வியாழன், 13 ஜூலை 2023
பொதுக்காலம் 14-ஆம் வாரம்
தொநூ 44:18-21, 23-29, 45:1-5. மத் 10:7-15.
கொடையாகவே வழங்குங்கள்!
1. யோசேப்பின் சகோதரர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர் அவர்களைச் சோதித்தறிந்து, இறுதியில், 'நான்தான் யோசேப்பு ... உங்கள் சகோதரன் யோசேப்பு' என வெளிப்படுத்துகிறார். ஆனால், கதையின் சோகம் என்னவென்றால், இந்நிகழ்வுக்குப் பின், அவருடைய சகோதரர்கள் ஓரிடத்தில்கூட அவரை, 'சகோதரர்' என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்மேல் அச்சம் கொள்கிறார்கள். அவர் தங்களைப் பழிவாங்குவார் என நினைக்கிறார்கள். தங்கள் தந்தையின் இறப்புக்குப் பின்னர் பழிதீர்ப்பார் என்கிறார்கள். ஆனால், யோசேப்பு அவர்கள் தனக்குச் செய்த தீங்குக்குப் பதிலாக அவர்களுக்கு நன்மையே செய்கிறார். யோசேப்பின் நம்பிக்கைப் பார்வை நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. 'உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்துக்கு அனுப்பினார்' என மொழிகிறார். அதாவது, தான் விற்கப்படவில்லை, மாறாக, கடவுளால் அனுப்பட்டார் என்பதே அவருடைய புரிதல். தன் வாழ்வில் தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தீங்கையும் கடவுளின் அழைப்பாகப் பார்க்கிறார் யோசேப்பு. தனக்குக் கிடைத்த அனைத்தும் கடவுளின் கொடை என்பதால் அதைக் கொடையாகவே வழங்கத் துணிகிறார்.
2. பேய்களை ஓட்டவும் நோய்நொடிகளைக் குணமாக்கவும் தம் சீடர்களுக்கு அதிகாரம் வழங்குகிற இயேசு, அவர்களைப் பணிக்கு அனுப்புமுன், அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். 'கொடையாகப் பெற்றீர்கள். கொடையாகவே வழங்குங்கள்!' என்பது அவருடைய முதன்மையான அறிவுரையாக இருக்கிறது. கொடையாகக் கொடுத்தல் என்பது இலவசமாகக் கொடுத்தல் அல்ல. கொடைக்கும் இலவசத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. இலவசம் பெரும்பாலும் வியாபாரம் சார்ந்தது. மற்றவர்களின் தேவை அறிந்து வழங்கப்படுவது கொடை. மற்றவர்களைத் தன் வயப்படுத்த வழங்கப்படுவது இலவசம். வழங்கப்படும் அனைத்து இலவசங்களுக்கும் மறைமுகமான விலை ஒன்று இருக்கும். ஆனால், கொடை பரிவுடன் தொடர்புடையது. கொடை அளிப்பவர் மற்றவருக்கு மேல் உயர்கிறார். கொடை அளிப்பவர் கணக்குப் பார்ப்பதில்லை. தன் வாழ்வைக் கொடையாகப் பார்ப்பவர் மட்டும்தான் தன் வாழ்வைக் கொடையாகக் கொடுக்க முடியும். தன் வாழ்வைக் கொடையாகப் பார்ப்பவர் தான் அனுபவிக்கும் எதிர்ப்பு, நிராகரித்தல் பற்றிக் கவலையுறுவது இல்லை.
3. யோசேப்பின் நம்பிக்கைப் பார்வை போற்றுதற்குரியது. மற்றவர்கள் நம் வாழ்க்கையை எப்படிப் பார்த்தாலும், அதை நாம் எப்படிப் பார்க்கிறோமோ அதைப் பொறுத்தே வாழ்வுக்குப் பொருள் கிடைக்கிறது. மற்றவர்கள் பார்வையில் தமக்குத் தீங்கு நேர்ந்தாலும், தன் பார்வையில் அதைக் கடவுளின் அழைப்பாகப் பார்க்கிறார் யோசேப்பு. விளைவு, தீங்கு செய்து பழிதீர்க்க அவர் முயற்சி செய்யவில்லை. தன் கைகளில் உள்ள அனைத்தும் கடவுளின் கொடை என அவர் உணர்ந்ததால், கைகளை விரித்துக் கொடுக்கிறார். திருத்தூதுப் பணிக்கான இயேசுவின் அழைப்பும் திருத்தூதர்கள் பெற்ற கொடையே. அனைத்தும் கடவுளின் கொடை என உணர்ந்து வாழ்பவர் குறைவிலும் நிறைவு காண்பார், எதிர்ப்பையும் சமாளித்துக்கொள்வார், வறுமையையும் வளமை ஆக்குவார்.
No comments:
Post a Comment