Saturday, May 23, 2020

ஆண்டவரின் விண்ணேற்றம்

வாழப் பழகிக்கொள்ளுங்கள்!

நம் நாட்டில் கொரோனா லாக்டவுனின் நான்காம் கட்டத்திற்குள் நாம் நுழையும் சில நாள்களுக்கு முன், நம் அரசு, 'கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள்!' என்று அறிவுறுத்தியது. ஆக, கொரோனா அழியும், அழியாது என்ற பேச்சிற்கு இனி இடமில்லை.

இந்த உலகில் பிறந்து 33 ஆண்டுகள் தம் சீடர்களோடு வாழ்ந்து, இறையாட்சிப் பணி செய்து, பாடுகள் பட்டு, உயிர்த்த இயேசு, 'இந்த உலகோடு வாழ நீங்கள் பழகிக்கொள்ளுங்கள்' அல்லது 'நான் இல்லாமல் வாழப் பழகிக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டு நம்மிடமிருந்து விடைபெறுகிறார். 

விவிலியத்தில் 'மறைதல்' என்பது இறைமைக்கு அடையாளம். கிதியோனிடம் பேசிய தூதர் மறைகிறார் (காண். நீத 6), சிம்சோனின் பெற்றோருடன் பேசிய கடவுளின் மனிதர் மறைகிறார் (காண். நீத 13), எம்மாவு சீடர்களோடு அப்பம் உண்ட இயேசு மறைகின்றார் (காண். லூக் 24). மறைதல் நிகழ்ந்தவுடன் அங்கே வந்திருந்தவர் இறைவன் என்பதைக் கண்டுகொள்கின்றனர் கதைமாந்தர்கள்.

இன்றைய திருநாளில் நாம் இயேசுவின் மறைதலையும், அந்த மறைதல் வெளிப்படுத்திய இறைமையையும் கொண்டாடுகின்றோம்.

விண்ணேற்றம் ஏன் என்பதற்கான விடையை நம் இறையியல் மூன்று நிலைகளில் புரிந்துகொள்கிறது:

அ. இயேசுவின் மண்ணுலக வாழ்வு முடிந்து இன்று அவர் தன் தந்தையின் இல்லம் திரும்புகிறார். மாட்சியும் ஆற்றலும் பெறுகின்றார்.

ஆ. திருத்தூதர்கள் இயேசுவின் பணியைத் தொடர்கின்றனர்.

இ. தூய ஆவியார் வருகைக்கான தயாரிப்பாக இது இருக்கின்றது.

விண்ணேற்றத்தை எளிதாகப் புரிந்துகொள்ள பழரசம் என்னும் உருவகத்தை எடுத்துக்கொள்ளலாம்.

நாம் ஆரஞ்சு பழரசம் தயாரிக்கிறோம் என வைத்துக்கொள்வோம். பழரசம் நம் கைக்கு வந்தவடன் ஆரஞ்சு மறைந்துவிடுகிறது. ஆரஞ்சு மறைந்துவிட்டாலும் நம் கைகளில் பழரசம் இருக்கிறது. நம்மோடு இருந்த ஆரஞ்சு, நமக்கான பழரசமாக மாறியிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஆரஞ்சு போய்விட்டதே என்று வருந்துவது அல்ல, மாறாக, அது பழரசமாக இன்று நம் கைகளில் இருக்கிறதே என்று மகிழ்ந்து, அதைப் பருகி, அதனால் ஊட்டம் பெறுவதே.

ஆக, இயேசுவின் ஊட்டம் இன்று நம்மிடையே இருந்தால், நம் விண்ணேற்றத்திற்கான வழியும் அதுவே.

அந்த ஊட்டத்துடன் வாழப் பழகிக்கொள்வதே சால்பு.


2 comments:

  1. வாழ்த்துக்கள்!🤝

    ReplyDelete
  2. நம்மிடமிருந்து ஒருவர் மறைகையில் அவர் இல்லாமல் வாழப்பழகிக்கொள்வது என்பது விவிலியத்தில் மட்டுமில்லை....நாம் அங்கங்கே அன்றாடம் பார்க்கும் ஒரு விஷயமாகவே இருக்கிறது.விண்ணேற்றம் குறித்த பழரச உவமை அருமை! ஆரஞ்சு பழம் தரும் இரசமா.... இல்லை விண்ணேற்றத்திற்கு வழி சொல்லும் இயேசு தரும் ஊட்டமா? ஒன்று உடலுக்கு...மற்றது உள்ளத்திற்கு. இரண்டுமே தேவைதானே! தந்தையின் கூற்று சரியே!அனைவருக்கும் ஆண்டவரின் விண்ணேற்புத் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete