Sunday, July 5, 2020

கழுதையும் குதிரையும்

ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு

கழுதையும் குதிரையும்

'பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே - நின்

பறம்பு நிலமும் படர்ந்த காடும்
தவழும் காற்றும் தழலும் வானும்
அண்டுவார் தம்மை அணைக்கும் தாய்மடி
அளவிலா அன்பைப் பொழியும் தொல்குடி'

(சு. வெங்கடேசன், வேள்பாரி, பிரிவு 111)

கடந்த வாரம், திரு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' என்னும் நூலை வாசித்தேன். வள்ளல் பாரி வசித்த பரம்பு நாட்டிற்கே சென்று, அவரோடு நேரில் வாழ்ந்த ஒரு உணர்வைத் தருகிறது இந்நூல். வாசித்து முடித்த நாள் முதல் இன்று வரை பாரியும், கபிலரும், திசைவேழரும், தேவாங்கும், பொற்சுவையும், சுகமதியும், தேக்கனும், ஆதினியும், முடியனும், உதிரனும், அங்கவையும், நீலனும், மயிலாவும், கோவனும், செம்பாவும், சூலிவேளும், தூதுவையும் அடிக்கடி கனவில் வந்துசெல்கின்றனர்.

தட்டியங்காடு என்னும் இடத்தில், சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களுக்கும், வேள்பாரிக்கும் நடந்த போரோடும், அந்தப் போரில் பாரி அடைந்த வெற்றியோடும் நிறைவுபெறுகிறது இந்நூல்.

பாரியின் மிக முக்கிய நல்ல குணங்களில் நான் ஒன்றாக இந்நூலில் கண்டது, 'இவர் தன்னை மற்றவரில் கண்டார்.' தேரில் படர்ந்த முல்லையில், கப்பலில் துடிதுடித்த ஈங்கையனில், தனக்காக இன்னுயிர் ஈந்த பொற்சுவையில், தன்னை அண்டிவந்த பன்னிரு குடிகளில் அவன் தன்னைக் கண்டான். சேர, சோழ, பாண்டியர்களோ, 'மற்றவர்கள் தன்னைக் காண வேண்டும்' என்னும் முனைப்பில் இருந்தனர்.

மிகச் சிறிய பாரியின் குடிகள் மிகப் பெரிய மூவேந்தர்களை விரட்டியடிக்கின்றனர்.

மகாபாரதத்தில், மிகச் சிறிய பாண்டவர் குழுவினர் மிகப் பெரிய கௌரவர் குழுவினரை எதிர்கொண்டு வெற்றிகொள்கின்றனர்.

விவிலியத்தில், மிகச் சிறிய இஸ்ரயேல் மக்கள் குழு, மிகப் பெரிய பாரவோன் குழுவை வெற்றிகொள்கிறது.

சிம்சோன், மிகச் சிறிய கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு, மிகப் பெரிய பெலிஸ்தியர் குழுவை எதிர்கொள்கின்றார்.

தாவீது, மிகச் சிறிய கல் கொண்டு, மிகப் பெரிய கோலியாத்தை வெல்கின்றார்.

மொத்தத்தில், சிறியவை என்றும் சிறியவை அல்ல என்றும், அவற்றால் பெரியவற்றையும் வெல்ல முடியும் என்றும் சொல்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

மிக நல்ல எடுத்துக்காட்டு, கோவித்-19 என்னும் தீநுண்மி (குட்டி வைரஸ்). நம் பிரமாண்டங்களை ஒரே அடியாகக் கவிழ்த்துப் போட்டுவிட்டது இந்த நுண்மி. பெரிய கூட்டம், பெரிய திருவிழா, பெரிய விமானம், பெரிய பேருந்து, பெரிய ஓட்டல், பெரிய திருமண விழா, பெரிய கடை, பெரிய மால், பெரிய கல்லூரி, பெரிய பள்ளிக்கூடம் என நாம் பெருமைப்பட்டுக் கொண்ட அனைத்தையும், கண்ணுக்குத் தெரியாத நுண்மி புரட்டிப் போட்டுவிட்டது. ஆனாலும், நாம் மீண்டு எழுவோம். தீநுண்மி இப்போது பிரமாண்டமாய் மாறிவிட்ட நிலையில், இதையும் கவிழ்த்துப்போட ஒரு எதிர்நுண்மி விரைவில் வரும்.

பெரியவற்றை சிறியவை எதிர்கொள்தல் பற்றி நான்கு நிலைகளில் இறைவார்த்தை வழிபாடு எடுத்துரைக்கின்றது.

(அ) 'கழுதையின்மேல் வருபவர்' 'குதிரைப் படையை' அறவே ஒழித்து விடுவார் (முதல் வாசகம்).

(ஆ) 'தூய ஆவி' 'உடலின் தீச்செயலை' அழித்துவிடும் (இரண்டாம் வாசகம்).

(இ) 'மடைமை' 'கடவுளின் மறைபொருளை' உணர்ந்துகொள்ளும் (நற்செய்தி வாசகம்).

(ஈ) 'இயேசுவின் நுகம்' 'மற்ற சுமைகளை' எளிதாக்கும் (நற்செய்தி வாசகம்).

ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்வோம்.

(அ) கழுதையும் குதிரையும்

இன்றைய முதல் வாசகம் (காண். செக் 9:9-10) செக்கரியா இறைவாக்கினர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'செக்கரியா' என்றால் 'ஆண்டவர் நினைவுகூர்கிறார்' என்று பொருள். இவர் ஆகாய் இறைவாக்கினரின் சமகாலத்தவர். கிமு 520க்கும் 518க்கும் இடையே எழுதப்பட்டிருக்கலாம். இந்நூலின் முதல் பகுதி (1-8) எருசலேமின் மீட்பு பற்றியும், இரண்டாம் பகுதி (9-14) மெசியாவின் வருகை பற்றியும் எடுத்துரைக்கின்றது. இன்றைய வாசகம், நூலின் இரண்டாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. சீயோனுக்கு (எருசலேம்) வரப்போகும் அரசர் பற்றி முன்னுரைக்கின்றார் செக்கரியா. மிக அழகான கான்ட்ராஸ்ட் (முரண்) உருவகத்தை இவர் பதிவு செய்கின்றார்: 'அவர் கழுதையின்மேல், குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர் ... இவர் தேர்ப்படையையும், குதிரைப் படையையும் ஒழித்துவிடுவார்.' எருசலேம் நகருக்குள் தேர்களிலும், குதிரைகளிலும் வந்த சார்கனும், நெபுகத்னேசரும் போர்களையும், கண்ணீரையும், இரத்தத்தையும் கொண்டுவந்தனர். அவர்கள் வரும்போது பெரும் ஆரவாரம் இருந்தது. எல்லாரும் பார்க்கக்கூடிய நிலையில் இருந்தது. ஆனால், வரப்போகும் அரசர் அமைதியையும், பரிவையும், இரக்கத்தையும் கொண்டு வருகிறார். அவர் வரும்போது ஆர்ப்பரிப்பவர் எவரும் இல்லை. முக்கியமற்ற, அற்பமான நிலையில் வருகிறார் அவர். ஆனால், அவரின் வருகை முந்தையை வருகையையும், அதன் விளைவுகளையும் புரட்டிப் போட்டுவிடுகிறது. முன்னவர்கள் போரைக் கொண்டுவர, இவரோ அமைதியைக் கொண்டு வருகிறார்.

(ஆ) ஆவியும் ஊனியல்பும்

உரோமையருக்கு எழுதுகின்ற திருமடலில், தூய ஆவி அருளும் வாழ்வு பற்றிய கருத்துருவைப் பகிரத் தொடங்குகின்ற பவுல், 'ஆவிக்கும்' 'உடலுக்கும்' இடையே நடைபெறுகின்ற போராட்டத்தையும், இந்த முரணில் ஆவி வெற்றிபெற வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கின்றார். உடலின் இயல்பு நம்மை அழிக்கும் என்றும், தூய ஆவியின் இயல்பு நமக்கு வாழ்வுதரும் என்றும் சொல்கின்றார் பவுல். நாம் உடலைக் காண்பது போல ஆவியை அல்லது உள்ளத்தைக் காண இயலாது. நம் உடல் பெரியது, சிறியதாக இருக்கலாம். ஆனால், உள்ளுக்குள் இருக்கும் ஆவி அனைவருக்கும் ஒன்றுதான். உடல் நமக்கு வாழ்வு தருவதுபோல இருக்கிறது. உடலின் இயல்பு நமக்குப் புத்துயிர் தருவது போல இருக்கிறது. ஆனால், அது வாழ்வை அல்ல, இன்பத்தையே தருகிறது. இன்பம் மறையக்கூடியது. மறையாத மகிழ்ச்சியைத் தருவது தூய ஆவியின் இயல்பே. ஆக, காணக்கூடிய பெரிய உடலையும், காண இயலாத சிறிய ஆவி வெற்றிகொண்டுவிடுகிறது. அப்படி வெற்றி கொண்டால்தான் அங்கே வாழ்வு இருக்கும். 'உடல்' தனக்கு விருப்பமானதைச் செய்யும். 'ஆவி' மட்டுமே சரியானதைச் செய்யும்.

