Thursday, August 3, 2023

விந்தையான வியான்னி

இன்றைய இறைமொழி

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023
பொதுக்காலம் 17-ஆம் வாரம்
எசே 3:16-21. மத் 9:35-10:1.
புனித ஜான் மரிய வியான்னி, திருவிழா

விந்தையான வியான்னி

இன்று மறைமாவட்ட அருள்பணியாளர்களின், பங்குப் பணி செய்கின்ற அருள்பணியாளர்களின், எல்லா அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஜான் மரிய வியான்னி

காண்பதற்கு ஈர்ப்பான உருவம் அவருக்கு இல்லை.

காலத்தால் அழியாத எந்த ஒரு நூலையும் அவர் எழுதவில்லை.

அகுஸ்தினார், அக்வினாஸ் போல இறையியல் கருத்துருக்களை வழங்கவில்லை.

இஞ்ஞாசியார் போல பெரிய சபையை நிறுவி மறைப்பணி செய்யவில்லை.

சவேரியார் போல நிறைய நாடுகளுக்குப் பயணம் செய்து நற்செய்தி அறிவித்ததில்லை.

செபஸ்தியார், அருளானந்தர் போல மறைக்காக இரத்தம் சிந்தவில்லை.

இலத்தீன் மொழியை அவரால் படிக்க முடியவில்லை. அவருடைய அறிவுக்கூர்மை மிகவும் குறைந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகையால்தான், இன்று ஆங்கில அகராதியில், 'Vianney Syndrome' என்ற சொல்லாட்சியே உருவாகிவிட்டது. அதாவது, சாதாரண மனிதர் போல இருந்தாலும், அறிவுக்கூர்மை குறைவாக உள்ளவர்களின் அறிவுநிலையை அகராதி இப்படி அழைக்கிறது.

தன்னை மற்றவர்கள் கழுதை என அழைத்ததாகவும், 'ஆனால், இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' என்று அவர் தன் சக மாணவர்களிடம் சொன்னதாகவும், அவருடைய சமகாலத்து ஆசிரியர் ஒருவர் எழுதுகிறார்.

'இவருடன் அருள்பணிநிலைப் பயிற்சிக்கு ஒன்பது பேர் இணைந்தனர். அவர்களில் ஒருவர் கர்தினாலாகவும், இருவர் ஆயர்களாகவும், மூவர் பேராசிரியர்களாகவும், மூவர் முதன்மைக் குருக்களாகவும் மாறினர். இவர் ஒருவர் மட்டும் புனிதராக மாறினார்' என்றும் இவரைப் பற்றிச் சொல்லப்படுவதுண்டு.

'எளிய வழியில் புனிதம்' என்றும், 'வாழ்வின் மிக அழகானவை அனைத்தும் எளிமையில்தான் உள்ளன' என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார் இவர்.

நீடித்து நிலைக்கக் கூடிய எதுவும் நீடித்த நேரம் எடுக்கிறது என்பது வாழ்வியல் எதார்த்தம். தன் இருபதாவது வயதில் அருள்பணிநிலைப் பயிற்சிப் பாசறைக்குள் நுழைந்தார். படிப்பு அவருக்கு எளிதாகக் கைகூடவில்லை. மத்தியாஸ் லோரஸ் என்ற அவருடைய சக மாணவர் (12 வயது) அவருக்கு தனிப்பட்ட வகுப்புகள் எடுத்தார். வியான்னி தான் எடுக்கும் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மந்த புத்தி உள்ளவராக இருக்கக் கண்டு ஒருநாள் எல்லார் முன்னிலையிலும் அவரைக் கன்னத்தில் அறைந்துவிடுகின்றார். ஆனால், அவர்மேல் எந்தக் கோபமும் கொள்ளாமல், தன்னைவிட எட்டு வயது குறைவான அந்த இளவலின் முன் முழந்தாள்படியிட்டு மன்னிப்பு கேட்கின்றார். மத்தியாஸின் உள்ளம் தங்கம் போல உருகுகின்றது. அழுகை மேலிட முழந்தாளில் நின்ற வியான்னியை அப்படியே தழுவிக்கொள்கின்றார். பிற்காலத்தில் டுபுக் (Dubuque) (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) மறைமாவட்டத்தின் ஆயரான மத்தியாஸ் தன் வாழ்வின் இறுதிக்கட்டத்திலும், வியான்னியின் வார்த்தைகளில் இருந்த இயலாமையை நினைத்துப் பார்த்தார். 

தான் மற்றவர்களால், 'கழுதை' என அழைக்கப்பட்டாலும், 'இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' என்பதில் உறுதியாய் இருந்தார் வியான்னி.

மனிதர்களின் பார்வையில் குதிரைகளும், சிங்கங்களும், புலிகளும், யானைகளும் மேன்மையாகத் தெரிந்த அக்காலத்திலும், தெரிகின்ற இக்காலத்திலும், 'கழுதை மட்டுமே ஆண்டவருக்குத் தேவையாக இருந்தது!' என்று புரிந்தவர், வாழ்ந்தவர், புனிதராக உயர்ந்தவர்.

இவரிடம் நான் கற்கும் சில பாடங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்:

1. காதுகளை மூடிக்கொள்தல்

வண்டு கதை ஒன்று சொல்வார்கள். இயற்பியலில் காற்றியக்கவியல் (aerodynamics) கோட்பாடு ஒன்று உண்டு. இறக்கைகள் உந்தித் தள்ளும் காற்றின் நிறைக்குக் குறைவான நிறை கொண்ட எந்த உயிரினமும் பறக்க முடியாது. ஆனால், இதற்கு ஒரு விதிவிலக்கு வண்டு. ஏன் வண்டுகளால் பறக்க முடிகின்றன? அவற்றுக்கு இயற்பியல் தெரியாது அவ்வளவுதான். தன்னைப் பற்றிய எல்லா எதிர்மறையான செய்திகளுக்கும் காதுகளை மூடிக்கொண்டார். தன்னை அழைத்த இறைவன் நம்பிக்கைக்குரியவர் என்பதால் அவருக்குத் தன் இதயத்தைத் திறந்தார் வியான்னி. தன் செயல்களையும் தாண்டிய தன்மதிப்பை உணர்ந்தார்.

2. அருள்பணியாளர் அடையாளம் போதும்

'நான் ஓர் அருள்பணியாளர், அது போதும் எனக்கு!' - இதுதான் வியான்னியின் வாழ்வின் இலக்கு, நோக்கம், செயல்பாடு என இருந்தது. இன்று அருள்பணியாளர்-ஆசிரியர், அருள்பணியாளர்-வழக்கறிஞர், அருள்பணியாளர்-சமூகக் காவலர், அருள்பணியாளர்-மருத்துவர், அருள்பணியாளர்-எழுத்தாளர் என நிறைய இரட்டை அடையாளங்களை நாம் தேடுகிறோம். அருள்பணியாளர் என்பதே ஓர் அடையாளம்தான். அந்த அடையாளத்தை முழுமையாக வாழ்ந்தால் - செபித்தால், திருப்பலி நிறைவேற்றினால், மக்களைச் சந்தித்தால், அவர்களின் குறைகளை நிறைவு செய்தால், தன் உடல்நலனை நன்றாகக் கவனித்துக்கொண்டால் - அதுவே போதும். தன் ஒற்றை அடையாளத்தை நிறைவாக ஏற்று, அதை முழுமையாக வாழ்ந்தார் வியான்னி.

3. சிறுநுகர் எண்ணம், சிறுநுகர் வாழ்வு (minimalist thinking, minimalist living)

இவருடைய தாழ்ச்சி இவருடைய சிறுநுகர் எண்ணத்தில் வெளிப்பட்டது. இவருடைய எளிமை அவருடைய சிறுநுகர் வாழ்வில் வெளிப்பட்டது. நான் எளிமையை இப்படித்தான் பார்க்கிறேன். அதாவது, என் நுகர்தலைக் குறைத்தலே எளிமை. நுகர்தலை அதிகரிக்க, அதிகரிக்க,பொருள்களை அதிகரிக்க, அதிகரிக்க, நான் எனக்கும் கடவுளுக்கும், எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள தூரத்தைக் கூட்டிக்கொண்டே போகிறேன். என்னைப் பற்றியே நிறைய எண்ணிப் பார்க்கும்போது இறுமாப்பு அல்லது ஆணவம் கொள்கிறேன். குறைவான எண்ணங்கள், குறைவான எதிர்பார்ப்புகள், குறைவான பொருள்கள், நிறைவான வாழ்வு எனத் தன்னையே கட்டமைத்துக் கொண்டார் வியான்னி. 

4. தெளிவான மேய்ப்புப் பணிக் கட்டமைப்பு (clear pastoral plan)

வியான்னியின் மேய்ப்புப் பணிக் கட்டமைப்பு மூன்றே விடயங்களை மட்டுமே கொண்டிருந்தது: திருப்பலி நிறைவேற்றுதல், பாவசங்கீர்த்தனம் கேட்டல், மறைக்கல்வி கற்பித்தல். அவருடைய சமகாலத்தில் இதுதான் மக்களின் தேவையாக இருந்தது. தேவைகளை உணர்ந்து, தெளிவாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்டார் வியான்னி. ஆனால், இன்று நம் பங்குகளில் நிறைய மேய்ப்புப் பணிகள் நடைபெறுகின்றன: திருப்பலி நிறைவேற்றுதல், மறைக்கல்வி எடுத்தல், அருள்சாதனங்களை வழங்குதல், இல்லங்கள் சந்திப்பு, இயக்கங்கள், பக்தசபைகள், குழுக்கள், சந்திப்புக்கள், திருப்பயணங்கள், சிறப்பு தியானங்கள், பக்தி முயற்சிகள், பிறரன்புச் செயல்கள். இன்று நிறைய தேவைகள் இருக்கின்றன. ஆனால், தெளிவுகள் இல்லை. ஒவ்வோர் அருள்பணியாளரும் இலக்குத் தெளிவுடன் இருக்க வேண்டும் என நம்மை அழைக்கின்றார்.

5. நிலைப்புத்தன்மை (stability)

தன் அருள்பணி வாழ்வு முழுவதுமே வியான்னி ஒரே ஒரு பணித்தளத்தில் - ஆர்ஸ் நகரில் - மட்டுமே பணியாற்றினார். தன் ஆர்ஸ் நகரம் தன்னை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதன் தட்பவெட்பநிலை தன் உடலுக்கு ஏற்றதாக இல்லை என்றாலும், தன் சொந்த ஊரைவிட தான் தூரமாக இருந்தாலும், தன் மக்களுக்காக இறுதிவரை அதே இடத்தில் நிலைப்புத்தன்மை கொள்கிறார் வியான்னி.

6. மாற்றம் கண்முன்னே நடக்கும் (change happens in front of our eyes)

மது, கேளிக்கை, பொழுதுபோக்கு என்ற மூன்று பிறழ்வுகள் கோலோச்சிய இடத்தை, தன் செபத்தாலும், உடனிருப்பாலும், எளிய வாழ்வாலும் புரட்டிப் போட்டார் வியான்னி. யாருமே செல்ல அஞ்சிய ஓர் இடத்திற்கு, இரயில்களில் மக்கள் குவிந்தனர். தன் கண் முன்னே மாற்றத்தைக் கண்டார் வியான்னி. நம் கண்முன்னே மாற்றத்தைக் காண இயலாதபோதுதான் அருள்பணி வாழ்வில் சோர்வு வருகிறது. மாற்றம் நம் கண்முன்னே சாத்தியம் என உணர்த்துகிறார் வியான்னி.

7. இலக்குத் தெளிவு

தான் ஆர்ஸ் நகரத்தில் காண விரும்பிய மாற்றத்தைக் கனவு கண்டார். அந்த ஒற்றைக் கனவை தன் எல்லாமாக மாற்றினார். தன் இறைவேண்டல், திருப்பலி, வழிபாடு, வீடு சந்திப்பு, நோயுற்றோர் சந்திப்பு, பயணம் என அனைத்திலும் தன் மக்களை மட்டுமே நினைவில் கொண்டிருந்தார்.

8. வலுவற்ற அவர் வலுவற்றவர்களின் உணர்வை அறிந்தார்

தானே இயலாமையில் இருந்ததால் மற்றவர்களின் இயலாமையை அறிந்தார். மற்றவர்கள் வார்த்தைகளைக் கேட்டு பொருள் உணர்ந்த வேளையில், இவரோ மற்றவர்களின் ஆன்மாக்களின் மௌனம் கேட்டுப் பொருள் உணர்ந்தார். ஆன்மாக்களை ஊடுருவிப் பார்த்தன அவருடைய கண்கள். 'எனக்காக ஒருவர் இருக்கிறார்' என்று தன் மக்கள் உரிமை கொண்டாடும் அளவுக்கு அவர்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்தார்.

9. உடலில் தைத்த முள்

அவருடைய உடல்நலக் குறைவு உடலில் தைத்த முள்போல அவரை வாட்டியது. உணவுக்கும் ஊட்டத்துக்கும் உடல்நலத்துக்கும் உரிய நேரத்தை அவர் கொடுக்கவில்லை. அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால், அருகில் செல்லும் பயணத்திற்கும் அடுத்தவரின் துணை அவருக்குத் தேவைப்பட்டது. ஆனால், 'என் அருள் உனக்குப் போதும்' என்ற இறைவனின் உடனிருப்பை நிறையவே உணர்ந்தார்.

திருவிழாத் திருப்பலிக்குரிய இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் எசேக்கியேல் இறைவாக்கினரை இஸ்ரயேல் வீட்டுக்குக் காவலனாக நியமிக்கிறார். அவர்களுடைய மனச்சான்று போலச் செயல்பட்டு, நல்வழியில் அழைத்துச் செல்வது இறைவாக்கினரின் பணியாக இருந்தது. வியான்னி ஆர்ஸ் நகரத்தின் மனச்சான்று போலச் செயல்பட்டு அந்நகர மக்களை எச்சரித்து வழிநடத்தினார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பரிவுள்ளம் வெளிப்படுகிறது. மேலும், அறுவடைக்குத் தேவையான வேலையாள்களின் பற்றாக்குறையையும் சுட்டிக்காட்டுகிறார் இயேசு. அறுவடை மிகுந்திருந்த தன் காலத்தில் நம்பிக்கைக்குரிய வேலையாளாகப் பணியாற்றினார் வியான்னி.

இம்மாபெரும் மனிதரை மறைமாவட்ட அருள்பணியாளர்களிய நாங்கள் பாதுகாவலராகப் பெற்றிருப்பதில் பெருமை கொள்கிறோம். 

அருள்பணியாளர்களாகிய எங்களுக்கு இவர் ஒரு சவால்.

இவருடைய பரிந்து பேசுதல் எங்களுக்கு நம்பிக்கை தருவதாக!

இவருடைய வாழ்வு எங்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக!

1 comment:

  1. Fr Arputhasamy8/03/2023

    Dear Yesu thank you so much for your deep reflection on St John Maria Vianny who is very dear to my heart. I have never completed my mass without prayerfully reciting his name in the Eucharistic Prayer.
    Happy Feast Yesu.

    ReplyDelete