Monday, September 3, 2018

ஒருவரோடு ஒருவர்

நாளைய (4 செப்டம்பர் 2018) நற்செய்தி (லூக்கா 4:31-37)

ஒருவரோடு ஒருவர்

நாளைய நற்செய்தி வாசகத்தில் 'இயேசுவும் தீய ஆவியும்,' 'தீய ஆவியும் இயேசுவும்,' 'மக்களும் மக்களும்' என ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்கின்றனர்.

'இயேசுவும் தீய ஆவியும்,' மற்றும் 'தீய ஆவியும் இயேசுவும்' பேசும் நிகழ்வில் தீய ஆவி பெற்றவர் அந்த ஆவியிடமிருந்து விடுதலை பெறுகிறார். அவர் நலம் பெறுகிறார். அவர் பேச்சற்றவராய்க் கீழே விழுகிறார்.

மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும்போது இயேசுவைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவுகிறது.

காலையில் தொடங்கி இரவு வரை நாம் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறோம். நம் வார்த்தைகளால் மட்டுமல்ல. நம் மௌனத்தாலும் பேசுகின்றோம். நேருக்கு நேர் உரையாடல், அலைபேசி, காணொளி என உரையாடிக்கொண்டிருக்கிறோம். நம் உரையாடலில் பல பேசுபொருள்கள் இருக்கின்றன. ஆனால், நாசரேத்து மக்களின் பேசு பொருள் இயேசுவாக மட்டுமே இருக்கின்றார்.

பேசுபொருளுக்குத் தொடர்பில்லாத ஒருவரைப் பற்றி பேசுவதை நாம் 'புறணி' என்கிறோம். 'புறணி' என்பது சமூகவியலில் ஒரு நேர்முகமான சமூகப் பண்பாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், 'புறணி'தான் மனிதர்களுக்குள் குழும உணர்வை வளர்க்கிறது. ஏனெனில், புறணி பேசும் ஒருவரும் மற்றவரும் தங்களை அறியாமலேயே ஒருவரோடு ஒருவர் குழுவுணர்வால் இணைந்துகொண்டு, 'நாம் - அவர்கள்' என்ற பேதத்தை உருவாக்கிவிடுகின்றனர். 'புரோட்டா வாங்கிக்கொடுத்து புறணி பேசுதல்' என்ற சொலவடை கிராமங்களில் உண்டு. இன்று வாட்ஸ்ஆப், கூகுள் என க்ரூப்களில் நாம் செய்வதும் ஒருவகை புறணியே.

நாம் பேசும் புறணியால் அடுத்தவர் ஒரு புதிய கருத்தைத் தெரிந்துகொள்கிறார். அல்லது வளர்கிறார். இப்படி இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், அடுத்தவரின் பெயர் களங்கப்படுகிறது. அல்லது அடுத்தவரை நாம் அழித்துவிட நினைக்கிறோம். இப்படி இருந்தால் அது தவறு.

நாம் எப்படி ஒருவரோடு ஒருவர் பேச வேண்டும் என நாளைய முதல் வாசகத்தில் (1 கொரி 2:10-16) தூய பவுல் அறிவுறுத்துகிறார்: 'தூய ஆவி கற்றுத்தரும் சொற்களையே பேசுங்கள்.' தூய ஆவி ஆண்டவரின் மனத்திலிருந்து புறப்படுவது. ஆக, அந்த மனத்தில் அமைதியில் உறங்கும் நல்ல, கனி தரக்கூடிய வார்த்தைகளைப் பேசினால் எத்துணை நலம்.

இயேசுவைப் பற்றிய இடறல் வார்;த்தைகளைப் பகிராமல், அவரைப் பற்றிய வியப்பு வார்த்தைகளைப் பகிர்கின்றனர்.

ஆக, நாமும் அவரைப் பற்றியும், ஒருவர் மற்றவர் பற்றியும் உணரும் வியப்பு வார்த்தைகளை ஒருவர் மற்றவரோடு பகிரலாம். இப்படி புறணி பேசும்போது பரவுவது புறணி மட்டுமல்ல. புறணி பேசுபவரும்தான். ஆக, ஒருவரோடு ஒருவர் நாம் மேற்கொள்ளும் உரையாடல் நாசரேத்து மக்களின் உரையாடல்போல இருக்கட்டும்.

1 comment:

  1. "தூய ஆவி கற்றுத்தரும் சொற்களையே பேசுங்கள்; தூய ஆவி ஆண்டவரின் மனத்திலிருந்து புறப்படுவது.ஆக, அந்த மனத்தில் அமைதியில் உறங்கும் நல்ல,கனி தரக்கூடிய வார்த்தைகளைப் பேசினால் எத்துணை நலம்!"இதை உணர்ந்து நடந்தோமெனில் அது பேசுபவர்,கேட்பவர் இருவருக்குமே நன்மை பயக்கும் விசயமே!
    "புறணி" எனும் நாம் எதிர்மறையாகக் கையாளும் ஒரு வார்த்தைக்குத் தந்தை புனிதம் தந்து அதை நேர்மறை வார்த்தையாகவும் மாற்றுகிறார்.எப்படி? நாம் அவரைப்பற்றியும்,ஒருவர் மற்றவர் பற்றியும் குறித்த வியப்பு வார்த்தைகளைப்பேசும் போது புறணி எனும் வார்த்தை மட்டுமல்ல; புறணி பேசுபவரும் புனிதம் பெறுகிறார்.ஆக, நாம் புறணி பேசக்கூடாது என்பது நம்மைக்குறித்த தந்தையின் எதிர்பார்ப்பல்ல; பேசும் புறணி நசரேத்து மக்களின் உரையாடல் போல் இருக்கட்டும் என்பதே. நாம் நல்லது எதைச் செய்திடினும்,பேசிடினும் அது நசரேத்து மக்களின் உரையாடல் மட்டுமல்ல; நசரேத்து நாயகன் பற்றிய உரையாடலும் கூட. ஆகவே பேசுவோம்; புறணி பேசுவோம்; நசரேத்து மக்களின் பாணியில் பேசுவோம். இரசிக்கும் படியாக இருக்கிறது தந்தையின் வார்த்தை விளையாட்டு., வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete