Monday, September 2, 2019

அதிகாரத்தோடு

இன்றைய (03 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 4:31-37)

அதிகாரத்தோடு

இன்றை நற்செய்தி வாசகத்தில் இயேசு கப்பர்நகூமில் உள்ள தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்றார். அங்கே அவர் இரண்டு செயல்கள் செய்கின்றார். ஒன்று, போதிக்கின்றார். இரண்டு, பேய்களை ஓட்டுகின்றார். இயேசு தன்னுடைய பன்னிரு திருத்தூதர்களைத் தெரிவு செய்யும்போதும், 'அவர் தம்மோடு இருக்கவும், நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும், பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவுமே' (காண். மாற் 3:14-15) அவர்களை அழைக்கின்றார்.

போதித்தலும், பேய்களை ஓட்டுதலும் இயேசு செய்கின்ற செயல்களாக இருக்கின்றன. ஆனால், இதற்குப் பின்னால் இருப்பது அவர் தன்னோடும் தன்னுடைய தந்தையோடும் கொண்டிருந்த தொடர்பு. இதைப் பேய்கள் கூட ஏற்றுக்கொள்கின்றன. ஆகையால்தான், 'நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்று இயேசுவிடம் சொல்கின்றன. இதுவே இயேசுவின் போதனைக்கும் அற்புதத்திற்கும் அதிகாரம் தருகின்றது.

இயேசுவை அவருடைய சமகாலத்துப் போதகர்கள் அல்லது ரபிக்களிடமிருந்து பிரித்துக் காட்டியது இதுதான்: அதிகாரம். மற்றவர்கள் கடவுளுடைய அதிகாரத்தால் செயல்பட்டனர். ஆனால், இயேசு தன்னுடைய அதிகாரத்தால் செயல்படுகின்றார்.

ஒருவர் தன்னை அறிந்தவராகவும், தன் நிறைகுறைகளை ஏற்றுக்கொள்பவராகவும் இருக்கும்போது அதிகாரம் கொண்டவராகிறார். ஏனெனில், இவர் மற்றவர்களையும் நிறைகுறைகளோடு ஏற்றுக்கொள்வார். மற்றவர்களின் நிறைகளைத் தட்டிக்கொடுத்து, குறைகளைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்வார்.

என்னை நானே ஏற்றுக்கொள்தல் அல்லது என்மேல் நானே உரிமை கொண்டாடுதல் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில், நான் என்மேல் உரிமை கொள்ளாமல் இந்த உலகமே என்மேல் உரிமை கொண்டாடினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நான் என்மேல் உரிமை கொண்டு இந்த உலகமே என்மேல் உரிமை கொண்டாடவில்லை என்றாலும் என்னால் சாதனைகள் புரிய முடியும்.

இயேசு இதை தன்னுடைய அடித்தள அனுபவம் என்னும் திருமுழுக்கு அனுபவத்திலிருந்து பெறுகின்றார். அந்த அனுபவம் அவரை அப்படியே புரட்டிப் போடுகின்றது. தனக்கு என்ன நேர்ந்தாலும் தன்னுடைய வேர் போல இருந்த அந்த அடிப்படை அனுபவம் நோக்கி அவர் அடிக்கடி பயணம் செய்தார்.

இதை இன்று நாம் எப்படிப் பெற்றுக் கொள்வது?

அ. தன்னை அறிதல்

நான் என்னுடைய நல்லது, கெட்டது, பிடித்தது, பிடிக்காதது என என்னை அறிந்து கொள்வதோடு, என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டு என்மேல் உரிமை கொண்டாடுவது. இதை நாம் இறைவேண்டல் அல்லது தியானத்தின் வழியாகக் கற்கலாம். அல்லது சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் கூறுவது போல, 'உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில். அதைவிட நம்பத்தக்கது உனக்கு வேறெதுவுமில்லை. காவல் மாடத்தின்மேலே அமர்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு அறிவுறுத்துகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்போது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்' (சீஞா 37:13-15).

ஆ. விழிப்புடன் இருத்தல்

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 தெச 5:1-6,9-11) பவுல் சொல்வது போல, 'மற்றவர்களைப் போல நாமும் உறங்கலாகாது, விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.' நாம் கொஞ்சம் அயரும்போதுதான் தவறி விடுகிறோம். பேயின் பாராட்டு வார்த்தைகளால் இயேசு அயர்ந்துவிடவில்லை. நன்மை இருக்கும் இடத்தில் நன்மை, தீமை இருக்கும் இடத்தில் தீமை, ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை. அவ்வளவுதான். இதுவே தன்னதிகாரம்.

2 comments:

  1. “பேய்களும் கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே “.. இயேசுவைக்குறித்த மக்களின் வியப்பு. இது இவருக்கு சாத்தியமானது, அவருக்கிருந்த தன்னைக்குறித்த அறிதலும்,புரிதலுமே. இந்தப் புரிதலை இவருக்குக் கொடுத்தது அவரது அடித்தள அனுபவம் எனும் திருமுழுக்கே என்கிறார் தந்தை.நமக்கும் அந்த அடித்தள அனுபவம் இருக்கத்தானே செய்கிறது? பின் ஏன் அந்த அனுபவம் நமக்குக் கை கொடுப்பதில்லை?நம்மை உண்மையின் வழி நடத்தும் உன்னத இறைவனிடம் நாம் மன்றாடாத்தும்,நாம் விழிப்போடும்,அறிவுத் தெளிவோடும் இல்லை என்பதும் காரணமாக இருக்குமோ? இருக்கலாம்...முதலில் நம்மை அறிவோம்; பின் விழிப்புணர்வோடும்,விழித்தலோடும் நம் சுற்றுப்புறத்தை உணர்வோம்.தந்தை குறிப்பிடும் “ தன்னதிகாரத்தை”ப் பெறுவோம்.”என் மேல் நான் உரிமை கொள்ள எந்த விலைகொடுப்பினும் அது சரியே!” தந்தை குறிப்பிட்டுள்ள ஆங்கில வரிகள் அவரின் வார்த்தைகள் உண்மையே என்பதை உரக்கச்சொல்கின்றன. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete