Wednesday, February 27, 2019

உங்களுக்கு நல்லது

இன்றைய (28 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 9:41-50)

உங்களுக்கு நல்லது

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மற்றவர்களுக்கு இடறலாக இருப்பதற்கான தண்டனை பற்றிக் குறிப்பிடுகின்றார். மேலோட்டமாக வாசிக்கும்போது இயேசு முன்வைக்கும் தண்டனைகள் மிகவும் கொடூரமாக இருக்கின்றன - 'கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுதல்,' 'கையை வெட்டிவிடுதல்,' 'காலை வெட்டிவிடுதல்,' 'கண்களைப் பிடுங்கி எறிதல்,' 'நெருப்பில் அவித்தல்.' இலக்கியக் கூறுகளின் அடிப்படையில் பார்க்கும்போது இவற்றை நாம் 'மிகைப்படுத்துதல்' என்ற இலக்கிய நடை இங்கே இருப்பதைப் பார்க்கிறோம்.

இறுதியில், இரண்டு நேர்முக வாக்கியங்களோடு நிறைவுபெறுகிறது வாசகம்:

'நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள்'

'ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்'

அதாவது, 'உங்களுக்குள் நீங்கள் சாரம் உள்ளவர்களாகவும்,' 'அடுத்தவர்களிடம் நீங்கள் அமைதியுடனும் வாழுங்கள்' என்கிறார் இயேசு.

'உப்பின் தன்மை' இழந்துபோக வாய்ப்புண்டு. நீண்ட காலமாக உப்பை வைத்திருக்கும்போது, அல்லது அதிகமான வெயில், அதிகமான குளிர் என்று தட்பவெப்பநிலை மாறிக்கொண்டிருக்கும்போது, அல்லது தூசியான இடத்தில் வைக்கும்போது என இந்நேரங்களில் உப்பு தன் தன்மையை இழக்கும் வாய்ப்பு உள்ளது. உப்பானது நீரில் கரைக்கப்படும்போது அல்லது உணவுப்பொருள்களில் கலக்கும்போதும் அது தன் தன்மையை இழக்கும். ஆனால், அப்படிப்பட்ட இழப்பு வரவேற்கத்தக்கது. ஏனெனில், அங்கே அது பயன்பாட்டுப்பொருளாக மாறிவிடுகிறது. பயன்பாட்டுப் பொருளாக மாறாமல் தன்னிலேயே தன்மை இழப்பதுதான் ஆபத்தானது. ஏனெனில், அப்படிப்பட்ட நேரத்தில் உப்பு யாருக்கும் பயனில்லாமல் போய்விடுகிறது.

அடுத்ததாக, 'அமைதியுடன் வாழ்தல்.' இது நமக்குப் பெரிய சவால். நான் அமைதியாக அடுத்தவருடன் வாழ முற்பட, அடுத்தவர் அதற்கேற்ற நிலையில் இல்லாதபோது சவால் இன்னும் அதிகமாகிறது. இருந்தாலும், அடுத்தவரின் செயல்பாட்டால் ஒருவர் தன் அமைதியை இழந்துவிடக்கூடாது. தன்னிலே உள்ள அமைதி கெடும்போது அது மற்றவர்களின் அமைதியையும் பாதிக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், சீராக், செல்வங்களில் நம்பிக்கை வைப்பதையும், திரும்பத் திரும்பப் பாவம் செய்வதையும் கடிந்துகொள்கிறார். இந்த இரண்டு நேரங்களிலும் ஒருவர் தன் உப்பின் தன்மையை இழந்துவிடவும், அமைதியை இழந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

மேற்காணும் இரண்டையும் தக்கவைத்துக்கொள்ள இன்றைய பதிலுரைப்பாடல் அழகான மந்திரத்தைக் கற்றுத் தருகிறது: 'ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டோர் பேறுபெற்றோர்.'

2 comments:

  1. அடுத்தவருக்குப் பயன்பாட்டுப்பொருளாக மாற நான் என் தன்மையை இழப்பதற்கும்,அடுத்தவர் என்னுடன் அமைதி காக்க முற்படாதபோதும் நான் என்னுடைய, மற்றும் அடுத்தவருடைய அமைதி காக்கவும்.... இறைவனின் உதவியும்,இறைவன் மீது நம்பிக்கையும் கண்டிப்பாகத் தேவை. இதை உணரும் ஒருவரால் தான் " ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டோர் பேறுபெற்றோர்" எனும் மந்திரத்தை உணர்ந்து செபிக்க முடியும்.
    அண்மை காலங்களில் பதிலுரைப்பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் தந்தைக்கு என் நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete