வியாழன், 6 ஜூலை 2023
பொதுக்காலம் 13-ஆம் வாரம்
தொநூ 22:1-19. மத் 9:1-8.
கிடத்தப்பட்ட இருவர்!
1. ஆகாரும் இஸ்மயேலும் ஆபிரகாமின் வீட்டை விட்டுச் சென்றாயிற்று. இப்போது ஆபிரகாமுக்கு இருப்பது ஒரே மகன் ஈசாக்கு. ஆபிரகாம் அன்புகூரும் ஒரே மகனை எரிபலியாகக் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார் கடவுள். ஆபிரகாமும் பணியாளர்கள் மற்றும் ஈசாக்குடன் கடவுள் காட்டிய மலையை நோக்கிப் புறப்படுகிறார். இது தனக்குக் கடவுள் வைக்கும் சோதனை அல்ல, மாறாக, தான் கடவுளுக்கு வைக்கும் சோதனை என மனதிற்குள் நினைத்திருப்பார் ஆபிரகாம். ஏனெனில், மகன் கொல்லப்பட்டால், ஈசாக்கின் வழியாகத் தலைமுறைகள் உருவாகும் என்னும் ஆண்டவரின் வாக்கு பொய்யாகிவிடும் அல்லவா! குழப்பத்திலிருந்தது என்னவோ இளவல் ஈசாக்குதான்! 'பலிப்பொருள் எங்கே?' எனக் கேட்கிறது பலிப்பொருள். அடுக்கிய விறகுக் கட்டைகளின்மேல் மகனைப் படுக்க வைக்கிறார் ஆபிரகாம். கத்தியை அவர் கையில் எடுத்தபோது தடுக்கிற கடவுள், ஆட்டுக்குட்டி ஒன்றைக் காட்ட, ஆபிரகாம் அதைப் பலியாக்குகிறார். கிடத்தப்பட்ட நபர் விடுதலை பெறுகிறார். ஏனெனில், 'மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்!'
2. கட்டிலில் கிடத்தப்பட்டுத் தூக்கிவரப்பட்ட முடக்குவாதமுற்ற ஒருவருக்கு நலம் தருகிறார் இயேசு. உடல்நலத்தோடு இணைந்து அவர் உள்ள நலமும் தந்ததை அங்கிருந்த மறைநூல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நோயுற்றவருக்கோ உடலில் முடக்குவாதம். மறைநூல் அறிஞர்களுக்கோ உள்ளத்தில் முடக்குவாதம். இயேசுவைப் பொருத்தவரையில் அவர்கள் அனைவருமே கட்டிலில் கிடத்தப்பட்டவர்கள்தாம். உடலில் முடக்குவாதமுற்றவர் நலம் பெற்றுக் கட்டிலைத் தூக்கிக்கொண்டு நடந்தார். மற்றவர்களோ கட்டிலிலேயே கிடந்தனர். ஆண்டவர் பார்க்கிற நபர் நலம் பெறுகிறார்.
3. முதல் வாசகத்தில் ஈசாக்கு விறகுக் கட்டைகளில் கிடத்தப்பட்டார். நற்செய்தி வாசகத்தில் முடக்குவாதமுற்ற நபர் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார். கிடத்தப்பட்ட இருவருமே இறைவனின், இறைமகனின் செயல்பாட்டில் நலமுடன் எழுந்து வருகிறார்கள். மலையிலும் ஆண்டவர் பார்த்துக்கொள்வார். தரையிலும் ஆண்டவர் பார்த்துக்கொள்வார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்ன? கட்டிலில் படுத்துக் கிடப்பதா? இல்லை. நாம் கிடத்தப்பட்ட நிலையில் இருந்தாலும் நம் கண்கள் அவர்மேல் இருக்கட்டும். ஏனெனில், அவர் நம்மைப் பார்ப்பதால், அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார்.
No comments:
Post a Comment