Tuesday, July 31, 2018

வாங்கிக்கொள்கிறார்

நாளைய (1 ஆகஸ்ட் 2018) நற்செய்தி (மத் 13:44-46)

வாங்கிக்கொள்கிறார்

நாளைய நற்செய்தி வாசகத்திலும் இயேசுவின் விண்ணரசு பற்றிய உவமைகள் தொடர்கின்றன.

நிலத்தில் மறைந்திருந்த புதையல் மற்றும் அரிய வகையான முத்தைக் கண்டுபிடிக்கின்ற நபர்கள் தங்களுக்குள்ள யாவற்றையும் விற்றி நிலம் மற்றும் முத்தை வாங்கிக்கொள்கின்றனர்.

ஒருவர் சாதாரணமாக ஒரு இடத்தில் தோண்டுகிறார். அந்த இடத்தில் புதையல் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் தான் கண்ட புதையலை அப்படியே எடுத்துக்கொண்டு போயிருக்கலாம். இல்லையா? அவர் ஏன் போய் தனக்குள்ளதையெல்லாம் விற்று அந்த நிலத்தை வாங்க வேண்டும். ஒருவேளை இன்னும் அங்கே புதையல் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்பதாலா? இந்த ஒரு காரணத்திற்காகத்தான் இருக்க முடியும். ஏனெனில் யாருக்கும் தெரியாமல் தோண்டியவர் யாருக்கும் தெரியாமல் புதையலை எடுத்துவிட்டு மீண்டும் குழியை மூடிவிடலாம் அல்லவா!

அதுபோல, வணிகர் ஒருவர் விலையுயர்ந்த முத்து ஒன்றைக் காண்கின்றார். கண்டவுடன் தமக்குள்ளதையெல்லாம் விற்று அந்த முத்தை உடைமையாக்கிக்கொள்கின்றார்.

மேற்காணும் இரண்டு உவமைகளும் இறையரசைப் பற்றி என்ன சொல்கின்றன?

அ. இறையரசைத் தேடுபவரே அதைக் கண்டுகொள்வார்.

ஆ. தேடி அதைக் கண்டுபிடித்த நபர் உடனடியாக செயலாற்ற வேண்டும்.

இ. தான் தேடிய இறையரசைப் பெற்றுக்கொள்ள தன்னிடம் இதுவரை இருந்த அனைத்தையும் விற்றுவிட (விட்டுவிட) வேண்டும்.

மேற்காணும் மூன்று நிலைகளில் ஒன்று குறைவுபட்டாலும் இறையரசு எட்டாக்கனியாகிவிடும்.

இதைத்தான் நாளைய முதல் வாசகத்திலும் பார்க்கிறோம்.

தனது இறைவாக்குப் பணியில் தான் சந்திக்கின்ற சவால்களைப் பற்றி ஆண்டவரிடம் முறையிடுகின்றார் இறைவாக்கினர் எரேமியா.

'நான் கடன் கொடுக்கவும் இல்லை. கடன் வாங்கவும் இல்லை. என்னை எல்லாரும் சபிக்கிறார்கள்.'

- கடன் கொடுப்பவர் தயை காட்டுகிறார். கடன் வாங்குபவர் தயை பெறுகிறார். ஆனால், காலப்போக்கில் கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிக் கொடுக்காதபோது கடன் கொடுத்தவரின் தயை மறைந்துவிடுகிறது. அதுபோல, கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிக் கொடுத்தாலும் அவர் யாரின் தயைiயும் தேவையில்லை என்று ஆகிவிடுகின்றார். ஆக, கடன்பட்டிருத்தல் அல்லது கடன் கொடுத்தல் அடுத்தவரின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கிவிடுகிறது.

'என் கை உன்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன்.'

- இறைவனின் அழைப்பைப் பெறுபவர்கள் அனுபவிக்கும் தனிமையின் பொருளை நான் இங்கே காண்கிறேன். அதாவது, அவரின் கை உள்ள இடத்தில் வேறு எவரும் கையை வைக்க இயலாமல் போய்விடுகிறது. காலப்போக்கில் அதுவே அழைக்கப்படுபவருக்கு தனிமையைக் கொண்டுவந்துவிடுகிறது.

எரேமியாவின் இந்த முறையீட்டிற்கு இறைவன் சொல்வது ஒன்றே ஒன்றுதான்:

'பயனில நீக்கி, பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாய் இருப்பாய்.'

- அதாவது, நீ பேசுவது, முறையிடுவது எல்லாம் தேவையற்றது. தேவையற்றதை விடுத்து தேவையான என்னை மட்டும் பற்றிக்கொள் என்கிறார் ஆண்டவராகிய கடவுள்.

கவனமாகத் தேடுதல் - வேகமாகச் செயலாற்றுதல் - உடனடியாக இழத்தல் இவை இறையரசைப் பெற்றுத்தருகின்றன.

Monday, July 30, 2018

எங்களுக்கு விளக்கிக் கூறும்

நாளைய (31 ஜூலை 2018) நற்செய்தி (மத் 13:36-43)

எங்களுக்கு விளக்கிக் கூறும்

மக்கள் கூட்டத்திற்கு பல உவமைகள் வழியாகப் போதித்த இயேசு தன் வீடு திரும்புகிறார். அவருடைய வீட்டிற்குள் திருத்தூதர்களும் உடன்வருகின்றனர்.

ஒவ்வொருவரின் வீடும் அவரவருக்கு உலகமே.

ஊர், உலகை எல்லாம் சுற்ற வரும் ஒவ்வொரு மாலையும் திரும்புவது தன் வீட்டிற்குத்தான்.வீடு திரும்புவது மிக அழகிய அனுபவம். அவர் வீட்டிற்குள் இருக்கும் நிகழ்வை கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கலாம்.

கையில் கொண்டு போன கைப்பை, தேய்ந்த காலணிகள், காலில் தூசி, முகத்தில் வியர்வை, முழங்கால் வலி என வீட்டிற்குள் நுழைந்தவர் தன் கைப்பையை வீட்டின் உள்ளே உள்ள ஒரு கட்டையில் மாட்டிவிட்டு, வீட்டிற்குள் ஓரமாக இருக்கும் தொட்டியில் நீர் முகந்து பாதங்களைக் கழுவி, முகத்தைத் தழுவி, ஒரு துண்டால் துடைத்துக்கொண்டே சுவரில் சாய்ந்துகொண்டு அமர்வார். அவருடைய தாய் அவருக்கு சூடாக ஏதாவது குடிக்கக் கொடுப்பார். உடன் வந்த திருத்தூதர்களும் அப்படியே அவருடன் அமர்ந்திருப்பார்கள். எல்லாம் கொஞ்சம் சாந்தமானவுடன், 'ரபி, ஒரு டவுட்!' என்று கேட்டிருப்பார்கள்.

'வயலில் தோன்றிய களைகள் பற்றிய எடுத்துக்காட்டை எங்களுக்கு விளக்கிக் கூறும்!' என்கின்றனர்.

சீடர்களின் இந்த ஆர்வம் எனக்குப் பிடித்திருக்கிறது.

சிலர் உடனே எதையும் புரிந்துகொள்வர்.

சிலர் புரியவில்லையென்றாலும் தங்களுக்குப் புரிந்ததாக சொல்வர்.

சிலர் புரிந்தால் என்ன, புரியாவிட்டால் என்ன என அமைதியாக இருப்பார்கள்.

ஆனால், சீடர்கள் தங்களுக்குப் புரியவில்லை என்பதை மிகவும் அழகாகவும், உரிமையோடும் சொல்கிறார்கள். இயேசுவும் அவர்களுக்கு உவமையின் பொருளை விளக்குகின்றார்.

இந்த நாள்களில் நான் வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

'எனக்குப் புரியல!' என்று யாராவது கேட்கும்போது சில நேரங்களில் எனக்கு கோபம் வருவதுண்டு. அந்தக் கோபம் அவரை நோக்கியதாக இல்லாமல், என்னை நோக்கியே இருக்கும். என்னால் ஏன் புரியுமாறு சொல்ல முடியவில்லை! என நான் அந்த நேரங்களில் கேட்டுக்கொள்வதுண்டு.

'எனக்குப் புரியல!' என்று சொல்வதற்கு நிறைய தைரியம் வேண்டும். ஏனெனில் புரிய வைக்கும் ஆசிரியர் நம்மேல் எரிச்சல் படவும், கோபப்படவும் அங்கே வாய்ப்புக்கள் உண்டு.

சீடர்களின் இந்தத் தைரியத்தை நாம் இன்று கற்றுக்கொள்வோம்.

இரண்டு நாள்களுக்கு முன் டுவிட்டரில் ஒரு இளவல் பதிவிட்டிருந்தார்: 'வாழ்க்கை வாழை இலையில ஊத்துன இரசம் மாதிரி இருக்கு. எங்க போகுதுன்னே தெரியல!'

நாமும் இயேசுவின் வீட்டிற்குள் சென்று வாழ்வில் நமக்குப் புரியாதவற்றை, 'எனக்கு கொஞ்சம் விளக்கிக் கூறும்' என்று கேட்கலாமே!

Sunday, July 29, 2018

மாவு முழுவதும்

நாளைய (30 ஞாயிறு 2018) நற்செய்தி (மத் 13:331-35)

மாவு முழுவதும்

இரண்டு மாதங்களுக்கு முன் இறையன்பு அவர்கள் எழுதிய  'இரவல் வாங்குதல்' பற்றிய கட்டுரையை வாசித்தேன். கிராமங்களில் இருந்து, இன்னும் சில கிராமங்களில் இருக்கும், சில பழக்கங்களில் ஒன்று 'உறைக்கு தயிர் வாங்குதல்.' வீட்டில் பால் மிஞ்சியவுடன் - அது மிகக் கொஞ்சமாக இருந்தாலும் - அதைத் தயிராக மாற்றி பொருளாதாரப் புரட்சி செய்பவர்கள் நம் அம்மாக்கள். சுடவைத்த பாலில் எதிர்வீட்டிலிருந்து வாங்கி வந்த டீஸ்பூன் அளவு தயிர் ஊற்றப்பட்டு மூடி வைக்கப்படும். காலையில் திறந்து பார்க்கும்போது அது தயிராக உறைந்திருக்கும்.

என்ன ஆச்சர்யம்?

வீடு பூட்டப்பட்டாலும், ஜன்னல்கள் அடைக்கப்பட்டாலும், விளக்குகள் அணைக்கப்பட்டாலும், வீட்டில் இருப்பவர்கள் தூங்கினாலும் பாலில் விழுந்த உறைத்தயிர் வேலை செய்துகொண்டிருக்கிறது. 'யாரும் என் வேலையைப் பார்க்கவில்லை' என்ற வருத்தம் அதற்கு இல்லை. 'நான் வேலை செய்வதை யாரும் பாராட்டுவதில்லை' என்று அது தன் வேலையை பாதியில் நிறுத்திக்கொள்வதில்லை.

உறைத்தயிர் அந்தப் பாலில் செய்யும் வேலைக்கு ஐந்து குணங்கள் உண்டு:

அ. யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அது தன் வேலையைச் செய்துகொண்டிருக்கும்.
ஆ. அதன் வேலையை யாரும் நிறுத்திவைக்க முடியாது.
இ. அது புளிப்பேற்றிய தயிரை யாரும் திரும்ப பாலாக மாற்ற முடியாது.
ஈ. அது செயலாற்றியவுடன் பால் தன் இயல்பை முற்றிலும் இழந்து தயிராக - புதிய இயல்பைப் பெற்று - மாறுகிறது.
உ. அது தன் இயல்பை இழந்து, தான் கெட்டுவிடாமல் நின்று, அடுத்தவருக்குப் பயன்படுகிறது.

நிற்க.

உறைத்தயிருக்கு பதில் புளிப்புமாவு, பாலுக்குப் பதில் மாவு என உருவகத்தைக் கையாண்டு இறையரசின் மையப்பொருளை விளக்குகின்றார் இயேசு. பெண் ஒருவர் கொஞ்சம் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் கலக்க அது விடியுமுன் புளிப்புமாவாகி அப்பத்திற்குத் தயாராகிறது.

இப்படி உருவகப்படுத்தும் இறையரசும் மேற்காணும் ஐந்து குணங்களைப் பெற்றிருக்கும்:

அ. யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் இறையரசு தன் வேலையைச் செய்துகொண்டிருக்கும்.
ஆ. இறையரசின் வேலையை யாரும் நிறுத்திவைக்க முடியாது.
இ. அது செய்த வேலையை யாரும் மீண்டும் பழைய நிலைக்குத் திருப்ப முடியாது.
ஈ. தான் தொடர்பில் இருக்கும் அனைத்தின் இயல்பையும் அது மாற்றிவிடும்.
உ. அடுத்தவருக்குப் பயன்தருதலையும், அடுத்தவரின் நலனையும் அது தன் இலக்காகக் கொண்டிருக்கிறது.


Friday, July 27, 2018

களைகளைப் பறிக்கும்போது

நாளைய (28 ஜூலை 2018) நற்செய்தி (மத் 13:24-30)

களைகளைப் பறிக்கும்போது

விதைப்பவர் எடுத்துக்காட்டைத் தொடர்ந்து இயேசு வயலில் வளரும் களைகள் எடுத்துக்காட்டை முன்வைக்கின்றார். நிலத்தின் உரிமையாளர் நல்ல விதைகளைத் தன் நிலத்தில் விதைக்கிறார். ஆனால், அங்கே களைகளும் வந்துவிடுகின்றன. 'இது பகைவனின் வேலை' என அறிகின்ற தலைவன், அவற்றைப் பறிக்க முனைந்த தன் பணியாளர்களைத் தடுக்கின்றார். 'களைகளைப் பறிக்கும்போது ஒருவேளை நல்ல செடியையும் பறித்துவிடும் அபாயம் இருப்பதால் இப்போது பறிக்க வேண்டாம்' என்கிறார் தலைவர். ஆனால், இப்படி வளர விடுவதால் நல்ல செடிகளுக்கு உரிய தண்ணீரையும், உரத்தையும் களைகளும் எடுத்துக்கொள்கின்றனவே என்று நமக்குக் கோபம் வருகிறது.

தலைவரின் பார்வை வித்தியாசமாக இருக்கிறது. தன் வளம் அழிந்தாலும் பரவாயில்லை நல்லது தீயவற்றோடு தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் தலைவர்.

நீண்ட காலம் வளரவிடுவதால் களையின் இயல்பு மாறப்போவதில்லை. ஆனால் அது களையாகவே இருக்கும்.

ஆனால், இதை மனிதர்களுக்குப் பொருத்திப் பார்த்தால் பொருள் மாறுபடும். 'நல்லவர்கள்,' 'அல்லவர்கள்' என இரண்டு பேர் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். இருவரும் வளரும்போது ஒரு கட்டத்தில் அல்லவர் நல்லவராக வாய்ப்பு இருக்கிறது.

தலைவரின் இந்தப் பொறுமை போற்றுதற்குரியது. தன் நிலத்தில் வளரும் அனைத்தின்மேலும் உரிமை கொண்டாடுகின்றார் தலைவர். இது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. இந்த பெருந்தன்மையைப் பயன்படுத்தாத களைகள் அகற்றப்படும். எரிக்கப்படும்.

அவரின் பெருந்தன்மையில் நம் அன்றாடம் விடிகிறது - அது களைக்காக விடிகிறதா? அல்லது கோதுமைக்காக விடிகிறதா? நம் ஒவ்வொருவரும்தான் முடிவு செய்ய வேண்டும்.

Thursday, July 26, 2018

பாறைப் பகுதிகளில் விதை

நாளைய (27 ஜூலை 2018) நற்செய்தி (மத் 13:18-23)

பாறைப் பகுதிகளில் விதை

நாளைய நற்செய்தி வாசகத்தில் விதைப்பவர் எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம். இதை வாசிக்கும் ஒவ்வொரு பொழுதும் என்னுள் ஒரு நெருடல் எழுவதுண்டு. விதைகள் சரியாகப் பலன் கொடுக்காமல்போவதற்கு யார் காரணம்? விதைகளா? இல்லை! விதைகள் விழுந்த இடங்களா? இல்லை. விதைப்பவர்தான் காரணம் என்பேன் நான்.

விதைப்பவருக்குத் தன் கண்முன் இருக்கின்ற நிலம் தெரியும். அப்படியிருக்க அவர் பாதைகளிலும், முட்செடிகளுக்குள்ளும், பாறைகள்மேலும் ஏன் விதைகளைத் தூவ வேண்டும்? விதைகள் அந்த அளவிற்கு மதிப்பற்றுப் போய்விட்டனவா அவருக்கு? எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விதைகளை அவர் அலைக்கழிக்கலாமா?

சரி. அவருக்கு விதைக்கத் தெரியவில்லை என்ற நிலையில் நற்செய்தி வாசகத்தைப் பார்ப்போம்.

பாறைமீது விழுந்த விதைகள் மேல் எனக்கு எப்போதும் ஒரு பாசம் உண்டு. ஏனெனில் என் வாழ்வை நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

பாதையோரத்தில் விழுந்த விதைகளுக்கும், முட்செடிகள் நடுவே விழுந்த விதைகளுக்கும் ஆபத்து விதைகளுக்கு வெளியே இருக்கின்றது. ஆனால், பாறைமீது விழுந்த விதைகளுக்கு ஆபத்து அவைகளுக்கு உள்ளேயே இருக்கிறது. அதாவது, ஆழம் தெரியாமல் வேர் விடுவார்கள் இவர்கள். பின் அந்த இடத்தில் ஆழம் செல்ல வழியில்லை என்றவுடன் வாடிப்போவார்கள். வேகமாக வளர்வார்கள். வேகமாக சாய்வார்கள். எதிலும் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்.

இன்றைக்கு உள்ள நம் வாழ்க்கை ஓட்டம் நம்மை பாறைமேல் விழுந்த விதைகள்போலத்தான் ஆக்கியிருக்கிறது. கடவுள் நம்பிக்கையில் ஆழமில்லை. மனித உறவுகளில் ஆழமில்லை. நாம் செய்யும் செயல்கள் நமக்கே போரடிக்கின்றன. தடுமாற்றம் அதிகமாக இருக்கின்றது.

ஆனால், சிறிது காலமே என்றாலும் இனிது வாழ்தலும் பயன்தருமே.

Wednesday, July 25, 2018

நீங்கள் - அவர்கள்

நாளைய (26 ஜூலை 2018) நற்செய்தி (மத் 13:10-17)

நீங்கள் - அவர்கள்

நாளைய நற்செய்தியில் தன் சீடர்களோடு உரையாடும் இயேசு, 'நீங்கள்,' 'அவர்கள்' என இரண்டு குழுக்களைப் பற்றிப் பேசுகிறார். இங்கே 'நீங்கள்' என்பது நேரடியாக இயேசுவின் முன் உள்ள சீடர்களையும், 'அவர்கள்' என்பது மற்றவர்களையும் குறிப்பிடுகிறது. 'நீங்கள் பேறுபெற்றவர்கள். உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. உங்கள் கண்கள், காதுகள் பேறுபெற்றவை' எனக் குறிப்பிடும் இயேசு, 'அவர்களுக்குக் கொடுத்துiவைக்கவில்லை. அவர்கள் கண்ணிருந்தும் காணவில்லை, காதுகளிலிருந்தும் கேட்கவில்லை' எனச் சாடுகின்றார்.

இன்று நம்முன் உள்ள கேள்வியும் இதுதான்: 'நாம் எந்தக் குழுவைச் சார்ந்தவர்கள்?' 'நம்மை அவர் நீங்கள் என்பாரா அல்லது அவர்கள் என்பாரா?'

Tuesday, July 24, 2018

யாக்கோபு

நாளைய (25 ஜூலை 2018) நற்செய்தி (மத் 20:20-28)

யாக்கோபு

நாளை திருத்தூதரான தூய யாகப்பரின் - யாக்கோபு - திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஆங்கிலத்தில் 'ஜேம்ஸ்', இஸ்பானியத்தில் 'ஹைமே', இத்தாலியனில் 'யாக்கோமோ' என அழைக்கப்படும் இவரின் லத்தீன் பெயர் 'சான்க்து இயாக்கோபு' - இதுவே மருவி சந்தியாகு அல்லது சந்தியாகோ என ஆகிவிட்டது.

தென்தமிழகத்தில் தங்கச்சிமடத்தில் இவருக்கு ஒரு சிற்றாலயம் உண்டு. 2010ஆம் ஆண்டு அங்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு குதிரையில் சவாரி செய்பவர் போல இருக்கும் இவர் நம் தமிழ்மரபின் அய்யனாரை நினைவுபடுத்துகிறார்.

இவர் திருஅவை பாரம்பரியத்தில் 'யாக்கோப் மயோர்' (பெரிய யாகப்பர்) எனவே அறியப்படுகின்றார். இவர்தான் செபதேயுவின் மகன். யோவானின் சகோதரர். அப்படியென்றால் 'யாக்கோப் மினோர்' (சின்ன யாகப்பர்) என்று சொல்லப்படுபவர் யார்? அவர் அல்ஃபேயுவின் மகன் யாக்கோபு (காண். மத் 10:2).

இயேசுவுக்கு பன்னிரண்டு திருத்தூதர்கள் இருந்தார்கள். ஆனால் அந்தப் பன்னிரண்டு பேரில் மூன்று பேர் இயேசுவின் 'பவர் ஹவுஸ்' போல அவருக்குப் பக்கத்திலேயே இருந்தார்கள்: பேதுரு, சந்தியாகு மற்றும் யோவான். இந்த மூவரும் தான் இயேசு உருமாற்றம் பெற்றபோது அவரோடு உடனிருக்கின்றனர். இந்த மூவரையும் தான் இயேசு யாயிரின் மகளை உயிர்ப்பிக்கும்போது அருகில் வைத்துக்கொள்கின்றார். மேலும் இந்த மூவர்தாம் இயேசுவின் இரத்தவியர்வையின்போது கெத்சமேனித் தோட்டத்தில் உடனிருக்கின்றனர்.

மேலும், இவர்தான் முதல் மறைசாட்சி என்கிறது பாரம்பரியம்.

இவர் தொடக்ககாலத்தில் திருச்சபையின் முக்கியத் தலைவராக இருந்திருக்கின்றார். மேலும் முதன்முதலாக கூட்டப்பட்ட எருசலேம் சங்கத்தின் தலைவராகவும் (திப 15) இருந்து பிறஇனத்தாருக்கும் மீட்புத் திட்டத்தில் பங்கு உண்டு என்ற கருத்தை அழுத்தமாக முன்வைக்கின்றார்.

இவர் தன் திருச்சபைக்கு ஒரு திருமடலும் வரைகின்றார். இந்தத் திருமடலில் இருந்துதான் 'நோயிற்பூசுதல்' என்னும் அருளடையாளம் பிறக்கின்றது. 'நம்பிக்கையும் செயலும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும்,' 'துன்பத்தின் வழியாக மட்டுமே வாழ்வு' என்ற கருத்துக்களை முன்வைப்பதும் இவரே.

எருசலேமிருந்து இவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இஸ்பானிய நாட்டில் உள்ள 'கம்போஸ்தெலா' என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. 'கம்போஸ்தெலா' என்றாலே 'உடலின் எலும்புகளின் மிச்சம்' என்பதே பொருள். இந்தச் சாலை 'சான் டியாகோவை நோக்கிய சாலை' என இன்றும் அழைக்கப்பட்டு நிறையப்பேர் ரோமிலிருந்தும், லூர்துவிலிருந்தும், ஃபாத்திமாவிலிருந்தும் பாதயாத்திரையாகச் செல்கின்றனர். தங்களின் வாழ்வின் நோக்கம் தெளிவாகும் அல்லது தெளிவாக வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்தப் பயணத்தில் காட்சி கிடைப்பதாக இன்னும் நம்பப்படுகிறது.

சந்தியாகப்பர் நம் வாழ்வின் அர்த்தத்தை நாம் கண்டுகொள்ள அருள்புரிவாராக!

நாளைய நற்செய்தியில் இவரின் வாழ்வின் அர்த்தம் என்ன என்பதை அறிய இவரின் தாய் இவரையும், இவரின் தம்பி யோவானையும் அழைத்துக்கொண்டு இயேசுவிடம் சென்று, 'வலப்பக்கம் ஒருவரும், இடப்பக்கம் ஒருவரும் அமருமாறு செய்யும்' என்கிறார்.

பள்ளியின் ஆண்டுவிழா அல்லது கலைவிழா நேரத்தில் தன் குழந்தையைக் கூட்டி வரும் தாய் தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பாசிரியரிடம், 'என் மகளுக்கு, மகனுக்கு இந்த டான்ஸ் வேண்டும், அந்த நாடகத்தில் இந்த வேடம் வேண்டும்' எனக் கேட்பதுபோல இருக்கிறது இந்நிகழ்வு.

இப்படி ஒரு அம்மா கிடைக்க இந்த இரண்டு மகன்களும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

'என் மகன் உன் பின்னாலே திரியுறானே, வீட்டிற்கும் வருவதில்லை, மீன்பிடிக்கவும் செல்வதில்லை. இப்படியே போனால் என்ன ஆவது? ரெண்டுல ஒன்னு சொல்லு!' என்று இயேசுவிடம் முறையிடுகின்றார் இந்த அன்புத்தாய்.

ஆனால், இயேசு கழுவுற மீனுல நழுவுற மீனாய் 'நீங்க கிண்ணத்துல குடிப்பீங்களா?' 'தட்டுல சாப்பிடுவீங்களா?' என்கிறார்.

'என் வாழ்வின் பொருள் என்ன?' என்று நான் இயேசுவிடம் செல்லும்போதும் அவர் இப்படி என்னை அலைக்கழிக்க வாய்ப்புகள் நிறைய உண்டு.

பின் எதன்தான் செய்வது?

யாருக்கு எது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கோ அது அவருக்கு அருளப்படும்.

அதுவரைக்கும்?

செய்ற வேலையைச் செய்வோம் - யாக்கோபும், யோவானும், நாமும்.

