Sunday, April 30, 2023

இவர் தச்சருடைய மகன் அல்லவா?

இன்றைய இறைமொழி

திங்கள், 1 மே 2023

உயிர்ப்புக் காலம் நான்காம் வாரம்

தொழிலாளரான புனித யோசேப்பு

திப 9:1-20. யோவா 6:52-59.

இவர் தச்சருடைய மகன் அல்லவா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் எளிய பின்புலம் குறித்து இடறல்படுகிற அவருடைய சமகாலத்தார் அவரை 'தச்சரின் மகன்' என அழைக்கிறார்கள். இச்சொல்லாடைலைப் பயன்படுத்தி அவருடைய ஊரார் அவரை ஏளனம் செய்துவிட்டதாக எண்ணி மனதுக்குள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். ஆனால், இந்தச் சொல்லாடலே யோசேப்பு என்னும் மாமனிதரை தொழிலாளர்கள், உழைப்பாளர்களின் பாதுகாவலர் எனக் கொண்டாடக் காரணமாக அமைகிறது.

நம் தாய்த் திருஅவை இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பை வழிபாட்டில் இரு நாள்கள் கொண்டாடி மகிழ்கிறது: ஒன்று, மார்ச் 19, யோசேப்பு புனித கன்னி மரியாவின் கணவர். இரண்டு, மே 1, யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர். இன்றைய நாளின் திருநாளை 1955ஆம் ஆண்டு திருத்தந்தை 12ஆம் பயஸ் ஏற்படுத்தினார்.

1. உழைப்பு: சாபம், வரம்

உழைப்பு என்பதை விவிலியம் மானுட குலத்தின் சாபமாகவும் பார்க்கிறது, வரமாகவும் பார்க்கிறது. விலக்கப்பட்ட கனியை உண்டதற்காக நம் முதற்பெற்றோரைக் கடிந்துகொள்ளும் ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், 'உன் வாழ்நாளெல்லாம் வருந்தி நிலத்தின் பயனை உழைத்து நீ உண்பாய்' என மொழிகிறார் (காண். தொநூ 3:17). இதன் பின்புலத்தில்தான் சபை உரையாளரும் உழைப்பும், உழைப்பின் பயனும் வீண் எழுதுகிறார்: 'நான் இவ்வுலகில் எவற்றையெல்லாம் செய்துமுடிக்க உழைத்தேனோ அவற்றின்மீதெல்லாம் வெறுப்பு கொண்டேன் ... என் உழைப்பும் வீணே ... நான் உலகில் செய்த எல்லா முயற்சிக்காகவும் மனமுடைந்து போனேன் ... உழைப்புக்காக ஒருவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம். வேலையில் தொந்தரவு. இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே' (காண். சஉ 2:18-23). ஆனால், நேர்முகமாகவும் நாம் உழைப்பைக் காண்கிறோம். 'ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்' (காண். தொநூ 2:15). இங்கே, ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்குத் தருகிற அழைப்பே உழைப்பு என்னும் புரிதல் தெரிகிறது. 

2. உழைப்பின் இன்றியமையாமை

உழைப்பு நமக்கு மூன்று நிலைகளில் அவசியமாகிறது: 

ஒன்று, உழைப்பு நமக்கு அடையாளம் தருகிறது. மருத்துவர், வழக்கறிஞர், ஆசிரியர், தணிக்கையாளர் என நாம் செய்யும் பணிகளால் அடையாளப்படுத்தப்படுகிறோம். இந்த அடையாளங்களை நாம் இழக்கும்போது நாம் மிகவும் கவலைப்படுகிறோம். எடுத்துக்காட்டாக, ஆசிரியப் பணி நிறைவு செய்கிறவர், இனி தம்மால் பள்ளிக்குச் செல்ல முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள இயலாதவராக இருக்கிறார்.

இரண்டு, உழைப்பின் வழியாக நம் திறன்களை நாம் வெளிக்கொணர்கிறோம். நம்மை நாமே நிறைவு செய்கிறோம். இதில் என்ன அழகு என்றால், நாம் நிறையத் திறன்களை வளர்க்க, வளர்க்க, நாமும் நிறைவுபெற்றுக்கொண்டே இருக்கிறோம்.

மூன்று, உழைப்பின் வழியாக மானுடத்திற்கான, இயற்கைக்கான நம் பங்களிப்பை நாம் செலுத்துகிறோம். மானுடத்தையும் இயற்கையையும் மேம்படுத்துகிறோம்.

3. யோசேப்பு உழைப்பாளர்

(அ) யோசேப்பு ஆண்டின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய 'தந்தையின் இதயத்தோடு' (பாத்ரிஸ் கோர்தே) என்னும் மடலில், 'யோசேப்பு உழைக்கிற தந்தை' என எழுதுகிறார். தாம் செய்த தச்சுத்தொழில் வழியாக தம் குடும்பத்திற்குத் தேவையானவற்றை வழங்குகிறார். அவரிடமிருந்தே இயேசு உழைப்பின் மதிப்பையும், மாண்பையும், மகிழ்ச்சியையும் கற்றுக்கொள்கிறார் எனப் பதிவு செய்கிறார் திருத்தந்தை. இவ்வாறாக, தம் செயலால் இயேசுவுக்கு முன்மாதிரி காட்டுகிறார் யோசேப்பு.

(ஆ) தச்சுத்தொழிலுக்கான கூர்மை. தொழில்கள் அனைத்தும் தனித்தன்மை பெற்றவை எனினும், தச்சுத்தொழிலுக்கென்று தனித்திறமை அவசியம். மரத்தைப் பார்ப்பது, மதிப்பிடுவது, சரியான பக்குவத்தில் வேலைக்கு எடுப்பது, தேவையற்றதை நீக்குவது, வழுவழுப்பாக்குவது என அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். மேலும், நம் வீட்டில் பயன்படுத்தும் மரப் பொருள்கள் நம்மை இயற்கையோடு இருப்பதான ஓர் உணர்வைத் தருகின்றது.

(இ) யோசேப்பு நேர்மையாளர் என மத்தேயு பதிவு செய்கிறார். இந்த நேர்மை அவருடைய தொழிலிலும் மிளிர்ந்தது. தச்சுத்தொழில் செய்பவர் சரியான நேரத்தில் பொருளை முடித்துக்கொடுக்க வேண்டும். குறிப்பாக, நம் ஊரில் வீட்டின் நிலைக்கால் செய்யும் தச்சர் சரியான நேரத்தில் அதை முடித்துக்கொடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். யோசேப்பு தனித்திறமை கொண்டவராக இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம்.

4. வாழ்க்கைப் பாடங்கள்

(அ) தம் உழைப்பின்மேல் தாம் கொண்ட நம்பிக்கையால்தான் அன்னை கன்னி மரியாவை தம் மனைவியாக ஏற்றுக்கொள்ள முன்வருகிறார் யோசேப்பு. இன்று நம் குடும்பங்களில் உழைப்பு மிகவும் அவசியம். அன்பு அல்ல, உழைப்பே குடும்பத்தை அடுத்த நிலைக்கு (பொருளாதார அளவில்) மேம்படுத்தும். உழைப்பு மிகுந்திருக்கும் குடும்பத்தில் அன்பும் மிகுந்திருக்கும். நாம் செய்கிற எந்த வேலையிலும் அர்ப்பணமும் பொறுப்புணர்வும் கொண்டிருத்தல் நலம்.

(ஆ) நம் வேலை நமக்கு அடையாளம் தந்தாலும், அந்த அடையாளத்தோடு நாம் நம்மையே மிகவும் இணைத்துக்கொள்வது தவறு. அப்படி இணைத்துக்கொண்டால், அத்தகைய அடையாளம் இல்லாதவர்களை நாம் மதிப்புடன் நடத்தத் தவறிவிடுவோம். குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயுற்றோர் போன்றவர்கள் உழைக்க இயலாதவர்கள். ஆனால், பயனற்றவர்கள் அல்லர். உழைக்க இயலாதவரும் தன்னகத்தே தன்மதிப்பையும் மாண்பையும் கொண்டிருக்கிறார். 

(இ) நமக்குக் கீழே வேலை பார்ப்பவர்களை, அல்லது மற்ற பணியாளர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அவர்கள் நம் உடலின் நீட்சிகள். நம் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் பெண் நம் கரத்தின் நீட்சியே தவிர, அவர் தாழ்வானவர் அல்ல. முடிதிருத்துநர், சலவை செய்பவர், தெருக்களைச் சுத்தம் செய்பவர் என அனைவரும் நம் நீட்சிகள். 

(ஈ) இறுதியாக, உழைப்பு சிலகாலம்தான் என்பதை நாம் உணர வேண்டும். 70 ஆண்டுகள் வாழ்கிற வாழ்க்கையில் நாம் 25 முதல் 55 வயது வரை என வெறும் 30 ஆண்டுகள்தாம் உழைக்கிறோம். இதற்கு முன்னும், இதற்குப் பின்னும் உள்ள ஓய்வையும் நாம் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால்தான், உழைப்பைப் பற்றிப் பேசுகிற இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 90) ஆசிரியர், 'ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்!' எனப் பாடிவிட்டு, தொடர்ந்து, 'எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்' என மன்றாடுகிறார்.

உழைப்பின் திருநாள் வாழ்த்துகள்.


Friday, April 28, 2023

உரை நிறைவு

இன்றைய இறைமொழி

சனி, 29 ஏப்ரல் 2023

உயிர்ப்புக் காலம் மூன்றாம் வாரம்

திப 9:31-42. யோவா 6:60-69.

உரை நிறைவு

இயேசுவின் 'வாழ்வு தரும் உணவு நானே' உரை நிறைவு பெறுகிறது. இயேசுவின் உரை மூன்றுவிதமான சலனங்களை ஏற்படுத்துகிறது: 

(அ) முணுமுணுத்தல்: 'இதை ஏற்றுக்கொள்வது கடினம். இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்கிறார்கள் ஒரு குழுவினர். 'இப்பேச்சை' என்பதை 'இவ்வார்த்தையை' எனப் பொருள் கொண்டால், 'வார்த்தையாகிய இயேசுவை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என அவர்கள் கேட்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். கடின உள்ளம், முணுமுணுத்தல் என்னும் இரு சொல்லாடல்களும் நமக்கு முதல் ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றை நினைவூட்டுகின்றன. செங்கடலைக் கடந்த இஸ்ரயேல் மக்கள் வழியில் தங்களுக்கு உணவு இல்லை என்று எனவும், குடிக்கத் தண்ணீர் இல்லை எனவும் மோசேக்கு எதிராகவும், கடவுளுக்கு எதிராகவும் முணுமுணுக்கிறார்கள் (காண். விப 16). கடவுள் அவர்களுடைய கடின உள்ளத்தைக் கடிந்துகொள்கிறார். முணுமுணுத்தல் என்பது ஒரு வகையான சொல் வன்முறை. நம்மைவிட வலிமை வாய்ந்த ஒருவருக்கு எதிராக, நம்முடைய கையறுநிலையில், அவரை எதிர்ப்பதற்காக நாம் தொடுக்கும் ஆயுதம்தான் முணுமுணுத்தல். இருவகை மனநிலை அல்லது பிளவுற்ற மனநிலைதான் நம்மை முணுமுணுக்கத் தூண்டும். அப்பங்கள் பலுகச் செய்த நிலையில் இயேசு மற்றவர்களைவிட மேலானவராக இருக்கிறார். ஆனாலும், அவரை வாழ்வுதரும் உணவு என ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது. ஆகையால், மக்கள் அவருக்கு எதிராக முணுமுணுக்கிறார்கள்.

(ஆ) விலகிச் செல்தல்: 'அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரைவிட்டு விலகினர்' எனப் பதிவு செய்கிறார் யோவான். இது ஓர் எதிர்வினை. ஆனாலும், இந்த எதிர்வினை பாராட்டுதற்குரியது. முணுமுணுத்தலைவிட விலகிச் செல்தல் மேன்மையானது. கூடவே இருந்து முணுமுணுப்பதற்குப் பதிலாக, 'எனக்கு இது வேண்டாம் அல்லது எனக்கு இவர் வேண்டாம்' என முடிவெடுத்துப் புறப்படுகிறார்கள் பலர். இவர்கள் முடிவெடுக்கிறார்கள், பிளவுபடாத உள்ளம் கொண்டிருக்கிறார்கள். 

(இ) நம்புதல்: பலர் போவதைக் காண்கிற இயேசு தம் திருத்தூதர்கள் பக்கம் திரும்பி, 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' எனக் கேட்கிறார் இயேசு. 'ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம், அதை நம்புகிறோம்' என அனைவர் சார்பாகவும் பதிலிறுப்பு செய்கிறார் பேதுரு. ஒத்தமைவு நற்செய்திகளில், 'நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?' என்னும் இயேசுவின் கேள்விக்குப் பதிலிறுப்பு செய்வது போல இருக்கிறது பேதுருவின் இச்சொற்கள். இயேசுவை 'ஆண்டவர்' என்றும், 'அர்ப்பணமானவர்' எனவும் அறிக்கையிடுகிறார் பேதுரு.

இம்மூன்று சலனங்களில் மூன்றாவது மேன்மையானது, இரண்டாவது ஏற்புடையது, முதலாவது தவறானது.

