Monday, July 23, 2018

உம்மோடு பேச வேண்டும்

நாளைய (24 ஜூலை 2018) நற்செய்தி (மத் 12:46-50)

உம்மோடு பேச வேண்டும்

இயேசுவைக் காண அவருடைய தாயும், சகோதரர்களும் வரும் நிகழ்வு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நற்செய்தி வாசகத்தில் வந்துவிடுவதுபோல இருக்கிறது. நாளைக்கு இந்த வாசகம்தான்.

'உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்' என்று அவர்கள் வந்த நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றார் இயேசுவிடம் சொன்ன அவர்.

இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரிடம் என்ன பேச வேண்டும் என வந்திருப்பார்கள்?

'நீ பேசுவதைக் கேட்டால் போதும்' என்று வந்தார்களா?

அல்லது

'நீ எங்ககிட்ட ஏதாவது பேசு' என்று கேட்டு வந்தார்களா?

இயேசு தன் தாய், தந்தை, மற்றும் சகோதரர்களிடம் பேசியதாக, உரையாடியதாக எந்தப் பகுதியுமே இல்லை நற்செய்தி நூல்களில். ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்களில் இருக்கலாம்.

தன் குடும்பத்தினரோடு எந்தவொரு நெருக்கமும் இல்லாத இயேசுவை மற்ற எல்லாரோடும் நெருக்கமாக வைத்துப் பார்ப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

இயேசுவும் நாளைய நற்செய்தி வாசகத்தில், 'இந்த வர்றேன் மா!' என்று பதில் தரமால், 'கடவுளின் திருவுளம்,' 'விண்ணகத்தின் தந்தை' என புரியாத மொழியில் பேசுகிறார்.

ஒருவேளை மரியாளுக்கு இவரின் இந்த மொழி புரிந்திருக்கலாம்.

மொழி புரிந்ததா அவருக்கு?

அல்லது கதவருகில் நின்றுவிட்டு மௌனமாகக் கலைந்துவிட்டாரா அவர்?

'உம்மோடு பேச வேண்டும்' - இது இன்றைய நம் மன்றாட்டாக இறைவனிடம் இருக்கட்டும்.

1 comment:

  1. "தன் குடும்பத்தினரோடு எந்தவித நெருக்கமும் இல்லாத இயேசுவை மற்ற எல்லாரும் நெருக்கமாக வைத்துப்பார்ப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது" .....என்கிறார் தந்தை.இயேசு தன் தாயிடம் " இதோ வர்றேன் மா" என்று சொல்லாமல் போயிருக்கலாம்; அவர்களுக்குப் புரியாத மொழியில் பேசியிருக்கலாம் ஆனால் பல சமயங்களில் ஒரே அலைவரிசையில் இருக்கும் ஒருவரின் மௌனம் அதே அலைவரிசையில் இருக்கும் அவரை அடுத்து இருப்பவருக்கு ஆயிரம் மொழிகளை உணர்த்துமே! வள்ளுவரின்
    " கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல"
    எனும் வரிகள் காதலுக்கு மட்டுமல்ல...கண்களின் நிறைந்த பாசத்தை வெளிப்படுத்தும் தாய்- சேய்க்கும் பொருந்துமென நினைக்கிறேன்.எது எப்படியிருப்பினும் " உம்மோடு பேச வேண்டும்" எனும் தாயின் விருப்பம் நம் விருப்பமாகவும், மன்றாட்டாகவும் இருப்பின் நாமும் இயேசுவின் சகோதர,சகோதரிகளே! தந்தையின் மொழியில்.இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்ன... இரு நாட்களுக்கு ஒருமுறை வந்திடினும் நெஞ்சத்திற்கு நெருக்கமானதொரு பதிவு....தாய்- சேய்க்கிடையே ஊஞ்சலாடும் உறவு பற்றி சிலாகிப்பதால்.....தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete