Sunday, July 26, 2020

பயன்படாத இடைக்கச்சை

இன்றைய (27 ஜூலை 2020) முதல் வாசகம் (எரே 13:1-11)

பயன்படாத இடைக்கச்சை

இரண்டு நாள்களுக்கு முன் எங்களுடைய உணவறையில், 'நாம் இடைஞான் கயிறு' அல்லது 'அரைஞான் ஞாயிறு' அல்லது 'அண்ணாக்கயிறு' அணிவது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடை கூறினர்.

கொரோனா காலத்து லாக்டவுன் சீக்கிரம் முடியவில்லை என்றால், 'நமக்கு ஏன் தோல் இருக்கிறது?' 'நமக்கு ஏன் கால் இருக்கிறது?' என்றுகூட கேள்விகள் எழலாம்.

'வேஷ்டி அல்லது ஆடைகள் இடுப்பை விட்டு நீங்காமல் இருக்க'

'வயலில் வேலை பார்க்கும்போது பாம்பு கடித்தால், உடனடியாக அறுத்து, கடித்த இடத்தின்மேல் கட்டிக் கொள்ள'

'குடலிறக்கம் நோய் வராமல் தடுக்க'

'எதிரியைக் கொலை செய்ய'

இப்படி நிறைய விடைகள் எழுந்தன.

இன்றைய முதல் வாசகத்தில், 'நார்ப் பட்டாலான கச்சை' என்ற பொருளை வைத்து ஒரு முக்கியமான பொருளை விளக்குகிறார் ஆண்டவர்.

அதற்கு முன், இன்று, தூத்துக்குடி போன்ற சில மறைமாவட்டங்களில் தவிர, வேறு எங்கும் அருள்பணியாளர்கள் கச்சை கட்டுவதில்லை. மறைமாவட்ட அருள்பணியாளர்கள் சிகப்பு நிற கச்சையைத் தங்கள் அங்கியின்மேல் அணிகின்றனர். சில துறவற சபையினர் வெள்ளை, அல்லது கறுப்பு, அல்லது நீலம் அணிகின்றனர். பிரான்சிஸ்கன் சபையினர், முடிச்சுகள் இட்ட வெள்ளைக் கயிற்றை அணிகின்றனர். சி.எஸ்.ஐ மற்றும் லூத்தரன் சபையினர் கறுப்பு கயிற்றை அணிகின்றனர். ஆயர்கள் பிங்க், கர்தினால்கள் சிகப்பு, மற்றும் திருத்தந்தை வெள்ளை நிறத்தில் கச்சை அணிகின்றனர். இடுப்பில் கட்டப்பட்டு, ஒருவரின் இடது பக்கம் வழியாக, அவருடைய முழங்காலுக்குக் கீழே தொங்குவதுதான் கச்சை.

சிலர், மேயர்கள், மாவட்ட ஆட்சியர்களின் காவலர்கள், மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அணிவகுக்கும் அழகியர் போன்றவர்கள் கச்சையை, தோளிலிருந்து உடலின் குறுக்காக அணிவர்.

மற்றவர்கள், பெல்ட் அணிகிறோம். பெல்ட்களில் பல வகை உண்டு. கிராமங்களில், பெல்ட்டோடு இணைந்த வேலட்டை, முரட்டு மீசை வைத்த பெரியவர்கள் அணிந்திருப்பார்கள். இப்படியே போனால், ஆராய்ச்சி வேறு திசையில் சென்றுவிடும் என்பதால் சற்றே நிறுத்திக்கொள்வோம்.

'நீ உனக்காக நார்ப் பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக்கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே' என்று எரேமியாவுக்குக் கட்டளையிடுகிறார் ஆண்டவர். அதாவது, ஒரு முறை மட்டும் பயன்படுத்து. மீண்டும் அதைத் துவைக்க வேண்டாம் என்கிறார் ஆண்டவர்.

'இப்போது, எழுந்து பேராத்து ஆற்றுக்குச் செல். அங்கு, அந்தக் கச்சையைப் பாறை இடுக்கில் மறைத்து வை.'

அப்படியே செய்கின்றார் எரேமியா. பல நாள்கள் கழிகின்றன.

'இப்போது போய் அதை எடுத்து வா' என்றார்.

'அந்தக் கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது'

...

'இவ்வாறே, யூதா, எருசலேமின் ஆணவத்தை ஒழிப்பேன் ... அவர்கள் இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள் ... கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன் ...'

இரண்டு விடயங்களைச் சொல்கிறார் ஆண்டவர்:

(அ) கச்சை ஒருவருக்கு மதிப்பு கொடுக்கிறது. ஆனால், அதே மதிப்பு ஆணவமாக மாறிவிட்டால், அந்த ஆணவம் தவறு செய்வதற்கும், சிலைகளை வழிபடுவதற்கும் பயன்பட்டால், கச்சை பயனற்றதாக்கப்படுகிறது.

(ஆ) கச்சை நெருக்கத்தின் உருவமாக அமைகிறது.

இரண்டிலுமே, கட்டுபவரைப் பொருத்தே கச்சையின் மதிப்பு இருக்கிறது. ஆக, கட்டுகிறவரை விட, அது தன்னை ஒருபோதும் மதிப்புக்குரியதாகக் கருதிக்கொள்ள முடியாது. மேலும், பளபளப்பாய் இருக்கும் அது விரைவில் பயனற்றதாய்ப் போய்விடும் ஆபத்தும் இருக்கிறது.

இன்று, என் மதிப்பு எது எனக் கருதுகிறேன்?

என் மதிப்பு, ஆணவமாகிப் போகும் அபாயம் இருக்கிறதா?

ஆண்டவருடன் நான் கச்சை போல நெருக்கமாக இருக்கிறேனா?


1 comment:

  1. கிட்டத்தட்ட நம் நினைவுகளை விட்டு நீங்கிப்போன ‘ அரைஞான் கயிறு’ மற்றும் ‘கச்சை’ குறித்துப் பேசுகிறார் தந்தை.எந்தப்பொருளுக்குமே அதை உபயோகிப்பவரையும்,உபயோகப்படுத்தும் விதத்தையும் பொருத்தே அதன் மதிப்பு கூடுகிறது அல்லது குறைகிறது.இந்தக் கச்சையைப் போலத்தான் நானும் என்று உணர்த்தப்படுகிறேன்.என்னுள் உறையும் இறைவனுடன் நான் நெருக்கமாயுள்ளேனா? இல்லை அவர் கண்களை விட்டுக் காத தூரம் ஒளிந்து நிற்கும் பயனற்ற கச்சையாய்ப் போனேனா? என் மதிப்பைக்கூட்டுவது என் இறைவனுடனான என் நெருக்கமா? இல்லை ‘நானே எல்லாம்’ எனத் தலைவிரித்தாடும் ஆணவமா? யோசித்து விடைகண்டு பயணிக்கும் பாதையை மாற்ற அழைப்பு விடுக்கும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete