Monday, September 30, 2019

உமக்கு விருப்பமா?

இன்றைய (1 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 9:51-56)

உமக்கு விருப்பமா?

நாம் இக்கட்டான சூழல் ஒன்றில் இருக்கும்போது அங்கே இறைவனின் குரல் நமக்குக் கேட்காதா என்று நாம் ஏங்குவதுண்டு. அப்படி ஒரு குரல் கேட்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த இடத்தில், அது இறைவனின் குரலா? அல்லது நம்முடைய குரலா? அல்லது எதிரியின் குரலா? என்ற கேள்வி எழும்பி நம் குழப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. சில நேரங்களில் நாம் நம்முடைய குரலையே கடவுளின் குரல் என நினைத்துக்கொள்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது.

இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேம் நோக்கிப் பயணம் செல்கிறார்கள். கலிலேயாவில் இவர்களுடைய பயணம் தொடங்குகிறது. வழியில் இருப்பது சமாரியா. இவர்கள் எருசலேம் நோக்கிச் செல்வதால் சமாரியர்கள் இயேசுவையும் சீடர்களையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். உடனடியாக திருத்தூதர்கள் யாக்கோபும் யோவானும் கோபம் கொள்கின்றனர். 'ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?' என்று கேள்வி எழுப்புகின்றனர். தங்களுடைய கோபமே இயேசுவின் கோபம் என நினைத்துக்கொள்கின்றனர். அல்லது தாங்கள் சமாரியர்களை அழிக்க நினைப்பதை இயேசுவின் விருப்பம் போலக் காட்டுகின்றனர்.

இங்கே இரண்டு விடயங்கள்:

ஒன்று, என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என் மனநிலை எப்படி இருக்கிறது?

இரண்டு, என்னுடைய விருப்பத்தை கடவுளின் விருப்பம் போல நினைத்து, என்னைப் போல அவரும் எண்ண வேண்டும் என்று அடம் பிடிக்கிறேனா?

'என்னை எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்ற உணர்வு பெரும்பாலும் நம் அனைவருக்கும் இருக்கிறது. உறவினர் வீட்டில், பொதுவிடத்தில், விருந்தில் நம்மை யாராவது கண்டுகொள்ளவில்லை என்றால், நமக்குக் கோபம் வருகிறது. சில நேரங்களில் இந்தக் கோபத்தை நாம் வெளிப்படுத்திவிடுகிறோம். சில நேரங்களில் அடக்கிக் கொள்கிறோம். இது ஏன்?

காரணம், ரொம்ப எளிது: 'ஈகோ' அல்லது 'தான்மை.'

ஈகோ வரக் காரணம் நான் என்னுடைய அடையாளத்தை என்னில் காணாமல் எனக்கு வெளியில் காண்பதுதான்.

எடுத்துக்காட்டாக, நான் என்னுடைய வாசல் வழியாக வெளியே செல்கிறேன். வாயிலில் இருக்கும் வாட்ச்மேன் எழுந்து நின்று எனக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன். வழக்கமாக அப்படிச் செய்பவர் அன்றைய தினம் ஏதோ ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார். என்னைக் கண்டவுடன் கையை மட்டும் தூக்கிவிட்டு தொடர்ந்து எழுத ஆரம்பிக்கிறார். உடனே எனக்குக் கோபம் வருகிறது. 'அவர் என்னை மதிக்கவில்லை' என்று புலம்புகிறேன். இப்படிப் புலம்பினால் நான் என்னுடைய மரியாதையை அவருடைய செயலில் இணைத்துப் பார்க்கிறேனே தவிர, என்னில் நான் காண்பதில்லை.

என்னுடைய தன்மதிப்பு என்பது என்னைச் சார்ந்து இருக்க வேண்டும். இயேசுவின் மதிப்பு அவரிடம் மட்டுமே இருந்தது. ஆகையால்தான், அவர் தன்னைப் புகழ்ந்தவர்களையும் இகழ்ந்தவர்களையும் ஒன்றுபோலப் பார்த்தார்.

அடுத்ததாக, கடவுளுடைய குரலை நாம் எப்படித் தனியாகக் கண்டுபிடிப்பது?

அடுத்தவரின் வாழ்வைத் தேடினால் அது கடவுளின் குரல். அடுத்தவரின் வாழ்வைத் தேடுவோர் நடுவில்தான் கடவுள் குடிகொள்கிறார் என்று இன்றைய முதல் வாசகம் (காண். செக் 8:20-23) நமக்குச் சொல்கிறது.

இன்று நாம் வானிலிருந்து ரோஜா மலர்களை அள்ளித் தெளிக்கும் சின்ன ராணி குழந்தை தெரசாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

தன் அடையாளத்தைத் தனக்கு வெளியில் தேடாத உள்ளமே குழந்தை உள்ளம். அந்தக் குழந்தை உள்ளம் எளிதில் இறைவனின் குரலைக் கேட்கும், இறைவனின் விருப்பத்தைக் கண்டுகொள்ளும்.

Tuesday, September 17, 2019

விதிமுறை மாற்றம்

இன்றைய (18 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 7:31-35)

விதிமுறை மாற்றம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய சமகாலத்தில் குழந்தைகள் நடுவே இருந்த விளையாட்டு ஒன்றை உருவகமாகக் கையாண்டு, தன்னுடைய சமகாலத்தவரின் மனப்பாங்கை எடுத்தியம்புகின்றார்.

வீதியில் இரு மருங்கிலும் குழந்தைகள் நின்றுகொள்வர். ஒரு குழுவினர் செய்வதை மறு குழுவினர் செய்ய வேண்டும். 'குழல் ஊதும் போது குழல் ஊத வேண்டும்,' 'கூத்தாடும் போது கூத்தாட வேண்டும்' - நம்ம ஊர்ல 'ஜோடி போடுவது' மாதிரி. ஆனால், விதிமுறைகளை மாற்றி, குழல் ஊதியவர்களைப் பார்த்து, 'கூத்தாடவில்லை,' ஒப்பாரி வைத்தவர்களைப் பார்த்து, 'அழவில்லை' என்று சொல்வது, திடீரென்று தங்கள் விதிமுறைகளை மாற்றிக்கொள்வதாக இருக்கிறது.

இயேசுவின் சமகாலத்தவர் திருமுழுக்கு யோவான் வந்தபோது ஒரு அளவுகோலால் அளந்தார்கள். ஆனால், இயேசு வந்தபோது அவர்கள் அளவுகோலை மாற்றிக்கொண்டனர்.

ஆக, தங்களுடைய விருப்பம் போல விதிமுறைகளை மாற்றி, அதில் மற்றவர் பொருந்தவில்லை என்று சாடுகின்றனர்.

கிரேக்க புராணத்தில் இதே போன்ற கதை ஒன்று உண்டு. பார்க்கிடிஸ் என்ற திருடன் தன்னுடைய அறையில் ஒரு கட்டில் வைத்திருந்தான். தான் திருடிய நபர்களை அதில் தூங்குமாறு சொல்வான். தூங்குபவர் கட்டிலுக்குச் சரியாக இருந்தால் அவருக்குப் பரிசு கொடுத்து அனுப்பி விடுவான். அந்த நபர் கட்டிலைவிட சிறியவராக இருந்தால் கட்டிலில் சேரும் அளவிற்கு இழுப்பார். அதில் அந்த மனிதர் இறந்துவிடுவார். கட்டிலை விடப் பெரியவராக இருந்தால் தலை அல்லது காலை வெட்டிக் கொன்றுவிடுவார்.

ஆக, நாம் ஒவ்வொரு நபருக்கும் ஒரு விதிமுறை வைத்திருக்கிறோம். அந்த விதிமுறையின்படி அவர் ஆட வேண்டும் என நினைக்கிறோம். அடுத்தவரின் ஆட்ட விதிமுறைகள் நமக்குப் பிடிப்பதில்லை. நம் விதிமுறைகளின்படியே அவர் ஆட வேண்டும் என நினைக்கிற நாம், அவர் நன்றாக ஆடினாலும், திடீரென்று விதிமுறைகளை மாற்றி அவரை வெளியே அனுப்புகின்றோம்.

அவரை அனுப்பினாலும் அனுப்பாவிட்டாலும், 'ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று' என்கிறது நற்செய்தி.

இயேசுவையும் யோவானையும் சிலர் இப்படி வெளியேற்றினாலும் பலர் அவர்களை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் ஏற்றுக்கொண்டதற்கு ஏற்ப வாழ்ந்தனர்.


Monday, September 16, 2019

பரிவு கொண்டு

இன்றைய (17 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 7:11-17)

பரிவு கொண்டு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நயீன் நகரத்துக் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர் கொடுக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 திமொ 3:1-13) பவுல், ஆயர் (கண்காணிப்பாளர்) மற்றும் திருத்தொண்டரின் பண்பு நலன்களைப் பட்டியலிடுகின்றார்.

பவுலைப் பொறுத்தவரையில் 'ஆயராக விரும்பும் எவரும் - கண்காணிப்பாளராக விரும்பும் எவரும் - மேன்மையானதொரு பணியை நாடுகிறார்.' ஆக, ஆயராக ஆசைப்படும் அருள்பணியாளர் பற்றி யாரும் இடறல்படத் தேவையில்லை. அவர் மேன்மையான பணியை நாடுகின்றார். இந்தப் பணியைப் பெற ஒருவர் பின்வரும் குணநலன்களைப் பெற்றிருக்க வேண்டும்:

(1) குறைச்சொல்லுக்கு ஆளாகாத நிலை
(2) ஒரு மனைவி கொண்டிருத்தல் (இன்று மணத்துறவு ஏற்கப்பட்ட நிலையில் இது ஏற்புடையதன்று)
(3) அறிவுத்தெளிவு
(4) கட்டுப்பாடு
(5) விருந்தோம்பல்
(6) கற்பிக்கும் ஆற்றல்
(7) குடிவெறி, வன்முறை இல்லாதிருத்தல்
(8) கனிந்த உள்ளம்
(9) சண்டை மற்றும் பொருளாசை தவிர்த்தல்
(10) திருச்சபைக்கு வெளியே இருப்பவர்களிடமும் நற்சான்று

திருத்தொண்டர் நிலைக்கு பின்வரும் பண்புகள் அவசியம் எனப் பவுல் கூறுகிறார்:

(1) கண்ணியம்
(2) இரட்டை நாக்கு, குடிவெறி, இழிவான ஊதியத்தின்மேல் ஆசை - இல்லாதிருத்தல்
(3) தூய மனச்சான்று

இவர்களில் பெண்கள் கண்ணியம், அறிவுத்தெளிவு, நம்பகத்தன்மை கொண்டிருத்தல் வேண்டும். தொடக்கத் திருஅவையில் பெண் திருத்தொண்டர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் பகுதியும் சான்றாக இருக்கிறது.

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது?

திருத்தொண்டர், அருள்பணி நிலை, அல்லது ஆயர் நிலை ஆகிய திருப்பட்டங்கள் இறைவனின் அருள்கொடை என்றாலும், இந்த அருள்கொடையைப் பெற ஒருவர் தன்னையே தகுதியாக்கிக்கொள்வது அவசியம். அதே வேளையில், தனக்குத் தகுதிகள் இருக்கின்றன என்ற நிலை மட்டும் போதாது. அருள்கொடையும் அவசியம்.

இப்பகுதியை இன்றைய நற்செய்தி வாசகத்தோடு எப்படி தொடர்புபடுத்துவது?

இயேசுவின் எல்லாக் குணங்களையும் ஒற்றை வார்த்தையில் சொல்லவேண்டுமெனில், 'பரிவு' என்று சொல்லலாம். நயீன் நகரத்துக் கைம்பெண்ணோ, உடன் வந்தவர்களோ யாருமே எதுவுமே விண்ணப்பிக்காமல், தானே முன் வந்து, 'அழாதீர்!' என்று அந்தப் பெண்ணுக்குச் சொன்ன ஆண்டவர், 'இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்திடு!' என்று இளைஞனை எழுப்பி அவனுடைய தாயிடம் ஒப்படைக்கின்றார்.

பரிவு என்ற ஒற்றைக் குணம் இறந்து கிடப்பவர்களுக்கும் உயிர் கொடுத்து எழுப்பிவிடும்.

மேலும், மேற்காணும் அனைத்துக் குணங்களும் இருந்தும் இயேசுவின் இந்தப் பரிவு இல்லை என்றால் எந்தப் பணி நிலையும் மேலோட்டமான அரசியல் பணியாக மட்டுமே அமைந்துவிடும்.

இன்று என் கண் முன்னே கடந்து போகும் எத்தனை பேரை நான் பரிவுடன் நோக்குகிறேன்?

என் கண்களில் பரிவு தெரிகிறதா?


Sunday, September 15, 2019

தகுதியற்றவன்

இன்றைய (16 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 7:1-10)

தகுதியற்றவன்

'நான் என்னைப் பற்றிப் பேசுவதைவிட என்னுடைய செயல்களும், என்னுடைய செயல்களால் பயன்பெற்றவர்களும் பேச வேண்டும்' என்பது மேலாண்மையியலில் சொல்லப்படுகின்ற ஒன்று.

இந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக வரும் கதைமாந்தர்தான் இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் நூற்றுவர் தலைவர். லூக்கா நற்செய்தியாளர் மற்ற நற்செய்தியாளர்களைவிட இவரை இயேசுவிடமிருந்து தூரத்தில் வைக்கிறார். மற்ற நற்செய்தியாளர்கள் இவரே இயேசுவிடம் வந்ததாக எழுதுகின்றனர். ஆனால், லூக்காவில் இவர் உடல் அளவிலும் தொலைவில் இருக்கிறார்.

இவருக்கும் இயேசுவுக்கும் இடையேயான தொலைவு அவரை நம்பிக்கை அடிப்படையில் இயேசுவுக்கு இன்னும் நெருக்கமாக்குகிறது.

முதலில் யூதர்கள் சிலர் இவருடைய விண்ணப்பத்தைச் சொல்லி இயேசுவிடம் பரிந்துரை செய்கின்றனர்.

இரண்டாவதாக, இவரின் நண்பர்கள் சிலர் இவரின் வார்த்தைகளை இயேசுவிடம் வந்து தூது சொல்கின்றனர்.

படைவீரராய் இருந்த இவருக்கு தூது மற்றும் கட்டளையின் பொருள் நன்றாகப் புரிந்தது. தூது அனுப்பப்படுபவர் எப்போதும் தூது அனுப்பியவரின் செய்தியை அப்படியே போய்ச் சொல்ல வேண்டும். அவரின் வேலை அதுதான். மேலும், கட்டளையிடுபவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர் இடுகின்ற கட்டளைக்கு மற்றவர்கள் கீழ்ப்படிய வேண்டும்.

இங்கே, நண்பர்கள் அவரின் வார்த்தைகளை அப்படியே இயேசுவிடம் சொல்கின்றனர். மேலும், தன்னுடைய வார்த்தைகளுக்கே அதிகாரம் இருக்கிறது என்றால், இறைமகனின் வார்த்தைகளுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும் என்பதை அவர் அறிந்தவராய் இருக்கிறார்.

இயேசுவிடம் வந்த யூதர்கள், 'இவர் தகுதியுள்ளவர்' என்று சொல்கின்றனர். ஆனால் இவரோ, 'நான் தகுதியற்றவன்' என்கிறார்.

இதில் ஒரு பெரிய வாழ்க்கைப் பாடம் இருக்கிறது?

'நான் தகுதியானவன்' என்று என்னைப் பற்றிச் சொல்வதைவிட, 'இவர் தகுதியுள்ளவர்' என்று என்னைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் அளவிற்கு நான் மனிதர்களைச் சம்பாதித்து வைத்துள்ளேனா? என்னுடைய தொடர்பு எப்படி இருக்கிறது? - இந்தக் கேள்வியை நான் கேட்க வேண்டும்.

இரண்டாவதாக, இயேசுவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நான் இணைப்பை ஏற்படுத்துகிறேனா? இரண்டு பேருக்கு இடையே இருக்கும் உறவைப் பிரித்து விடுவதற்கு நாம் பல நேரங்களில் மும்முரமாய் இருக்கிறோம். ஆனால், இயேசுவிடம் வந்த யூதர்களும், நண்பர்களும் இயேசுவுக்கும் தலைவருக்கும் இடையே இணைப்புக்கோடாய் இருக்கின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 திமொ 2:1-8) பவுல், 'கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளர் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்' என இயேசுவுக்கு ஒரு புதிய அடைமொழியைக் கொடுக்கின்றார். இணைப்பாளராகிய இயேசுவைப் போல இன்று நான் ஒருவர் மற்றவருக்கு இடையே ஒப்புரவின் கருவியாக இருந்தேன் என்றால் தகுதியற்றவர்களும் தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

Wednesday, September 11, 2019

அணிகலன்கள்

இன்றைய (12 செப்டம்பர் 2019) முதல் வாசகம் (கொலோ 3:12-17)

அணிகலன்கள்

இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் (காண். லூக் 6:27-38), இறைமக்களாகிய நாம் அணிந்துகொள்ள வேண்டிய அணிகலன்களைப் பட்டியலிடுகிறது.

நம்முடைய முகத்திற்குப் புன்னகையை விட சிறந்த பொன்நகை இல்லை என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று.

இப்படியே நம்முடைய கிறிஸ்தவ வாழ்விற்கென்று சில செலவில்லாத அணிகலன்கள் உள்ளன. அவை யாவை?

பரிவு - என்னைப் போல அடுத்தவரை நினைப்பது

இரக்கம் - என் கண்களைத் தாழ்த்திப் பார்ப்பது

நல்லெண்ணம் - அடுத்தவரைப் பற்றிய நேர்முக எண்ணம்

மனத்தாழ்மை - பிறர் என்னைவிட மதிப்புக்குரியவர் என்று எண்ணுவது

கனிவு - சொல்லில், உணர்வில் இனிமை

பொறுமை - பரபரப்பு இல்லாத மனம்

மன்னிப்பு - கடந்த காலத்தை உடனே மறப்பது

அன்பு - உணர்வு அல்ல செயல்

இவை இருந்தால் என்ன நடக்கும்?

'கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்தும்!'

நம் வாழ்வின் இலக்கு அமைதி ஒன்றே.

அதை அடைய மேற்காணும் அணிகலன்களை நாமும் அணியலாமே!


Tuesday, September 10, 2019

சமவெளிப் பொழிவு

இன்றைய (11 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 6:20-26)

சமவெளிப் பொழிவு

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சமவெளிப் பொழிவை வாசிக்கின்றோம். மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கும் மலைப்பொழிவிற்கும் இங்கே வாசிக்கும் சமவெளிப் பொழிவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

அங்கே இயேசு மலைமேல் ஏறி அமர்கின்றார். இங்கே இயேசு தம் சீடர்களோடு சமதளத்தில் நிற்கின்றார்.

அங்கே எட்டு பேறுபெற்ற நிலைகளைச் சொல்கின்றார் இயேசு. இங்கே நான்கு பேறுபெற்றவை என்றும் நான்கு கேடுகள் என்றும் சொல்கின்றார் இயேசு.

அங்கே 'ஏழையரின் உள்ளத்தோர்.' இங்கே 'ஏழைகள்.'

அங்கே 'எல்லா மக்களும்' இயேசுவுடன் இருக்கிறார்கள். இங்கே சீடர்கள் மட்டும் இயேசுவோடு இருக்கின்றனர்.

நிற்க.

யார் பேறுபெற்றவர்கள்?

ஏழைகள் - இறையாட்சி

பட்டினி கிடப்பவர்கள் - நிறைவு

அழுதுகொண்டிருப்பவர்கள் - சிரிப்பு

தள்ளிவிடப்படுபவர்கள் - துள்ளி மகிழுங்கள்


யார் சபிக்கப்படுபவர்கள்?

செல்வர் - அனுபவித்துவிட்டீர்கள்!

உண்டு கொழுப்போர் - பட்டினி

சிரிப்பவர் - அழுகை

புகழப்படுபவர்கள் - ஏமாற்றம்

முந்தைய நான்கு பேறு பெற்ற நிலைகளும் பிந்தைய நிலையில் சபிக்கப்படுகின்றன.

'இயேசு தன் சீடர்மீது பார்வையைப் பதித்துக் கூறியவை' என்று சொல்கின்றார் லூக்கா.

அப்படி என்றால், இவை அனைத்தும் இயேசுவின் சீடர்களுக்குப் பொருந்தியதா?

வாழ்வின் இரட்டைத் தன்மையைச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு. இரட்டைத்தன்மையை நாம் ஒருபோதும் ஒன்றாக்கிவிட முடியாது. இரட்டைத்தன்மையை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் பவுல், இவ்விரட்டைத் தன்மைகள் கிறிஸ்துவில் நிறைவுபெறுவதாக எழுதுகின்றார்: 'கிரேக்கர் என்றும் யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும் பெறாதவர் என்றும், அடிமை என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை.'

கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்.

இதன் பொருள் என்ன?

நம் வாழ்வில் பேறுபெற்ற நிலைகளும் கேடுறும் நிலைகளும் மாறி மாறி வரத்தான் செய்யும். இரண்டிலும் கிறிஸ்து அனைவருள்ளும் அனைத்துமாய் இருந்தால் வேறுபாடுகள் இல்லை.

பசியாய் இருக்கிறேன் என்று நான் வாடி, பசி நிறைவுபெற்றவுடன், அதுவே சாபமாகி விட்டால், வாழ்க்கை சுழன்றுகொண்டே தான் இருக்கும்.

வாழ்வின் சுழற்சியைக் கற்றுத்தருகின்றார் இயேசு.

'பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்' என்று பட்டினத்தாரும்,

'ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு' என்று சபை உரையாளரும் இதையே சொல்கின்றனர்.


Monday, September 9, 2019

இணைப்பு

இன்றைய (10 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 6:12-19)

இணைப்பு

சுவாமி விவேகானந்தர் 'தொடர்பு' (contact) மற்றும் 'இணைப்பு' (communication) ஆகிய இரண்டிற்கான வித்தியாசத்தை மிக அழகாகக் கூறுகின்றார். நம்முடைய தொலைபேசி எண்களில் ஒருவராக இருப்பவரை நாம் தொடர்பில் இருப்பவர் என்கிறோம். ஏதோ ஒரு வகையில் அவர் நம்மோடு தொடர்பில் இருப்பதால் - அருள்பணியாளர், வாகன ஓட்டுநர், கூரியர் சேவைக்காரர், நண்பர், அம்மா - நாம் அவருடை எண்ணை நம்முடைய தொலைபேசியில் சேமித்து வைக்கிறோம். 'இணைப்பு' என்பது நாம் அந்த நபரோடு கொண்டுள்ள நெருக்கம். ஒருவருடைய எண்ணை நாம் நம்முடைய தொலைபேசியில் சேர்த்து வைப்பதால் மட்டும் இணைப்பு வந்துவிடுவதில்லை. அல்லது நாம் தொடர்பில் இருக்கும் அனைவரும் நம்மோடு இணைப்பில் இருக்கிறார்கள் என்றில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தன்னுடைய சீடர்களிலிருந்து திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அதாவது, தொடர்பில் இருக்கும் நிறையப் பேரிலிருந்து இணைப்பில் இருக்கும், இணைப்பில் இருக்க பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கிறார்.

தான் அப்படித் தேர்ந்தெடுக்குமுன், தானே தன் தந்தையோடு இறைவேண்டலில் இணைப்பில் இருக்கின்றார்.

தன் தந்தையோடு இணைப்பில் இருக்கும் இயேசு, தன்னோடு இணைப்பில் இருப்பதற்காக பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்.

இரவெல்லாம் தந்தையைக் கூப்பிடுகின்றார். விடிந்தவுடன் தன் சீடர்களைக் கூப்பிடுகின்றார்.

இணைப்பிற்கு கூப்பிடுதல் மிகவும் அவசியம். நாம் கூப்பிடாதவரை யாரிடமும் நம்மால் பேச முடியாது.

இன்று நாம் இறைவனைக் கூப்பிடுகிறோமா?

இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். கொலோ 2:6-15), பவுல், 'அவரோடு இணைந்து வாழுங்கள்' என்று கொலோசை நகர மக்களை அழைக்கின்றார். அவரோடு தொடர்பில் இருப்பது மட்டுமல்ல, இணைப்பில் இருப்பதும் அவசியம்.

நாம் இன்று பின்வரும் கேள்விகளைக் கேட்போம்:

அ. இன்று நான் எத்தனை பேரோடு தொடர்பில் இருக்கிறோம்? எத்தனை பேரோடு இணைப்பில் இருக்கிறோம்?

ஆ. ஆண்டவரோடு நான் இணைந்திருக்கிறேனா?

இ. அவர் என்னைக் கூப்பிடுவது என் காதுகளில் விழுகிறதா? என் கவனச் சிதறல்கள் எவை?

ஈ. கூட்டத்திலிருந்து என்னைத் தனி நபராகப் பெயர் சொல்லி அழைக்கிறார் என்றால், நான் என்னுடைய தான்மையை, அடையாளத்தை எப்படி வாழ்வாக்குகிறேன்?

உ. இயேசுவைத் தொட முயன்ற மக்களின் தாகம் என்னிடம் இருக்கிறதா?


Sunday, September 8, 2019

எது முறை?

இன்றைய (9 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 6:6-11)

எது முறை?

இன்று மாலை தாமஸ் மெர்ட்டன் அவர்களின் சில சிந்தனைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். மனிதர்கள் தாங்கள் விரும்பாத கேள்வி எதைப்பற்றி என்றால் தங்களுடைய உண்மைத்தனம் அல்லது பிரமாணிக்கம் பற்றித்தான் என்கின்றார். 'நீ பொய் சொல்கிறாயா?' என்ற கேள்வியை நம்மில் யாரும் விரும்புவதில்லை. இந்தக் கேள்விக்கு, 'ஆம்' என்று சொன்னாலும் தவறு. 'ஆம்' என்று சொன்னால், 'பொய் சொல்வது தவறு' என்று அடுத்தவர் சொல்வார். 'இல்லை' என்று சொன்னாலும் தவறு. 'இல்லை' என்று சொல்லும்போது, மற்றவர் இதுவரை பொய் சொன்னார் என்றும், இது பொய் இல்லை என்பது போலவும் ஆகிவிடும்.

பிலாத்து இயேசுவிடம், 'உண்மையா அது என்ன?' எனக் கேட்கின்றார். இந்தக் கேள்விக்கு எந்தப் பதிலை இயேசு கொடுத்தாலும் அது முழுமையாகாது. ஆகையால்தான் அமைதி காக்கின்றார். பிலாத்துவாலும் இதற்கு விடை காண முடியாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று ஓய்வுநாளில் கற்பிக்கின்றார். அங்கே சூம்பிய கை உடைய ஒருவர் இருக்கின்றார். அவரைக் குணமாக்க விழைகின்றார் இயேசு. ஆனால் அங்கிருந்தவர்கள் இவர்மேல் குறைகாண விழைகிறார்கள்.

ஆகவே, இயேசு அவர்களிடம், 'உங்களிடம் ஒன்று கேட்கிறேன். ஓய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரைக் காப்பதா? அழிப்பதா? எது முறை?'

அவர்கள், 'நன்மை' என்று சொன்னாலும் மாட்டிக்கொள்வார்கள். 'தீமை' என்று சொன்னாலும் மாட்டிக்கொள்வார்கள். 'உயிரைக் காப்பது' என்றாலும் மாட்டிக்கொள்வார்கள். 'அழிப்பது' என்றாலும் மாட்டிக்கொள்வார்கள். ஆகவே, அவர்கள் மிகவும் பாதுகாப்பாக அமைதி-மௌனம் காக்கின்றனர்.

சில நேரங்களில் மௌனமே சிறந்த பதில்.

அடுத்தவர்களுக்குச் சொல்வதற்கு மட்டுமல்ல. நமக்கு நாமே சொல்லிக்கொள்வதற்கும்.

நமக்கு ஒரு பிரச்சினை வந்தவுடன் நாம் உடனடியாகத் தீர்க்க நினைத்து, எதையெதையோ யோசித்து அங்கலாய்க்கிறோம். விடையை நாம் ஒருபோதும் காண முடியாது. ஆனால், மௌனமாக இருந்தால் நாம் ஒருவேளை விடை காண முடியும்.

இங்கே அவர்களின் மௌனம் இயேசுவையும் மௌனம் கொள்ளச் செய்கிறது. அவர்களிடம் ஒன்றும் பேசாமல், 'உம் கையை நீட்டும்' என்று கைசூம்பிய நபரிடம் சொல்கின்றார். இந்த நிகழ்வு மற்றவர்களின் கோபவெறியைத் தூண்டுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் தன் கைகளால் தான் செய்யும் உழைப்பைப் பற்றிப் பெருமை பாராட்டுகின்றார். பவுல் ஒருபோது தன் கைகள் சூம்பியிருக்கவோ, தன் மனம் கோபமாயிருக்கவோ விரும்பவில்லை.

