Monday, April 3, 2023

வாழ்வின் அழைப்புகள்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 4 ஏப்ரல் 2023

புனித வாரத்தின் செவ்வாய்

எசாயா 49:1-6. யோவான் 13:21-33,36-38.

வாழ்வின் அழைப்புகள்

இன்றைய முதல் வாசகம் எசாயாவின் துன்புறும் ஊழியன் இரண்டாம் பாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யார் இந்தத் துன்புறும் ஊழியன்? கிறிஸ்தியல் வாசிப்பில், துன்புறும் ஊழியன் இயேசுவைக் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்கிறோம். நான்கு பாடல்களில் இரண்டாம் பாடல் மட்டுமே மிகவும் நேர்முகமாக உள்ளது. இப்பாடலில் ஊழியன் தான் கடவுளிடமிருந்து பெற்ற அழைப்பு, புறவினத்தாருக்கு ஒளியாக இருப்பதற்கான தன் வாழ்வியல் நோக்கம், தன் மதிப்பு, மற்றும் கடவுள் தரும் பராமரிப்பு அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறார்.

நற்செய்தி வாசகம் இயேசுவின் பிரியாவிடை உரைப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தம் சீடர்களின் பாதங்களைக் கழுவுகிற இயேசு அவர்களோடு தொடர்ந்து உரையாடுகிறார். இன்றைய வாசகப் பகுதியில் அவருடைய உரையாடல் யூதாசு மற்றும் சீமோன் பேதுருவை நோக்கியதாக இருக்கிறது.

'உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்' என்னும் இயேசுவின் சொற்களோடு உரையாடல் தொடங்குகிறது. யார் அந்த நபர் என்பதை அறிய விரும்புகிறார் சீமோன் பேதுரு. ஒத்தமைவு நற்செய்திகள் இந்நிகழ்வை வேறு வகையில் பதிவு செய்கின்றன. அப்பத்தைத் தோய்த்துக்கொடுத்தல் என்னும் செயல் வழியாக இயேசு அந்த நபர் யார் என்பதை வெளிப்படுத்துகிறார். சீடர்களுக்கு இச்செயலும் இயேசுவின் சொற்களும் முழுமையாகப் புரியவில்லை. இயேசுவுக்கும் யூதாசுக்கும் மட்டுமே பொருள் புரிகிறது. இரண்டாம் பகுதியில், சீமோன் தம்மை மும்முறை மறுதலிப்பார் என்று உரைக்கிறார் இயேசு.

இந்நிகழ்வை வாசிக்கும்போது சில கேள்விகள் எழுகின்றன: 'இயேசுவின் இறப்புக்குக் காரணம் கடவுளின் திருவுளம் என்றால், யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்ததும், சீமோன் பேதுரு இயேசுவை மறுதலித்ததும் கடவுளின் திருவுளத்தால்தானே?', 'இயேசுவின் சொற்களுக்கு ஏற்பச் செயல்பட்டதால் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்தாரா அல்லது சாத்தான் நுழைந்ததால் இயேசுவைக் காட்டிக்கொடுத்தாரா?', 'பேதுரு செய்யவிருப்பதை இயேசு முன்னறிவிக்கிறாரா அல்லது கடவுளின் திருவுளத்தை பேதுரு மற்றும் யூதாசுக்கு வெளிப்படுத்துகிறாரா?'

யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுப்பார் என்பதும், பேதுரு அவரை மறுதலிப்பார் என்பதும் விதிக்கப்பட்ட அல்லது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றா? அல்லது இவர்கள் இருவரும் தாங்களாகவே அப்படிச் செய்தார்களா?

விடைகள் தெரியாத கேள்விகளாகவே இவை தொடர்கின்றன.

இவ்விரு வாசகங்களையும் எப்படி இணைத்துப் பொருள்கொள்வது?

துன்புறும் ஊழியனுக்கென கடவுள் ஒரு வாழ்வியல் நோக்கம் அல்லது அழைப்பு வைத்திருந்ததுபோல, இயேசுவுக்கு, யூதாசுக்கு, பேதுருவுக்கு, உங்களுக்கு, எனக்கு என அனைவருக்குமே ஒரு நோக்கத்தை நிர்ணயித்துள்ளார். இருந்தாலும், தெரிவுகளை மேற்கொள்வதற்கான கட்டின்மையையும் (சுதந்திரத்தையும்) நமக்குக் கொடுத்துள்ளார். 

யூதாசு மேலறையைவிட்டு வெளியேறியபோது 'இருட்டாய் இருந்தது' எனப் பதிவு செய்கிறார் யோவான். வெளியே இருட்டாய் இருந்ததால் யூதாசு உள்ளேயே ஒளியருகில் இருந்திருக்கலாம். ஆனால், அவர் இருளையே தெரிந்துகொள்கிறார். 

இன்று நாம் இயேசுவிடம் கேட்போம்: 'ஆண்டவரே, என் வாழ்வின் நோக்கம் என்ன? என் வாழ்க்கை என்னை எதை நோக்கி அழைக்கிறது? நான் உம்மோடு அமர்ந்து தொடர்ந்து உணவு உண்ணலாமா? அல்லது அப்பத்தைத் தோய்த்துக்கொடுத்து என்னை வெளியே இருளில் நீர் அனுப்பிவிடுவீரா?'


No comments:

Post a Comment