Thursday, September 27, 2018

ஒவ்வொன்றுக்கும் காலம்

நாளைய (28 செப்டம்பர் 2018) நற்செய்தி (லூக் 9:18-22)

ஒவ்வொன்றுக்கும் காலம்

கடந்த ஆண்டு தன் வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட ஒரு ஓட்டுநரிடம், 'என்ன ஆயிற்று?' என்று விசாரித்தேன். 'என் நேரம் சரியில்லை. அவ்வளவுதான். சீக்கிரம் சரியாயிடும்' என்றார்.

'நேரத்தில் என்ன இருக்கிறது? எல்லா நேரமும் நல்ல நேரம்தான்' என்பர் சிலர்.

ஆனால், நாளைய முதல் வாசகத்தில் (காண். சஉ 3:1-11) நாம் சந்திக்கும் சபை உரையாளர், 'ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு' என்கிறார். விவிலியத்தில் 'விதி,' மற்றும் 'நேரத்தின்' மேல் நம்பிக்கை கொண்டுள்ள ஒரே நபராக நாம் சபை உரையாளரைத்தான் பார்க்கிறோம்.

'விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும்.' (சஉ 9:2,3)

'உலகில் வேறொன்றையும் கண்டேன்: ஓட்டப்பந்தயத்தில் விரைந்து ஓடுபவரே வெற்றி பெறுவார் என்பதில்லை. வலிமை வாய்ந்தவரே போரில் வெற்றி அடைவார் என்பதில்லை. ஞானமுள்ளவருக்கு வேலை கிடைக்கும் என்பதில்லை. அறிவுள்ளவரே செல்வம் சேர்ப்பார் என்பதில்லை. திறமையுடையவரே பதவியில் உயர்வார் என்பதில்லை. எவருக்கும் நேரமும் வாய்ப்பும் செம்மையாய் அமைய வேண்டும்.' (சஉ 9:11)

'ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு' என்பதை அழகிய பாடலாக சபை உரையாளர் முன்வைக்கிறார். இவர் பேசும் நேரம் 'கடிகார' நேரம் அல்ல. மாறாக, ஒவ்வொன்றும் நடக்கும் 'நிகழ்வு' நேரம். 'பிறப்புக்கு' 'இறப்புக்கு,' 'சேகரித்தலுக்கு' 'வீசி எறிவதற்கு' என ஒவ்வொன்றையும் எதிர்ப்பதமாக பதிவு செய்கின்றார். ஆனால், இவை எதிர்ப்பதங்கள் அல்ல. மாறாக, ஒன்றோடொன்று பொருந்துபவை. 'இறப்பு' என்பது 'பிறப்பின்' எதிர்ப்பதம் அல்ல. மாறாக, அது பிறப்பை நிறைவு செய்யும் மற்றொரு பகுதி. அவ்வளவுதான்.

வாழ்வில் எல்லாமே ஒன்றாக - அதாவது, பிறப்பு, மகிழ்ச்சி, அன்பு என்று மட்டும் - இருக்க வேண்டும் என நினைத்தல் தவறு. இவற்றின் மறுபகுதிகளான இறப்பு, துன்பம், வெறுப்பு என அவற்றையும் எடுத்துக்கொள்ளல் வேண்டும். வாழ்வு இயல்பாகவே இருமுனையைக் கொண்டுள்ளது. அதை ஒருமுனையாக்கிப் பார்ப்பது சால்பன்று.

ஆக, இன்று வேலையை விட்டு விலக்கும் நேரம் தனக்கு வந்தால், வேலைக்கு தன்னைச் சேர்க்கும் நேரம் வரும் என்று அந்த ஓட்டுநர் நம்பினார். அவ்வாறே, அவர் மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இரண்டாவதாக, 'கடவுள் அனைத்தையும் அதனதன் நேரத்தில் செம்மையாகச் செய்து முடிக்கின்றார். காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கின்றார். இருந்தாலும், மனிதர்களால் கடவுள் செய்வதை அறிந்துகொள்ள முடியாது' என்கிறார் ஆசிரியர்.

ஆக, அனைத்தையும் செய்பவர் கடவுள்.

நாம் இவ்வுலகில் நேரம் மற்றும் இடத்திற்குள் வாழ்கிறோம். நம் இடத்தை நம்மால் முடிவு செய்ய முடியும். ஆனால், இந்த நேரத்தில் என் வாழ்வு இருக்கிறதா, இல்லையா என்பதை முடிவு செய்பவர் நானல்ல. ஆக, நேரம் என் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.

ஆக, நேரத்தைப் பற்றிய உணர்வுதான் என்னில் இருக்கிறதே தவிர, நேரத்தில் என்ன நடக்கும் என்பது என் கையில் இல்லை.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் இறப்பை முன்னறிவிக்கிறார். அதற்கு முன் தான் யார் என்பதை தன் சீடர்களிடம் கேட்கின்றார்.

தான் பிறக்க ஒரு நேரம், இறக்க நேரம். கொல்லப்பட ஒரு நேரம், உயிர்க்க ஒரு நேரம் - என இயேசு அறிந்திருந்ததால்தான் எல்லா நேரத்தையும் ஒன்றுபோல அவரால் எதிர்கொள்ள முடிந்தது.

'அனைத்தையும் அதனதன் நேரத்தில் செய்து முடிக்கின்ற அவரிடம்' சரணாகதி ஆவதே சால்பு.

ஏனெனில், 'காலங்கள் அவருடையன. யுகங்களும் அவருடையன.'

1 comment:

  1. " நேரத்தைப்பற்றிய உணர்வு தான் என்னில் இருக்கிறதே தவிர,நேரத்தில் என்ன நடக்கும் என்பது என் கையில் இல்லை" நிதர்சனமான உண்மை.யாரால் மறுக்க முடியும் இதை? அவருக்கான அனைத்து நேரங்களையும் அவர் அறிந்திருந்ததால் தான் இயேசுவால் எல்லா நேரங்களையும் ஒன்று போல எதிர் கொள்ள முடிந்தது. என்னால் இது இயலாது எனத்தெரிந்த பின் " அனைத்தையும் அதனதன் நேரத்தில் செய்து முடிக்கின்ற அவரிடம் ' சரணாகதி' ஆவதே சால்பு. விவேகமுள்ளவன் எவனும் ஏற்றுக்கொள்ள கூடிய உண்மையே இது.இந்த நேரத்தில் என் சிந்தனையைப்பல நேரங்களில் தட்டி எழுப்பிய ஒரு ஆங்கிலப்பாடல் என் நினைவிற்கு வருகிறது.அதன் ஆரம்ப வரிகள்!

    In His time in His time
    He makes all things beautiful in His time
    Lord please show me every day
    As you're teaching me your way
    That you do just what you say
    In your time.......

    Thanks a lot Dear Father...for tapping my memory. ...

    ReplyDelete