வெள்ளி, 7 ஜூலை 2023
பொதுக்காலம் 13-ஆம் வாரம்
தொநூ 23:1-4, 19ளூ 24:1-8, 62-67. மத் 9:9-13.
புதிய ஆறுதல்!
1. ஆபிரகாமின் இல்லத்தில் நிகழ்வுகள் வேகமாக நடந்தேறுகின்றன. சாரா இறக்கிறார். சாராவின் கல்லறையே ஆபிரகாம் வாங்கிய முதல் நிலமாக இருக்கிறது. கானான் நாடு இவ்வாறாக ஆபிரகாமின் உரிமைப் பொருளாக மாறத் தொடங்குகிறது. ஈசாக்கு வேகமாக வளர்கிறார். இளவல் ஈசாக்குக்கு பெண் பார்க்கும் பொறுப்பை ஆபிரகாம் தன் பணியாளர் ஒருவரிடம் ஒப்படைக்கிறார். தன் உறவினரிடையே பெண் கொள்வதில் ஆபிரகாம் அக்கறை காட்டுகிறார். பணியாளரும் புறப்பட்டுச் செல்கிறார். ரெபேக்காவைக் கண்டுபிடிக்கிறார். ரெபேக்கா ஆபிரகாமின் இல்லத்துக்கு அழைத்துவரப்படுகிறார். தன் தாயாரின் கூடாரத்துக்குள் அவரை அழைத்துச் செல்கிற ஈசாக்கு அவரை மணந்துகொள்கிறார். 'தாயின் மறைவுக்குப் பின்னர் ஈசாக்கு ஆறுதல் அடைந்தார்' என நிகழ்வுக்குத் திரையிடுகிறார் ஆசிரியர். உளவில் ஆய்வின்படி பார்த்தால், குழந்தை ஈசாக்கு தன் தந்தை தன்னைப் பலியிட முயற்சி செய்ததைப் பார்த்தவுடன் மிகவும் பயந்துபோயிருப்பார். இந்த நிகழ்வுக்குப் பின்னர் தாய் சாராவுடனான அவருடைய நெருக்கம் அதிகமாகியிருக்கும். ஆகையால்தான், தாயின் மறைவை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனிமையிலும் கொடிய தனிமை நம் சொந்த வீட்டிலே உணரும் தனிமைதான். அதாவது, தாயின் மறைவுக்குப் பின்னர் ஆறுதல் இல்லாமல் இருக்கிறார். அந்த ஆறுதலை ரெபேக்காவிடம் கண்டுகொள்கிறார்.
2. சுங்கச் சாவடியில் அமர்ந்த மத்தேயு என்னும் நபரை இயேசு அழைக்கிறார். மத்தத்தியா ('கடவுளின் கொடை') என்னும் பெயரே மத்தேயு என ஆயிற்று என்கிறார்கள் விளக்கவுரையாளர்கள். இவர் லேவி எனவும் அழைக்கப்படுகிறார். இவர் வசூலித்த வரி அந்நியப் பொருள்கள்மேலான வரி. அதாவது, வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்குச் சென்று வீடு திரும்புகிற விவசாயிகள், வணிகர்கள், வழிப்போக்கர்களிடம் வரி வசூலிப்பது இவருடைய பணி. பெரும்பாலும் இப்பணியைச் செய்கிறவர் முன்னதாகவே உரோமை அரசுக்குப் பணம் கட்டிவிட வேண்டும். பின் தான் கட்டியதையோ அல்லது கட்டியதைவிடவோ மக்களிடம் இவர்கள் வசூலித்துக்கொள்வார்கள். வெறுக்கப்பட்ட தொழிலாக இது கருதப்பட்டது. ஆக, மத்தேயு தனக்கென ஒரு வேலை, கையில் பணம், உரோமைத் தொடர்பு என அனைத்தையும் கொண்டிருந்தாலும், தன்னிலேயே ஆறுதல் இழந்தவராக அல்லது இல்லாதவராக இருக்கிறார். மக்களின் வெறுப்பு, பணிச்சுமை, வெறுமை, சோர்வு என்றிருந்த அவர், ஏதோ இந்த நாளுக்காகவே காத்திருந்தது போல, இயேசு அழைத்தவுடன் எழுந்து செல்கிறார். அழைப்பு பெற்ற அவர் அழைப்பை விருந்தோம்பல் செய்து கொண்டாடுகிறார். புதிய ஆறுதலை இயேசுவிடம் பெறுகிறார் மத்தேயு.
3. தாயின் இழப்பு அல்லது பிரிவு ஏற்படுத்திய சோகத்திலிருந்து விடுபட்டு புதிய ஆறுதலை ரெபேக்காவிடம் பெறுகிறார் ஈசாக்கு. பணிச் சுமை, மக்களின் கேலிப்பேச்சு ஏற்படுத்திய சோர்விலிருந்து விடுபட்டு புதிய ஆறுதலை இயேசுவிடம் பெறுகிறார் மத்தேயு. மனிதர்கள் சில நேரங்களிலும் கடவுள் எல்லா நேரங்களிலும் நமக்கு ஆறுதல் தருகிறார்கள். இன்று நம் வாழ்வில் ஆற்ற இயலாத, அல்லது ஆற்றுப்படுத்த இயலாத சோகம் அல்லது சோர்வு எது? ஆண்டவர்தாமே நம்மைத் தேடி வருகிறார் நம் புதிய ஆறுதலாக. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்: ஈசாக்கு போல சற்றே வயல்வெளிக்குச் சென்று காத்திருக்க வேண்டும். அல்லது மத்தேயு போல அவருடைய வேலையில் மும்முரமாக இருத்தல் வேண்டும். ஆண்டவர் தரும் ஆறுதலைப் பெறுகிற எவரும் அதை மற்றவர்களுக்குக் கொடுக்கக் கடமை உண்டு.
No comments:
Post a Comment