இயேசுவின் சொற்களை நாம் அன்றாடம் கேட்கிறோம். இறைவார்த்தையாக வாசிக்கிறோம். நம் மனச்சான்றாக அவருடைய குரல் ஒலிக்கிறது. அருளடையாளக் கொண்டாட்டங்கள் வழியாக அவர் நம்மோடு உரையாடுகிறார். நம் தலைவர்கள், வழிநடத்துநர்கள், அருகிலிருப்போர், தூரத்திலிருப்போர் என அனைவர் வழியாகவும் அவர் சொற்கள் நம்மை நோக்கி வருகின்றன. அவற்றைக் கேட்கும் நாம் இயேசுவுக்கு என்ன பதிலிறுப்பு செய்கிறோம்?

முணுமுணுக்கிறோமா? அல்லது இது வேண்டாம் என நகர்கிறோமா? அல்லது அவரிடம் சரணடைகின்றோமா?

'வாழ்வுதரும் வார்த்தையாக இயேசுவை நம்பியதால்' பேதுரு, முடக்குவாதத்தால் எட்டு ஆண்டுகள் படுக்கையில் கிடந்த ஐனேயாவுக்கு நலம் தருகிறார், இறந்துபோன பெண் சீடர் தபித்தா (தொற்கா) உயிர்பெற்றெழச் செய்கிறார் (முதல் வாசகம்).


Thursday, April 27, 2023

அழைப்பும் பதிலிறுப்பும்

இன்றைய இறைமொழி

வெள்ளி, 28 ஏப்ரல் 2023

உயிர்ப்புக் காலம் மூன்றாம் வாரம்

திப 9:1-20. யோவா 6:52-59.

அழைப்பும் பதிலிறுப்பும்

இன்றைய முதல் வாசகத்தில் சவுல் ஆண்டவராகிய இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்பட்டு அழைக்கப்படுவதை வாசிக்கிறோம். ஆண்டவரின் அழைப்புக்குச் சவுல் உடனடியாக பதிலிறுப்பு செய்கிறார். சவுலின் (பவுல்) அழைப்பு இரண்டாம் ஏற்பாட்டில் மூன்று வகைகளில் நிகழ்வதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது: 

(அ) தாயின் கருவிலிருந்தபோது

'தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார்' (கலா 1:15-16) என்று கலாத்திய நகரத் திருஅவைக்கு எழுதுகிறார் பவுல். இதன்படி, சவுல் தாயின் கருவில் இருந்தபோது அழைப்பு பெறுகிறார்.

(ஆ) பர்னபா வழியாக

சவுல் எருசலேமுக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்துகொள்ள முயற்சி செய்கிறார். ஆனால், அனைவரும் அவரைக் கண்டு அஞ்சுகிறார்கள். பர்னபா அவருக்குத் துணைநின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் செல்கிறார். பவுல் ஆண்டவரிடமிருந்து அழைப்பு பெற்றதை பர்னபா அவர்களுக்கு எடுத்துரைக்கிறார் (காண். திப 9:26-27)

(இ) காட்சி வழியாக

இன்றைய வாசகத்தில் வாசிக்கக் கேட்டதுபோல, தமஸ்கு நகருக்குச் செல்கிற சவுலை ஆண்டவராகிய இயேசு எதிர்கொள்கிறார். 

அழைப்பு நிகழ்வுகள் வேறுபட்டாலும், அழைப்பு ஆண்டவரிடமிருந்து வருகிறது, சவுல் உடனே அழைப்புக்குப் பதிலிறுப்பு செய்கிறார், உடனடியாக இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கிறார்.

இந்த நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) எதிர்பாராத திருப்பங்கள்

புதிய நெறியின் நம்பிக்கையாளர்களைத் துன்புறுத்துவதற்கு சவுல் செல்கிறார். அவரின் பயணம் தடைப்படுகிறது. பாதை மாறுகிறது. தமஸ்கு செல்ல வேண்டியவர் 'நேர்த் தெருவுக்கு' செல்கிறார். 'இயேசுவே இறைமகன்' என அறிவிக்கத் தொடங்குகிறார். நம் வாழ்விலும் எதிர்பாராத பொழுதுகளில்தாம் இறைவன் நம்மைத் தடுத்தாட்கொள்கிறார்.

(ஆ) பழையதை மறத்தல்

மூன்று நாள்கள் பார்வையில்லாமல் இருக்கிறார் பவுல். அவர் உண்ணவுமில்லை. குடிக்கவுமில்லை. இந்த நாள்கள்தாம் அவர் ஆண்டவரைத் தன் உள்ளத்தில் ஏற்கும் பொழுதுகள். பார்வையிழந்த பவுல் மீண்டும் பார்வை பெறுகிறார். செதில்கள் போன்றவை கண்களிலிருந்து விழுகின்றன. அவருடைய உள்ளத்திலிருந்தும் பழைய வாழ்வின் செதில்கள் விழுந்து மறைகின்றன. 

(இ) பவுலின் இலக்கு வாக்கியம்

பவுல் எப்படிப்பட்டவராக இருக்கப் போகிறார் என்பதை அனனியாவுக்கு வெளிப்படுத்துகிறார் ஆண்டவர்: 'புறவினத்தாருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் ... கருவி'. பவுல் இந்த இலக்கு வாக்கியத்தை முழுமையாக வாழ்கிறார். தன் திறன்கள் அனைத்தையும் ஆண்டவருடைய பணிக்காக அர்ப்பணிக்கிறார். இறைவன் கையில் தன்னை ஒரு கருவியாக ஒப்படைக்கிறார்.

பவுலின் உடனடியான பதிலிறுப்பு நமக்கு ஆச்சர்யம் தருகிறது.

இன்றும் ஆண்டவர் நம்மைத் தடுத்தாட்கொள்கிறார். நம் திட்டத்தைப் புரட்டிப் போடுகிறார், குழப்புகிறார். நம் கண்களைப் பார்வை இழக்கச் செய்கிறார். மீண்டும் அவரே புதிய திட்டத்தையும், பார்வையையும் தருகிறார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவோடு உரையாடுகிற யூதர்கள், 'நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?' எனக் கேட்கிறார்கள். 

'ஆண்டவரே, நீர் யார்?' எனக் கேட்ட சவுல், அழைப்புக்கு உடனடியாகப் பதிலிறுப்பு செய்கிறார். ஆனால், நற்செய்தியில் நாம் காணும் யூதர்களோ இயேசுவுக்குச் செவிகொடுக்க மறுக்கிறார்கள். 

நம் கண்களைச் சற்றே மூடினால், அவர் நம்மை அழைப்பதை நாமும் கேட்க முடியும். அவரின் அழைப்புக்கு உடனடியாகப் பதிலிறுப்பு செய்தல் நலம்.


Wednesday, April 26, 2023

தந்தை ஈர்த்தாலொழிய

இன்றைய இறைமொழி

வியாழன், 27 ஏப்ரல் 2023

உயிர்ப்புக் காலம் மூன்றாம் வாரம்

திப 8:26-40. யோவா 6:44-51

தந்தை ஈர்த்தாலொழிய

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் 'வாழ்வுதரும் உணவு நானே' பேருரை தொடர்கிறது. 'கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்' என்னும் சொற்களை மேற்கோள் காட்டி, 'கடவுள் ஈர்த்தாலொழிய யாரும் தன்னிடம் வர இயலாது' என்கிறார் இயேசு. 

கடவுளால் ஈர்க்கப்படுதல் என்னும் சொல்லாடலை காந்தம் மற்றும் இரும்பு என்னும் உருவகம் வழியாகப் புரிந்துகொள்ளலாம். தனக்கு அருகே வரும் இரும்பைக் காந்தம் உடனடியாகத் தன்னிடம் ஈர்த்துக்கொள்கிறது. ஈர்க்கப்பட்ட இரும்பு காந்தத்தின் தன்மையை ஏற்று, தனக்கு அருகில் இருக்கும் மற்ற இரும்பையும் ஈர்த்துக்கொள்கிறது. இதுதான் கடவுள் நம்மை ஈர்க்கும் முறை.

அலகை அல்லது சாத்தானும் நம்மை ஈர்க்கிறார். ஆனால், அவருடைய ஈர்ப்பு 'கருந்துளை ஈர்ப்பு' (ஆங்கிலத்தில், 'ப்ளாக்ஹோல் அட்ராக்ஷன்') போன்றது. கருந்துளையால் ஈர்க்கப்படுகின்ற பொருள் தன் இருத்தலை இழந்துவிடுகிறது. 

கடவுளால் நான் ஈர்க்கப்படுமாறு நான் அவருக்கு அருகில் இருக்கிறேனா? என் இரும்பு தன் தன்மையை இழக்காமல் இருக்கிறதா? 

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தொண்டர் பிலிப்பு எத்தியோப்பிய திருநங்கை அமைச்சருக்கு இறைவாக்கை எடுத்துரைத்து பின்னர் திருமுழுக்கு வழங்குகிறார். கடவுளால் ஈர்க்கப்பெற்ற பிலிப்பு திருநங்கை அமைச்சரைத் தன் பக்கம் ஈர்த்துக்கொள்கிறார். 

திருநங்கை அமைச்சர் எவ்வாறு கடவுளால் ஈர்க்கப்படுகிறார்?

எத்தியோப்பிய அரசி கந்தகியின் நிதியமைச்சராக இருக்கிறார் திருநங்கை ஒருவர். 'கந்தகி' என்பது எத்தியோப்பிய அரசியின் பெயர் என்று சொல்வதைவிட, பட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். 'கந்தகி' என்ற சொல்லுக்கு 'அரசியான அம்மா' என்ற பொருளும் உண்டு. 'அலி,' 'அண்ணகர்,' 'திருநங்கை' என்று நாம் எந்தச் சொல்லாடலைப் பயன்படுத்தினாலும் பொருள் ஒன்றுதான். அரசர்கள் தங்கள் மனைவியரின் 'நலன்' கருதி, தங்கள் அரண்மனையில் தங்கி பணிபுரியும் அமைச்சர்களாக 'திருநங்கைகளை' மட்டுமே நியமித்தார்கள். நம் கதைமாந்தர் அரசியின் நிதியமைச்சர். ஆக, நன்றாகப் படித்தவராகத்தான் இருந்திருக்க வேண்டும். படித்தவர் மட்டுமல்ல. பக்திமானும் கூட. எருசலேம் சென்று கடவுளை வணங்கிவிட்டு வீடு திரும்புகிறார். எருசலேம் சென்று வணங்கக்கூடியவர் ஒரு யூதராகத் தான் இருக்க வேண்டும். மேலும், அவரின் கைகளில் இருப்பதும் யூத இறைவாக்கு நூலின் ஒரு பகுதியே: எசாயா 53:7-8.

இவர் இப்படி வாசித்துக்கொண்டிருக்கும் நேரம், இவரின் தேரை நெருங்கி ஓடுமாறு பிலிப்புவுக்குக் கட்டளையிடுகின்றார் ஆண்டவர். தேரின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து ஓடும் அளவிற்கு பிலிப்பு ஆற்றல் பெற்றிருக்கின்றார். மேலும், அந்த ஓட்டத்திலும் தேரில் இருப்பவர் என்ன வாசிக்கிறார் என்பதைக் கேட்கவும் செய்கின்றார். திருநங்கை அமைச்சரே இந்த இறைவார்த்தையை வாசித்திருக்க வாய்ப்பில்லை. அவரின் தேரில் உடன் வந்த அவரின் செயலரோ, அல்லது குருவோ, அல்லது லேவியரோ வாசித்து இவர் கேட்டிருக்கலாம்.

'நீர் வாசிப்பது உமக்குப் புரிகிறதா?' என பிலிப்பு கேட்க, 'யாராவது விளக்கிச் சொன்னால்தானே புரியும்' என்கிறார் திருநங்கை அமைச்சர். அத்தோடு, பிலிப்பையும் தன் தேரில் ஏற்றிக்கொள்கின்றார். தொடர்ந்து அந்த இறைவாக்குப் பகுதி பற்றி நிறைய கேள்விகள் கேட்கின்றார் அமைச்சர். பிலிப்பு அவர் வாசித்த இறைவார்த்தையில் தொடங்கி, இயேசுவைப் பற்றி எல்லாவற்றையும் அறிவிக்கின்றார். வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடம் வருகின்றது. 'இதோ, தண்ணீர் உள்ளதே. நான் திருமுழுக்கு பெற ஏதாவது தடை உண்டா?' எனக் கேட்கின்றார் அமைச்சர். பிலிப்புவும், அமைச்சரும் தண்ணீருக்குள் இறங்குகின்றனர். பிலிப்பு அமைச்சருக்கு திருமுழுக்கு கொடுக்கின்றார். ஆற்றை விட்டு வெளியே வந்தவுடன் ஆண்டவர் பிலிப்பை அப்படியே 'தலைமுடியைப் பிடித்து' தூக்கிச் சென்று விடுகிறார். அமைச்சர் மகிழ்ச்சியுடன் தன் வீடு திரும்புகிறார்.

திருநங்கை-அமைச்சர் குழந்தை உள்ளம் கொண்டிருக்கிறார். தனக்குப் புரியாததை புரியவில்லை என ஏற்றுக்கொள்கிறார். தண்ணீரைக் கண்டவுடன் திருமுழுக்கு பெறுகிறார். அவருடைய மனமாற்றம் உடனடியாக நிகழ்கிறது. மனமாற்றம் மகிழ்ச்சி உணர்வாக வெளிப்படுகிறது.

பிலிப்பு தயார் நிலையில் இருக்கிறார். ஆண்டவர் ஓடச் சொன்னவுடன் ஓடுகிறார். தயக்கம் ஏதும் இல்லாமல் உடனடியாக அந்நியர் ஒருவரோடு உரையாடும் துணிவு கொண்டிருக்கிறார். ஆண்டவர் தன் முடியைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போனபோது அமைதி காக்கின்றார்.

இவ்வாறாக, கடவுள் பிலிப்பையும், பிலிப்பு நிதியமைச்சரையும் ஈர்க்கிறார்கள்.

இன்று நம்மைச் சுற்றி நிறைய ஈர்ப்புகள் உள்ளன. பல ஈர்ப்புகள் போலியானவை, அல்லது தீமையானவை. அவற்றை நோக்கி நாம் செல்லும்போது நாம் மறைந்து போகிறோம். 

இறைஈர்ப்பே இனிய ஈர்ப்பு. 

அந்த இயல்புக்குக் கையளிக்கும் நாம் இறைவனின் இயல்பு பெறுகிறோம்.

Tuesday, April 25, 2023

இறைவிருப்பம் நிறைவேற்றுதல்

இன்றைய இறைமொழி

புதன், 26 ஏப்ரல் 2023

உயிர்ப்புக் காலம் மூன்றாம் வாரம்

திப 8:1-8. யோவா 6:35-40.

இறைவிருப்பம் நிறைவேற்றுதல்

இன்றைய முதல் வாசகத்தில், திருத்தொண்டர் ஸ்தேவானின் இறப்புக்குப் பின்னர் உடனடியாக எருசலேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் நடந்த நிகழ்வுகளைப் பட்டியலிடுகிறார் லூக்கா: (அ) எருசலேம் திருஅவை பெரும் இன்னலுக்கு உள்ளாகிறது. மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். (ஆ) சிதறி ஓடிய மக்கள் நற்செய்தியை அறிவிக்கிறார்கள். திருத்தொண்டர் பிலிப்பு பல அறிகுறிகள் நிகழ்த்துகிறார். (இ) இறைவனின் வல்ல செயல்களைக் காண்கின்ற மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

துன்பம் நம்பிக்கையாளர்களின் மனத்தைச் சோர்வடையச் செய்யவில்லை. 

சிதறிய ஓடிய மக்கள் தங்கள் வாழ்விடங்களை, வாழ்வாதாரங்களை, வேர்களை இழந்தாலும், புதிய இடங்களை நற்செய்தி அறிவிப்புக்கான வாய்ப்புகளாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

ஆண்டவரின் அரும்செயல்கள் மேலோங்கி நிற்கின்றன.

இவ்வாறாக, ஆண்டவரின் நற்செய்தியை யாரும் தடுக்க இயலவில்லை என்பதைப் பதிவு செய்கிறார் லூக்கா.

நற்செய்தி வாசகத்தில், தம் வாழ்வின் நோக்கம் தம்மை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதே எனத் தம் சமகாலத்தவருக்குத் தெளிவுபடக் கூறுகிறார் இயேசு.

இயேசு தாம் இருந்த இடத்தில் இறைத்திருவுளம் நிறைவேற்றுகிறார்.

சிதறடிக்கப்பட்டாலும், ஒரே இடத்தில் இருந்தாலும் நம் வாழ்வின் இலக்கு இறைவிருப்பம் நிறைவேற்றுவதாக மட்டுமே இருந்தால் நலம்.


Monday, April 24, 2023

புனித மாற்கு

இன்றைய இறைமொழி

செவ்வாய், 25 ஏப்ரல் 2023

உயிர்ப்புக் காலம் மூன்றாம் வாரம்

புனித மாற்கு

1 பேதுரு 5:6-14. மாற்கு 16:15-20.

மாற்கு மற்றும் நற்செய்தி

இன்று நாம் நற்செய்தியாளரான புனித மாற்குவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இவரை இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 பேது 5:5-14), பேதுரு, 'என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்' என எழுதுகிறார்.

இவர் பேதுருவின் சீடர் என்பதும், இயேசு பாஸ்கா விருந்தை ஏற்பாடு செய்யத் திருத்தூதர்கள் சென்றபோது தண்ணீர் குடம் சுமந்து சென்றவர் இவர் என்பதும், இவருடைய இல்லத்தின் மேல்மாடியில்தான் இயேசு தன் இறுதி இராவுணவைக் கொண்டாடினார் என்பதும், இந்த இல்லத்தின் மேலறையில்தான் திருத்தூதர்கள்மேல் தூயஆவி பொழியப்பட்டது என்பதும், இயேசு கைது செய்யப்பட்டபோது ஆடையின்றி ஓடிய இளைஞர் மாற்கு என்பதும், இவருடைய நற்செய்தியே முதலில் எழுதப்பட்ட நற்செய்தி என்பதும் மரபுவழிச் செய்தி. இவர் யோவான் மாற்கு எனவும் அறியப்படுகிறார்.

மாற்கு மற்றும் அவருடைய நற்செய்தி நமக்கு வழங்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

(அ) இரண்டாம் வாய்ப்பு

பவுலுடன் அவருடைய முதல் தூதுரைப் பயணத்தில் இணைந்து செல்கின்ற மாற்கு சில நாள்களில் அவரிடமிருந்து விலகி எருசலேம் வருகிறார். மீண்டும் அவர் பவுலுடன் இணைய முயன்றபோது பவுல் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இரண்டாம் தூதுரைப் பயணத்திலும் அவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால், திமொத்தேயுவுக்கு எழுதுகிற திருமடலில், 'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்குவை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர்' (காண். 2 திமொ 4:11) என்று பவுல் மாற்குவைப் பற்றி நற்சான்று கூறுகிறார். தனிப்பட்ட விடயமோ, அல்லது உடல்நலக்குறைவோ, அல்லது புரிதலின்மையோ எதனால் மாற்கு பவுலிடமிருந்து பிரிந்துசெல்கிறார் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், மீண்டும் பவுல் தனக்காக ஏங்கும் அளவுக்கு மாற்கு நடந்துகொள்கிறார். வாழ்வின் முதல் வாய்ப்புகள் நம்மை விட்டுப் போகும்போது, அல்லது நாம் அறிந்தோ அறியாமலோ அவற்றை நிராகரிக்கும்போது நாம் கவலைப்படத் தேவையில்லை. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. எல்லாம் ஒரு நாள் சரி செய்யப்படும்.

(ஆ) செயல்பாடு

மாற்கு நற்செய்தி 'கர்ம மார்கா' (செயல்வழி மீட்பு) என்னும் கொள்கையைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பர் ஆய்வாளர்கள். ஏனெனில், இயேசு செயல்கள் ஆற்றிக்கொண்டே இருப்பார் மாற்கு நற்செய்தியில். இயேசுவின் சொற்கள் குறைவாக இருக்கும். ஆனால், செயல்கள் அதிகமாக இருக்கும். இயேசு நிறைய நடப்பார், நிறைய நபர்களைச் சந்திப்பார், நிறைய வல்ல செயல்கள் செய்வார். காலை, மாலை என இயேசுவின் வாழ்வு செயல்களால் நிறைந்திருக்கும். இச்செயல்களை இயேசு தொடர்ந்து செய்துகொண்டேயிருப்பார். இரணடு விடயங்கள் இங்கே தெளிவாகின்றன: ஒன்று, நம் சொற்கள் அல்ல, மாறாக, நம் செயல்களே நாம் யார் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டுகின்றன. ஆக, சொற்கள் குறைத்து செயல்கள் வளர்ப்பது நலம். இரண்டு, நாம் தொடர்ந்து செய்யும் செயல்கள் நம் கட்டுக்குள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி யோசித்து நம் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்கத் தேவையில்லை. ஆக, நிறைய தொடர் செயல்களை (ஆங்கிலத்தின், 'ரொட்டின்') வளர்த்துக்கொள்வது நல்லது.

(இ) உடனே

'உடனே' என்னும் சொல்லாடல் மாற்கு நற்செய்தியில் 41 முறை பயன்படுத்தப்படுகிறது. இயேசு உடனே படகேறினார், உடனே அவர்களை அழைத்தார், அவர்கள் உடனே அவரைப் பின்பற்றினார்கள் என அனைத்துச் செயல்களும் 'உடனடியாக' (ஆங்கிலத்தில், 'இம்மீடியட்லி') நடந்தேறுவதாகப் பதிவு செய்கிறார் மாற்கு. இயேசு செயலாற்றுபவர் மட்டுமல்ல, மாறாக, உடனே செயலாற்றுபவர். மாற்கு நற்செய்தியை எழுதிய காலத்தில் உலக முடிவு (கிரேக்கத்தில், 'பருஸியா') உடனடியாக நிகழவிருப்பதாக மக்கள் எதிர்நோக்கியிருந்ததால், மாற்குவும் அதே வேகத்தை தன் நற்செய்தியில் பிரதிபலித்திருக்கலாம். உடனே செயலாற்றுதல் ஒரு நல்ல பண்பு. காலதாமதம், தள்ளிப்போடுதல் போன்றவை இதனால் தவிர்க்கப்படுகின்றன. குறிப்பாக, அதீத சிந்தனை தவிர்க்கப்படுகிறது.

(ஈ) நற்செய்தி என்னும் இலக்கியக்கூறு

'கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்' (மாற் 1:1) என்று தன் நூலைத் தொடங்குகிறார் மாற்கு. இங்கே 'நற்செய்தி' (கிரேக்கத்தில், 'இவாங்கெலியோன்') என்னும் புதிய சொல்லை, இலக்கியக்கூற்றைப் பயன்படுத்துகிறார் மாற்கு. அதாவது, முழுவதும் வரலாறு அல்ல, அதே வேளையில் முழுவதும் கதையும் அல்ல. மாறாக, வாசிப்பவர் தான் வாசிப்பதற்கு பதிலிறுப்பு செய்யத் தூண்டும் ஓர் இலக்கிய வடிவம். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வாசிப்பு ஒரு வரலாற்று வாசிப்பாகவோ, அல்லது கதைகள் வாசிப்பாகவோ அமைய முடியாது. வாசிப்பின் இறுதியில், 'இந்த இயேசு எனக்கு யார்?' என்னும் கேள்வியை வாசகர் எழுப்பி, அதற்கு விடையையும் காணவேண்டும்.

(உ) துன்பம் என்னும் வாழ்வியல் எதார்த்தம்

மாற்கு நற்செய்தி முழுவதும் துன்பம் இழையோடி நிற்கிறது. இயேசு கிறிஸ்து துன்புறும் ஊழியனாகக் காட்டப்படுகின்றார். மாற்கு (மற்றும் பேதுரு) குழுமம் பல துன்பங்களை எதிர்கொண்டது (காண். முதல் வாசகம்). துன்பங்களால் வருந்தி நின்ற குழுமத்திற்கு, நம் தலைவராம் இயேசுவும் நம் நிலையில்தான் இருந்தார் என்று சொல்வதன் வழியாக, அவர்களுக்கு ஆறுதல்கூறி, எதிர்நோக்கு வழங்குகிறார் மாற்கு. நம் ஆண்டவராகிய இயேசு நம் துன்பங்களில் பங்கேற்றவர் என்னும் செய்தி நமக்கு வலிமை தருகிறது.

(ஊ) மெசியா ரகசியம்

'இயேசு யார்?' என்னும் கேள்வி மாற்கு நற்செய்தியின் முதல் பகுதியில் மறைபொருளாகவே இருக்கும். இறுதி வரை இயேசு மெசியா என்னும் இரகசியம் காப்பாற்றப்படும். அதாவது, மறைபொருளாகவே அதை நகர்த்துகிறார் இயேசு. இதுதான் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தூரம். அந்த தூரமே அவர்மேல் பயத்தையும் வியப்பையும் நமக்குத் தருகிறது. பயமும் வியப்பும் இருக்கும் வரைதான் கடவுள் கடவுளாக நிற்கிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் இறுதிச் சொற்களை வாசிக்கிறோம். இயேசு விண்ணேறி கடவுளின் வலப்பக்கம் அமர்கிறார். ஆனால், அங்கிருந்து கீழே திருத்தூதர்களின் சொற்களைச் செயல்களால் உறுதிப்படுத்துகிறார். மறைந்தவாறே தம்மை வெளிப்படுத்துகிறார் கடவுள். இந்த வெளிப்படுத்தலுக்கு நாம் தரும் பதிலிறுப்பே நம்பிக்கை.

நிற்க.

இன்றைய நாளில் மாற்கு நற்செய்தியின் சில பகுதிகளையாவது வாசிக்க முயற்சி செய்வோம்.


Sunday, April 23, 2023

தேடலின் நோக்கத்தைச் சரிசெய்தல்

இன்றைய இறைமொழி

திங்கள், 24 ஏப்ரல் 2023

உயிர்ப்புக் காலம் மூன்றாம் வாரம்

திப 6:8-15. யோவா 6:22-29.

