Monday, July 31, 2023

இரக்கமும் பரிவும்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 17-ஆம் வாரம்

விப 33:7-11. 34:5-9, 28. மத் 13:36-43.

இரக்கமும் பரிவும்

1. ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிலை சந்திப்புக் கூடாரத்தின்மேல் இறங்கி வருகிறது. சந்திப்புக் கூடாரத்திற்குள் செல்கிற மோசேயுடன் ஆண்டவராகிய கடவுள் முகமுகமாகப் பேசுகிறார். வாசகத்தின் இரண்டாவது பகுதியில், ஆண்டவர் மோசேயைக் கடந்து செல்கிறார். ஆண்டவராகிய கடவுளின் பெயர் இங்கே தரப்படுகிறது: 'ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன் ... சினம் கொள்ளத் தயங்குபவர். பேரன்பு மிக்கவர்.'

2. நற்செய்தி வாசகத்தில், வயலில் தோன்றிய கதைகளின் விளக்கத்தை முன்மொழிகிறார் இயேசு. உலக முடிவின் நிகழ்வுகளோடு இணைத்துப் பேசுகிற இயேசு, கடவுளின் நீதி வெளிப்படுவதை எடுத்துரைக்கிறார்.

3. இன்றைய வாசகங்கள் ஆண்டவராகிய கடவுளின் இரண்டு முகங்களைப் பார்க்கிறோம். ஒன்று, இரக்கம். இரண்டு, நீதி. இறைவனின் இரக்கமே மேலோங்கி நிற்கிறது. இறைவனின் இரக்கத்தை அனுபவிக்கிற நாம் அதை ஒருவர் மற்றவர்களுக்குக் காட்டுவது நலம்.


Sunday, July 30, 2023

மறைவான ஆற்றல்

இன்றைய இறைமொழி

திங்கள், 31 ஜூலை 2023

பொதுக்காலம் 17-ஆம் வாரம்

விப 32:15-24, 30-34. மத் 13:31-35.

மறைவான ஆற்றல்

1. பத்துக் கட்டளைகளை சீனாய் மலையில் ஆண்டவராகிய கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட மோசே (மற்றும் யோசுவா) மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள். கீழே மக்கள் ஆரோனின் தலைமையில் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபாடு நடத்துகிறார்கள். மோசே கோபம் கொள்கிறார். ஆண்டவராகிய கடவுளின் கோபமும் பற்றி எரிகிறது. மக்களை அழித்துவிட நினைக்கிறார் ஆண்டவர். மோசே அவர்களுக்காகப் பரிந்துபேசுகிறார். மக்கள் செய்த தவறு என்ன? (அ) மோசே நீண்டநாள் அவர்களிடமிருந்து விலகியிருந்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. (ஆ) ஆண்டவராகிய கடவுள் எகிப்து நாட்டில் தங்களுக்காக ஆற்றிய அரும்பெரும் செயல்களை மறந்துபோகிறார்கள். (இ) தங்களுக்கென்று ஒரு கடவுளை உருவாக்கிக்கொள்கிறார்கள்.

2. கடுகு விதை மற்றும் புளிப்பு மாவு என்னும் இரு உருவகங்கள் வழியாக விண்ணரசின் தன்மையை எடுத்துரைக்கிறார் இயேசு. இரண்டுமே உருவத்தில் அளவில் சிறியவை. இரண்டிலும் ஆற்றல் மறைந்து இருக்கிறது. இரண்டும் வேகமாகச் செயலாற்றத் தொடங்குகின்றன. இரண்டின் செயல்பாட்டையும் யாராலும் தடுக்க இயலாது. இவ்வாறாக, அளவில் சிறியனவாக இருப்பவை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன.

3. சீனாய் மலையடிவாரத்தில் நிற்கிற இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுள் தங்களோடு இருந்தார் என்பதை மறந்துவிட்டார்கள். ஆண்டவர் கடுகு விதை போல, புளிப்பு மாவு போல மறைவாகவே செயலாற்றுகிறார் என்பதை மறந்துவிட்டார்கள். மறைவாக இருக்கும் இறைமையை மறந்துவிட்டு, தங்கள் கண்களுக்குத் தெரியுமாறு கடவுள் ஒன்றை பொன்னால் உருவாக்கிக்கொள்கிறார்கள். நம்மில் மறைவாகச் செயல்படும் இறைவனின் ஆற்றலை உணர்ந்து வாழ நம்மை அழைக்கின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றும் நாம் புனித இனிகோ (இஞ்ஞாசியார்) திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம். இந்தப் புனிதரின் வாழ்வு நமக்குப் பின்வரும் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது: உன்னை நீ ஆளுகை செய்யாதவரை மற்றவர்களை ஆளுகை செய்ய உன்னால் இயலாது, பதறிய காரியம் சிதறிப் போகும், முக்கியமான தொடர்புகள் அவசியம், தன்னாய்வு செய்தல், தெரிவு செய்தல், நேரத்தைப் பயன்படுத்துதல். எல்லாவற்றுக்கும் மேலாக, 'மேன்மையை' ('மாஜிஸ்') தேடுதல்.


Monday, July 24, 2023

புனித பெரிய யாக்கோபு

இன்றைய இறைமொழி

செவ்வாய், 25 ஜூலை 2023

பொதுக்காலம் 16-ஆம் வாரம்

புனித பெரிய யாக்கோபு, திருத்தூதர்

2 கொரி 4:7-15. மத் 20:20-28.

புனித பெரிய யாக்கோபு

இன்று திருத்தூதரான தூய யாகப்பரின் - யாக்கோபு - திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஆங்கிலத்தில் 'ஜேம்ஸ்', இஸ்பானியத்தில் 'ஹைமே', இத்தாலியனில் 'யாக்கோமோ' என அழைக்கப்படும் இவரின் லத்தீன் பெயர் 'சான்க்து இயாக்கோபு' - இதுவே மருவி சந்தியாகு அல்லது சந்தியாகோ என ஆகிவிட்டது.

இவர் திருஅவை பாரம்பரியத்தில் 'யாக்கோப் மயோர்' (பெரிய யாகப்பர்) எனவே அறியப்படுகின்றார். இவர்தான் செபதேயுவின் மகன். யோவானின் சகோதரர். அப்படியென்றால் 'யாக்கோப் மினோர்' (சின்ன யாகப்பர்) என்று சொல்லப்படுபவர் யார்? அவர் அல்ஃபேயுவின் மகன் யாக்கோபு (காண். மத் 10:2).

இயேசுவுக்கு பன்னிரண்டு திருத்தூதர்கள் இருந்தார்கள். ஆனால் அந்தப் பன்னிரண்டு பேரில் மூன்று பேர் இயேசுவின் 'பவர் ஹவுஸ்' போல அவருக்குப் பக்கத்திலேயே இருந்தார்கள்: பேதுரு, சந்தியாகு மற்றும் யோவான். இந்த மூவரும் தான் இயேசு உருமாற்றம் பெற்றபோது அவரோடு உடனிருக்கின்றனர். இந்த மூவரையும் தான் இயேசு யாயிரின் மகளை உயிர்ப்பிக்கும்போது அருகில் வைத்துக்கொள்கின்றார். மேலும் இந்த மூவர்தாம் இயேசுவின் இரத்தவியர்வையின்போது கெத்சமேனித் தோட்டத்தில் உடனிருக்கின்றனர்.

மேலும், இவர்தான் முதல் மறைசாட்சி என்கிறது பாரம்பரியம்.

இவர் தொடக்ககாலத்தில் திருச்சபையின் முக்கியத் தலைவராக இருந்திருக்கின்றார். மேலும் முதன்முதலாக கூட்டப்பட்ட எருசலேம் சங்கத்தின் தலைவராகவும் (திப 15) இருந்து பிறஇனத்தாருக்கும் மீட்புத் திட்டத்தில் பங்கு உண்டு என்ற கருத்தை அழுத்தமாக முன்வைக்கின்றார்.

இவர் தன் திருச்சபைக்கு ஒரு திருமடலும் வரைகின்றார். இந்தத் திருமடலில் இருந்துதான் 'நோயிற்பூசுதல்' என்னும் அருளடையாளம் பிறக்கின்றது. 'நம்பிக்கையும் செயலும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும்,' 'துன்பத்தின் வழியாக மட்டுமே வாழ்வு' என்ற கருத்துக்களை முன்வைப்பதும் இவரே.

எருசலேமிருந்து இவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இஸ்பானிய நாட்டில் உள்ள 'கம்போஸ்தெலா' என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. 'கம்போஸ்தெலா' என்றாலே 'உடலின் எலும்புகளின் மிச்சம்' என்பதே பொருள். இந்தச் சாலை 'சான் டியாகோவை நோக்கிய சாலை' என இன்றும் அழைக்கப்பட்டு நிறையப்பேர் ரோமிலிருந்தும், லூர்துவிலிருந்தும், ஃபாத்திமாவிலிருந்தும் பாதயாத்திரையாகச் செல்கின்றனர். தங்களின் வாழ்வின் நோக்கம் தெளிவாகும் அல்லது தெளிவாக வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்தப் பயணத்தில் காட்சி கிடைப்பதாக இன்னும் நம்பப்படுகிறது.

சந்தியாகப்பர் நம் வாழ்வின் அர்த்தத்தை நாம் கண்டுகொள்ள அருள்புரிவாராக!

இன்றைய நற்செய்தியில் இவரின் வாழ்வின் அர்த்தம் என்ன என்பதை அறிய இவரின் தாய் இவரையும், இவரின் தம்பி யோவானையும் அழைத்துக்கொண்டு இயேசுவிடம் சென்று, 'வலப்பக்கம் ஒருவரும், இடப்பக்கம் ஒருவரும் அமருமாறு செய்யும்' என்கிறார்.

ஆனால், இயேசு கழுவுற மீனுல நழுவுற மீனாய் 'நீங்க கிண்ணத்துல குடிப்பீங்களா?' 'தட்டுல சாப்பிடுவீங்களா?' என்கிறார். 'என் வாழ்வின் பொருள் என்ன?' என்று நான் இயேசுவிடம் செல்லும்போதும் அவர் இப்படி என்னை அலைக்கழிக்க வாய்ப்புகள் நிறைய உண்டு. பின் எதன்தான் செய்வது? யாருக்கு எது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கோ அது அவருக்கு அருளப்படும். அதுவரைக்கும்?

செய்ற வேலையைச் செய்வோம் - யாக்கோபும், யோவானும், நாமும்.

இறுதியில், இவர் இயேசுவுக்கான மறைசாட்சியாக உயிர்விடுகின்றார். இவருடைய கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் பெட்டியில், 'இயேசுவின் சகோதரர் யாக்கோபு' என்று எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்கள்தாம், இயேசு என்ற வரலாற்று நபர் வாழ்ந்தார் என்பதற்கான, விவிலியத்திற்குப் புறம்பான சான்றாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (2 கொரி 4:7-15), 'கடவுளின் மாட்சியாகிய செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது' என எழுதுகிறார்.

'மண்பாண்டத்தில் செல்வம்' என்னும் இந்த உருவகத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இந்த உருவகத்தைப் புரிந்துகொள்ள பவுலின் சமகாலச் சூழலைப் புரிந்துகொள்வது அவசியம். பவுலின் சமகாலத்தில் கடவுள் வழிபாட்டுக்குப் பொன், உணவு உண்ண வெள்ளி, மலம் மற்றும் சிறுநீர் சேகரிக்க மண், உமிழ்நீர் துப்ப மரம் என்று நான்கு வகைகளான பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில், வீட்டுத் தலைவர் பொன் மற்றும் வெள்ளி பாத்திரங்களைக் கையாள்வார். மண் மற்றும் மரப் பாத்திரங்களை அடிமைகள் கையாள்வர். மண் மற்றும் மரப் பாத்திரங்கள் தாழ்வானவற்றுக்குப் பயன்பட்டதால் அவை வீட்டிற்கு வெளியே வைக்கப்படும். மழை மற்றும் வெயில் என அனைத்துக் காலங்களிலும் வெளியே கிடக்கும். மதிப்பற்றவற்றுக்குப் பயன்படுவதால் அவை மதிப்பின்றிக் கிடக்கும்.

பவுல் தான் அப்படிப்பட்ட நிலையில் இருந்ததாகத் தன் பழைய வாழ்க்கையை நினைவுகூர்ந்து, கடவுளின் அழைப்பு தனக்குச் செல்வம் போல வந்தது என்கின்றார். 

மலம் அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மண்பாண்டத்தில் திடீரென பொன் மற்றும் புதையலை வைத்தால் என்ன ஆகும்? மண்பாண்டத்தின் மதிப்பு கூடும். மண்பாண்டம் வீட்டிற்குள் வைத்துப் பாதுகாக்கப்படும். ஆனால், அந்த மண்பாண்டத்தின் மதிப்பைக் கூட்டுவது அதன் உள்ளே இருக்கும் பொன் மற்றும் புதையல்தாம். ஆக, திருத்தூதர்கள் எளியவராக இருந்தபோது இறைவன் அவர்களைத் தெரிவு செய்து, தன் அழைத்தல் என்னும் பொன்னை அவர்களுக்குக் கொடுத்து அவர்களின் மதிப்பை உயர்த்துகின்றார்.

மண்பாண்டம் தன்னிலே வலுவற்றது, மதிப்பற்றது, தாழ்வானது. இருந்தாலும், வீட்டுத் தலைவர் அதைத் தெரிந்துகொள்கின்றார்.

திருத்தூது நிலைக்கு உயர்த்தப்பெற்ற யாக்கோபு கடற்கரையில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது மண்பாண்டம் போல இருக்கின்றார். ஆண்டவராகிய இயேசு அவர்களைத் தன் இறையாட்சிக்குப் பணிக்கு அழைக்கின்றார். மீன்பிடித்துக் கொண்டிருந்தவர் மனிதரைப் பிடிப்பவர் ஆகின்றார்.

இந்த உருவகமும் திருநாளும் நமக்குச் சொல்வது என்ன?

(அ) கடவுள் நம் எளிய நிலையில் நம்மைத் தெரிந்துகொள்கின்றார். நம் மதிப்பை உயர்த்துகின்றார். 

(ஆ) மண்பாண்டம் போல நாமும் வலுவற்று நொறுங்குநிலையில் இருக்கின்றோம். இறைவன் நம் நொறுங்குநிலையைத் தழுவிக்கொள்கின்றார்.

(இ) மண்பாண்டத்தில் இப்போது செல்வம் இருப்பதால் அது முன்பு இருந்ததை விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனக்கு உள்ளே இருக்கின்ற அந்தப் புதையலைத் தற்காத்துக்கொள்ளும் வண்ணம் அது தன்னையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். உயர்மதிப்புக்கு ஒதுக்கப்பெற்ற அந்த மண்பாண்டம் இனி தாழ்வானவற்றின் பக்கம் செல்தல் கூடாது.

திருத்தூதர் யாக்கோபிடம் விளங்கிய துணிவும் மனத்திடமும் நாமும் பெற இறைவேண்டல் செய்வோம்.



Sunday, July 23, 2023

தண்ணீர் அடையாளம்!

இன்றைய இறைமொழி

திங்கள், 23 ஜூலை 2023

பொதுக்காலம் 16-ஆம் வாரம்

விப 14:5-18. மத் 12:38-42.

தண்ணீர் அடையாளம்!

1. எகிப்தியர்களின் தலைப்பேறு அழிக்கப்பட்டவுடன், பார்வோன் இஸ்ரயேல் மக்களைத் தங்கள் நாட்டிலிருந்து வெளியே அனுப்புகிறார். மக்கள் வெளியேறிய சில மணிநேரங்களில் அவருடைய மனம் மீண்டும் கடினமாகிறது. தங்களுடைய உழைப்பு வங்கி வெளியேறிவிட்டால் தங்கள் நாடு எப்படி முன்னேறும் என்ற எண்ணத்தில் தேர்களைப் பூட்டி அவர்களை விரட்டிச் செல்கிறார். பார்வோனுக்கும் செங்கடலுக்கும் இடையே நின்ற இஸ்ரயேல் மக்கள், இரண்டு பக்கமும் தங்களுக்கு ஆபத்து எனக் கண்டு மோசேக்கு எதிராகவும் (கடவுளுக்கு எதிராகவும்) முறையிடுகிறார்கள். 'அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! ... ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் சும்மாயிருங்கள்!' என்கிறார் ஆண்டவர். இவ்வளவு நாள்கள் செங்கற்கள் செய்துகொண்டிருந்தவர்களுக்குப் போரிடுதல் என்பது பழக்கப்பட்டது அல்ல. ஆக, அவர்கள் சும்மாயிருக்குமாறு சொல்கிற ஆண்டவர், தாமே அவர்களுக்காகப் போரிடுகிறார். பத்து அடையாளங்களை எகிப்தில் கண்ட இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நம்பாமல் தங்கள் உள்ளங்களைக் கடினப்படுத்திக்கொள்கிறார்கள். செங்கடலின் தண்ணீர் ஓர் அடையாளமாக அவர்களுக்குத் திகழ்கிறது. ஏனெனில், இத்தண்ணீர் எகிப்தியர்களின் கல்லறையாக மாறியது. தண்ணீர் பிரிந்த உலர்ந்த தரையில் கால் நனையாமல் இஸ்ரயேல் மக்கள் கடந்து செல்கிறார்கள்.

2. இயேசுவிடம் வருகிற பரிசேயர்கள் ஓர் அடையாளம் காட்டுமாறு வேண்டுகிறார்கள். இயேசுவின் போதனைகளும் அவருடைய வல்ல செயல்களும் அவர்களுக்குப் போதுமானவையாக இல்லை. அடையாளங்கள் நிகழ்த்தினாலும் அவர்கள் இயேசுவை நம்பப்போவதில்லை. யோனா அடையாளத்தை முன்மொழிகிறார் இயேசு. யோனா தண்ணீருக்குள் மீனின் வயிற்றில் மூன்று நாள்கள் இருக்கிறார். மானிட மகனும் நிலத்தின் வயிற்றில் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார். மேலும், நினிவே மக்கள் மற்றும் சேபா நாட்டு அரசி என்னும் புறவினத்தார் யோனாவின் மனமாற்ற அறிவிக்கையையும், சாலமோனின் ஞானத்தையும் ஏற்றுக்கொண்டவர் எனக் குறிப்பிட்டு, தம் இனத்தார் தம்மை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதைச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு.

3. ஆண்டவராகிய கடவுளின் அரும்பெரும் செயல்களை நாம் அறிந்திருந்தாலும் அவற்றை அனுபவித்திருந்தாலும் ஆபத்துக்காலத்தில் நாம் அவற்றை மறந்துவிடுகிறோம். நம் கண்முன் நிற்கிற பிரச்சினை நமக்குப் பெரிதாகத் தெரியத் தொடங்கி, கடவுள் மறையத் தொடங்குகிறார். சில நேரங்களில் பொறுமை இழந்து நாமே எதையாவது செய்து சமாளித்துக்கொள்ள நினைக்கிறோம். அது இன்னும் பெரிய பிரச்சினைக்கு இட்டுச் செல்கிறது. இம்மாதிரியான நேரங்களில் சும்மாயிருத்தலே நலம். இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்த யோனா மீனின் வயிற்றில் சும்மாயிருக்கிறார், அமைதியாக இருக்கிறார். அதுவே அவருடைய மனமாற்றத்தின் காலமாகவும் இருக்கிறது. நிலைகுலையாமல் சும்மாயிருக்க நிறைய நம்பிக்கையும் துணிவும் தேவை. தண்ணீரின் அமைதியான நிலை நமக்கும் அடையாளமாக இருக்கட்டும்!


Friday, July 21, 2023

என் ஆண்டவரைக் கண்டேன்!

இன்றைய இறைமொழி

சனி, 22 ஜூலை 2023

பொதுக்காலம் 15-ஆம் வாரம்

புனித மகதலா மரியா, திருநாள்

இபா 3:1-4. யோவா 20:1, 11-18.

என் ஆண்டவரைக் கண்டேன்!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2016ஆம் ஆண்டில், 'புனித மகதலா மரியா நினைவு' என்னும் திருவழிபாட்டு நிகழ்வை, 'புனித மகதலா மரியா திருவிழா' என மாற்றினார். மேலும், ஆண்டவர் இயேசுவின் சீடர் அவர் என அழைத்து மகிழ்ந்த திருத்தந்தை, 2017ஆம் ஆண்டு தான் ஆற்றிய மறையுரையில், 'மகதலா நாட்டு மரியா திருத்தூதர்களின் திருத்தூதர் என்றும், எதிர்நோக்கின் திருத்தூதர்' என்றும் அழைத்தார். மேலும், 2019ஆம் ஆண்டு தான் வெளியிட்ட திருத்தூது ஊக்கவுரையின் தலைப்பாக, 'கிறிஸ்து வாழ்கிறார்' என்னும் மகதலா மரியாவின் சொற்களையே பயன்படுத்துகிறார்.

இயேசுவின் சமகாலத்தில் பெண்கள் அவர்களுடைய தந்தை அல்லது கணவர் அல்லது மகன் ஆகியோரின் பெயராலேயே அறிமுகம் செய்யப்பட்டார்கள். எ.கா. 'கூசாவின் மனைவி யோவன்னா' (லூக் 8:3), 'இயேசுவின் தாய்' (காண். யோவா 2:1). ஆனால், மகதலா மரியா, அவருடைய ஊர் அல்லது நாட்டின் (கிராமம்) பெயரைக் கொண்டு அறிமுகம் செய்யப்படுகிறார்.இவரைப் பற்றி நற்செய்தி நூல்களும் ஏற்றுக்கொள்ளப்படாத நூல்களும் உரைத்தாலும் இவர் யார் என்பது மறைபொருளாகவே உள்ளது. பெத்தானியாவின் மரியா, இயேசுவின் காலடிகளைத் நறுமணத் தைலத்தால் பூசிய பெண், விபசாரத்தில் பிடிபட்ட பெண், ஏழு பேய்கள் நீங்கப்பெற்றவர் என அவர் ஊகம் செய்யப்பட்டாலும் அவருடைய தான்மையும் அடையாளமும் மறைபொருளாகவே உள்ளது.

மகதலா மரியா என்னும் கதைமாந்தர் முதல் ஏற்பாட்டு ஆகார் என்னும் கதைமாந்தரோடு சில விடயங்களில் நெருக்கமாகத் தெரிகிறார்:

ஆகார் எகிப்திய அடிமைப்பெண் என அழைக்கப்படுகிறார். மகதலா மரியாவும் அவருடைய ஊர்ப்பெயரைக் கொண்டே அழைக்கப்படுகிறார்.

தன் தலைவி சாராவிடமிருந்து தப்பி ஓடுகிறார் ஆகார். தான் சார்ந்த நண்பர்கள் குழுவிலிருந்து விடியற்காலையில் கல்லறையை நோக்கி ஓடுகிறார் மகதலா மரியா.

ஆகாரை எதிர்கொள்கிற வானதூதர், 'நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கே செல்கிறாய்?' என இரு கேள்விகள் கேட்கிறார். மகதலா மரியாவை எதிர்கொள்கிற இயேசு, 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' எனக் கேட்கிறார்.

'நீ உன் தலைவி சாராவிடம் திரும்பிச் செல்!' என ஆகாரைப் பணிக்கிறார் வானதூதர். 'நீ என் சகோதரர்களிடம் திரும்பிச் செல்' என மரியாவைப் பணிக்கிறார் இயேசு.

நிகழ்வின் இறுதியில், 'என்னைக் காண்பவரை நானும் இங்கு கண்டேன்' என உரைக்கிறார் ஆகார். நிகழ்வின் இறுதியில், 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என உரைக்கிறார் மரியா.

'என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்' என உரைக்கிற மரியா, இறுதியில், 'என் ஆண்டவரைக் கண்டேன்' என உரைக்கிறார். ஏறக்குறைய, தோமா உரைக்கும், 'என் ஆண்டவரே, என் கடவுளே' என்னும் நம்பிக்கை அறிக்கை போல இருக்கின்றன மரியாவின் சொற்கள்.

மரியாவின் நம்பிக்கை அனுபவம் மூன்று படிகளாக நகர்கிறது:

(அ) ஆண்டவரைக் காணவில்லை

மரியா விடியற்காலையில் எழுந்து கல்லறைக்குச் செல்கிறார். ஆக, இருள் என்பது முதல் தடையாக இருக்கிறது. கல்லறையின் முன் நிற்கிற மரியா அழுதுகொண்டிருக்கிறார். அவருடைய கண்ணீர்த்துளிகளே அவருடைய பார்வையை மறைக்கின்றன. ஆக, தனக்கு வெளியே இருள், தனக்கு உள்ளே சோகம்நிறை கண்ணீர் என்னும் இரு தடைகளால் அவரால் ஆண்டவரைக் காண இயலவில்லை. அவருடைய கண்களுக்கு இரு தூதர்கள் தெரிகிறார்கள். 'உன் கண்ணீரின் வழியாகவே வானதூதரைக் காணமுடியும்' என்பது ரபிக்களின் சொலவடை. ஆகாரும் மகதலா மரியாவும் தங்கள் கண்ணீர் வழியாகவே கடவுளின் தூதரைக் கண்டுகொள்கிறார்கள்.

(ஆ) ஆண்டவர் தோட்டக்காரர்போலத் தெரிகிறார்

கல்லறையை நோக்கி நின்று அழுதுகொண்டிருக்கிறார் மரியா. சற்று நேரம் கழித்துத் திரும்பிப் பார்க்கிறார். அங்கே அவருக்குப் பின்னால் இயேசு நின்றாலும், அவரை அடையாளம் காண இயலவில்லை. மரியா அங்கே இயேசுவை ஒரு தோட்டக்காரர் எனப் பார்க்கிறார்.

(இ) என் ஆண்டவரைக் கண்டேன்

தோட்டக்காரர்போல நின்ற இயேசு, 'மரியா' என்றழைத்ததும், அந்தக் குரலில் இயேசுவை அடையாளம் காண்கிறார் மரியா. 'ரபூனி' எனத் திரும்புகிறார். அவர் ஏற்கெனவே திரும்பித்தானே இருக்கிறார்? மறுபடியும் ஏன் அவர் திரும்புகிறார்? 'முதலில் அவருடைய உடல் திரும்பியிருந்தது, இப்போதுதான் அவருடைய உள்ளம் திரும்புகிறது' என நிகழ்வுக்கு விளக்கம் தருகிறார் புனித அகுஸ்தினார். மரியா இயேசுவைக் கண்டவுடன் அவரைப் பற்றிக்கொள்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், இனிமைமிகு பாடல் நூலின் தலைவி, தன் தலைவன்மேல் கொண்ட ஏக்கத்தால் அவனைத் தேடி நகரின் தெருக்களில் நள்ளிரவில் சுற்றி வருகிறார்கள். சாமக் காவலர்கள் அவளைக் கண்டு கடிந்துகொள்கிறார்கள். ஆனால், அவளால் தலைவனைக் காண இயலவில்லை.

மகதலா நாட்டு மரியாவும் தன் தலைவராகிய இயேசுவைத் தேடி வைகறையில் வருகிறார். இயேசுவைக் கண்டும்கொள்கிறார்.

இம்மாபெரும் புனிதர் நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

(அ) நம்பிக்கைப் படிநிலைகளில் இன்று நாம் எங்கே நிற்கிறோம்? இயேசுவை நம்மால் காண முடியவில்லையா? அல்லது அவர் நம் கண்களுக்குத் தோட்டக்காரர்போலத் தெரிகிறாரா? அல்லது ஆண்டவர்போலத் தெரிகிறாரா? அவரை நோக்கி நம் உடல் மட்டுமல்ல, நம் உள்ளமும் திரும்ப வேண்டும்.

(ஆ) ஓர் ஆன்மா கடவுளைத் தேடுகிற நிகழ்வை இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 63) ஆசிரியர் உருவகமாகப் பதிவு செய்கிறார்: 'என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது – நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல!' இன்று நம் ஆன்மா வறண்டு போயிருக்கிறதா? அல்லது ஈரப்பதத்துடன் இருக்கிறதா? இறைவனை நாம் பொழுதுபோக்கிற்காகத் தேடுகிறோமா? அல்லது உள்ளார்ந்த ஏக்கத்துடன் தேடுகிறோமா?

(இ) மகதலா நாட்டு மரியா, 'கிறிஸ்து வாழ்கிறார்' எனத் திருத்தூதர்களுக்கும் மற்றவர்களுக்கும் அறிவிக்கிறார். இயேசுவை எதிர்கொண்டு அவரைப் பற்றிக்கொண்ட ஒருவர், அவரைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவித்தல் அவசியம். நம் அறிவித்தல் பணி எப்படி இருக்கிறது? நாம் பெற்ற ஒளியை நமக்குள் மூடிவைத்துக்கொள்கிறோமா? அல்லது அதை மற்றவர்களுக்கு வழங்குகிறோமா?


Thursday, July 20, 2023

நான் கடந்து செல்வேன்!

இன்றைய இறைமொழி

வெள்ளி, 21 ஜூலை 2023

பொதுக்காலம் 15-ஆம் வாரம்

விப 11:10-12:14. மத் 12:1-8.

நான் கடந்து செல்வேன்!

1. இன்றைய முதல் வாசகம் மூன்று நிகழ்வுகளை ஒன்றாக இணைக்கிறது: ஒன்று, எகிப்து நாட்டில் உள்ள தலைப்பேறுகளை அழிக்கிறார் ஆண்டவராகிய கடவுள். இரண்டு, இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்து செல்லத் தயராகிறார்கள். மூன்று, பாஸ்கா விழாவும் புளியாத அப்ப விழாவும் தோற்றுவிக்கப்படுகின்றன. இம்மூன்று விடயங்களும் நடக்கக் காரணம் ஆண்டவராகிய கடவுள் (தூதர்) இரத்தம் பூசியிருந்த இஸ்ரயேல் மக்கள் வீடுகளைக் கடந்துசெல்கிறார். கடந்து செல்தல் என்பதைக் காப்பாற்றுதல் என்று இங்கே புரிந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, இரவு நேரத்தில் நகர்வலம் காவலர் நம் வீட்டைக் கடந்து செல்கிறார் என்றால், நம் வீட்டின்மேல் கவனமாக இருக்கிறார் அல்லது நம் வீட்டின்மேல் பொறுப்பாய் இருக்கிறார் என்று புரிந்துகொள்கிறோம். கடந்து செல்தல் என்பது மறத்தல் அல்ல, மாறாக, பொறுப்பேற்றல். 

2. இயேசுவும் அவருடைய சீடர்களும் ஓய்வுநாளில் வயல்வெளியைக் கடந்து செல்கிறார்கள். கடந்து செல்கிற சீடர்களின் கைகள் கதிர்களைத் தழுவிக்கொள்கிறது. மனிதர்கள் பசியாறினார்கள் என மகிழ்ந்திருப்பதற்குப் பதிலாக, மனிதர்கள் ஓய்வுநாளை மீறினார்கள் என்று குறை சொல்கிறார்கள் பரிசேயர்கள். பசியா அல்லது ஓய்வுநாளா? இவற்றில் எது முதன்மையானது என்பதைச் சுட்டிக்காட்டுகிற இயேசு, மானிட மகனாகிய தமக்கு ஓய்வுநாளும் கட்டுப்பட்டதே என்கிறார்.

3. எகிப்தில் பார்வோன் தனக்குக் கீழ் அனைத்தும் இருப்பதாக எண்ணி, இறுமாந்து, இஸ்ரயேல் மக்களை அனுப்ப மறுக்கிறார். ஆனால், ஆண்டவராகிய கடவுள் தம்மை மேன்மையானவர் என அவருக்குக் காட்டுகிறார். உயிர் என்பது தமக்குக் கட்டுப்பட்டது என்றும், தம்மால் உயிரைக் காக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று உணர்த்துகிறார். நம்மைக் கடந்துசெல்லும் ஆண்டவராகிய கடவுள் நம்மேல் கவனமாக இருக்கிறார் என்னும் செய்தி நமக்கு ஆறுதல் தருகிறது. நம்மைக் கடந்துசெல்லும் அவர் நம் முதன்மைகளைச் சரி செய்யுமாறு நம்மை அழைக்கிறார்.



Wednesday, July 19, 2023

நுகத்தடித் துணை

இன்றைய இறைமொழி

வியாழன், 20 ஜூலை 2023

பொதுக்காலம் 15-ஆம் வாரம்

விப 3:13-20. மத் 11:28-30.

நுகத்தடித் துணை

1. எகிப்து நாட்டில் தம் மக்கள் படும் துயரத்தால் எழுந்த குரலுக்குப் பதில்தரும் விதமாக இறங்கி வந்த கடவுள் தாம் யார் என்பதையும், தாம் கொடுக்கிற பணி எப்படிப்பட்டது என்பதையும் மோசேக்குத் தெளிவுபடுத்துகிறார். கடவுளின் பெயர் இரு வடிவங்களில் தரப்பட்டுள்ளது: ஒன்று, 'ஆண்டவர்' ('இருக்கிறவராக இருக்கிறவர்'). இரண்டு, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்.' முந்தைய பெயர் கடவுளின் நீடித்த இருத்தலைக் குறிப்பதாகவும், பிந்தைய பெயர் குலமுதுவர்களுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதியைக் குறிப்பதாகவும் உள்ளது. இஸ்ரயேல் மக்கள் சுமக்கிற துன்பம் என்னும் அடிமைத்தன நுகத்தைச் சேர்ந்து சுமக்க இறங்கி வருகிறார் கடவுள். தம் பணியில் மோசேயை நுகத்தடித் துணையாக இணைத்துக்கொள்கிறார். இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுவது மோசே மற்றும் ஆரோனின் தலைமைத்துவத்தால் அல்ல, மாறாக, ஆண்டவரின் உடனிருப்பால்தான் என்பதை பின்னர் வாசகர் அறிவார். ஏனெனில், பாரவோனின் உள்ளத்தை இறுகச் செய்பவராகவும், உருகச் செய்பவராகவும் அவரே இருக்கிறார்.

2. சமயத்தில் நிகழ்ந்த சடங்குமுறைகள், பொருளாதார அடக்குமுறைகள், அரசியல் தளத்தில் உரோமைக்கு அடிமைப்பட்ட நிலை, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் எனச் சுமைகள் பல சுமந்து சோர்ந்து போன தம் சமகாலத்தவரை நோக்கி உரையாடுகிற இயேசு, 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, என்னிடம் வாருங்கள்!' என அழைக்கிறார். சுமை இல்லாத வாழ்க்கையை அவர் உறுதியளிக்கவில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய சுமைகளை இயேசுவின் நுகத்தோடு இணைத்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார். இயேசுவை நுகத்தடித் துணையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அவரிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

3. ஆண்டவராகிய கடவுள் தம் பணியைச் செய்வதற்கு மனிதத் துணையை நாடுகிறார். இவ்வாறாக, மனிதர்கள் தங்கள் சக மனிதர்கள்மேல், குறிப்பாக வலுவற்றவர்கள்மேல், ஒடுக்கப்படுபவர்கள்மேல் காட்ட வேண்டிய பரிவையும் பொறுப்புணர்வையும் அவர்களுக்கு நினைவுறுத்துகிறார். கடவுளின் நுகத்தடித் துணையாக இருக்க விரும்புபவர்கள் அவருடைய அழைப்புக்குப் பதிலிறுப்பு செய்தல் அவசியம். நம் வாழ்வின் சுமைகளை நாம் எளிதாகச் சுமக்க வேண்டுமெனில் கடவுளை நுகத்தடித் துணையாகக் கொள்தல் நலம். கடவுளை நுகத்தடித் துணையாகக் கொள்ளும் நாம் ஒருவர் மற்றவரின் சுமைகளைத் தாங்கிக்கொள்தல் அவசியம்.


Tuesday, July 18, 2023

முட்புதர் தீய்ந்துபோகவில்லை!

இன்றைய இறைமொழி

புதன், 19 ஜூலை 2023

பொதுக்காலம் 15-ஆம் வாரம்

விப 3:1-6,9-12. மத் 11:25-27.

முட்புதர் தீய்ந்துபோகவில்லை!

1. மிதியான் பாலைநிலத்தில் சுற்றித்திரிகிற மோசே அந்நாட்டின் அர்ச்சகருடைய மகளை மணம் முடிக்கிறார். திருமணம், குழந்தை, ஆடு மேய்க்கும் பணி எனத் தன் அன்றாட வாழ்வில் மூழ்கியிருந்த அவரை, காட்சி வழியாகத் தடுத்தாட்கொள்கிறார் ஆண்டவராகிய கடவுள். 'முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால், தீய்ந்துபோகவில்லை.' இது நேரிடையான காட்சி என்றாலும், இந்நிகழ்வை உருவகமாகவும் புரிந்துகொள்ளலாம்: 'இஸ்ரயேல் மக்களின் வாழ்வு ஒடுக்குமுறையால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால், தீய்ந்துபோகவில்லை.' 'மோசேயின் உள்ளத்தில் எகிப்திக்குத் திரும்ப வேண்டும் என்னும் ஆர்வம் எரிந்துகொண்டிருந்தது. ஆனால், தீய்ந்துபோகவில்லை.' 'ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கைப் பேரன்பு எரிந்துகொண்டிருந்தது. ஆனால், தீய்ந்துபோகவில்லை.' ஆண்டவராகிய கடவுள் தம் சார்பாக மோசேயை எகிப்துக்கு அனுப்புகிறார். 'நான் உன்னோடு இருப்பேன்' என்னும் வாக்குறுதியையும் தருகிறார்.

2. தந்தையாகிய கடவுளைப் போற்றிப் புகழ்கிறார் இயேசு. ஏன்? விண்ணரசு பற்றிய மறைபொருள் - அதாவது, இயேசு – ஞானியர்களுக்கு வெளிப்படுத்தப்படாமல், குழந்தைகளுக்கு – அதாவது, எளியவர்களுக்கு, சின்னஞ் சிறியவர்களுக்கு – வெளிப்படுத்தப்படுகிறது. ஆக, கடவுளின் வெளிப்பாட்டைப் பெறுவது நம் செயல்களாலோ அல்லது தகுதியாலோ அல்ல, மாறாக, அவருடைய அருள்கொடையினாலேயே. 

3. மோசேயைப் போல நாமும் நம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் மூழ்கியிருக்கும்போது, ஆண்டவருடைய வெளிப்பாடும் அழைப்பும் நடந்தேறுகின்றன. ஆடுகளின்மேல் உள்ள கண்களை நாம் திருப்பி முட்செடிமேல் பதிக்க வேண்டும். நம் வாழ்வு சில நேரங்களில் முட்புதர் போல எரிந்துகொண்டிருப்பதாக உணரலாம். ஆனால், அது எரிந்தாலும் தீய்ந்துபோவதில்லை. அதுவே ஆண்டவராகிய கடவுள் நம் வாழ்வில் நிகழ்த்தும் வல்ல செயல். நம் தகுதியின் பொருட்டு அல்ல, மாறாக, அவருடைய அருளின் பொருட்டே நாம் அழைக்கப்படுகிறோம், அனுப்பப்படுகிறோம். அவருடைய உடனிருப்பே நமக்கு உற்சாகம் தருகிறது.


Monday, July 17, 2023

தலைவனின் தயக்கம்!

இன்றைய இறைமொழி

செவ்வாய், 18 ஜூலை 2023

பொதுக்காலம் 15-ஆம் வாரம்

விப 2:1-15. மத் 11:20-24.

தலைவனின் தயக்கம்!

1. எல்லோரும் கொல்லப்பட தலைவன் மட்டும் தப்புவது என்பது கதைசொல்லிக் கூறு. நைல் நதியில் எறியப்படுகிற குழந்தை ஒன்று பார்வோனின் இல்லத்தைச் சென்றடைகிறது என்பது மோசே வரலாறு. 'நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்' எனச் சொல்லிப் பார்வோனின் மகள் குழந்தைக்கு 'மோசே' எனப் பெயரிடுகிறாள். இப்பெயர் மோசே பின்நாளில் செய்ய வேண்டிய பணியைக் குறிக்கும் காரணப் பெயராகவும் மாறுகிறது. ஏனெனில், இஸ்ரயேல் மக்களைச் செங்கடல் என்னும் நீரிலிருந்து கால் நனையாமல் எடுத்து அவர்களைப் பாலும் தேனும் பொழியும் நாட்டுக்குக் கூட்டிச் செல்பவர் இவரே. மோசே இளவலாக இருந்தபோது தன் இனத்தான் ஒருவன்மேல் எகிப்தியன் ஒருவன் கையை ஓங்குவதைக் கண்டு சினமுற்று அவனைக் கொன்று போடுகிறார். பார்வோனின் இல்லத்தில் வளர்ந்தாலும் தன் எபிரேய அடையாளத்தையும் தான்மையையும் மோசே மறக்கவில்லை. தான் எகிப்தியனைக் கொன்ற விடயம் பார்வோனின் காதுகளுக்கு எட்ட, பார்வோனிடமிருந்து தப்பி மிதியான் செல்கிறார் மோசே.

2. இயேசு வல்ல செயல்கள் நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. 'மனம் மாறவில்லை' என்றால் 'பாவ அறிக்கை செய்து நற்கருணை வாங்கவில்லை' என்று நாம் இன்று நினைப்பது போலப் புரிந்துகொள்ளக் கூடாது. 'மனம் மாறுதல்' என்பது பாவ அறிக்கை செய்தல் என்று சுருங்கிவிட்டது வருத்தத்துக்குரியது. இயேசுவை இறைமகன் என ஏற்றுக்கொள்தலே மனமாற்றம். இயேசுவின் போதனைகளை மக்கள் கேட்டார்கள், அவர் ஆற்றிய வல்ல செயல்களை – நோயுற்றோருக்கு நலம் தருதல், இறந்தோரை உயிர்த்தெழச் செய்தல், பேய்களை ஓட்டுதல் - கண்டார்கள். ஆனால், அவரை இறைமகன் என ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு இரு காரணங்களைக் சொல்லலாம்: ஒன்று, அவை அவர்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. அதாவது, அவர்களுடைய வாழ்வில் வல்ல செயல்கள் எதுவும் நடந்தேறவில்லை. இரண்டு, எதிர்மறைத் தன்னிறைவு. நேர்முகமான தன்னிறைவு நலமானது. தன்னிறையே எதிர்மறையாக மாறினால், அதாவது 'எனக்கு நான் மட்டும் போதும்' என்னும் மனப்பாங்கு வந்துவிட்டால், கடவுளும் தேவையில்லாத நபராக அல்லது சுமையாக மாறிவிடுவார். இந்த இரு காரணங்களுக்காக இயேசுவை ஏற்றுக்கொள்ள அவருடைய சமகாலத்தவர்கள் தயங்குகிறார்கள். இயேசுவும் அந்நகரங்களைக் கடிந்துகொள்கிறார்.

3. மோசே பார்வோனிடமிருந்து தப்பி ஓடுகிறார். இதை இரு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, மோசே தானே தலைவராக மாற முயன்றபோது – அதாவது, தன் கண்முன் நடந்த அநீதியைக் கடிந்துகொள்பவராக மாறியபோது – அது தோல்வியில் முடிகிறது. ஆக, இறைவனே அழைத்தாலொழிய தலைமைத்துவத்தை ஒருவர் ஏற்க முடியாது. இரண்டு, மோசேயின் கோபம், முற்சார்பு எண்ணம் ஆகியவை மறைய அவருக்கென்று நேரம் தேவைப்படுகிறது. எகிப்தை அடக்குவதற்கான தலைவரை ஆண்டவராகிய கடவுள் மிதியானின் பாலைவனத்தில் உருவாக்குகிறார். இந்தத் தூர மற்றும் இட இடைவெளி மோசேயின் தனிப்பட்ட வாழ்வு மாற்றத்திற்கான நேரமாகவும் இருக்கிறது. நற்செய்தியின் பின்புலத்தில், இயேசு என்னும் தலைவர் தம் செய்தி ஏற்றுக்கொள்ளப்படாததை எண்ணித் தயக்கம் காட்டுகிறார். அவருடைய தயக்கமே கடிந்துரையாக மாறுகிறது. நம் சொற்களும் செயல்களும் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாதபோது நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம்? சில நேரங்களில் மோசே போல அமைதியாக ஒதுங்கி நிற்பது நலம்.


Sunday, July 16, 2023

வாளையே கொணர வந்தேன்!

இன்றைய இறைமொழி

திங்கள், 17 ஜூலை 2023

பொதுக்காலம் 15-ஆம் வாரம்

விப 1:8-14, 22. மத் 10:34-11:1

வாளையே கொணர வந்தேன்!

1. தொடக்கநூலில் குழந்தைப்பேறின்மை பிரச்சினையாக இருந்தது – சாரா, ரெபேக்கா, ராகேல் என்னும் குலமுதல்வியர் தொடக்கத்தில் குழந்தைப்பேறில்லாமல் இருக்கிறார்கள். விடுதலைப் பயண நூலில் குழந்தைகள் அதிகம் பிறந்தது பிரச்சினையாக இருக்கிறது. யோசேப்பை அறிந்திராத புதிய மன்னன் எகிப்தில் தோன்றுகிறான். இஸ்ரயேலரின் பெரும்பான்மையாக வளர்ந்து வருவது அவனுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. போர் மற்றும் நெருக்கடி காலத்தில் அவர்கள் எதிரிகளோடு சேர்ந்துகொண்டால் என்ன ஆவது என்று எண்ணியவனாக, இஸ்ரயேல் மக்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை மூன்று நிலைகளில் தடுக்கிறான்: ஒன்று, அதீத வேலை. இரண்டு, தாதியர் வழியாக ஆண்குழந்தைகளைக் கொல்வது. மூன்று, ஆண் குழந்தைகளை நைல் ஆற்றில் எறியுமாறு கட்டளை இடுவது. இரண்டு விடயங்கள் இங்கே கவனிக்கத்தக்கவை: ஒன்று, ஒருவர் எவ்வளவு பெரிய ஆளுநராக இருந்து, ஊருக்கும் உலகுக்கும் சாப்பாடு போட்டாலும், அவர் விரைவில் மறக்கப்படுவார். நாம் யாரும் இன்றியமையாதவர்கள் அல்லர் என்ற இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வது கடினம். ஏனெனில், இதற்கு நிறைய தாழ்ச்சியும் துணிச்சலும் தேவை. இரண்டு, நம் வாழ்வு பல நேரங்களில் நம் கையில் இல்லை, கடவுள் கையிலும் இல்லை. ஆட்சியாளர்களே – பெரும்பாலும் தங்களுடைய மடமையால் - நம் வாழ்க்கையை நெறிப்படுத்துகிறார்கள். இதுவும் ஏற்றுக்கொள்வதற்குச் சிரமமாக இருக்கிறது. 

2. இயேசுவைத் தெரிந்துகொள்வது ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தக்கூடிய பிளவு, இயேசுவை முதன்மையாகத் தெரிந்துகொள்வதன் அவசியம், சீடர்களை ஏற்றுக்கொண்டு விருந்தோம்புதல் என்று மூன்று கருத்துருக்களைத் தாங்கியிருக்கிறது நற்செய்தி வாசகம். அமைதியின் அரசராக நாம் கொண்டாடுகிற இயேசு, தாம் வாள் கொண்டு வந்ததாக அறிவிப்பதைக் கேட்பது நமக்கு நெருடலாக இருக்கிறது. இயேசு கொணர்கிற வாள் என்பதைப் படைவீரரின் வாள் என்று புரிந்துகொள்வதை விட, மருத்துவரின் கத்தி எனப் புரிந்துகொள்வது நலம். மருத்துவரின் கத்தி தோலை வெட்டிக் கிழித்தாலும், இறுதியில் அது கொடுப்பது நலமே. இயேசுவைத் தெரிந்துகொள்வதால் நாம் நம் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்டதுபோலத் தெரிந்தாலும், இறைவனோடு இணைகிறோம் என்பதால் அது நமக்கு நலமே. இதுவே ஒருவர் சுமக்க வேண்டிய சிலுவையாக இருக்கிறது. சீடர் பெறுகிற கைம்மாறு அவர் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதே. சீடர் என்பதற்காக நாம் நிராகரிக்கப்பட்டாலும், இன்னோர் இடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் என்பது நிதர்சனமான உண்மை.

3. நாம் இன்றியமையாதவர்கள் என்பதாலும், ஆட்சியாளர்கள் நம்மைத் தங்கள் விருப்பம்போல் நடத்துவார்கள் என்பதாலும் நாம் சோர்வு அல்லது விரக்தி அடையத் தேவையில்லை. நம் அழுகை, துயரம், கண்ணீர் அனைத்தும் நம்மைப் படைத்தவரைச் சென்றடையவே செய்கின்றன. நாமும் நம் ஆட்சியாளர்களும் நம்மைப் படைத்த கடவுளை விடப் பெரியவர்கள் அல்லர். அவருடைய திட்டப்படியே அனைத்தும் நடந்தேறுகின்றன. நம் உழைப்பின் சோர்வில் நமக்கு ஆறுதல் தருபவர் அவரே. தாதியர் நம் குழந்தைகளைக் கொல்ல வந்தாலும், அவர்களுக்கு நல்மனத்தைத் தருபவர் அவரே. நைல் நதியில் தூக்கியெறியப்பட்டாலும் நம்மைக் காப்பாற்றுபவர் அவரே. அவரின் உடனிருப்பு வாள்போல நமக்கு நெருடலாக இருந்தாலும், அந்த வாள் தருவதே நலமே. அவரிடம் நலம் பெற்ற நாம் ஒருவர் மற்றவருக்கு அதை வழங்குதல் சிறப்பு.


Friday, July 14, 2023

கடவுள் கனிவுடன் வருவார்!

இன்றைய இறைமொழி

சனி, 15 ஜூலை 2023

பொதுக்காலம் 14-ஆம் வாரம்

தொநூ 49:29-32, 50:15-26அ. மத் 10:24-33.

கடவுள் கனிவுடன் வருவார்!

1. தொடக்கநூல் எதிர்நோக்குநிறை சொற்களுடன் முடிவடைகிறது. 'கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார்' என்று தம் சகோதரர்களிடம் சொல்லிவிட்டு உயிர்விடுகிறார் யோசேப்பு. இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் இறப்பு நிகழ்வுகளை வாசிக்கிறோம். இருவருமே தாங்கள் இறக்குமுன் தம் பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் எதிர்நோக்கின் செய்தியை வழங்கிவிட்டுச் செல்கிறார்கள். மூன்று விடயங்கள் நமக்கு இங்கே தெளிவாகின்றன: (அ) இறப்பு என்பது எல்லாருக்கும் உரியது - இஸ்ரயேலின் பிதாமகனாகிய யாக்கோபும் எகிப்தின் ஆளுநரான யோசேப்பும் தங்கள் காலம் வந்தவுடன் இறக்கிறார்கள். (ஆ) நாம் இறந்தாலும் நம் இருத்தல் நம் பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் வழியாகத் தொடர்கிறது. (இ) வாழ்வின் சூழல் எப்படி இருந்தாலும் அதை நமக்கு ஏற்றாற்போல மாற்றிக்கொள்ளும் ஆற்றல் நமக்கு உள்ளது. யோசேப்பு வேற்று நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் அரசன்போல வாழ்ந்தார். அவருடைய சகோதரர்களோ அதே நாட்டில் அடிமைகள் போல உணர்கிறார்கள்.

2. திருத்தூதுப் பணியின்போது தம் சீடர்கள் அனுபவிக்கிற துன்பங்களைத் தொடர்ந்து முன்னுரைக்கிறார் இயேசு. இயேசுவுக்கு நிகழ்ந்ததே அவருடைய திருத்தூதர்களுக்கும் நேரிடும். ஏனெனில், குருவைவிடச் சீடர் மேன்மையானவர் அல்லர். துன்புறுத்துவோர் யாவரும் உடலைத் துன்புறுத்தும் ஆற்றல் பெற்றிருக்கிறார்களே தவிர, ஆன்மாவை அல்லது நம் உளப்பாங்கைத் துன்புறுத்த அவர்களால் இயலாது. அவர்களுடைய வலிமையும் வரையறைக்கு உட்பட்டதே. மேலும், கடவுள்தாமே இப்பொழுதுகளில் நம்மோடு இருக்கிறார். ஆகையால், எதிர்நோக்கை இழந்துவிடாமல் காத்துக்கொள்தல் நலம்.

3. கல்லறையுடன் முடிவது அல்ல நம் வாழ்க்கை. எதிர்நோக்கு அணைந்துவிட்டால் கல்லறைக்கு முன்னரே நம் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. எதிர்நோக்கு என்னும் திரியை அணையாமல் காப்பது அன்பு என்னும் எண்ணெயே. யோசேப்பு தான் எதிர்நோக்கைப் பெற்றிருந்ததோடு, அதைத் தன் சகோதரர்களுக்கும் அளிக்கிறார். எதிர்நோக்கின் முதன்மையான எதிரி பயம். பயத்தைக் களைய அழைப்பு விடுக்கிறார் இயேசு.


Thursday, July 13, 2023

நீ அஞ்சவேண்டாம்!

இன்றைய இறைமொழி

வெள்ளி, 14 ஜூலை 2023

பொதுக்காலம் 14-ஆம் வாரம்

தொநூ 46:1-7, 28-30. மத் 10:16-23.

நீ அஞ்சவேண்டாம்!

1. யோசேப்பு யார் என்பதை அவருடைய சகோதரர்கள் மட்டுமல்லாமல், பாரவோனும் அவருடைய அரசவையினரும்கூட அறிந்துகொள்கிறார்கள். யோசேப்பின் சகோதரர்களும் தந்தையும் தங்குமாறு கோசேன் என்னும் பகுதியை அவர்களுக்கென ஒதுக்கித்தருகிறார் பாரவோன். கோசேனுக்கு வருகிற யாக்கோபுக்குக் கடவுள் காட்சியளிக்கிறார். 'நீ அஞ்சாதே!' என ஆறுதல் தருகிறார். மேலும், 'யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்' என்னும் சொற்கள் வழியாக அவருடைய இறப்பையும் முன்னறிவிக்கிறார். தன் தந்தையை எதிர்கொள்ளச் செல்கிறார் யோசேப்பு. தன் தந்தையின் தோளில் சாய்ந்து வெகுநேரம் அழுகிறார். 'உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்' என அகமகிழ்கிறார் யாக்கோபு. யோசேப்பு இளவலாக இருந்தபோது கண்ட கனவுகள் இப்போது நிறைவேறிவிட்டதை நினைத்து வியந்திருப்பார்.

2. தம் சீடர்களைப் பணிக்கு அனுப்புகிற இயேசு அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை முன்னுரைக்கிறார். ஒன்று, அவர்கள் ஓநாய்களிடையே ஆடுகள் போலச் செல்கிறார்கள். அதாவது, வலுவானவர்கள்முன் வலுவற்றவர்களாகச் செல்கிறார்கள். இரண்டு, அவர்களுடைய பணிகள் எதிர்க்கப்படுவதோடல்லாமல், அவர்களும் இன்னலுக்கு ஆளாவார்கள். மூன்று, அவர்கள் தங்களுடைய இருப்பிடத்திலிருந்து விரட்டப்படுவார்கள். ஆனாலும், துன்பத்தின் நடுவிலும் இறைவனின் அருள்கரம் அவர்களை வழிநடத்தும் என்பதால் அவர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை.

3. யாக்கோபுவின் அச்சம் கடவுளின் சொற்களாலும், யோசேப்பின் உடனிருப்பாலும் களையப்படுகிறது. கடவுளின் உடனிருப்பு சீடர்களின் அச்சம் களைகிறது. யாக்கோபின் வேர்கள் அவருடைய மண்ணிலிருந்து அகற்றப்படுகின்றன. பணிக்குச் செல்லும் சீடர்களின் வேர்கள் அவர்களுடைய இருப்பிடத்திலிருந்து அகற்றப்படுகின்றன. நம் வேர்கள் அகற்றப்படுவது நமக்கு வேதனை அளிக்கிறது. காய்ந்துபோய்விடுவோமோ என்ற அச்சம் நம்மைக் கவ்விக்கொள்கிறது. கடவுளின் உடனிருப்பு நம் அச்சம் போக்குகிறது. அவருடைய தோள்களில் சாய்ந்துகொள்வது நலம்.


Wednesday, July 12, 2023

கொடையாகவே வழங்குங்கள்!

இன்றைய இறைமொழி

வியாழன், 13 ஜூலை 2023

பொதுக்காலம் 14-ஆம் வாரம்

தொநூ 44:18-21, 23-29, 45:1-5. மத் 10:7-15.

கொடையாகவே வழங்குங்கள்!

1. யோசேப்பின் சகோதரர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர் அவர்களைச் சோதித்தறிந்து, இறுதியில், 'நான்தான் யோசேப்பு ... உங்கள் சகோதரன் யோசேப்பு' என வெளிப்படுத்துகிறார். ஆனால், கதையின் சோகம் என்னவென்றால், இந்நிகழ்வுக்குப் பின், அவருடைய சகோதரர்கள் ஓரிடத்தில்கூட அவரை, 'சகோதரர்' என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்மேல் அச்சம் கொள்கிறார்கள். அவர் தங்களைப் பழிவாங்குவார் என நினைக்கிறார்கள். தங்கள் தந்தையின் இறப்புக்குப் பின்னர் பழிதீர்ப்பார் என்கிறார்கள். ஆனால், யோசேப்பு அவர்கள் தனக்குச் செய்த தீங்குக்குப் பதிலாக அவர்களுக்கு நன்மையே செய்கிறார். யோசேப்பின் நம்பிக்கைப் பார்வை நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. 'உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்துக்கு அனுப்பினார்' என மொழிகிறார். அதாவது, தான் விற்கப்படவில்லை, மாறாக, கடவுளால் அனுப்பட்டார் என்பதே அவருடைய புரிதல். தன் வாழ்வில் தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தீங்கையும் கடவுளின் அழைப்பாகப் பார்க்கிறார் யோசேப்பு. தனக்குக் கிடைத்த அனைத்தும் கடவுளின் கொடை என்பதால் அதைக் கொடையாகவே வழங்கத் துணிகிறார்.

2. பேய்களை ஓட்டவும் நோய்நொடிகளைக் குணமாக்கவும் தம் சீடர்களுக்கு அதிகாரம் வழங்குகிற இயேசு, அவர்களைப் பணிக்கு அனுப்புமுன், அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். 'கொடையாகப் பெற்றீர்கள். கொடையாகவே வழங்குங்கள்!' என்பது அவருடைய முதன்மையான அறிவுரையாக இருக்கிறது. கொடையாகக் கொடுத்தல் என்பது இலவசமாகக் கொடுத்தல் அல்ல. கொடைக்கும் இலவசத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. இலவசம் பெரும்பாலும் வியாபாரம் சார்ந்தது. மற்றவர்களின் தேவை அறிந்து வழங்கப்படுவது கொடை. மற்றவர்களைத் தன் வயப்படுத்த வழங்கப்படுவது இலவசம். வழங்கப்படும் அனைத்து இலவசங்களுக்கும் மறைமுகமான விலை ஒன்று இருக்கும். ஆனால், கொடை பரிவுடன் தொடர்புடையது. கொடை அளிப்பவர் மற்றவருக்கு மேல் உயர்கிறார். கொடை அளிப்பவர் கணக்குப் பார்ப்பதில்லை. தன் வாழ்வைக் கொடையாகப் பார்ப்பவர் மட்டும்தான் தன் வாழ்வைக் கொடையாகக் கொடுக்க முடியும். தன் வாழ்வைக் கொடையாகப் பார்ப்பவர் தான் அனுபவிக்கும் எதிர்ப்பு, நிராகரித்தல் பற்றிக் கவலையுறுவது இல்லை.

3. யோசேப்பின் நம்பிக்கைப் பார்வை போற்றுதற்குரியது. மற்றவர்கள் நம் வாழ்க்கையை எப்படிப் பார்த்தாலும், அதை நாம் எப்படிப் பார்க்கிறோமோ அதைப் பொறுத்தே வாழ்வுக்குப் பொருள் கிடைக்கிறது. மற்றவர்கள் பார்வையில் தமக்குத் தீங்கு நேர்ந்தாலும், தன் பார்வையில் அதைக் கடவுளின் அழைப்பாகப் பார்க்கிறார் யோசேப்பு. விளைவு, தீங்கு செய்து பழிதீர்க்க அவர் முயற்சி செய்யவில்லை. தன் கைகளில் உள்ள அனைத்தும் கடவுளின் கொடை என அவர் உணர்ந்ததால், கைகளை விரித்துக் கொடுக்கிறார். திருத்தூதுப் பணிக்கான இயேசுவின் அழைப்பும் திருத்தூதர்கள் பெற்ற கொடையே. அனைத்தும் கடவுளின் கொடை என உணர்ந்து வாழ்பவர் குறைவிலும் நிறைவு காண்பார், எதிர்ப்பையும் சமாளித்துக்கொள்வார், வறுமையையும் வளமை ஆக்குவார்.


Tuesday, July 11, 2023

கண்டுகொள்தல்

இன்றைய இறைமொழி

புதன், 12 ஜூலை 2023

பொதுக்காலம் 14-ஆம் வாரம்

தொநூ 41:55-57, 42:5-7, 17-24. மத் 10:1-7.

கண்டுகொள்தல்

1. தன் சகோதரர்களில் விற்கப்பட்டு, வணிகர்களால் எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட யோசேப்பு எகிப்தின் ஆளுநராக மாறுகிறார். கடவுளின் கரமே அவரை வழிநடத்திச் செல்கிறது. ஆண்டவருடைய பார்வையில் நேர்மையானதை மட்டுமே செய்கிறார் யோசேப்பு. வாழ்வின் எந்தச் சூழலிலும் அவர் தன்னைப் பலிகடா என்று எண்ணவே இல்லை. மாறாக, ஒரு தலைவராக வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் எதிர்கொள்கிறார். சிறையில் கைதியாகக் கிடந்த எபிரேய அடிமையில் தன் நாட்டின் ஆளுநரைக் கண்டுகொள்கிறார் பாரவோன். பஞ்சத்தின்போதும் எகிப்தில் உணவு கிடைப்பதை யாக்கோபும் அவருடைய மகன்களும் கண்டுகொள்கிறார்கள். உணவு வாங்க வந்த இடத்தில், வந்தவர்கள் தன் சகோதரர்கள் என்பதை யோசேப்பு கண்டுகொள்கிறார். ஆனால், சகோதரர்கள் அவரை அடையாளம் காணவில்லை.

2. இயேசு தம் சீடர்கள் பன்னிருவரைக் கண்டுகொள்கிறார். தீய ஆவிகளை ஓட்டவும் பேய்களை விரட்டவும் அவர்களுக்கு அதிகாரம் தருகிறார். அதிகாரம் கொடுத்து பணிக்கும் அனுப்பி வைக்கிறார். தங்கள் பணியின் இலக்கு மக்களாக சிதறுண்டு போன இஸ்ரயேல் மக்களைக் கண்டுகொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். 

3. மனிதர்கள் நம்மைக் கண்டுகொள்வதை விடக் கடவுளின் பார்வை நம்மேல் பட்டு, அவர் நம்மைக் கண்டுகொள்தல் நம் வாழ்வில் மேன்மையைக் கொண்டுவருகிறது. அவருடைய கரம் நம்மோடு இருக்கிறது என்று கண்டுகொண்டு, அவர்மேல் கொண்ட அச்சத்துடன் வாழும்போது அவர் நம்மைக் கண்டுகொள்கிறார். அவர் நம்மைக் கண்டுகொள்கிறார் எனில், தேவையில் இருப்பவர்களைக் கண்டுகொள்தலும் அவர்களுடைய தேவை நிறைவேற்றுவதும் நாம் செய்ய வேண்டிய திருத்தூதுப் பணியாகும். இயேசு தம் திருத்தூதர்களைக் கண்டுகொள்கிறார். அவர்களுக்குத் தம் அதிகாரத்தில் பங்குதருகிறார். அவர்கள் தங்கள் பணியின் இலக்கைக் கண்டுகொண்டவுடன் அவர்களுடைய பயணம் தொடங்குகிறது. நம் வாழ்வின் இலக்கு என்ன என்பதைக் கண்டுகொள்தலும் அதை முதன்மையாகக் கொள்தலும் நலம்.

Friday, July 7, 2023

துணியும் திராட்சை இரசமும்

இன்றைய இறைமொழி

சனி, 8 ஜூலை 2023

பொதுக்காலம் 13-ஆம் வாரம்

தொநூ 27:1-5, 15-29. மத் 9:14-17.

துணியும் திராட்சை இரசமும்

1. ஈசாக்கு ரெபேக்கா வழியாக இரு மகன்களைப் பெற்றெடுக்கிறார்: மூத்தவர் ஏசா, இளையவர் யாக்கோபு. யாக்கோபின்மேல் ரெபேக்கா மிகுதியான அன்புகூர்கிறார். அதீத அன்பின் ஆபத்தை(!) இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். பார்வை மங்கி, வாழ்வின் இறுதிக்காலத்தில் இருக்கும் ஈசாக்கு மூத்த மகன் ஏசாவுக்கு ஆசி வழங்க விரும்புகிறார். ஈசாக்கின் சொற்களை மறைவாக நின்று கேட்கிற ரெபேக்கா யாக்கோபுவிடம் உணவு கொடுத்தனுப்பி, ஏசாவுக்குரிய ஆசியை யாக்கோபு பெற்றுக்கொள்ளுமாறு செய்கிறார். 'எழுந்து உட்கார்ந்து என் வேட்டையை ('விளையாட்டை' என்பது எபிரேயப் பாடம்) உண்ணுங்கள்' எனச் சொல்கிறார் யாக்கோபு. விளையாட்டில் மாட்டிக்கொள்கிறார் ஈசாக்கு. 'உம் கடவுளாகிய ஆண்டவரால்தான் இது நிகழ்ந்தது' என இந்நிகழ்வுக்கு இறைவனையும் உடந்தையாக்குகிறார் யாக்கோபு. யாக்கோபு அணிந்திருந்த விலங்குத் தோலாடைகளையும் முகர்ந்து பார்த்து, அவர் கொண்டு வந்த திராட்சை ரசத்தைப் பருகிய ஈசாக்கு யாக்கோபுவுக்கு ஆசி வழங்குகிறார். இளையமகன் தேர்ந்துகொள்ளப்படுதல் என்னும் கருத்துருவை இது நியாயப்படுத்துவதாக இருந்தாலும், மூத்த மகன்கள் (காயின், இஸ்மயேல், ஏசா) தொடர்ந்து ஏமாற்றப்படுவது வேதனை அளிக்கிறது. கடவுளின் திட்டமா, தாயின் பாரபட்சமா, குடும்பத்தில் அரசியலா – விடை தெரியாத கேள்விகளில் ஒன்றாக இது இருக்கிறது. ஆனால், அறநெறிப்படி அனைத்தும் நடப்பதில்லை என்பதே இந்நிகழ்வு சொல்லும் பாடம். ஒரு நிகழ்வு நடக்கிறது, அவ்வளவுதான். அதன் விதிமுறைகள் பற்றி ஆராய்ச்சி செய்வதில் பயனில்லை. எந்த ஒரு நிகழ்வும் சூழலின் அமைவுதானே தவிர, இதுதான் நல்லது இதுதான் கெட்டது என யாரும் எதையும் வரையறுக்க இயலாது. 

2. இயேசுவிடம் வருகிற யோவானின் சீடர்கள் நோன்பை முன்வைத்து கேள்வி ஒன்றை எழுப்புகிறார்கள்: 'உம் சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?' அதாவது, இயேசுவின் இறையாட்சிக் குழுமத்தை ஓர் அமைப்பாக மாற்ற நினைக்கிறார்கள். அல்லது அது ஓர் அமைப்பு எனத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். இயேசு அதைத் தெளிவுபடுத்துகிறார். தம் குழுமத்தில் நிலையான சட்டம் எதுவும் கிடையாது. தாம் இருக்கும் வரை ஓர் ஓழுங்கு, தான் சென்றபின் இன்னோர் ஒழுங்கு. மணமகன் இருக்கும் வரை மகிழ்ச்சி. மணமகன் சென்றவுடன் துக்கம், நோன்பு. ஒரு வகையான சூழலிய அறநெறியை (ஆங்கிலத்தில், 'ஸிட்டுவேஷன் எதிக்ஸ்') முன்மொழிகிறார் இயேசு. மேலும், பழைய துணி மற்றும் பழைய மது என்னும் உருவகங்கள் வழியாக, தம் கொள்கைகள் பழையவற்றோடு பொருந்தாது எனவும் தெளிவுபடுத்துகிறார். 

3. முதல் வாசகத்தில், யாக்கோபின் துணியும் திராட்சை இரசமும் (உணவும்) ஈசாக்கை ஏமாற்றுகின்றன. நற்செய்தி வாசகத்தில், இவ்விரண்டையும் உருவகங்களாகப் பயன்படுத்தி, யோவானின் சீடர்களின் தவறான புரிதலைத் திருத்துகிறார் இயேசு. வாழ்வின் நிகழ்வுகள் அவை நடக்கும் தளம் மற்றும் இடத்தைப் பொருத்தே பொருள் தருகின்றன. நோன்பு பற்றிய பழைய நெறிமுறை புதிய மணமகனமாகிய இயேசுவுக்குப் பொருந்தாது. தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் கதையின் இறுதியிலேயே முழுமையான பொருள் தருகின்றன. யாக்கோபு பெற்ற ஆசி அவருக்கு அச்சமும், கலக்கமும் தந்ததை இறுதியில்தான் வாசகர் அறிவார். யாக்கோபுவுக்கு மாற்றம் தேவைப்பட்டது. அவர் அதை விரைவில் அடைவார். நோன்பு பற்றிய புரிதல் இயேசுவின் இறப்புக்குப் பின்னரே சீடர்களுக்குப் புரியும்.


Thursday, July 6, 2023

புதிய ஆறுதல்!

இன்றைய இறைமொழி

வெள்ளி, 7 ஜூலை 2023

பொதுக்காலம் 13-ஆம் வாரம்

தொநூ 23:1-4, 19ளூ 24:1-8, 62-67. மத் 9:9-13.

புதிய ஆறுதல்!

1. ஆபிரகாமின் இல்லத்தில் நிகழ்வுகள் வேகமாக நடந்தேறுகின்றன. சாரா இறக்கிறார். சாராவின் கல்லறையே ஆபிரகாம் வாங்கிய முதல் நிலமாக இருக்கிறது. கானான் நாடு இவ்வாறாக ஆபிரகாமின் உரிமைப் பொருளாக மாறத் தொடங்குகிறது. ஈசாக்கு வேகமாக வளர்கிறார். இளவல் ஈசாக்குக்கு பெண் பார்க்கும் பொறுப்பை ஆபிரகாம் தன் பணியாளர் ஒருவரிடம் ஒப்படைக்கிறார். தன் உறவினரிடையே பெண் கொள்வதில் ஆபிரகாம் அக்கறை காட்டுகிறார். பணியாளரும் புறப்பட்டுச் செல்கிறார். ரெபேக்காவைக் கண்டுபிடிக்கிறார். ரெபேக்கா ஆபிரகாமின் இல்லத்துக்கு அழைத்துவரப்படுகிறார். தன் தாயாரின் கூடாரத்துக்குள் அவரை அழைத்துச் செல்கிற ஈசாக்கு அவரை மணந்துகொள்கிறார். 'தாயின் மறைவுக்குப் பின்னர் ஈசாக்கு ஆறுதல் அடைந்தார்' என நிகழ்வுக்குத் திரையிடுகிறார் ஆசிரியர். உளவில் ஆய்வின்படி பார்த்தால், குழந்தை ஈசாக்கு தன் தந்தை தன்னைப் பலியிட முயற்சி செய்ததைப் பார்த்தவுடன் மிகவும் பயந்துபோயிருப்பார். இந்த நிகழ்வுக்குப் பின்னர் தாய் சாராவுடனான அவருடைய நெருக்கம் அதிகமாகியிருக்கும். ஆகையால்தான், தாயின் மறைவை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனிமையிலும் கொடிய தனிமை நம் சொந்த வீட்டிலே உணரும் தனிமைதான். அதாவது, தாயின் மறைவுக்குப் பின்னர் ஆறுதல் இல்லாமல் இருக்கிறார். அந்த ஆறுதலை ரெபேக்காவிடம் கண்டுகொள்கிறார்.

2. சுங்கச் சாவடியில் அமர்ந்த மத்தேயு என்னும் நபரை இயேசு அழைக்கிறார். மத்தத்தியா ('கடவுளின் கொடை') என்னும் பெயரே மத்தேயு என ஆயிற்று என்கிறார்கள் விளக்கவுரையாளர்கள். இவர் லேவி எனவும் அழைக்கப்படுகிறார். இவர் வசூலித்த வரி அந்நியப் பொருள்கள்மேலான வரி. அதாவது, வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்குச் சென்று வீடு திரும்புகிற விவசாயிகள், வணிகர்கள், வழிப்போக்கர்களிடம் வரி வசூலிப்பது இவருடைய பணி. பெரும்பாலும் இப்பணியைச் செய்கிறவர் முன்னதாகவே உரோமை அரசுக்குப் பணம் கட்டிவிட வேண்டும். பின் தான் கட்டியதையோ அல்லது கட்டியதைவிடவோ மக்களிடம் இவர்கள் வசூலித்துக்கொள்வார்கள். வெறுக்கப்பட்ட தொழிலாக இது கருதப்பட்டது. ஆக, மத்தேயு தனக்கென ஒரு வேலை, கையில் பணம், உரோமைத் தொடர்பு என அனைத்தையும் கொண்டிருந்தாலும், தன்னிலேயே ஆறுதல் இழந்தவராக அல்லது இல்லாதவராக இருக்கிறார். மக்களின் வெறுப்பு, பணிச்சுமை, வெறுமை, சோர்வு என்றிருந்த அவர், ஏதோ இந்த நாளுக்காகவே காத்திருந்தது போல, இயேசு அழைத்தவுடன் எழுந்து செல்கிறார். அழைப்பு பெற்ற அவர் அழைப்பை விருந்தோம்பல் செய்து கொண்டாடுகிறார். புதிய ஆறுதலை இயேசுவிடம் பெறுகிறார் மத்தேயு.

3. தாயின் இழப்பு அல்லது பிரிவு ஏற்படுத்திய சோகத்திலிருந்து விடுபட்டு புதிய ஆறுதலை ரெபேக்காவிடம் பெறுகிறார் ஈசாக்கு. பணிச் சுமை, மக்களின் கேலிப்பேச்சு ஏற்படுத்திய சோர்விலிருந்து விடுபட்டு புதிய ஆறுதலை இயேசுவிடம் பெறுகிறார் மத்தேயு. மனிதர்கள் சில நேரங்களிலும் கடவுள் எல்லா நேரங்களிலும் நமக்கு ஆறுதல் தருகிறார்கள். இன்று நம் வாழ்வில் ஆற்ற இயலாத, அல்லது ஆற்றுப்படுத்த இயலாத சோகம் அல்லது சோர்வு எது? ஆண்டவர்தாமே நம்மைத் தேடி வருகிறார் நம் புதிய ஆறுதலாக. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்: ஈசாக்கு போல சற்றே வயல்வெளிக்குச் சென்று காத்திருக்க வேண்டும். அல்லது மத்தேயு போல அவருடைய வேலையில் மும்முரமாக இருத்தல் வேண்டும். ஆண்டவர் தரும் ஆறுதலைப் பெறுகிற எவரும் அதை மற்றவர்களுக்குக் கொடுக்கக் கடமை உண்டு. 



Wednesday, July 5, 2023

கிடத்தப்பட்ட இருவர்!

இன்றைய இறைமொழி

வியாழன், 6 ஜூலை 2023

பொதுக்காலம் 13-ஆம் வாரம்

தொநூ 22:1-19. மத் 9:1-8.

கிடத்தப்பட்ட இருவர்!

1. ஆகாரும் இஸ்மயேலும் ஆபிரகாமின் வீட்டை விட்டுச் சென்றாயிற்று. இப்போது ஆபிரகாமுக்கு இருப்பது ஒரே மகன் ஈசாக்கு. ஆபிரகாம் அன்புகூரும் ஒரே மகனை எரிபலியாகக் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார் கடவுள். ஆபிரகாமும் பணியாளர்கள் மற்றும் ஈசாக்குடன் கடவுள் காட்டிய மலையை நோக்கிப் புறப்படுகிறார். இது தனக்குக் கடவுள் வைக்கும் சோதனை அல்ல, மாறாக, தான் கடவுளுக்கு வைக்கும் சோதனை என மனதிற்குள் நினைத்திருப்பார் ஆபிரகாம். ஏனெனில், மகன் கொல்லப்பட்டால், ஈசாக்கின் வழியாகத் தலைமுறைகள் உருவாகும் என்னும் ஆண்டவரின் வாக்கு பொய்யாகிவிடும் அல்லவா! குழப்பத்திலிருந்தது என்னவோ இளவல் ஈசாக்குதான்! 'பலிப்பொருள் எங்கே?' எனக் கேட்கிறது பலிப்பொருள். அடுக்கிய விறகுக் கட்டைகளின்மேல் மகனைப் படுக்க வைக்கிறார் ஆபிரகாம். கத்தியை அவர் கையில் எடுத்தபோது தடுக்கிற கடவுள், ஆட்டுக்குட்டி ஒன்றைக் காட்ட, ஆபிரகாம் அதைப் பலியாக்குகிறார். கிடத்தப்பட்ட நபர் விடுதலை பெறுகிறார். ஏனெனில், 'மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்!'

2. கட்டிலில் கிடத்தப்பட்டுத் தூக்கிவரப்பட்ட முடக்குவாதமுற்ற ஒருவருக்கு நலம் தருகிறார் இயேசு. உடல்நலத்தோடு இணைந்து அவர் உள்ள நலமும் தந்ததை அங்கிருந்த மறைநூல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நோயுற்றவருக்கோ உடலில் முடக்குவாதம். மறைநூல் அறிஞர்களுக்கோ உள்ளத்தில் முடக்குவாதம். இயேசுவைப் பொருத்தவரையில் அவர்கள் அனைவருமே கட்டிலில் கிடத்தப்பட்டவர்கள்தாம். உடலில் முடக்குவாதமுற்றவர் நலம் பெற்றுக் கட்டிலைத் தூக்கிக்கொண்டு நடந்தார். மற்றவர்களோ கட்டிலிலேயே கிடந்தனர். ஆண்டவர் பார்க்கிற நபர் நலம் பெறுகிறார்.

3. முதல் வாசகத்தில் ஈசாக்கு விறகுக் கட்டைகளில் கிடத்தப்பட்டார். நற்செய்தி வாசகத்தில் முடக்குவாதமுற்ற நபர் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார். கிடத்தப்பட்ட இருவருமே இறைவனின், இறைமகனின் செயல்பாட்டில் நலமுடன் எழுந்து வருகிறார்கள். மலையிலும் ஆண்டவர் பார்த்துக்கொள்வார். தரையிலும் ஆண்டவர் பார்த்துக்கொள்வார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்ன? கட்டிலில் படுத்துக் கிடப்பதா? இல்லை. நாம் கிடத்தப்பட்ட நிலையில் இருந்தாலும் நம் கண்கள் அவர்மேல் இருக்கட்டும். ஏனெனில், அவர் நம்மைப் பார்ப்பதால், அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார்.


Tuesday, July 4, 2023

எம்மை விட்டு அகலும்!

இன்றைய இறைமொழி

புதன், 5 ஜூலை 2023

பொதுக்காலம் 13-ஆம் வாரம்

தொநூ 21:5, 8-20. மத் 8:28-34.

எம்மை விட்டு அகலும்!

1. 'உனக்கொரு மகன் பிறப்பான்' என்னும் கடவுளின் செய்தி கேட்டு சாரா சிரித்தார். அவருக்கு ஈசாக்கு பிறந்தார். 'ஈசாக்கு' என்றால் 'அவன் சிரித்தான்' என்பது பொருள். ஈசாக்கு பிறப்பதற்கு முன்னரே ஆகார் வழியாக இஸ்மயேலைப் பெற்றெடுக்கிறார் ஆபிரகாம். 'இஸ்மயேலும் சிரிக்கிறான்' என்பதைக் காண்கிற சாரா கோபம் கொள்கிறாள். அடிமையின் மகன் தன் மகனுக்குப் பங்காளியா என நினைக்கிற அவள், அவனையும் அவனுடைய தாயையும் வீட்டை விட்டு விரட்டுமாறு வேண்டுகிறாள். பெண் அரசியல் பொல்லாதது! ஆபிரகாம் இதனால் வேதனை அடைந்தாலும் இருவரையும் அனுப்புகிறார். பாலைநிலத்தில் இஸ்மயேல் அழுகிறான். தாய் ஆகாரும் அழுகிறாள். இருவருடைய கண்ணீரையும் கடவுள் காண்கிறார். தண்ணீர் கிணற்றைக் காட்டுகிறார். அழுகை மீண்டும் சிரிப்பாக மாறுகிறது. கண்ணீர் மல்க நாம் கடவுள்முன் நிற்கும்போதெல்லாம் அவர் தண்ணீர் என்னும் நிறைவைக் காட்டுகிறார். சிறிய குடிசை என வாழ்ந்த ஆகாரும் இஸ்மயேலும் ஒட்டுமொத்தப் பாலைநிலத்தையே உரிமையாக்கிக்கொள்கிறார்கள். இதுதான் கடவுளின் செயல்.

2. பேய் பிடித்த இருவர் இயேசுவை எதிர்கொள்கிறார்கள். 'இறைமகனே' என அவரை அழைக்கிறார்கள். பன்றிகளின் கூட்டத்திற்குள் பேய்களை அனுப்பிவிடுகிறார் இயேசு. பன்றிக்கூட்டம் கடலில் வீழ்ந்து மடிகிறது. நிகழ்வைக் கண்ட மக்கள் தங்கள் ஊரை விட்டு அகலுமாறு இயேசுவை வேண்டுகிறார்கள். அந்த ஊராருக்கு இயேசுவோ, அவரால் நலம்பெற்றவர்களோ பெரிதாகத் தெரியவில்லை. அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ரொம்ப ப்ராக்டிகலான மக்கள்! 

3. 'எம்மை விட்டு அகலும்!' என முதல் வாசகத்தில், சாரா ஆகாரிடம் சொல்கிறார். 'எவ்வழி செல்வது?' என அறியாமல் சென்ற ஆகார் மற்றும் இஸ்மயேல் ஆண்டவரைக் கண்டுகொள்கிறார்கள். 'எம்மை விட்டு அகலும்!' என நற்செய்தி வாசகத்தில், ஊரார் இயேசுவிடம் சொல்கிறார்கள். அவர்களால் இயேசுவில் இறைமகனைக் கண்டுகொள்ளவில்லை. ஆகாரின் நம்பிக்கை அவருடைய கண்களைத் திறந்து கிணற்றைக் கண்டது. பன்றிகள் விழுந்த கடலைக் கண்டவுடன் ஊராரின் நம்பிக்கைக் கண்கள் மூடிக்கொண்டன. ஆகாரும், இஸ்மயேலும், இயேசுவும் தங்கள் வழியே நடக்கிறார்கள்! நம் நம்பிக்கைக் கண்கள் திறந்தால் பாலைநிலத்திலும் தண்ணீர் காண முடியும். கண்கள் மூடினால் இறைமகனும் சாதாரண மனிதராகவே நமக்குத் தெரிவார்.


Monday, July 3, 2023

இரக்கம் - நம்பிக்கை – பேரன்பு

இன்றைய இறைமொழி

செவ்வாய், 4 ஜூலை 2023

பொதுக்காலம் 13-ஆம் வாரம்

தொநூ 19:15-29. மத் 8:23-27.

இரக்கம் - நம்பிக்கை – பேரன்பு

1. ஆபிரகாம் கடவுளின் தூதர்களுக்குக் காட்டிய விருந்தோம்பல் அவருக்கு ஒரு மகனைத் தந்தது எனில், லோத்து கடவுளின் தூதர்களுக்குக் காட்டுகிற விருந்தோம்பல் அவர் குடும்பத்தாரை அழிவிலிருந்து காப்பாற்றுகிறது எனக் காட்டுகிறது முதல் வாசகம். சோதோமின் பாவச்செயலுக்காக ஆண்டவர் அதன்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்கிறார். லோத்தும் அவருடைய குடும்பத்தாரும் காப்பாற்றப்படுகிறார்கள். லோத்தின் மனைவி நகரைத் திரும்பிப் பார்த்ததால் உப்புச் சிலையாக மாறுகிறாள். சாக்கடலைச் சுற்றி நிறைய உப்புத் தூண்கள் காணப்படுகின்றன. இவற்றில் உள்ள ஓர் உப்புத் தூண் பற்றிய காரணக்கதையாடலாக இந்நிகழ்வு இருக்கலாம் என்பது சில விளக்கவுரையாளர்களின் கருத்து. நம்மைச் சுற்றியுள்ள நகருமும் மக்களும் அழிந்தாலும் ஆண்டவராகிய கடவுளின் பேரன்பு நம்மைக் காப்பாற்றும் எனச் சொல்கிறது முதல் வாசகம்.

2. நற்செய்தி வாசகத்தில் இயேசு நிகழ்த்திய இயற்கை வல்ல செயல் ஒன்றை வாசிக்கிறோம். காற்றின்மேலும் கடலின்மேலும் இயேசு கொண்டிருந்த அதிகாரம் மற்றும் ஆற்றல் இந்நிகழ்வு வழியாக முன்மொழியப்படுகிறது. கடல் கொந்தளிக்கிறது, சீடர்கள் அச்சப்படுகிறார்கள், இயேசுவோ தூங்குகிறார். படகு என்பது திருஅவையையும், கடல் என்பது தொடக்கத் திருஅவை அனுபவித்த துன்பங்களையும் குறிப்பதாகவும், இயேசுவின் தூக்கம் அவருடைய இல்லாமையைக் காட்டியது என்று உருவகமாகவும் இந்நிகழ்வைப் புரிந்துகொள்ளலாம். அச்சப்படுகிற சீடர்கள் இயேசுவின் தூக்கம் களைகிறார்கள். இயேசு சீடர்களையும் கடலையும் ஒருங்கே கடிந்துகொள்கிறார். சீடர்களின் அச்சம் ஐயமாக மாறுகிறது. 'இவர் யாரோ?' என்று கேள்வி கேட்கிறார்கள். அலைகளைப் பார்த்து சாகப்போகிறோம் என அச்சம் கொண்டவர்கள், இயேசுவைப் பார்த்து வாழப்போகிறோம் என ஆனந்தம் கொள்ளவில்லை. இதுவே அவர்களுடைய பிரச்சினை. பிரச்சினைமேலா? ஆண்டவர்மேலா? எதன்மேல் இருக்கின்றன நம் கண்கள்?

3. இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 26) ஆண்டவரின் பேரன்பைப் புகழ்ந்துபாடுகிறார் ஆசிரியர். ஆண்டவர் ஒருபக்கம் நம்மேல் பேரன்பு காட்டினாலும், அப்பேரன்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான மனப்பாங்கு நம்மிடம் அவசியம். ஆக, பேரன்பு அவருடைய கொடை என்றாலும், அறநெறி வாழ்வு நம் கடமையாக இருக்கிறது.


Sunday, July 2, 2023

திதிம் என்னும் தோமா

இன்றைய இறைமொழி

திங்கள், 3 ஜூலை 2023

பொதுக்காலம் 13-ஆம் வாரம்

புனித தோமா பெருவிழா

எசா 52:7-10. எபே 2:19-22. யோவா 20:24-29.

திதிம் என்னும் தோமா

இந்தியாவின் திருத்தூதர் என அழைக்கப்படுகின்ற புனித தோமாவின் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். திருத்தூதர் தோமா வழியாக நம் நாட்டின் முன்னோர்கள் இயேசுவின் விலாவுக்குள் தங்கள் கைகளையும், இயேசுவின் கைகளில் தங்கள் விரல்களையும் இட்டார்கள் என நினைக்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவுக்கும் இந்தியாவுக்குமான இணைப்புக் கோடு புனித தோமா. 

இயேசுவின் இறப்புக்குப் பின்னர் திருத்தூதர்கள் மூன்று நிலைகளில் செயல்படுகின்றனர்: (அ) யூதர்களுக்குப் பயந்து, அதாவது, தங்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுவிடுமோ என்று பயந்து பூட்டிய அறைக்குள் இருக்கின்றனர். இது பெரும்பாலும் எருசலேமில் உள்ள திருத்தூதர்களின் செயல்பாடாக இருந்திருக்கும். (ஆ) எருசலேமை விட்டு வெளியே சென்றவர்கள், தங்கள் சொந்த ஊரான கலிலேயப் பகுதிக்குச் சென்றவர்கள் மீண்டும் தங்கள் மீன்பிடிக்கும் பணிக்குச் சென்றனர். (இ) புனித தோமாவோ மக்களோடு மக்களாக நடமாடிக்கொண்டிருக்கின்றார். 

புனித தோமா பற்றி யோவான் நற்செய்தியாளரே அதிகமான குறிப்புகளைத் தருகின்றார். இலாசரின் இறப்பு செய்தி கேட்டு இயேசு புறப்படத் தயாரானவுடன், அவருடைய திருத்தூதர்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் தோமா, 'நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்' (காண். யோவா 11:16) என்று துணிகின்றார். இயேசுவின் இறப்பை இது முன்னுரைப்பதுடன், இறப்பிலும் இயேசுவோடு உடனிருக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தை நமக்கு எடுத்துரைக்கிறது.

தொடர்ந்து, இறுதி இராவுணவுக்குப் பின் இயேசு வழங்கிய பிரியாவிடை உரையில், 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?' என்று கேட்கின்றார் தோமா. அவருக்கு விடையளிக்கின்ற இயேசு, 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே' என அறிக்கையிடுகின்றார். 'நானே' என்ற வார்த்தை இங்கே முதன்மையானது. ஏனெனில், முதல் ஏற்பாட்டில், விடுதலைப் பயண நூலில், 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்று ஆண்டவராகிய கடவுள் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார். 

இறுதியாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'ஆண்டவர்' என்ற வார்த்தையை மையமாக வைத்து நிகழ்வு நகர்கிறது. 'ஆண்டவரைக் கண்டோம்' என திருத்தூதர்கள் தோமாவிடம் சொல்கின்றனர். 'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து' என்று, எந்தவொரு தலைப்பும் இல்லாமல், 'அவர்' என்று இயேசுவை அழைக்கின்றார். ஆனால், இயேசு தோன்றி, 'இதோ! என் கைகள்!' என்று சொன்ன அடுத்த நொடி, சரணாகதி அடைகின்றார் தோமா. 'நான் சீடர்களிடம் சொன்னது இயேசுவுக்கு எப்படி தெரிந்தது?' என அவர் தன் மனதிற்குள் கேட்டிருப்பார். அல்லது இயேசுவின் இருத்தல் அவரை மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்திருக்கும். தோமா இந்த இடத்தில் செய்யும் நம்பிக்கை அறிக்கை மிகவும் மேலானது: 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' என்று தனிப்பட்ட நம்பிக்கை அறிக்கை செய்கின்றார் தோமா.

இதுதான் தோமா இன்று நமக்கு முன்வைக்கும் பாடம். ஆண்டவராகிய கடவுளை நான் தனியாக அனுபவித்தாலன்றி அவரை நம்ப முடியாது. இறையனுபவம் என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். நம் தந்தை மற்றும் தாயின் அனுபவத்தைப் போன்றே இது தனித்துவமானது. இறையனுபவம் பல நேரங்களில் நமக்குப் புலப்படும் விதமாக இருப்பதில்லை. புலன்களுக்குப் புறம்பானதால் அது இல்லை என்று ஆகிவிடுவதில்லை. 'என் ஆண்டவரே! என் கடவுளே!' என்ற சரணாகதி நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இருந்தால் எத்துணை நலம்!

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா, 'நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, 'உன் கடவுள் அரசாளுகின்றார்' என்று கூறவும் வருவோரின் பாதங்கள் மலைமேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!' என உரைக்கின்றார். மெசியா வருகையை முன்னுரைக்கும் பாடமாக இருக்கும் இந்த இறைவாக்கு, நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் தருகின்றது. பழங்காலத்தில் செய்திகள் அறிவிப்பவர் மலைமேல் ஏறி நின்றி எல்லா மக்களுக்கும் கேட்குமாறு அறிவிப்பார். போர் மற்றும் வன்முறையின் செய்திகளைக் கேட்டுப் பயந்து நின்ற மக்களுக்கு, ஆறுதல் மற்றும் அமைதியின் செய்தியை அறிவிக்கின்றார் இத்தூதர். இவரின் செய்தி நல்வாழ்வைவும் விடுதலையையும் தருகின்றது. புனித தோமா நம் மண்ணில் அறிவித்த செய்தியும் நமக்கு நல்வாழ்வையும் விடுதலையையும் கொண்டு வந்தது. இன்று நாம் ஒருவர் மற்றவருக்கு நற்செய்தி அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நம் வாழ்வையே நற்செய்தியாக அமைத்துக்கொள்ளுமாறு நம்மை அழைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரண்டாம் வாசகத்தில், கட்டடம் என்னும் உருவகத்தைப் பயன்படுத்தி, திருஅவையின் ஒழுங்கு மற்றும் ஒருங்குநிலையை எபேசு நகர மக்களுக்கு எடுத்துரைக்கின்றார் பவுல். திருத்தூதர்கள் இக்கட்டடத்தின் அடித்தளமாக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் எடுத்துரைத்த நற்செய்தியின் வழியாகவே நம்பிக்கையாளர்கள் கிறிஸ்துவோடு இணைகிறார்கள். 

தோமா என்னும் கதைமாந்தரை ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி என்று சொல்லப்படுகின்ற, 'தோமையாரின் நற்செய்தியிலும்' பார்க்கின்றோம். இவர் நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

1. பெயர்

யோவான் நற்செய்தி இவரை திதிம் என்னும் தோமா என்றும், ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி இவரை திதிம் யூதாசு தோமா என்றும் அழைக்கின்றது. 'திதிம்' (இரட்டை) என்ற சொல்லைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இவர் இரட்டையர்களில் ஒருவர் என்று அதிகமாகச் சொல்லப்படுவதுண்டு. நான், 'திதிம்' என்பதை இரு நிலைகளில் புரிந்துகொள்கிறேன்: (அ) 'திதிம்' என்பது தோமாவிடமிருந்த இரட்டிப்புத்தன்மையைக் குறிக்கிறது. இவர் தன்னிலேயே பிளவுண்ட மனிதர். இயேசு யூதேயாவுக்குச் செல்ல விரும்பும்போது, அவரோடு சென்று இறக்க விரும்புகிறார் (காண். யோவா 11:16). ஆனால், உயிர்த்த ஆண்டவர் மற்ற சீடர்களுக்குத் தோன்றியபோது, 'நான் நம்பமாட்டேன்' (காண். யோவா 20:25) என அவநம்பிக்கை கொள்கின்றார். ஒரே நேரத்தில் துணிவும் அவநம்பிக்கையும் கொண்டவர் இவர். (ஆ) இவருடைய நற்செய்தியில், 'இயேசுவும் நாமும் - எல்லா மனிதர்களும் - இரட்டையர்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இது இயேசுவைப் பற்றிய புதிய புரிதலையும், நம்மைப் பற்றிய புதிய புரிதலையும் தருகின்றது. இயேசு நம்மைப் போன்றவர். நாம் அனைவரும் இயேசு போன்றவர்கள். இன்னும் அதை நாம் உணராமல் இருக்கிறோம். அதுதான் பிரச்சினை.

2. கேள்வி கேட்பது நல்லது

யோவான் மற்றும் தோமா நற்செய்தி நூல்களில், தோமா கேள்வி கேட்கும் நபராக இருக்கின்றார். 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?' (காண். யோவா 14:5) என்று யோவானிலும், மற்றும் இறையாட்சி பற்றிய நிறைய கேள்விகளைத் தோமாவிலும் கேட்கின்றார். நம் வாழ்வில் எழும் கேள்விகளை இயேசுவிடம் - கடவுளிடம் - எழுப்புவது நலம் எனக் கருதுகிறேன்.

3. குழுமம் இன்றியமையாதது

உயிர்த்த இயேசு வந்தபோது தோமா அவர்களோடு இல்லை (காண். யோவா 20:24). குழுமம் இயேசுவின் சீடர்களுக்கு மிக முக்கியமானது. இந்தக் குழுமம் ஒருவர் மற்றவர்முன் இயேசுவைப் பற்றிச் சான்றுபகரும் இயங்குதளமாக அமைகின்றது.

4. இயேசுவே கடவுள்

'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' (காண். யோவா 20:28) என்று யோவானில் அறிக்கையிடுகிறார் தோமா. தோமா நற்செய்தியில் இயேசுவே தன்னைக் கடவுளாக அவருக்கு வெளிப்படுத்துகின்றார்.

5. காணாமல் நம்புதல்

நம்பிக்கை கொள்தலுக்கான பாடமாக, அதுவும் காணாமலே நம்புவதற்கான பாடமாக நம்முன் என்றும் நிற்பவர் தோமா.

6. வழிப்போக்கனாய் இரு

தோமா நற்செய்தி (வசனம். 42) இயேசு சொல்லும் இந்தக் குறுகிய வசனத்தைக் கொண்டுள்ளது: 'வழிப்போக்கனாய் இரு!' அதாவது, எதையும் பற்றிக்கொள்ளாமல், எதையும் சுமக்காமல், எதன்மேலும் இலயிக்காமல், நீ தொடங்கிய புள்ளியையும், அடைய வேண்டிய புள்ளியையும் மனத்தில் வைத்து நடந்துகொண்டே இரு. அதிக சுமை தூக்கும் வழிபோக்கனும், அதிகமாய்க் கவனம் சிதறும் வழிப்போக்கனும் இலக்கை அடைவதில்லை.

சற்றே வித்தியாசமான ஒரு விடயமும் தோமா நற்செய்தியில் (வ. 16, 6) இருக்கிறது:

'நீங்கள் நோன்பிருந்தால் பாவம் செய்வீர்கள்.

செபித்தால் தீர்ப்புக்கு உள்ளாவீர்கள்.

தர்மம் செய்தால் உங்கள் ஆன்மாவுக்குத் தீங்கிழைப்பீர்கள்.

... ...

ஆனால், பொய் சொல்லாதீர்கள். நீங்கள் வெறுக்கும் ஒன்றை நீங்களே செய்யாதீர்கள்.

ஏனெனில், எல்லாம் உண்மையை நோக்கியே இருக்கிறது.'

தோமாவும் அவருடைய நற்செய்தியும் மறைபொருளே.

புரிவது போலவும், புரியாததுபோலவும் இருக்கும் அவரும், அவருடைய நற்செய்தியும், இன்றும் அவரை 'திதிம்' ('இரட்டை') என்றே அடையாளப்படுத்துகின்றன.


Saturday, July 1, 2023

பிளவுபடாத அன்பு – மறுக்காத சிலுவை – மறுக்கப்படாத கைம்மாறு

2 ஜூலை 2023 ஆண்டின் பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு

2 அர 4:8-11, 14-16. உரோ 6:3-4, 8-11. மத் 10:37-42

பிளவுபடாத அன்பு – மறுக்காத சிலுவை – மறுக்கப்படாத கைம்மாறு

முதல் வாசகப் பகுதி எலிசாவும் சூனேம் பெண்ணும் என்னும் பிரிவிலிருந்து எடுக்கப்படுகிறது. ஏழைக் கைம்பெண் ஒருவருக்கு எலிசா உதவி செய்கின்றார். அதைத் தொடர்ந்து வரும் பகுதியில் சூனேம் நகரில் உள்ள செல்வந்தப் பெண் எலிசாவுக்கு உதவி செய்கிறார். எலிசா ஓரிடத்தில் செய்த உதவிக்கு அவருக்கு இன்னோர் இடத்தில் கைம்மாறு கிடைக்கிறது என நாம் எடுத்துக்கொள்ளலாம். ஒருவர் செய்த உதவிக்கான கைம்மாறு இன்னொருவருக்கு என பிரபஞ்சம் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொண்டே நகர்கிறது என எடுத்துக்கொள்ளலாம். சூனேம் பெண் எலிசாவுக்கு விருந்தோம்பல் செய்கிறார். உணவு தருவதுடன் அவர் தங்குவதற்குத் தன் வீட்டில் மேலறை ஒன்றைக் கட்டிக் கொடுக்கிறார். எலிசா அதற்குக் கைம்மாறாக குழந்தையில்லாத அப்பெண்ணிடம், 'அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்' என வாக்குறுதி கொடுக்கிறார்.

முதல் ஆதாமுக்கும் இரண்டாம் ஆதாமுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிப் பதிவு செய்த பவுல், தொடர்ந்து பாவத்தை விட்டு கிறிஸ்துவோடு வாழ்தல் பற்றி உரோமை நகர மக்களுக்கு அறிவுறுத்துகிறார். பாவத்தை விடுகிற எவரும் பாவ வாழ்க்கையைப் பொருத்தமட்டில் இறந்தவர் ஆகிறார். பாவத்திற்கு இறந்த ஒருவர் கிறிஸ்துவில் வாழத் தொடங்குகிறார். இது தானாக நடக்கிற நிகழ்வு அல்ல. மாறாக, ஒருவர் தம் செயல்கள் வழியாகத் தொடர்ந்து அத்தகைய வாழ்க்கையை வாழ வேண்டும். 

திருத்தூதுப் பொழிவு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவைப் பின்பற்றுதல் ஒரு குடும்பத்தில் ஏற்படுத்துகிற பிளவையும், பிளவையும் பொருட்படுத்தாமல் சீடத்துவத்தில் நிலைத்திருக்க வேண்டிய அவசியத்தையும், சீடர் பெறுகிற கைம்மாற்றையும் எடுத்துரைக்கிறது. சீடத்துவத்திற்கு அடிப்படையாக இருத்தல் சிலுவை ஏற்றல் என்பதும் இங்கே சொல்லப்படுகிறது.

இந்நாளின் இறைவார்த்தைப் பகுதிகளை, 'பிளவுபடாத அன்பு,' 'மறுக்காத சிலுவை,' 'மறுக்கப்படாத கைம்மாறு' என்னும் சொல்லாடல்கள் வழியாகப் புரிந்துகொள்வோம்.

(அ) இயேசுவின்மேல் பிளவுபடாத அன்பு கொண்டிருத்தல்.

(ஆ) சிலுவையை விரும்பி ஏற்றல்.

(இ) கடவுள் தரும் கைம்மாறு பெற்றுக்கொள்தல்.

அ. இயேசுவின்மேல் பிளவுபடாத அன்பு கொண்டிருத்தல்

மனிதர்களாகிய நாம் அனைவரும் சமூக விலங்குகள். அதாவது, ஒருவர் மற்றவரோடு உறவு ஒன்றிப்பை ஏற்படுத்திக்கொள்கிற விலங்குகள். உறவு ஒன்றிப்பு அடிப்படையாக இருப்பது அன்பு. நாம் மற்றவர்களுக்குக் காட்டும் அன்பு ஆள்கள், இடம், நெருக்கம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடுகிறது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகள்மேல் காட்டும், பிள்ளைகள் பெற்றோர்கள்மேல் காட்டும் அன்பு, கணவன்-மனைவி அன்பு, சகோதர அன்பு உறவு என அன்பில் பல படிநிலைகள் உள்ளன. நாம் ஒரே நேரத்தில் பலரிடம் அன்பு உறவில் இருக்கிறோம். பெற்றோரிடம், பிள்ளைகளிடம், இணையரிடம், உடன்பிறந்தவர்களிடம், நண்பர்களிடம், உடன்பணிபுரிபவர்களிடம் என நிறைய நபர்களோடு நம் அன்பில் நிலைத்திருக்கிறோம். இயேசுவை அன்பு செய்ய ஒருவர் தொடங்கும்போது மற்ற அன்புறவுகளும் பிணைப்புகளும் சில நேரங்களில் இடையூறாக அமையலாம். ஆக, ஒருவர் தெரிவை மேற்கொள்ள வேண்டும். இறைவனை மட்டும் பிடித்துக்கொண்டு மற்றவர்களை மற்றவற்றை விட்டுவிடுதலே அத்தெரிவு. இத்தகைய தெரிவை மேற்கொள்வதற்குத் துணிவும் மனத்திடமும் விடாமுயற்சியும் அவசியம். கடவுளை அன்பு செய்ய வேண்டுமெனில் மற்றவர்களை அன்பு செய்யக் கூடாதா? மற்ற அன்பு உறவுகளும் கடவுள் நமக்குக் கொடுத்ததுதானே? என்னும் கேள்விகள் எழலாம். இதற்குப் புனித அகுஸ்தினார் இவ்வாறு பதில் கூறுகிறார்: 'நாம் அன்பு செய்கிற அனைவரையும் கடவுளில் அன்பு செய்யும்போது, அன்பு தூய்மையாக்கப்படுவதுடன் நீடித்த தன்மையையும் பெறுகிறது.'

உறவுகளில் உள்ள முதன்மைகளைச் சரி செய்வது சீடத்துவத்தின் அடிப்படையான கூறு. சொத்து மற்றும் பணம் எப்படி சீடத்துவத்துக்கு இடையூறாக இருக்குமோ, அவ்வாறே உறவுகளும் இடையூறாக அமையலாம். அன்பில் முதன்மைகள் தெளிவானால் அது பிளவுபடாத அன்பாக இறைவன்மேல் கனியும்.

ஆ. சிலுவையை விரும்பி ஏற்றல்

'தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்' என்கிறார் இயேசு. அன்பின் முதன்மைகளைச் சரி செய்வதும், பிறழ்வுபட்ட அன்புநிலைகளுக்கு மறுப்புச் சொல்வதும் சீடருக்குச் சிலுவையாக மாறிவிடும். முதல் வாசகத்தில், எலிசா என்னும் இறைவாக்கினர் தன் ஊருக்கு வந்து செல்வதைக் காண்கிற சூனேம் பெண், அதைப் பற்றித் தன் கணவரிடம் எடுத்துச் சொல்கிறார். அந்தப் பெண்ணைப் பொருத்தவரையில் அது ஒரு சிலுவை. மற்றவர்கள்போல எனக்கென்ன? என அவர் ஓய்ந்திருப்பதற்குப் பதிலாக, எலிசாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறார். வெறும் விருப்பமாக அதை நிறுத்திக்கொள்ளாமல் அச்செயலைச் செய்தும் முடிக்கிறார். இரண்டாம் வாசகத்தின் பின்புலத்தில், பாவத்திலிருந்து விடுபட நினைக்கும் எவருக்கும் பாவத்தை விட்டுவிடுவது சிலுவை போலப் பாரமாகவே இருக்கும். இருந்தாலும் அவர் அதை விரும்பி ஏற்கிறார். நமக்குச் சுமையாக இருக்கிற ஒன்று, நாம் மேற்கொள்கிற தெரிவு, எடுக்கிற செயல் என நிறையச் சிலுவைகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன.

சிலுவையை விரும்பி ஏற்றல் என்பதும் ஒரு தெரிவே. முணுமுணுக்காமலும் தாராள உள்ளத்தோடும் செயல்படும் ஒருவரே சிலுவையை ஏற்றுக்கொள்ள முடியும்.

இ. கடவுள்தரும் கைம்மாறு பெற்றுக்கொள்தல்

'இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார்' என மொழிகிறார் இயேசு. இறைவாக்கினர் எலிசாவை ஏற்றுக்கொண்டு விருந்தோம்பல் செய்ததால் அதற்குரிய கைம்மாறு பெறுகிறார் சூனேம் பெண். 'உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்' என வாக்குறுதி தருகிறார் எலிசா. அப்பெண் எந்தவொரு கைம்மாற்றையும் எதிர்பார்க்காமலேயே விருந்தோம்பல் செய்கிறார். சீடர்கள் கடவுளைத் தெரிவுசெய்யும்போது கடவுள் அவர்களுடைய தேவைகளைக் கரமேற்கிறார் என்பது இங்கே தெளிவாகிறது. அதே வேளையில், சீடர்கள் மற்றவர்களிடம் உள்ள அனைத்தும் தங்களுக்கானது என்றும் எண்ணுதல் கூடாது. 

எதிர்பார்ப்பு இல்லாத விருந்தோம்பல் கைம்மாறு தரும்போது நம் இறைவன் வியப்புகளின் இறைவனாக நமக்குத் துணைநிற்கிறார்.

நிற்க.

இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 89), 'ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்' என மொழிகிறார் ஆசிரியர். ஆண்டவரின் பேரன்பை அனுபவிக்கும் ஒருவர் தாம் பற்றிக்கொண்டிருக்கும் சிறிய அன்புநிலைகளை விட்டுவிடும் துணிச்சல் பெறுகிறார். நிறைவானது வரும்போது குறைவானது மறைந்துபோகிறது (காண். 1 கொரி 13:10). சிறிய அன்புநிலைகளை விட்டுவிடுதல் சிலுவைபோலப் பாரமாகத் தெரிகின்றன. சிலுவையை ஏற்றுக்கொள்ளும்போது, அதற்குரிய கைம்மாறு கடவுளிடமிருந்து வருகிறது.