உண்மையில்
இயேசு தன் சீடர்களுக்காகச் செய்யும் இறைவேண்டல் தொடர்கிறது.
இன்றைய நற்செய்திப் பகுதியில், 'உலகு' என்ற வார்த்தையோடு இணைந்து, 'உண்மை' மற்றும் 'அர்ப்பணம்' என்னும் இரண்டு வார்த்தைகள் மேலோங்கி நிற்கின்றன. இந்த இரண்டு வார்த்தைகளைப் பற்றிச் சிந்திப்போம்.
அ. 'உண்மை'
கிரேக்கத்தில் 'அலெதேயா' என்று அழைக்கப்படுகிறது. இது, 'அ' மற்றும் 'லெதேயா' என்ற இரண்டு வார்த்தைகளின் கூட்டு. ஒரு பொருளை மறுப்பதற்கு 'அ' முன்னால் சேர்த்து எழுதுவது வழக்கம். தமிழிலும் இதுபோன்றே இருக்கிறது. 'மலா' அல்லது 'மலம்' என்றால் 'அழுக்கு'. ஆக, அழுக்கற்ற தன்மையைச் சுட்டிக்காட்ட, அ-மலா அல்லது அ-மலம் என்று சொல்கிறோம். 'ஞானி' என்றால் கடவுளை அறிந்தவர். அ-ஞானி அல்லது அஞ்ஞானி என்றால் கடவுளை மறுப்பவர்.
'லெதேயா' என்றால் 'மறைக்கப்பட்ட நிலை' அல்லது 'ஒளிவுமறை நிலை' அல்லது 'இருட்டு நிலை' என்பது பொருள். இதை மறுக்கும் விதத்தில், இந்த வார்த்தைக்கு முன் 'அ' இணைத்தால், 'மறைக்கப்படாத நிலை,' 'ஒளிவுமறை இல்லாத நிலை,' 'இருட்டு இல்லாத நிலை' என்று பொருள் கொள்ளலாம்.
ஆக, உண்மை என்றால் மறைக்கப்படாத, ஒளிவுமறை இல்லாத, இருட்டு இல்லாத நிலை.
இந்த நிலை சாத்தியமா என்றால் இல்லை?
எடுத்துக்காட்டாக, நம் மொழி இயல்பாகவே வரையறைக்குட்பட்டது. நம் வார்த்தைகளால் எல்லாவற்றையும் நம்மால் அடுத்தவர்களுக்குப் புரிய வைக்க முடியாது. 'எனக்கு தலை வலிக்கிறது' என்று நான் சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம். இந்த மூன்று வார்த்தைகளின் பொருளை நீங்கள், உங்களுக்கு ஏற்கனவே வந்த தலைவலியின் பின்புலத்தில் புரிந்துகொள்வீர்கள். ஆனால், தலை வலியை நீங்கள் அனுபவிக்கவில்லை என்றால், 'தலை எப்படி வலிக்கும்? நீ பொய் சொல்கிறாய்!' என்று என்னிடம் சொல்வீர்கள். ஆக, நம் மூளையில் ஏற்கனவே உள்ள வகையினங்களை முன்னிட்டே நாம் பொருள் கொள்ள முடியும்.
இயேசு சொல்லும் உண்மை என்ன?
அது மொழி சார்ந்த உண்மை அல்ல.
உண்மை என்பது நம் ஆன்மாவின் போராட்டம். இது ஒரு தொடர் போராட்டம். உண்மை என்பது இருத்தலோடு சமரசம் செய்யாத மனநிலை. உண்மை என்றால் நேர்மை. உண்மை என்பது வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும் உள்ள பொருந்துநிலை. உண்மை என்பது வெளிவேடமற்ற நிலை. உண்மை நலம் தரும். உண்மை இன்றி அன்பு சாத்தியம் இல்லை. இரகசியம் காப்பது வேறு, உண்மை பேசுவது வேறு. இரகசியம் காப்பதும் உண்மையே.
'உண்மை உங்களை விடுதலை செய்யும்' (யோவா 8:32) என்று இயேசு சொல்கிறார். என்னைப் பற்றி நான் தெரிந்துகொள்ளும் உண்மை என்னுடைய கட்டுக்களிலிருந்து விடுதலை செய்யும். உண்மை பேசுபவர் யாருக்கும் பயப்படத் தேவையில்லை, யார்மேலும் கோபப்படவோ, பொறாமைப்படவோ தேவையில்லை. அவர் தன்னைப் பற்றி தாழ்வு மனப்பான்மை கொள்ளமாட்டார். அவருக்குக் குற்றவுணர்வு இருக்காது. அவர் தன்னையே மற்றவர்களிடமிருந்து ஒதுக்கிக்கொள்ள மாட்டார். மற்றவர்கள் தன்னை நிராகரித்தாலும், ஒதுக்கி வைத்தாலும் அதைப் பற்றிப் பொருட்படுத்த மாட்டார். 'இதுதான் நான்' என ஏற்றுக்கொள்வார். இதுதான் விடுதலை.
இந்த விடுதலையைத் தான் இயேசு தன்னுடைய சீடர்கள் பெற வேண்டுமென்று விரும்புகிறார்.
ஆ. 'அர்ப்பணம்'
அர்ப்பணம் என்பது இங்கே தூய்மையாக்கப்படுவதைக் குறிக்கிறது. அர்ப்பணம் ஆக்கப்படும் எதுவும் தூய்மையாக்கப்படுகிறது என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். 'தூய்மை' என்பது 'அழுக்கற்ற நிலை' அல்லது 'தயார்நிலை.' தூய்மையான பாத்திரம் சமையலுக்கு தயாராக இருக்கிறது. தூய்மையான ஆடை அணிவதற்கு தயாராக இருக்கிறது. தூய்மையான இல்லம் வாழ்வதற்குத் தயாராக இருக்கிறது. தூய்மையான மனிதர் தனக்கும், பிறருக்கும், இறைவனுக்கும் தயாராக இருக்கிறார்.
ஆக, எந்த நிலையிலும் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
வாழ்வை நாம் ஒருமுறைதான் வாழ வேண்டும்.
எடுத்துக்காட்டாக, கோபமாகப் பேசி, பின் அதற்காக மன்னிப்பு கேட்கும்போது, வாழ்வை நாம் இரண்டு முறை வாழ்கின்றோம். நேரம் மற்றும் ஆற்றல் இரு முறை வீணாகிறது. ஆனால், கோபமாக நாம் பேசவே இல்லை என்றால், வாழ்வு ஒரே முறைதான் வாழப்படுகிறது. இதுதான் தயார்நிலை. இதுதான் தூய்மை நிலை.
நற்செயல்: 'உண்மை' மற்றும் 'தூய்மை' பற்றிய என் புரிதல் என்ன? இவற்றை நான் என் வாழ்வில் எப்படிப் பேணிக் காத்து வருகிறேன்? என்று கேட்பது.
தூய்மையான மனிதர் தனக்கும், பிறருக்கும்,
ReplyDeleteஇறைவனுக்கும், எந்த நிலையிலும்
தயாராக இருக்கிறார்.🙏
கோபத்தை அடக்கி ஒருமுறை வாழ அழைப்பு🤝
உலகின் மக்களான நாம் விண்ணின் மக்களாகவும் வாழத்தேவையான ‘உண்மை’ மற்றும் ‘அர்ப்பணம்’ குறித்த தந்தையின் விரிவாக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மட்டுமின்றி பொருள் செறிந்ததாகவும் உள்ளது.’ உண்மை’ என்பது இருத்தலோடு சமரசம் செய்யாத மனநிலை..அருமை!.கண்டிப்பாக ஒரு தொடர் போராட்டமின்றி இந்நிலையைத் தக்க வைத்தல் எளிதல்ல. ‘ அர்ப்பணம்’ எந்த நிலையிலும் தயார் நிலையில் இருப்பது....வாழ மட்டுமல்ல...சாகவும் கூட என்று என் மனம் கிசுகிசுக்கிறது.ஒரே முறை மட்டுமே வாழும் வாழ்வை அன்புமயமானதாக்க முயல்வோம்.இப்பிறவியில் நாம் செய்யும் தவறுகளை சரி செய்ய வேண்டுமெனில் இன்னொரு பிறவி வேண்டும்.ஆனால் கொடுப்பது யார்?
ReplyDeleteபேசுவதற்கு முன்னே என் வார்த்தைகளை எண்ணிவிட்டால் கோபமும் வேண்டாம்; பின் மன்னிப்பும் வேண்டாமே! ஒரு அர்த்தமுள்ள வாழ்வு வாழ மிகவும் இன்றியமையாததொரு பதிவு. தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றியும்!