Thursday, September 6, 2018

பழையதே நல்லது

நாளைய (7 செப்டம்பர் 2018) நற்செய்தி (லூக் 5:33-39)

பழையதே நல்லது

யோவானுடைய சீடர்களுக்கும், இயேசுவின் சீடர்களுக்கும் இடையே 'நோன்பு பற்றிய வாக்குவாதம்' எழும்போது, புதிய இரசம் பழைய தோற்பை, புதிய ஆடை பழைய ஆடை உருவகங்களைத் தருகின்றார் இயேசு. ஆனால், லூக்கா நற்செய்தியில் மட்டும், 'பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார். ஏனெனில் 'பழையதே நல்லது' என்பது அவர் கருத்து' என கொஞ்சம் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

திராட்சை மதுவைப் பொறுத்தவரையில் பழைய மதுதான் நல்லது. ஏனெனில், நாள்கள் கூடக்கூட அதன் சுவை கூடும். அதே போல அரிசியிலும் பழைய அரிசியில்தான் சோறு நன்றாக இருக்கும் என்பது நம்ம ஊர் வழக்கு. ஒருவேளை லூக்கா நற்செய்தியாளரின் குழுமத்தில் 'பழையதை' ஏற்றுக்கொள்ளும் நிறைய பேர் இருந்திருக்கலாம். ஆகையால்தான், லூக்கா அவ்வாறு பதிவு செய்கிறார்.

நாளைய நற்செய்தி வாசகம் ஒரு முன்மொழியையும், ஒரு கட்டளைமொழியையும் கொண்டுள்ளது:

முன்மொழி என்ன? 'இன்று புதியதாக இருப்பது, நாளைய பழையதாகும்'

கட்டளைமொழி என்ன? 'ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் ஏற்றுக்கொள்வது'

மணமகன் தங்களோடு இருக்கும்வரை விருந்தினர்கள் நோன்பு இருக்கத் தேவையில்லை. ஏனெனில் அது நோன்பின் காலமல்ல. கொண்டாட்டத்தின் காலம். கொண்டாட்டத்தின் காலத்தில் கொண்டாட்டம் நடைபெற வேண்டும். அவர் பிரியும் நேரம் வரும். ஆக, இந்தக் காலம் மறையும். இன்னொரு காலம் பிறக்கும். அந்தப் பிரிவு நேரத்தில் மக்கள் நோன்பு இருக்கலாம்.

நாளைய முதல் வாசகத்திலும், இதையொத்தே, 'காலத்தைப் பற்றிய' பதிவை நாம் வாசிக்கின்றோம். 'எனவே, குறித்த காலம் வரும்முன், அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம்' என்கிறார் பவுலடியார். அந்தந்த காலத்திற்கு உரியதை அந்தந்த காலத்திற்குச் செய்வது.

திருமுழுக்கு யோவான் வந்தபோது அவர்தான் புதியவர். இன்று இயேசு வந்தவுடன் முன்னவர் பழையவர் ஆகிவிடுகிறார். அவரவர் காலத்தில் அவரவர் புதியவர்தான்.

ஆக, இன்று புதியதாக இருப்பது நாளை பழையதாகும். அது பழையதாகுமுன் அதன் புதுமையையும் இரசிப்பதும், பழையதாகிவிட்டபின்னும் அதனை இரசிப்பதும் (திராட்சை மது போல) அதனதன் பயன்பாட்டில்தான் இருக்கிறது. சில நேரங்களில் புதியது தன்னிலேயே ஈர்ப்பற்றதாகிவிடும் - புதிய ஸ்மார்ட்ஃபோன் போல.

ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் இரசிக்கும், மகிழும் மனம் இருந்தால் நலம்.

1 comment:

  1. தெளிவாகச் சொல்கிறது இன்றையப் பதிவு..." இன்று புதியதாக இருப்பது நாளை பழையதாவதும்,அது பழையதாகுமுன் அதன் புதுமையை இரசிப்பதும்,பழையதான பின்னரும் அதைத்தொடர்ந்து இரசிப்பதும் அதன் பயன்பாட்டில் தான் உள்ளது" என்று.ஒவ்வொரு மனிதனும்/ பொருளும் அவர்களுக்கு/ அவற்றிற்கு உரியமதிப்பை அதனதன் காலகட்டங்களில் உலகிற்கு உணர்த்தவே செய்வர்/ செய்யும்.ஆனால் சில நேரங்களில் புதியது தன்னிலேயே ஈர்ப்பற்றதாகிவிடும் என்பதற்கு உதாரணமாகத் தந்தை புதிய ஸ்மார்ட் ஃபோனை உதாரணம் காட்டுவது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது..
    எது எப்படி இருப்பினும் " இன்று புதியதாக இருப்பது நாளய பழையதாகும்" எனும் முன் மொழியையும், " ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் ஏற்றுக்கொள்வது" எனும் கட்டளை மொழியையும் புரிந்து கொள்வோம்; அந்தப் புரிதலில் வாழ்வைத் தொடருவோம்!.
    தந்தைக்கு வணக்கங்களும்!! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete