இன்றைய இறைமொழி
செவ்வாய், 7 மார்ச் 2023
தவக்காலம் 2ஆம் வாரம்
எசாயா 1:10,16-20. மத்தேயு 23:1-12.
கற்றலும் கற்பித்தலும்
இன்றைய முதல் வாசகம் எசாயா இறைவாக்கினர் நூலின் முதற்பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசாயா மற்றும் எரேமியா இறைவாக்கினர் நூல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எரேமியா நூலில் முதலில் இறைவாக்கினரின் அழைத்தல் கதையாடலும் தொடர்ந்து இறைவாக்குரைத்தல் சூழலும் இடம்பெறுகிறது. ஆனால், எசாயா நூலில் முதலில் சூழலும் பின்னர் அழைத்தல் கதையாடலும் இடம்பெறுகிறது. இவ்வாறாக, இறைவாக்கினருடைய பணியின் அவசரம் மற்றும் அவசியம் நமக்குத் தெளிவுபடுத்தப்படுகிறது.
ஆண்டவராகிய கடவுள் தம் சொந்த மக்களை, 'சோதோம் மக்களே, கொமோரா மக்களே' என அழைக்கிறார். கோபமாக இருக்கிற அப்பா தன் பிள்ளைகளை இன்னொருவருடைய பிள்ளைகள் என்று அழைப்பது போல இருக்கிறது. அதாவது, ஆண்டவராகிய கடவுள் தம் மக்கள்மேல் உள்ள உரிமையை ஏற்றுக்கொள்ள மறுத்து, அவர்களை அந்நியப்படுத்துகிறார். நாம் செய்யும் பாவங்கள் நம்மை இறைவனிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன என்பது இங்கே புலப்படுகிறது. தம் மக்களைத் தள்ளிவிடுகின்ற ஆண்டவராகிய கடவுள் சற்று நேரத்தில் அவர்களை அள்ளி எடுக்கிறார்: 'உங்கள் பாவங்ள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன. எனினும், உறைந்த பனிபோல் அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன. எனினும், பஞ்சைப்போல அவை வெண்மையாகும்'. இவ்வாறாக, மாற்றத்தை முன்மொழிகிறார் கடவுள்.
இப்பகுதியில் உள்ள இரு சொல்லாடல்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:
(அ) 'நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்'
'கற்றுக்கொள்தல்' என்னும் அறிவுசார் சொல்லாட்சியைப் பயன்படுத்துகிறார் கடவுள். நன்மை செய்வது என்பது ஒரு கலை. அது கற்றுக்கொள்ளப்பட வேண்டியது. எப்படி? நாம் பியானோ கற்றுக்கொள்கிறோம் என வைத்துக்கொள்வோம். முதல் நாளில், பியானோவில் உள்ள சாவிகள் நமக்கு அந்நியமாகத் தெரிகின்றன. மூன்று மாதங்கள் தொடர் பயிற்சிக்குப் பின்னர் அவை ஓரளவுக்கு நம் கைக்குள் வருகின்றன. நாமாக இசைக்கத் தொடங்குகிறோம். தொடர்ந்து இரண்டு மூன்று வருடங்கள் கழித்து பியானோ வாசிப்பது நம் இயல்பாக மாறுகிறது. இதையே ராபர்ட் க்ரீன் என்னும் ஆசிரியர், (1) புகுமுக நிலை, (2) ஆராய்ச்சி நிலை, (3) ஆற்றல் நிலை என எழுதுகிறார். நம் ஆற்றலுக்கு உட்பட்ட ஒன்று நம் இயல்பாக மாறிவிடுகிறது.
(ஆ) 'வாருங்கள், நாம் வழக்காடுவோம்'
'நாம் வழக்காடுவோம்' என்னும் சொல்லாடலை, 'நாம் அமர்ந்து யோசித்துப் பார்ப்போம்' என்றும் மொழிபெயர்க்கலாம். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கும்போது அவர்களுடைய உணர்வுகளைத் தட்டி அல்ல, மாறாக, அறிவைத் தூண்டி அழைக்கிறார். 'செவ்வாய்க் கிழமைகளில் மோரியுடன்' என்னும் நூலின் ஆசிரியர், 'அன்பு செய்தல் ஓர் அறிவார்ந்த செயல்' என அழைக்கிறார். அதாவது, அன்பு என்பது வெறும் உணர்வுகள் அல்லது உணர்ச்சிகளின் வெளிப்பாடு அன்று. மாறாக, அறிவின், சிந்தனையின் வெளிப்பாடு. ஆண்டவராகிய கடவுள் நன்றாக யோசித்து அறிவார்ந்த நிலையில் மனமாற்றம் நோக்கி நகருமாறு தம் மக்களை அழைக்கிறார்.
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு, மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் வெளிவேடம் பற்றி எச்சரிக்கிறார். அவர்களிடம் உள்ள பிரச்சினைகள் மூன்று: (1) அவர்கள் போதித்தார்கள். ஆனால், போதனையைப் பின்பற்றவில்லை. (2) மக்கள்மேல் நிறைய விதிமுறைகளைச் சுமைகளாக ஏற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் அவற்றைச் சுமப்பதற்கு உதவிசெய்வதில்லை. (3) தங்களுக்குத் தாங்களே ரபி, தந்தை, போதகர் என்னும் தலைப்புகளை அளித்துக்கொள்கிறார்கள்.
சீடத்துவத்தின் அடிப்படை மதிப்பீடாக தாழ்ச்சியை முன்மொழிகிறார் இயேசு.
தாழ்ச்சி என்பதன் ஆங்கிலப் பதம் ஹ்யுமிலிட்டி. இச்சொல் ஹ்யுமுஸ் என்னும் இலத்தீன் பதத்திலிருந்து வருகிறது. ஹ்யுமுஸ் என்றால் களிமண் என்பது பொருள். ஆண்டவராகிய கடவுள் நம்மை களிமண் கொண்டு உருவாக்குகிறார் (காண். தொநூ 2). தாழ்ச்சி கொள்ளும் ஒருவர் தன் வாழ்வின் தொடக்கநிலையில் தன்னை நிறுத்திப் பார்க்கிறார். தாழ்ச்சியில் நாம் கடவுளை நம் ஆசிரியராகவும், ஒருவர் மற்றவரைச் சகோதரர் சகோதரிகள் என்றும் அடையாளம் காண்கிறோம்.
இரு வாசகங்களையும் இணைத்துப் பார்ப்போம்:
(அ) நன்மை செய்யக் கற்றுக்கொள்ளவும், தாழ்ச்சியாக இருக்கப் பழகிக்கொள்ளவும், ஆண்டவரோடு அமர்ந்து யோசித்துப் பார்க்கவும் நாம் அழைப்பு பெறுகிறோம். நாம் இன்று எப்படி இருக்கிறோம் என்று ஆய்வு செய்வது முதல்படி.
(ஆ) நம் அடையாளங்கள் மற்றும் முத்திரைகளை அகற்ற முன்வருவோம். நம் அடையாளங்களைக் கொண்டு மற்றவர்கள் நம்மைக் கண்டுகொள்ள வேண்டும் எனவும், மற்றவர்களால் நாம் பாராட்டு பெற வேண்டும் எனவும் விரும்புகிறோம். மேலும், அடையாளங்களே ஒருவர் மற்றவரிடமிருந்து நம்மைப் பிரிக்கின்றன.
(இ) தாழ்ச்சி என்ற மதிப்பீடு வேண்டி இறைவேண்டல் செய்வோம். நாம் எப்போதும் எல்லாராலும் பாராட்டப்பட வேண்டும் எனவும், நாம் இந்த உலகின் மையம் என்றும் நினைக்கிறோம். நம் வீடு அல்லது பணியிடத்தை விட்டுச் சற்றே வெளியேறினால், நாம் இல்லாமலும் உலகம் இயங்கும் என்பது நமக்குப் புரிகிறது. நாம் இன்றியமையாதவர்கள் அல்லர் என்பதை உணர்த்துவது தாழ்ச்சி.