'இயற்கை நிகழ்வு'

முதுமைப் பருவத்தை இயற்கை உருவகங்களாகப் பதிவு செய்கிறார் சபை உரையாளர். ஆக, மனிதர்கள் என்பவர்கள் இயற்கையின் ஒரு பகுதியினர். நாம் பல நேரங்களில் இதை மறந்துவிட்டு இயற்கைக்கு எதிராகப் பயணம் செய்கிறோம். நம் மருத்துவ உலகம் மூப்படைதல் அல்லது வயது முதிர்தலை ஒரு நோய் போல சித்தரிக்கிறது. நரைத்த தலைக்கு பூச்சு, முகத்தில் விழும் சுருக்கத்திற்கு நெகிழி அறுவைச் சிகிச்சை, தேய்ந்த பகுதிகளுக்கு சிலிக்கான் நிரப்புதல் என்று முதுமைக்கு எதிராக நம்மைப் போராடச் சொல்கிறது. ஆனால், வயது முதிர்தலை ஒரு எதார்த்த நிகழ்வாக எடுத்து அதைத் தன்னோடு அணைத்துப் புன்முறுவல் செய்கிறார் சபை உரையாளர். 'வாதை மரம் பூப்பூக்கும் முன்னும்' ('நரை விழும் முன்'), 'வெட்டுக்கிளி போல நடை தடுமாற' ('உடலுறவின் இயக்கம் குறைய'), 'ஆசை அற்றுப் போகுமுன்' ('உணவு மற்றும் உறவின்மேல் உள்ள ஆசை குறைவு') என வாழ்வின் இறுதியில் வரும் அனைத்தையும் இனிதே அனுபவிக்கச் சொல்கிறார் சபை உரையாளர். இங்கே, வாழ்வின் இரட்டைத்தன்மையை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இளமை என்பதன் இணையான முதுமை அவசியம். இளமையைத் தழுவிய நாம் முதுமையையும் தழுவ வேண்டும் என்பதே உண்மை.

6. 'மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கு, கடவுள் தந்த உயிர் கடவுளுக்கு'

சபை உரையாளரின் காலத்தில் மோட்சம், நரகம், உத்தரிக்கிற நிலை என்ற புரிதலோ, மனித ஆன்மா என்றென்றும் வாழும் என்ற புரிதலோ இல்லை. இறந்தால் மண் உடலுக்கு, உயிர் கடவுளுக்கு என்ற புரிதல் மட்டுமே இருந்தது. சபை உரையாளரைப் பொருத்தவரையில், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. விலங்குகள் போலவே மனிதர்கள் இறக்கின்றனர் (காண். சஉ 3:19-21) அவ்வளவுதான்! இருந்தாலும், 'நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார்' என்று இந்தப் பகுதியில் சொல்கிறார் சபை உரையாளர். இந்த வரி பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்று சொல்கின்றனர் சிலர். மற்றும் சிலர், கடவுளின் தீர்ப்பு நமக்கு இந்த உலகத்திலேயே கிடைக்கும் என்று சொல்கின்றனர்.

இறுதியாக, 'வீண் முற்றிலும் வீண்' என்று சபை உரையாளர் முடிக்கின்றார்.


Thursday, September 22, 2022

வாழ்வின் இரட்டைத்தன்மை

இன்றைய (23 செப்டம்பர் 2022) முதல் வாசகம் (சஉ 3:1-11)

வாழ்வின் இரட்டைத்தன்மை

மனிதர்கள் பார்க்கும் விதத்தை வருணிக்க கதை ஒன்று சொல்லப்படுவதுண்டு: 

முனிவன் ஒருவன் அரசவீதியில் நடந்துசென்றுகொண்டிருந்தான். அது அரசன் வரும் நேரம். முனிவனை விலகி நடக்கச் சொல்லுமாறு குதிரையில் வாளேந்திய வீரன் ஒருவன் வேகமாகச் சென்று முனிவன் அருகில் நிற்கிறான். 'அரசன் குதிரையில் வருகிறான். விலகி நடங்கள்!' என்று மூச்சிரைக்க வீரன் சொன்னபோது, முனிவன் திரும்பிப் பார்த்து, 'வருவதில் யார் அரசன்?' எனக் கேட்கிறான். 'மேலிருப்பது அரசன், கீழிருப்பது குதிரை' என்கிறான் வீரன். 'மேல் எது? கீழ் எது?' தொடர்கிறான் முனிவன். 'நான் இருப்பது மேல். நீ இருப்பது கீழ்' என வீரனும் தொடர்கிறான். 'நான் எது? நீ எது?' என முனிவன் கேட்க, அமைதி காக்கிறான் வீரன்.

முனிவன் அனைத்தையும் இணைத்தே பார்த்தான். வீரன் அனைத்தையும் பிரித்தே பார்த்தான். இருவருடைய பார்வையும் வௌ;வேறாகத் தெரிந்தாலும் பார்வை ஒன்றுதான். எப்படி? ஒரு குச்சியை எடுத்து, அதில் இரண்டு நுனிகள் உள்ளன என்று வீரன் சொன்னால், அது ஒரே குச்சிதான் என்கிறான் முனிவன். இரண்டு நுனிகளும் இணைவது குச்சியில்தான். ஆக, குச்சியின் நுனிகள் ஒன்றுக்கொன்று எதிர்திசையில் இருந்தாலும், அவை ஒன்றையொன்று இணைக்கின்றன அல்லது ஒன்றோடொன்று பொருந்துகின்றன.

வாழ்வின் இரட்டைத்தன்மையை மிக அழகாக உணர்ந்தவர்களும், இரட்டைத்தன்மையின் இயல்பு, பிரிப்பது அல்ல, இணைப்பது என்பதையும் உணர்ந்தவர்கள் நாம் விவிலியத்தின் முதல் (பழைய) ஏற்பாட்டில் காணும் சபை உரையாளரும், நம் தமிழ் மண்ணில் வாழ்ந்த பட்டினத்தாரும் ஆவர். ஏறக்குறைய கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எபிரேய ஞான நூல் ஆசிரியர் சபை உரையாளரும் (எபிரேயத்தில், 'கொஹெலத்'), கி.பி. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்த் துறவுக் கவிஞர் பட்டினத்தாரும், வாழ்வின் தெளிவற்ற தன்மை, நிலையாத்தன்மை, உடையுமை, தெளிவற்ற நிலை, உறுதியற்ற நிலை, மற்றும் நொறுங்குநிலை ஆகியவற்றை உணர்ந்து, தங்கள் சமகாலத்து மாந்தர்கள் வாழ்வின் இந்நிலையிலும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் எனவும், தங்களைப் படைத்தவரை என்றும் நினைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். 

'பிறப்புக்கு ஒரு காலம். இறப்புக்கு ஒரு காலம்.

நடவுக்கு ஒரு காலம். அறுவடைக்கு ஒரு காலம்.

கொல்லுதலுக்கு ஒரு காலம். குணப்படுத்துதலுக்கு ஒரு காலம்.

இடித்தலுக்கு ஒரு காலம். கட்டுதலுக்கு ஒரு காலம்.

அழுகைக்கு ஒரு காலம். சிரிப்புக்கு ஒரு காலம்.

துயரப்படுதலுக்கு ஒரு காலம். துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்.

கற்களை எறிய ஒரு காலம். கற்களைச் சேர்க்க ஒரு காலம்.

அரவணைக்க ஒரு காலம். அரவணையாதிருக்க ஒரு காலம்.

தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம். இழப்பதற்கு ஒரு காலம்.

காக்க ஒரு காலம். தூக்கியெறிய ஒரு காலம்.

கிழிப்பதற்கு ஒரு காலம். தைப்பதற்கு ஒரு காலம்.

பேசுவதற்கு ஒரு காலம். பேசாதிருப்பதற்கு ஒரு காலம்.

அன்புக்கு ஒரு காலம். வெறுப்புக்கு ஒரு காலம்.

போருக்கு ஒரு காலம். அமைதிக்கு ஒரு காலம்.' 

(சபை உரையாளர் 3:2-8)

பிறப்பும் இறப்பும் இரண்டு என்றாலும் வாழ்க்கை என்றால் ஒன்றுதான். நடவும் அறுவடையும் இரண்டு என்றாலும் பயிர் என்றால் ஒன்றுதான். கொல்லுதலும் குணப்படுத்துதலும் இரண்டு என்றாலும் உடல் என்றால் ஒன்றுதான். இடித்தலும் கட்டுதலும் இரண்டு என்றாலும் கட்டடம் என்றால் ஒன்றுதான். அழுகையும் சிரிப்பும் இரண்டு என்றாலும் பதிலுணர்வு என்றால் ஒன்றுதான். துயரமும் மகிழ்ச்சியும் இரண்டு என்றாலும் மனப்பாங்கு என்றால் ஒன்றுதான். கற்களை எறிதலும் சேர்த்தலும் இரண்டு என்றாலும் குவியல் என்றால் ஒன்றுதான். அரவணைத்தலும் அரவணையாதிருத்தலும் இரண்டு என்றாலும் நெருக்கம் என்றால் ஒன்றுதான். தேடிச் சேர்ப்பதும் இழப்பதும் இரண்டு என்றாலும் தேடல் என்றால் ஒன்றுதான். காத்தலும் எறிதலும் இரண்டு என்றாலும் பொருள் என்றால் ஒன்றுதான். கிழிப்பதும் தைப்பதும் இரண்டு என்றாலும் ஆடை என்றால் ஒன்றுதான். பேசுதலும் பேசாதிருத்தலும் இரண்டு என்றாலும் மொழி என்றால் ஒன்றுதான். அன்பும் வெறுப்பும் இரண்டு என்றாலும் உறவு என்றால் ஒன்றுதான். போரும் அமைதியும் இரண்டு என்றாலும் வரலாறு என்றால் ஒன்றுதான்.

'பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்

தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்

பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்

உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்

புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்

அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்

உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்' 

(பட்டினத்தார், கோயிற்றிருவகவல், 1)

உயிர் என்றால் ஒன்று, பிறப்பும் இறப்பும் இரண்டு. கதிரவன் என்றால் ஒன்று, தோன்றுதலும் மறைதலும் இரண்டு. மலர் என்றால் ஒன்று, பெருத்தலும் சிறுத்தலும் இரண்டு. நினைவு என்றால் ஒன்று, உணர்தலும் மறத்தலும் இரண்டு. உறவு என்றால் ஒன்று, இணைதலும் பிரிதலும் இரண்டு. உணர்வு என்றால் ஒன்று, உவப்பும் வெறுப்பும் இரண்டு. மேலும், இங்கே பட்டினத்தார், நாம் அருந்தியது சில நிமிடங்களில் கழிவாகிவிடுகிறது என்றும், நாம் உடுத்தியது சில நிமிடங்களில் அழுக்காகி விடுகிறது என்றும் சொல்லும்போதும், அருந்துவதும் கழிவதும் இரண்டு என்றாலும், உணவு என்றால் ஒன்று எனவும், உடுத்துவதும் அழுக்காவதும் இரண்டு என்றாலும், உடை என்றால் ஒன்று எனவும் கூறுகின்றார்.

நாம் விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ நம் வாழ்வியல் அனுபவங்கள் எல்லாமே இரட்டைத்தன்மை கொண்டே இருக்கின்றன. வேலை-ஓய்வு, பகல்-இரவு, விழிப்பு-தூக்கம், தொடக்கம்-முடிவு என வாழ்க்கை நகர்கிறது. நாம் திறந்த புத்தகத்தை மூடுகிறோம், மூடிய புத்தகத்தைத் திறக்கிறோம். அலைபேசியில் ஓர் அழைப்பைத் தொடங்குகிறோம், அதே அழைப்பை முடிக்கிறோம். வாகனத்தை இயக்குகிறோம், அதன் இயக்கத்தை நிறுத்துகிறோம். 

