புதன், 8 மார்ச் 2023
தவக்காலம் 2ஆம் வாரம்
எரேமியா 18:18-20. மத்தேயு 20:17-28.
தவறாகப் புரிந்துகொள்ளப்படுதல்
இரண்டு பேர் தங்களுக்கு நெருக்கமான மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதை இன்றைய வாசகங்கள் நம் கண்முன் கொண்டுவருகின்றன.
இறைவாக்கினர் எரேமியா எருசலேம் ஆலயத்துக்கும், நகரத்துக்கும், மக்களுக்கும் எதிராக இறைவாக்குரைக்கிறார். எருசலேம் நகரத்தார் ஒரு வகையான மிதப்புநிலையில் இருக்கிறார்கள். 'எங்களுக்கு ஒன்றும் நேரிடாது' என நினைத்த டைட்டானிக் கப்பல் பயணிகளைப் போல, எங்களுடைய நகருக்கும் நாட்டுக்கும் எதுவும் நேரிடாது என்ற நினைக்கிறார்கள். அவர்களுடைய சிலைவழிபாடு, நம்பிக்கைப் பிறழ்வு, பிரமாணிக்கமின்மை ஆகியவற்றை ஆண்டவராகிய கடவுள் எரேமியா வழியாகச் சுட்டிக்காட்டுகிறார். வரவிருக்கிற அழிவை முன்னுரைக்கிறார்.
ஆனால், எரேமியாவைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் மக்கள். அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள்: 'வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும் ஞானிகளிடமிருந்து அறிவுரையும் இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது.' கடவுளையும் கடவுளது இரக்கத்தையும் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
தன் மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட எரேமியா ஆண்டவரிடம் ஓடி அவரிடம் அழுது புலம்புகிறார். தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதை எதிர்கொள்வதற்கான முதல் வழி இது.
நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் பாடுகளை மூன்றாம் முறையாக அறிவிக்கிறார். இயேசு ஒவ்வொரு முறையும் தம் பாடுகளை முன்னறிவிக்கும்போதும் அவருடைய சீடர்கள் அவரைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். மூன்றாம் முறையாக முன்னறிவிக்கும் நிகழ்வில் திருத்தூதர்கள் இருவர் இயேசுவின் வலப்புறமும் இடப்புறமும் அமர விரும்புகிறார்கள்.
சீடர்கள் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொள்ளக் காரணம் என்ன? (அ) அவர்கள் தங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், (ஆ) இயேசுவின் அரசநிலை மற்ற அரசர்களைப் போன்றது என நினைக்கிறார்கள், (இ) நிறைய எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள்.
இயேசு தம் சீடர்களோடு உரையாடி அவர்களுக்குத் தன்னிலை விளக்கம் தருகிறார். துன்பத்தின் வழியாக தன் மெசியா நிலை சாத்தியம் என்பதை உணர்த்துகிறார். பணியாளராக இருப்பதே தலைமைத்துவத்துக்கான வழி எனக் கற்பிக்கிறார்.
தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கான இரண்டாவது பதிலிறுப்பு விளக்கம் தருவது.
இரு வாசகங்களையும் இணைத்துச் சிந்திப்போம்:
(அ) நம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிவோர், மற்றும் நம் பணியின் பயனர்கள் நம்மைத் தவறாகப் புரிந்துகொள்வது இயல்பான வாழ்வியல் அனுபவம். இதை நாம் இரண்டு நிலைகளில் அணுகலாம்: ஒன்று, இறைவனிடம் எடுத்துச் சென்று இறைவேண்டல் செய்வது – எரேமியா போல, இரண்டு, அவர்களிடம் விளக்கிச் சொல்வது - இயேசு போல.
(ஆ) தாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் எரேமியாவும் இயேசுவும் தொடர்ந்து பயணம் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் இலக்கில் உறுதியாக இருந்தார்கள். இலக்கு தெளிவாகவும், நம் நடை உறுதியாகவும் இருக்கும்போது நம்மை யாராலும் வெற்றிகொள்ள இயலாது.
(இ) எருசலேம் இயேசுவுக்கு மிகவும் முக்கியமான ஒன்று: அங்கேதான் அவருடைய பணி நிறைவடைகிறதுளூ அவர் வலுவின்மையைத் தழுவுகிறார்ளூ அங்கிருந்துதான் உயிர்த்து விண்ணேறிச் செல்கிறார். விழுந்ததும் எழுந்ததும் எருசலேமில்தான். நான் விழுகின்ற இடத்திலிருந்து எழுகிறேனா?
No comments:
Post a Comment