Friday, August 30, 2019

விதைக்காத இடத்திலும்

இன்றைய (31 ஆகஸ்ட் 2019) நற்செய்தி (மத் 25:14-30)

விதைக்காத இடத்திலும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தாலந்து எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம். லூக்கா நற்செய்தியிலும் இதே நிகழ்வு சற்றே மாறுபட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

'விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்' என்று பொதுவாகச் சொல்கின்ற இயேசு இந்த எடுத்துக்காட்டில் எதை விண்ணரசுக்கு ஒப்பிடுகிறார் என்பது தெளிவாக இல்லை. தாலந்தைப் பெருக்க வேண்டும் என்று சொல்கிறாரா, அல்லது தாலந்தைப் பெருக்காவிட்டால் தண்டிக்கப்படுவோம் என்று சொல்கிறாரா, அல்லது இந்த நிகழ்வில் வரும் செல்வந்தர் போலக் கடவுள் கறாராக இருப்பார் என்று சொல்கிறாரா என்று தெரியவில்லை.

'சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவர் பெரியவற்றிலும் நம்பிக்கைக்குரியவர்' என்பது நிகழ்வின் இடைச் செய்தி.

'உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதவரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்' என்பது இறுதிச் செய்தியாக இருக்கிறது.

ஆக, பயன்படுத்தாத ஒன்று, அல்லது பலன்தராத ஒன்று நம்மிடமிருந்து பறிக்கப்படும்.

பயன்படுத்தப்படாத ஒன்று மறைந்துபோகும் என்பது பரிணாம வளர்ச்சியின் செய்தியும்கூட. மேலும், நாம் அடிக்கடி பயன்படுத்துகின்ற ஒன்று பலம் பெறும் என்பதும் அதன் நீட்சியே.

இந்த மூன்றாவது பணியாளர் ஏன் தாலந்தைப் பெருக்கவில்லை?

அவரிடமிருந்த பயம் என்றே நினைக்கிறேன்.

ஒரு தாலந்தையும் இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் அதைப் பயன்படுத்தாமல் நிலத்தில் புதைத்து வைக்கிறார். தன் தலைவர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர், தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவர் என்று எண்ணியதால், இருக்கிற ஒரு தாலந்தில் இன்னும் குறைந்துவிட்டால் என்ன ஆவது என்ற நினைப்பில் புதைத்து வைக்கிறார்.

இந்த பயம் சரியானதா?

இவர் தன் தலைவரைப் பற்றி நினைத்திருந்தது சரியா?

நாமே தவறான புரிதல்களைக் கொண்டிருப்பது நம்முடைய பயத்தை இன்னும் அதிகமாக்கும். இவருடைய இந்த பயத்தால் வட்டிக்கடை இருப்பதும் இவருக்கு மறந்துவிட்டது. தலைவர் அத்தவற்றையே சுட்டிக் காட்டுகின்றார்.

பயத்தோடு இணைந்தது சோம்பல்.

யாராவது நம்முடைய வீ;ட்டில் தூங்கி விழுகிறார்கள் என்றால், பகலிலும் அதிகம் தூங்குகிறார்கள் என்றால், அவர்களுடைய உள்ளத்தில் பயமும் கவலையும் அதிகம் இருக்கிறது என்று பொருள். பயத்தாலும் கவலையாலும் இருக்கின்ற உள்ளம் சோம்பிவிடும். சோம்பல் சின்னவற்றிலும் நம்மை சமரசம் செய்யத் தூண்டும்.

இதிலிருந்து விடுபட என்னதான் வழி?

இன்றைய முதல் வாசகம் (1 தெச 4:9-11) இதற்கான விடையைக் கொண்டிருக்கிறது. கடவுளிடமிருந்து அன்பைக் கொடையாகப் பெற்றிருக்கின்ற தெசலோனிக்க நகர் மக்கள் தங்களுடைய அன்பைப் பயன்படுத்தி, தங்களுடைய கைகளைக் கொண்டு நற்செயல்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் பவுல்.

