Tuesday, August 22, 2023

கடைசியானோர் முதன்மையாவர்!

இன்றைய இறைமொழி

புதன், 23 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் வாரம்

நீத 9:6-15. மத் 20:1-16.

கடைசியானோர் முதன்மையாவர்!

1. கிதியோன் என்னும் நீதித்தலைவர் மிதியானியருக்கு எதிராகப் போரிட்டு அவர்கள்மேல் வெற்றிகொள்கிறார். ஆனால், வெற்றியின் இறுதியில் அவரே மக்களை சிலைவழிபாட்டுக்குள் இழுக்கிறார். அவருடைய மகன் அபிமெலேக்கு (எபிரேயத்தில், 'என் தந்தை ஓர் அரசன்') தன்னையே அரசன் என அறிவித்துக்கொள்வதுடன் கிதியோனின் மற்ற எழுபது மகன்களை ஒரு கல்லில் வைத்துக் கொலை செய்கிறார். ஆனால், யோத்தாம் என்னும் இறுதி மகன் தப்பி விடுகிறார். இவ்வாறு தப்பிச் செல்கிற யோத்தாம் அனைத்து இஸ்ரயேல் மக்களையும் பார்த்து ஆற்றும் உரையே முதல் வாசகம். மரங்கள் உவமை ஒன்றை எடுத்தாளுகிற யோத்தாம், தற்போது இஸ்ரயேல் மக்கள் தங்களை ஆட்சி செய்வதற்கென முட்செடியைத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறுகிறார். முட்செடிகள் நிலத்தை அடைத்துக்கொள்கின்றன. அவற்றால் பயன் ஒன்றும் இல்லை. அவை மற்ற செடிகளுக்குரிய சத்துகளை எடுத்துக்கொள்வதுடன், மற்ற செடிகள் வளரவிடாமல் தடுத்துவிடுகின்றன. ஏறக்குறைய அபிமெலேக்கும் இப்படித்தான் செயல்படுகிறார்.

2. திராட்சைத் தோட்டப் பணியாளர்கள் எடுத்துக்காட்டு வழியாக விண்ணரசின் உண்மையை எடுத்துரைக்கிறார் இயேசு. 'கடைசியானோர் முதன்மையாவர்' என்பதே இயேசு தரும் செய்தி. முதன்மையானோர் முதன்மையாவர் என்பது இயற்பியல் விதி. ஆனால், இது இறையாட்சி விதி அல்ல. ஒரே நேரத்தில் ஆண்டவராகிய கடவுள் தம் நீதியையும் இரக்கத்தையும் காட்டுகிறார். முழு நாள் வேலை பார்த்தவர்கள் முழு நாளுக்குரிய தெனாரியம் பெறுகிறார்கள். இது கடவுளின் நீதி. ஒரு மணிநேரம் வேலை பார்த்தவர்கள் முழு நாளுக்குரிய தெனாரியம் பெறுகிறார்கள். இதுவே கடவுளின் இரக்கம். இரண்டும் வேறு தளங்களில் இயங்கினாலும் இயக்குபவர் இறைவனே. நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுப்பவர்கள் இரண்டு தளங்களையும் ஒன்றாக்கிப் பார்க்கிறார்கள். 

3. முதல் வாசகத்தில், கிதியோனின் வீட்டில் கடைசியாக இருந்த யோத்தாம் முதன்மையானவராக மாறுகிறார். இஸ்ரயேல் மக்களின் பிறழ்வுபட்ட நிலையை எடுத்துரைக்கிறார். நற்செய்தி வாசகத்தில், கடைசியாக வந்தவர்கள் முழு கூலி பெற்றுக்கொள்கிறார்கள். 'கடைசியானோர் முதன்மையாவர்' என்னும் இறையாட்சிச் செய்தியை நமக்குப் பொருத்திப் பார்ப்பதில் மகிழும் நாம், அதையே மற்றவர்களுக்குப் பொருத்திப் பார்க்கும்போது இடறல்படுகிறோம். மற்றவர்களுக்கு நீதி, நமக்கு இரக்கம் என்பதே நம் எண்ணமாக இருக்கிறது. இதைச் சற்றே மாற்றிப் போடுவதற்கு நாமும் நிலக்கிழாருடன் தோட்டத்திற்குள் நுழைவது நலம்.


No comments:

Post a Comment