இன்றைய (18 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 8:11-13)
அடையாளம்
இன்றைய நற்செய்தி வாசகத்தையும் (காண். மாற் 8:11-3), முதல் வாசகத்தையும் (காண். தொநூ 4:1-15,25) இணைக்கின்ற ஒரு வார்த்தை 'அடையாளம்.' நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் வந்து அவருடன் வாதாடுகின்ற பரிசேயர், வானத்திலிருந்து அடையாளம் ஒன்று காட்டும்படி அவரைச் சோதிக்கின்றனர். முதல் வாசகத்தில், தன் முன்னிருந்து காயினை விரட்டியடிக்கின்ற கடவுள், 'காயினைக் கண்டுபிடிக்கும் எவனும் அவனைக் கொல்லாமல் இருக்க அவன்மேல் ஓர் அடையாளம் இடுகின்றார்.'
மனுக்குலத்தின் முதல் தாய் ஏவாள், தான் பெற்றெடுக்கின்ற முதல் குழந்தையை - ஆண்-பெண் உறவில் பிறந்த முதல் குழந்தையை - 'ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனைப் பெற்றெடுத்தேன்' என்று சொல்லி 'காயின்' எனப் பெயரிடுகின்றாள். 'ஆபேல்' என்ற பெயருக்கு இங்கே பொருள் இல்லை. ஆனால், 'ஆபேல்' என்றால் 'காற்று அல்லது நீராவி அல்லது ஓட்டம்' என்பது பொருள். 'ஆபேல்' என்ற வார்த்தையைத்தான் 'ஹேபல்' ('வீண்,' 'வெறுமை,' 'காற்றைப் பிடிப்பதற்குச் சமம்') என்று சபை உரையாளர் தன் நூல் முழுவதும் எடுத்தாளுகின்றார் (காண். சஉ 1:1, 12:8).
ஆதாம், ஏவாள், ஆபேல், காயின் என அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என நான்கு பேரின் பெயர்கள் ஒருங்கே கொடுக்கப்பட்டிருப்பது இன்றைய முதல் வாசகத்தில் மட்டும்தான்.
காயினிலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். மனுக்குலத்திற்கு அறநெறி போதனை கடவுளால் முதன் முதலாக நம் மூத்த அண்ணன், பெரியண்ணன் காயினுக்குத்தான் அளிக்கப்படுகின்றது: 'நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆள வேண்டும்!'
இங்கே, பாவம் என்பதைக் கடவுள் நம் வீட்டு வாயிலுக்கு வெளியே படுத்திருக்கும் பெரிய ஆள்கொல்லி உயிரினம் போல உருவகிக்கிறார். மனிதர்களுக்கு பாவத்தின்மேல் வேட்கை இருக்கிறது என்பதைவிட, பாவத்திற்குத்தான் மனிதர்கள்மேல் வேட்கை இருக்கிறது. ஏனெனில், ஒரு பாவத்தை நான் விரும்பிச் செய்ய ஆரம்பிக்கும்போது, காலப்போக்கில் அதை நான் விட முயற்சி செய்தாலும், என்னால் விட முடிவதில்லை. ஏனெனில், இவ்வளவு நாள்கள் நான் அதைப் பிடித்துக்கொண்டிருந்தேன். இப்போது அது என்னைப் பிடித்துக்கொள்கிறது.
'நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடியிருப்பது ஏன்?
- இங்கே காயின் யார் மேல் சினமுற்றான்? தன் பலியை ஏற்க மறுத்த கடவுள் மேலா? அல்லது மற்றவனின் பலிக்காக என் பலி நிராகரிக்கபட்டதே என்று மற்றவன் மேலா? இருவர்மேலும் சினம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ஆபேலைவிட தாழ்ந்த பலியை காயின் கொடுத்ததாக நமக்குப் பாடத்தில் இல்லை. 'கடவுள் ஒருவரை ஏற்றுக்கொள்கின்றார். மற்றவரை விட்டுவிடுகின்றார்' என்பதை காயினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வழக்கமாக 'கோபத்தில்' நம் தலை மேல்நோக்கி இருக்கும். இங்கே காயினின் முகம் வாடிப்போய் கீழ்நோக்கி இருக்கிறது. கீழ்நோக்கி வாடிப்போய் நிற்கக் காரணம் அவனுடைய கையறுநிலை என்றுதான் நான் சொல்வேன். அதாவது, எனக்கு மேல் இருப்பவர் மேல் எனக்குக் கோபம் இருக்கும்போது அதை என்னால் காட்ட முடியாத நிலையில் நான் தலை தாழ்ந்து வாடி விடுகிறேன்.
'நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?'
இங்கே பாருங்கள். 'நீ நல்லது செய்தால் உயர்வடைவாய்' என்று கடவுள் இதை அறுதி வாக்கியமாகச் சொல்லவில்லை. அதிலும் ஒரு கேள்வியை வைக்கிறார். ஏனெனில், நல்லது செய்வோர் அனைவரும் உயர்வடைவதில்லை என்பதே வாழ்வியல் எதார்த்தம். ஆனால், 'நீ நல்லது செய்யாவிட்டால் பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும்' என்பதை அறுதியிட்டுச் சொல்கிறார்.
'நாம் வயல்வெளிக்குப் போவோம்!'
ஆபேல் ஆடு மேய்ப்பவன். காயின் வயலில் வேலை செய்பவன். ஒருவனின் வேலைத்தளம் மற்றவனுக்கு கொலைத்தளம் என்பது நாம் அறிந்ததே. ஏனெனில், விவசாயி எந்த அளவிற்குக் கடலுக்குச் சென்று கடல் தொழில் செய்யப் பயப்படுவனோ அந்த அளவிற்கு மீனவன் நிலத்திற்கு வந்து விவசாயம் செய்யப் பயப்படுவான். ஆக, ஆபேலைப் பாதுகாப்பற்ற இடத்திற்கு அழைக்கின்றான் காயின். அங்கே அவன்மேல் பாய்ந்து அவனைக் கொல்கின்றான். பாதுகாப்பற்ற ஒருவனைக் கொல்வதுதான் பெரிய தவறு. நேருக்கு நேர் ஆயுதம் தாங்கி இருக்கும் ஒருவனை ஆயுதம் தாங்கிய இன்னொருவன் எதிர்கொண்டால் அது சரி. ஆனால், பாதுகாப்பு இல்லாத ஒருவனை இங்கே பாதுகாப்பான ஒருவன் தனக்குப் பாதுகாப்பான இடத்தில் நின்று கொலை செய்கின்றான்.
'உன் சகோதரன் ஆபேல் எங்கே?'
'ஆபேல் எங்கே?' என்று கேட்கவில்லை ஆண்டவர். 'உன் சகோதரன்' என்ற அடைமொழி வைத்து அழைக்கின்றார். அடையாளத்தை அழித்தவன் அடைமொழி பற்றியா கவலைப்படுவான்? 'எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?' எனக் கேட்கின்றான். இதில், 'எல்லாவற்றிற்கும் காவலாளி நீ தானே! உனக்குத் தெரியாதா?' என்று கடவுளையே ஏளனம் செய்வதுபோலக் கேட்கிறான் காயின்.
காயின் செய்த தவற்றை நாம் நியாயப்படுத்த முடியாதுதான். ஆனால், சில நேரங்களில் நம் சினத்தில், 'அடுத்தவர் நம் வாழ்வில் இல்லாமல் இருந்தால் எத்துணை நலம்!' என்று கேட்டுவிடத் தோன்றுகிறது. அத்தோடு நிறுத்தியருக்கலாம் காயின். ஒருபடி மேலே போய் ஆபேலுக்கு வாழ்வு இல்லாமல் செய்துவிட்டான்.
இது காயினின் கதை.
அடுத்து ஆபேலின் கதை.
'நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா!' என்று ஆண்டவர் கேட்டார்.
ஆபேல் நல்லது தானே செய்தான் ஆண்டவரே! அப்ப ஏன் அழிஞ்சு போனான்? அவனை நீர் காப்பாற்றியிருக்கலாமே? 'காயினுடன் போகாதே!' என்று எச்சரிக்கை செய்திருக்கலாமே! 'பலி கொண்டுவா!' என்று கேட்டு ஆபேலின் பலியை ஏற்றுக்கொண்ட நீர், அவனுக்கு ஏன் கைம்மாறு செய்யவில்லை?
- இது நாம் ஆபேலின் சார்பாக எழுப்பும் கேள்வி.
ஆனால், வாழ்வில் சில நிகழ்வுகள் நடக்க வேண்டுமென்றால், நடந்துதான் ஆகும் என்பதும் நிதர்சனமான உண்மை. இந்தப் பின்புலத்தில்தான் சபை உரையாளர், 'விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும் ... மாசற்றவர்களுக்கும் (ஆபேல்), மாசுள்ளவர்களுக்கும் (காயின்), பலி செலுத்துபவர்களுக்கும் (ஆபேல்), பலி செலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும்' (காண். சஉ 9:2) என உரக்கச் சொல்கிறார்.
வாழ்வில் நம் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையில்லை எனச் சொல்கிறது ஆபேலின் கதை.
அடுத்து ஏவாளின் கதை.
'ஆண்டவரின் அருளால் இவனைப் பெற்றெடுத்தேன்' என்று சொல்லித் தன் மகன் காயினை உச்சி முகர்ந்த ஏவாள், மூத்தமகன் இளைய மகனைக் கொன்ற நிகழ்விற்கு பதிலுணர்வு காட்டியதாக பாடத்தில் இல்லை. ஆனால், தன் வேலையைத் தொடர்ந்து செய்கிறாள்: 'காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்' என்று சேத்து என்ற மகனைப் பெற்றெடுகின்றாள்.
'பால் பொங்கிக் கொட்டி விட்டது. பாலையோ, பாத்திரத்தையோ, அடுப்பையோ குறை சொல்லி என்ன செய்ய?' என்று மறுபடியும், பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பைப் பற்ற வைக்கிறாள் ஏவாள். இந்தப் பால் கொட்டினாலும் அவள் மீண்டும் அடுப்பு பற்ற வைப்பாள். ஏனெனில், அவள்தான் ஏவாள். அவள்தான் நம் தாய். அவள்தான் நம் வாழ்க்கைப் பள்ளிக்கூடம்.