செபிக்கும் கடவுள்
'கர்ணன்: காலத்தை வென்றவன்' என்ற மராத்திய மொழி (தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது) புதினத்தை நேற்று வாசித்து முடித்தேன். கதையாடல் கொண்டுசெல்லப்பட்ட விதம் மிக அருமை. நேற்று மாலையிலிருந்து 'மகாபாரதம்' வாசிக்கத் தொடங்கியுள்ளேன். ஏற்கனவே வாசித்ததுதான். இருந்தாலும் அந்தப் புதினத்தின் பின்புலத்தில் வாசிக்க வேண்டும் என்பது என் அவா.
குருக்ஷேத்திரப் போரில் அர்ஜூனனுக்குத் தேரோட்டியாக கிருஷ்ண பகவான் வருகிறார். மேலும், பாண்டவர்கள் மற்றும் கர்ணன் உள்பட கதைமாந்தர்களின் பலரின் தந்தையர்களாகக் கடவுளர்கள் இருக்கிறார்கள். கடவுளர்கள் மண்ணுலகிற்கு வந்த ஒரு நிகழ்வாக மகாபாரத நிகழ்வு இருக்கிறது.
அந்தக் கடவுளர்களுக்கும் நம்முடைய கிறிஸ்தவத்தின் மகன் கடவுளாக இருக்கும் இயேசுவுக்குமான ஒரு முக்கியமான வித்தியாசத்தை இன்றைய நற்செய்தி நமக்குக் காட்டுகிறது.
'நமக்காக செபிக்கும் கடவுளாக' அவர் இருக்கின்றார்.
தன் தந்தையாக கடவுளிடம் இயேசு தன்னுடைய சீடர்களுக்காக செபிக்கின்றார்.
இரண்டு விடயங்கள் இங்கே புலப்படுகின்றன:
ஒன்று, செபத்தின் இன்றியமையாமை.
இரண்டு, இயேசுவுக்கும் தந்தைக்கும், இயேசுவுக்கும் சீடர்களுக்குமான உறவு.
செபம் பற்றிய உங்கள் புரிதல் என்ன?
என்னைப் பொருத்துவரையில் செபம் என்றால் என்ன? என்னுள் இருக்கும் கடவுள் என் வழியாகத் தன்னிடம் பேசிக்கொள்கின்றார். அதுதான் செபம். 'நான் செபிக்கிறேன். நான் முழந்தாள் படியிடுகிறேன்' என்று எதுவும் கிடையாது. ஆக, கடவுள் தன்னோடு பேசிக்கொள்ள என்னையே நான் கருவியாக்கும் நிலைதான் செபம். பவுல், இடைவிடாமல் செபம் செய்யுங்கள் என்று சொல்வதன் பொருள் என்ன? இடைவிடாமல் கடவுளின் கருவியாக இருங்கள் என்பதுதான்.
மேலும், செபம் என்பது உறவை உறுதி செய்கிறது. உரையாடல் இல்லாத உறவு சாத்தியமில்லை. ஏனெனில், ஆங்கிலத்தில், 'no reply also is a reply' என்பார்கள். அதாவது, நாம் அனுப்பும் செய்திக்கு பதில் எதுவும் வரவில்லை என்றால், 'பதில் வரவில்லை' என்பதும் 'பதில்தான்.' ஆக, நாம் விரும்பியோ விரும்பாமாலே அடுத்தவரிடம் உரையாடிக்கொண்டே இருக்கின்றோம்.
இறுதியாக, இயேசு, 'அவர்கள் உலகில் இருப்பார்கள்' என்கிறார்.
உலகில் இருத்தல் என்பது நாம் கொண்டாட வேண்டியது.
ஒவ்வொரு நாள் விடிகிறது. அந்த விடியல் நமக்குக் கிடைப்பது பெரிய இராணுவப் படை நமக்குக் கிடைப்பதை விட மேலானது. ஏனெனில், நாம் ஒரு புதிய நாளைக் கொண்டு நிறையச் செய்ய முடியும். ஆக, புதிய நாளை இனிய நாளாக வரவேற்பதோடு நம் இருத்தலை இங்கே வீணான சண்டைகளினாலும் வாக்கு வாதங்களினாலும் சோம்பலினாலும் வீணடித்துவிடக் கூடாது.
நற்செயல்: விழித்திருப்பதும், செபித்திருப்பதும் இன்றைய நம் இருத்தலின் கொண்டாட்டங்கள் ஆகட்டும்.
அருமையானதொரு பதிவு!மகாபாரதக்கடவுளர்களிலிருந்து இயேசுவைப்பிரித்துக் காட்டுவது “:அவர் நமக்காக செபிக்கும் கடவுள்”:என்பது என்கிறார் தந்தை.அவர் தனக்காக மட்டுமல்ல....தன்னைச்சார்ந்தவர்களுக்காகவும் செபிக்கிறார் என்பது இன்னும் சிறப்பு. ‘உரையாடல் இல்லாத உறவு சாத்தியமில்லை’ என்ற சொற்றொடர் வழியாக செபத்தின் வல்லமையைப்புரிய வைக்கிறார் தந்தை.ஒவ்வொரு நாளின் விடியலும் நமக்கொரு கொடை என்பதை உணர்ந்து அதைக்கொண்டாட வேண்டுமென்பது பதிவிற்கு அழகு சேர்க்கும் ஒரு செய்தி.
ReplyDelete“ நாம் அனுப்பும் செய்திக்கு பதில் வரவில்லை என்றால் ‘ பதில் வரவில்லை’ என்பதும் ‘பதில்’ தான்.எத்தனை பெரிய உண்மையை போகிற போக்கில் உதிர்க்கிறார் தந்தை. பாராட்டுக்கள்!
கண்டிப்பாக விழித்திருப்பதையும்,செபித்திருப்பதையும் இன்றைய நாளுக்கு மட்டுமல்ல....எல்லா நாட்களுக்கும் உரித்தாக்குவேன்.தந்தைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.:கருத்தோடு அழகும் சேர்ந்து சொட்டும் பதிவிற்காக தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!
இடைவிடா செபம்---- இடைவிடாமல்
ReplyDeleteஇறைவனின் கருவியாக இருத்தல்..
செபத்தின் --- புது பரிணாமம்
கடவுள் தன்னோடு பேசுவதற்கு, என்னையே நான் கருவியாக்குவது...👌🤝