கோபமில்லாத மனம், உழைக்கும் கைகள், வாயில் மௌனம். வாழ்க்கை வெற்றி.


Friday, September 6, 2019

கட்டுப்பட்டதே

இன்றைய (7 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 6:1-5)

கட்டுப்பட்டதே

இன்று மேலாண்மையியலில் இலக்கு (vision) மற்றும் நோக்கு (mission) போல அதிகம் பேசப்படுவது 'கையெழுத்து வாக்கியம்' (signature statement). அது என்ன கையெழுத்து வாக்கியம்?

'இதுதான் நான்' என்று என்னை எப்படி அடையாளப்படுத்துவேன்?

வழக்கமாக கையெழுத்து என்றவுடன் நாம் நம்முடைய பெயரை எழுதுகின்றோம். பெயர் ஓர் அடையாளம். சிலர் தங்கள் சொந்த மொழியில் கையெழுத்திடுவர். சிலர் மாற்று எழுத்துரு கொண்டு கையெழுத்திடுவர். சிலர் இரண்டையும் கலந்து எழுதுவர். சிலர் கோட்டு ஓவியம் போல வரைவர். ஆனால், அடிப்படையில் நம் பெயரை நாம் கையெழுத்து என இடுகிறோம்.

ஆனால், என்னுடைய பெயர்தான் எனக்கு அடையாளமா?

என்னுடைய பெயரை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அது எனக்குக் கொடுக்கப்பட்டது. எனக்குக் கொடுக்கப்பட்ட ஒன்று எப்படி எனக்கு அடையாளமாக மாற முடியும்?

அருள்பணியாளர்கள் தங்களுடைய பெயருக்கு முன் 'அருள்பணி' அல்லது 'அருள்திரு' என்று சேர்த்துக்கொள்கின்றனர். இது தவிர பெரிதாக நாம் பெயருக்கு முன்னால் எதுவும் சேர்த்துவிடுவதில்லை. பெயரின் முன் வருவதே சிறப்பு என்கிறது நம்முடைய இலக்கியம். ஆனால், சில நேரங்களில் நம் பெயருக்குப் பின் நாம் நம்முடைய சமூகம் போன்ற அடையாளங்களைச் சேர்க்கின்றோம். ஆனால் அது சால்பன்று.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும், இன்றைய முதல் வாசகத்தில் பவுலும் தங்களுடைய கையெழுத்து வாக்கியங்களைக் குறிப்பிடுகின்றனர்.

இயேசு: 'மானிட மகன் - இவருக்கு ஓய்வுநாளும் கட்டுப்பட்டதே'

பவுல்: 'பவுலாகிய நான் இந்நற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டன்'

இருவருமே இதைத் தங்களுடைய வாழ்வில் வாழ்ந்தும் காட்டினார்கள்.

இயேசு தான் மானிட மகன் என்பதை உணர்ந்து பாடுகள் ஏற்றார், இறந்தார், சாவையும் தனக்குட்படுத்தி உயிர்த்தெழுந்தார்.

பவுல் தன்னை நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனாக, பணியாளனாகக் கருதினார்.

இன்று என்னுடைய கையெழுத்து வாக்கியம் எது?

அதை நான் வாழ்வதற்கு எத்தடையையும் தாண்டத் தயாராக இருக்கின்றேனா?

என்னுடைய கையெழுத்து வாக்கியத்தை வாழ்வாக்க நான் என்ன விடயங்கள் செய்கிறேன்?

Thursday, September 5, 2019

பழையதே நல்லது

இன்றைய (6 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 5:33-39)

பழையதே நல்லது

இன்றைய நற்செய்தி வாசகத்தில், நோன்பு இருத்தல் பற்றிய விவாதத்திற்கு விடையளிக்கின்ற இயேசு, மணமகன், பிரிதல், புதிய ஆடை, பழைய ஆடை, பழைய மது, புதிய தோற்பை என உருவகங்களைக் கையாண்டுவிட்டு, இறுதியில் வித்தியாசமான ஒரு கருத்தையும் சொல்கின்றார்.

லூக்கா நற்செய்தியில் மட்டுமே இக்கூற்று காணப்படுகிறது. அது என்ன?

'பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார். ஏனெனில், 'பழையதே நல்லது' என்பது அவரது கருத்து.'

நம்முடைய வாழ்வில் எல்லாவற்றிலும் புதுமையை விரும்பும் நாம் சிலவற்றில் 'பழையதே நல்லது' என்று சொல்கிறோம்: பழைய நண்பர்கள் (சீராக் இதை அதிகம் வலியுறுத்துகிறார்) பழகுவதற்கு இனிமையானவர்கள், பழைய புழுங்கல் அரிசி, வெங்காயம், உருளைக் கிழங்கு, பழைய தோசை மாவு சமையலுக்கு ஏற்றது, பழைய மீன் குழம்பு, கருணைக் கிழங்கு குழம்பு, ஊறுகாய் உண்பதற்கு ஏற்றது, பழைய திராட்சை இரசம் குடிப்பதற்கு ஏற்றது, பழைய வீடு (ஏற்கனவே குடியிருக்கும் வீடு) பாதுகாப்பானது. இப்படி நிறைய பழையவற்றை நாம் விரும்புகிறோம்.

இயேசுவின் சமகாலத்தில் அவருடைய புதுமை மற்றும் புரட்டிப் போடுதலை எல்லாரும் விரும்பினார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிறைய இருக்கத்தான் செய்தார்கள்.

ஏன்?

நம்முடைய வீட்டிற்கு இன்று புதிதாக ஒரு பொருளை அறிமுகம் செய்ய - சோப்பு, பற்பசை, அல்லது இறையியல் கருத்து (பிரிவினை சபை சகோதரர் ஒருவர் வழியாக) - யாராவது வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர் எதைச் சொன்னாலும் நாம் நம்முடைய சோப்பு, பற்பசை, இறையியல் கருத்து, கத்தோலிக்க நம்பிக்கை ஆகியவற்றை மாற்றிக்கொள்வதாக இல்லை. புதியது தவறு என்பதற்காக அல்ல, மாறாக, பழையது நமக்கு போதுமானதாக இருக்கிறது.

'இதுவே எனக்குப் போதும்' என்ற நிலையில் இயங்கும் மனம், 'பழையதே போதும்' என்றே சொல்லும். ஏனெனில், பழையதை தன்னுடைய வேர் என மனது பார்க்கும். பழையதில் ஒரு தொடர்ச்சி இருக்கும். பழையதில் ஒருவித பாதுகாப்பு உணர்வு இருக்கும். பழையதில் ஒரு உணர்வுப்பூர்வ இணைப்பு இருக்கும்.

அதே வேளையில், நாம் பழையது என்று நினைப்பது ஒரு நாள் புதியதாக இருந்தது என்பதையும் நாம் மறுக்கக் கூடாது.

பழையதை வைத்துக்கொள்வதா? விட்டுவிடுவதா?

'பழையது நல்லது' என்றால் அதை வைத்துக்கொள்வது சால்பு. மாறாக, பழையது கிழியும் ஆடை போலவும், வெடிக்கும் தோல் பை போலவும் இருந்தால் மாற்றிக்கொள்வதே சிறந்தது.

