Thursday, September 5, 2019

பழையதே நல்லது

இன்றைய (6 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 5:33-39)

பழையதே நல்லது

இன்றைய நற்செய்தி வாசகத்தில், நோன்பு இருத்தல் பற்றிய விவாதத்திற்கு விடையளிக்கின்ற இயேசு, மணமகன், பிரிதல், புதிய ஆடை, பழைய ஆடை, பழைய மது, புதிய தோற்பை என உருவகங்களைக் கையாண்டுவிட்டு, இறுதியில் வித்தியாசமான ஒரு கருத்தையும் சொல்கின்றார்.

லூக்கா நற்செய்தியில் மட்டுமே இக்கூற்று காணப்படுகிறது. அது என்ன?

'பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார். ஏனெனில், 'பழையதே நல்லது' என்பது அவரது கருத்து.'

நம்முடைய வாழ்வில் எல்லாவற்றிலும் புதுமையை விரும்பும் நாம் சிலவற்றில் 'பழையதே நல்லது' என்று சொல்கிறோம்: பழைய நண்பர்கள் (சீராக் இதை அதிகம் வலியுறுத்துகிறார்) பழகுவதற்கு இனிமையானவர்கள், பழைய புழுங்கல் அரிசி, வெங்காயம், உருளைக் கிழங்கு, பழைய தோசை மாவு சமையலுக்கு ஏற்றது, பழைய மீன் குழம்பு, கருணைக் கிழங்கு குழம்பு, ஊறுகாய் உண்பதற்கு ஏற்றது, பழைய திராட்சை இரசம் குடிப்பதற்கு ஏற்றது, பழைய வீடு (ஏற்கனவே குடியிருக்கும் வீடு) பாதுகாப்பானது. இப்படி நிறைய பழையவற்றை நாம் விரும்புகிறோம்.

இயேசுவின் சமகாலத்தில் அவருடைய புதுமை மற்றும் புரட்டிப் போடுதலை எல்லாரும் விரும்பினார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிறைய இருக்கத்தான் செய்தார்கள்.

ஏன்?

நம்முடைய வீட்டிற்கு இன்று புதிதாக ஒரு பொருளை அறிமுகம் செய்ய - சோப்பு, பற்பசை, அல்லது இறையியல் கருத்து (பிரிவினை சபை சகோதரர் ஒருவர் வழியாக) - யாராவது வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர் எதைச் சொன்னாலும் நாம் நம்முடைய சோப்பு, பற்பசை, இறையியல் கருத்து, கத்தோலிக்க நம்பிக்கை ஆகியவற்றை மாற்றிக்கொள்வதாக இல்லை. புதியது தவறு என்பதற்காக அல்ல, மாறாக, பழையது நமக்கு போதுமானதாக இருக்கிறது.

'இதுவே எனக்குப் போதும்' என்ற நிலையில் இயங்கும் மனம், 'பழையதே போதும்' என்றே சொல்லும். ஏனெனில், பழையதை தன்னுடைய வேர் என மனது பார்க்கும். பழையதில் ஒரு தொடர்ச்சி இருக்கும். பழையதில் ஒருவித பாதுகாப்பு உணர்வு இருக்கும். பழையதில் ஒரு உணர்வுப்பூர்வ இணைப்பு இருக்கும்.

அதே வேளையில், நாம் பழையது என்று நினைப்பது ஒரு நாள் புதியதாக இருந்தது என்பதையும் நாம் மறுக்கக் கூடாது.

பழையதை வைத்துக்கொள்வதா? விட்டுவிடுவதா?

'பழையது நல்லது' என்றால் அதை வைத்துக்கொள்வது சால்பு. மாறாக, பழையது கிழியும் ஆடை போலவும், வெடிக்கும் தோல் பை போலவும் இருந்தால் மாற்றிக்கொள்வதே சிறந்தது.

தன்னைப் புதுப்பிக்காத எதுவும் தேங்கிவிடும், எவரும் தேங்கிவிடுவர்.

1 comment:

  1. புதிது,புதிது என அலையும் நவநாகரிக மாந்தருக்கு ஒரு சவுக்கடி.”பழையதை வேர் என்று நினைக்கும் மனம் இதுவே எனக்குப்போதும்” எனச் சொல்லும். உண்மையை சுமந்து வருகின்றன தந்தையின் வார்த்தைகள்.ஒவ்வொரு முறையும் நாம் நம் ஆடை அலமாரி முன் நிற்கையில் எழும் கேள்வி....” பழையதை வைத்துக்கொள்வதா? விட்டு விடுவதா?” ஆடை கிழிவது போலவும்,தோல்பை வெடிப்பது போலவும் இருப்பின் மாற்றிக்கொள்வதே சால்பு என்கிறார் தந்தை. திரும்பிப் பார்ப்போம் நம் எண்ணங்களை...நம் வாழ்க்கையை.தேவைப்பட்டால் புதுப்பிப்போம்.அழகானதொரு உண்மையை உரக்கச் சொல்லும் பதிவிற்காகத் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete