மணமுறிவும் நட்பும்
இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'மணமுறிவு முறையா?' என்ற கேள்வி இயேசுவிடம் கேட்கப்படுகிறது. படைப்பின் தொடக்க நிகழ்வைச் சுட்டிக்காட்டும் இயேசு, ஆண்-பெண் உறவின் அவசியத்தை உணர்ந்து, மணமுறிவைத் தடைசெய்வதோடு, மணமுறிவு விபச்சாரத்திற்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கிறார்.
'திருமணம் முடித்துவிட்டோம் என்பதற்காக சேர்ந்தே வாழ வேண்டுமா?'
'திருமணம் முடிக்காமல் ஒருவரை ஒருவர் அன்பு செய்வது' 'திருமணம் முடித்து ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருப்பதை' விட நல்லதுதானே?
'பொருத்தமில்லாத் திருமணத்தில் பொருளாதார காரணங்களுக்கு வற்புறுத்தி இணைக்கப்பட்டவர்கள் இணைந்தே வாழ வேண்டுமா?'
'படைப்பு நிகழ்வே ஒரு சமுதாயப் புனைவுதானே. அதை அடிப்படையாக வைத்து திருமண உறவை எப்படி வலியுறுத்தலாம்?'
- இப்படி நிறையக் கேள்விகள் நம் மனத்தில் எழ வாய்ப்பிருக்கின்றன.
இயேசுவைப் பொறுத்தவரையில் 'திருமணம்' என்ற உறவில்தான் 'நான் உனக்கு, நீ எனக்கு' என்ற அர்ப்பணம் இருக்கிறது. ஆனால், மற்ற எல்லா இணைவு உறவுகளிலும், விபச்சாரம், ஓரினச் சேர்க்கை, ஒப்பந்த திருமணம் ஆகியவற்றில், 'நீ இல்லாவிட்டால் எனக்கு இன்னொருவர்' என்ற நிலை மேலோங்கி இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, இன்றைய முதல் வாசகத்தில் (காண். சீஞா 6:5-17), நட்பின் மேன்மை பற்றிப் பேசுகின்றார். திருமணத்திற்குள் நட்பு, திருமணத்திற்குப் புறம்பே நட்பு என்று இவர் வரையறுக்கவில்லை. 'இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும். பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும்' எனத் தொடங்குகிறது இன்றைய வாசகப் பகுதி.
நண்பர்களை நான்குவகை எனப் பட்டியலிடுகின்றார் ஆசிரியர்:
அ. தன்னலம் தேடும் நண்பர்கள் - இவர்கள் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.
ஆ. பகைவர்களாய் மாறும் நண்பர்கள் - இவர்கள் உன் இரகசியத்தையும், உன் தவறையும், உன் குற்றத்தையும், உன் நிழலையும் மற்றவருக்கு வெளிப்படுத்தி உனக்கு இழிவையும், அவமானத்தையும் கொண்டுவருவார்கள்.
இ. விருந்துண்ணும் நண்பர்கள் - இவர்கள் நெருக்கடியான வேளையில் துணைநிற்க மாட்டார்கள். நல்ல நிலையில் இருக்கும்போது உயிருக்கு உயிராக இருப்பார்கள். தாழ்ந்துவிட்டால் உனக்கு எதிராய் மாறுவார்கள். உன் முகத்தில் விழிக்கமாட்டார்கள்.
ஈ. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் - இவர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள். இத்தகைய நண்பர்களைப் பெற்றவர்கள் புதையலைப் பெற்றவர்கள். இவர்களுக்கு ஈடான செல்வமில்லை. இவர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள். ஆண்டவருக்கு அஞ்சுபவர்களே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர். ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்பு பேணுவோர்.
இந்த நான்கு வகை நட்பை வகைப்படுத்தும் ஆசிரியர், நான்காம் வகை நட்பான உயரிய நட்பை ஏறக்குறைய கடவுளின் கொடை என்று சொல்கின்றார். மேலும், ஆண்டவருக்கு அஞ்சுதலும் முறையான நட்பும் இணைந்து செல்கிறது என்ற முக்கியக் கருத்தையும் பதிவு செய்கின்றார். ஏனெனில், ஆண்டவர் மேல் கொள்ளும் அச்சம் குறையும்போது நட்பில் வரையறை மீறலும் நடக்க வாய்ப்புண்டு. வரையறை மீறப்பட்டவுடன் பல நேரங்களில் இந்த நட்பு முதல் மூன்று நிலை நட்பாக மாறிவிடவும் வாய்ப்பிருக்கிறது என்பதால்தான் ஆசிரியர் இப்படிப் பதிவு செய்கின்றார்.
திருமண உறவில் - கணவன், மனைவி - மேற்காணும் நட்பு நிலைகளில் நான்காம் நிலை இருந்தால், மணமுறிவுக்கு வாய்ப்பில்லை. திருமணம் அல்லாத துறவு நிலையில், நான்காம் வகை நட்பு இருந்தால் தனிமைக்கும், பிறழ்வுக்கும் வாய்ப்பில்லை.
"மணமுறிவு" என ஆரம்பித்தாலும், இது " நட்பு" குறித்த நல்லதொரு பதிவு. ' நட்பு' எனும் சொல்லே பல கேள்விகளுக்கும்,கேலிகளுக்கும் உட்படுத்தப்பட்ட இந்த காலகட்டத்தில் இறைவனுக்குகந்த,அழகான நட்பு எது/ நண்பர்கள் யார் என்பதை அழகுறப்பட்டியலிடுகிறார் தந்தை. இந்த நட்பு எனும் சொல் மணவாழ்க்கையில் முன்னுரிமை பெறுகையில் மணமுறிவிற்கே இடமில்லை என்பது நமக்குத் தெரிந்ததே! ஆனால் நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றை அந்த 'நான்காம் வகை நண்பர்கள்' பகுதியில் எடுத்துரைக்கிறார் தந்தை."நம்பிக்கைக்குரிய நண்பர்கள்" பாதுகாப்பான புகலிடம்,புதையல்,செல்வம்,மருந்து...இவற்றுக்கெல்லாம் ஒப்பானவர்களெனக் கூறிவிட்டு "ஆண்டவருக்கு அஞ்சுவோரே'இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்" என அந்த நட்பின் தகுதியையும்,இலக்கணத்தையும் வரையறுக்கிறார்.ஆனால் அந்த இறுதி வரிகள்....இந்த நல்ல நட்பு திருமண உறவில் இருந்தால் அங்கே 'மணமுறிவுக்கு இடமில்லை' எனவும், இதே நட்பு துறவு நிலையில் இருந்தால் 'தனிமைக்கும்,பிறழ்வுக்கும் வாய்ப்பில்லை' எனவும் கூறுமிடத்தில் தந்தை தனித்து நிற்கிறார்....உயர்ந்து நிற்கிறார். இல்லறத்தார் மற்றும் துறவறத்தார் ..இருவருக்குமே தேவையான அருமையானதொரு பதிவைத் தந்த தந்தையை இறைவன் என்றென்றும் பேணிக் காத்திட வேண்டுகிறேன்.
ReplyDeleteநன்று!
ReplyDeleteநன்றி!
🙏
Amen
ReplyDelete