சனி, 29 ஏப்ரல் 2023
உயிர்ப்புக் காலம் மூன்றாம் வாரம்
திப 9:31-42. யோவா 6:60-69.
உரை நிறைவு
இயேசுவின் 'வாழ்வு தரும் உணவு நானே' உரை நிறைவு பெறுகிறது. இயேசுவின் உரை மூன்றுவிதமான சலனங்களை ஏற்படுத்துகிறது:
(அ) முணுமுணுத்தல்: 'இதை ஏற்றுக்கொள்வது கடினம். இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்கிறார்கள் ஒரு குழுவினர். 'இப்பேச்சை' என்பதை 'இவ்வார்த்தையை' எனப் பொருள் கொண்டால், 'வார்த்தையாகிய இயேசுவை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என அவர்கள் கேட்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். கடின உள்ளம், முணுமுணுத்தல் என்னும் இரு சொல்லாடல்களும் நமக்கு முதல் ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றை நினைவூட்டுகின்றன. செங்கடலைக் கடந்த இஸ்ரயேல் மக்கள் வழியில் தங்களுக்கு உணவு இல்லை என்று எனவும், குடிக்கத் தண்ணீர் இல்லை எனவும் மோசேக்கு எதிராகவும், கடவுளுக்கு எதிராகவும் முணுமுணுக்கிறார்கள் (காண். விப 16). கடவுள் அவர்களுடைய கடின உள்ளத்தைக் கடிந்துகொள்கிறார். முணுமுணுத்தல் என்பது ஒரு வகையான சொல் வன்முறை. நம்மைவிட வலிமை வாய்ந்த ஒருவருக்கு எதிராக, நம்முடைய கையறுநிலையில், அவரை எதிர்ப்பதற்காக நாம் தொடுக்கும் ஆயுதம்தான் முணுமுணுத்தல். இருவகை மனநிலை அல்லது பிளவுற்ற மனநிலைதான் நம்மை முணுமுணுக்கத் தூண்டும். அப்பங்கள் பலுகச் செய்த நிலையில் இயேசு மற்றவர்களைவிட மேலானவராக இருக்கிறார். ஆனாலும், அவரை வாழ்வுதரும் உணவு என ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது. ஆகையால், மக்கள் அவருக்கு எதிராக முணுமுணுக்கிறார்கள்.
(ஆ) விலகிச் செல்தல்: 'அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரைவிட்டு விலகினர்' எனப் பதிவு செய்கிறார் யோவான். இது ஓர் எதிர்வினை. ஆனாலும், இந்த எதிர்வினை பாராட்டுதற்குரியது. முணுமுணுத்தலைவிட விலகிச் செல்தல் மேன்மையானது. கூடவே இருந்து முணுமுணுப்பதற்குப் பதிலாக, 'எனக்கு இது வேண்டாம் அல்லது எனக்கு இவர் வேண்டாம்' என முடிவெடுத்துப் புறப்படுகிறார்கள் பலர். இவர்கள் முடிவெடுக்கிறார்கள், பிளவுபடாத உள்ளம் கொண்டிருக்கிறார்கள்.
(இ) நம்புதல்: பலர் போவதைக் காண்கிற இயேசு தம் திருத்தூதர்கள் பக்கம் திரும்பி, 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' எனக் கேட்கிறார் இயேசு. 'ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம், அதை நம்புகிறோம்' என அனைவர் சார்பாகவும் பதிலிறுப்பு செய்கிறார் பேதுரு. ஒத்தமைவு நற்செய்திகளில், 'நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?' என்னும் இயேசுவின் கேள்விக்குப் பதிலிறுப்பு செய்வது போல இருக்கிறது பேதுருவின் இச்சொற்கள். இயேசுவை 'ஆண்டவர்' என்றும், 'அர்ப்பணமானவர்' எனவும் அறிக்கையிடுகிறார் பேதுரு.
இம்மூன்று சலனங்களில் மூன்றாவது மேன்மையானது, இரண்டாவது ஏற்புடையது, முதலாவது தவறானது.
இயேசுவின் சொற்களை நாம் அன்றாடம் கேட்கிறோம். இறைவார்த்தையாக வாசிக்கிறோம். நம் மனச்சான்றாக அவருடைய குரல் ஒலிக்கிறது. அருளடையாளக் கொண்டாட்டங்கள் வழியாக அவர் நம்மோடு உரையாடுகிறார். நம் தலைவர்கள், வழிநடத்துநர்கள், அருகிலிருப்போர், தூரத்திலிருப்போர் என அனைவர் வழியாகவும் அவர் சொற்கள் நம்மை நோக்கி வருகின்றன. அவற்றைக் கேட்கும் நாம் இயேசுவுக்கு என்ன பதிலிறுப்பு செய்கிறோம்?
முணுமுணுக்கிறோமா? அல்லது இது வேண்டாம் என நகர்கிறோமா? அல்லது அவரிடம் சரணடைகின்றோமா?
'வாழ்வுதரும் வார்த்தையாக இயேசுவை நம்பியதால்' பேதுரு, முடக்குவாதத்தால் எட்டு ஆண்டுகள் படுக்கையில் கிடந்த ஐனேயாவுக்கு நலம் தருகிறார், இறந்துபோன பெண் சீடர் தபித்தா (தொற்கா) உயிர்பெற்றெழச் செய்கிறார் (முதல் வாசகம்).
No comments:
Post a Comment