நல்லது எது
மீக்காவின் காலத்து மக்கள் கடவுளுக்கு எதிராக வழிதவறி நடக்கிறார்கள், சிலைவழிபாடு செய்கிறார்கள், குழந்தைகளையும் பலி கொடுக்கின்றனர். இவர்களுக்கு எதிராக மீக்கா இறைவாக்குரைத்த போது, ''நல்லது எது?' என்று எங்களுக்குத் தெரியாது. ஆகவே, எங்களுடைய அறியாமையால் நாங்கள் இப்படிச் செய்கிறோம்' என்கின்றனர். அவர்களின் கேள்விக்கு, அவரே ஒரு கேள்வி வழியாக விடையளிக்கின்றார்:
'ஓ மானிடா! நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?'
மூன்று விடயங்கள் மட்டும் போதும் என்றும், அந்த மூன்று விடயங்களில் நல்லது அனைத்தும் அடங்கியுள்ளது என்றும் சொல்கிறார் மீக்கா:
அ. நேர்மையைக் கடைப்பிடித்தல் (Act Justly)
ஆ. இரக்கம் கொள்வதில் நாட்டமாயிருத்தல் (Love Tenderly)
இ. கடவுள்முன் தாழ்ச்சியோடு நடத்தல் (Walk Humbly With/Before the Lord)
பழைய தமிழ் மொழிபெயர்ப்பில், 'நீதியோடு நடத்தல், அன்பு கூர்தல், உன் கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடிருத்தல்' என்று சொல்லப்பட்டுள்ளது.
மேற்காணும் மூன்றும், இறைவனை நோக்கிச் செல்லும் படிக்கட்டுக்களாக உள்ளன.
முதலில், எனக்கும் எனக்குமான உறவுநிலையில், வாழ்க்கை முறையில், நான் 'நேர்மையை' கடைப்பிடிக்க வேண்டும். 'நேர்மை' என்பது 'நேர்கோடு.' இப்படியும் அப்படியும் இருப்பதும், வளைந்து வளைந்து செல்வதும் நேர்மை அல்ல. ஒரு சூழலில் நான் இருந்தால், அங்கே நான் எப்படி நடத்துப்படுவதை விரும்புவேன் என்று நினைத்து, அதையே நான் மற்றவருக்கான அளவுகோலாக நிர்ணயிப்பதுதான் நேர்மை.
இரண்டு, எனக்கும் பிறருக்குமான உறவுநிலையில், வாழ்க்கை முறையில், நான் 'இரக்கம் காட்டுவதற்கு விருப்பம் கொள்ள வேண்டும்.' அன்பு அல்ல, மாறாக, அன்பிரக்கமே கடவுளின் செய்தியாக இங்கே தரப்பட்டுள்ளது. அன்பு செய்வதற்கான தொடக்கநிலையே இரக்கம். இரக்கம் இல்லாத ஒருவர், மற்றவர்மேல் அன்பு செலுத்த இயலாது.
மூன்று, எனக்கும் இறைவனுக்குமான உறவுநிலையில், வாழ்க்கை முறையில், நான் 'தாழ்ச்சி கொண்டு இறைவன்முன் நடக்க வேண்டும்.' 'இறைவனோடு நடத்தல்' என்றும் இச்சொல்லாடலை மொழிபெயர்க்கலாம். தாழ்ச்சி உடையவர் மட்டுமே இறைவனோடு நடக்க முடியும். ஏனெனில், இறுமாப்பும், பெருமையும், ஆணவமும் கொண்டிருக்கும் உள்ளம் தன்னை முதன்மைப்படுத்தி, இறைவனைத் தள்ளிவிடும். படைப்பு நிகழ்வில், தாழ்ச்சி உள்ளவரை ஆதாம் கடவுளோடு உலாவ முடிந்தது. ஆனால், ஆண்டவருக்கு எதிராக தங்களுடைய ஆணவத்தால் பாவம் செய்த அந்த நொடியிலிருந்து அவர் ஆண்டவர் திருமுன் நிற்க முடியாமல் மறைந்துகொள்கின்றார்.
மேற்காணும், மூன்று விடயங்களை, அருள்பணியாளர்கள் மற்றும் துறவியரின் மூன்று வார்த்தைப்பாடுகள் என்றும் புரிந்துகொள்ளலாம். நேர்மையாக நடத்தல் என்பது அனைத்தையும் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் எளிமை அல்லது ஏழ்மைiயும், அன்பிரக்கம் காட்டுதல் என்பது அனைவரையும் அன்பு செய்யத் தூண்டும் கற்பு அல்லது கன்னிமையையும், தாழ்ச்சி கொண்டு இறைவன்முன் நடத்தல் என்பது கீழ்ப்படிதலையும் குறிக்கிறது.
பத்துக் கட்டளைகளை நாம் நினைவில்கொள்ளவோ, வழிபாடுகள் பற்றிய முறைமைகளை அறிந்திருக்கவோ, விவிலியம் முழுவதும் அறிந்திருக்கவோ, திருஅவைச் சட்டம் பற்றித் தெரிந்திருக்கவோ நமக்கு அவசியமில்லை.
ஏனெனில், நல்லது எது என்பதை மிக எளிமையாக, மீக்கா வழியாகச் சொல்லிவிட்டார் ஆண்டவராகிய கடவுள்.
பத்துக்கட்டளைகளை நாம் நினைவில் கொள்ளவோ,வழிபாடு, திருச்சட்டம், விவிலியம் பற்றி முழுமையாகத் தெரிந்திருப்பதோ தேவையில்லை எனக்கூறும் தந்தை, அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். நேர்மையாக நடத்தலைக்கூறும் பகிர்தல் அல்லது ஏழ்மையையும், அன்பிரக்கத்தைத் தூண்டும் கற்பு அல்லது கன்னிமையையும், இறைவன் முன் நம் தாழ்ச்சியை வெளிப்படுத்தும் கீழ்ப்படிதலையும் மீக்கா வழியாகச் சொல்லிவிட்டாராம் நமதாண்டவர்.
ReplyDeleteமனித ஜாதியின் முன் இல்லறத்தாரென்ன...துறவரத்தாரென்ன? அனைவரும் சமம்தானே! கொஞ்சம் dry subject போலத்தெரியலாம்...என்றாலும் மனித மனத்தில் ஈரத்தைக்கொண்டு வருவது இந்த நேர்மை,இரக்கம்,தாழ்ச்சி போன்ற பண்புகள் தானே! தந்தைக்கு நன்றிகள்!