Friday, March 3, 2023

இருத்தல் மற்றும் கொடுத்தலின் நிலை

இன்றைய இறைமொழி

சனி,4 மார்ச் 2023

தவக்காலம் முதல் வாரம்

இணைச்சட்டம் 26:16-19. மத்தேயு 5:43-48.

இருத்தல் மற்றும் கொடுத்தலின் நிலை

'நம் கொடுத்தலின் அளவைப் பொருத்தே நம் இருத்தலின் அளவு இருக்கிறது' என்று சொல்லப்படுவதுண்டு. அதாவது, என்னால் எந்த அளவுக்குப் பெரியதாகக் கொடுக்க முடிகிறதோ, அந்த அளவுக்குப் பெரியதாக நான் வாழ்கிறேன்.

நம் இருத்தலின் மேன்மையை உணர்ந்து, அதற்கேற்றவாறு நம் கொடுத்தலை மேம்படுத்திக்கொள்ள இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. 

இன்றைய முதல் வாசகம் இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மோசே வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையத் தயாராக இருந்த மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார். ஒரு தலைமுறை மறைந்து மறு தலைமுறை வந்துவிட்டது. இப்புதிய தலைமுறையினருக்கு ஆண்டவராகிய கடவுள் நிகழ்த்திய அரும் பெரும் செயல்களை, குறிப்பாக, அவர் ஏற்படுத்திய உடன்படிக்கையை அவர்களுக்கு நினைவுறுத்துகிறார். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தம் தனிப்பெரும் சொத்தாக, கண்ணின் மணியாகத் தெரிந்துகொள்கிறார். சாதாரண மனிதரோ, அல்லது அரசரோ அவர்களை உரிமைச்சொத்தாக்கவில்லை. மாறாக, ஆண்டவராகிய கடவுளே அவர்களைத் தம் உரிமைச்சொத்தாக ஆக்கிக்கொள்கிறார். ஆண்டவரால் உரிமை கொண்டாடப்படும் மக்கள் தங்கள் வாழ்வை அதற்கேற்றாற்போலத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பது மோசேயின் அறிவுரை. ஆண்டவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டுமாறு அவர்களை அழைக்கிறார். அச்சத்தினாலோ கட்டாயத்தினாலோ அல்ல, மாறாக, பிள்ளைகளுக்குரிய அன்பு மற்றும் மரியாதையுடன் அவர்கள் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இரண்டாம் வாசகம் இயேசுவின் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக இருக்கிறது. இதில் இயேசு தம் சீடர்களின் அடித்தள அனுபவத்தை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். அவர்கள் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள். அவர் நிறைவுள்ளவர். மண்ணகத் தந்தையர் பல நேரங்களில் நிபந்தனையுடன் அன்பு காட்டுகிறார்கள். ஆனால், விண்ணகத் தந்தை நிபந்தனைகள் இல்லாமல் அன்பு செய்கிறார். இப்படிப்பட்ட தந்தையின் அன்பைப் பெறுகிற அவர்கள், அதே அன்பை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் - நிபந்தனைகள் இல்லாமல், வேறுபாடு பாராட்டாமல்!

இவ்வாறாக, இரு வாசகங்களும் நம் இருத்தலின் மேன்மையை நமக்கு நினைவூட்டி, இன்னும் கொஞ்சம் கைகளைத் திறந்த அன்பையும் இரக்கத்தையும் கொடுக்க நம்மை அழைக்கின்றன. இயேசு தம் இருத்தலின் மேன்மையை உணர்ந்தவராக இருந்தார். தாம் திருமுழுக்கிலும் உருமாற்றத்திலும் பெற்ற அடித்தள அனுபவத்தை அடிக்கடி வாழ்ந்து பார்த்தார். ஆகையால்தான், அவரால் அனைவரையும் சகோதர சகோதரிகள் என அழைக்க முடிந்தது. சிலுவையில் தம்மையே கையளிக்க முடிந்தது.

சிந்திப்போம்:

நாம் நம்மையே மற்றவர்களுக்கு முழுமையாகக் கொடுக்க இயலாமல்போவதற்கான காரணம் என்ன? நம் அன்பு ஏன் வேறுபடுத்திப் பார்க்கிறது? நாம் ஏன் மற்றவர்களைத் தீர்ப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்? நாம் ஏன் மற்றவர்களிடம் எதிர்வினை ஆற்றுகிறோம்? மற்றவர்களின் தீமை நம் நன்மைத்தனத்தை மாற்ற நாம் ஏன் அனுமதிக்கிறோம்?

இவற்றுக்கான விடை ஒன்றுதான்: நம் இருத்தலின் மேன்மையை நாம் மறந்துவிட்டோம்! நம் இருத்தலின் மேன்மை நம் பணியாலோ, பணத்தாலோ, பொருளாலோ, அழகாலோ வருவதில்லை. மாறாக, கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்னும் நம்பிக்கையிலிருந்து வருகிறது. இது நம் வாழ்வின் அனுபவமாக மாறினால், வாழ்வின் அளவுகோல்களும் மாறத் தொடங்கும்.

நாம் இந்த அனுபவத்தை மறந்து போகிறோம்?

ஏனெனில், நாம் நம்மைப் பற்றிய எண்ணங்களில், நம் கருத்தியல்களில், அடையாளங்களில், விருப்பு வெறுப்புகளில் மூழ்கிக் கிடக்கிறோம். நம் கவனம் சிதைந்து நிற்கிறது.

நம் இருத்தலின் மேன்மையை உணர்ந்தவர்களாக, நம் கைகளை மெதுவாக மற்றவர்களுக்கு விரித்துக்கொடுப்போம் - ஒரு பூ போல!

யாரும் எதுவும் நம் அடித்தள அனுபவத்திலிருந்து நகர்த்திவிட வேண்டாம்.


No comments:

Post a Comment