தேடலின் நோக்கத்தைச் சரிசெய்தல்

ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு இயேசு பலுகச் செய்த நிகழ்வுக்குப் பின்னர் நடந்த நிகழ்வு ஒன்றை நம் கண்முன் கொண்டுவருகிறது நற்செய்தி வாசகம். இயேசுவைத் தேடி மக்கள் கூட்டம் அவர் பின்னால் செல்கிறது. அவர்களுடைய தேடலின் நோக்கம் தவறானது என்பதை இயேசு அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார். அவர்களுக்கு ஆன்மிக நிறைவுதரும் மெசியாவைத் தேடுவதற்குப் பதிலாக, அவர்களுடைய வயிறுகளுக்கு உணவு தரும் போதகரையே அவர்கள் தேடினார்கள். கடவுளால் அனுப்பப்பட்டவரை ஏற்றுக்கொள்தலே சரியான செயல் என எடுத்துரைக்கிறார் இயேசு.

இப்பகுதிக்கு விளக்கவுரை எழுதுகிற புனித அகுஸ்தினார், 'என்னே மானுடத்தின் இரங்கத்தக்க நிலை! ஆன்மாவுக்கு ஊட்டம் தருகிறவரிடம், எங்கள் வயிற்றுக்கு உணவளியும் என வெறும் தட்டை ஏந்தி நிற்கிறது!' என்கிறார்.

(அ) மாற்றத்தின் அறிகுறி

நிகழ்வின் தொடக்கத்தில், 'ரபி, எப்போது இங்கு வந்தீர்?' எனக் கேட்கிற மக்கள் கூட்டம், இறுதியில், இயேசுவின் சொற்களைக் கேட்ட பின்னர், 'எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்கிறது. இதுவே மாற்றத்தின் அறிகுறியாக இருக்கிறது.

(ஆ) நிலைவாழ்வுதரும் அழியாத உணவு

இரு வகை உணவு பற்றிப் பேசுகிறார் இயேசு. உடலுக்குப் பயன்படும் ஆனால் அழிந்துபோகும் உணவு. ஆன்மாவுக்குப் பயன்படும் நிலையான உணவு. யோவான் நற்செய்தியில் நிலைத்திருத்தல் என்பது இயேசுவோடு இணைந்திருத்தலைக் குறிக்கிறது. இயேசுவை விட்டுத் தொலைவில் செல்லும் அனைத்தும் அழியக்கூடியதாக இருக்கிறது.

(இ) கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள்

மீட்பு என்பது யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில் கடவுளின் கொடையும் மனிதர்களின் செயலுமாக இருக்கிறது. இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்தல் என்னும் செயலின் வழியாகவே ஒருவர் மீட்பு பெறுகிறார். 

முதல் வாசகத்தில், தலைமைச் சங்கம் மற்றும் யூதர்கள் திருத்தொண்டர் ஸ்தேவானின் சொற்களுக்கு அளிக்கும் பதிலிறுப்பு பற்றி வாசிக்கிறோம். ஸ்தேவானின் முகம் வானதூதரின் முகம் போல ஒளிர்கிறது என்கிறார்கள் அவர்கள்.

கடவுளைத் தெரிந்துகொள்வதும் அவருடன் நிலைத்திருப்பதும் கடினமான செயல். அர்ப்பணமும் விடாமுயற்சியும் அதற்கு அவசியம்.


Friday, April 21, 2023

திசைதிரும்பிய எதிர்பார்ப்புக்கள்

23 ஏப்ரல் 2023 உயிர்ப்புக் காலம் 3ஆம் ஞாயிறு

திருத்தூதர் பணி 2:14,22-33 1 பேதுரு 1:17-21 லூக்கா 24:13-35

திசைதிரும்பிய எதிர்பார்ப்புக்கள்

'எதிர்பார்ப்பு' இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? என்ற ஒரு கேள்வியை நாம் எழுப்பும் அதே நேரத்தில், 'எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை' என்று நம் மனம் சொல்லி முடிக்கிறது.

பெக்கி மற்றும் கான் தம்பதியினர் திருமணம் முடிந்து இருபது ஆண்டுகள் கழித்து, பெக்கி ஒரு நாள் தன் கணவன் கானிடம், 'நான் உங்களைப் பற்றிய எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக்கொள்ளலாம் ன நினைக்கிறேன்!' என்கிறாள். அதற்கு கான் அவளிடம், திருமணத்தில் வரும் பெரும்பாலான பிரச்சினைகளையும், மகிழ்ச்சியின்மையும் மூன்று வகையான எதிர்பார்ப்புக்களிலிருந்து வருகிறது என்கிறார்: 

(அ) நியாயமற்ற எதிர்பார்ப்பு. திருமணம் முடிக்கும்போது குடும்பத்தில் நிலவிய பணக்குறையை அறிந்த பெக்கி, கானிடம், தினமும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலை செய்யுமாறு சொல்கிறாள். ஆனால் ஒன்றிரண்டு மாதங்களில் அவனிடம், 'நீங்கள் என்னுடன் நேரம் செலவழிப்பதே இல்லை. வேலை, வேலை என்று இருக்கிறீர்கள்' என்று குறைபட்டுக்கொள்கிறாள். இது பெக்கியின் நியாயமற்ற எதிர்பார்ப்பு. ஏனெனில், கான் ஒரே நேரத்தில் வேலைக்குச் செல்லவும், வீட்டில் இருக்கவும் முடியாது. 

(ஆ) தெளிவற்ற எதிர்பார்ப்பு. பத்தாவது திருமண நாளில் பெக்கிக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்புகிறான் கான். என்ன வேண்டும் எனக் கேட்கின்றான். அவள் சேலை, மோதிரம், நெக்லஸ் என நாளுக்கு ஒன்று சொல்கிறாள். குழம்பிப் போகிற கான் அவளுக்கு அழகான சேலை எடுத்துக்கொடுக்கிறான். அது அவளுக்குப் பிடிக்கும் என நினைத்து, ஆவலுடன் அதை அவளிடம் நீட்ட, 'ஐயோ! இதே மாடல், கலர் என்னிடம் ஏற்கனவே இருக்கிறதே!' என அழத் தொடங்குகிறாள் பெக்கி. இங்கே, பெக்கியின் எதிர்பார்ப்பு தெளிவற்றதாய் இருந்ததால் கான் அதை நிறைவேற்ற முடியவில்லை.

(இ) நிறைவேறாத எதிர்பார்ப்பு. சில நேரங்களில் எதிர்ப்பார்ப்புகள் நியாயமானதாகவும், தெளிவானதாகவும் இருக்கும். ஆனால், நிறைவேறாமலேயே போய்விடும். எடுத்துக்காட்டாக, இவர்கள் காதல் செய்யும்போது இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், திருமணத்திற்குப் பின் நடந்த ஒரு விபத்தினால் கருத்தரித்தல் பாதிக்கப்படுகிறது. ஆக, அங்கே இவர்கள் இருவரின் எதிர்பார்ப்புக்களும் நிறைவேறாமலேயே போய்விடுகின்றன. 

இவற்றை சொல்லி முடித்த கான், இனி 'எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக்கொள்ளலாம்' என நினைக்கிற பெக்கியைப் பாராட்டுகிறான்.

கானின் இந்தப் பட்டியலோடு நாம் இன்னும் மூன்று எதிர்பார்ப்புக்களை இணைத்துக்கொள்ளலாம்:

(ஈ) அதீத எதிர்பார்ப்பு. அதாவது, ஒருவருடைய ஆற்றலை அல்லது திறனை நாம் அறிந்தாலும் அதைவிட அதிகம் எதிர்பார்த்தல். இது நபர்களுக்கும் பொருந்தும், பொருள்களுக்கும் பொருந்தும். நினைவுத்திறன் குறைவாக உள்ள என்னுடைய மாணவர் தேர்வில் அனைத்தையும் நினைவுகூர்ந்து எழுதுவார் என நினைப்பதும், நம்முடைய குட்டிக் கார் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும் என நினைப்பதும் அதீத எதிர்பார்ப்புக்களே.

(உ) தாழ்வான எதிர்பார்ப்பு. இது, அதீத எதிர்பார்ப்புக்கு முரணானது. ஒருவரின் ஆற்றலை அறியாத நாம் மிகவும் தாழ்வாக எதிர்பார்த்தல். சில நேரங்களில் இது ஆச்சர்யத்தையும் பல நேரங்களில் அதிர்ச்சியையும் கொடுக்கும். எடுத்துக்காட்டாக, பெலிஸ்தியன் கோலியாத்தைக் கொல்வதற்காக ஒரு கவனுடனும் சில கூழாங்கற்களோடும் அவரை எதிர்கொள்கின்ற தாவீது தன்னிடம் வருவதைப் பார்க்கின்ற கோலியாத், தாவீதிடம் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்பு மிகவும் தாழ்வானது. விளைவாக, கோலியாத்து தன்னுடைய தாழ்வான எதிர்பார்ப்பாலேயே இறந்துவிடுகிறார்.

(உ) தவறான எதிர்பார்ப்பு. இது ஏறக்குறைய நியாயமயற்ற எதிர்பார்ப்பை ஒத்திருக்கிறது. பொருந்தாத ஒன்றை எதிர்பார்ப்பது. கோழி முட்டையை அடைகாக்க வைத்துவிட்டு, மயில் குஞ்சுகளை எதிர்பார்ப்பது தவறான எதிர்பார்ப்பு. 

இவ்வளவு பெரிய முன்னுரை எதற்கு?

'நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலே மீட்கப் போகிறார் என நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்.' 

'... நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்' - இப்படித்தான் தங்களுடைய எம்மாவு வழிப்பாதையில் தங்களோடு கரம் கோர்த்த முன்பின் தெரியாத வழிப்போக்கனின் கேள்விக்கு விடையளிக்கின்றார் கிளயோப்பா.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 24:13-35) எம்மாவு நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருகிறது.

'நாசரேத்து இயேசு இஸ்ரயேலை மீட்கப் போகிறார்' என சீடர்கள் எதிர்பார்த்ததை மேற்காணும் பட்டியலில் எந்த வகையில் சேர்க்கலாம்?

நியாயமற்ற எதிர்பார்ப்பு - ஏனெனில், இறைவாக்கினராக, வல்ல செயல்கள் செய்தவர் உரோமை அரசை எதிர்த்துச் சண்டையிடுவார் என நினைத்தது.

தெளிவற்ற எதிர்பார்ப்பு - இயேசுதரும் விடுதலை அல்லது மீட்பு என்பது அரசியல்சார் நிகழ்வா அல்லது ஆன்மீகம்சார் நிகழ்வா என்ற தெளிவில்லாமல் இருக்கின்றனர் சீடர்கள்.

நிறைவேறாத எதிர்பார்ப்பு - இவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆகவே, எருசலேமை விட்டு எம்மாவு நோக்கிச் செல்கின்றனர்.

மேலும், இவர்களுடைய எதிர்பார்ப்பை அதீத மற்றும் தவறான எதிர்பார்ப்பு வகையிலும் சேர்க்க முடியும்.

இப்படியாக, இங்குமங்கும் அலைக்கழிக்கப்பட்ட அவர்களின் எதிர்பார்ப்புக்களின் திசையைத் திருப்புகின்றார் இயேசு. விளைவாக, அவர்கள் தாங்கள் எங்கிருந்து வந்தார்களோ அதே திசையை நோக்கித் திரும்பிச் செல்ல ஆரம்பிக்கிறார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்புகள் நியாயமற்றவை, தெளிவற்றவை, அதீதமானவை என நினைக்கின்ற இயேசு மறைநூலின் உதவியுடன் அவர்களுக்கு விளக்குகின்றார். இறுதியில், உணவு அருந்தும்போது அவர்கள் கண்கள் திறக்கப்பட்ட அந்த நேரத்தில், தங்களுடைய எதிர்பார்ப்புக்கள் தவறானவை என உணர்கின்றனர்: 'வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?'

சீடர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதால் நடந்த சிலவற்றை இன்றைய நற்செய்தி நமக்குச் சுட்டிக்காட்டுகிறது:

அ. எதிர்திசை நோக்கிச் செல்கின்றனர்

சீடர்கள் எம்மாவு நோக்கிச் செல்கின்றனர். அவர்களுடைய இல்லம் அங்கே இருந்ததா அல்லது உறவினர்கள் அல்லது நண்பர்களின் இல்லம் அங்கே இருந்ததா என்று தெரியவில்லை. எருசலேமில் இருந்தால் தங்களுக்கும் ஆபத்து என்று தப்பி ஓடுகிறார்களா அல்லது இனி இங்கே இருந்து பயன் ஒன்றுமில்லை, எல்லாம் முடிந்துவிட்டது என்று தப்பி ஓடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், எருசலேமை தங்கள் முதுகின்பின் தள்ளி எதிர்திசையில் நடக்கின்றனர். இனி இங்கே வரவே கூடாது என்பதுதான் அவர்களுடைய எண்ண ஓட்டமாக இருந்திருக்கும்.

ஆ. நடந்து செல்கின்றனர்

ஏறத்தாழ 11 கிமீ நடந்துசெல்ல முயல்கின்றனர். ஒன்று, அவர்களால் கழுதை அல்லது குதிரை வாகனம் ஏற்பாடு செய்ய முடியாமல் போயிருக்கலாம். அல்லது, அதை எல்லாம் தேடாமல், ஓட்டமும் நடையுமாக யார் துணையுமின்றி ஓடிவிட முயல்கின்றார்கள். மனித விரக்திக்கும் ஆற்றல் உண்டு என்பது இதற்குச் சான்று.

