Friday, September 7, 2018

மரியாளின் பிறப்பு

நாளைய (8 செப்டம்பர் 2018) திருவிழா

மரியாளின் பிறப்பு

இன்று நாம் அன்னை கன்னி மரியாளின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

இன்று மாலை கல்லூரி ஒன்றில் 'தினச்சார்யம்' ('ஒவ்வொருநாள் மேலாண்மை') பற்றி ஒரு கருத்தமர்வு நடத்தச் சென்றிருந்தேன். கருத்தமர்வு முடிந்து என் தொழில் கருவிகளை நான் ஒருங்கிணைத்து அடுக்கிக்கொண்டிருந்தபோது மாணவர் ஒருவர் வந்தார். தன் பெயர் மற்றும் தன் படிப்பை அறிமுகம் செய்துகொண்ட அவர், 'அன்றைய நாளுக்கு உரியதை அன்றே செய்வது, ஒவ்வொரு நேரமும் அதனதன் நேரத்திற்குரியதைச் செய்வது, தாழ்வானதை நீக்கி மேலானதைச் செய்வது,' என நீங்கள் சொன்ன எல்லாம் எனக்குத் தூண்டுதலாக இருந்தது. ஆனால், 'பல நேரங்களில் என் வாழ்க்கை என் கையில் இல்லை. எந்நேரமும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் என் அப்பா, அம்மா. எந்நேரமும் சத்தமாயிருக்கும் என் தெரு. அடிக்கடி சண்டைகள் நடக்கும் பக்கத்து வீடு. ஒவ்வொரு நாள் வேலை செய்தால்தான் சாப்பாடு என்ற நிலை' என்று இருக்கும் என் பின்புலத்தில் நீங்கள் சொல்வதுபோல செய்வது மிகக் கடினம் என்றார். அவரின் இந்தச் சொற்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

ஏனெனில், மேலாண்மை என்பது பல நேரங்களில் மேட்டுக்குடி மக்களுக்கானது என்பதை நான் மிகவே உணர்ந்திருக்கிறேன். ஏனெனில், 'நேரம் தவறாமை' என்னும் மதிப்பீடை எடுத்துக்கொள்வோம். இது முதலாளிகளின் மதிப்பீடா? தொழிலாளிகளின் மதிப்பீடா?' முதலாளிகள் முன்னிறுத்தும் மதிப்பீடுதான். ஏனெனில், 'நேரம் தவறாமை' என்ற மதிப்பீட்டை அவர் வலியுறுத்தினால்தான், தன் தொழிலாளர்களிடமிருந்து நிறைய வேலையை அவர் பெற முடியும். 'திருடக்கூடாது' என்பது யாருடைய மதிப்பீடு? அதுவும் முதலாளிகளின் மதிப்பீடுதான். உலகில் உள்ள அனைத்தையும் திருடிக்கொள்கின்ற முதலாளி, தன் வீட்டில் தேங்காய் திருடும் தொழிலாளியை, 'திருடன்' என்பார். ஆக, எல்லாம் நமக்கு கிடைத்திருந்தால், நம் உடல், உணவு, பாதுகாப்பு தேவை நிவர்த்தியானால்தான் நாம் மேலாண்மை பற்றியே பேச முடியும்.

அப்படி என்றால், நான் என்னை அறியாமல் என் சூழலால், என் பின்புலத்தால் கட்டப்படுகிறேன். ஆகையால்தான், அறிஞர் ஜித்து கிருஷ்ணமூர்த்தி அவர்கள், 'ஒவ்வொரு மனிதரும் ஒட்டுமொத்த மனித குலத்தையே சுமக்கிறார்' என்று அழகாகச் சொல்கிறார். நான் எனது இருப்பில் என்னை அறியாமலேயே, என் பெற்றோர், உடன்பிறந்தவர், நண்பர், தெரிந்தவர், தெரியாதவர், என் படிப்பு, என் வேலை, என ஒட்டுமொத்த உலகை என்மேல் சுமக்கிறேன். ஒரு நாளும் நான் என்னை நானாக தனித்து அடையாளப்படுத்திவிட முடியாது.

இன்று நாம் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய நற்செய்திப் பகுதியில் நாம் மத்தேயு நற்செய்தியாளர் எழுதிய இயேசுவின் தலைமுறை அட்டவணையை வாசிக்கக் கேட்கிறோம்.

'... மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு' (மத் 1:16) என அட்டவணையை நிறைவு செய்கிறார் மத்தேயு. மரியாள் என்ற நாசரேத்து இளவல் தன் முதுகில் ஆபிரகாம் தொடங்கி இயேசு வரை உள்ள அனைத்து தலைமுறைகளையும் சுமந்துகொண்டு நிற்கிறார். நாசரேத்தூரில் பிறந்த இந்தப் பெண்குழந்தை இவ்வளவு பெரிய சுமையைச் சுமந்துகொண்டு நிற்கிறது.

ஆக, நம் ஒவ்வொருவருடைய பிறப்பும் மனுக்குல வரலாற்றின் ஒரு புள்ளி. இந்தப் புள்ளியில் எல்லாப் புள்ளிகளும் ஏதோ ஒரு வகையில் இணைகின்றன. ஆகையால்தான், தாவோயிஸம், 'நீ உன் சுண்டு விரலை அசைக்கும்போது எங்கோ உள்ள நட்சத்திரத்தை அசைக்கிறாய்' என்கிறது.

மரியாள் என்ற நாசரேத்தூர் குழந்தை ஏவாளிலிருந்து நம் அனைவரையும் தன் பிஞ்சுக்கைகளில் ஏந்திப் பிறக்கிறது.

இப்படி ஏந்தியதை அவர் உணர்ந்ததால்தான், 'உம் வார்த்தைப்படியே ஆகட்டும்' என்று இறைவனிடம் சரணாகின்றது. சரணடைகின்ற மனமே சுமைகள் சுமக்க முடியும்.

ஆக, இரண்டு விடயங்கள்:

அ. நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே கண்ணுக்குத் தெரியாதவாறு நிறைய சுமையை தூக்கிக்கொண்டு இருக்கிறார். அப்படி இருக்க, நான் ஏன் அடுத்தவரின் சுமையைக் கூட்ட வேண்டும்?

ஆ. என் வாழ்வின் சுமை சுமக்க முடியாதபோது அவரிடம் சரணாகதி ஆகலாமே!

நாம் கைகளில் ஏந்தும் ஒவ்வொரு குழந்தையும் தன்னை அப்படியே அடுத்தவரிடம் கொடுத்துவிடுகிறது. ஆக, குழந்தையின் சரணாகதி நமக்கு வேண்டும். அதே வேளையில் நம் கையில் இருக்கும் அந்தக் குழந்தையைக் கவனமாகக் கையாளும் பக்கவமும் தேவை.

1 comment:

  1. கருத்தமர்விற்குப் பின் தந்தையிடம் பகிர்ந்து கொண்ட இளவல் குறித்த விஷயமும்,அதற்கு தந்தை கொடுத்த விளக்கமும் புரியும் படியாகவும்,ஒத்துக்கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.ஆனால் அதன் பின் மேலாண்மை மற்றும் அதையொட்டிய சில வார்த்தைகளின் பின்புலத்தில் விளக்கிய விஷயங்கள் கொஞ்சம் புரிந்து கொள்ளக்கடினமாகவும்,இது கூட " மேல் தட்டு மக்களுக்கான" விஷயமோ என நினைக்கத்தூண்டியது.இறுதியாக என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாய்ப்பட்டது..."மரியாள் ஏவாளிலிருந்து அனைவரையும் தன் கைகளில் ஏந்தியதை உணர்ந்திருந்த காரணத்தினாலேயே அவரால் சரணாகதியாக முடிந்தது" என்பதே!நானும் கூட அடுத்தவரின் சுமை கூட்டும் காரணியாக இல்லாதிருப்பதும், என்மேல் சுமத்தப்பட்ட சுமைகளைத் தூக்க இயலாதபோது சரணாகதி அடைவதும்....இன்றையப் பதிவு எனக்குணர்த்தும் பாடம்.பதிவின் ஆரம்பம் கொஞ்சம் என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும்,பதிவின் இறுதியில் நாம் சுமக்க வேண்டியதை எளிதாக்கிக் கொடுத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete