புதன், 16 ஆகஸ்ட் 2023
ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு
இச 34:1-12. மத் 18:15-20.
ஆண்டவர் நேருக்குநேர்
1. இன்றைய முதல் வாசகத்தில் இணைச்சட்ட நூலின் இறுதிப்பகுதியை வாசிக்கிறோம். வாக்களிக்கப்பட்ட நாட்டைத் தன் கண்களால் மட்டுமே பார்க்கிற மோசே, நெபோ மலையில் இறக்க, ஆண்டவராகிய கடவுள் அவரை அடக்கம் செய்கிறார். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வில் மோசே தாபோர் மலைமேல் இறங்கி வருகிறார். ஆக, கிறிஸ்தவ வாசிப்பில் மோசே வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைகிறார். மோசேயின் இறப்பு, மோசேயின் மேன்மை, மோசேயின் பணித்தொடர்ச்சி என மூன்று பகுதிகளாக உள்ளது முதல் வாசகம். மோசேயின் இறப்பு நம்மால் தாங்க இயலாத ஒன்றாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களுக்குக் காண்கின்ற கடவுள் போல, தந்தையாக, தாயாக வழிநடத்தியவர், அவர்களின் முணுமுணுப்புக்கெல்லாம் ஈடுகொடுத்தவர் இன்று அவர்கள் கண்களிலிருந்து மறைகிறார். மோசேயின் மேன்மை பற்றி எழுதுகிற ஆசிரியர் அவரின் கண்களின் பார்வை மற்றும் வலிமை எந்த வகையிலும் குறையவில்லை என்கிறார். ஏனெனில், மோசே கடவுளின் கண்கள் கொண்டே அனைத்தையும் கண்டார், கடவுளின் வலிமையாலே மக்களைத் தூக்கிச் சுமந்தார். கடவுளை நேருக்கு நேர் காணும் பேறு பெறுகிறார் மோசே. மோசேயின் பணியைத் தொடர்கிறார் இளவல் யோசுவா. இதுவரை இறைவாக்கினரான மோசே வழிநடத்தினார். இனி வரும் தலைமைத்துவம் நிர்வாகம் அல்லது இராணுவம் சார்ந்ததாக இருக்கும். இறைவாக்கினர் (மோசே), அருள்பணியாளர் (ஆரோன்), அரசர் (யோசுவா) என்று மூன்று தலைமைத்துவ முறைகள் இப்படியாக வளர்ச்சி பெற்று இஸ்ரயேலில் நிலைபெறுகின்றன. இம்மூன்று பணிகளையே நாம் கிறிஸ்துவின் பணிகள் என்றும் கூறுகிறோம்.
2. மத்தேயு நற்செய்தி நூலின் குழுமவாழ்வு உரை என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது நற்செய்தி வாசகம். இந்த இடத்தில் மட்டுமே நற்செய்தி நூல்கள் 'திருச்சபை' ('எக்ளேசியா') என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றன. குழுமம் யாரையும் இழந்துவிடக்கூடாது என அக்கறை காட்டுகிறது நற்செய்திப் பகுதி. குழும வாழ்வில் பிரச்சினைகள், கருத்து மாற்றங்கள், பகைமை உணர்வுகள் தவிர்க்க முடியாதவை என ஏற்றுக்கொள்வதோடு, அவற்றுக்கான தீர்வுகளை குழுமத்திலேயே காண அறிவுறுத்துகிறது. உறவுகள் மனம் ஒத்து இருக்கும்போது அங்கே இறைவனின் திருமுன்னிலை இருக்கிறது.
3. எவ்வளவு பெரிய தலைவராக ஒருவர் இருந்தாலும், வளர்ந்தாலும், உருவெடுத்தாலும் அவர் அந்த இடத்திலிருந்து மறைய வேண்டும் என்பதே வாழ்வியல் எதார்த்தம். மோசே இதை அறிந்தவராக இருக்கிறார். ஆகையால்தான், தமக்கென தலைமை வாரிசாக யோசுவாவை ஏற்படுத்தி உருவாக்குகிறார். எந்தவொரு தடையும் இல்லாமல் அவர்களின் பயணம் தொடரும். தலைமைத்துவத்துக்கான நல்ல பாடம் இது. 'உங்களுள் யாராவது உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் இருவரும் தனித்திருக்கையில் அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்' என்கிறார் இயேசு. நாம் இதை உறவு மேலாண்மைப்பாடமாக எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், ஒருவருடைய குற்றத்தை நாம் மற்றவர்களிடம் எடுத்துச்சொல்வதில் காட்டும் அக்கறையை, அத்தோடு தொடர்புடைய நபருக்கு எடுத்துச்சொல்வதில் காட்டுவதில்லை. ஆன்மிகத் தலைமைத்துவம், குழும வாழ்வு, உறவு மேலாண்மை என வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கின்றன இன்றைய வாசகங்கள்.
No comments:
Post a Comment