ஒருவேளை அப்பணியாளர் பயம் என்ற உணர்விற்குப் பதிலாக அன்பு என்ற உணர்வை வைத்திருந்தால் தன்னுடைய கைகளையும் கால்களையும் நன்றாகப் பயன்படுத்தியிருப்பார்.

பணியாளரை வர்ணிக்க மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் இயேசு: 'பொல்லாதவன்,' 'சோம்பேறி,' 'பயனற்றவன்.'

விண்ணரசுக்குள் நுழைய ஒருவரைத் தகுதியற்றவர் ஆக்குபவை இப்பண்புகளே.


Thursday, August 29, 2019

என் பெயர் வெரோணிக்கா

இன்றைய (30 ஆகஸ்ட் 2019) நற்செய்தி வாசகம் (மத் 25:1-13)

என் பெயர் வெரோணிக்கா

நீங்கள் இன்றைய நற்செய்தியில் வாசிக்கும்

பத்துக்கன்னியர் உவமையில் வரும் ஒரு கன்னி நான்!

நேற்று காலை என்னுடன் தையல் படிக்கும் சாரா என்னைத் தேடி ஓடி வந்தாள்!

'ஏய்! வெரோ! எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா?'

'என்ன?'

'நாளைக்கு ஒரு திருமண நிகழ்வு. மணமகன் தோழியராய் பத்து பேர் வேண்டுமாம். ஒன்பது பேர் ஏற்பாடு செய்தாயிற்று. இன்னும் ஒரு ஆள் வேணும்! நீயும் வாடி...ப்ளீஸ்...!'

'நீ வந்தா நானும் வர்றேன்!'

'ஆமாம்! நானுந்தான்!'

மாலையில் திருமணம் என்பதால், 'கையில் விளக்கு எடுத்துக்கொண்டு போ!' என்று சொன்னாள் என் அம்மா.

விளக்கை அவசர அவசரமாக துடைத்தேன்.

திறந்து பார்த்தேன். எண்ணெய் ஆழத்தில் சொட்டு சொட்டாய்த் தெரிந்தது.

கல்லைப் போட்டு அதை மேலே கொண்டு வர நான் என்ன காக்காவா?

என் வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரி அணையாமல் மெல்ல சாய்த்து

அதில் உள்ள கொஞ்ச எண்ணெயை என் விளக்கில் ஊற்றிக்கொண்டேன்.

சாராவுடன் சேர்ந்து திருமண மண்டபத்திற்குச் சென்றேன்.

'என்னடி சாரா? விளக்குடன் சேர்த்து ஏதோ கையில் டப்பா?' என்றேன்.

'எக்ஸ்ட்ரா எண்ணெய் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்! எதுக்கும் பயன்படும்ல!'

'இருக்கப்பட்டவள் நீ எடுத்துக்கொண்டாய்! இல்லாதவள் நான் என்ன செய்ய?' என் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.

காத்திருந்தோம். காத்திருந்தோம். மணமகன் வந்தபாடில்லை.

என் கண்களில் தூக்கக் கலக்கம். எப்பொழுது தூங்கிப் போனேன் என்று தெரியவில்லை.

'மணமகன் வருகிறார்!' 'மணமகன் வருகிறார்!' என்ற சத்தம் கேட்டு எல்லாரும் எழுந்தோம்.

விளக்குகளைப் பார்த்தால் விளக்குகள் இப்போவா, பிறகா என்று கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.

'இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினால்தான் நன்றாக எரியும். ஆனால் இந்த எண்ணெய்க்கே நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்!'

சாராவைப்போலவே டப்பாவில் எண்ணெய் கொண்டுவந்த இருக்கப்பெற்றவர்கள் தங்கள் விளக்குகளுக்கு உயிர் கொடுத்தார்கள்!

'சாரா! எனக்கும் கொஞ்சம் எண்ணெய் கொடு!' என்றேன்.