(இ) மடைமையும் ஞானமும்

இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். மத் 11:25-30), இயேசு தன் தந்தையைப் புகழ்கின்றார். எதற்காக? 'விண்ணரசின் மறைபொருளை ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியதற்காக.' யூத மரபில், குழந்தைகள் தோரா கற்றுக்கொள்ளும் தகுதி அற்றவர்கள். இங்கே, 'குழந்தைகள்' என்பது இயேசுவின் சீடர்களை உருவகமாக அழைக்கின்றது. தங்களையே திருச்சட்டத்தின் ஞானிகளாகவும், அறிஞர்களாகவும், மேதாவிகளாகவும் கருதிய ரபிக்களுக்கும், பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும், திருச்சட்ட வல்லுநர்களுக்கும் மறைக்கப்படும் விண்ணரசின் மறைபொருள், மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களுக்கும், வரி வாங்கிக்கொண்டிருந்தவர்களுக்கும், கத்தி எடுத்து போராட விரும்பியவர்களுக்கும் வெளிப்படுத்தப்படுகிறது. அல்லது மடைமை ஞானத்தைத் தனதாக்கிக்கொள்கிறது. ஞானம் மடைமையால் வெட்கத்துக்குள்ளாகிறது. மடைமை ஞானத்தைத் தனதாக்க வேண்டுமென்றால், கடவுளின் வெளிப்பாட்டுக்குத் தன்னையே கையளிக்க வேண்டும். ஞானம் முந்திக்கொள்ளும். மடைமை காத்திருக்கும். அந்தக் காத்திருத்தலில் இறைவெளிப்பாடு நிகழும்.

(ஈ) அழுத்தாத நுகமும் அழுத்தும் சுமையும்

இயேசு ஒரு விவசாய சமூக உருவகத்தை இங்கே பயன்படுத்துகின்றார்: நுகம். வண்டியையும் அல்லது ஏரையும் மாட்டையும் இணைக்கின்ற இணைப்புக் கோடுதான் நுகம். இது மாட்டையும் அழுத்தக் கூடாது. வண்டியின் சுமையிலிருந்தும் முறிந்துவிடக் கூடாது. இயேசுவின் சமகாலத்து மக்கள் அரசியல், சமூக, சமய, மற்றும் பொருளாதார சுமைகளைத் தூக்கிக் கொண்டு நின்றனர். உரோமையின் அரசாட்சி, சமூகத்தில் ஏற்றத்தாழ்வு, ஆலய மைய வழிபாடுகள், வரிகள் என அன்றாடம் விழிபிதுங்கி நின்றனர். அவர்களிடம், 'என்னிடம் வாருங்கள்' என அழைப்பு விடுக்கின்றார் இயேசு. அவர்களின் சுமைகளை அகற்றுவதற்காக அல்ல, அவர்கள்மேல் தன் சுமையை ஏற்றுக்கொள்ள அவர்களை அழைக்கின்றார். 'ஏழைகளும் வேலைகளும் எந்நாளும் உங்களோடு இருப்பார்கள்' என்பது போல, 'சுமைகளும் நம் வாழ்வில் என்றும் இருப்பவை.' ஆகையால்தான், சுமையை அகற்றும் வாக்குறுதியை இயேசு அளிக்கவில்லை. ஆனால், இயேசு முன்மொழியும் மாற்றுச் சுமை 'எளிதாக' உள்ளது. அது 'அழுத்துவதில்லை.' இயேசுவின் நுகம் என்ன? அவரே இனிய நுகம். அவரை முழுமையாக அனுபவித்தல், அவருடைய உடனிருப்பை உணர்தல் அனைத்துமே நுகங்கள்தாம். ஆனால், அவை இனிய நுகங்கள்.

இவ்வாறாக,

சிறியவற்றைக் கொண்டு பெரியவற்றை வெல்ல முடியும் என்கிறது இறைவாக்கு வழிபாடு.

இதை நாம் நம் வாழ்வில் எப்படிச் செயல்படுத்துவது?

1. பிரமாண்டங்கள் தவிர்க்க வேண்டும்

நம் கண்கள் பெரும்பாலும் பிரமாண்டங்களையே தேடுகின்றன. ஆனால், பிரமாண்டங்கள் எல்லாமே ஒப்பீட்டுச் சொற்கள். எடுத்துக்காட்டாக, 'அவன் பணக்காரன்' என்கிறோம். அதில் இன்னொரு கேள்வியும் இருக்கிறது: 'யாரைவிடப் பணக்காரன்.' 'அவள் அழகானவள்' - 'யாரைவிட அழகானவள்.' 'அவர் உயரமானவர்' - 'யாரைவிட உயரமானவர்.' 'அவர் அறிவாளி' - 'யாரைவிட அறிவாளி.' இவை யாவும் ஒப்பீட்டுச் சொற்கள் என்பதை மறந்துவிட்டு, இவற்றை அளவீட்டுச் சொற்களாக நினைத்து அவற்றோடு ஒட்டிக்கொள்கின்றோம். குதிரைகளைப் பார்த்து வியக்கவும், பெரிய மற்றும் அழகான உடலை ஆராதிக்கவும், ஞானத்தைப் புகழவும், சுமைகள் சுமத்துபவர்களைப் பாராட்டவும் செய்கிறோம். கோவித்-19க்குப் பின் உள்ள நம் வாழ்வில் நாம் பிரமாண்டங்களைத் தவிர்க்க வேண்டும்.

2. அற்பத்தன்மையைக் கொண்டாடுதல்

நம்முடைய கழுதை நிலையை, அல்லது கழுதைமேல் வருகின்ற நிலையை, அன்றாட ஆவிக்குரிய இயல்புப் போராட்டத்தை, மடைமையை நாம் கொண்டாட வேண்டும். 'தன்னால் அன்றி இந்த உலகம் இயலாது என்று சொன்னவர்கள் எல்லாம் கல்லறைகளில்' என்பார் டால்ஸ்டாய். நம்மால் அன்றி இந்த உலகம் இயலாது என நினைத்து அல்லும் பகலும் ஆலாய்ப் பறக்கிறோம் ('ஆலா' என்பது வேகமாகப் பாய்ந்து ஓடும் பொதிவெற்பனின் குதிரை). ஆனால், நாம் இல்லாவிட்டாலும் கதிரவன் எழும். ஆக, நமக்குரிய வாழ்வியல் நோக்கத்தை, நமக்குரிய நிலையில் செயல்படுத்துவது சால்பு.

இந்த இரண்டு வாழ்வியல் பாடங்களையும் தன் வாழ்வின் இறுதியில் உணர்ந்தவர் தாவீது. ஆகையால் இவர் இப்படி அழகாகப் பாடுகிறார்:

'ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை!
எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.
மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது.
தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது.' (திபா 131:1-2)

கழுதையாய் குழந்தையாய் மாறும் அனைவரும் கடவுளின் அன்பராய் மாறுவர். இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 145) சொல்வது போல, 'அவர்கள் என்றும் ஆண்டவரைப் போற்றுவார்கள்.'


1 comment:

  1. ஏற்றம்- இறக்கம்,உயர்வு- தாழ்வு,பெருமை- சிறுமை( எளிமை)....... இது போன்ற விஷயங்களை விவிலியம் மட்டுமின்றி தமிழ்க்காவியங்களும், பெரும் புராணங்களும் கூடப் போற்றுகின்றன என்பதை எடுத்துரைக்கும் ஒரு பதிவு. இதில் எளிமை அல்லது சிறுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ‘குழந்தை’அல்லது ‘கழுதையாய்’ நாம் மாறினால் ‘கடவுளின் அன்பராக மாறுவோம்’ என்கின்றன இன்றைய வாசகங்கள்.”சிறியவை என்றும் சிறியவை அல்ல....அவற்றால் பெரியவற்றையும் வெல்லமுடியும்” என்னும் உலக நியதி நம்மில் பிரமாண்டங்களைத் தவிர்க்கவும்,அற்பத்தன்மையைக்கொண்டாடவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது.இன்றைய ஒரு ‘ கோவித்-19’ ஐக் கண்ணைமூடி நம் மனக்கண் முன் கொண்டுவந்தால் போதும் நம் அத்தனை அருமை,பெருமைகளும் தவிடுபொடியாகிவிடும். இவற்றை தன் வாழ்வில் உணர்ந்ததாலே தாவீது தன் மன உணர்வை பிரதிபலிக்கும்....
    “ஆண்டவரே! என் உள்ளத்தில்......... என்னகத்தே அமைதியாயுள்ளது” என்னும் வரிகள் நம்மை மீண்டும் குழந்தைப்பருவத்திற்கு இட்டுச்செல்கின்றன.
    இன்றையப் பதிவில் விவிலிய வரிகளைக்காட்டிலும் என் மனத்திற்கு நெருக்கமாகப்பட்டது....”பாரி தன்னை அண்டிவந்தவர்களில் தன்னைக்கண்டான்; ஆனால் சேர,சோழப்பாண்டியரோ மற்றவர்கள் தங்களைக்காண வேண்டும் எனும் துடிப்பில் இருந்தனர்” எனும் வரிகளே!
    மலைப்பூட்டும் நிகழ்வுகள்...பெயர்கள்....அத்தனையையும் கோர்வையாக, வாசிப்பவரின் மனத்தில் சிம்மாசனமிட்டு அமரும் அளவிற்குத் தரும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!
    இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete