Wednesday, August 28, 2019

புனித அகுஸ்தினார்

இன்றைய (28 ஆகஸ்ட் 2019) புனிதர்

புனித அகுஸ்தினார்

இன்று நாம் புனித அகுஸ்தினாரின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம். நேற்று நாம் கொண்டாடிய மோனிக்காவின் ஒரே மகன் இவர். தவமாய்த் தவமிருந்து பெற்ற மகன் மனிக்கேயம் என்ற தப்பறைக் கொள்கையிலிருந்து மீண்டு கிறிஸ்தவனாக திருமுழுக்கு பெற மாட்டானா என்று இவள் தன் மகனுக்காக வேண்டினாள். ஆனால், என்ன அற்புதம்! கிறிஸ்தவனாக மட்டுமல்ல. ஓர் அருள்பணியாளராகவும், ஓர் ஆயராகவும் கடவுள் இவரை உயர்த்துகின்றார். கடவுளுடைய கணக்கேட்டில் பாவத்தின் பக்கங்கள் உடனடியாகக் கிழிக்கப்பட்டுவிடும் என்பதற்கு இதுவே சான்று.

நான் மூன்று ஆண்டுகளாக நிறுத்தியும் தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்ற 'ஒப்புகைகள்' மொழிபெயர்ப்புப் பணியை விரைவில் முடிக்க அகுஸ்தினாரின் துணையை இன்று வேண்டுகிறேன்.

அகுஸ்தினாரின் 'ஒப்புகைகள்' நூலிலிருந்து நான் இவரிடம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் மூன்று:

அ. தன் இறந்தகாலத்தோடு ஒப்புரவு

ஒருவர் மற்றவரை மன்னிக்க வேண்டுமென்றால், கடவுளின் மன்னிப்பைப் பெற வேண்டுமென்றால் தன்னை மன்னிப்பதும், தன்னோடு ஒப்புரவு செய்துகொள்வதும் மிகவும் அவசியம் என்பதை அகுஸ்தினார் மிக நன்றாக உணர்ந்திருந்தார். தன் இறந்தகாலத்தோடு ஒப்புரவு செய்துகொள்ளாத ஒருவர் நிகழ்காலத்தில் வாழவும், எதிர்காலத்திற்காக எதிர்நோக்கவும் முடியாது என்பது இவருடைய புரிதலாக இருக்கிறது. சிறுவயதில் தான் வாழ்ந்த தான்தோன்றித்தனமான வாழ்வு, பாலியல் ஈர்ப்பு மற்றும் பிறழ்வு, மனிக்கேயம் என்ற தப்பறைக் கொள்கையின் மேல் நாட்டம் என்று ஒரு பக்கம் இருந்தாலும், தன்னுடைய அறிவு, கற்பிக்கும் திறமை, போதகப் பணி, பேச்சுத் திறமை, அனைவருடனும் நட்புடன் பழகும் பண்பு, தன்னுடைய காலத்தைவிட முற்போக்கான சிந்தனை, மற்றும் படைப்பாற்றல் ஆகியனவும் தனக்கு இருந்தன என்று ஏற்றுக்கொள்கின்றார். அதாவது, நம்முடைய குறைகள் நம்மிடம் இருப்பது போல நம்முடைய நிறைகளும் நம்மிடம் இருக்கின்றன என்பதை பல நேரங்களில் நாம் மறந்துவிடுகிறோம். ஆனால், அகுஸ்தினார் தன்னை தன்னுடைய நிறை-குறையோடு அப்படியே ஏற்றுக்கொள்கின்றார். தன் குற்றவுணர்வை அறவே களைகின்றார். இவ்வாறு தன்னோடு முதன்முதலாக ஒப்புரவு செய்துகொள்கின்றார். இன்று நான் என்னுடைய இறந்தகாலத்தோடு ஒப்புரவு ஆகியிருக்கின்றேனா? நான் அப்படி பிறந்திருக்கலாம், இப்படி பிறந்திருக்கலாம், என்னுடைய பெற்றோர் படித்தவர்களாக இருந்திருக்கலாம், நான் வேறு ஏதாவது படித்திருக்கலாம், நான் அங்கேயே இருந்திருக்கலாம், இங்கேயே இருந்திருக்கலாம் என்று புலம்பும்போதெல்லாம் என் இறந்த காலத்தோடு ஒப்புரவு செய்துகொள்ள மறுக்கிறேன். நான் ஒப்புரவு செய்ய மறுக்கும் ஒவ்வொரு நேரமும் என்னால் நிகழ்காலத்திலும் முழுமையாக வாழ முடியவில்லை. தன்னுடை கடந்த காலம் கடந்துவிட்டது என்றும், அதைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்பதை மிக அழகாக அறிந்தவர் அகுஸ்தினார்.

ஆ. மேலானது வரும் போது கீழானது மறைந்துவிடும்

எடுத்துக்காட்டாக, எனக்கு திருடுகின்ற பழக்கம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இது வெளியில் தெரிகின்ற ஒரு பழக்கம். ஆனால், இதை உந்தித் தள்ளுவது என்னிடம் இருக்கின்ற பேராசை, 'என்னுடையதும் என்னுடையது, உன்னுடையதும் என்னுடையது' என்னும் மனப்பாங்கு. திருட்டுப் பழக்கத்தை ஒழிக்க நான் என்ன செய்ய வேண்டும்? 'என்னுடையதும் உன்னுடையது, உன்னுடையதும் உன்னுடையது' என்று நான் அடுத்தவருக்குக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். இப்படி நேர்முகமாகச் செய்யும்போது எதிர்மறையானது மறைந்துவிடும். எதிர்மறையானதை ஒழிப்பதிலேயே நான் கருத்தாயிருந்தால் மட்டும் அதை ஒழித்துவிட முடியாது. ஏனெனில், நம்முடைய மூளை நேர்முகமான கட்டளைகளையே வேகமாகவும் உறுதியாகவும் நிறைவேற்றும். அகுஸ்தினார் தன்னுடைய கீழான இயல்புகளைக் களைய மேலான இறைவனைப் பற்றிக்கொள்கின்றார். படைப்புப் பொருள்களை விட்டு விட்டு படைத்தவரையே பற்றிக் கொள்கின்றார். மேலான இறைவன் வந்தவுடன் கீழான அனைத்தும் மறைந்துவிடுகின்றன. மேலும், இந்தப் பயணத்தில் அகுஸ்தினார் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவே இல்லை. தொடர்ந்து முன்னேறுகிறார். இன்று நான் என் வாழ்வில் விட வேண்டிய கீழானது எது? அதற்கு எதிர்மாறான மேலான ஒன்றை நான் பற்றிக் கொள்கின்றேனா? துணிச்சலோடு எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் முன்னேறுகின்றேனா?

இ. திறந்த மனம்

'இதுதான் நான்' என்று வெளிப்படையாகத் தன்னை உரித்துக் காட்டுகின்றார் அகுஸ்தினார். ஹிப்போ நகரத்தின் ஆயராக, பெரிய மறைவல்லுநராக, சிறந்த போதகராக இருந்த ஒருவர் தன்னுடைய குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது ஏன்? 'ஒப்புகைகள்' என்னும் இந்நூல் மனிக்கேயத்திற்கு எதிரான கோட்பாட்டு விளக்கமாக, கிறிஸ்தவத்தை உயர்த்திக் காட்டுவதாக இருந்தாலும் யார் ஒருவர் இதற்காக தன்னுடைய வாழ்க்கையின் அழுக்குகளை மற்றவர் முன் துவைக்க முன்வருவார்? தான் பேரிக்காய் திருடியதைக் கூட மிகவும் கலைநுணுக்கத்தோடு எழுதுகின்றார். நான் திருடியது பேரிக்காய் எனக்கு வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, என்னுடைய திருட்டுப் பழக்கத்திற்காக என்று அவர் சொல்லிவிட்டு, நான் பல பெண்களோடு உறவு கொண்டது அவர்கள் எனக்கு வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, என்னிடமிருந்து அந்த பாவ ஈர்ப்பினால்தான் என்று மிக அழகாக பொருத்திப் பார்க்கிறார். தன் பிரச்சினைகளுக்குத் தனக்குள்ளே விடை காணுகின்றார். இன்று என்னுடைய குறைகளை நான் மற்றவர்முன் ஏற்றுக்கொள்வேனா? 'குறைகள் அற்றவன் நான்' என்று காட்டிக்கொள்ள நான் எத்தனை முறை முயற்சி செய்கின்றேன்.

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 23:27-32) இயேசு பரிசேயர்களை, 'வெள்ளையடித்த கல்லறைகளே' எனச் சாடுகின்றார். அகுஸ்தினார் ஒருபோதும் தன்னை வெள்ளையடித்துக்கொள்ளவே இல்லை. தன்னுடைய எலும்பு, அழுக்கு என எல்லாவற்றையும் அப்படியே எடுத்துக் காட்டுகின்றார். இவ்வாறாக, போலித்தனம் களைகின்றார். நேர்மையில் துலங்குகின்றார்.

மேலும், இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 தெச 2:9-13), பவுல் சொல்வதுபோல கடவுளின் வார்த்தையே கடவுளின் வார்த்தைகளாகவே ஏற்றுக்கொண்டு மனம் மாறினார்.

இன்றைய திருப்பாடலும் அகுஸ்தினாரின் இறைவேண்டலாகவே இருக்கிறது: 'ஆண்டவரே, நீர் என்னை ஆய்ந்து அறிந்திக்கின்றீர்!' (திபா 23:27-42)

நிற்க.

உன்னை மிகத் தாமதமாக அன்பு செய்தேன்.
ஓ அழகே!
என்றும் பழமையான, என்றும் புதுமையான அழகே!
உன்னை மிகத் தாமதமாக அன்பு செய்தேன்.
நீ என்னுள் இருந்தாய்.
ஆனால் நான் வெளியே இருந்தேன்.
எனக்கு வெளியே நான் உன்னைத் தேடினேன்.
அன்பு செய்யத் தெரியாததால்
கண்ணுக்குத் தெரிந்த உன் படைப்புக்களை
அன்பு செய்வதில் மும்முரமாயிருந்தேன்.
நீ என்னோடு இருந்தாய்.
ஆனால் நான் உன்னோடு இல்லை.
படைக்கப்பட்டவை உன்னிடமிருந்து என்னைப் பிரித்து விட்டன.
ஆனால் அவைகளிலும் நீ இருந்தாய்.
ஏனெனில் நீ இன்றி எவையும் இல்லையே.
நீ என்னை அழைத்தாய்.
நீ என்னை நோக்கிக் கத்தி என் செவிட்டுக்காதில் உன் குரல் விழச் செய்தாய்.
நீ மின்னலாய் ஒளிர்ந்து என் இருள் போக்கினாய்.
உன் நறுமணத்தால் என்னை நனைத்தாய்.
உன்னை நான் சுவாசித்தேன்.
இப்போது உனக்காக மட்டுமே நான் ஏங்குகிறேன்.
உன்னை நான் ருசித்தேன்.
இப்போது உனக்காகவே நான் பசித்திருக்கிறேன்.
நீ என்னைத் தொட்டாய்.
உன் அமைதியால் நான் எரிந்தேன்.
ஓ அழகே!
என்றும் இளமையே! என்றும் புதுமையே!
உன்னை மிகத் தாமதமாக அன்பு செய்தேன்.

To listen to this song in English please click the link below:

O Beauty Ever Ancient

2 comments:

  1. That's psalm 139, not 23

    Awesome translation of O Beauty... Please complete the book as early as possible. Im finding it hard to understand Confessions

    ReplyDelete
  2. “தாயைப்போல பிள்ளை; நூலைப்போல சேலை”.... இந்தப் பழமொழிக்கு அர்த்தம் தர தாய் மோனிக்கா- மகன் அகுஸ்தினார் இவர்களுக்கு நிகராக யாரும் இருக்க முடியுமா..தெரியவில்லை. ஒரு கிறிஸ்துவனாகப் பார்க்க விரும்பிய மகனை ஒரு ஆயராகப் பார்க்க முடிந்தது இந்தத் தாய்- மகன் ஜோடிக்கு இறைவன் சூட்டிய மகுடம். நம் கடந்த காலத்தோடு நாம் ஒப்புரவாகவும்,மேலானதைப்பார்க்க கீழானதை விட்டொழிக்கவும்,நம்மை உள்ளது உள்ளபடி இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டவும், இவரோடு சேர்ந்து “ இறைவா! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கிறீர்” என்று இறைவனைப். பார்த்துக் கூறவும் அழைக்கிறார் இந்தப்
    புனிதர். என் கடந்த காலம் எப்படி இருந்திருப்பினும் இன்று இறைவனுக்கும், எனக்குமுள்ள தூரம் என்ன என்பதை கணக்கிட அழைக்கிறார்.
    தந்தை எனக்கு அறிமுகமான நாளிலிருந்தே இந்தப்புனிதரும் எனக்கு அறிமுகமானார் என்பது மட்டுமல்ல; எனக்கு நெருக்கமுமானார் என்பது எனக்குப் பெருமை.
    “Late have I loved Thee” என்று இறைவனைப்பார்த்து இவர் கூறும் சொற்றொடர் எனக்கு மிகவும் பிடித்தது. இவருடைய Confessions எனும் நூலை மொழி பெயர்க்கும் தந்தையின் முயற்சி நிறைவாகவும்,விரைவாகவும் முடிய வாழ்த்துக்களும்! செபங்களும்! புனித அகுஸ்தினார் போலவே தந்தையும் திருச்சபைக்கு ஒரு தூணாக வளர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete