ஆண்டின் பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு
1 அரசர்கள் 3:5,7-12
உரோமையர் 8:28-30
மத்தேயு 13:44-52
புதையல்
'பட்டினத்தார்' என்று பலரால் அறியப்படுகின்ற, கி.பி. 10 முதல் 12ஆம் நூற்றாண்டுகளில், காவேரிபூம்பட்டினத்தில் வாழ்ந்த, திருவெண்காடர் என்னும் இரண்டாம் பட்டினத்தாரின் வாழ்வில் நடந்த நிகழ்வு இது. குழந்தை பாக்கியம் இல்லாத அவர், பக்கத்து ஊரில் பிறந்த ஒரு குழந்தையை, எடைக்கு எடை தங்கம் கொடுத்து வாங்கிக்கொள்கின்றார். அவரும் அவருடைய மனைவியும், அக்குழந்தைக்கு, 'மருதவாணன்' என்ற பெயர் சூட்டி பாசமழை பொழிகின்றனர். குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, இளவல் ஆகின்றார். தான் செய்த கடல் வாணிகத்திலேயே தன் இளவலையும் ஈடுபடுத்துகின்றார் திருவெண்காடர். ஒருமுறை மருதவாணன் தன்னுடைய நண்பர்களுடன் கடல் வாணிபத்திற்குச் செல்கின்றார். ஏறக்குறைய ஆறு மாதங்கள் வாணிபத்தில் ஈடுபட்டு, அனைவரும் ஊர் திரும்புகின்றனர். மகன் ஊர் திரும்பிய செய்தி, கடையில் வியாபாரத்தில் அமர்ந்திருந்த திருவெண்காடருக்குத் தெரிவிக்கப்படுகின்றது. மகனைக் காணத் தெருவில் ஓடி வருகின்றார். வழியில் அவரைக் கண்டவர்கள் எல்லாம், 'உன் மகனுக்கு பித்து பிடித்துவிட்டது. எங்கள் பிள்ளைகள் எல்லாம் தங்கமும் வெள்ளியும் கொண்டுவர, உன் மகனோ சாண எருக்களைத் தட்டுக்களாகக் கொண்டுவந்திருக்கிறான்' என்கின்றனர். வீட்டிற்கு ஓடி வந்த திருவெண்காடர், தன் வாசலில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மூடைகளை ஆவலோடு திறந்து பார்க்க, அங்கே சாண எருக்களே இருக்கின்றன. வீட்டிற்குள் செல்கின்றார். ஆறு மாதகாலம் பிரிந்திருந்த மகனை ஆரத் தழுவாமல், சாண எருக்கள் பற்றி முறையிட்டு, அவருடன் சண்டையிடுகிறார். மகனைக் கடிந்துகொண்ட அவர் மீண்டும் கடைக்குத் திரும்புகிறார். சற்று நேரத்தில், 'உடனே வாருங்கள்!' என்று மனைவி செய்தி அனுப்ப, வீட்டிற்கு வருகின்றார் திருவெண்காடர். வீட்டின் உள்ளே விலையுயர்ந்த முத்துக்களும், வைரங்களும், மாணிக்கங்களும் கொட்டிக் கிடக்கின்றன. 'இவை எப்படி?' என்று அவர் கேட்க, 'எல்லாம் மருதவாணன் கொண்டுவந்த மூடைகளில் இருந்தவை. யாரும் திருடிவிடா வண்ணம் அவற்றை அவர் எருக்களில் மறைத்து வைத்திருக்கின்றார்' என்று மனைவி பெருமிதம் கொள்கிறார். 'ஐயோ! அவன் எங்கே! என் மகன் எங்கே!' என்று ஒவ்வொரு அறையாக வீட்டிற்குள் தேடுகின்றார். மகன் இல்லை. அந்த நேரத்தில், அவரிடம், மனைவி ஒரு ஓலைச்சுவடியைக் கொடுக்கின்றார். 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என்று அந்தச் சுவடியில் எழுதப்பட்டிருக்கிறது. மருதவாணன் மறைந்துவிடுகிறார். அப்போதுதான், திருவெண்காடருக்குத் தெரிகிறது, தன் மகனாக இவ்வளவு நாள்கள் தன்னுடன் இருந்தது சிவபெருமான் என்று. சிவபெருமானே, தன் மகனாக வந்து, 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என்று சொல்லித் தன்னைத் துறவிற்கு அழைக்கிறார் என உணர்ந்த அவர், அந்த நொடியே துறவு பூணுகின்றார்.
'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என்னும் வாக்கியத்திற்கு இரு பொருள்கள் உண்டு. ஒன்று, 'காதற்ற ஊசி' 'கடைத் தெருவில்' விலை போகாது. இரண்டு, 'காதற்ற ஊசி கூட உன் வாழ்வில் கடைசிவரை அல்லது உன் கடைசிப் பயணமான விண்ணகப் பயணத்தோடு உடன் வராது.'
இவ்வாறாக, பொருள்களின் நிலையாமை மற்றும் பயனின்மையை பட்டினத்தாருக்கு வெளிப்படுத்துகின்றார் சிவபெருமான்.
திருவெண்காடர் என்ற பட்டினத்தாருக்கு,
குழந்தை இல்லாத போது, மகன், 'புதையலாக' தெரிந்தான்.
கடல்வாணிகம் முடித்து அவன் திரும்பியபோது, அவன் நுட்பமாகக் கொணர்ந்த, முத்துக்கள், 'புதையலாக' தெரிந்தன.
'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என அறிந்தவுடன், இறைவன் மட்டுமே 'புதையலாக' தெரிகின்றார்.
நம் வாழ்வின் புதையலை, அடையாளம் காணவும், ஆய்ந்து பார்க்கவும், தேர்ந்து தெளியவும், விரும்பி வாங்கவும் நம்மை அழைக்கின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.
'இறைவனும் இறைவன் சார்ந்தவை மட்டுமே புதையல்' என்பதை எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லாமல் முன்வைக்கின்றன வாசகங்கள். ஆக, என் புதையல் எது என்பதை நான் வரையறுக்க வேண்டியதில்லை. அது ஏற்கனவே வரையறுத்தாயிற்று. நான் செய்ய வேண்டியதெல்லாம், அதை அடையாளம் காண்பதும், ஆய்ந்து பார்ப்பதும், தேர்ந்து தெளிவதும், விரும்பி வாங்குவதும்தான்.
எப்படி?
இன்றைய முதல் வாசகம் (காண். 1 அர 3:5,7-12), கடவுள், சாலமோனுக்குக் கனவில் தோன்றிய நிகழ்வைத் தாங்கி நிற்கிறது. சாலமோன், மிகவும் இக்கட்டான நிலையில் ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராகின்றார். தாவீது முதுமைப் பருவம் அடைகின்றார். அவருடைய முதுமைப் பருவத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கின்ற அவருடைய மகன் அதோனியா, 'நானே அரசனாவேன்' எனச் சொல்லி, தனக்கென ஒரு குழுவைக் கூட்டி, தன்னை அரசனாக்கிக் கொள்கின்றான். இந்நிலையில்தான், பத்சேபா, நாத்தானுடன் இணைந்து அரசியல் செய்து, தன் மகன் சாலமோனை அரசனாக்குகிறாள். இந்த நிகழ்வில் மிகவும் பரிதாபத்துற்குரியவராக தாவீது இருக்கிறார். அதாவது, தான் செய்த அந்த ஒற்றைத் தவற்றுக்காக, இறுதிவரை துன்பம் அனுபவிக்கின்றார். பத்சேபாவும் இந்த நிகழ்வில், மிகப்பெரிய சந்தர்ப்பவாதியாக மாறுகிறாள். 'வாழ்வில் எதுவும் இலவசம் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது' என்று உணர்கின்ற தாவீது, தான் தழுவிய பத்சேபாவின் பொருட்டு, மிகவும் வேதனைப்படுகின்றார். பாவம்! பரிதாபத்திற்குரியவர் அவர்! இறுதியில் அனைவரும் அவரைப் பயன்படுத்திக்கொள்கின்றனர், அல்லது பயமுறுத்திக் கொல்கின்றனர்! தாவீதை விட்டுவிட்டு, சாலமோனிடம் வருவோம்.