Monday, July 23, 2018

உம்மோடு பேச வேண்டும்

நாளைய (24 ஜூலை 2018) நற்செய்தி (மத் 12:46-50)

உம்மோடு பேச வேண்டும்

இயேசுவைக் காண அவருடைய தாயும், சகோதரர்களும் வரும் நிகழ்வு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நற்செய்தி வாசகத்தில் வந்துவிடுவதுபோல இருக்கிறது. நாளைக்கு இந்த வாசகம்தான்.

'உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்' என்று அவர்கள் வந்த நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றார் இயேசுவிடம் சொன்ன அவர்.

இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரிடம் என்ன பேச வேண்டும் என வந்திருப்பார்கள்?

'நீ பேசுவதைக் கேட்டால் போதும்' என்று வந்தார்களா?

அல்லது

'நீ எங்ககிட்ட ஏதாவது பேசு' என்று கேட்டு வந்தார்களா?

இயேசு தன் தாய், தந்தை, மற்றும் சகோதரர்களிடம் பேசியதாக, உரையாடியதாக எந்தப் பகுதியுமே இல்லை நற்செய்தி நூல்களில். ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்களில் இருக்கலாம்.

தன் குடும்பத்தினரோடு எந்தவொரு நெருக்கமும் இல்லாத இயேசுவை மற்ற எல்லாரோடும் நெருக்கமாக வைத்துப் பார்ப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

இயேசுவும் நாளைய நற்செய்தி வாசகத்தில், 'இந்த வர்றேன் மா!' என்று பதில் தரமால், 'கடவுளின் திருவுளம்,' 'விண்ணகத்தின் தந்தை' என புரியாத மொழியில் பேசுகிறார்.

ஒருவேளை மரியாளுக்கு இவரின் இந்த மொழி புரிந்திருக்கலாம்.

மொழி புரிந்ததா அவருக்கு?

அல்லது கதவருகில் நின்றுவிட்டு மௌனமாகக் கலைந்துவிட்டாரா அவர்?

'உம்மோடு பேச வேண்டும்' - இது இன்றைய நம் மன்றாட்டாக இறைவனிடம் இருக்கட்டும்.

Sunday, July 22, 2018

அடையாளம் வேண்டும்

நாளைய (23 ஜூலை 2018) நற்செய்தி (மத் 12:38-42)

அடையாளம் வேண்டும்

'போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்' என்று ஒரு குழுவினர் இயேசுவிடம் வருகின்றனர்.

மோசே காலம் முதல் அடையாளம் கேட்டே பழகியவர்கள் இன்றும் கேட்கிறார்கள் என்று உடனடியாக எண்ணத் தோன்றுகிறது.

ஆனால், இன்று நம் மூளையும் அடையாளம் கேட்கிறது.

கடந்த இரண்டு வாரங்களாக 'நற்கருணையில் இயேசு தெரிகிறார்' என்ற செய்தியும், படங்களும் கட்செவி அஞ்சலில் பரவி வருகின்றன. இயேசு நற்கருணையில் தோன்ற முடியாது என்ற கருத்து நமக்கில்லை. ஆனால், தோன்றினால்தான் நம்புவேன் என்று நினைப்பது தவறு.

இப்படி நமக்கு வரும் தரவுகளை உடனடியாக நாமும் அடுத்தவர்களுக்கு பரப்பிவிட்டு அமைதி காக்கின்றோம். இது ஏன்?

'நான் நம்பியது போல அடுத்தவரும் நம்ப வேண்டும் என்பதற்காகவா?'

அல்லது

'என் கடவுள்தான் உண்மையான கடவுள் என்றும், வாழும் கடவுள் என்றும் அறிந்துகொள்' என்று மற்றவர்க்குச் சொல்லி பெருமைப்படுவதற்காகவா?

இன்று நாம் காணும் அனைத்துமே அவரின் அடையாளங்கள்தாம்.

Thursday, July 19, 2018

உன் கண்ணீரைக் கண்டேன்

நாளைய (20 ஜூலை 2018) முதல் வாசகம் (எசாயா 38:1-6,21-22,7-8

உன் கண்ணீரைக் கண்டேன்

நாம் அதிகமாகக் கேட்டுள்ள அருள்தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல்களில் ஒன்று 'விண்ணப்பத்தைக் கேட்பவரே' என்பது. இந்தப் பாடலின் பின்புலத்தில் எசாயா 38:1-6,21-22,7-8 இருந்ததாக அவரே பகிர்ந்துகொள்கின்றார். இந்தப் பாடலும் எனக்குப் பிடிக்கும். இந்த நிகழ்வும் எனக்குப் பிடிக்கும் என்பதால் இதைப்பற்றிப் பகிர விழைகிறேன்.

எசேக்கியா என்ற அரசன் நோய்வாய்ப்பட்டு சாகக் கிடக்கிறான். அவரைக் காண வருகின்ற இறைவாக்கினர் எசாயா, 'நீர் உம் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும். ஏனெனில் நீர் சாகப் போகிறீர். பிழைக்க மாட்டீர்' என்கிறார்.

நோய்வாய்ப்பட்டு சாகக்கிடக்கிறவரைப் பார்க்க வருபவர், 'நீ கவலைப்படாதப்பா! நல்லா ஆயிடுவ!' என்று நம்பிக்கை வார்த்தை கூறினால்தானே நலமாக இருக்கும். அதைவிட்டு, 'நீ சாகப்போகிறீர்' என்று சொல்வதோடு, 'நீர் பிழைக்க மாட்டீர்' என மீண்டும் சொல்கிறார் எசாயா.

இதுவரை எசாயாவைப் பார்த்துக்கொண்டிருந்த எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்பக்கம் திருப்பிக்கொண்டு, 'ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மை வழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும், உம் பார்வையில் நலமானவற்றைச் செய்ததையும் நினைத்தருளும்!' என மன்றாடுகின்றார். மன்றாடி கண்ணீர் சிந்தி தேம்பி தேம்பி அழுதார்.

தேம்பி தேம்பி என்றாவது அழுதிருக்கிறீர்களா?
சின்ன வயதில் நான் அழுததாக எனக்கு நினைவிருக்கிறது. தேம்பி அழும்போது உடல் வியர்க்கும், கண்கள் நிறைய நீர் சுரக்கும், வயிறும், நெஞ்சும் அப்படியே உள்ளே சென்று வெளியே வரும், மூச்சு விடும் காற்று வாயோடு சேர்ந்து வரும். கண்ணீர்விட்டு நாம் அழும் உச்சகட்ட அழுகை இதுதான் என நினைக்கிறேன். மேலும், தேம்பி தேம்பி அழும்போது சில நேரங்களில் விக்கல் வந்துவிடும். விக்கல் வந்துவிட்டால் இறந்துவிடுவார்கள் என்பது எபிரேய நம்பிக்கை. ஆக, மரண அழுகையாக இருக்கும் இதுதான் மனிதர்களின் உச்சகட்ட கையறுநிலை என்னும் அனுபவத்தின் வெளிப்பாடு. தேம்பி அழுபவர்கள் அப்படியே தூங்கிப் போவார்கள். பசியாற விரும்பமாட்டார்கள்.

ஒரு அரசன் தேம்பித் தேம்பி அழுகின்றான். இதைக் கற்பனை செய்து பார்க்கும்போதே நமக்கு அரசன்மேல் பரிவு வந்துவிடுகிறது.

நாட்டை ஆளும் அரசனே என்றாலும், அவனுக்கென்று எல்லாமே இருந்தாலும் நோய், மூப்பு, இறப்பு என்ற நிலைகளில் அவன் அழவே செய்கின்றான்.

எசேக்கியாவின் கண்ணீர் வீணாகவில்லை. அந்தத் தேம்பல் உடனடியாக ஆண்டவரை எட்டுகின்றது. மீண்டும் எசாயா வழியாக ஆண்டவரே பேசுகின்றார்: 'உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை 15 ஆண்டுகள் மிகுதியாக்குவேன். உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்.'

இந்த விண்ணப்பம் கேட்கப்பட்டது என்பதன் அடையாளமாக கதிரவனின் நிழல் பத்து பாத அளவு பின்னேறுமாறு செய்கின்றார் ஆண்டவர்.

இவ்வாறாக, ஒரே மன்றாட்டில் தனக்கான உடல் நலத்தையும், தன் மண்ணிற்கான வெற்றியையும் பெற்றுவிடுகின்றார் எசேக்கியா.

இன்னும் 15 ஆண்டுகள்தாம் வாழப்போகிறோம் என்ற வாழ்க்கை எசேக்கியாவிற்கு எப்படி இருக்கும்?

வாழ்க்கையில் வேகம் இருக்கும். முதன்மையானவற்றை மட்டும் அவர் செய்ய முற்படுவார். அவசியமானதை மட்டும் அடையாளம் கண்டு செயல்படுத்துவார்.

எசேக்கியாவின் மறுபிறப்பு இஸ்ரயேலின் மறுபிறப்பும்கூட.

கண்ணீர் கடவுளின் கதவைத் தட்டுகிறது என்பதற்கு எசேக்கியாவின் தேம்புதல் சாட்சி.

Tuesday, July 17, 2018

குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்

நாளைய (18 ஜூலை 2018) நற்செய்தி (மத் 11:25-27)

குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்

'ஞானிகளுக்கும். அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்' எனச் சொல்கிறார் இயேசு. 'இவற்றை' என்று அவர் எவற்றைச் சொல்கிறார் எனத் தெரியவில்லை.

இங்கே வெளிப்படுத்தப்பட்டவற்றைவிட வெளிப்படுத்தும் நிகழ்வுதான் முக்கியம்.

நம் அறிவு சில நேரங்களில் 'நாமே அறிதல்' என்ற நிலையிலும், சில நேரங்களில் 'மற்றவர் வெளிப்படுத்துதல்' என்ற நிலையிலும் உள்ளது.

விண்ணரசு பற்றிய மறைபொருள்கள் 'அறிதல்' நிலையில் நடப்பதில்லை. மாறாக 'வெளிப்படுத்துதல்' நிலையில்தான் நடக்கிறது.

இந்த நிலையில் ஒருவருக்குத் தேவையானது எல்லாம் 'வரவேற்கும் திறந்த உள்ளம்' மட்டும்தான்.

Monday, July 16, 2018

வானளாவ உயர்த்தப்படுவாயோ!

நாளைய (17 ஜூலை 2018) நற்செய்தி (மத் 11:20-24)

வானளாவ உயர்த்தப்படுவாயோ!

தான் வல்ல செயல்கள் நிகழ்த்தி மனம் மாறாத கொராசின், பெத்சாய்தா, மற்றும் கப்பர்நாகூம் நகரங்களைச் சாடுகின்றார் இயேசு.

'கப்பர்நகூமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ?' எனக் கேட்கின்றார்.

இயேசு தன் நேரம், ஆற்றல் அனைத்தும் இந்தப் பணியினால் விரயம் ஆகிவிட்டதாக உணர்கிறார். ஆகையால்தான் நான் இங்கே செலவழித்த ஆற்றலை வேறெங்காவது செலவழித்திருக்கலாம் என சோர்வு அடைகின்றார்.

தவறான இடத்தில், தவறான நேரத்தில், தவறான விதத்தில் நேரம் அல்லது ஆற்றல் செலவிடப்படுவது நமக்கு வருத்தம் தருகிறது. ஏனெனில், நாம் எதிர்பார்த்த விளைவு அங்கே நிகழ்வதில்லை. ஓடாத பஸ்ல ஏறி உட்கார்ந்துகொண்டு டிக்கெட் எடுத்து அமர்வது போல வாழ்க்கை சில நேரங்களில் அமைந்துவிடுகிறது. பஸ்சும் ஓடாது. நம் டிக்கெட் காசும் வீண். நாமும் அடைய வேண்டிய இடத்தை அடைய முடிவதில்லை.

இயேசுவின் இந்தக் கடிந்துகொள்ளுதல் அவருடைய மனதிருப்திக்குத்தானே தவிர, அவர் கடிந்துகொள்வதால் அந்த நகரங்கள் மாற்றம் அடையப்போவதில்லை. தன் மனக்குறையை இப்படி புலம்பித்  தீர்த்துவிடுகின்றார்.

நாளைய நற்செய்திப் பகுதி நமக்குச் சொல்வது என்ன?

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ தென்பது இழுக்கு.


Sunday, July 15, 2018

ஒருவருடைய பகைவர்

'அமைதியை அல்ல. வாளையே கொணர வந்தேன்' என்று நாளைய நற்செய்தி வாசகத்தில் சொல்லும் இயேசு, ஒருவருடைய பகைவர் யார் என்பதற்கு புதிய வரையறையைத் தருகின்றார்: 'ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.'

சொந்த வீட்டில் உள்ளவர் எப்படி பகைவர் ஆக முடியும்?

ஒருவரைப் பற்றி அதிகம் தெரிவதும் பகைமைக்கு இட்டுச் செல்ல முடியும். இல்லையா?

ஆனால் இயேசு இந்தப் பொருளில் சொல்லவில்லை. மாறாக, இதை உருவகமாக சொல்லியிருக்கலாம்.

என் இதயத்தில் அமைதி களையக் காரணம் எனக்குள் இருக்கும் போராட்டம். உதாரணத்திற்கு, நான் இன்று மாலை திருப்பலிக்குப் போக வேண்டும் என வைத்துக்கொள்வோம். கூட்ட நெரிசல் அதிகமாக இடத்திற்குச் செல்ல வேண்டும். கார் ஓட்டிச் செல்லலாம் என்று என் மனம் ஒரு பக்கம் உற்சாகம் தருகிறது. மற்றொரு பக்கம் அதே மனம், 'வேண்டாம்' என பயம் தருகிறது. ஆக, துணிவுக்கும், பயத்திற்கும் இடையே ஒரு போராட்டம் நடக்கிறது. என் துணிவுக்கான எதிரி என்னுள் இருக்கின்ற பயம்தான்.

இவ்வாறாக, இயேசு சொல்லும் வாள் என்பது என்னுள்ளே நிகழும் போராட்டம். பகைவர் என்பவர் என்னுள்ளே எதிர்மறை உணர்வுகளைத் தூண்டி எழுப்புபவர்.

போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அமைதியை விட சில நேரங்களில் வாள்தான் சிறப்பு.

Friday, July 13, 2018

ஆன்மாவைக் கொல்ல இயலாமல்

நாளைய (13 ஜூலை 2018) நற்செய்தி (மத் 10:24-33)

ஆன்மாவைக் கொல்ல இயலாமல்

'ஆன்மாவைக் கொல்ல இயலாமல் உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்' என்று தம் சீடர்களுக்கு நாளைய நற்செய்திப் பகுதியில் அறிவுறுத்துகின்றார் இயேசு.

நிற்க.

கே. பாலசந்தர் அவர்கள் இயக்கத்தில் 1969ல் வெளிவந்த 'இருகோடுகள்' திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, ஜெயந்தி, நாகேஷ் போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் கலக்கிய திரைப்படம் இது. 'இருகோடுகள்' என்ற தலைப்பு இந்தப் படத்தில் ஜெமினி கணேசன் ('கோபிநாத்') அவர்களின் இரண்டு மனைவிரை - சௌகார் ஜானகி ('ஜானகி'), ஜெயந்தி ('ஜெயா') - ஆகியோரைக் குறித்தாலும், இது சொல்ல வரும் கருத்து இதுவன்று. அதாவது, வாழ்வில் இரு கோடுகள் மாறி மாறி வந்துகொண்டே இருக்கின்றன. நாம் இந்த இருகோடுகளைக் கையாளுவதைப் பொறுத்தே நம் வாழ்வின் வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் அமைகிறது. எப்படி? இன்று காலையில் நான் உடையைத் தேர்ந்தெடுத்து அணியும்போது சட்டையில் ஒரு பட்டன் உடைந்திருக்கிறது என வைத்துக்கொள்வோம். புதிய சட்டை, எனக்குப் பிடித்த சட்டையில் பட்டன் உடைந்துவிட்டதே என்று கொஞ்சம் வருத்தம் வருகிறது. இருந்தலும் அத்தோடு காலை சாப்பாட்டுக்குப் போகிறேன். உப்புமாவில் கடலை என்று நான் கடித்த கல்லால் என் பல் ஒன்ற உடைந்துவிடுகிறது. இரத்தம் வருகிறது. பல் உடைந்துவிட்டது என்ற வருத்தம். இந்த வருத்தத்தில் பட்டன் இல்லாத வருத்தம் காணாமல் போய்விடுகிறது. ஆக, பெரிய வருத்தம் வரும்போது சின்ன வருத்தம் மறைந்துவிடுகிறது.

நிற்க.

இயேசுவின் போதனை பெரும்பாலும் இருகோடுகள் போதனையாக இருக்கிறது. இரண்டு கோடுகளைப் போட்டு, அதில் நாம் எந்தக் கோட்டை நீட்ட வேண்டும், எந்தக் கோட்டைக் குறைக்க வேண்டும் என்ற தெரிவை அவர் நம்மிடமே விடுகின்றார்.

எ.கா. உணவை விட உடலும், உடையைவிட உயிரும் மேலானதல்லவா!

இதில், உணவு என்பது சின்னக் கோடு, உடல் என்பது பெரிய கோடு. உடை என்பதும் சின்னக்கோடு, உயிர் என்பதும் பெரியகோடு. சின்னதைப் பற்றிய கவலை மறைய பெரியதைப் பற்றி கவலைப்பட வேண்டும்.

இப்படித்தான் நாளைய நற்செய்தி வாசகத்தில், 'ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களைக் குறித்து அஞ்சாதீர்கள்' என்கிறார் இயேசு.

உடல் சின்னக் கோடு என்றால், அதைவிட பெரிய கோடு ஆன்மா.

ஆக, சின்னதை விடுத்து பெரியதை நோக்கி நம் வாழ்வு அமைய வேண்டும்.

இதைத்தான் மேலாண்மையியலில் முதன்மைப்படுத்துதல் என்கிறார்கள். முதன்மைப்படுத்துதல் இல்லாததால்தான் நாம் பல நேரங்களில் தேவைற்றவற்றிற்குப் பயப்படவும், கவலைப்படவும், குற்றவுணர்வுகொள்ளவும் செய்கிறோம்.

இரு கோடுகள் - இடுவோம் சரியாக!

Thursday, July 12, 2018

ஓநாய்களிடையே

நாளைய (13 ஜூலை 2018) நற்செய்தி (மத் 10:16-23)

ஓநாய்களிடையே

திபா 23ல் எனக்குப் பிடித்த ஒரு வரி உண்டு:

'மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்
நீர் என்னோடு இருப்பதால் நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்.'

இந்த வரியை சித்திரமாக வரைகின்ற ஓவியர் நிறைய வெறிநாய்களுக்கு நடுவே சாந்தமான ஒரு பூனைக்குட்டி நடந்து செல்வதாக சித்தரித்திருப்பார்.

நாளைய நற்செய்தியில் வரும் உருவகமும் ஏறக்குறைய இதை ஒத்தே இருக்கின்றது: 'ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டி'

ஆட்டுக்குட்டியின் இயல்பு ஓநாயின் இயல்பை மாற்ற முடியாது. ஓநாய் எந்நேரம் எப்படி தாக்கும் என்று தெரியாது. ஆக, முழுமையான கையறுநிலையில்தான் இந்த ஆடும், அந்த பூனைக்குட்டியும் இருக்கும். நம் வாழ்வும் இப்படித்தானே அன்றாடம் நிகழ்கிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாமல் நாம் நகர்ந்து கொண்டிருக்கும். அடுத்த நிமிடத்தை தன் கையில் வைத்திருக்கும் அந்த இறைவனை நமக்குத் தெரிவதால் அடுத்த நிமிடம் நமக்குப் பயன் தருவதில்லை. இந்த நம்பிக்கையைத்தான் தன் சீடர்கள் வாழ்வில் விதைக்கின்றார் இயேசு.

Wednesday, July 11, 2018

கொடையாக பெறுதலும், கொடுத்தலும்

நாளைய (12 ஜூலை 2018) நற்செய்தி (மத் 10:7-15)

கொடையாக பெறுதலும், கொடுத்தலும்

இயேசு தன் சீடர்களைப் பணிக்கு அனுப்பும்போது கூறும் அறிவுரைகளில் மிகவும் முக்கியமானதாக நான் பார்ப்பது இதைத்தான்: 'கொடையாகப் பெற்றீர்கள். கொடையாகவே வழங்குங்கள்.'

இயேசுவின் பணியாளர் மட்டுமல்ல, நாம் அனைவருமே கொண்டிருக்க வேண்டிய வாழ்க்கைப்பாடமாக இது இருக்கலாம் என நினைக்கிறேன்.

நம் பிறப்பே ஒரு கொடைதான். ஏனெனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் உறவுப்பரிமாற்றத்தில் பகிரப்படும் திரவத்தில் மிகச் சிறிய ஒன்று வெற்றிபெற நாம் பிறக்கிறோம். மற்ற அனைத்தும் அப்படியே அழிந்துவிடுகின்றன. இது இயற்கையின் செயலோ அல்லது இறைவனின் செயலோ ஏதோ ஒரு வகையில் நாம் பாக்கியசாலிகள். அந்த நேரத்தில், 'எனக்கு இது வேண்டும்' என்றும், 'எனக்கு இது தகுதி இருக்கிறது' என்றும் அந்தத் துளி சொல்வதற்கு வழி இல்லை. இது ஒரு ப்யூர் சான்ஸ். கொடையாக வரும் சான்ஸ்.

நாம் பிறக்கும்போது இந்த உலகில் நம்மைக் கைகளில் ஏந்தி எடுக்க நீட்டப்பட்ட முதற்கைகள் நாம் பெற்ற கொடைகளே. தொடர்ந்து ஒவ்வொரு பொழுதும் வாழ்க்கை நம்மைக் கொடைகளால் உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கிறது. ஆனால் வளர வளர இந்த உணர்வு மறைந்து, 'இது நானே செய்தது,' 'இது நான் உழைத்தது,' 'இது நான் படித்தது,' என 'நான் பெற்ற உணர்வு' என்னை ஆள்கொள்ள ஆரம்பிக்கிறது. இந்த உணர்வோடு சேர்ந்து சோர்வும், விரக்தியும் வந்துவிடுகிறது. சோர்வு, ஏனெனில் என் மூளை 'இன்னும் அதிகம்' என்று ஓடிக்கொண்டே இருக்க நினைக்கிறது. விரக்தி, ஏனெனில் என் உழைப்பிற்கேற்ற கனி நிறைய நேரம் கிடைப்பதில்லை (உழைக்காமலேயே சிலருக்கு கனி கிடைக்க, அவரோடு என் மனம் ஒப்பிட்டு விரக்தியை இன்னும் அதிகமாக்குகிறது).

ஆனால், நான் பெற்றது அனைத்தும் கொடையே என்னும் எண்ணம் என்னில் உதித்துவிட்டால் என்னில் நன்றி, நிறைவு, அன்பு என்னும் மூன்று உணர்வுகள் இயல்பாகவே வந்து குடிகொள்ளும். இந்த மூன்று உணர்வுகளால் என் அகம், புறம் என அனைத்தும் பிறருக்கான கொடையாகவே மாறிவிடும்.

ஆக, என் வாழ்வியல் இருப்பு என்பது வெறும் குழாய் போன்று ஆகிவிடுகிறது. அந்தப் பக்கம் கொடுப்பவர், இந்தப் பக்கம் பெறுபவர். கொடுக்கும் இறைவனுக்கும், பெறும் மற்றவருக்கும் இடையே நான் வெறும் குழாயாக இருக்கிறேன். காலப்போக்கில் என் இருப்பு மறக்கப்பட்டாலும், என் பயன்பாடு மற்றவருக்கு இருந்துகொண்டே இருக்கும்.

இவ்வாறு, என் வாழ்வின் இருப்பு மற்றும் இயக்கத்தை நான் பெற்ற கொடையாகவும், நான் வழங்கும் கொடையாகவும் உணர்ந்தால் எத்துணை நலம்!

Tuesday, July 10, 2018

தத்தி தத்தி

நாளைய (11 ஜூலை 2018) நற்செய்தி (மத் 10:1-7)

தத்தி தத்தி

இயேசுவிடம் குழு உணர்வு மற்றும் இன உணர்வு இருந்தது என்று காட்டுவதற்கு மூன்று எடுத்துக்காட்டுக்கள் சொல்லப்படுவது வழக்கம்:

அ. பன்றிக்கூட்டத்திற்குள் தீய ஆவியை அனுப்பியது - யூதர்கள் ஆடுகளை தூய விலங்குகளாகவும், பன்றிகளை தூய்மையற்ற விலங்குகளாகவும் கருதினர்.

ஆ. பெனிசிய நகரப் பெண்ணிடம் பிள்ளைகளுக்கு உரியதை எடுத்து நாய்களுக்குப் போடுவதில்லை என்று சொன்னது - இங்கே இஸ்ரயேல் மக்கள் பிள்ளைகள் எனவும், புறவினத்து மக்கள் (நீங்களும், நானும்) நாய்கள் என்றும் சொல்லப்படுவது.

இ. நாளைய நற்செய்தி வாசகப் பகுதி - 'பிற இனத்தாரின் பகுதிக்கோ, சமாரியாவின் நகருக்கோ செல்ல வேண்டாம். இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்' என்று சொல்வது.

இயேசுவுக்கு இன உணர்வு அல்லது குழு உணர்வு இருந்ததா? என்ற கேள்வியை இங்கே எழுப்புதல் வேண்டாம். இன உணர்வு இருந்திருக்கும். இருந்திருந்தால் வியப்போ தவறோ இல்லை. ஏனெனில், மனிதர்கள் தங்கள் பாதுகாப்பின்மைக்கு மாற்றாகத் தேடுகின்ற முதல் உணர்வு குழு உணர்வே.

இயேசு ஏன் தன் மக்களிடம் பணியை செய்யச் சொல்லி அனுப்புகின்றார்?

மாற்றத்தைத் தன் இல்லத்திலிருந்து, தன்னிடமிருந்து தொடங்க நினைக்கின்றார் இயேசு. மேலும், தன் இல்லத்தைச் சரி செய்யாமல் அடுத்தவரை சரி செய்ய முயன்றால் அது உயர்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்லும். ஒருவேளை பணி கடினமானதாக இருந்தால் தொடக்கத்திலேயே சீடர்கள் களைப்படைவர். தெரிந்த இடத்தில் தொடங்குவது பணியை இலகுவாக்கும்.