மேற்காணும் ஞானியரின் வாழ்வின் இரட்டைத்தன்மை பற்றிய புரிதல் நமக்கு வழங்கும் பாடங்கள் மூன்று: (அ) இரட்டைத்தன்மையின் பொருந்துநிலையைப் பார்த்தல். அதாவது, இன்று நான் ஒருவர் என்மேல் கோபப்படுவதைப் பார்த்தால், அவர் என்மேல் அன்புகாட்டிய நேரத்தையும் எண்ணிப் பார்த்தல்.  (ஆ) ஒன்றை மட்டும் பற்றிக்கொள்ளாதிருத்தல். அதாவது, அவரின் கோபத்தை மட்டுமே பற்றிக்கொண்டு அவர்மேல் பகைமை வளர்க்காமல், அவரை மன்னித்தல். (இ) ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும் போது அடுத்தது வேகமாக வந்துவிடுகின்ற வாழ்வின் நிலையாத்தன்மையைக் கொண்டாடுதல். கோபமும், அன்பும் மறையக்கூடிய, மாறக்கூடிய உணர்வுகள் என அறிந்துகொண்டு, அவற்றைக் கொண்டிருக்கும் அந்த இனியவரைக் கொண்டாடுதல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 9:18-22), பேதுருவின் நம்பிக்கை அறிக்கையை வாசிக்கின்றோம். 'நீர் கடவுளின் மெசியா' என அறிக்கையிடுகின்றார் பேதுரு. ஆனால், அந்த மெசியா நிலைக்கான வழி துன்பம் என அதன் மறுதுருவத்தை எடுத்துரைக்கின்றார் இயேசு. வாழ்வின் ஒரு பக்கத்தை பார்ப்பவர்கள் நடுவில் அதன் மறுபக்கத்தையும் இணைத்தே பார்க்கின்றனர் ஞானியர்.


Wednesday, September 21, 2022

புதியது எதுவும் இல்லை

இன்றைய (22 செப்டம்பர் 2022) முதல் வாசகம் (சஉ 1:2-11)

புதியது எதுவும் இல்லை

இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு நாம் சபை உரையாளர் நூலிலிருந்து முதல் வாசகம் வாசிக்கின்றோம்.

'வீண் முற்றிலும் வீண்!' எனத் தன் நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர். 'வீண்' என்பதற்கு எபிரேயத்தில் 'ஹபேல்' என்னும் சொல் பயன்படுத்துகிறது. 'ஹேபல்' என்றால் 'காற்று' அல்லது 'ஆவி' அல்லது 'நிலையற்றது' அல்லது 'வெறுமையானது' என்பது பொருள். இந்த வார்த்தையின் மூலம் நமக்கு ஆச்சரியம் தரக்கூடியது. ஆதாம்-ஏவாளின் இரண்டாம் மகனது பெயர் 'ஹாபேல்' (தமிழில், 'ஆபேல்'). எபிரேய விவிலியம் முதலில் உயிர் எழுத்துக்கள் இல்லாமலே எழுதப்பட்டன. உயிரெழுத்துகளை நீக்கிவிட்டால், 'ஆபேல்' மற்றும் 'வெறுமை' என்னும் சொல்லின் மெய்யெழுத்துகள் 'ஹபல' என்னும் மூன்று எழுத்துக்களே. சபை உரையாளர், 'ஆபேல்' என்ற வார்த்தையை எடுத்து விளையாடுகிறார். அதாவது, ஆபேல் கடவுளுக்கு உகந்தவராய் இருந்தார். அவருடைய பலி கடவுளுக்கு ஏற்புடையதாக இருந்தது. ஆனால், அவரது கடவுளோ அல்லது அவரது பலியோ அவரை அவருடைய அண்ணன் காயினிடமிருந்து காப்பாற்ற இயலவில்லை. பரிதாபமாக இறந்து போகிறார் ஆபேல். 

ஆக, தான் கடவுளுக்குப் பயந்து நடந்தாலும், கடவுளுக்கு உகந்த பலி செலுத்தினாலும், ஏதோ ஒரு கயவன் கையால் இறப்பு வரும் என்றால், கடவுளுக்கு ஏன் பயப்பட வேண்டும்? கடவுளுக்கு ஏன் பலி செலுத்த வேண்டும்? என்னும் கேள்விகள் சபை உரையாளருக்கு எழுகின்றன. ஆக, 'நற்செயல்' என்பது வீண் என முடிவு செய்கிறார். இந்தப் பின்புலத்தில்தான் இவர் விதிக்கொள்கையை உறுதியாகப் பற்றிக்கொள்கின்றார்: 'விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும். நேர்மையானவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும், மாசற்றவர்களுக்கும் மாசுள்ளவர்களுக்கும், பலி செலுத்துகிறவர்களுக்கும் பலி செலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும்' (காண். சஉ 9:2).

இரண்டாவதாக, மனிதரின் உழைப்பை வீண் என்கிறார் சபை உரையாளர். இரண்டு நிலைகளில்: ஒன்று, இன்று காலையில் நான் என் அறையைச் சுத்தம் செய்கிறேன். மாலையில் அது மீண்டும் அழுக்காகிவிடுகிறது. ஆக, என் உழைப்பு ஒரு நாளைக்குரிய பயனைக்கூட எனக்குத் தருவதில்லை. இரண்டு, என் உழைப்பின் பயனை நான் அதற்காக உழைக்காத ஒருவருக்கு விட்டுச் செல்ல வேண்டும். ஆனால், அவர்கள் என்னை நினைவில் வைக்கமாட்டார்கள். அருள்பணியாளர்கள் சிலர் எங்கள் மறைமாவட்டத்தில் இறந்தபோது நான் இதைக் கண்டுள்ளேன். அவர் இறந்த இரு வாரங்களுக்கு அடிக்கடி வந்து தங்களுக்குத் தேவையானதை எடுத்துச் செல்வர். அதற்குப் பின், நினைவுத் திருப்பலி பற்றி அறிவிக்க அவர்களை தொலைபேசியில் அழைத்தால்கூட அழைப்பை ஏற்கமாட்டார்கள். எந்த ஒரு உழைப்பும் இல்லாமலேயே இன்னொருவரின் உழைப்பின் பயனை ஒருவர் அனுபவிப்பது பெரிய ஏமாற்றம். ஆக, உழைப்பது வீண் என்கிறார் சபை உரையாளர். எதற்காக வீடு கட்ட வேண்டும்? வீட்டை நீ கட்டுவதற்கு உழைப்பாய், மன உளைச்சலுக்கு ஆளாவாய், கடன் வாங்குவாய், அவமானப்படுவாய், வலி தாங்குவாய். ஆனால், நீ இறந்தபின் அந்த வீடு, அதற்காக உழைக்காத, மன உளைச்சலுக்கு ஆளாகாத, கடன் வாங்காத, அவமானப்படாத, வலி தாங்காத ஒரு மடையனுக்கு (அப்படித்தான் சொல்கிறார் சபை உரையாளர்) செல்லும். அவனுக்கு அது தேவை இல்லாததால் அந்த வீடு ஒரு சுமையாகத் தோன்றும். ஆக, உழைத்து என்ன பயன்? 

மூன்றாவதாக, யாருடைய நினைவும் எப்போதும் நிலைப்பதில்லை. நம் வீட்டிலேயே பார்க்கலாம். எனக்கு என் அப்பா மற்றும் அவரது அப்பா தாண்டி எந்த நினைவும் இருக்காது. அது என் தவறு அல்ல. ஏனெனில், அதற்கு முந்தைய தலைமுறையினர் என்னோடு நேரடித் தொடர்பில் இல்லை. ஆக, இரத்த உறவு, திருமண உறவு, மற்றும் உடன்படிக்கை உறவு என்னும் மூன்று உறவுகளுமே வீண் சபை உரையாளருக்கு.

நான்காவதாக, சலிப்பு அல்லது ஏமாற்ற உணர்வு. ஆங்கிலத்தில் இதை disenchantment என்று அழைப்பார்கள். சலிப்பு இரண்டு நிலைகளில் வருகிறது: ஒன்று, ஒரு செயலைத் தொடர்ந்து செய்வதால். தினமும் எழ வேண்டும், பல் துலக்க வேண்டும், பசித்தால் சாப்பிட வேண்டும், கழிவுகளை அகற்ற வேண்டும், ஆடை அணிய வேண்டும், அணிந்து அழுக்கானதைத் துவைக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும், உறங்க வேண்டும். மறுபடியும் சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். இரண்டு, நிறைவு கிடைக்காததால் வரும் சலிப்பு. நாம் எவ்வளவு சுவையாகச் சாப்பிட்டாலும் நாக்கு இன்னும் சுவையானதையே தேடுகிறது. அப்படியே கண்களும், காதுகளும் தேடுகின்றன. யூட்யூப் பார்க்கிறவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். ஒரு வீடியோ பார்ப்போம் என்று தொடங்குவது, அடுத்து, அடுத்து எனத் தொடர்ந்துகொண்டே இருக்கும். கொஞ்ச நேரத்தில் இனிமையாகத் தொடங்கியது சோர்வாக முடியும். ஆக, இதுவும் வீண் என்கிறார் சபை உரையாளர்.

ஐந்தாவதாக, 'புதியது என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை!' என்கிறார் சபை உரையாளர். யாரோ ஒருவர் எங்கோ செய்ததை நாம் மீண்டும் செய்கிறோம். அவ்வளவுதான்! 'ஐஃபோன் புதியதுதானே! இணையம் புதியது தானே!' என நாம் கேட்டால், சபை உரையாளர் சொல்வார், 'ஆம்! அவை புதியவைதான். ஆனால், தகவல் பரிமாற்றம் என்பது பழையதுதானே!' புதியது எதுவும் இந்த உலகில் எதுவும் இல்லை என்பதால், நம் தேடல் அனைத்தையும் வீண் என்கிறார் சபை உரையாளர்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 9:7-9) சபை உரையாளரின் கருத்துகளை உறுதிசெய்வதாக அமைந்துள்ளது. இயேசுவின் அரும்பெரும் செயல்களை நினைவுகூர்கின்ற ஏரோது, 'யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யார்?' என்று மனம் குழம்புகின்றான். இறையாட்சி பற்றி அறிவித்தாலும், நீதியானதையே பேசினாலும் நம்மை முன்பின் தெரியாத ஒருவன் நம் தலையை எடுத்துவிட முடியும் என்றால், இறையாட்சி பற்றி அறிவித்து என்ன பயன்? நீதியானதைப் பேசி என்ன பயன்? - எனக் கேட்கிறார் சபை உரையாளர். இருந்தாலும், ஏரோது இயேசுவைக் காணத் தேடுகின்றார். 

சபை உரையாளரை எப்படிப் புரிந்துகொள்வது?

ஞானியர் வாழ்வின் இரட்டைத்தன்மையை உணர்ந்தவர்கள். பிறக்கின்ற குழந்தையில் அதன் இறப்பைப் பார்க்கிறவர்கள். ஒரு குச்சியின் ஒரு புறத்தை எடுக்கும்போது அதன் மறுபுறத்தையும் சேர்த்துப் பார்க்கிறவர்கள். 

பிறக்கின்ற குழந்தை வயதானபின் இறப்பது வீண் என்று தோன்றலாம்.

ஆனால், பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள வாழ்க்கை இனிது என்கிறார் சபை உரையாளர். அதுதான் நாளைய முதல் வாசகம்.



Tuesday, September 20, 2022

புனித மத்தேயு

இன்றைய (21 செப்டம்பர் 2022) திருநாள்

புனித மத்தேயு

இன்று திருத்தூதரும் நற்செய்தியாளருமான புனித மத்தேயுவின் திருநாளைக் கொண்டாடுகின்றோம். வங்கியாளர்கள், காசாளர்கள், மற்றும் தணிக்கையாளர்களின் பாதுகாவலர் இவர்.

இந்திய மெய்யியலில், 'மார்க்கம்' என்ற ஒன்று உண்டு. அதாவது, 'வழி,' 'மோட்சம்' அல்லது 'பேறுபெற்ற நிலையை அடைவதற்கான வழி.' 'ஞான மார்க்கம்' ('அறிவின் வழி மோட்சம்'), 'கர்ம மார்க்கம்' ('செயல் வழி மோட்சம்'), 'பக்தி மார்க்கம்' ('பக்தி அல்ல வழிபாட்டு வழி மோட்சம்). இதன் பின்புலத்தில், மத்தேயு நற்செய்தி ஞானமார்க்கம் என்றும், மாற்கு நற்செய்தி கர்மமார்க்கம் என்றும், லூக்கா நற்செய்தி பக்திமார்க்கம் என்றும் அழைக்கப்படுகின்றது. மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இயேசு மிகச் சிறந்த போதகராக இருக்கின்றார். இயேசுவின் மலைப்பொழிவு என்னும் நீண்ட போதனையும், மற்ற நான்கு போதனைகளும் மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கின்றன.

'விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்' (மத் 12:52) என்று இயேசு கூறுவதாக மத்தேயு பதிவு செய்கின்றார். 

இந்தப் பதிவு நமக்கு இரு விடயங்களைக் கூறுகிறது: ஒன்று, 'விண்ணரசு என்பது கற்றுக்கொள்ளப்பட' அல்லது 'அறிந்துகொள்ளப்பட' வேண்டியது. ஆக, இது அறிவு அல்லது ஞானம் சார்ந்தது. எல்லாரும் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொள்ள முடியும். இரண்டு, இந்தப் பகுதி மத்தேயு நற்செய்தியாளரைப் பற்றியே கூறுகின்றது. ஏனெனில், சுங்கச் சாவடியில் வரி வசூல் செய்துகொண்டிருந்த மத்தேயு, விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்டவுடன், தன் இயேசு அனுபவத்திலிருந்து பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் வெளியே கொண்டு வந்து நற்செய்தியாகப் பதிவு செய்கின்றார். 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எபே 4:1-7,11-13), புனித பவுல், 'நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்' என்று எபேசு நகரத் திருச்சபைக்கு அறிவுரை கூறுகின்றார். மத்தேயு தான் பெற்ற திருத்தூதர் என்ற அழைப்புக்கு ஏற்ப மூன்று நிலைகளில் வாழ்கின்றார்:

ஒன்று, பழையதை விடுத்துப் புதியதைப் பற்றிக்கொள்கின்றார். 'நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம்' என்கிறார் பவுல் (காண். 1 கொரி 13:10). நிறைவான இயேசு தனக்குக் கிடைத்தவுடன் அரைகுறையான தன் வரிவசூலிப்பவர் பணியை விட்டுவிடுகின்றார். 

இரண்டு, 'இதுதான் நான்!' எனத் துணிச்சலுடன் இயேசுவின்முன் எடுத்துச் சொல்கின்றார். தான் அழைக்கப்பட்டவுடன் முதல் வேளையாக இயேசுவைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கின்றார் மத்தேயு. உணவு என்பது உறவின் அடையாளம். அந்த உறவுத்தளத்தில், மற்றவர்கள் தன்மேல் பதித்த முத்திரைகள் மற்றும் பழிச்சொற்களைப் பொருட்படுத்தாமல், தான் யார் என்றும், தன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யார் என்றும் இயேசுவுக்கு அறிமுகம் செய்கின்றார் மத்தேயு. கடவுளுக்கே விருந்து வைத்த சில விவிலியக் கதைமாந்தர்களில் இவரும் ஒருவர். அடுத்தவருடன் தன் உணவைப் பகிர்ந்துகொள்ள விழைகின்ற பக்குவமே மேன்மையானது. ஏனெனில், பசி என்ற அடிப்படை உணர்வு நம்மை பதுக்கிக்கொள்ளவே தூண்டுகிறது.

மூன்று, 'கடவுள் நம்மோடு' என்னும் நற்செய்தி. மத்தேயு நற்செய்தி நமக்குத் தந்த மாபெரும் செய்தி, 'கடவுள் நம்மோடு' என்பதுதான். மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை. 'உலகமுடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன்' என்று நம்மோடு தங்கிவிடுகின்றார். இந்த மாபெரும் எண்ணத்திற்குச் சொந்தமானவர் மத்தேயு. கடவுளை மனுக்குலம் சிக்கெனப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தவராக இருக்கின்றார் மத்தேயு.

மத்தேயு நற்செய்தியில் நாம் இரசிக்க வேண்டிய இன்னும் பல கூறுகள் உள்ளன: இயேசுவின் தலைமுறை அட்டவணை, திருக்குடும்பத்தின் ஒப்பற்ற தலைவர் யோசேப்பு, அவருக்கு மத்தேயு வழங்கிய 'நேர்மையாளர்' என்னும் அழகிய தலைப்பு, கீழ்த்திசை ஞானியர், மலைப்பொழிவு, பேதுரு கடலில் நடத்தல், யூதாசின் வருத்தம், பிலாத்துவின் மனைவியின் கனவு, பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டு, திராட்சைத் தோட்டப் பணியாளர்கள் எடுத்துக்காட்டு, இறுதித் தீர்ப்பு.

இன்றைய நாளில் நாம் மத்தேயு நற்செய்தியின் சில பகுதிகளையாவது வாசிக்க முயற்சி செய்வோம்.

'என்னைப் பின்பற்றி வா!' என்னும் இயேசுவின் குரல் கேட்டவுடன், அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டுப் புறப்படுகின்றார். கணக்குப் பார்த்துக் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றோ, நாளை பார்க்கலாம் என்றோ அவர் சொல்லவில்லை. அவர் தயாராக இருந்தார். எப்போதும்.

'கடவுளின் கொடை' எனப் பொருள்படும் 'மத்தேயு' தன்னையே கடவுளுக்குக் கொடையாகக் கொடுத்துவிடுகின்றார். வெறும் வரவுக் கணக்கை எழுதிக்கொண்டிருந்தவர், மீட்பின் வரவுக் கணக்கை நற்செய்தியாக எழுதி இன்றும் நம்மோடு வாழ்கின்றார்.


இறைவார்த்தையைக் கேட்டு

இன்றைய (20 செப்டம்பர் 2022) நற்செய்தி (லூக் 8:19-21)

இறைவார்த்தையைக் கேட்டு

'உம் சகோதரர்களும் தாயும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்' என்று இயேசுவுக்குச் செய்தி சொல்லப்படுகின்றது. மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்தி நூல்களில், இப்படிச் சொல்லப்பட்டவுடன், 'யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?' எனக் கேள்வி கேட்டுப் பின்னர் விடையளிக்கின்றார் இயேசு. ஆனால், லூக்கா நற்செய்தியில் விடை நேரடியாக இருக்கின்றது.

இறைவார்த்தையை மையப்படுத்திய புதிய உறவுநிலையை முன்வைக்கின்றார் இயேசு.

இரத்த வகை, திருமண வகை உறவைத்தாண்டிய இந்த உறவு அனைவருக்கும் பொதுவானதாக மாறுகின்றது.

மரியா தன் வாழ்வில் தொடக்கமுதல் இறைவார்த்தையைக் கேட்டு அதற்கு பதிலிறுப்பு தருகின்றார்.

இந்த வகை உறவுக்கு என்ன தேவை?

(அ) இறைவார்த்தையைக் கேட்டல்.

(ஆ) அதன்படி நடக்க விரும்புதல்.

(இ) அதன்படி நடத்தல்.


Sunday, September 18, 2022

அறிவின் நோக்கம்

இன்றைய (19 செப்டம்பர் 2022) நற்செய்தி (லூக் 8:16-18)

அறிவின் நோக்கம்

'எல்லாவற்றுக்கும் மேலாக, உனக்கு நீயே பொய்யுரைக்காதே! தனக்குத்தானே பொய்யுரைத்து, அந்தப் பொய்க்குச் செவிகொடுக்கும் ஒருவர் காலப்போக்கில் தனக்குள்ளே உள்ள உண்மையையும், தனக்கு வெளியே உள்ள உண்மையையும் ஆய்ந்தறிய இயலாமல்போய்விடுவார். இவ்வாறாக, தன்மேல் உள்ள மதிப்பையும் பிறர்மேல் உள்ள மதிப்பையும் இழந்துவிடுவார். மதிப்பை இழந்துவிடுவதால் அன்பு செய்வதும் அவருக்கு இயலாமல் போய்விடும்!'

'கரமசோவ் சகோதரர்கள்' (The Brothers Karamazov) என்னும் நாவலில் ரஷ்ய எழுத்தாளர் ப்யோடோர் டோஸ்டாவ்ஸ்கி, மடாதிபதி ஒருவரைச் சந்திக்க சகோதரர்கள் கூடியிருக்கும் சூழலில் எழுதுகின்றார்.

ஒருவர் தன் இயல்பு என்ன என்பதை மறந்து, பொய்யான ஓர் இயல்பைப் பற்றிக்கொண்டு வாழ்வது தவறு என்பதும், பல நேரங்களில் அறிவு என நாம் எண்ணுவது உண்மையிலிருந்து முற்றிலும் மாறுபடக் கூடியது என்பதும் இதன் பொருள் ஆகும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் இயேசு விளக்கு உவமையைக் குறிப்பிடுகின்றார். விளக்கை ஏற்றும் ஒருவர் அதைப் பாத்திரத்தால் மூடிவைத்தால், அல்லது கட்டிலின் அடியில் வைத்தால், அவர் விளக்கின் இயல்பை முழுமையாக அறியாதவராக இருக்கின்றார். அல்லது தான் பெற்ற அறிவுதான் சரி என்ற நிலையில் அப்படிச் செய்கின்றார். ஆனால், விளக்கு ஏற்றப்படுவதன் நோக்கம் விளக்குத் தண்டின்மீது வைத்து அனைவரும் ஒளி பெறுவதற்கே. இந்த உண்மையை அவர் மறந்து தன் அறிவின்படி மட்டும் செயல்பட்டால் அவர் தனக்குத்தானே பொய்யுரைப்பவராக மாறுகின்றார்.

எடுத்துக்காட்டாக, ஒர் அருள்பணியாளரின் இயல்பு அல்லது நிலை என்பது அனைவருக்கும் ஒளிதருகின்ற விளக்கு போல இருப்பது. ஆனால், அவர் தன் ஒளியைத் தனக்குத்தானே சுருக்கிக் கொண்டால், அல்லது தன் தவறான முதன்மைகள் என்னும் பாத்திரங்களால் அவற்றை மூடிக்கொண்டால், அவர் தனக்குத்தானே பொய்யுரைப்பவராக மாறுகின்றார். ஏனெனில், அவர் தன் இயல்பை மறுதலிக்கின்றார். 

தொடர்ந்து இயேசு, நம் மனநிலை குறித்துக் கவனமாக இருக்குமாறு நமக்குச் சொல்கின்றார். நீதிமொழிகள் நூலில் நாம் இதையொத்த அறிவுரை ஒன்றை வாசிக்கின்றோம்: 'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய். ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்' (4:23). இதயத்தில் எழும் எண்ணங்கள் பற்றி நாம் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். பல நேரங்களில் நம் எண்ணங்கள் கட்டுக்கடங்காத குதிரைகள் போல இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இரவில் நாம் தூங்கும்போதும் நம் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. நம் எண்ணங்கள்தாம் உண்மை என நாம் நினைக்கின்றோம். ஆனால், பல நேரங்களில் நம் எண்ணங்கள் நம்மை ஏமாற்றிவிடுகின்றன. ஆக, நம் எண்ணங்களைப் பற்றி மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். அதீத எண்ணங்கள் நம் அனுமதி இல்லாமல் பிறப்பதில்லை. நாம் அவற்றுக்குத் தீனி போட போட அவை எண்ணெய் ஊற்றப்பட்ட திரிபோல எரிய ஆரம்பிக்கின்றன. 

இறுதியாக, இயேசு, 'உள்ளவருக்குக் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென அவர் நினைப்பது எடுத்துக்கொள்ளப்படும்' என எச்சரிக்கின்றார். இல்லாத நிலையில் இருப்பது கூடப் பிரச்சினையில்லை. மாறாக, 'தமக்கு உண்டென நினைத்துக்கொண்டு' ஒரு போலி இருத்தல் நிலையில் இருப்பதும் தனக்குத்தானே பொய்யுரைப்பதே. போலி இருத்தல் மனநிலையைக் கொண்டிருப்பவர் புதிதாக எதையும் தேடமாட்டார். ஏனெனில், தன்னிடம் எல்லாம் இருப்பதாக தன் மூளைக்குச் சொல்லிக்கொள்வார். அல்லது அவருடைய மூளை அவருக்குச் சொல்லி அவரை ஏமாற்றும்.

மொத்தத்தில், இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு நாமே உண்மையாக இருக்க நம்மை அழைக்கின்றது. நம் இயல்பு தண்டில் ஏற்றிவைக்கப்பட்ட விளக்கு போல எரிய வேண்டும். தண்டில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு தன் பாதுகாப்பற்ற தன்மையை உணர வேண்டும். பாத்திரத்தின் பாதுகாவலும், கட்டிலுக்கு அடியில் உள்ள பாதுகாவலும் தனக்குப் போதும் என நினைத்தால் அது தன் இயல்பை மறுதலிப்பதோடு, பாத்திரத்திற்கும் கட்டிலுக்கும் சேதம் விளைவித்துவிடும்.

நாம் நம்மைப் பற்றிப் பெற்றுள்ள அறிவு உண்மையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லட்டும். அறிவு என்பது வெறும் வழியே. உண்மை என்பதே இலக்கு. அந்த இலக்கே நமக்கு வாழ்வு தரக்கூடியது. 'நானே வழியும் உண்மையும் வாழ்வும்' என்று சொன்ன இறைமகன் இயேசு இப்பயணத்தின் வழியாகவும், வழித்துணையாகவும் நமக்குத் திகழ்வாராக!


Saturday, September 17, 2022

வளமான எதிர்காலம் அவரில்!

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

ஆமோஸ் 8:4-7 1 திமொ 2:1-8 லூக்கா 16:1-13

வளமான எதிர்காலம் அவரில்!

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டு வாசகங்களைச் சிந்திப்பதற்கு முன், நாம் நம் வாழ்வில் காண்கின்ற அடிப்படையான மூன்று முரண்பாடுகளைப் புரிந்துகொள்வோம்:

1.அறநெறி முரண்பாடு

'இலக்கு ஒருபோதும் வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை' என்பது முக்கியமான அறநெறிக் கோட்பாடு. எடுத்துக்காட்டாக, நான் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற நல்ல இலக்கு இருக்கிறது. அதற்காக நான் புத்தகத்தைப் பார்த்து அப்படியே எழுதுகிறேன் என வைத்துக்கொள்வோம். என்னுடைய இலக்கு நல்லது என்பதற்காக நான் பயன்படுத்திய வழிமுறை சரி என்றாகிவிடாது.

ஆனால், அதே வேளையில், ஒவ்வொரு தேவையும் சூழலும்தான் ஒரு செயல் நன்மையா அல்லது கெட்டதா என்பதை நிர்ணயக்கிறது என்பது இன்னொரு அறநெறிக் கோட்பாடு. ஒரு பெண் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அறுவைச் சிகிச்சை செய்தால் குழந்தை அல்லது தாய் மட்டும்தான் பிழைப்பார் என்ற நிலை. அந்தப் பெண் அந்தக் குடும்பத்தில் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்குத் தாய். மேலும், அண்மையில் தன் கணவனை விபத்தில் இழந்தவள். இந்த நேரத்தில் மருத்துவர் குழந்தை இறந்தாலும் பரவாயில்லை என்று தாயைக் காப்பாற்றுகிறார். அப்படிச் செய்ததால் அவர் கொலையாளி என்று நாம் சொல்வதில்லை. ஏற்கெனவே இருக்கும் குழந்தைகள் அநாதைகளாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் தாயைக் காப்பாற்ற முன்வருகிறார். ஆக, அவருடைய செயலில் ஒரு குழந்தை பலியானாலும் அவருடைய செயல் நியாயமானதே என்கிறது அறநெறி. இது 'சிட்வேஷன் எதிக்ஸ்' - ஒவ்வொரு சூழலும் அறநெறியை நிர்ணயிக்கும்.

மேற்காணும் இரண்டு அறநெறிக் கோட்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த முரண்பாடு வருகிறது.

ஒரு வீட்டுப் பொறுப்பாளர் நேர்மையற்றவராக இருக்கிறார். அவர் வெளியே அனுப்பப்படுகின்ற நிலையில், தன் நேர்மையற்ற நிலையில், நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்கிறார். இயேசு இவரின் முன்மதியைப் பாராட்டுகின்றார். அப்படி என்றால், இலக்கு சரியானது என்பதற்காக அவர் பயன்படுத்துகின்ற வழிமுறை சரியானதா? என்ற கேள்வி நம்மில் எழுகிறது. அல்லது அந்த நேரத்தில் அந்தச் சூழல் அவர் செய்தது சரி? என்று ஏற்றுக்கொள்வதா?

'பொய்சாட்சி சொல்லாதே!' 'பிறரை ஏமாற்றாதே!' போன்ற விவிலிய சிந்தனையோடு இதை எப்படி தொடர்புபடுத்துவது?

2. வாழ்வியல் முரண்பாடு

'நாளைய தினத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்!' என்று சொல்லும் இயேசு, 'அடுத்து என்ன நடக்கும் எனக் கலங்காதீர்கள்' என்று அறிவுறுத்தும் இயேசு, பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டில், 'எதிர்காலத்திற்கு தயராக இருக்காத பெண்கள் அறிவிலிகள்' என்று சாடுகின்றார். அப்படி என்றால், எதிர்காலம் பற்றிய கவலை இன்றி வாழ்வதா? அல்லது எதிர்காலத்திற்கான தயாரிப்போடு வாழ்வதா?

காலத்தைப் பற்றிய உணர்வைக் கடவுள் மனிதர்களுக்கு மட்டுமே கொடுத்திருக்கின்றார் என்று பெருமிதம் கொள்கிறார் சபை உரையாளர் (காண். 3). மனிதர்களுக்குக் கொடையாக இருக்கின்ற இந்த உணர்வே பல நேரங்களில் அவர்களுக்கு சுமையாகவும் மாறிவிடுகின்றது. என்னுடைய எதிர்காலம் இப்படி இருக்கும் என எண்ணுகின்ற நான், அந்த எதிர்காலத்தில் வாழ்வதற்காக என்னுடைய நிகழ்காலத்தை அன்றாடம் தியாகம் செய்கிறேன் அல்லது வாழ்வைத் தள்ளிப் போடுகிறேன் என்பது அடுத்த முரண்பாடு.

அப்படி என்றால், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதா? அல்லது எதிர்காலத்திற்காக முன்னரே தயாரிப்பதா?

3. பொருளாதார முரண்பாடு

'அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்கிறார் வள்ளுவர். 'நீ ஏழையாக இருந்தால் நீ மற்றவர்களை அறிவாய். பணக்காரராக இருந்தால் மற்றவர்கள் உன்னை அறிவர்' என்கிறார் ஷேக்ஸ்பியர். செல்வம் நமக்குத் தேவையா? இல்லையா? தேவை என்றால் எவ்வளவு தேவை? இன்று மேலாண்மையியலில் எண்கள் பற்றிய படிப்பு அதிகமாகிக்கொண்டு வருகிறது. நம்மிடம் இருக்கின்ற ஆதாரங்கள் நான்கு: 'பணம்,' 'நேரம்,' 'உடல்நலம்,' மற்றும் 'உறவுகள்.' இந்த நான்கில் பணமும் நேரமும் எண்களால் ஆனவை. எண்களால் எண்ணப்படும் ஒன்றில் ஒருவர் பிரமாணிக்கமாக இருந்தால் எண்ணப்படாத அல்லது எண்ணமுடியாதவற்றிலும் பிரமாணிக்கமாய் இருப்பார் என்பது மேலாண்மையியல் பாடம். இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, 'சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் மிகப் பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவர்' என்கிறார்.

இன்று நான் தேவையான பணத்தை வைத்திருக்கவில்லை என்றால் என்னுடைய மற்ற எல்லா செயல்பாடுகளும் முடங்கிப் போகும். ஆக, பணம் எனக்குத் தேவை. இது ஒரு பக்கம் என்னை இழுக்க, மற்றொரு பக்கம், 'கடவுளுடைய பராமரிப்புச் செயலின்மேல் நம்பிக்கை அவசியம்' என்ற எண்ணம் என்னை இழுக்கிறது. 

செல்வம் வைத்துக்கொள்வதா? வேண்டாமா? - இது மூன்றாவது முரண்பாடு.

இந்த முரண்பாடுகள் இறுதிவரை இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், இந்த முரண்பாடுகள் நடுவில் நம்முடைய வாழ்க்கைச் சக்கரத்தை எப்படி நடத்திக்கொண்டு போவது?

இதற்கு விடையைத் தருகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

'வளமான எதிர்காலம் அவரில்' என்ற எளிதான பதிலை இது நமக்கு முன்வைக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஆமோ 8:4-7) இறைவாக்கினர் ஆமோஸ் வடக்கு இஸ்ரயேலில் இறைவாக்குரைக்கின்றார். அந்த நேரம் இஸ்ரயேல் மிகவும் வளமிக்க நாடாக இருந்தது (கிமு 722). வலிமையான, வளமிக்க நாடாக அது இருந்தாலும் அந்த நாட்டில் நிறைய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அடக்குமுறைகளும் இருந்தன. விவசாயத் தொழில் செய்துவந்த அடித்தட்ட வகுப்பினர் மிகப்பெரிய அடக்குமுறைக்கு ஆளானார்கள். பணக்காரர்களும், செல்வந்தர்களும், ஆளும் வர்க்கத்தினரும் அவர்கள்மேல் தூக்க முடியாத சுமையைச் சுமத்தினர். இவர்களுக்கு எதிராக ஆமோஸ் இறைவாக்குரைக்கின்றார்: 'வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே! கேளுங்கள்!' மேலும், 'அமாவாசை எப்போது முடியும், ஓய்வுநாள் எப்போது முடியும்' என்ற அவர்களுடைய சமய வெளிவேடத்தையும் தோலுரிக்கின்றார். அமாவசையும் ஓய்வுநாளும் பொருளாதாரப் பண்டமாற்றைத் தடை செய்தன. இவை இரண்டும் முடிந்தால்தான் பொருளாதாரப் பரிவர்த்தனை தொடரும் என்று அவர்கள் எதிர்நோக்கினர். அடக்கி ஆண்டவர்கள் தங்களுடைய சமயக் கட்டளைகளைக் கடைப்பிடித்தாலும் அவர்கள் தங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கத் திட்டங்கள் தீட்டினர். பணவீக்கத்தை அதிகப்படுத்தி இன்னும் நிறையப் பொருள் ஈட்டவும், ஏழைகளை அடிமைகளாக மாற்றவும் திட்டங்கள் வகுத்தனர். 

இவர்களின் இத்திட்டங்கள் மோசேயின் சட்டங்களுக்கு எதிரானவை (காண். இச 10:14-22, 24:19-21) என்று சுட்டிக்காட்டுகின்ற ஆமோஸ் அவர்கள் செய்வது அநீதி என்று அவர்களைச் சாடுகின்றார். இப்படி அநீதியாக அவர்கள் செயல்படுவது அவர்களுடைய நாட்டிற்கே அழிவைக் கொண்டுவரும் என எச்சரிக்கின்றார். அது விரைவில் நிறைவேறுகிறது. ஆமோஸ் இறைவாக்கினரின் இறைவாக்குப் பணி முடியும் நாள்களில் இஸ்ரயேல் நாட்டின் வளம் திடீரெனக் குறைந்து அவர்கள அசீரியாவுக்கு அடிமைகளாகின்றனர். 

ஆமோஸின் இறைவாக்கு அவரின் சமகாலத்து பணக்கார மற்றும் ஆதிக்க வர்க்கம் செய்வது மடமை என்று எச்சரிக்கை செய்கிறது. மேலும், தங்களுடைய சகோதர சகோதரிகளை அடக்கி ஆண்டு அதன் வழியாகப் பணம் சேர்ப்பது முறையன்று. இப்படிச் செய்யும்போது அவர்கள் கடவுளின் சட்டத்தை மீறுகின்றனர். கடவுளின் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்தான் வளமான எதிர்காலம் இருக்கிறதே தவிர, வலுவற்றவர்களை அழிப்பதில் அல்ல என்கிறார் ஆமோஸ்.

இன்றைய இரண்டாம் வாசகத்தின் (காண். 1 திமொ 2:1-8) பின்புலம் இதுதான்: தொடக்க காலத்தில் கிறிஸ்தவ திருச்சபை சந்தேகக் கண்ணோட்டதுடன் பார்க்கப்பட்டது. அவர்களுடைய வித்தியாசமான தனிப்பட்ட வாழ்க்கை முறை, சிலுவையில் அறையுண்ட மெசியாமேல் நம்பிக்கை போன்றவற்றால் கிறிஸ்தவம் உரோமைப் பேரரசின் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. கிறிஸ்தவத்தால் உலகிற்கு ஆபத்து என்றும், எதிர்கால சமூகம் அழிவுறும் என்றும் கருதியது உரோமை. இத்தவறான புரிதலை பவுலும் மற்றவர்களும் சரி செய்ய முயற்சி செய்கின்றனர். கிறிஸ்தவர்கள் அமைதியானவர்கள் என்றும், உரோமைப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட குடிமக்கள் என்றும், ஒட்டுமொத்த சமூகத்தின்மேல் அக்கறை கொண்டவர்கள் என்றும் எடுத்துரைக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் 1 திமொத்தேயு திருமுகத்தின் ஆசிரியர், நம்பிக்கையாளர்கள் எல்லாருக்கும் குறிப்பாக ஆட்சியில் இருப்பவர்களுக்கும் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றார். 

இயேசுவின் வழியாக எல்லாரும் மீட்புப் பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று சொல்வதன் வழியாக, அவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை ஆட்சியாளர்கள் கைகளில் அல்ல, மாறாக, இறைவனின் கரங்களில் ஒப்புவிக்கின்றனர். 

ஆக, எதிர்காலம் என்பது ஆட்சியாளர்கள் கைகளில் அல்ல என்பதை அடிக்கோடிடும் ஆசிரியர், காலங்களைத் தன் கரங்களில் தாங்கியிருக்கிற கடவுளிடம் அதை ஒப்படைக்கின்றார்.

விவிலியத்தின் வியப்பான பாடங்கள் என்று கருதப்படுகின்றன சில பாடங்கள். அவற்றில் ஒன்றை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 16:1-13) வாசிக்கின்றோம்: நேர்மையற்ற கண்காணிப்பாளர் உவமை. மேலோட்டமாக வாசித்தால், ஒருவர் நேர்மையற்றவராய் வாழ்வதிலும், கையூட்டு கொடுப்பதிலும், பொய்க்கணக்கு எழுதுவதிலும் தவறில்லை என்று சொல்வதுபோல இருக்கிறது. ஆனால், இதன் பொருள் அது அல்ல. 'அதிர்ச்சி' என்ற இலக்கியக்கூற்று இங்கே பயன்படுத்தப்பட்டு, சொல்லப்படுகின்ற செய்தி ஆழமானதாகத் தரப்படுகிறது. இந்த நிகழ்வில், நேர்மையற்ற கண்காணிப்பாளர் தன்னுடைய தவற்றை வீட்டு உரிமையாளர் கண்டுபிடித்தாலும் இன்னும் அவர் நேர்மையற்றவராகவே செயல்படுகின்றார். அவருடைய வீட்டு உரிமையாளர் அவரைத் தண்டிப்பதற்குப் பதிலாக பாராட்டுவதில்தான் அதிர்ச்சி அடங்கியுள்ளது. இந்த உவமையின் செய்தி கண்காணிப்பாளரின் செயலில் அல்ல, மாறாக, அவருடைய எண்ண ஓட்டத்தில்தான் இருக்கிறது. தலைவர் அவருடைய செயலைப் பாராட்டவில்லை. மாறாக, தன்னுடைய எதிர்காலத்தை தன்னுடைய வசதிக்கு மாற்றிக்கொள்ளும் அவருடைய திறனைப் பாராட்டுகின்றார். நம்பிக்கையாளர்கள் தங்களுடைய செல்வத்தின்மேல் எத்தகைய கண்ணோட்டம் கொண்டிருக்க வேண்டும் என்பதை இந்த உவமை கற்றுத்தருகிறது. ஆக, அழிந்துபோகக் கூடிய, பயனற்ற செல்வத்தை ஒருவர் பயன்படுத்தி நிலையான வீட்டை வடிவமைத்துக்கொள்ள முடியும்.

லூக்கா நற்செய்தியாளர் பணத்தையும் செல்வத்தையும் நம்பிக்கை மற்றும் சீடத்துவத்தின் எதிரிகளாகவே முன்வைக்கின்றார். இந்த உவமையைச் சொல்வதன் வழியாக, ஆபத்தான நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு ஒரு நம்பிக்கையாளர் தன்னுடைய வாழ்வை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவுரை வழங்குகின்றார் இயேசு. இயேசுவைப் பொருத்தவரையில், செல்வம் ஒருவரைப் பேராசைக்கும் தனிமைக்கும் இட்டுச் சென்றால் அது ஆபத்து. ஆனால், அச்செல்வம் பிறரோடு பகிர்ந்துகொள்ளப்பட்டால், மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யப்பயன்பட்டால் அது நலம் பயக்கும். பணத்தைக் கையாளுவதும், செல்வத்தைப் பெற்றிருப்பதும் இன்றியமையாத ஒன்று என்று எண்ணுகின்ற இயேசு, தன்னுடைய சீடர்கள் இந்த நேர்மையற்ற கண்காணிப்பாளரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள அழைக்கின்றார். 

ஒருவர் எப்படிப் பணத்தைப் பயன்படுத்துகிறார் என்பது முக்கியமானது. ஏனெனில், 'சிறியவற்றில்' ஒருவர் நம்பத்தகுந்தவராய் இருந்தால்தான் 'பெரியவற்றிலும்' அவர் நம்பத்தகுந்தவராய் இருப்பார். மேலும், பணம்தான் ஒருவருக்கு அடிமையாய் இருக்க வேண்டுமே தவிர, பணத்திற்கு அவர் ஒருபோதும் அடிமையாகிவிடக் கூடாது. இதுவே ஒவ்வொரு சீடரும் மேற்கொள்ளவேண்டிய தெரிவு. எல்லாவற்றையும் கடவுளுக்குக் கீழ் கொண்டு வந்து, கடவுளை மட்டுமே ஒருவர் தெரிந்துகொள்ளும்போது, செல்வங்கள் அழிந்தாலும், அழியாத கடவுளின் பாதங்களை சீடர் பற்றிக்கொண்டிருப்பதால் அவருடைய எதிர்காலம் வளமானதாக இருக்கும்.

இவ்வாறாக, இன்றைய இறைவார்த்தை வழிபாடு, வளமான எதிர்காலம் என்பதை பொருளாதார நீதி, சமூக அமைதி, மற்றும் செல்வத்தைப் பற்றிய சரியான பார்வை என்ற நிலைகளில் புரிந்துகொள்ள அழைக்கிறது. இம்மூன்றும் நிலைபெறுவது இறைவனில்தான் என்பதால் வளமான எதிர்காலம் என்றும் அவரில் என்பது நாம் இன்று கற்கின்ற வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது. 

'வளமான எதிர்காலம் அவரில்' என்ற புரிதல் எனக்கு இருந்தால், திருப்பாடல் ஆசிரியர் போல (காண். 113) நானும், 'நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் எவர்?' என்று சொல்ல முடியும்.

'கடவுள் அனைத்தையும் பார்த்துக்கொள்வார். ஆனால், நீ உன் ஒட்டகத்தைக் கட்டி வை' என்பது மத்திய கிழக்குப் பகுதியில் வழங்கப்படும் பழமொழி. நம்முடைய எதிர்காலம் அவரில்தான்! இருந்தாலும் பொருளாதாரத்தை என் தேவைக்கு வளைத்துக்கொள்ளாமல் ஏழைகள் நலன் காப்பதும், எல்லாரும் அமைதியுடன் வாழ இறைவேண்டல் செய்வதும், நிலையற்ற செல்வத்தைப் பயன்படுத்தி நிலையான உறவுகளைச் சம்பாதித்துக்கொள்வதும் தேவை! 


Friday, September 16, 2022

நல்ல நிலமாக

இன்றைய (17 செப்டம்பர் 2022) நற்செய்தி (லூக் 8:4-15)

நல்ல நிலமாக

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) விதைப்பவர் பற்றிய உவமை, (ஆ) உவமைகள் கூறப்படுவதன் நோக்கம், மற்றும் (இ) இயேசு உவமைக்குப் பொருள் தருதல்.

'இறைவார்த்தை' என்பதை நாம் மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, 'இறைவார்த்தை' என்பது இயேசுவைக் குறிக்கிறது. ஏனெனில், 'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14), என்று நம் நடுவே இறங்கி வந்தவர் இயேசு. இயேசுவே இறைவனின் வார்த்தை. இரண்டு, 'இறைவன் சொன்ன வார்த்தை' அல்லது 'இயேசுவின் வார்த்தை அல்லது நற்செய்தி.' இவை இயேசுவின் காலத்தவர்களின் காதுகளில் நேரடியாக அவர் வாயிலிருந்து விழுந்தன. இயேசுவைத் தொடர்ந்த காலத்தில் இவை திருத்தூதர்களால் அறிவிக்கப்பட்டன. நமக்கு இவை விவிலியம் வழியாக வருகின்றன. இறைவார்த்தை பற்றிய விளக்கவுரைகள் மற்றும் மறையுரைகள் வழியாக வருகின்றன. மூன்று, 'இறைவார்த்தை' என்பது இயேசுவின்மேல் ஒருவர் கொண்டிருக்கின்ற நம்பிக்கையைக் குறிக்கிறது. இது அன்றைய காலத்தவர்களுக்கும் நமக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக, பாறை நிலம் போல இருப்பவர்கள் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டவுடன் உடனடியாக தங்கள் வாழ்க்கையை மாற்றுவர், ஆலயம் வருவர், திருப்பலி காண்பர். ஆனால், நம்பிக்கை சோதிக்கப்படும்போது அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவர்.

மனித வார்த்தைகள் நம்மில் மாற்றம் கொண்டு வருகின்றன என்பதில் ஐயமில்லை. மனம் சோர்வுற்று நிற்கும் வேளையில் திடீரென நண்பர் ஒருவர் அழைக்க அவர் பேசும் உற்சாக வார்த்தைகள் நம் உள்ளத்திற்கு எழுச்சி தருகின்றன. அல்லது நாம் கேட்கும் பாடல், வாசிக்கும் புத்தகம் என இவற்றில் நாம் கேட்கும் அல்லது காணும் வார்த்தைகள் ஏதோ ஒரு சலனத்தை உள்ளத்தில் ஏற்படுத்தவே செய்கின்றன.

'ஆண்டவர் என் ஆயர். எனக்கேதும் குறையில்லை' (திபா 23:1) என்னும் இறைவார்த்தையை நான் கேட்கிறேன் என வைத்துக்கொள்வோம். இது என் வாழ்வில் எப்படி பயன் தரும்? 'ஆண்டவரை என் ஆயர் போல ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், அவரையே என் நிறைவு எனக் கொண்டு வாழ்வதன் வழியாகவும் பயன் தரும்.'

நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் நூறு மடங்கு பலன் கொடுத்ததாக லூக்கா எழுதுகின்றார். மேலும், பலன் கொடுப்பதற்கான மூன்று படிகளையும் அவரே முன்மொழிகின்றார்: (அ) நல் உள்ளத்தோடு கேட்டல், (ஆ) கேட்டதைக் காத்தல், (இ) மனவுறுதியுடன் இருத்தல்.

மேற்காணும் உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம்.

'ஆண்டவரே என் ஆயர்' என்பதை நான் நல் உள்ளத்தோடு, அதாவது, திறந்த மனத்தோடு, கேட்கிறேன். கேட்டல் என்பது கீழ்ப்படிதலையும் குறிப்பதால், ஆண்டவரை என் ஆயராக நான் ஏற்றுக் கீழ்ப்படிகிறேன். தொடர்ந்து, நான் கேட்டதைக் காத்துக்கொள்கின்றேன். நான் பார்க்கும் வேலை, அல்லது என் நண்பர் போன்றவை தங்களையே 'ஆயர்' என முன்மொழிந்தாலும், நான் அவற்றை மறுத்துவிட்டு ஆண்டவரையே பற்றிக்கொள்கின்றேன். மூன்றாவதாக, நான் பற்றிக்கொண்டதில் மனவுறுதியாக இருக்கின்றேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த உவமை தருகின்ற செய்தி இதுதான்: விதை ஒருபோதும் நிலத்தின் தன்மையை மாற்றுவதில்லை. நிலம் தான் எப்படி இருக்கிறோம் என்பதை தானே வரையறுத்துக்கொள்ள முடியும். விதைப்பவரும் நிலத்தின் தன்மையை மாற்றுவதில்லை. கடவுள் நம் தனிமனித விருப்புரிமையை, ஆன்மிகக் கட்டின்மையை மதிக்கின்றார். நான் என்னையே மாற்றிக்கொள்வதன் வழியாக விதையை ஏற்றுக் கனி தர முடியும்.