சாலமோன் அரசனானபோது அவருக்கு வயது ஏறக்குறைய 15 முதல் 20 அல்லது, அதற்கும் குறைவாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், தான் அரசனானவுடன் இரண்டு நற்காரியங்கள் செய்கின்றார். ஒன்று, கிபயோனுக்குச் சென்று ஆண்டவருக்குப் பலி செலுத்துகின்றார். இப்படிச் செலுத்தியதன் வழியாக, தன்னை அரசனாக ஏற்படுத்திய ஆண்டவராகிய கடவுளுக்கு, தன் தந்தையைப் போல, பிரமாணிக்கமாக இருந்து, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதாக வாக்களிக்கின்றார். இரண்டு, நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ, எதிரிகளின் சாவையோ ஆண்டவரிடம் வரமாகக் கேட்காமல், ஆண்டவராகிய கடவுளின் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை வரமாகக் கேட்டுப் பெற்றுக்கொள்கின்றார். இவ்விரண்டு நற்காரியங்களிலும், சாலமோன், ஆண்டவரை, தன்னுடைய புதையலாக, முதன்மையாக, முழுமையாக, முறைமையாகத் தெரிந்துகொள்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 13:44-52), விண்ணரசு பற்றிய மூன்று, குட்டிக் குட்டி உவமைகளை வாசிக்கின்றோம். முதல் இரண்டு உவமைகளும் விண்ணரசு பற்றியதாக மட்டும் இருக்க, இறுதி உவமை, விண்ணரசு பற்றியதாகவும், இறுதிக்கால நிகழ்வு பற்றியதாகவும் இருக்கிறது.
நிலத்தில் புதையலைக் கண்டுபிடித்த ஒருவர், அந்தப் புதையலை மட்டும் எடுத்துச் செல்லாமல், அல்லது அந்தப் புதையல் இருக்கும் இடத்தை மட்டும் விலைக்கு வாங்காமல், தமக்குள்ள யாவற்றையும் விற்று, அங்கிருந்து கருவேல மரங்கள், முட்செடிகள், கட்டாந்தரை என முழுமையான நிலத்தையும் வாங்கிக்கொள்கின்றார். நிதி மேலாண்மை என்ற அடிப்படையில் பார்த்தால் அவர் செய்தது மடைமையாகத் தெரிகின்றது. ஆனால், நிறையப் புதையல்கள் அந்த நிலத்தில் இருக்கலாம் என நம்பிக்கை பார்வை கொண்டிருக்கிறார் அவர். மேலும், புதையலைக் கண்ட நொடியில் அவர் கணக்குப் போட்டுப் பார்க்கின்றார். தன்னிடம் ஏற்கனவே உள்ள சொத்தின் மதிப்பைவிட, இதன் மதிப்பு உயர்ந்தது என்று அறிந்தவுடன்தான் தன் உடைமைகளை விற்கத் துணிகின்றார். அல்லது, சேமித்து வைத்த காசு எல்லாம் செல்லாக் காசு ஆன கதையாகிவிட வாய்ப்பிருக்கிறது.
விலையுயர்ந்த முத்தைத் தேடி அலையும் வணிகரும் தமக்குள்ள அனைத்தையும் விற்கின்றார். முத்தை வாங்கிக்கொள்கின்றார். இப்படிச் செய்யும்போது அவர் 'இடர்வரவு' அல்லது 'மறையிடர்' ('ரிஸ்க்') எடுக்கின்றார். ஏனெனில், முத்தை வாங்கியபின், அது வெறும் பிளாஸ்டிக் பாசி என்று இருந்தால் என்ன செய்வது?
கடலில் வலை வீசும் ஒருவர், நல்ல மீன்களைக் கூடையில் சேர்த்து, கெட்ட மீன்களை வெளியே எறிகின்றார். ஏனெனில், கெட்டவற்றை நல்லவற்றோடு வைத்திருப்பது, இடத்தை அடைத்துக்கொள்வதோடு, சுமையாக இருப்பதோடு, இருக்கின்ற நல்ல மீன்களையும் கெடுத்துவிடும். ஆக, மெதுவாக அமர்ந்து, பொறுமையுடன், நேரம் எடுத்து, கெட்டவற்றிலிருந்து நல்லவற்றைப் பிரித்தெடுக்கின்றார்.
புதையல், முத்து, நல்ல மீன்கள் என்னும் மூன்றுமே புதையல்கள்தாம். அவற்றை ஒருவர் முழுமையாக வாங்க வேண்டும் (நிலம் போல), முதன்மையாகத் தேட வேண்டும் (முத்து போல), முறைமையாகப் பிரித்தெடுக்க வேண்டும் (நல்ல மீன்கள் போல).
மேலும், மேற்காணும் புதையல்களைப் பெற, ஒருவர், (அ) சரியாகக் கணக்கிட அல்லது மதிப்பிட வேண்டும், (ஆ) மறையிடர் ('ரிஸ்க்') எடுக்க வேண்டும், (இ) தேர்ந்து தெளிந்து, தெரிவு செய்ய வேண்டும்.
புதையல்களைப் பெறுவது எளிதா? எளிதல்ல.
பட்டினத்தாரிடம் வந்த சிவபெருமான்போல, கடவுள் நம்மிடம் வருவதில்லை. சாலமோனுக்குக் கனவில் தோன்றியது போல நமக்குத் தோன்றுவதில்லை. பின் எப்படித்தான் புதையலைப் பெறுவது?
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 8:28-30) நமக்கு விடை சொல்கிறது. 'தூய ஆவி அருளும் வாழ்வு' என்னும் பகுதியை நிறைவு செய்கின்ற பவுல், 'சினர்ஜி' ('ஒருங்கியக்கம்' அல்லது 'கூட்டொருமை') மிக அழகான மேலாண்மையியல் சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார்: 'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.' அல்லது ஆவியார் அனைத்தையும் 'ஒருங்கியக்கம்' செய்கிறார். ஆக, நாம், நம்முடைய புதையலை, முழு மூச்சோடு தேடினால், இந்த உலகமே நமக்கு ஒத்துழைக்கும். அந்தப் புதையல் எதுவாக இருந்தாலும்!
எடுத்துக்காட்டாக, வாடகைக்கு வீடு தேடிப் போகிறோம். ஒரு வீடும் அமைவதில்லை. நாம் எதிர்பாராத நேரத்தில், திடீரென நாம் சந்திக்கும் ஒருவர் வழியாக அந்த வீடு நமக்குக் கிடைக்கிறது. நிலம் வாங்க வேண்டும் என நினைக்கிறோம். ஒன்றும் அமையாமல் இருக்கின்றது. திடீரென எல்லாம் கைககூடுகிறது. பெண் பார்க்க, திருமணம் முடிக்க, குழந்தை பிறக்க என எல்லா மங்களகரமான நிகழ்வுகளும் நமக்குத் திடீரென கைகூடுகின்றன. இதைத்தான், 'ஆள் செய்யாததை நாள் செய்யும்' என்கின்றனர் பெரியவர்கள். சபை உரையாளரோ, இதையே, 'கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்' (காண். சஉ 3:11) என்கிறார்.
நம்முள் இருக்கும் ஆவியாரோடு நாம் இணைந்துகொண்டு, கடவுளின் திட்டப்படி நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, நம் அன்றாட வாழ்வு நகர்ந்துகொண்டே இருந்தால் போதும், அவர் நமக்காக யாவற்றையும் செய்து முடிப்பார்.
மேற்காணும் வாசகங்களின் பின்புலத்தில் சில வாழ்வியல் சிந்தனைகள்:
(அ) தூக்கத்திலும் தெளிவு
சாலமோனுக்குக் கடவுள் தூக்கத்தில் தோன்றுகின்றார். ஆனால், தூக்கத்திலும் தெளிவாக இருக்கின்றார் சாலமோன். என் வாழ்வின் இலக்கு எனக்கு தெளிவாக இருக்கிறதா? தூக்கத்திலும், 'இதுதான் அது!' என்று நான் சொல்ல முடியுமா? அல்லது நேற்றைக்கு ஒரு பக்கம், இன்றைக்கு ஒரு பக்கம், நாளைக்கு இன்னொரு பக்கம் என நான் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றேனா?
(ஆ) மகிழ்ச்சி
புதையலைக் கண்டவர் மகிழ்ச்சியோடு தனக்குள்ளதை இழக்கின்றார். முத்தைக் கண்டவர் மகிழ்ச்சியோடு, தன் பழைய முத்துக்களை இழக்கின்றார். நல்ல மீன்களைக் கண்டவர், மகிழ்ச்சியோடு கெட்டவற்றை வெளியே வீசுகின்றார். இங்கே இரண்டு விடயங்கள்: எனக்கு எது மகிழ்ச்சி தருகிறதோ அதுவே என் வாழ்வின் புதையல். இன்பம் தருவது அல்ல. இன்பம் சில நிமிடங்களில் மறைந்துவிடும். மகிழ்ச்சி தராதவை அனைத்தும் சுமைகளாக மாறிவிட வாய்ப்பு உண்டு. வெறும் சாண எருக்களை சாக்கு மூடைகளில் பார்த்த திருவெண்காடருக்கு முதலில் அவை தேவையற்ற சுமைகளாகவே தெரிந்தன. ஆனால், அவற்றை உடைத்து முத்துக்களைக் கொட்டியபின்தான் அவை புதையல் என்று அவருக்குத் தெரிகின்றது. இரண்டு, மகிழ்ச்சியை நான் அடைய, இன்பத்தை இழக்க முன்வர வேண்டும். நன்முத்தைப் பெற, பிறமுத்துக்களை இழக்க வேண்டும். அப்படி இழக்காமல் நான் நன்முத்தை உரிமையாக்க முடியாது. நன்முத்து வந்தவுடன், பிறமுத்துக்களுக்கு மதிப்பில்லை. மதிப்பற்றவற்றை நான் ஏன் தூக்கித் திரிய வேண்டும்? வீடு காலியாக இருக்கிறது என்பதற்காக, வைக்கோலை அதில் நிரப்பலாமா?
(இ) ஆவியாரோடு இணைந்திருத்தல்
எந்த நேரமும் நான் என்னுடைய தொப்புள்கொடியை எனக்கு மேல் இருக்கின்ற இறையோடு இணைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவரிடம்தான் என் முதல் உறவு தொடங்கியது (காண். எபே 1:4). இந்த உலகில் நான் புதையல்களைக் காணுமுன் எனக்குப் புதையலாக இருந்தவர் அவர். இந்த உலகின் புதையல்கள் மறைந்தவுடன், 'காதற்ற ஊசிகளாக' அவை கரைந்தவுடன், என் புதையலாக இருப்பவர் அவரே.
இறுதியாக, பதிலுரைப்பாடலில் (காண். திபா 119), ஆசிரியர் கூறுவதுபோல, 'ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு!' என்று முதன்மையாக, முழுமையாக, முறைமையாக, அவரைப் பற்றிக்கொள்தல் நலம்!