ஆக, இன்று எனக்குத் தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றிற்கு நான் கடந்து செல்ல வேண்டும் - கொஞ்சம் கொஞ்சமாக. குழந்தை தத்தி தத்தி நடை பயிலுவது போல.


Monday, July 9, 2018

ஆயனில்லா ஆடுகள்

நாளைய (10 ஜூலை 2018) நற்செய்தி (மத் 9:32-38)

ஆயனில்லா ஆடுகள்

இயேசுவின் பரிவுள்ளத்தைப் பற்றிப் பதிவு செய்கின்ற மத்தேயு நற்செய்தியாளர், 'திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார். அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்' என்கிறார்.

ஆயனில்லா ஆடு எப்படி இருக்கும் என்பதையும் போகிற போக்கில் சொல்லிவிடுகிறார் மத்தேயு: 'அலைக்கழிக்கப்படும்,' 'சோர்ந்திருக்கும்.'

நான் என் வாழ்வில் அடிக்கடி உணர்ந்த ஒன்று இதுதான். நாளை செய்வதற்கு இதெல்லாம் இருக்கிறது என்று தூங்கப் போகும்போது அடுத்த நாள் மிக அழகாக, நேரத்தோடு விடியும். சுறுசுறுப்பு நிறைய இருக்கும். 'நாளைக்கு செய்ய ஒன்னுமில்லையே' என்ற எண்ணத்திலோ, 'என்ன செஞ்சி என்ன ஆகுப்போது?' என்ற எண்ணத்திலோ தூங்கச் செல்லும்போது என்னால் நேரத்திற்கு எழ முடிவதில்லை. எழுந்தாலும் நாள் முழுவதும் சோர்வாகவே இருக்கும். ஆக, 'நாளைக்கு இதைச் செய்ய வேண்டும்,' 'இப்படி போக வேண்டும்' என்ற திசை சரியாக இருந்தால் சோர்வு இருப்பதில்லை. திசை சரியாக இல்லாதபோது மனம் அலைக்கழிக்கப்படுகிறது. 'இதுவா, அதுவா, இதுவும் அதுவுமா' என்று மனம் அலைக்கழிக்கப்படும்போது சோர்வு படுக்கை விரித்துப் படுத்துக்கொள்கிறது.

இந்த திசை உணர்வு நம் உள்ளிருந்து வரலாம். அல்லது வெளியிருந்து வரலாம்.

மிகவும் கொடிய உணர்வுகளில் ஒன்று சோர்வு. இந்தச் சோர்வு அலைக்கழிக்கப்படுவதால் வருகிறது என்றால் அது இன்னும் கடினம். ஆக, நான் சோர்வுறாவண்ணம் என் திசை உணர்வை சரியமைத்துக்கொள்ளவம், திசையின்றி திரிவோருக்கு பரிவு காட்டுவதும் என் எண்ணமாய், செயலாய் இருந்தால் எத்துணை நலம்!



Friday, July 6, 2018

பழைய ஆடையில் புதிய துணி

நாளைய (7 ஜூலை 2018) நற்செய்தி (மத் 9:14-17)

பழைய ஆடையில் புதிய துணி

பழையதற்கும் புதியதற்குமான பொருந்துதன்மை குறித்து பேசுகிறது நாளைய நற்செய்தி வாசகம். நோன்பு என்பதை மையப் பொருளாக எடுத்து யோவானுடைய சீடர்களுக்கும், இயேசுவின் சீடர்களுக்கும் இடையே நிகழும் உரசலைப் பதிவு செய்கிறார் நற்செய்தியாளர்.

இதில் 'யோவான்' பழைய ஆடை எனவும், 'இயேசு' புதிய ஆடை எனவும்,
'யோவான்' பழைய தோற்பை எனவும், 'இயேசு' புதிய மது எனவும் குறிக்கப்படுகின்றனர்.

இது யோவானுடைய சீPடருக்கும், இயேசுவின் சீடருக்கும் இடையே விளங்கிய 'யார் பெரியவர்?' என்ற போராட்டத்தையே படம்பிடித்துக்காட்டுகிறது என நினைக்கிறேன்.

ஆனால், பொருந்துதன்மை இல்லாமலேயே பல நேரங்களில் நாம் வாழவேண்டியுள்ளது என்பதுதான் எதார்த்தம்.

ஒரு குழுமத்தில் பழைமைதான் வேண்டும் என பிடித்துக்கொள்பவர்களும் உண்டு. புதுமைதான் வேண்டும் என வாதிடுபவர்களும் உண்டு.

இரண்டுபேரும் சரிதான். இரண்டுபேரும் தவறுதான்.

பொருந்தாததன்மை இருந்தாலும் சமூகம் - குழுமம் முன்னேறிச் செல்கிறது. இரண்டிற்கும் சரி என்று சொல்பவர்கள் வாழ்க்கையை நகர்த்துவார்கள். ஒன்றிற்கு 'சரி' என்றும், மற்றதற்கும் 'இல்லை' என்றும் சொல்பவர் ஓரங்கட்டப்படுவர்.


Thursday, July 5, 2018

என்னைப் பின்பற்றி வா

நாளைய (6 ஜூலை 2018) நற்செய்தி (மத் 9:9-13)

என்னைப் பின்பற்றி வா

நாளைய நற்செய்தி வாசகத்தில் மத்தேயுவின் அழைப்பைப் பற்றி வாசிக்கின்றோம். இத்தாலிய ஓவியர் காரவாஜ்ஜோ என்பவரின் வண்ணத்தில் ஒளிரும் 'மத்தேயுவின் அழைப்பு' என்னும் ஓவியம் மிகவும் பாராட்டுதற்குரியது. வெறும் 'வெளிச்சம்' 'இருட்டு' என்ற இரு கூறுகளை வைத்து மிக அழகாக கதைமாந்தர்களை வரைந்துள்ளார் ஓவியர். இந்த ஓவியத்தின்படி வரி வசூல் மையத்தில் அமர்ந்திருக்கும் மத்தேயு குனிந்து நாணயங்களை எண்ணிக்கொண்டிருப்பார். அவரைச் சுற்றிலும் சில இளவல்கள் அமர்ந்திருப்பர். அவர்கள் அவரின் நண்பர்களாக இருக்கலாம். அல்லது வரிகொடுக்க வந்தவர்களாக இருக்கலாம். அல்லது உடன் அலுவலர்களாக இருக்கலாம். வாசலிலிருந்து இவரை நோக்கி ஒரு ஒளிக்கற்றை வரும். அந்த ஒளிக்கற்றையின் பின்புலத்தில் ஓர் இளைஞர் இவரை நோக்கி விரல் நீட்டுவார். இயேசுவை ஓர் அழகான இளைஞராக பதிவு செய்திருப்பது ஓவியரின் அடுத்த பண்பு. இயேசுவின் விரல் நீ;ட்டப்பட்ட அந்நேரம் எல்லாருடைய விரல்களும் மத்தேயுவை நோக்கி நீளும். இறுதியில் விரல் யாரை நோக்கி நீட்டப்படுகிறது என்பதை ஓவியத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும்தான் முடிவுசெய்துகொள்ளவேண்டும். இப்படிப்பட்ட ஒரு வியப்பு மற்றும் ஆச்சர்யத்தோடு இருக்கிறது இந்த ஓவியம்.

இந்த ஓவியத்தைவிட ஆச்சர்யம்தான் மத்தேயுவின் அழைப்பு.

'என்னைப் பின்பற்றிவா' என்று இரண்டு வார்த்தைகளைக் கேட்டவுடன், தன் வேலை, தன் குடும்பம், தன் ப்ரையாரிட்டி என அனைத்தையும் விட்டுவிட்டுப் புறப்படுகின்றார் மத்தேயு. 10 அல்லது 12 ஆண்டுகள் குருமடத்தில் பயிற்சி எடுத்தாலும், இயேசுவின் 'என்னைப் பின்பற்றி வா' என்ற அழைப்பு எனக்கு கஷ்டமாக இருக்கிறது. மத்தேயு எப்படி உடனடியாக எழுந்து போனார்?

போனபின் மத்தேயு செய்த செயல்தான் மிகவும் ஆச்சர்யத்திற்குரியது.

இயேசுவுக்கு ஒரு விருந்தளிக்கின்றார் தன் இல்லத்தில்.

எதற்காக இயேசுவைத் தன் இல்லத்திற்கு அழைத்தார் மத்தேயு?

'நான்தான் இது' என்று காட்டுவதற்காகத்தான் என நினைக்கிறேன். 'என் குடும்பம், என் பின்புலம், என் நண்பர்கள், என் உடன்பிறந்தவர்கள்' என தன்னைப் பற்றி இயேசுவுக்குக் காட்டுவதற்கும், தன் நண்பர்கள் எல்லாம் 'பாவிகள், வரிதண்டுபவர்கள்' என்று தன் உடைந்த நிலையைக் காட்டுவதற்கும்தான்.

இயேசு விருந்திற்குச் சென்றது அவருடைய எதிரிகளின் கண்களில் தூசியாக உறுத்தினாலும், தான் இரக்கத்தையே விரும்புவதாகவும், தான் பாவிகளையே நாடுவதாகவும் சொல்கின்றார் இயேசு.

ஆக, இயேசுவிடம், 'நான் இதுதான்' என்று மனம் திறக்க நமக்கு நமக்கு மனத்திடம் தருகின்றார் மத்தேயு.

Wednesday, July 4, 2018

எது எளிது?

நாளைய (05 ஜூலை 2018) நற்செய்தி (மத் 9:1-8)

எது எளிது?

முடக்குவாதமுற்ற மனிதரைக் குணமாக்கும் இயேசு, 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்கிறார். 'பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உண்டு' இயேசுவின் சமகாலத்தவரின் நம்பிக்கை. ஆக, கடவுளுக்கு மட்டுமே உள்ள அதிகாரத்தை இவர் பயன்படுத்துவதால் இவர் தன்னையே கடவுளாக்கி கொள்கிறார் என்பதும், கடவுளுக்குத் தன்னையே இணையாக்குகிறார் என்பதும், ஆகவே இது பழித்துரைத்தல் என்பதும் அவர்கள் வாதம். முடக்குவாதத்தைவிட அவர்களின் வாக்குவாதம் பெரிதாக இருக்கிறது.

'எது எளிது?' எனக் கேட்ட இயேசு, 'எழுந்து நட!' என்பதா? அல்லது 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா?  எனக் கேட்கிறார்.

'எழுந்து நட' என்பது எளிதுதான். ஆனால், பாவமே நோய்க்குக் காரணம் என்பதால் நோயை நீக்குவதைவிட காரணத்தை நீக்க வேண்டும் என விழைந்த இயேசு கடினமான ஒன்றைத் தெரிந்து கொள்கின்றார். மேலும் இப்படிச் செய்வதன் வழியாக பாவத்தால் இந்த உலகின் காரணிகளைக் கட்டுவித்த நிலையையும் சாடுகின்றார். ஆக, ஒருவன் ஒரு மாதிரி இருக்கிறான் என்றால் அவன் அப்படி இருக்கிறான் அவ்வளவுதான். அதில் போய் பாவம், புண்ணியம் ஆகியவற்றை எல்லாம் சேர்க்க முடியாது.

வெளியே முடக்கவாதத்தையும், உள்ளே இவர்களின் தீய எண்ணத்தையும் ஒன்றாகக் குணமாக்குகிறார் இயேசு. அடுத்தவருக்கு நல்லது நடப்பதைத் தடுக்கும் எண்ணமே தீய எண்ணம்.

Tuesday, July 3, 2018

அகலுமாறு வேண்டினர்

நாளைய (04 ஜூலை 2018) நற்செய்தி (மத் 8:28-34)

அகலுமாறு வேண்டினர்

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பேய்களை பன்றிக்கூட்டத்திற்குள் ஓட்டும் நிகழ்வையும், அதன் விளைவாக கதரேனர் இயேசுவை தங்கள் ஊரைவிட்டு அகலுமாறு வேண்டுவதையும் வாசிக்கக் கேட்கின்றோம்.

இந்த ஊர் மக்களின் செயல் ஆச்சர்யமாக இருக்கிறது. ஏன்?

தங்கள் ஊரில் தங்கள் நடுவில் வாழ்ந்த 2 பேய் பிடித்தவர்கள் தங்களுக்கு மிகவும் அச்சம் தந்தனர். அவர்கள் இருந்த வழியே செல்வதற்குக் கூட மக்கள் அஞ்சினர். இப்படியாக அச்சம் தரும் பேய்களை நீக்கி தங்கள் உறவான, நட்பான அந்த இருவர் நலம்பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாததால் அவர்கள் இயேசுவை ஊரைவிட்டு போகச் சொன்னார்களா?

அல்லது தங்கள் பன்றிக்கூட்டம் கடலில் வீழ்ந்து மடிந்துவிட்டது என்பதற்காக போகச் சொன்னார்களா?

தங்கள் ஊரில் இருவர் நலம்பெற்றதை விட பன்றிக்கூட்டம் அவர்களுக்குப் பெரியதாகத் தெரிந்ததா?

இதுதான் காரணம் என நினைக்கிறேன்.

பன்றிகளா? மனிதர்களா? என்று அவர்கள் தராசில் வைத்தபோது பன்றிகள் தாம் கனமாகத் தெரிந்திருக்கின்றன.

பன்றிகள் தீட்டின் உருவகம். ஆக, தங்கள் ஊரைப் பிடித்திருந்த தீட்டும், தங்கள் ஊர் மக்களைப் பிடித்திருந்த பேயும் அகன்றது என்று மகிழ்ந்து இயேசுவைக் கொண்டாடாத மக்கள் அவரைத் தங்களைவிட்டு நீங்குமாறு வேண்டுகின்றன்றனர்.

சில நேரங்களில் நம் வாழ்வில் நாம் தீமையோடும், அழுக்கோடும் வாழ்ந்து பழகிவிடுவதால் அதை நாம் எடுப்பதற்குப் பதிலாக அதை எடுக்க வருகின்ற கடவுளின் கரத்தைப் பிடித்துத் தள்ளிவிடுகின்றோம்.

அச்சத்தால் வாழ்ந்தால் பரவாயில்லை. அச்சமின்றி வாழ்தல் தான் அச்சமாக இருக்கிறது கதரேனருக்கும். நமக்கும்.

Monday, July 2, 2018

திருத்தூதர் தோமா

நாளைய (3 ஜூன் 2018) நற்செய்தி

திருத்தூதர் தோமா

நாளை திருத்தூதர் தோமாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இயேசுவின் சமகாலத்தவர் ஒருவர், இயேசுவோடு வாழ்ந்த, பணி செய்த, அவரின் விலாவிலேயே கையிடும் பேறு பெற்ற தோமா நாம் வாழும் இந்தத் தமிழ் மண்ணில் வந்து நின்றார் என்று நினைக்கும்போதே ஆச்சர்யமாக இருக்கிறது.

எருசலேமுக்கும் கோழிக்கோட்டிற்குமான தூரத்தை அவர் கடந்த விதம், மேற்கொண்ட பயணம், பயணத்தில் சந்தித்த சவால், புதிய வாழ்விடம், புதிய கலாச்சாரம், மொழி, உணவுப்பழக்கவழக்கம், மனித உருவம் என அனைத்துமே புதிதாய் அவருக்கு இருக்க, இந்தப் புதிய இடத்தில் அவர் காலூன்றி நற்செய்தி அறிவித்ததும் ஆச்சர்யமாக இருக்கிறது.

'திதிம்' என்பது இவருடைய பெயர். 'திதிம்' என்றால் 'இரட்டை' என்பது பொருள். வாழ்வின் எதார்த்தங்கள் எல்லாமே இரட்டையில்தான் இருக்கின்றன: ஆண்-பெண், பகல்-இரவு, நன்மை-தீமை, ஒளி-இருள், பிறப்பு-இறப்பு, மகிழ்ச்சி-துன்பம். தோமாவிடமும் இந்த இரட்டைத்தன்மை இருந்தது. ஒரு கட்டத்தில் 'வாருங்கள், நாமும் சென்று அவரோடு இறப்போம்' என்கிறார். மறு கட்டத்தில் நம்புவதற்கே தயக்கம் காட்டுகிறார். ஆனால், இந்த இரண்டையும் ஒன்றோடொன்று சமரசம் செய்து கொள்ளாமல் அப்படியே எடுத்துக்கொள்கின்றார்.

நாம் பல நேரங்களில் இரட்டைத்தன்மையை ஒற்றைத்தன்மையாக்க முயற்சி செய்கின்றோம். அது தவறு என்றே நான் சொல்வேன். பிறப்பு மட்டுமே இருக்க முடியுமா? இறப்பு என்ற அதன் அடுத்த பக்கமும் அவசியம்தானே. இரட்டைத்தன்மையை ஒன்றாக்க முயலும்போதுதான் விரக்தி வந்துவிடுகிறது. 'நன்மை,' 'ஒளி,' 'மகிழ்ச்சி' ஆகியவை மட்டுமே சரி என நினைத்து மற்றதை விடுவதால் நாம் அடுத்ததை விரும்பத்தகாதது ஆக்கிவிடுகிறோம்.

திதிம் நம்மிலும் ஒருவர்.

ஐயம் கொண்ட இவரின் மற்றொரு குணம் சரணாகதி.

இரண்டும் அவசியம்தான் இறை-மனித உறவில்.