வெள்ளி, 28 ஏப்ரல் 2023
உயிர்ப்புக் காலம் மூன்றாம் வாரம்
திப 9:1-20. யோவா 6:52-59.
அழைப்பும் பதிலிறுப்பும்
இன்றைய முதல் வாசகத்தில் சவுல் ஆண்டவராகிய இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்பட்டு அழைக்கப்படுவதை வாசிக்கிறோம். ஆண்டவரின் அழைப்புக்குச் சவுல் உடனடியாக பதிலிறுப்பு செய்கிறார். சவுலின் (பவுல்) அழைப்பு இரண்டாம் ஏற்பாட்டில் மூன்று வகைகளில் நிகழ்வதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது:
(அ) தாயின் கருவிலிருந்தபோது
'தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார்' (கலா 1:15-16) என்று கலாத்திய நகரத் திருஅவைக்கு எழுதுகிறார் பவுல். இதன்படி, சவுல் தாயின் கருவில் இருந்தபோது அழைப்பு பெறுகிறார்.
(ஆ) பர்னபா வழியாக
சவுல் எருசலேமுக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்துகொள்ள முயற்சி செய்கிறார். ஆனால், அனைவரும் அவரைக் கண்டு அஞ்சுகிறார்கள். பர்னபா அவருக்குத் துணைநின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் செல்கிறார். பவுல் ஆண்டவரிடமிருந்து அழைப்பு பெற்றதை பர்னபா அவர்களுக்கு எடுத்துரைக்கிறார் (காண். திப 9:26-27)
(இ) காட்சி வழியாக
இன்றைய வாசகத்தில் வாசிக்கக் கேட்டதுபோல, தமஸ்கு நகருக்குச் செல்கிற சவுலை ஆண்டவராகிய இயேசு எதிர்கொள்கிறார்.
அழைப்பு நிகழ்வுகள் வேறுபட்டாலும், அழைப்பு ஆண்டவரிடமிருந்து வருகிறது, சவுல் உடனே அழைப்புக்குப் பதிலிறுப்பு செய்கிறார், உடனடியாக இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கிறார்.
இந்த நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) எதிர்பாராத திருப்பங்கள்
புதிய நெறியின் நம்பிக்கையாளர்களைத் துன்புறுத்துவதற்கு சவுல் செல்கிறார். அவரின் பயணம் தடைப்படுகிறது. பாதை மாறுகிறது. தமஸ்கு செல்ல வேண்டியவர் 'நேர்த் தெருவுக்கு' செல்கிறார். 'இயேசுவே இறைமகன்' என அறிவிக்கத் தொடங்குகிறார். நம் வாழ்விலும் எதிர்பாராத பொழுதுகளில்தாம் இறைவன் நம்மைத் தடுத்தாட்கொள்கிறார்.
(ஆ) பழையதை மறத்தல்
மூன்று நாள்கள் பார்வையில்லாமல் இருக்கிறார் பவுல். அவர் உண்ணவுமில்லை. குடிக்கவுமில்லை. இந்த நாள்கள்தாம் அவர் ஆண்டவரைத் தன் உள்ளத்தில் ஏற்கும் பொழுதுகள். பார்வையிழந்த பவுல் மீண்டும் பார்வை பெறுகிறார். செதில்கள் போன்றவை கண்களிலிருந்து விழுகின்றன. அவருடைய உள்ளத்திலிருந்தும் பழைய வாழ்வின் செதில்கள் விழுந்து மறைகின்றன.
(இ) பவுலின் இலக்கு வாக்கியம்
பவுல் எப்படிப்பட்டவராக இருக்கப் போகிறார் என்பதை அனனியாவுக்கு வெளிப்படுத்துகிறார் ஆண்டவர்: 'புறவினத்தாருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் ... கருவி'. பவுல் இந்த இலக்கு வாக்கியத்தை முழுமையாக வாழ்கிறார். தன் திறன்கள் அனைத்தையும் ஆண்டவருடைய பணிக்காக அர்ப்பணிக்கிறார். இறைவன் கையில் தன்னை ஒரு கருவியாக ஒப்படைக்கிறார்.
பவுலின் உடனடியான பதிலிறுப்பு நமக்கு ஆச்சர்யம் தருகிறது.
இன்றும் ஆண்டவர் நம்மைத் தடுத்தாட்கொள்கிறார். நம் திட்டத்தைப் புரட்டிப் போடுகிறார், குழப்புகிறார். நம் கண்களைப் பார்வை இழக்கச் செய்கிறார். மீண்டும் அவரே புதிய திட்டத்தையும், பார்வையையும் தருகிறார்.
நற்செய்தி வாசகத்தில், இயேசுவோடு உரையாடுகிற யூதர்கள், 'நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?' எனக் கேட்கிறார்கள்.
'ஆண்டவரே, நீர் யார்?' எனக் கேட்ட சவுல், அழைப்புக்கு உடனடியாகப் பதிலிறுப்பு செய்கிறார். ஆனால், நற்செய்தியில் நாம் காணும் யூதர்களோ இயேசுவுக்குச் செவிகொடுக்க மறுக்கிறார்கள்.
நம் கண்களைச் சற்றே மூடினால், அவர் நம்மை அழைப்பதை நாமும் கேட்க முடியும். அவரின் அழைப்புக்கு உடனடியாகப் பதிலிறுப்பு செய்தல் நலம்.
No comments:
Post a Comment