Thursday, May 28, 2020

அன்பு செய்கிறாயா?

இன்றைய (29 மே 2020) நற்செய்தி (யோவா 21:15-19)

அன்பு செய்கிறாயா?

பாஸ்கா காலம் நிறைவுற இன்னும் ஓரிரு நாள்களே இருக்கின்ற வேளையில், யோவான் நற்செய்தியின் இறுதிப் பிரிவுகளிலிருந்து நாம் இன்றும் நாளையும் வாசிக்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. 'என்னை நீ அன்பு செய்கிறாயா?' என்று இயேசு பேதுருவிடம் மூன்று முறை கேட்டல்.
ஆ. பேதுருவின் இறுதி நாள்கள் பற்றிய முன்னறிவிப்பு
இ. பேதுருவின் இரண்டாம் அழைப்பு

அ. 'என்னை நீ அன்பு செய்கிறாயா?'

கலிலேயக் கடல் அருகே சீடர்கள் உணவருந்தி முடித்தவுடன், மற்றவர்கள் சற்று தூக்கக் கலக்கமாக அங்கே தூங்கிப் போக, பேதுருவை தனியாக அழைத்துச் செல்கின்ற இயேசு, 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என மூன்றுமுறை கேட்கின்றார். இந்த நிகழ்வு யோவான் நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இது ஏன் எழுதப்பட்டது? பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலிக்கின்றார். இப்போது, அவர் திருஅவையின் தலைவராக இருப்பது தொடக்கத்திருஅவைக்கு நெருடலாக இருக்கும். ஆண்டவரை மூன்றுமுறை மறுதலித்த ஒருவர் எப்படி திருஅவையின் தலைவராக இருக்க முடியும்? என்ற கேள்வி தொடக்கத் திருஅவையில் எழுந்திருக்கலாம். இந்தக் கேள்விக்கு விடை தரும் விதமாக, மூன்று முறை இயேசுவை பேதுரு மற்ற எல்லாரையும் விட அதிகமாக அன்பு செய்வதாக பதிவு செய்கின்றார். இங்கே, 'அன்பு' என்ற வார்த்தை, கிரேக்கத்தில் இரண்டு வார்த்தைகளாக உள்ளது: முதல் மற்றும் இரண்டாம் கேள்வியில் இயேசு, 'அகாப்பாவோ' (தன்னலமற்ற அன்பு) என்ற வினைச்சொல்லையும், மூன்றாம் கேள்வியில், 'ஃபிலயோ' (நட்பு அல்லது உறவுசார் அன்பு) என்ற வினைச்சொல்லையும் பயன்படுத்துகின்றார். மூன்றாம் கேள்வியில், இயேசு, பேதுரு தனக்குக் காட்டும் இயல்பான நட்பு அல்லது அன்பு பற்றி விசாரிக்கின்றார். மூன்றாம் கேள்விக்கு விடை அளிக்கின்ற பேதுரு, 'ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சரணடைகின்றார். இந்த நட்பில்தான் நான் உம்மை மறுதலித்தேனே என்று தன்னுடைய வலுவின்மையையும் ஏற்றுக்கொள்கிறார் பேதுரு.

ஆ. நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்

இரண்டாவதாக, பேதுருவின் இறுதி நாள்கள் எப்படி இருக்கும் என்பதை இயேசு அவருக்கு முன்மொழிகின்றார்: 'உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார்.' இது பேதுருவின் இறுதிநாள்கள் மட்டுமல்ல. மாறாக, நம் ஒவ்வொருவரின் இறுதிநாள்களும் கூட. கைகளை விரித்துக் கொடுக்க நிறைய துணிச்சல் வேண்டும். 'என்னால் இது இயலாது' என்று தன் வலுவின்மையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர்தான் கைகளை விரித்துக் கொடுக்க முடியும்.

இந்த முதிர்ச்சியின் அடையாளங்கள் எவை? அண்மையில் நான் கண்ட ஒரு போஸ்டரில் அவை குறிக்கப்பட்டிருந்தன:

முதிர்ச்சியின் அடையாளங்கள்: சின்ன சின்ன விவாதங்கள் உன்னை காயப்படுத்துவதில்லை. வெளியில் உலாவச் செல்வதைவிட தூங்குவது சிறந்தது எனத் தோன்றும். நீ அதிகமாக மன்னிப்பாய். நீ திறந்த உள்ளத்துடன் இருப்பாய். வேற்றுமைகளை மதிப்பாய். அன்பை வலுக்கட்டாயமாக வரவைக்க மாட்டாய். மனம் வலித்தாலும் பொறுத்துக்கொள்வாய். யாரையும் எளிதாகத் தீர்ப்பிட மாட்டாய். மடத்தனமான வாய்ச்சண்டையை விட மௌனம் சிறந்ததென்பாய். உன் மகிழ்ச்சி மற்றவர்களிடமல்ல, உன்னிடம் தான் இருக்கிறது எனக் கண்டுகொள்வாய். நீதான் சரி என்று உன்னை நிரூபிக்க முயற்சிக்க மாட்டாய். உன்னை மற்றவர்களோடு ஒப்பீடு செய்ய மாட்டாய். தேவைக்கும் ஆசைக்குமான வித்தியாசம் அறிவாய். ஒவ்வொருவரும் அவரவருடைய பார்வையில் சரி என ஏற்றுக்கொள்வாய்.

இவை எல்லாவற்றையும் ஒற்றை வாக்கியத்தில், 'கைகளை விரித்துக் கொடுத்தல்' என்று சொல்லிவிடலாம்.

இ. 'என்னைப் பின்தொடர்'

இறுதியாக, இயேசு, 'என்னைப் பின்தொடர்' என்று பேதுருவை அழைக்கின்றார். முதல் சீடர்களை ஒத்தமைவு நற்செய்திகளில் அழைத்த அதே வார்த்தையைக் கொண்டு இயேசு அழைக்கின்றார். பின்தொடர்தல் என்பது பேதுரு இனி தன் வேலைகளை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு, இயேசுவின் வேலைகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஒரு நாள், இரு நாள் அல்ல. இறக்கும் வரையிலும்!

நற்செயல்: இந்நிகழ்வில் நம்மைப் பொருத்திப் பார்த்து இயேசுவோடு உரையாடுதல்.


2 comments:

  1. மனதைக் கலக்கச்செய்யும் ஒரு பதிவு! தான் ஒரு முறையல்ல....மூன்றுமுறை மறுதலித்த இயேசுவே தன்னைப்பார்த்து“என்னை நீ நேசிக்கிறாயா?” என மீண்டும் மீண்டும் கேட்க மனம் நொந்தவராய் “ உமக்குத்தான் எல்லாம் தெரியுமே” என்று தன் வலுவின்மையை ஏற்றுக்கொள்ளும் பேதுரு நமக்கு நெருக்கமாகப்படுகிறார்.மேலும் அவரைக் கலங்கச்செய்பவரைப்போல இயேசு பேதுருவின் முதுமையில் அவர் கைகளை விரித்துக்கொடுப்பார் என மீண்டும் அவரது வலுவின்மையை சுட்டிக்காட்டுவது போல் இருப்பது நம் மனத்தையும் சேர்த்தே பிசைகிறது.இந்த இரு விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளும் ஒருவர் கண்டிப்பாக இறக்கும் வரையிலும் இயேசுவைப்பின்தொடர தயாராகத்தான் இருப்பார்.

    மீண்டும் மீண்டும் இன்றையப்பதிவை நான் வாசித்ததன் விளைவு... தன் முதுமையையும்,முடிவையும் எதிர்நோக்கி இருக்கும் என்னைப்போன்ற ஒருவர் எப்படி இருக்க வேண்டுமென தந்தை எடுத்து வைக்கும் விஷயங்கள் மன அமைதியைத் தருகின்றன.தந்தைக்கு என் நன்றிகள்!

    கண்டிப்பாக இந்நிகழ்வில் என்னைப்பொருத்திப் பார்த்த காரணத்தினாலேயே தந்தைக்கு என் நன்றிகளை சமர்ப்பித்தேன். இயேசுவோடும் உரையாடுவேன்....அன்புடன்....

    ReplyDelete
  2. முதிர்ச்சியின் அடையாளங்கள்...👌

    நன்றி 🙏

    ReplyDelete