இ. உரையாடிக்கொண்டு செல்கின்றனர்

அமைதியற்ற உள்ளம் நிறையப் பேசும். தாங்கள் இயேசுவால் ஏமாற்றப்பட்டதைப் பேசியே தீர்த்துக்கொள்ள நினைக்கின்றனர். ஊர் போய்ச் சேரும் வரை நன்றாகப் பேசிவிட்டு, உள்ளத்தில் உள்ளதை எல்லாம் கொட்டிவிட்டு, போய் ஒரு நல்ல குளியல் போட்டு, இயேசுவைத் தலைமுழுகி விட வேண்டும் என்பது இவர்களின் எண்ணமாக இருந்திருக்கலாம்.

ஈ. முகவாட்டம்

முன்பின் தெரியாத மற்றொரு வழிப்போக்கன் கேள்வி கேட்டாலும், தங்களுடைய உள்ளுணர்வுகளை மறைக்கத் தெரியாமல், அல்லது மறைக்க முடியாமல் நிற்கின்றனர் அப்பாவி சீடர்கள். அவர்களின் முகவாட்டம் அவர்கள் அடைந்த ஏமாற்றத்தின் அறிகுறி.

உ. கோபம்

'எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் நிகழ்ந்தவை தெரியாதோ!' எனக் கோபம் கொள்கின்றனர். வழக்கமாக, ஏமாந்து போயிருப்பவர் எல்லார் மேலும் கோபப்படுவார். அதுதான் இங்கே நிகழ்கிறது.

ஊ. வரவேற்பு

இறுதியாக, ஏமாந்த உள்ளம் தன்னுடைய கதையைக் கேட்ட ஒருவரை உடனே அரவணைத்துக்கொள்ளும். அப்படித்தான் இங்கேயும் நடக்கிறது. முன்பின் தெரியாத ஒருவரை தங்களோடு இரவில் தங்குவதற்கு அழைக்கும் அளவிற்கு அவர்களுடைய மனம் சோர்ந்து போயிருக்கிறது. முன்பின் தெரியாத இந்த நபர் இரவில் கத்தியை எடுத்துக் குத்தினால் என்ன நடக்கும்? என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அடைந்த ஏமாற்றம் இந்தக் கேள்வியை அப்புறப்படுத்திவிடுகிறது.

அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாததால் அவர்கள் பெற்ற இந்த ஆறு உணர்வுகளையும் செயல்களையும் இயேசுவின் ஒற்றைச் செயல் புரட்டிப்போட்டுவிடுகிறது. அப்பத்தைப் பிட்கும்போது இயேசுவைக் கண்டுகொள்கின்றார்கள்.

'அவர்கள் அந்நேரமே திரும்பிப் போனார்கள்' எனப் பதிவு செய்கிறார் லூக்கா.

அதாவது, உணவருந்தி முடித்த அந்த இரவிலேயே, இரவோடு இரவாக எருசலேம் நோக்கித் திரும்புகிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பின் திசையைத் திருப்பிவிடுகிறார் இயேசு. 

அவர்களின் இந்த விரைவான பயணத்தில் அவர்கள் தங்களின் மனச்சோர்வு, விரக்தி, ஏமாற்றம் அனைத்தையும் மறந்துவிடுகிறார்கள். 'இயேசு இருக்கிறார்' என்ற அனுபவம் அவர்களின் எதிர்பார்ப்பின் திசையைத் திருப்பிவிடுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 2:14,22-33), பெந்தகோஸ்தே நிகழ்வுக்குப் பின் பேதுரு எருசலேமில் ஆற்றிய பேருரையின் ஒரு பகுதியை வாசிக்கிறோம். தாவீது அரசரின் திருப்பாடல் வரிகளை (காண். திபா 32:11, 2 சாமு 7:12,13) மேற்கோள் காட்டுகின்ற பேதுரு, அவர் தன்னைப் பற்றி அல்ல, மாறாக, தனக்குப் பின் வரும் மெசியா பற்றி முன்னுரைத்திருப்பதாக எழுதுகின்றார். பேதுருவின் உரையின் சாரம் என்னவென்றால், தன்னுடைய சமகாலத்து யூதர்களின் தாழ்வான எதிர்பார்ப்பை இயேசுவின் உயிர்ப்பு தவிடு பொடியாக்கியிருக்கிறது என்பதுதான். இயேசுவைக் கொன்றுவிடலாம் என்பது யூதர்களின் எதிர்பார்ப்பாக இருந்து, அவர்கள் இயேசுவைக் கொல்லவும் செய்கின்றனர். ஆனால், அவருடைய உடல் படுகுழியைக் காணவிடாமல் கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்கிறார். பாதாளத்தைப் பார்த்துக்கொண்டு தங்களின் எதிர்பவறு hர்ப்பு நிறைவேறிவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்த யூதர்களின் திசையைத் திருப்பி வான் நோக்கிப் பார்க்க அவர்களை அழைக்கின்றார் பேதுரு.

இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 1:17-21), பேதுருவின் கடந்த வார அறிவுரைப் பகுதியின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இயேசுவின்மேல் நம்பிக்கை கொண்டதால் தாங்கள் அனுபவித்த பல்வேறு துன்பங்களால் மனம் துவண்டு போன மக்களுக்கு ஆறுதல் சொல்லும் பேதுரு, அவர்கள் பெற்ற மீட்பின் மேன்மையை - 'விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை பொன்னும் வெள்ளியும் அன்று, கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தம்' - எடுத்துக்காட்டி, கீழானவற்றிலிருந்து தங்கள் முகத்தை மேலானது நோக்கித் திருப்ப அழைக்கின்றார்.

இறுதியாக,

'நீ விழுந்து கிடக்கும் இடத்தை அல்ல, நீ வழுக்கிய இடத்தையே கவனிக்க வேண்டும்' என்பது பழமொழி. தங்களுடைய எதிர்பார்ப்புகளில், எதிர்பார்ப்புகளால் வழுக்கிய சீடர்களின் திசையைத் திருப்புகின்றனர் இயேசுவும், பேதுருவும். 

திசைதிரும்பிய எதிர்பார்ப்புகள் புதிய பயணத்தின் மைல்கற்கள்!


Tuesday, April 18, 2023

இனிய ஈரேழு ஆண்டுகள்

என் குருத்துவ அருள்பொழிவு நாள்

இனிய ஈரேழு ஆண்டுகள்

இன்று என் குருத்துவ அருள்பொழிவு நாள்.

ஏப்ரல் 19, 2009ஆம் ஆண்டு மதுரை புனித பிரிட்டோ மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், என் நண்பர்கள் அருள்பணியாளர்கள் டைட்டஸ், வரன், மதன் பாபு, லாரன்ஸ், இஞ்ஞாசி அற்புதராஜ், திருத்துவராஜ், பிரின்ஸ் ஆகியோரோடு இணைந்து, மதுரை உயர்மறைமாவட்ட மேனாள் பேராயர் மேதகு பீட்டர் ஃபெர்ணான்டோ அவர்களால் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டேன்.

3 ஆண்டுகள் உதவிப் பங்குப் பணியாளராக (எல்லீஸ் நகர், ஞானஒளிவுபுரம், தேனி),

5 ஆண்டுகள் உயர்கல்வி (உரோமை, புனே)

1 ஆண்டு பேராயர் அவர்களின் செயலராக (மதுரை)

3 ஆண்டுகள் இறையியல் பேராசிரியராக (திருச்சி)

2 ஆண்டுகள் இந்திய ஆயர் பேரவைப் பணியில் (பெங்களூர்)

என 14 ஆண்டு மைல் கற்கள் கடந்து நிற்கின்றேன்.

விவிலியத்தில் 14 (இருமுறை 7, நிறைவுக்கு மேல் நிறைவு) என்ற எண் ஆன்மிக நிறைவைக் குறிக்கிறது. இயேசுவின் தலைமுறை அட்டவணையை மத்தேயு 3 முறை 14 எனப் பிரிக்கிறார். எண் 14 தாவீது அரசரைக் குறிக்கிறது. நீதிமொழிகள் நூலில், 'ஆண்டவர்மேல் கொள்ளும் அச்சம்' என்னும் சொல்லாடல் 14 முறை பயன்படுத்தப்படுகிறது. 14 என்ற எண் எபிரேயத்தில் (யோத்-தாலத்) மீட்பு அல்லது வெற்றி அல்லது விடுதலையைக் குறிப்பதாக 22 முறை விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. யாக்கோபு 14 ஆண்டுகள் தன் தாய்மாமன் லாபான் இல்லத்தில் பணியாற்றுகிறார். தன் பணியிலும் அன்பிலும் நிறைவுகாண்கிறார். 14ஆம் ஆண்டின் இறுதியில் ஆடவரோடு போராடி, வென்று, 'இஸ்ரயேல்' என்னும் புதிய பெயர் பெறுகிறார். யாக்கோபுக்கு அது ஒரு புதிய தொடக்கம். அன்றுமுதல் அவர் தன் வாழ்வின் அமைதியைக் கண்டுகொள்கிறார். முதல் மாதத்தின் 14ஆம் நாள் ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கிறார்.

இந்த ஈரேழு ஆண்டுகள் நிறைவில், 'விதைக்கிறவன்' (காண். லூக் 8:5-8) என்னும் விவிலியச் சொல்லோவியத்துடன் என்னையே பொருத்திப் பார்க்கிறேன்.

சில இடங்களில் சில நேரங்களில் என் பணி வழியோரம் விழுந்த விதைபோல இருந்திருக்கிறது. அந்தப் பணி மற்றவர்களின் கால்களில் மிதிபட்டது. அல்லது வானத்துப் பறவை வந்து அதை விழுங்கிவிட்டது. என் பணியை விடுத்து, என் முதன்மைகளை விடுத்து நான் பணியாற்றிய நேரங்களில் அவ்வாறு நடந்தது. 

சில இடங்களில் சில நேரங்களில் பாறைமீது விழுந்த விதைபோல இருந்தது. வேகமாக முளைத்தது. ஆனால், ஈரமில்லாததால் கருகிப் போனது. நான் எழுதிய நூல்கள், ஆற்றிய உரைகள், எடுத்த வகுப்புகள், ஏற்படுத்திய நட்புறவு ஆகியவை இந்த வகையில் இருப்பதாக உணர்கிறேன். வேகமாக உருவெடுத்த இவை யாவும் வேகமாகவே மறைந்து போயின. இன்னும் கொஞ்சம் ஈரம் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது!

சில இடங்களில் சில நேரங்களில் என் பணி முட்செடிகள் நடுவே விழுந்தது. கூடவே வளர்ந்த முட்செடிகள் பணியை நெருக்கிவிட்டன. முட்செடிகளின் நிழல் விதையை வளரவிடவில்லை. முட்செடிகள் விதையின் ஊட்டத்தில் பங்குபோட்டுக்கொண்டன.

சில இடங்களில் சில நேரங்களில் என் பணி நல்ல நிலத்தில் விழுந்தது. முப்பது, அறுபது, நூறு மடங்கு பலன் கொடுத்தன. முப்பது மடங்கு மற்றவர்களுக்கும், அறுபது மடங்கு எனக்கு நெருக்கமானவர்களுக்கும், நூறு மடங்கு எனக்கும் பலன் கொடுத்தன. உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு பணிக்குப் பின்னும் தன்னலம்தானே இருக்கிறது. 

பலன் விதையை, அல்லது நிலத்தைப் பொருத்து அல்ல, விதைக்கிறவனைப் பொருத்தே இருக்கிறது என்பதையும் உணர்கிறேன். விதைக்கிறவன் சற்றே நிதானமாக, பொறுமையாக, தேர்ந்து தெளிந்து விதைத்தால் அனைத்து விதைகளும் நல்ல நிலத்தில் விழும். ஈசாக்கு போல நூறு மடங்கு பலனை அவன் பெறுவான் (காண். தொநூ 26:12).

'விதைத்தல்', 'விதைக்கிறவன்' பற்றிய விவிலியப் பதிவுகளை இன்று எனக்கு நானே நினைவூட்டிக்கொள்கிறேன்:

'காலையில் விதையைத் தெளி. மாலையிலும் அப்படியே செய். அதுவோ இதுவோ எது பயன்தரும் என்று உன்னால் கூறமுடியாது. ஒருவேளை இரண்டுமே நல்விளைச்சலைத் தரலாம்.' (சஉ 11:6)

'ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்.' (கலா 6:7)

'விதை இறைவார்த்தை.' (லூக் 8:11)

'குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார்.' (2 கொரி 9:6)

'விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச் செய்து அறச்செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.' (2 கொரி 9:10)

நிற்க.

'அவரோடு' (மாற் 3:14) என்னும் விருதுவாக்குடன் தொடங்கிய என் அருள்பணி வாழ்வுப் பணி, 'அவரில்' நிறைவுகாணும் வரை, விதையின், நிலத்தின், பயனின் உரிமையாளரோடு இணைந்து விதைக்கிறவனாகத் தொடர எனக்காக இறைவேண்டல் செய்யுங்கள்.

நன்றி.


Wednesday, April 5, 2023

இறுதிவரையும் அன்பு செலுத்தினார்!

6 ஏப்ரல் 2023 ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி

விடுதலைப் பயணம் 12:1-8,11-14 1 கொரிந்தியர் 11:23-26 யோவான் 13:1-15

இறுதிவரையும் அன்பு செலுத்தினார்!

இன்று நாம் ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலியைக் கொண்டாடுகிறோம். இன்றைய நாள் பெரிய வியாழன் என்றும், கட்டளை வியாழன் என்றும் அழைக்கப்படுகிறது. 'இது என் உடல், இது என் இரத்தம்' என்று சொல்லி, இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதை, 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்று பணிக்குருத்துவத்தை ஏற்படுத்தியதை, 'நீங்களும் ஒருவர் மற்றவருடைய பாதங்களைக் கழுவ வேண்டும்' என்று பணிவிடை செய்வதை முதன்மைப்படுத்தியதை, 'நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்று அன்புக் கட்டளை கொடுத்ததை இன்று நாம் நினைவுகூர்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 13:1-15) வரும் ஒரு அருள்வாக்கியத்தை நம்முடைய சிந்தனையின் மையப்பொருளாக எடுத்துக்கொள்வோம்: 'உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்' (யோவா 13:1).

'தமக்குரியோர்' என்றால் யார்?

இயேசு 'தமக்குரியோர்மேல்' மட்டும்தான் அன்பு செலுத்தினாரா? எல்லாரையும் அன்பு செலுத்தவில்லையா? 'பகைவருக்கும் அன்பு காட்டுங்கள்' (காண். மத் 5:44) என்று சொன்னவர் எப்படி 'தமக்குரியோரை' மட்டும் அன்பு செய்ய முடியும்? என்று கேட்கத் தோன்றலாம். யோவான் நற்செய்தியாளரைப் பொருத்தவரையில் 'தமக்குரியோர்' என்பவர்கள் உலகில் உள்ள அனைவரையும் குறிக்கிறது. ஏனெனில், 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' (காண். யோவா 1:11) என்று முன்னுரைப் பாடலில் எழுதுகிறார் யோவான். இங்கே, 'தமக்குரியோர்' என்பது இயேசுவால் தெரிவு செய்யப்பட்டு அன்பு செய்யப்பட்டவர்களை அல்ல, மாறாக, எல்லாரையும் குறிக்கிறது.

'இறுதிவரை' என்னும் சொல்லாடலின் பொருள் என்ன? 

இரண்டு நிலைகளில் பொருள் கொள்ளலாம்: ஒன்று, நேரம்-இடம் அடிப்படையில். அதாவது, ஒரு மாணவர் இறுதிவரை தேர்வு எழுதினார் என்றால், தேர்வு முடிகின்ற ஒரு மணி வரை எழுதினார் என்று பொருள். அல்லது, இந்த நீள அறையை முதலிலிருந்து இறுதிவரை அளந்து கொடுங்கள் என்று வண்ணம் பூசுபவர் கேட்டால், அது வெளி அல்லது இடம்சார் அளவில் கடைசி என்று பொருள்கொள்ளப்படுகிறது. இரண்டாவதாக, பகுதி-முழுமை அடிப்படையில். இறுதிச் சொட்டு இரத்தம் வரை அவர் நமக்காகச் சிந்தினார் என்று சொல்லும் வாக்கியத்தில், இறுதி என்பது முழுமையைக் குறிக்கிறது.

நம் பாடத்தில், 'இறுதிவரை' என்பதை மேற்காணும் இரண்டு நிலைகளிலும் புரிந்துகொள்ள முடியும்: (அ) நேர அடிப்படையில் இயேசு, தொடக்கமுதல் இறுதிவரை தமக்குரியவர்களை அன்பு செய்கின்றார். (ஆ) பகுதி-முழுமை அடிப்படையில், இயேசு தன்னையே முழுமையாகக் கொடுத்து இறுதிவரை அன்பு செய்கின்றார்.

'இறுதிவரை' என்ற சொல்லாடல் நேர அடிப்படையில் பயன்படுத்தப்படும் இன்னொரு நிகழ்வு, 'கானாவூர் திருமணம்.' அங்கே, பந்தி மேற்பார்வையாளர் மணமகனிடம், 'நீர் நல்ல இரசத்தை இதுவரை (இறுதிவரை) பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?' எனக் கேட்கின்றார்.

இயேசு தம் சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்வையும், கானாவூர் திருமணத்தில் அவர் நிகழ்த்திய முதல் அறிகுறியையும் சற்றே ஒப்பீடு செய்வோம்: (அ) இங்கே (பாதம் கழுவுவதில்) தன் நேரம் வந்துவிட்டது என இயேசு உணர்கிறார். அங்கே (கானாவில்) தன் நேரம் இன்னும் வரவில்லை என்கிறார். (ஆ) இங்கே தானே எழுகின்றார், களைகின்றார், கழுவுகின்றார். அங்கே மரியா அழைக்கின்றார், அறிவுறுத்துகின்றார், பணியாளர்கள் நிரப்புகின்றனர், பரிமாறுகின்றனர். (இ) இங்கே தண்ணீர் பாதங்களைத் தூய்மையாக்குகிறது. அங்கே தூய்மைச் சடங்கிற்கான தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. (ஈ) இங்கே தானே நீர் எடுத்துக் கழுவுகின்றார். அங்கே, 'மொண்டு போங்கள்' எனக் கட்டளையிடுகிறார் இயேசு. (உ) இங்கே சீடர்கள் (பேதுரு தவிர) அமைதி காக்கிறார்கள். அங்கே இயேசுவிடம் நம்பிக்கை கொள்கிறார்கள். (ஊ) இங்கே இறுதிவரை அன்பு செய்யும் இயேசு பாதம் கழுவுகிறார். அங்கே இறுதிவரை நல்ல இரசம் பரிமாறாமல் வைக்கப்படுகிறது. (எ) இங்கே பாதம் கழுவும் ஆண்டவரும் போதகராகவும் இருக்கிறார் இயேசு. அங்கே அறிகுறி நிகழ்த்தும் ஆண்டவராக இருக்கிறார். (ஏ) இங்கே தம் சீடர்களை மையமாக்குகின்றார். அங்கே இயேசு மையமாக இருக்கின்றார்.

இந்த ஒப்பீட்டில் ஒன்று தெளிவாகிறது. 'இறுதிவரை அன்பு செய்தல்' என்பது அறிகுறிகள் நிகழ்த்துவதில் அல்ல, போதனையில் அல்ல, மற்றவர்களுக்குக் கொடுக்கும் அறிவுரையில் அல்ல, மாறாக, பாதம் கழுவுதலில்தான் இருக்கிறது. 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 12:1-8,11-14) ஆண்டவராகிய கடவுள், மோசே வழியாக, இஸ்ரயேல் மக்களுக்கு முதல் பாஸ்கா விழாவுக்கான அறிவுரை வழங்குவதை வாசிக்கின்றோம். ஆண்டவர் தான் எகிப்து நாட்டில் நிகழ்த்தவிருக்கும் 'இறுதி' வல்லசெயலுக்கு முன், அவர்களுக்குத் தன் உடனிருப்பைக் காட்டுகின்றார். முதல் பாஸ்கா பூட்டிய அறைக்குள், இருளில் நடந்தேறுகிறது. அவர்கள் உண்ணும் ஆட்டின் இரத்தம் மட்டும் அவர்களுடைய கதவுநிலைகளில் பூசப்பட்டிருக்க, அவர்களைக் கடந்து செல்கிறார் கடவுள். மேலும், இப்போது அவர்களைக் கடந்து சென்று அவர்களை அழிக்கமால் விடுபவர், இறுதிவரை அவர்களோடு நடந்து செல்கிறார். இறுதிவரை அவர்களோடு ஆண்டவர் நடக்க வேண்டுமெனில், அவர்கள் இறுதிவரை ஆண்டவருக்குப் பணிபுரிய வேண்டும். மற்ற தெய்வங்களுக்கோ, சிலைகளுக்கோ பணிபுரிதல் கூடாது. ஆக, இறைவனின் இறுதிவரை உடனிருப்பை உறுதி செய்வது, இறுதிவரை பணிசெய்தலே. 

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 11:23-26), கொரிந்து நகர திருஅவையில் விளங்கிய பிரிவினைகளையும், நற்கருணைக் கொண்டாட்டத்தில் விளங்கிய பிறழ்வுகளையும் கண்டிக்கின்ற பவுல், இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, கூடிவருதலில் மையமாக இருக்க வேண்டியவர் இயேசுவே அன்றி, ஒருவர் மற்றவர் அல்லர் என எடுத்துரைக்கின்றார். ஏனெனில், இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர்கள் 'இறுதிவரை' அறிவிக்கிறார்கள். ஆக, அவர்களுடைய நற்கருணை பங்கேற்பு இயேசுவைப் பற்றிய அறிவிப்பாக 'இறுதிவரை' இருத்தல் வேண்டும்.

இறுதிவரை அன்பு செலுத்துதல் என்றால் என்ன?

இறுதிவரை அன்பு செலுத்துதலின் பொருளை, இயேசு, வெறும் வார்த்தைகளில் சொல்லாமல், ஒரே ஒரு செயலால் செய்து காட்டுகின்றார். அச்செயல் நான்கு நிலைகளில் நடந்தேறுகிறது.

1. அறிதல்

(அ) தந்தை அனைத்தையும் தன்னிடம் ஒப்படைத்துள்ளார், (ஆ) தான் கடவுளிடமிருந்து வந்தவர், (இ) தான் கடவுளிடம் திரும்பிச் செல்ல வேண்டும். இந்த மூன்றையும் அறிகின்றார் இயேசு. அறிதல் இல்லாமல் அன்பு செலுத்த இயலாது. இங்கே அறிதல் என்பது நாம் அன்பு செய்யும் அடுத்தவரை அறிதல் அல்ல. மாறாக, தன்னை அறிதல். இதையே திருத்தந்தை பிரான்சிஸ், 'கிறிஸ்து வாழ்கிறார்' என்னும் தன் திருத்தூது ஊக்கவுரையில், 'நான் யார்?' என்ற கேள்வியைவிட, 'நான் யாருக்காக?' என்ற கேள்வியை இளைஞர்கள் கேட்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். 'நான் யார்?' என்னும் அறிதல் என்னைத் தன்மையமாக்கி விடும். ஆனால், 'நான் யாருக்காக?' என்ற கேள்விதான் தன்னை பிறர்மையத்திற்கு நகர்த்தும். இயேசு தான் யாருக்காக என்பதை அறிகின்றார். 

இன்று, நாம் மற்றவர்களை அன்பு செய்வதில், என்னை நான் அறிந்துகொள்வதற்குப் பதிலாக அடுத்தவரை அறிந்துகொள்ளவே முயல்கிறேன். அதுவே பல நேரங்களில் உறவுச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஏனெனில், உறவில் வரும் பிரச்சினைக்கு அடுத்தவர் காரணமல்ல. என் உள்ளம்தான் காரணம். என் உள்ளத்தில் எழும் குறுகிய மனப்பான்மை, கோபம், ஒப்பீடு, பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை நான் அறிந்துகொண்டால், நான் அடுத்தவரை அன்பு செய்வது எளிதாகும். அவ்வாறே, என்னுடைய பணிக்குருத்துவத்தில், 'நான் யார்?' என்ற அறிதலை நான் முழுமையாக விடுத்து, 'நான் யாருக்காக?' என்ற அடையாளத்திற்கு நகர வேண்டும. ஏனெனில், 'நான் யார்?' என்ற அடையாளம் என்னை சாதி, கொள்கை, படிப்பு, பதவி, பணம், உறவு நெருக்கம் அடிப்படையில் என்னை சக அருள்பணியாளரிடமிருந்தும், நான் பணிசெய்யும் மக்களிடமிருந்தும் என்னை அந்நியப்படுத்திவிடும். ஆனால், 'நான் யாருக்காக?' என்ற நிலையில் என்னை அறியும்போது என் இலக்கும், வாழ்வின் நோக்கும் போக்கும் தெளிவாகும்.

இறுதிவரை அன்பு செய்ய முதல் படி 'அறிதலே.'

2. பந்தியிலிருந்து எழுதல்

இயேசுவின் பாஸ்கா நிகழ்வுப் பதிவில் லூக்கா இயேசுவின் வார்த்தைகளை இவ்வாறு பதிவு செய்கிறார்: 'யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்' (காண். லூக் 22:27). ஆக, 'பெரியவர்' என்ற நிலையிலிருந்து இயேசு எழுந்து, பந்தியில் அமர்ந்த எல்லாரையும் பெரியவராக்குகிறார். 

இதுதான் அன்பின் இரண்டாம் படி. இன்று நான் என்னுடைய நிலையிலிருந்து எழுந்து அடுத்தவர் நிலைக்கு இறங்கலாம் எளிதாக. ஆனால், அடுத்தவரைப் பெரியவர் நிலையில் வைத்துப் பார்ப்பது கடிமான இருக்கும். ஏனெனில், நான் அடுத்தவரைப் பெரியவராக்கி அவருக்குக் கீழ் நான் அமரும்போது நான் வலுவற்றவன் ஆகிவிடுகிறேன். அவர் என்னை எத்தி உதைக்கலாம், மிதிக்கலாம், தலையில் குட்டலாம், கன்னத்தில் அறையலாம், என்மேல் எச்சில் உமிழலாம். என் கழுத்தைப் பிடிக்கலாம். ஆக, இத்தகைய வலுவற்ற நிலைக்கு நான் என்னை உட்படுத்தினால்தான் என்னால் அடுத்தவரை அன்பு செய்ய முடியும். நான் பந்தியிலிருந்து எழுந்தாலும், அடுத்தவரைப் பந்தியில் அமர வைத்துப் பார்க்கும் தாராள உள்ளம் வேண்டும் நமக்கு.

3. மேலுடையைக் கழற்றிவிட்டு துண்டை இடுப்பில் கட்டி

ப்ராக்டிக்கல் காரணத்திற்காக இயேசு மேலுடையைக் கழற்றியிருக்கலாம். துண்டை இடுப்பில் கட்டியிருக்கலாம். உருவகமாகப் பார்த்தால் இங்கே இயேசு தன்னையே நொறுங்குநிலைக்கு உட்படுத்துகின்றார். நிர்வாணம் அல்லது அரைநிர்வாணம் என்பது நம்முடைய நொறுங்குநிலையைக் காட்டுகிறது. ஏனெனில், நம்முடைய ஆடைகள் நம்மை நொறுங்காவண்ணம் காத்துக்கொள்கின்றன. மேலும், துண்டை இடுப்பில் கட்டுவது அடிமையின் ஆடையை இயேசு அணிவதையும் குறிக்கிறது எனச் சொல்ல முடியும்.

அன்பில், நான் என் நொறுங்குநிலையை ஏற்க வேண்டும். நான் என் அடையாளங்களைக் களைய வேண்டும். என்னைக் காத்துக்கொண்டிருக்கும் என் அடையாளங்களை நான் கழற்ற வேண்டும். என்னுடைய பணிவாழ்வில் என் நொறுங்குநிலை என்பது என்னுடைய எளிய அல்லது வறிய குடும்பப் பின்புலமாகவோ அல்லது என்னுடைய பாவம் அல்லது தவறாகவோ இருக்கலாம். நான் துண்டை இடுப்பில் கட்டி வந்த நிலையில் இருந்துகொண்டு, திருவுடை என்னும் மேலாடைதான் என்னுடைய ஆடை என்று வலிந்து பற்றிக்கொண்டிருக்கும்போது, நான் என்னுடைய நொறுங்குநிலையை மறைப்பவனாகவும் அல்லது அதோடு போராடுபவனாகவும் இருப்பேன். 'இதுதான் நான்' என என்னை அடுத்தவருக்கு காட்டுவதில் நிறைய கட்டின்மை இருக்கவே செய்கிறது. ஏனெனில், அப்படிக் காட்டிவிட்டால், நான் ஒவ்வொரு முறையும் என்னை மற்றவருக்கு 'ப்ரூவ்' பண்ணத் தேவையில்லை.

4. தண்ணீர் எடுத்து, காலடிகளைக் கழுவி, துண்டால் துடைத்தார்

கானாவூரில் பணியாளர்கள் தண்ணீர் நிரப்பி, பணியாளர்களே மீண்டும் முகந்து சென்றனர். சமாரியப் பெண்ணின் குடத்திலிருந்து ஒற்றைத் தண்ணீரையும் இயேசு பருகவில்லை. இலாசரின் இறப்பில் தன்னுடைய கண்ணீர் என்னும் தண்ணீரைத் தொட்டவர், இப்போது தானே தண்ணீரை எடுத்து சீடர்களின் காலடிகளைக் கழுவுகின்றார். தண்ணீர் நலம் தரும், தூய்மை தரும். காலடி என்பது நம் ஒவ்வொருவரின் ஆதாரம். நம்மை நிலத்தோடு இணைக்கும் இணைப்புக் கோடு நம் பாதம். நாம் இம்மண்ணில் வேரூன்றி நிற்க உதவுவது பாதம். மருத்துவத்திலும் நம்முடைய பாதங்களில்தான் நரம்பு மற்றும் இரத்த நாளங்களின் இணைப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். காலடிகள் ஒருவரின் ஒட்டுமொத்த ஆளுமையைக் குறிக்கின்றன. ஆகையால்தான், நாம் அடுத்தவரின் காலடிகளில் விழுகின்றோம். கடவுளின் காலடியைத் தொட்டு வணங்குகின்றோம். ஆக, தம் சீடர்களின் முழு ஆளுமையைத் தூய்மைப்படுத்தி, துண்டால் துடைக்கின்றார் இயேசு.

இன்று நான் என் அன்பிலும், அருள்பணியிலும் என் கண்ணீரை முதலில் தொட வேண்டும். என் கண்ணீரை நான் தொட்டால் அன்றி, அடுத்தவரின் காலடிகளில் தண்ணீர் ஊற்ற முடியாது. மேலும், என்னுடைய நற்குணம் என்னும் தண்ணீரால் நான் அடுத்தவரின் முழு ஆளுமையையும் கழுவ வேண்டும்.

இறுதிவரை அன்பு செய்ய நம்மிடம் உள்ள தடைகள் எவை?

1. யூதாசு போல கடின உள்ளம் கொண்டிருத்தல். யூதாசு முதலிலேயே அன்பு செய்யவில்லை. அவர் எப்படி இறுதிவரை செய்வார்?

2. பேதுரு போல சூழல் கைதியாக இருத்தல். அன்பு செய்தார். அன்பு செய்யும் ஆர்வம் இருந்தது. ஆனால், சூழல்கைதியாக அன்பிலிருந்து பின்வாங்கினார். ஆனால், மீண்டும் தண்டவாளத்தில் ஏறியது இவருடைய இரயில்.

3. சீடர்கள் போல கண்டுகொள்ளாமல் இருத்தல். சீடர்களுக்கு இன்னும் எதுவும் புரியவில்லை. 'உங்களுக்கு இப்போது புரியாது' என்கிறார். வாழ்க்கையில் கடைசி வரை தாங்கள் யார், யாருக்காக, மற்றவர்கள் யார் என்று புரியாமலேயே இருந்து மறைபவர்களும் இருக்கிறார்கள்.

இந்த மூன்று தடைகளையும் தாண்டி, இயேசு போல இருந்தால் அன்புக் கட்டளை, பணிக்குருத்துவம், நற்கருணை நமக்கு இன்றும் என்றும் பொருள்தரும்.

பணியால் இறுதிவரை நம் திராட்சை இரசத்தை காத்துக்கொள்வோம். அவர் நமக்கு முன்மாதிரி காட்டினார்.


Tuesday, April 4, 2023

இன்றைய இறைமொழி புதன், 5 ஏப்ரல் 2023

இன்றைய இறைமொழி

புதன், 5 ஏப்ரல் 2023

புனித வாரத்தின் புதன்

எசாயா 50:4-9. யோவான் 26:14-25.

ரபி நானோ?

யூதாசு ஏன் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார் என்பதற்கு வரலாற்றில் மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன:

ஒன்று, அவர் 30 வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தார். அதாவது, தன் பணத் தேவைக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தார். இக்கூற்றுக்கு எதிராக இரு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன: முதலாவது, ஏற்கெனவே யூதாசு பணத்தின் பொறுப்பாளராக இருக்கின்றார். ஆக, பணத்திற்கான தேவை அவருக்கு அதிகம் இருந்திருக்காது. இரண்டாவது, அவர் பணத்துக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்திருந்தால், இயேசு துன்புறுத்தப்படுதல் கண்டு அவர் காசுகளைத் தலைமைக் குருக்களிடம் திருப்பித் தரத் தேவையில்லை. தான் பணத்தைப் பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் அவர் தன் வாழ்க்கையை நடத்தியிருக்கலாம்.

இரண்டு, இயேசு ஓர் அரசியல் மெசியாவாக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் யூதாசு. ஆனால், இயேசு தன்னையே ஓர் ஆன்மிக மெசியாவாக முன்வைக்கத் தொடங்கியதால் எதிர்பார்ப்பு ஏமாற்றமாக, ஏமாற்றம் கோபமாக மாற அவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார். இக்கூற்றும் ஏற்புடையது அல்ல. ஏனெனில், இயேசுவின் மேல் அவர் கோபம் கொண்டதாகவோ, அல்லது அவர் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொண்டதாகவோ நற்செய்தி நூல்களில் எந்தப் பதிவும் இல்லை.

மூன்று, இயேசு தன் மெசியா பணியேற்பில் தாமதிப்பதைக் காண்கின்ற யூதாசு, இயேசுவின் பணியைத் துரிதப்படுத்துவதற்காக அவரைக் காட்டிக்கொடுத்தார். இக்கூற்றே இன்று அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கின்றது. ஏனெனில், இயேசுவின் பணியின்போது அவரைச் சுற்றியிருக்கின்ற கூட்டத்தைப் பார்க்கின்ற யூதாசு, இயேசு சென்றவிடமெல்லாம் நன்மை செய்துகொண்டே செல்வதைக் காண்கின்ற யூதாசு, இயேசுவுக்கு மக்களுடைய ஆதரவும் உடனிருப்பும் இருக்கும் என்று தவறாகக் கணக்கிட்டுவிடுகின்றார். 'ஓசன்னா!' பாடிய கூட்டத்தைக் கண்டவுடன் இன்னும் யூதாசுக்கு உற்சாகம் கூடியிருக்கும். ஆனால், 'ஓசன்னா!' பாடிய கூட்டம் 'சிலுவையில் அறையும்!' என்று பேசத் தொடங்கியடவுடன், யூதாசைப் பதற்றம் பற்றிக்கொள்கின்றது. தன் கணக்கு தவறிவிட்டதாக உணர்கின்றார். தான் தொடங்கிய கொடுமையைத் தானே முடித்து வைக்க நினைத்து தலைமைக் குருக்களிடம் செல்கின்றார். சென்று முறையிடுகின்றார். பெற்ற காசுகளைத் திரும்ப வீசுகின்றார். பாவம்! அவருடைய முயற்சிகள் அனைத்தும் தோற்கின்றன. விரக்தியில் தன்னைத் தானே மாய்த்துக்கொள்கின்றார். தன் தலைவரைக் காணவும் துணியாமல் போயிற்று அவருக்கு.

இந்த நிகழ்வைக் குறித்தே இயேசு, 'அவன் பிறவாமல் இருந்திருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்!' என்கிறார். 

நாம் ஒன்று நினைக்க, எதார்த்தம் வேறொன்றாக மாறுவது நம் வாழ்விலும் நடக்கின்ற ஒன்று.

நல்லது என நினைத்து நாம் சொல்லும் ஒற்றைச் சொல் அடுத்தவருக்குத் தீயதாக மாறலாம்.

நல்லது செய்வதாக நினைத்து நாம் செய்த ஒற்றைச் செயல் அடுத்தவருக்குப் பெரிய கெடுதலாக மாறியிருக்கலாம்.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறும் என்பதற்கு யூதாசு என்னும் கதை மாந்தர் சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் இறுதி இராவுணவில் இருக்கின்றார். 'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்!' என்று இயேசு சொன்னவுடன், சீடர்கள் ஒரு மாதிரியும், யூதாசு வேறு மாதிரியும் பதில் சொல்வதைக் கவனித்தீர்களா?

சீடர்கள் ஒவ்வொருவரும், 'ஆண்டவரே, நானோ?' என்கின்றனர்.

ஆனால் யூதாசு மட்டும், 'ரபி, நானோ?' என்கின்றார்.

உடனே இயேசு, 'நீயே சொல்லிவிட்டாய்!' என்கிறார்.

யூதாசு அப்படி என்ன சொன்னார்?

'ரபி' என்று சொன்னார்.

மற்றவர்கள் எல்லாம், 'ஆண்டவரே!' என, யூதாசு மட்டும், இயேசுவை, வெறும் 'போதகர், ஆசிரியர், ரபி' என்று பார்க்கின்றார். பாவம் அவர்! அவரால் இயேசுவை அப்படி மட்டுமே பார்க்க முடிந்தது. இயேசுவைத் தவறாகப் பார்க்கத் தொடங்கியதன் விளைவு, அவரைக் காட்டிக்கொடுக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், துன்புறும் ஊழியன் மூன்றாம் பாடலிலிருந்து வாசிக்கின்றோம். தான் இழிநிலையை அடைந்தாலும் தன்னுடன் தன் ஆண்டவராகிய கடவுள் இருப்பதாக உணர்கிறார் ஊழியன். 

'நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்' என்கிறார் துன்புறும் ஊழியன்.

நம் நாவு கற்றோனின் நாவாக இருந்தால் இறைவனை ஏற்று அறிக்கையிட முடியும். 

இயேசுவை, 'ஆண்டவர்' என அறிக்கையிட மறுத்த யூதாசு, 'ரபி!' என்கிறார்.

அது அவருடைய கடின உள்ளமா?

அல்லது இயேசுவைப் பற்றிய தவறான எதிர்பார்ப்பா?

அல்லது இப்படித்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்னும் இறைத்திருவுளமா?

நம் ஒவ்வொருவரைப் போலவே யூதாசும் ஒரு புதிர்.


Monday, April 3, 2023

வாழ்வின் அழைப்புகள்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 4 ஏப்ரல் 2023

புனித வாரத்தின் செவ்வாய்

எசாயா 49:1-6. யோவான் 13:21-33,36-38.

வாழ்வின் அழைப்புகள்

இன்றைய முதல் வாசகம் எசாயாவின் துன்புறும் ஊழியன் இரண்டாம் பாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யார் இந்தத் துன்புறும் ஊழியன்? கிறிஸ்தியல் வாசிப்பில், துன்புறும் ஊழியன் இயேசுவைக் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்கிறோம். நான்கு பாடல்களில் இரண்டாம் பாடல் மட்டுமே மிகவும் நேர்முகமாக உள்ளது. இப்பாடலில் ஊழியன் தான் கடவுளிடமிருந்து பெற்ற அழைப்பு, புறவினத்தாருக்கு ஒளியாக இருப்பதற்கான தன் வாழ்வியல் நோக்கம், தன் மதிப்பு, மற்றும் கடவுள் தரும் பராமரிப்பு அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறார்.

