Friday, July 3, 2020

முந்தைய நன்னிலை

இன்றைய (4 ஜூலை 2020) முதல் வாசகம் (ஆமோ 9:11-15)

முந்தைய நன்னிலை

நாம் வாங்கும் எல்லா மின்னணு சாதனங்களிலும் இப்போது 'ரீஸெட்' ('reset') அல்லது 'ரிஸ்டோர்' ('restore') என்ற ஒரு பட்டன் ஒன்று. நம் அலைபேசிகளிலும், 'ரிஸ்டோர் டு ஃபேக்டரி ஸெட்டிங்க்ஸ்' என்ற ஆப்ஷன் உண்டு. அதாவது, நாம் தவறுதலாக ஏதாவது செய்துவிட்டாலோ, அல்லது நாம் கொடுக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப அவை செயல்படவில்லை என்றாலும், அல்லது அதிகமான சூடு மற்றும் அழுத்தத்தால் அவை இயங்காமல் போனாலும், நாம் அதை 'ரீஸெட்' செய்துகொள்ளலாம். கணிணியில் நாம் சேமிக்கும் ஒவ்வொரு கோப்பிற்கும் 'ரிஸ்டோர் வாய்ப்பு' உண்டு. நான் இப்போது ஏதோ ஒரு கோப்பில் தவறுதலாக ஒரு செயலைச் செய்துவிட்டால், நான் மதியம் 12 மணிக்கு அந்த கோப்பு இருந்ததுபோல ரிஸ்டோர் செய்துகொள்ளலாம்.

வாழ்க்கையில் அப்படி ரிஸ்டோர் பட்டன் இருந்தால் நன்றாக இருக்குமா?

நம் உறவுநிலைகளில் ஏதாவது ஒரு இடத்தில் நெரிசல் ஏற்பட்டு, நாம் திடீரென நின்றுவிட நேரும்போது, நாம் முதன்முதலாகச் சந்தித்த அந்த நாளில் இருந்து மீண்டும் தொடங்குவோமா? என்ற கேள்வி வருகிறது. அதாவது, நாம் இதுவரை பெற்ற எல்லா நல்ல, கெட்ட அனுபவங்களையும் முற்றிலும் அழித்துவிட்டு மீண்டும் தொடங்க முனைதல்.

அல்லது நாம் செய்யும் வியாபாரத்தில் முழுவதும் இழக்கின்ற ஒரு நிலை வரும்போது, மீண்டும் ஜீரோவிலிருந்து தொடங்கினால் என்ன என நாம் எண்ணுகிறோம்.

கணிணி மற்றும் செயல்திறன் பேசிகளில் இருப்பதுபோல வாழ்க்கை நம்மை முழுவதும் ரீஸெட் அல்லது ரிஸ்டோர் செய்ய அனுமதிப்பதில்லை. ஆனாலும், அப்படிச் செய்து வாழ்ந்து வெற்றி கண்டவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில் ஆமோஸ் இறைவாக்கினர், ஆண்டவராகிய கடவுள் பயன்படுத்தப்போகும் 'ரீஸெட் பட்டன்' பற்றிப் பேசுகின்றார். அசீரியர்கள் படையெடுத்து இஸ்ரயேலே அழித்துவிடுகின்றனர். இஸ்ரயேல் மக்களின் நாடு, நகரம், வீடு, தோட்டம், தொழிற்சாலை அனைத்தும் அசீரியர்களால் அழிக்கப்படுகின்றன அல்லது கவர்ந்துசெல்லப்படுகின்றன. அனைத்தையும் இழந்து, குழப்பமான நிலையில் அவர்கள் இருக்கும்போது, ஆண்டவராகிய கடவுள் நேர்முகமான செய்தியை ஆமோஸ் வழியாகத் தருகின்றார்:

'என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டு வருவேன். அவர்கள் பாழடைந்த நகர்களைத் திரும்பக் கட்டிக் குடியேறுவார்கள். திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் கனிரசத்தை அருந்துவார்கள். பழத் தோட்டங்கள் அமைத்து அவற்றின் கனிகளை உண்பார்கள்.'

முந்தைய நன்னிலைக்குத் திரும்ப இவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 9:14-17) அதற்கான விடையைத் தருகின்றது: 'புதிய மதுவைப் புதிய தோற்பையில் ஊற்றி வைக்க வேண்டும்.'

அதாவது, பழையதை மீண்டும் நினைவுகூரவோ, அதைத் திரும்ப திரும்ப நிகழ்காலம் என்னும் தோற்பையில் ஊற்றிக்கொண்டே இருக்கவோ கூடாது. பழைய மதுவை அப்படியே விலக்கிவிட்டு, புதிய மதுவைக் கைகளில் ஏந்தி, நாம் இருக்கும் இடம் மற்றும் நேரம் என்னும் தோற்பையில் ஊற்ற வேண்டும்.

பழையதை இழக்கத் துணிந்த ஒருவரால் மட்டுமே நன்னிலைக்குத் திரும்பி வர முடியும்.

பழைய தீநுண்மியும் கணிணியில் வேண்டும், புதிய மென்பொருளும் வேண்டும் என்றால் சாத்தியமல்ல. பழையது களைதல் புதியது புகுவதற்கான வழி.

அதற்கு இறைவன் என்றும் துணை. ஏனெனில், அவர் பழையதையும் புதியதையும் அறிபவர்.

1 comment:

  1. அழகான வாழ்க்கைப்பாடம். வாழ்க்கை நல்லதும்,கெட்டதுமாகப் பல வாழ்க்கைப்பாடங்களை நமக்குப்புகட்டிக்கொண்டேதான் இருக்கிறது. நமது எண்ணங்களே( will power) நமக்கு ரீசெட் பட்டன்களாக மாறும் பட்சத்தில் நம்மாலும் வெறுக்கத்தக்க நிகழ்காலத்தைப் புறந்தள்ளி நம் பசுமைமிகு இறந்தகாலத்தைப் புதுப்பிக்க வழி சொல்லும் ஒரு பதிவு.பழைய மதுவை விலக்கவும்,புதிய மதுவைக் கைகளில் ஏந்தி யாம் இருக்கும் இடம்,மற்றும் தோற்பையில் ஏற்ற வேண்டுமெனும் தந்தையின் குரலுக்கு செவி மடுப்போம்.அதற்கு நம் கடந்த மற்றும் நிகழ்காலத்தை அறிந்த இறைவன் துணை நிற்பார் எனும் தந்தையின் குரல் ஆறுதல் தருகிறது.
    கூடவே “கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை”எனும் பழமொழி நினைவிற்கு வருகிறது. நல்ல விஷயங்களை செதுக்கித்தரும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete