Tuesday, September 3, 2019

தடுத்து நிறுத்தப் பார்த்தனர்

இன்றைய (4 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 4:38-44)

தடுத்து நிறுத்தப் பார்த்தனர்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், லூக்காவின் பதிவின்படி இயேசுவின் ஒருநாள் நிகழ்வுகளை வாசிக்கின்றோம். தன்னுடைய உற்ற சீடரான பேதுருவின் மாமியாரைக் குணமாக்கும் இயேசு, தொடர்ந்து வீட்டிற்கு வெளியே இருந்த சுற்றத்தாரை, மற்றும் வெளியூர் மக்களை என தன்னுடைய குணமாக்கும் பணியை ஒருவரிலிருந்து பலருக்கு, தெரிந்தவரிலிருந்து தெரியாதவருக்கு என விரிக்கின்றார். மேலும், இயேசு எந்தவொரு ஓய்வும் இல்லாமல் உழைப்பதை நாம் இங்கே காண முடிகிறது.

பல மக்கள் அவரைத் தேடிச் செல்கின்றனர். அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களைவிட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்துநிறுத்தப் பார்க்கின்றனர்.

இது சற்று விநோதமாக இருக்கின்றது.

இயேசுவைத் தங்களோடு, தங்களுக்கென வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

இது சரியா? அல்லது தவறா?

இதை முதலில் இயேசுவின் பார்வையில் சிந்திப்போம். 'தடுத்து நிறுத்துதல்' என்பது 'உறைந்து போதல்.' நாம் இறைச்சி அல்லது மீன் போன்றவற்றை நம்முடைய குளிர்சாதனப் பெட்டியில் உள்ள 'உறைவியில்' வைக்கும்போது, அந்த இறைச்சியில் உள்ள உயிரிகளின் வளர்ச்சி ஓரளவு தடுத்து நிறுத்தப்படுகிறது. உறைநிலையில் வளர்ச்சி சாத்தியமில்லை. இயேசு தன்னுடைய வாழ்வில் தான் உறைந்துபோவதை அறவே வெறுத்தார். இதை நாம் அவர் இளவலாய் கோவிலில் காணாமல்போன நிகழ்விலேயே வாசிக்கின்றோம். அவருடைய பெற்றோர் அவரைத் தடுத்து நிறுத்தியபோது அவர் அவருடைய கைகளிலிருந்து நழுவுகின்றார். நாசரேத்தில் தன் சொந்த ஊராரின் கைகளிலிருந்து நழுவுகின்றார்.

ஒருவரின் கைக்குள் அல்லது பிடிக்குள் இருப்பது பாதுகாப்பானதுதான். ஆனால், அதுவே நம்மை உறைய வைக்கும் ஆபத்தானது. இதை அறிந்திருந்தார் இயேசு. ஆகையால்தான், 'நான் இன்னும் செல்ல வேண்டும்' என்று புறப்படுகின்றார்.

இன்று நான் என்னை எந்தெந்த நிலையில் தடுத்து நிறுத்திக் கொள்கிறேன்? அல்லது மற்றவர்கள் என்னைத் தடுத்து நிறுத்த அனுமதிக்கிறேன்?

யாரால் இது முடியும்?

யார் ஒருவர் தன்னுடைய இலக்கையும் அதற்கான நோக்கையும் அறிந்திருக்கிறாரோ அவர்தான் உறைநிலையிலிருந்து தப்பிக்க முடியும்.

எங்களுடைய அருள்பணி பயிற்சி மையத்தில் நாங்கள் சொல்வது இதுதான். அருள்பணி நிலை என்பது இலக்கு அல்ல. அப்படி அதை மட்டுமே இலக்காக வைத்திருந்தால் அருள்பணியாளராக ஒருவர் மாறியவுடன் அதை ஒரு பெரிய அடையாளமாகப் பிடித்துக்கொண்டு தேங்கிவிடுவார். அதை ஒரு வழிமுறையாகக் கொண்டு வாழ்வில் தொடர்ந்து அருள்பணி நிலையில் வளர வேண்டும் அல்லது பயணிக்க வேண்டும்.

இரண்டாவதாக, ஏன் மக்கள் இயேசுவைத் தடுத்துநிறுத்தப் பார்க்கின்றனர்?

ஒருவேளை அவர்கள் இயேசுவைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள விரும்பியிருக்கலாம்.

அல்லது ஒருவேளை அவர்கள் இயேசு மற்ற இடங்களுக்குச் செல்வதை விரும்பாமல் இருந்திருக்கலாம்.

இன்று நான் கடவுளை அல்லது மற்றவர்களை எங்கெல்லாம் தடுத்துநிறுத்தப் பார்க்கிறேன்? என்னுடைய தன்னலம் மற்றும் தன்விருப்பம் அதற்குக் காரணமாக இருக்கிறதா?

சரியான இலக்கை நிர்ணயித்தலும், அந்த இலக்கை அன்றாட பணியாகக் கொண்டிருத்தலும் நம்மை உறைநிலையிலிருந்து காப்பாற்றும். கொஞ்சம் பரந்த மனம், தாராள உள்ளம் கொண்டிருக்கும்போது நாம் மற்றவரை நிறுத்துவதை நிறுத்தி வைக்க முடியும்.

இதற்கு அடிப்படையான ஒரு மதிப்பீட்டை 'எதிர்நோக்கு' என்று தருகின்றது இன்றைய முதல் வாசகம் (காண். கொலோ 1:1-8). எதிர்நோக்கு ஒன்றே நம் இலக்கை நாம் நிர்ணயம் செய்யவும், அதை நோக்கி வழிநடக்கவும் நம்மைத் தூண்டுகிறது.


1 comment:

  1. நாம் விரும்பும் ஒருவர் நம் இல்லம் வருகிறாரெனில், அவரின் இருத்தலை இழுத்தடிப்பதற்குப் பின்னால் இருப்பது, ‘இன்னும் கொஞ்ச நேரம் அவர் நம்கூட இருக்கட்டுமே’ எனும் எண்ணமேயன்றி தன்னலம் அல்ல.ஆனால் வந்தவர் ஒரு நாலுபேருக்கு நல்லது செய்யும் சக்தி கொண்டவராயிருப்பின், அவரைப் பொருத்த மட்டில் அது அவருக்கு ஒரு உறைநிலையே! இதைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட இருவருக்குமே யோசனை சொல்கிறார் தந்தை.சரியான இலக்கை நிர்ணயித்தலும்,அந்த இலக்கை அன்றாடப்பணியாக்க் கொண்டிருத்தலும் ஒருவரை உறைநிலையிலிருந்து காப்பாற்றுமெனில், நம்முடைய தாராளமனம் அவரைத் தடுத்துநிறுத்துவதிலிருந்து நம்மை எச்சரிக்கும்.இதை சாத்தியமாக்கும் என் “எதிர்நோக்கு என்ன?” அப்படி ஒன்றை நிர்ணயித்து அதன் வழி நடக்க இறைவன் நமக்குத் துணைசெய்வாராக! அருள்பணி பயிற்சி மையத்தில், தன் தலைமையின் கீழ் உள்ள குருமாணவர்களுக்கு நல்லதொரு பயிற்சியாளராகத் தந்தை திகழ்ந்திட இறைவன் அவர்மேல் அனைத்து நலன்களையும் பொழிவாராக!!!

    ReplyDelete