நற்செய்தி வாசகம் இயேசுவின் பிரியாவிடை உரைப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தம் சீடர்களின் பாதங்களைக் கழுவுகிற இயேசு அவர்களோடு தொடர்ந்து உரையாடுகிறார். இன்றைய வாசகப் பகுதியில் அவருடைய உரையாடல் யூதாசு மற்றும் சீமோன் பேதுருவை நோக்கியதாக இருக்கிறது.

'உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்' என்னும் இயேசுவின் சொற்களோடு உரையாடல் தொடங்குகிறது. யார் அந்த நபர் என்பதை அறிய விரும்புகிறார் சீமோன் பேதுரு. ஒத்தமைவு நற்செய்திகள் இந்நிகழ்வை வேறு வகையில் பதிவு செய்கின்றன. அப்பத்தைத் தோய்த்துக்கொடுத்தல் என்னும் செயல் வழியாக இயேசு அந்த நபர் யார் என்பதை வெளிப்படுத்துகிறார். சீடர்களுக்கு இச்செயலும் இயேசுவின் சொற்களும் முழுமையாகப் புரியவில்லை. இயேசுவுக்கும் யூதாசுக்கும் மட்டுமே பொருள் புரிகிறது. இரண்டாம் பகுதியில், சீமோன் தம்மை மும்முறை மறுதலிப்பார் என்று உரைக்கிறார் இயேசு.

இந்நிகழ்வை வாசிக்கும்போது சில கேள்விகள் எழுகின்றன: 'இயேசுவின் இறப்புக்குக் காரணம் கடவுளின் திருவுளம் என்றால், யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்ததும், சீமோன் பேதுரு இயேசுவை மறுதலித்ததும் கடவுளின் திருவுளத்தால்தானே?', 'இயேசுவின் சொற்களுக்கு ஏற்பச் செயல்பட்டதால் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்தாரா அல்லது சாத்தான் நுழைந்ததால் இயேசுவைக் காட்டிக்கொடுத்தாரா?', 'பேதுரு செய்யவிருப்பதை இயேசு முன்னறிவிக்கிறாரா அல்லது கடவுளின் திருவுளத்தை பேதுரு மற்றும் யூதாசுக்கு வெளிப்படுத்துகிறாரா?'

யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுப்பார் என்பதும், பேதுரு அவரை மறுதலிப்பார் என்பதும் விதிக்கப்பட்ட அல்லது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றா? அல்லது இவர்கள் இருவரும் தாங்களாகவே அப்படிச் செய்தார்களா?

விடைகள் தெரியாத கேள்விகளாகவே இவை தொடர்கின்றன.

இவ்விரு வாசகங்களையும் எப்படி இணைத்துப் பொருள்கொள்வது?

துன்புறும் ஊழியனுக்கென கடவுள் ஒரு வாழ்வியல் நோக்கம் அல்லது அழைப்பு வைத்திருந்ததுபோல, இயேசுவுக்கு, யூதாசுக்கு, பேதுருவுக்கு, உங்களுக்கு, எனக்கு என அனைவருக்குமே ஒரு நோக்கத்தை நிர்ணயித்துள்ளார். இருந்தாலும், தெரிவுகளை மேற்கொள்வதற்கான கட்டின்மையையும் (சுதந்திரத்தையும்) நமக்குக் கொடுத்துள்ளார். 

யூதாசு மேலறையைவிட்டு வெளியேறியபோது 'இருட்டாய் இருந்தது' எனப் பதிவு செய்கிறார் யோவான். வெளியே இருட்டாய் இருந்ததால் யூதாசு உள்ளேயே ஒளியருகில் இருந்திருக்கலாம். ஆனால், அவர் இருளையே தெரிந்துகொள்கிறார். 

இன்று நாம் இயேசுவிடம் கேட்போம்: 'ஆண்டவரே, என் வாழ்வின் நோக்கம் என்ன? என் வாழ்க்கை என்னை எதை நோக்கி அழைக்கிறது? நான் உம்மோடு அமர்ந்து தொடர்ந்து உணவு உண்ணலாமா? அல்லது அப்பத்தைத் தோய்த்துக்கொடுத்து என்னை வெளியே இருளில் நீர் அனுப்பிவிடுவீரா?'


Sunday, April 2, 2023

ஆறு நாள்களுக்கு முன்

இன்றைய இறைமொழி

திங்கள், 3 ஏப்ரல் 2023

புனித வாரத்தின் திங்கள்

எசாயா 42:1-7. யோவான் 12:1-11.

ஆறு நாள்களுக்கு முன்

'பாஸ்கா விழாவுக்கு ஆறு நாள்களுக்கு முன்' - இப்படியாகத் தொடங்குகிறது இன்றைய நற்செய்திப் பகுதி. ஆறு நாள்களுக்கு முன் நாம் ஆறு நபர்களைச் சந்திக்கிறோம்: (1) இலாசர் – இயேசு இவரை உயிர்த்தெழச் செய்கிறார். வாழ்க்கையை இரண்டாம் முறையாக வாழும் வாய்ப்பு பெற்றவர் இவர். (2) மார்த்தா - இயேசுவுக்கும் விருந்தினர்களுக்கும் பரிமாறுவதில் கருத்தாயிருக்கிறார். (3) மரியா - இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம் கொண்டு வந்து இயேசுவின் காலடிகளில் கொட்டிப் பூசுகிறார். (4) யூதாசு இஸ்காரியோத்து – மரியாவின் செயலை வீண் எனக் கடிந்துகொள்கிற இவர், தைலத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுக்க விழைகிறார். (5) யூதர்கள் - இலாசரைக் காண வந்துள்ள இவர்கள், அவரைக் கொலை செய்ய விரும்புகிறார்கள். ஏனெனில், இலாசரை முன்னிட்டுப் பலர் இயேசுவில் நம்பிக்கை கொள்கிறார்கள். (6) இயேசு – தலைக்குமேல் கத்தி தொங்கினாலும் இயல்பாகவும் அமைதியாகவும் இருந்து, மார்த்தாவின் விருந்தோம்பலையும் மரியாவின் நறுமணப்பூசுதலையும் ஏற்றுக்கொள்கிறார்.

இவர்களில் சிலர் கொடுப்பவர்கள், சிலர் எடுப்பவர்கள். மார்த்தா உணவு கொடுக்கிறார். மரியா நறுமணத் தைலம் கொடுக்கிறார். இயேசு இலாசருக்கு உயிர் கொடுக்கிறார். யூதாசு பணத்தை எடுக்கிறார். யூதர்கள் இப்போது இலாசரின் உயிரையும் பின்னர் இயேசுவின் உயிரையும் எடுக்கிறார்கள்.

இவ்வுலகம் கொடுப்பவர்கள் மற்றும் எடுப்பவர்களால் நிறைந்துள்ளது. கொடுப்பவர்கள் பிறர்மையம் கொண்டிருக்கிறார்கள், எடுப்பவர்கள் தன்மையம் கொண்டிருக்கிறார்கள். கொடுப்பவர்கள் பொருள்களைவிட மனிதர்களை உயர்வாக நினைக்கிறார்கள். எடுப்பவர்கள் பொருள்களையே உயர்வாக நினைக்கிறார்கள். கொடுப்பவர்கள் நம்பிக்கை பார்வை கொண்டிருக்கிறார்கள். எடுப்பவர்கள் அனைத்தையும் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள்.

இன்றைய முதல் வாசகப் பகுதி எசாயாவின் துன்புறும் ஊழியன் பாடல்களின் முதல் பாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. துன்புறும் ஊழியனை இப்பகுதி முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறது. அமைதியும் தன்னடக்கமும் இரக்கமும் நீதியும் உடையவராக அவர் முன்மொழியப்படுகிறார். 

இவர் இயேசுவில் பிரதிபலிக்கிறார்.

'நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை' என்கிறார் இயேசு.

தமக்கு நேரப்போவதை இயேசு அறிந்தவராக இருப்பதை இச்சொற்கள் நமக்கு உயர்த்துகின்றன. இப்புனித வாரத்தில் இயேசு நம்முடன் இருக்கிறாரா? நாம் அவரோடு இருக்கிறோமா?


Saturday, April 1, 2023

குருத்தோலையும் சிலுவை மரமும்

இன்றைய இறைமொழி

ஞாயிறு, 2 ஏப்ரல் 2023

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

எசாயா 50:4-7. பிலிப்பியர் 2:6-11. மத்தேயு 26:14-27:66.

குருத்தோலையும் சிலுவை மரமும்

புனித வாரத்துக்குள் நுழையும் நாம் இயேசுவுடன் இணைந்து எருசலேமுக்குள் நுழைகிறோம். பவனியின்போது நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்திப் பகுதிக்கும், நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்ட இயேசுவின் பாடுகள் வரலாற்றுக்கும் மூன்று முரண்கள் உள்ளன. அல்லது இயேசு மூன்று நிலைகளுக்குக் கடந்து போவதை நாம் காண்கிறோம். இவற்றை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

(அ) உடனிருப்பிலிருந்து உதறித் தள்ளுதலுக்கு

மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கிற கழுதைக்குட்டி நிகழ்வில் (காண். 21:1-11), 'ஒரு கழுதையும் அதனோடு ஒரு குட்டியும்' என இரண்டு விலங்குகள் அழைத்துவரப்படுகின்றன. மற்ற நற்செய்தியாளர்கள் கழுதைக்குட்டி மட்டுமே வருவதாகப் பதிவு செய்கிறார்கள். மத்தேயு நற்செய்தியாளர், 'கடவுள் நம்மோடு' என்னும் உடனிருத்தலின் செய்தியைத் தருகிறவர். கழுதையும் அதனோடு ஒரு குட்டியும் என்பதை, இயேசுவின் பாடுகளில் அவரோடு உடனிருந்த தந்தையை நாம் நினைவுகூர்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். கடவுள் இயேசுவோடும் உடன் நடக்கிறார். இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேம் நுழையும்போது அவருடைய சீடர்களும் மக்களும் உடன் நடக்கிறார்கள். ஆனால், சில நாள்களில் அவர்கள் இயேசுவை உதறித் தள்ளுகிறார்கள்.

(ஆ) புகழ்ச்சியிலிருந்து தீர்ப்பிடுதலுக்கு

ஓர் அரசர் அல்லது பெரியவர் ஊருக்குள் நுழையும்போது அவருக்கு முன்னே துணிகளை விரிப்பதும், அவரை எதிர்கொள்ள கொடிகள் பிடிப்பதும் வழக்கம். இன்றும் சில ஊர்களில் தேர்ப்பவனி செல்லும் இடங்களிலும், நற்கருணைப் பவனியிலும் பவனிக்கு முன்னே துணிகள் விரிக்கப்படுவது வழக்கம். அதாவது, தங்களுடைய மீட்பரும் அரசருமாகிய ஒருவரைத் தாங்கள் கண்டுகொண்டதாக உணர்கிறார்கள் இஸ்ரயேல் மக்கள். அவரை அரசராகப் புகழ்ந்து பாடியவர்கள் அவருக்குச் சிலுவைத் தீர்ப்பு அளிக்கிறார்கள். 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா!' என்னும் சொற்கள் விரைவில் 'இவனைச் சிலுவையில் அறையும்' என மாறுகின்றன.

(இ) மாட்சியிலிருந்து அவமானத்துக்கு

குருத்தோலை, கழுதைமேல் பவனி, வழியில் துணிகள் என மாட்சி பெற்ற இயேசு, அவருடைய சிலுவைப் பயணத்தில் மிகுந்;த அவமானம் அடைகிறார். குருத்தோலையின் மென்மை மறைந்து சிலுவையின் வன்மை அவருடைய தோளைப் பற்றிக்கொள்கிறது. கழுதைமேல் பவனி வந்தவர் தெருக்களில் இழுத்துச் செல்லப்படுகிறார். பவனியின்போது மற்றவர்கள் தங்கள் மேலாடைகளை விரித்தனர். சிலுவைப் பயணத்தில் இயேசுவின் மேலாடை பறித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்காணும் மூன்று முரண்களை, அல்லது மூன்று நகர்வுகளை இயேசு எப்படி எதிர்கொண்டார்?

(அ) இரு நிகழ்வுகளையும் இயேசு அவை இருப்பது போல அப்படியே ஏற்றுக்கொள்கிறார். எந்தவித எதிர்பார்ப்போ, மறுப்போ அவரிடம் இல்லை. 

(ஆ) இரு நிகழ்வுகளுமே தம் கட்டுக்குள் இருப்பவை அல்ல எனத் தெரிந்தாலும், தன் கட்டுக்கோப்பை இழக்காதவராக இருக்கிறார் இயேசு.

(இ) இவ்விரு பயணங்களையும் தாண்டிய மூன்றாவது பயணம் - இறப்பிலிருந்து உயிர்ப்புக்கு - இயேசுவுக்கு எப்போதும் நினைவில் இருந்ததால் இவை இரண்டுமே அவற்றுக்கான பயணங்கள் என எடுத்துக்கொண்டார்.

குருத்தோலையும் சிலுவை மரமும் போல வரும் நம் வாழ்வின் முரண்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்?