தன்னைப் புதுப்பிக்காத எதுவும் தேங்கிவிடும், எவரும் தேங்கிவிடுவர்.

Wednesday, September 4, 2019

தச்சனுக்குத் தெரியுமா

இன்றைய (5 செப்டம்பர் 2019) நற்செய்தி வாசகம் (லூக் 5:1-11)

தச்சனுக்குத் தெரியுமா

'தச்சனுக்குத் தெரியுமா தண்ணீரின் ஓட்டம்?' - இயேசு பேதுருவின் படகை ஆழத்திற்குக் கொண்டுபோய் வலைகளைப் போடச் சொன்னபோது பேதுருவின் எண்ண ஓட்டம் இப்படித்தான் இருந்திருக்கும். 'ஆயினும் உம் சொற்படியே வலைகளைப் போடுகிறேன்' என்று பேதுரு வலைகளை வீசுகின்றார். வலை கிழியுமட்டும், இரு படகுகள் மூழ்கும் மட்டும் மீன்கள் கிடைத்தன. பேதுரு தன்னுடைய தவற்றை உணர்ந்தவராய், 'ஆண்டவரே, நீர் என்னை விட்டுப் போய்விடும்' என்று இயேசுவிடம் இறைஞ்சுகின்றார்.

மூன்று விடயங்கள் இங்கே முக்கியமானவை:

அ. தயக்கம்

'இது அப்படி நடக்குமா?' 'நினைத்த நேரத்தில் பணம் கிடைக்குமா?' 'பொருளாதார நிலை சரியாகுமா?' 'இந்தப் பிரச்சினை சரியாகுமா?' 'நான் நாளை நலமாகி விடுவேனா?' - இப்படி நிறைய தயக்கங்கள் நம்மிடம் எழுவதுண்டு. மேலும், நாம் தவறிவிட்டால், அல்லது ஏதாவது பிரச்சினையாகிவிட்டால் அதன் எதிர்விளைவையும், மற்றவர்களின் கேலிப் பேச்சையும் எப்படி எதிர்கொள்வது? என்ற கேள்வியும் நம்மிடம் எழுவதுண்டு. நாம் முன்னேறிச் செல்வதற்கு தயக்கம் பெரிய தடையாக இருக்கின்றது. அதிலும், அவசரமான நேரங்களில் நாம் காட்டும் தயக்கம் ஆபத்தாகிவிடுவதும் உண்டு. சில நேரங்களில் பணம் மற்றும் மற்ற தேவைகளின் காரணமாகவும் நாம் தயக்கம் காட்ட நேரிடும். பேதுருவுக்கு ஏற்பட்டிருக்கிற தயக்கம் இயேசுவின் வார்த்தைகளை நம்புவதில் இருக்கிறது. பேதுரு பிறப்பிலேயே மீன்பிடித் தொழில் செய்கின்றவர். தண்ணீரின் ஆழம், ஓட்டம், மீன்களின் இருப்பு, வகை அனைத்தையும் அறிந்தவர். ஆகையால்தான், அந்தத் தொழிலே தெரியாத ஒருவர் மீன்பிடி பற்றிச் சொன்னபோது தயக்கம் காட்டுகிறார். பேதுரு தன்னுடைய மூளையால் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்ததால் அவருடைய மனம் செயலாற்றுவதை அவரால் அனுமதிக்க முடியவில்லை.

ஆ. என்னைவிட்டுப் போய்விடும்

இயேசுவை அவருடைய வாழ்வில் மூன்று பேர் தங்களைவிட்டு அகலுமாறு கூறுகிறார்கள். ஏரோது குழந்தையாக இருந்த இயேசுவை உலகைவிட்டே அகலச் செய்ய முயலுகின்றார். கெரசெனேர் மக்கள் தங்கள் பன்றிகள் கடலுக்குள் வீழ்ந்து இறந்தவுடன் இயேசுவை அகலச் சொல்கின்றனர். இங்கே பேதுரு இயேசுவை அகலச் செய்கின்றார். இந்த மூன்று இடங்களிலும் இயேசுவின் பிரசன்னம் அவர்களின் வலுவின்மையை சுட்டிக்காட்டுகிறது. அந்த வலுவின்மையை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வலுவின்மை சுட்டிக்காட்டப்படுவதைத் தவிர்க்க விரும்புகின்றனர்.

இ. அனைத்தையும் விட்டுவிட்டு

'ஆண்டவரே, இன்றைக்கு இரண்டு படகுகள் மீன் பிடித்தாயிற்று. இப்படியே ஒவ்வொரு நாளும் பிடித்தால் நாம் ரொம்ப பணக்காரர் ஆகிவிடலாம்!' - 'இன்னும் கொஞ்சம்,' 'இன்னும் கொஞ்சம்,' 'இன்னும் கொஞ்சம்' என்ற கார்ப்பரெட் எண்ணம் பேதுருவுக்கு அளவே இல்லை. இயேசுவை ஒரு பொன் முட்டையிடும் வாத்தாக பேதுரு பார்க்கவில்லை. அனைத்தையும் பெற்றவர் அனைத்தையும் இழக்கத் துணிகின்றார். ஆக, இழப்பதில்தான் வாழ்க்கை என்பதை பேதுரு உடனே அறிந்துகொள்கின்றார். மீன்களை விட்டுவிட்டு ஆண்டவரைப் பற்றிக்கொள்வதே சிறந்தது என்னும் ஞானத்தை பேதுரு நொடிப் பொழுதில் பெற்றுக்கொள்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். கொலோ 1:9-14), பவுல் ஏறக்குறைய இதே கருத்தை, 'நீங்கள் கடவுளைப் பற்றிய அறிவில் வளர வேண்டும்' என்று அறிவுறுத்துகின்றார். கடவுளைப் பற்றிய அறிவு வந்தவுடன் அவருடைய வல்லமை நம்மை நிரப்பிவிடுகிறது. ஆக, இவ்வறிவு வெறும் மூளை அறிவு அல்ல. மாறாக, வாழ்க்கையையே புரட்டிப் போடும் அறிவாக இருக்கின்றது.

Tuesday, September 3, 2019

தடுத்து நிறுத்தப் பார்த்தனர்

இன்றைய (4 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 4:38-44)

தடுத்து நிறுத்தப் பார்த்தனர்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், லூக்காவின் பதிவின்படி இயேசுவின் ஒருநாள் நிகழ்வுகளை வாசிக்கின்றோம். தன்னுடைய உற்ற சீடரான பேதுருவின் மாமியாரைக் குணமாக்கும் இயேசு, தொடர்ந்து வீட்டிற்கு வெளியே இருந்த சுற்றத்தாரை, மற்றும் வெளியூர் மக்களை என தன்னுடைய குணமாக்கும் பணியை ஒருவரிலிருந்து பலருக்கு, தெரிந்தவரிலிருந்து தெரியாதவருக்கு என விரிக்கின்றார். மேலும், இயேசு எந்தவொரு ஓய்வும் இல்லாமல் உழைப்பதை நாம் இங்கே காண முடிகிறது.

பல மக்கள் அவரைத் தேடிச் செல்கின்றனர். அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களைவிட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்துநிறுத்தப் பார்க்கின்றனர்.

இது சற்று விநோதமாக இருக்கின்றது.

இயேசுவைத் தங்களோடு, தங்களுக்கென வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

இது சரியா? அல்லது தவறா?

இதை முதலில் இயேசுவின் பார்வையில் சிந்திப்போம். 'தடுத்து நிறுத்துதல்' என்பது 'உறைந்து போதல்.' நாம் இறைச்சி அல்லது மீன் போன்றவற்றை நம்முடைய குளிர்சாதனப் பெட்டியில் உள்ள 'உறைவியில்' வைக்கும்போது, அந்த இறைச்சியில் உள்ள உயிரிகளின் வளர்ச்சி ஓரளவு தடுத்து நிறுத்தப்படுகிறது. உறைநிலையில் வளர்ச்சி சாத்தியமில்லை. இயேசு தன்னுடைய வாழ்வில் தான் உறைந்துபோவதை அறவே வெறுத்தார். இதை நாம் அவர் இளவலாய் கோவிலில் காணாமல்போன நிகழ்விலேயே வாசிக்கின்றோம். அவருடைய பெற்றோர் அவரைத் தடுத்து நிறுத்தியபோது அவர் அவருடைய கைகளிலிருந்து நழுவுகின்றார். நாசரேத்தில் தன் சொந்த ஊராரின் கைகளிலிருந்து நழுவுகின்றார்.

ஒருவரின் கைக்குள் அல்லது பிடிக்குள் இருப்பது பாதுகாப்பானதுதான். ஆனால், அதுவே நம்மை உறைய வைக்கும் ஆபத்தானது. இதை அறிந்திருந்தார் இயேசு. ஆகையால்தான், 'நான் இன்னும் செல்ல வேண்டும்' என்று புறப்படுகின்றார்.

இன்று நான் என்னை எந்தெந்த நிலையில் தடுத்து நிறுத்திக் கொள்கிறேன்? அல்லது மற்றவர்கள் என்னைத் தடுத்து நிறுத்த அனுமதிக்கிறேன்?

யாரால் இது முடியும்?

யார் ஒருவர் தன்னுடைய இலக்கையும் அதற்கான நோக்கையும் அறிந்திருக்கிறாரோ அவர்தான் உறைநிலையிலிருந்து தப்பிக்க முடியும்.

எங்களுடைய அருள்பணி பயிற்சி மையத்தில் நாங்கள் சொல்வது இதுதான். அருள்பணி நிலை என்பது இலக்கு அல்ல. அப்படி அதை மட்டுமே இலக்காக வைத்திருந்தால் அருள்பணியாளராக ஒருவர் மாறியவுடன் அதை ஒரு பெரிய அடையாளமாகப் பிடித்துக்கொண்டு தேங்கிவிடுவார். அதை ஒரு வழிமுறையாகக் கொண்டு வாழ்வில் தொடர்ந்து அருள்பணி நிலையில் வளர வேண்டும் அல்லது பயணிக்க வேண்டும்.

இரண்டாவதாக, ஏன் மக்கள் இயேசுவைத் தடுத்துநிறுத்தப் பார்க்கின்றனர்?

ஒருவேளை அவர்கள் இயேசுவைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள விரும்பியிருக்கலாம்.

அல்லது ஒருவேளை அவர்கள் இயேசு மற்ற இடங்களுக்குச் செல்வதை விரும்பாமல் இருந்திருக்கலாம்.

இன்று நான் கடவுளை அல்லது மற்றவர்களை எங்கெல்லாம் தடுத்துநிறுத்தப் பார்க்கிறேன்? என்னுடைய தன்னலம் மற்றும் தன்விருப்பம் அதற்குக் காரணமாக இருக்கிறதா?

சரியான இலக்கை நிர்ணயித்தலும், அந்த இலக்கை அன்றாட பணியாகக் கொண்டிருத்தலும் நம்மை உறைநிலையிலிருந்து காப்பாற்றும். கொஞ்சம் பரந்த மனம், தாராள உள்ளம் கொண்டிருக்கும்போது நாம் மற்றவரை நிறுத்துவதை நிறுத்தி வைக்க முடியும்.

இதற்கு அடிப்படையான ஒரு மதிப்பீட்டை 'எதிர்நோக்கு' என்று தருகின்றது இன்றைய முதல் வாசகம் (காண். கொலோ 1:1-8). எதிர்நோக்கு ஒன்றே நம் இலக்கை நாம் நிர்ணயம் செய்யவும், அதை நோக்கி வழிநடக்கவும் நம்மைத் தூண்டுகிறது.


Monday, September 2, 2019

அதிகாரத்தோடு

இன்றைய (03 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 4:31-37)

அதிகாரத்தோடு

இன்றை நற்செய்தி வாசகத்தில் இயேசு கப்பர்நகூமில் உள்ள தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்றார். அங்கே அவர் இரண்டு செயல்கள் செய்கின்றார். ஒன்று, போதிக்கின்றார். இரண்டு, பேய்களை ஓட்டுகின்றார். இயேசு தன்னுடைய பன்னிரு திருத்தூதர்களைத் தெரிவு செய்யும்போதும், 'அவர் தம்மோடு இருக்கவும், நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும், பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவுமே' (காண். மாற் 3:14-15) அவர்களை அழைக்கின்றார்.

போதித்தலும், பேய்களை ஓட்டுதலும் இயேசு செய்கின்ற செயல்களாக இருக்கின்றன. ஆனால், இதற்குப் பின்னால் இருப்பது அவர் தன்னோடும் தன்னுடைய தந்தையோடும் கொண்டிருந்த தொடர்பு. இதைப் பேய்கள் கூட ஏற்றுக்கொள்கின்றன. ஆகையால்தான், 'நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்று இயேசுவிடம் சொல்கின்றன. இதுவே இயேசுவின் போதனைக்கும் அற்புதத்திற்கும் அதிகாரம் தருகின்றது.

இயேசுவை அவருடைய சமகாலத்துப் போதகர்கள் அல்லது ரபிக்களிடமிருந்து பிரித்துக் காட்டியது இதுதான்: அதிகாரம். மற்றவர்கள் கடவுளுடைய அதிகாரத்தால் செயல்பட்டனர். ஆனால், இயேசு தன்னுடைய அதிகாரத்தால் செயல்படுகின்றார்.

ஒருவர் தன்னை அறிந்தவராகவும், தன் நிறைகுறைகளை ஏற்றுக்கொள்பவராகவும் இருக்கும்போது அதிகாரம் கொண்டவராகிறார். ஏனெனில், இவர் மற்றவர்களையும் நிறைகுறைகளோடு ஏற்றுக்கொள்வார். மற்றவர்களின் நிறைகளைத் தட்டிக்கொடுத்து, குறைகளைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்வார்.

என்னை நானே ஏற்றுக்கொள்தல் அல்லது என்மேல் நானே உரிமை கொண்டாடுதல் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில், நான் என்மேல் உரிமை கொள்ளாமல் இந்த உலகமே என்மேல் உரிமை கொண்டாடினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நான் என்மேல் உரிமை கொண்டு இந்த உலகமே என்மேல் உரிமை கொண்டாடவில்லை என்றாலும் என்னால் சாதனைகள் புரிய முடியும்.

