திங்கள், 13 மார்ச் 2023
தவக்காலம் 3ஆம் வாரம்
2 அரசர்கள் 5:1-15. லூக்கா 4:24-30.
செவிகொடுத்தல் நலம்தரும்!
இன்றைய இரண்டு வாசகங்களிலும் காணப்படும் ஒரு பெயர் 'சிரிய நாட்டு நாமான்.' சிரிய நாட்டு நாமான் எலியா இறைவாக்கினரால் நலமாக்கப்படுவதை முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். இதே நிகழ்வைக் குறிப்பிட்டுத் தம் சொந்த ஊரின் தொழுகைக்கூடத்தில் உரையாற்றுகிறார் இயேசு.
2 அரசர்கள் நூல் ஆசிரியர் மிக நேர்த்தியாக நாமானை அறிமுகம் செய்கிறார்: 'நாமான், படைத்தலைவர், மேன்மையானவர், வலிமையானவர், ஆனால், தொழுநோயாளர்.' இந்த 'ஆனால்' என்பது அதற்கு முன் சொல்லப்பட்ட அனைத்து நல்ல அடைமொழிகளையும் செல்லாததாக்கிவிடுகிறது. இந்த 'ஆனால்' என்பது நம் வாழ்விலும் உண்டு. மற்றவர்கள் நம்மைப் பற்றி வரையறை செய்யும்போது இதைப் பயன்படுத்தி நம் வாழ்வின் நன்மைத்தனத்தை கேள்விக்குட்படுத்துகின்றன. நம் வாழ்வின் முரண் மற்றும் இருட்டான பக்கத்தைக் குறிக்க 'ஆனால்' என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த இருள் அகலும் என்பதே மகிழ்ச்சியான விடயம்.
செவிமடுத்தலில் தொடங்குகிறது நாமான் நலம் பெறும் நிகழ்வு. இஸ்ரயேலிலிருந்து அடிமையாகக் கடத்திவரப்பட்ட இளவலின் சொல்லுக்குச் செவிமடுக்கிறார் படைத்தளபதியான நாமான். வேற்றுநாட்டு, அடிமை, இளவலின் குரலுக்குச் செவிமடுப்பதற்குத் நிறைய துணிச்சல் வேண்டும். இஸ்ரயலேலிருந்து நலம் 'வாங்கி விடலாம்' என்ற எண்ணத்தில் பொன்னும் வெள்ளியும் சுமந்துகொண்டு இஸ்ரயேலுக்குப் புறப்படுகிறார் நாமான். இஸ்ரயேலின் அரசர் இவருடைய வருகையைத் தவறாகப் புரிந்துகொண்டு தன் ஆடையைக் கிழி;த்துக்கொள்கிறார். இதைக் கேள்வியுறுகிற எலிசா நாமானைத் தன்னிடம் அழைக்கிறார். 'யோர்தான் ஏற்றில் ஏழுமுறை மூழ்கி எழுந்திரும்!' எனப் பணியாளர் வழியாகச் சொல்லி விடுகிறார். எலிசா வந்து தன்னைக் குணமாக்குவார் என எண்ணிய நாமான் ஏமாற்றம் அடைகிறார். யோர்தான் ஆற்றுக்குச் செல்லத் தயங்குகிறார். ஆனால், தன் பணியாளர் ஒருவருடைய சொற்களுக்குச் செவிமடுத்து தனக்குக் கட்டளையிடப்பட்டவாறே செய்து முடிக்கிறார்.
வல்ல செயல் நடந்தேறுகிறது. அவருடைய தோல் குழந்தையின் தோல் போல ஆகிறது. இஸ்ரயேலின் கடவுளே உண்மையான கடவுள் என அறிக்கையிடுகிறார் நாமான். நாமான் உடல்நலத்துடன் இணைந்து ஆன்மிக நலமும் பெறுகிறார். இஸ்ரயேலின் கடவுளிடமிருந்து அந்நியமாக நின்றவர் இப்போது நம்பிக்கையாளராக மாறுகிறார்.
நற்செய்தி வாசகத்தில், இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை எனச் சொல்கிற இயேசு, தம் ஊராருக்கு இரு எடுத்துக்காட்டுகளை முன்மொழிகிறார்: சாரிபாத்து நகர் கைம்பெண், நாமான். யூதக் காதுகளுக்கு புறவினத்தாரின் இப்பெயர்கள் நெருடலாக இருக்கின்றன. இயேசுவைக் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். இயேசுவின் பாடுகள் அவருடைய சொந்த ஊரிலேயே தொடங்குகின்றன.
ஊர் மக்களின் நெருக்கம் இயேசுவை அவர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. இயேசுவின் சொற்களுக்குச் செவிமடுத்தல் அவர்களுக்குக் கடினமாக இருந்தது.
இரு வாசகங்களையும் இணைத்துச் சிந்திப்போம்:
(அ) நெருக்கம் பல நேரங்களில் நம்பிக்கைப் பயணத்திற்குத் தடையாக இருக்கிறது. இந்த நெருக்கத்தால்தான் நாசரேத்தூராரால் இயேசுவின்மேல் நம்பிக்கைகொள்ள இயலவில்லை. ஆனால், கடவுளிடமிருந்து அந்நியமாக நின்ற நாமான் கடவுளுக்கு நெருக்கமாகிறார். நம் வாழ்விலும் நெருக்கம் கடவுளிடமிருந்து நம்மைத் தூரமாக்கிவிடலாம்.
(ஆ) நாமான் மூன்று பணியாளர்களுக்குச் செவிகொடுக்கிறார்: மனைவியின் பணியாளரான இளவல், தன் படைவீரர் என்னும் பணியாளர், மற்றும் ஆண்டவரின் பணியாளரான எலிசா. ஆனால், இயேசுவின் ஊரார் மகனுக்கு – கடவுளின் மகனுக்கு – செவிமடுக்கத் தயக்கம் காட்டினார்கள். கடவுளுக்கு நாம் எப்படி, எங்கே செவிமடுக்கிறோம்?
(இ) நிகழ்வின் இறுதியில் நாமான் நம்பிக்கை அறிக்கை செய்கிறார். இஸ்ரயேலின் கடவுளைத் தன் கடவுள் என அறிக்கையிடுகிறார். இயேசுவின் ஊராரோ அவரைக் கொலை செய்ய, தங்களிடமிருந்து அகற்றிவிட முயற்சி செய்கிறார்கள். கடவுளை நாம் அள்ளிக்கொள்கிறோமா? தள்ளி விடுகிறோமா?
No comments:
Post a Comment