Thursday, September 15, 2022

பெண்களும் பணிவிடையும்

இன்றைய (16 செப்டம்பர் 2022) நற்செய்தி (லூக் 8:1-3)

பெண்களும் பணிவிடையும்

மற்ற நற்செய்தியாளர்கள் பதிவு செய்யாத ஒரு குறிப்பை லூக்கா தன் நற்செய்தியில் பதிவு செய்கிறார்: 'பெண்களும் இயேசுவோடு இருந்தார்கள். அவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.'

இதைச் சொல்வதற்கு கொஞ்சம் முன், 'பன்னிருவரும் அவருடன் இருந்தனர்' என்று சொல்கிறார் லூக்கா. அவர்கள் என்ன செய்கிறார்கள்? 'இயேசு நற்செய்தியைப் பறைசாற்றும்போது அவருடன் இருக்கின்றனர் அல்லது அவருடன் இணைந்து நற்செய்தி அறிவிக்கின்றனர்.'

இங்கே, மூன்று விடயங்களை லூக்கா குறிப்பிடுகிறார்:

(அ) பெண்கள் இயேசுவோடு இருந்தனர்

(ஆ) பெண்கள் உடைமைகளைக் கொண்டிருந்தனர்

(இ) பெண்கள் பணிவிடை செய்தனர்

இறுதி விடயத்திலிருந்து தொடங்குவோம். பெண்ணைப் பற்றி விவிலியம் சொல்லும்போதெல்லாம், 'பணி' அல்லது 'பணிவிடை' என்ற சொல் இணைந்தே வருகிறது:

'உன் கணவன்மேல் நீ வேட்கை கொள்வாய். அவனோ உன்னை ஆள்வான்.' (காண். தொநூ 3:16). அதாவது, பெண்ணின் பணிவிடை மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளது.

'திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல, உங்கள் கணவருக்குக் பணிந்திருங்கள்' (காண். எபே 5:22). ஆனால், ஆண்களைப் பற்றிச் சொல்லும் போது, 'திருமணமான ஆண்களே, நீங்கள் உங்களை மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்' என்று உள்ளது. ஆக. பெண்கள் ஆண்கள்மேல் காட்டும் அன்புக்கு, 'பணிவு' என பெயர் தருகிறது விவிலியம்.

'பெண்கள் அமைதியாயிருந்து, மிகுந்த பணிவோடு கற்றுக்கொள்ளட்டும். பெண்கள் கற்றுக்கொடுக்கவோ, ஆண்களைக் கட்டுப்படுத்தவோ நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் அமைதியாயிருக்க வேண்டும்.' (காண். 1 திமொ 2:10-11)

'பணிவிடை செய்தல் பெண்கள் பணியா?' என்று பெண்கள் கொந்தளிக்கக் கூடாது. இன்று பெண்ணியம் நம் மூளையைக் கெடுத்து வைத்துள்ளது. எப்படி? 'ஆணும் பெண்ணும் சமம்' என்று சொல்கிறது பெண்ணியம். இது பொய்! ஆணும் பெண்ணும் ஒருபோதும் சமமாக இருக்க முடியாது. ஒரு பென்சிலும் இன்னொரு பென்சிலும் சமமா என்று கேட்க முடியுமே தவிர, ஒரு பென்சிலும் ஒரு பேனாவும் சமமா என்று கேட்க இயலாது. ஆக, பெண்ணையும் ஆணையும் சமம் என்று அழைப்பது, குத்துவிளக்கையும், மெழுகுதிரியையும் சமம் என்று அழைப்பது போலாகும்! அவை இரண்டும் சமமாக இருத்தல் தேவையில்லை.

'பணிவிடை' என்ற வார்த்தையை நாம் பல நேரங்களில் நம் உள்ளத்தில் இருக்கும் 'அடிமையுணர்வு' என்னும் ஆர்க்கிடைப்பின் பின்புலத்தில் தவறாகப் புரிந்துகொள்கின்றோம். 'பணிவிடை' என்பது ஒரு தாழ்வான செயல் அல்ல. மாறாக, அது ஒரு மதிப்பீடு. ஆண்களும் பணிவிடை செய்கிறார்கள். 'டியகோனியா' என்ற வார்த்தையைத்தான், அதாவது, 'திருத்தொண்டு செய்தல்' என்ற வார்த்தையை லூக்கா பயன்படுத்துகிறார்.  'கணவனுக்கு மனைவி பணிந்திருத்தலே இனிய இல்லறம்' என்று அகுஸ்தினாரின் தாய் மோனிக்காவும் சொல்வதாக, அகுஸ்தினார் தனது ஒப்புகைகள் நூலில் பதிவு செய்கிறார்.

இங்கே நாம் காணும் பெண்கள் சொல்வது என்ன?

பெண்கள் என்றால் பணிவிடை செய்பவர்கள் என்பதை அல்ல. மாறாக, பெண்களைப் போல பணிவிடை செய்பவர்கள் இயேசுவோடு உடனிருக்க முடியும் என்பதை. ஆக, இயேசுவோடு இருக்கும் அனைவரும் திருத்தொண்டு ஏற்கின்றனர்.

இரண்டாவதாக, பெண்கள் தங்களுக்கென்று உடைமையைக் கொண்டிருக்கின்றனர்.

பெண்களுக்குப் பகிர்வு இயல்பிலேயே வரக்கூடியது. ஆகையால்தான், தான் கடித்த முதல் பழத்தைத் தன் கணவனோடு பகிர முன்வருகிறாள் ஏவாள். அந்த நிகழ்வில் ஆதாம் இருந்தால், ஒன்று பாம்பை அடித்திருப்பான். அல்லது பழத்தை முழுவதுமாகச் சாப்பிட்டிருப்பான். பெண்கள் உடைமையில் பங்காளிகளாக இருந்தனர். மேலும், பல சமூகங்களில் அவர்களே உடைமைகளை நிர்வகிக்கிறவர்களாகவும் இருக்கின்றனர்.

முதலில், அவர்கள் இயேசுவோடு இருந்தனர்.

இது அவர்கள் மேற்கொண்ட தெரிவு.

இன்று, என் வாழ்வின் தெரிவு என்ன? 

என்னுடையவற்றை நான் பகிர விழைகின்றேனா? 

நான் எப்படி திருத்தொண்டு ஆற்றுகிறேன்?


Wednesday, September 14, 2022

மரியாவின் ஏழு துயரங்கள்

இன்றைய (15 செப்டம்பர் 2022) திருநாள்

மரியாவின் ஏழு துயரங்கள்

இன்று புனித கன்னி மரியாவின் ஏழு துயரங்களை நினைவுகூர்கின்றோம். கிபி 1232ஆம் ஆண்டில் தொஸ்கானா பகுதியின் ஏழு இளவல்கள் ('மரியின் ஊழியர்கள்') தங்களுடைய 'மரியின் ஊழியர் சபையை' தோற்றுவித்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மரியின் ஏழு துயரங்களை நினைவுகூர்ந்தவர்களாக, சிலுவையின் அடியில் நிற்கின்ற அன்னை கன்னி மரியாவைத் தங்களுடைய பாதுகாவலியாக ஏற்றுக்கொண்டனர். ஏழு துயரங்களின் செபமாலை, ஏழு துயரங்களின் உத்தரியம், துயர்மிகு அல்லது வியாகுல அன்னைக்கான நவநாள் போன்ற பக்தி முயற்சிகளையும் இவர்கள் தோற்றுவித்தனர். 

1913ஆம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் பயஸ் இத்திருவிழாவை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி, அதாவது, திருச்சிலுவை மகிமையின் திருவிழாவுக்கு அடுத்த நாள் கொண்டாடுமாறு வழிபாட்டு ஆண்டை நெறிப்படுத்தினார். 

துன்பம் அல்லது துயரம் என்ற உணர்வு பற்றிய நம் புரிதல் மூன்று நிலைகளில் அமையலாம்: (அ) ஆன்மீகமயமாக்கல் - அதாவது, நான் இன்று துன்புற்றால், கடவுள் அத்துன்பத்திற்கு தகுந்த இன்பத்தைத் தருவார் என நினைப்பது. (ஆ) அறநெறிமயமாக்கல் - இந்தப் புரிதலில் என் துன்பம் என்பது எனது பாவம் அல்லது குற்றத்திற்கான தண்டனை என நான் நினைப்பேன். (இ) எதார்த்த புரிதல் - அதாவது, இன்பத்தைப் போன்று துன்பம் என்பது ஒரு வகையான இயல்பான உணர்வு. அதற்கு மேல் எதுவும் இல்லை.

துன்பம் நமக்கு ஏன் வருகிறது? (அ) நம் தெரிவுகளால் - அதாவது, நான் செய்த தவறான தெரிவுகள் அல்லது நான் எடுத்த தவறான முடிவுகள் எனக்குத் துன்பம் தரலாம். எடுத்துக்காட்டாக, காய்ச்சல் அடிப்பது போல இருக்கிறது. மருத்துவரிடம் செல்லாமல் எனக்கு நானே மருந்து எடுத்துக்கொள்கிறேன். அது என் நிலையை இன்னும் கடினமாக்குகிறது. இத்துன்பம் என் தெரிவால் வந்தது. (ஆ) நம் இருத்தல்நிலையால் - அதாவது, நான் தமிழ் மொழி பேசுகிறேன் என்பதற்காக, அல்லது நான் தமிழன் என்பதற்காக என் பக்கத்து மாநிலம் எனக்குத் தண்ணீர் தராமல் எனக்குத் துன்பம் தருவது. தமிழனாய்ப் பிறந்தது என் இருத்தல்நிலையால் வந்தது. இருந்தாலும், அதற்காக நான் துன்புற நேருகிறது. (இ) சமூகச் சூழ்நிலையால் - தவறான மற்றும் தன்னலமான அரசியல், பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள் எனக்குத் துன்பம் தருகின்றன. எடுத்துக்காட்டாக, நான் ஓர் அரிசி உற்பத்தி செய்யும் விவசாயி. அரிசிக்கான கொள்முதல் விலையை அரசு குறைத்ததால் நான் துன்பத்திற்கு ஆளாகிறேன். (ஈ) இயற்கைப் பேரழிவுகள் - தொற்றுநோய், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றால் வரும் துன்பம். (உ) மனித பேரழிவுகள் - போர், அணுஆயுதம், தன்னலம் போன்ற காரணிகளால் வரும் துன்பம். மற்றும் (ஊ) அப்பாவிகளின் துன்பம் - இறப்பு அல்லது இழப்பால் வரும் துன்பம். திருட்டு, கொள்ளை நோய் போன்றவை நம் இல்லங்களில் ஏற்படுத்தும் துன்பம். நாம் நல்லதே செய்தாலும் நமக்குத் துன்பம் வருவது.

'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்கிறார் புத்தர். மேலும், துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழியும் இருக்கிறது என்கிறார் அவர்.

ஆனால், வலி இல்லாமல் வழி இல்லை என்பது நாம் ஏற்றுக்கொள்ளும் உண்மை.

விவிலியத்தின் ஞானநூல்கள் துன்பம் வழியாகவே ஒருவர் நேர்மையான வாழ்வுக்குப் பயிற்றுவிக்கப்படுவதாகச் சொல்கின்றன. இயேசுவே தான் இறைமகனாக இருந்தும் தன் துன்பத்தின் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கின்றார் (காண். எபி 5). 

இன்று துன்பத்துக்கான நம் பதிலிறுப்பு மூன்று நிலைகளில் உள்ளது:

(அ) துன்பத்தோடு போராடு - அதாவது, துன்பம் வேண்டாம் என நினைத்து அதைத் தவிர்க்கும் விதத்தில் அதனோடு போராடுவது. நம் தலையில் தோன்றும் வெள்ளை முடி என்பது இயற்கை நிகழ்வு. ஆனால், 'வெள்ளை முடியோடு போராடுங்கள்!' எனச் சொல்கிறது இந்துலேகா. தாய்மைப்பேறின்மை, வயது மூப்பு போன்றவை இன்று நோய்களாகப் பார்க்கப்பட்டு, இத்துன்பங்கள் அகல்வதற்கு மருத்துவ உலகம் நம்மையும் போராடச் செய்கிறது.

(ஆ) துன்பத்திலிருந்து தப்பி ஓடு - அதாவது, நம் துன்பத்தை நாம் மறப்பதற்கு இன்று நிறைய மயக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மது, போதை, டிவி சீரியல்கள், செய்திகள், காணொளிகள், புத்தகங்கள், பாடல்கள் என நாம் எதையாவது பார்த்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்க வேண்டும் என உலகம் கற்பிக்கிறது. இப்படியாக, துன்பத்திலிருந்து நம்மைத் தப்பி ஓடச் சொல்கிறது. ஆனால், இது தற்காலிகமான ஓடுதலாக மட்டுமே இருக்க முடியும்.

(இ) துன்பத்தை நேருக்கு நேர் எதிர்கொள் - இதுதான், இயல்பான பதிலிறுப்பு. இதுவே, உண்மையான, நலமான பதிலிறுப்பு. துன்பம் என்பது நம் இருத்தல் மற்றும் இயக்கத்தின் ஒரு இன்றியமையாத பகுதி என நினைத்து, நம் துன்பங்களை எதிர்கொள்வது.

மரியாளின் ஏழு துயர நிகழ்வுகள் ஏழு வகையான துன்ப உணர்வுகளை அவருள் எழுப்புகின்றன:

(1) சிமியோனின் இறைவாக்கு - காத்திருத்தல் என்னும் துன்பம்

(2) எகிப்துக்குத் தப்பி ஓடுதல் - திக்கற்ற நிலை என்னும் துன்பம்

(3) இயேசு ஆலயத்தில் காணாமற்போதல் - இழப்பு என்னும் துன்பம்

(4) சிலுவைப் பாதையில் இயேசுவைச் சந்தித்தல் - கையறுநிலை என்னும் துன்பம்

(5) இயேசுவின் சிலுவை இறப்பு - அவமானம் என்னும் துன்பம்

(6) இறந்த இயேசுவை மடியில் ஏந்துதல் - பலிகடா ஆதல் என்னும் துன்பம்

(7) இயேசுவின் அடக்கம் - வெறுமை என்னும் துன்பம்

மேற்காணும் ஏழு துன்பங்களும் நாமும் அனுபவிக்கும் துன்பங்களே. 

'துன்பம் மறைந்து போகும், அழகு என்றும் நிலைக்கும்!'

எனவே, துன்பங்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அதை நோக்கிப் புன்முறுவல் பூத்தல் நலம்.

ஏனெனில், என் துன்பத்தை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்றுமுறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்' என்றார் (காண். 2 கொரி 12:9).

இத்திருவிழா நமக்குத் தருகின்ற செய்தி என்ன?

(அ) துன்பம் ஒரு வாழ்வியல் எதார்த்தம்

பாவத்தின் வழியாகவே துன்பம் வருகின்றது என்று நாம் தொடக்கநூலில் பார்க்கின்றோம். ஆனால், பாவம் அறியாத மரியா துன்பம் ஏற்கின்றார். ஆன்மிக நிலையில் அவர் பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர் என்றாலும், மனித வாழ்வின் எதார்த்த நிலையில் அவர் துன்பங்களை அனுபவிக்கின்றார். ஆக, துன்பம் ஒரு வாழ்வியல் எதார்த்தம். இயேசுவின் துன்பம் நம் பாவங்களுக்காக என்று பல நேரங்களில் நாம் இறையியலாக்கம் செய்கின்றோம். ஆனால், மரியாவின் துன்பங்களை நாம் அப்படி இறையியலாக்கம் செய்வதில்லை. மரியா துன்புற்றார். அவ்வளவுதான்! அதுதான் எதார்த்தம். பிள்ளைகள் பெற்றோர்களுக்காக, பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக, ஆசிரியர்கள் மாணவர்களுக்காக, கணவன் மனைவிக்காக, மனைவி கணவனுக்காக துன்பங்கள் அனுபவிப்பதாக நாம் சொல்வது அனைத்தும் தவறு. நாம் யாரும் யாருக்காகவும் துன்பங்கள் அனுபவிக்க முடியாது. நாம் துன்பங்கள் அனுபவிக்கிறோம்! அவ்வளவுதான். இப்படிப்பட்ட ஒரு புரிதல் வந்தால்தான் நாம் துன்பத்திற்கு ஆன்மிக அல்லது அறநெறிச்சாயம் பூசுவதை நிறுத்துவோம்.

(ஆ) துன்பம் ஒரு மேலான உணர்வு

'சிரிப்பை விடத் துயரமே நல்லது. துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம். ஆனால், அது உள்ளத்தைப் பண்படுத்தும்' என்கிறார் சபை உரையாளர் (காண். சஉ 7:3). துன்புறுதல் என்பது செயல். துயரம் அல்லது துன்பம் என்பது ஓர் உணர்வு. எடுத்துக்காட்டாக, நான் வழியில் செல்லும்போது கால் பிசகிவிட்டது என வைத்துக்கொள்வோம். அப்போது நான் துன்புறுகிறேன். கால் சரியாகிவிட்டால் துன்பம் மறைந்துவிடுகின்றது. ஆக, துன்பம் அல்லது துயரம் என்பது துன்புறுதல் என்னும் செயல் இருக்கும் வரை இருக்கின்றது. என் அப்பா இறந்தபோது நான் துன்பமுற்றேன். ஆனால், அவரின் இழப்பு அப்படியே ஒரு துயரமாக என் மனத்தில் படிந்துவிடுகிறது. துன்பமுறுதல் என்னும் செயல் ஒரு நாளில் முடிந்தாலும் அது உணர்வாக இன்றுவரை நீடிக்கிறது. மரியாவின் துயரம் நமக்கு இத்தகைய உணர்வைத்தான் சொல்கிறது. துயரம் என்பது ஓர் உணர்வு. இந்த உணர்வு உள்ளத்தைப் பண்படுத்தும் அல்லது உழும். அதாவது, உழும்போது நிலத்தில் கீறல் விழுகிறது. ஆனால், அந்தக் கீறல் வழியாகவே நிலம் புதிய காற்றைச் சுவாசிக்கின்றது. விதையையும், உரத்தையும், நீரையும் தன்னகத்தே எடுத்துக்கொள்கிறது. நாம் துன்புறும்போதும் உள்ளத்தில் கீறல் விழுகிறது. ஆனால், அந்தக் கீறல் வழியாகவே நாம் புதிய அனுபவங்களை உள் வாங்குகிறோம். அந்தக் கீறல் வழியாகவே நாம் நம்மையே முழுமையாகப் பார்க்கின்றோம். ஆதாம்-ஏவாள் என்னும் நம் முதற்பெற்றோர் இன்பத் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரே, ஆதாம் தன் மனைவி ஏவாளுக்கு, 'தாய்' என்ற பெயரைக் கொடுக்கின்றார். அதாவது, காயினைப் பெற்றெடுக்கும் முன்னரே ஏவாள் 'தாய்' என்னும் பெயர் பெறுகிறாள். துன்பம் ஏற்கும் எவரும் வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர்கின்றனர்.

(இ) துன்பம் என்பது நினைவு

நம் நினைவுகளே துன்பமாக மாறுகின்றன என்று இந்திய மெய்யியல் கற்பிக்கின்றது. எடுத்துக்காட்டாக, நம் சுண்டு விரல். இது என்றாவது நம் நினைவுக்கு வருகிறதா? ஆனால், கதவுக்கு இடையில் அதைக் கொடுத்து நாம் நசுக்கிவிட்டால், அது எந்நேரமும் நம் நினைவில் நிற்கிறது. ஆக, துன்பம் என்ற உணர்வு மட்டுமே நம் நினைவில் நிற்கிறது. நான் அணியும் செருப்பு என் காலுடன் பொருந்திவிட்டால் அதை நான் நினைப்பதே இல்லை. அது பொருந்தவில்லை என்றால் அது எப்போதும் என் நினைவில் இருக்கிறது. ஏனெனில், அது எனக்கு வலியைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆக, பொருந்துகின்ற ஒன்று வலி தருவதில்லை. வலி தராத ஒன்று நம் நினைவில் நிற்பதில்லை. துயரப்படுகிறவர்கள் மது அருந்தக் காரணம் என்ன? அல்லது வாழ்வில் இழப்பை அனுபவிப்பவர்கள் புதிய இடங்களுக்கு மாறிச் செல்லக் காரணம் என்ன? தங்களுடைய நினைவுகளை மறக்கவும் மாற்றவும்தான். 

அன்னை கன்னி மரியாவின் ஏழு துயரங்களை நாம் வெறுமனே போற்றிப் புகழ்ந்து அவரை அந்நியப்படுத்திவிட வேண்டாம். அவை வெறும் மறையுரைக் கருத்துகள் அல்ல. மாறாக, அவர்கள் நகர்ந்து வந்த வாழ்க்கைப் பாதைகள். 

நம் உள்ளத்தை, உடலை, நினைவை பல வாள்கள் அன்றாடம் ஊடுருவிக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பிடுங்கி எறிந்துவிட்டும், சிலவற்றுக்கு மருந்திட்டும், சில வாள்களை அப்படியே தூக்கிக்கொண்டும், சில வாள்களைப் பிடுங்கும்போது பாதி வாள் உடைந்தும் பாதி வாள் இன்னும் நம் உடலில் மாட்டிக்கொண்டும், காயத்தின் ரணங்களோடு நாம் நடந்துகொண்டே இருக்கின்றோம். துன்பமும் இன்பமும் மாறி மாறி வரக் கூடிய எதார்த்தங்கள். ஆனால், துன்பமே நீடித்த, உண்மையான எதார்;த்தம். எனக்கு ருசியாக இருந்து எனக்கு இன்பம் தரும் உணவு அஜீரணமாக மாறினால் துன்பம் வந்துவிடுகிறது. பசி என்னும் துன்பம் நான் உணவு உண்டவுடன் மறைந்துவிடுகிறது.

இன்பம் தருகின்ற ஒன்று கண்டிப்பாகத் துன்பமாக மாறும்.

துன்பம் தருகின்ற ஒன்று துன்பமாகவே நீடிக்கிறது. இன்பத்திற்குப் பின்னரும்!


Tuesday, September 13, 2022

திருச்சிலுவையின் மகிமை

இன்றைய (14 செப்டம்பர் 2022) திருநாள்

திருச்சிலுவையின் மகிமை

சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையதளம் ஒன்றில் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான அடையாளம் எது என்று காண ஒரு சர்வே நடத்தப்பட்டது. இஸ்ரயேலைக் குறிக்கும் நட்சத்திரம், கிறிஸ்தவர்களைக் குறிக்கும் சிலுவை, பௌத்தர்களைக் குறிக்கும் சக்கரம், மெக்டொனால்டைக் குறிக்கும் 'எம்' என்னும் எழுத்து என நிறைய அடையாளங்கள் வைக்கப்பட்டிருந்தன. இறுதியில் மெக்டொனால்டைக் குறிக்கும் 'எம்' என்னும் எழுத்தே மிகவும் பரிச்சயமானது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்தவர்களாகிய நமக்கு பரிச்சயமான மற்றும் அல்ல, மாறாக, நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டு ஓர் அடையாளம் திருச்சிலுவை. இத்திருச்சிலுவையின் மகிமையை இன்று விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

இந்த விழாவின் பின்புலம் அல்லது மரபாகக் கருதப்படுவது என்ன? கிபி இரண்டு முதல் நான்கு நூற்றாண்டுகளில் இயேசு அறையப்பட்டு உயிர்நீத்த சிலுவையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் ஆர்வம் உரோமையர்கள் மற்றும் தொடக்கக் கிறிஸ்தவர்களிடையே இருந்தது. இதன்படி 326ஆம் ஆண்டு எருசலேமில், கான்ஸ்டான்டைன் பேரரசரின் தாய் புனித ஹெலனா அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட திருச்சிலுவை பல இடங்களுக்குப் பவனியாகக் கொண்டுவரப்பட்டதன் பின்புலத்தில்தான் திருச்சிலுவையின் மகிமை விழா தொடங்கியது.

திருச்சிலுவை நமக்கு வெறும் அடையாளம் மட்டுமல்ல. மாறாக, நம் வழிபாட்டை திருச்சிலுவை அடையாளத்தால் தொடங்குகிறோம், நிறைவு செய்கிறோம். ஆசீர் அளிக்கும்போதும் இதே அடையாளத்தையே பயன்படுத்துகின்றோம். அணிகலனாக, ஆபரணமாக, இல்லங்களில், ஆலயங்களில் என எங்கும் சிலுவையே வீற்றிருக்கின்றது.

இயேசு சிலுவையை எப்படிப் பார்த்தார் என்பதையும், பவுல் எப்படிப் பார்த்தார் என்பதையும் இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் வாசிக்கக் கேட்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 3:13-17) நிக்கதேமிடம் உரையாடுகின்ற இயேசு, 'பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்' என்கிறார். 'உயர்த்தப்படுதல்' என்பதுற்கு யோவான் நற்செய்தியில் இரு பொருள்கள் உண்டு: ஒன்று, இயேசு சிலுவையில் உயர்த்தப்படுவது. இரண்டு, இறப்புக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தவராய் இயேசு விண்ணேறிச் செல்வது. இந்த இடத்தில் முதல் பொருளே மேலோங்கி நிற்கிறது. நிக்கதேம் ஒரு யூதர் என்பதால் முதல் ஏற்பாட்டு நிகழ்வை அறிந்திருக்க வாய்ப்புண்டு. அந்த நிகழ்வின்படி (இன்றைய முதல் வாசகம்) பாலைநிலத்தில் தனக்கு எதிராக முணுமுணுத்த மக்களைத் தண்டிக்கும்படி ஆண்டவராகிய கடவுள் பாம்புகளை அவர்கள் நடுவே அனுப்புகின்றார். பின்பு அவர்கள் தன்னை நோக்கிக் கூக்குரல் எழுப்பியபோது, அவரே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து கம்பத்தில் உயர்த்துமாறு மோசேக்குச் சொல்கின்றார். வெண்கலப் பாம்பைப் பார்க்கும் அனைவரும் நலம் பெறுகின்றனர். உயர்த்தப்பட்ட பாம்பு மக்களுக்கு நலம் தருகின்றது. சிலுவையில் உயர்த்தப்படும் இயேசுவும் அனைவருக்கும் மீட்பு தருகின்றார். 

தாங்கள் நொறுக்கப்பட்டதன் அடையாளமாக அவர்கள் வெண்கலப் பாம்பை நோக்கிக் கண்களை உயர்த்துகின்றனர். நாம் சிலுவையை நோக்கி நம் கண்களை உயர்த்தும்போதும் நமக்காக இயேசு நொறுக்கப்பட்டதை நாம் உணர்கின்றோம்.

இரண்டாம் வாசகத்தில், பிலிப்பி நகர மக்களுக்கு எழுதுகின்ற பவுல், தன் சமகாலத்தில் விளங்கிய கிறிஸ்தியல் பாடல் ஒன்றை மேற்கோள்காட்டி, இயேசுவின் தற்கையளிப்பை ஓர் இறையியலாக வடிக்கின்றார். கடவுள் தன்மையில் இருந்த இயேசு அத்தன்மையைப் பற்றிக்கொண்டிராமல் தன்னையே வெறுமையாக்கி சிலுவைச் சாவுக்குத் தன்னை உட்படுத்துகின்றார். இயேசுவின் நொறுங்குநிலை, தாழ்ச்சி, மற்றும் உருக்குலைந்த நிலையின் அடையாளமாகச் சிலுவை திகழ்கின்றது.

இயேசு தன் பாடுகளை முன்னுரைக்கும் இடத்தில் எல்லாம் சிலுவை துன்பத்தின் அடையாளமாக இருப்பதாகத் தெரிகின்றது. பேதுருவும் கூட அத்தகையதொரு புரிதலைக் கொண்டிருந்ததால்தான், 'ஆண்டவரே! இது உமக்கு வேண்டாம்' என்று இயேசுவைத் தடுக்கின்றார்.

இத்திருவிழா நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

துன்பத்தின் அடையாளமாக இருக்கின்ற சிலுவையே நம் மீட்பின் அடையாளமாக இருக்கின்றது. இதுதான் வாழ்வின் இருதுருவ நிலை. சிலுவை என்பது வாழ்வின் இரு துருவ நிலையின் அடையாளம். ஒரே நேரத்தில் அது விண்ணை நோக்கி நம் கண்களை உயர்த்துமாறு அழைக்கிறது. அதே வேளையில் இந்த மண்ணுடன் நம் கால்களை ஆணி அடித்து இறுக்குகிறது. நேர்கோடும் குறுக்குக் கோடும் என வாழ்க்கையின் பாதைகள் மாறி மாறி மறைவதையும், நெட்டையும் குட்டையும் இணைந்ததே நாம் என்றும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது.

இன்றைய நாளில் திருச்சிலுவையின்முன் சற்று நேரம் அமர்ந்து, அதைப் பற்றித் தியானித்து, அதனோடு நம்மையே பிணைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.


அழாதீர்!

இன்றைய (13 செப்டம்பர் 2022) நற்செய்தி (லூக் 7:11-17)

அழாதீர்!

விவிலியத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகள் இரண்டு. ஒன்று, தொநூ 22. ஆபிரகாம் மலையின் இந்தப் பக்கம் தன் மகன் ஈசாக்கை ஏற்றிக்கொண்டு போன போது, கடவுள் மலையின் அந்தப் பக்கம் ஓர் ஆட்டுக்குட்டியை ஏற்றிக்கொண்டு வருவது. இரண்டு, லூக் 7. இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி. நகருக்குள்ளிருந்து புறம் நோக்கி இளைஞன் ஒருவன் உயிரற்ற சடலமாகத் தூக்கிச் செல்லப்படுகின்றார். நகர்ப்புறத்திலிருந்து உள்நோக்கி வாழ்வின் ஊற்றாகிய இயேசு வருகின்றார். வந்தவர் பரிவு கொண்டு பாடையைத் தொட்டு நிறுத்துகின்றார். இறந்த இளைஞன் உயிர் பெற்று எழுகின்றார். 

முதல் நிகழ்வில்கூட ஆபிரகாமின் நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கடவுள் இருக்கின்றார். இரண்டாம் நிகழ்வில் அப்படி எதுவும் இல்லை.

வழக்கமாக இயேசு நிகழ்த்துகின்ற வல்ல செயல்கள் அல்லது அற்புதங்களில், குணம் அல்லது நலம் பெற விரும்புகிறவர் அல்லது அவருடைய சார்பில் இன்னொருவர் விண்ணப்பம் செய்வார். ஆனால், விண்ணப்பம் இல்லாமலேயே தானே செயலாற்றுகின்றார் இயேசு. 

லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படும் இந்த நிகழ்வு நயீன் நகரத்தில் நடக்கின்றது. ஒரு பெண். அவர் கைம்பெண். தன் ஒரே மகனையும் இழக்கின்றார். எல்லாமே முடிந்தது என நினைத்தவரின் வாழ்வில் இயேசு அற்புதம் நிகழ்த்துகின்றார்.

முதலில் இயேசு தன் பயணத்தை நிறுத்துகின்றார். பின்னர் பெண்ணின் அழுகையை நிறுத்துகின்றார். பின்னர் பாடையை நிறுத்துகின்றார். 

சில பயணங்களை நிறுத்துவது நல்லது. சில அழுகையை நிறுத்துவது நல்லது. சில பாடைகளை நிறுத்துவது நல்லது.

புறப்பட்டுவிட்டோம் என்பதற்காகச் சென்றுகொண்டே இருக்க வேண்டிய தேவையில்லை. நாம் நிற்கின்ற இடத்தில்தான் இறைவன் வல்ல செயல் நிகழ்த்துகின்றார். 

இயேசு இளைஞனுக்கு உயிர் தந்த நிகழ்வில் அவரை இறைவாக்கினராக - எலியா, எலிசா போன்று - மக்கள் கொண்டாடுகிறார்கள்.

இன்று நாம் எதை நினைத்து அழுதுகொண்டிருக்கின்றோம்.

அழாதீர்! என்று நம்மைப் பார்த்துச் சொல்ல இதோ அவர் அருகில் இருக்கின்றார்.


Sunday, September 11, 2022

எதுவும் சொல்லாமலேயே

இன்றைய (12 செப்டம்பர் 2022) நற்செய்தி (லூக் 7:1-10)

எதுவும் சொல்லாமலேயே

நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைதல் நிகழ்வை மத்தேயு, லூக்கா, மற்றும் யோவான் நற்செய்தியாளர்கள் பதிவு செய்கின்றனர். தூரத்திலேயே குணமாக்கும் நிகழ்வு என்று இந்த வல்ல செயல் அழைக்கப்படுகின்றது. இன்று நாம் லூக்காவின் பதிவை வாசிக்கின்றோம். மற்ற பதிவுகளுக்கும் லூக்காவின் பதிவுக்கும் இடையே சில முக்கியமான வேறுபாடுகள் காணப்படுகின்றன: (அ) மற்ற நற்செய்திகளில் நூற்றுவர் தலைவர் இயேசுவிடம் செல்கின்றார். லூக்காவில் தலைவரால் அனுப்பப்பட்ட ஒரு குழுவினர் இயேசுவைச் சந்திக்கின்றனர். (ஆ) மற்ற நற்செய்திகளில் இயேசு தான் தொடங்கிய இடத்திலிருந்தே நலம் தருகின்றார். லூக்காவில் இயேசு பாதி வழி நடக்கின்றார். (இ) மற்ற நற்செய்திகளில் இயேசு, 'நீர் போகலாம். பணியாளர் அல்லது மகன் நலம் பெற்றார்' என்று மொழிகின்றார். லூக்காவில் இயேசு அப்படி எதுவும் பேசவில்லை.

இந்நிகழ்வில் வரும் தொழுகைக்கூடத் தலைவர் நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றார்:

(அ) பணியாளர்மீது மதிப்பு

மிலிட்டரி போன்ற பணிகளில் கிரேட் அல்லது தலைமையைப் பொறுத்தே மனிதர்கள் உறவுகொள்வார்கள். பெரும்பாலும் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களிடம் உரையாடவோ உறவாடவோ செய்வதில்லை. ஆனால், இந்த நூற்றுவர்தலைவர் தனக்குக் கீழ் உள்ள பணியாளர்மீது மதிப்பும் அக்கறையும் கொண்டவராக இருக்கின்றார். இவர் ஒருவேளை தலைவரின் தனிச் செயலராக அல்லது காப்பாளராக அல்லது உதவியாளராக இருந்திருக்கலாம். அல்லது இயல்பாகவே தலைவர் தன் பணியாளர்கள்மேல் அக்கறை உள்ளவராக இருத்தல் வேண்டும்.

(ஆ) பணிப் பகிர்வு

நூற்றுவர் தலைவர் இரு குழுக்களை இயேசுவிடம் அனுப்புகின்றார். முதலில், யூதர்களின் மூப்பர்கள். அவர்கள் நூற்றுவர் தலைவரின் நற்குணத்தை இயேசுவிடம் எடுத்துச் சொல்லி அவருக்காகப் பரிந்து பேசுகின்றனர். இரண்டாவதாக, நண்பர்கள். அவர்கள் வழியாகவே இயேசுவின்மேல் உள்ள நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார் நூற்றுவர் தலைவர். தான் இயேசுவை ஏற்கத் தகுதியற்றவர் என்பதை இதன் வழியாக அறிக்கையிட்டுத் தாழ்ச்சியை வெளிப்படுத்துவதுடன் தன் பணியைத் தகுதியான நபர்களிடம் பகிர்ந்து கொடுக்கவும் துணிகின்றார் தலைவர்.

(இ) நம்பிக்கை

பணியில் இருக்கும் தன் சொற்களுக்கே ஆற்றல் இருக்கிறது என்றால், ஆண்டவராகிய இயேசுவின் சொற்களுக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கும் என்பதை உணர்ந்தவராக இருக்கின்றார் அவர். இயேசு அவரின் நம்பிக்கையைப் பாராட்டுவதோடு, தன்னால் சொற்கள் இல்லாமலும் செயலாற்ற முடியும் என்று அறிகுறியை நிகழ்த்துகின்றார்.

மொத்தத்தில் இந்த நிகழ்வு இயேசுவின் சொற்களுக்கு இருந்த ஆற்றலையும், அதை அவருடைய சமகாலத்தவர்கள் கண்டுணர்ந்ததையும் நமக்கு எடுத்துரைக்கின்றது.

இன்று இறைவார்த்தையை நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம். எத்தனை முறை அவற்றை இயேசுவின் வார்த்தைகளாகவே எடுத்துள்ளோம்? அவற்றின் ஆற்றலையும், அவற்றால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் எத்தனை முறை நாம் உணர்ந்துள்ளோம்? இறைவார்த்தை வாசிப்பு வெறும் சடங்காகவோ, அல்லது கற்றல்நிகழ்வாகவோ மட்டும் இருந்தால் நம்மை இறைவார்த்தை தொடாது.