இயேசு இதை தன்னுடைய அடித்தள அனுபவம் என்னும் திருமுழுக்கு அனுபவத்திலிருந்து பெறுகின்றார். அந்த அனுபவம் அவரை அப்படியே புரட்டிப் போடுகின்றது. தனக்கு என்ன நேர்ந்தாலும் தன்னுடைய வேர் போல இருந்த அந்த அடிப்படை அனுபவம் நோக்கி அவர் அடிக்கடி பயணம் செய்தார்.

இதை இன்று நாம் எப்படிப் பெற்றுக் கொள்வது?

அ. தன்னை அறிதல்

நான் என்னுடைய நல்லது, கெட்டது, பிடித்தது, பிடிக்காதது என என்னை அறிந்து கொள்வதோடு, என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டு என்மேல் உரிமை கொண்டாடுவது. இதை நாம் இறைவேண்டல் அல்லது தியானத்தின் வழியாகக் கற்கலாம். அல்லது சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் கூறுவது போல, 'உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில். அதைவிட நம்பத்தக்கது உனக்கு வேறெதுவுமில்லை. காவல் மாடத்தின்மேலே அமர்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு அறிவுறுத்துகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்போது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்' (சீஞா 37:13-15).

ஆ. விழிப்புடன் இருத்தல்

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 தெச 5:1-6,9-11) பவுல் சொல்வது போல, 'மற்றவர்களைப் போல நாமும் உறங்கலாகாது, விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.' நாம் கொஞ்சம் அயரும்போதுதான் தவறி விடுகிறோம். பேயின் பாராட்டு வார்த்தைகளால் இயேசு அயர்ந்துவிடவில்லை. நன்மை இருக்கும் இடத்தில் நன்மை, தீமை இருக்கும் இடத்தில் தீமை, ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை. அவ்வளவுதான். இதுவே தன்னதிகாரம்.

Sunday, September 1, 2019

கண்கள் அனைத்தும்

இன்றைய (2 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 4:16-30)

கண்கள் அனைத்தும்

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில் இயேசு தான் வாழ்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வருகின்றார். அங்கே தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்றார்.

இங்கே, 'வழக்கத்தின்படி' என்ற வார்த்தை முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது.

நாம் வாழ்வில் சிலவற்றை நம்முடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். வழக்கமாக ஒரு ஹோட்டலில் சாப்பிடுவது,  ஒரு கடையில் துணி எடுப்பது, வேளாங்கண்ணி கொடியேற்றத்திற்குச் செல்வது, ஒரே இடத்தில் பெட்ரோல் போடுவது, ஒரே அழகு நிலையம் செல்வது என வழக்கங்கள் நிறைய இருக்கின்றன. வழக்கத்தை நாம் வழக்கமாக மாற்றுவது இல்லை. வழக்கமாகச் செய்வது நமக்கு மிகவும் எளிதானது. வழக்கமாகச் செய்வதில் எந்த அச்சுறுத்தலும் இல்லை. நாம் நிறையவற்றை வழக்கமாகச் செய்யக் கற்றுக்கொள்ளும்போதுதான் மேலாண்மையில் சிறந்து விளங்குகிறோம் என்று சொல்கிறார்கள். எடுத்துக்காட்டாக, பல் துலக்குவதை நாம் வழக்கமாகக் கொள்ளும் அளவிற்கு, நடை பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்வதில்லை. வழக்கமாக்கிவிடும் ஒன்று நம்முடைய ஆழ்மனத்திற்குச் சென்றுவிடுகிறது. அது நம்முடைய வாழ்வை நேர்முகமாக அல்லது எதிர்மறையாகப் பாதிக்க ஆரம்பிக்கிறது.

இயேசுவைப் பொறுத்தவரையில் ஓய்வுநாளை அணுசரிப்பது, செபம் செய்வது போன்றவை அவருடைய வழக்கங்கள். இவை நல்ல வழக்கங்களே.

செபக்கூடத்தில் இயேசுவின் மேல் கண்கள் அனைத்தும் பதிந்தன. 'கண்கள் அனைத்தும் பதிந்தன' என்ற சொல்லாடலும் நம்மைக் கவர்கிறது. சில நபர்கள், சில வண்ணங்கள், சில எழுத்துக்கள் நம் கவனத்தை உடனடியாக ஈர்க்கின்றன. சிலவற்றை நாம் பார்க்கிறோம். சிலவற்றை நாம் திரும்பிப் பார்க்கிறோம். சிலவற்றை நாம் நினைத்து நினைத்துப் பார்க்கிறோம்.

இயேசுவின்மேல் அவர்கள் கண்களைப் பதியவைக்கக் காரணம் எவை?

அ. ஆச்சர்யம். தச்சனின் மகனுக்கு எழுதப்படிக்கத் தெரியுமா? அப்படித் தெரிந்தாலும் பொதுவிடத்தில் வாசிக்கும் தைரியம் இருக்குமா? அப்படி வாசித்தாலும், 'நீங்கள் கேட்டவை நிறைவேறிற்று' என்று சொல்லும் துணிச்சல் இருக்குமா?

ஆ. ஆர்வம். இவர் யார்? உண்மையில் இவர் யார்? இவரின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது உண்மையா? இவ்வளவு நாள்கள் இவர் எங்கு இருந்தார்?

இ. பேரார்வம். இவர் சொல்வதை எல்லாம் செய்துவிடுவாரா? 'நிறைவேறிற்று' என்றால் எப்படி நிறைவேறிற்று? இவர் எப்படி நிறைவேற்றுவார்? இன்னும் நாம் உரோமைக்கு அடிமைகளாகத்தானே இருக்கிறோம்.

இந்த மூன்று காரணங்களுமே அவர்களை இயேசுவின் பக்கம் திருப்பினாலும், விரைவில் அவர்கள் இயேசுவைவிட்டுத் திரும்பிவிடுகின்றனர்.

அவரின் மேல் கண்களைப் பதித்த அவர்கள் சற்று நேரத்தில் அவரின் கழுத்தில் தங்களுடைய கைகளை வைத்து அவரை மலையிலிருந்து தள்ளிவிட அழைத்துச் செல்கின்றனர்.

இதுதான் கூட்டத்தின் மனநிலை. கூட்டம் எப்போ என்ன முடிவு எடுக்கும் என்று யாரும் சொல்ல முடியாது. திடீரென்று தன்னுடைய முடிவை யாருக்கும் தெரியாமல் மாற்றிக் கொள்ளும்.

இன்று நான் கடவுளை எப்போதெல்லாம் தேடுகிறேன்? எப்போதெல்லாம் என்னுடைய கண்களை அவர்மேல் பதிக்கின்றேன்? வெறும் ஆச்சர்யம், ஆர்வம், மற்றும் பேரார்வம் கொண்டு பதித்தால் அது ஆழமற்றதாக இருக்கும். அவரிடம் நான் ஈர்க்கப் பெறுவது எப்போது?

அவரை நான் வாழ்விலிருந்து அகற்றிவிட முயற்சி செய்கிறேனா?

அவரைப் பற்றி நான் இடறல்படுகிறேனா?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 தெச 4:13-17) புனித பவுல் இறந்தோர் உயிர்ப்பு பற்றி தெசலோனிக்கத் திருச்சபைக்கு எழுதுகின்றார். 'எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்' என்பதையே நிலைவாழ்வு என எழுதுகின்றார். நாம் இன்றே இப்போதே ஆண்டவரோடு இருந்தால் மறுவாழ்வு என்பது வெறும் நீட்சியே.