'ஐயயோ! அப்போ எனக்கு இல்லாம போச்சுனா! நீ போய் கடையில் வாங்கிக்கோ!'

'கடையில் வாங்கிக்கவா? காசிருந்தால்தானடி கடைக்குப் போவேன்!'

என்னைப்போலவே கையில் எண்ணெய் இல்லாத - ஆனால் கையில் காசு இருந்த - மற்ற நான்கு பேர் கடைக்கு வேகமாக ஓடினர்.

மணமகன் வந்துவிட்டார்! இதோ என் கண்முன் அவர்!

விளக்குகள் ஏந்திக்கொண்டிருந்த ஐந்து பேரைக் கண்டுகொள்ளாமல் வேகமாக என்னிடம் வந்தார்.

'ஐயோ! என்னை வசைபாடப் போகிறார்!' என நினைத்துக்கொண்டு சாராவின் முதுகிற்குப் பின் ஒதுங்கினேன்.

என் தோளைத் தொட்டார்.

'என் அருகில் வா!' என்றார்.
'நீயே என் மணவாட்டி!' என்றாள்.

என் கையை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.

'இது கனவா? இல்லை! கிள்ளினால் வலிக்கிறதே!'

திருமண மண்டபத்திற்கு தோழியாய்ச் சென்றவளுக்கு மணவாட்டி பாக்கியம் கிடைத்தது.

நிற்க...

இயேசுவின் பத்துக் கன்னியர் உவமையில் முன்மதியில்லாத ஐந்து கன்னியர் வெளியே அனுப்பப்பட்டதில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு.

ஏன்?

தவறு அவர்கள்மேல் அல்லர்! பின் யார்மேல்?

முன்மதியோடு எண்ணெய் கொண்டுவந்த ஐந்துபேர் மேலும்!

மணமகன் மேலும்!

எதற்காக?

முன்மதியோடு எண்ணெய் கொண்டுவந்தவர்கள் இன்றைய முதல் உலக நாடுகள் போல. முன்மதி என்ற பெயரில் அடுத்தவர்களுக்கு உரியதையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வர். இந்த மாதம் 13ஆம் தேதி பூமியின் 'இலக்க கடந்த நாள்' என்று கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது, இந்த வருடம் முழுவதும் நாம் செலவழிக்க வேண்டியதை நான்கு மாதங்களுக்கு முன்னே சுரண்டி முடித்துவிட்டோம்.

'பின் தேவைப்படும்!' என்று நான் சேகரித்து வைப்பதும் எதுவும் முன்மதி அல்ல. சுயநலமே!

இந்த சுயநலம்தான் அந்த ஐந்துபேர் தங்கள் எண்ணெயைப் பகிர்ந்து கொள்ள தடுக்கிறது.

இரண்டாவதாக, மணமகனின் காலதாமதம். வழக்கமாக திருமண இல்லங்களில் மணமகள் வருகைதான் தாமதமாக இருக்கும். ஆனால், இங்கு நேரந்தவறுகிறார் மணமகன். இந்த மணமகனால் பாவம் ஐந்து பேர் பாதிக்கப்படுகின்றனர்.

நேற்று முன் தினம் நாம் கொண்டாடிய புனித அகுஸ்தினார் இந்த வெளியனுப்பப்பட்ட ஐந்து பேரில்தான் ஒருவர் என நினைக்கிறேன்.

ஏனெனில், 'பின்பு பயன்படும்!' என அகுஸ்தினார் தனக்கென எந்த புண்ணியங்களையும் சேர்த்து வைக்கவில்லை.

மேலும் கடவுளை, 'தாமதமாக நான் உன்னை அன்பு செய்தேன்!' என்கிறார். ஆக, இவரின் வாழ்விற்குள் மணமகனின் வருகையும் தாமதமாகவே இருந்தது.

மணமகன் வந்தபோது அணைந்து போன திரியோடும், காய்ந்து போன விளக்கோடும்தான் நின்றுகொண்டிருந்தார் அகுஸ்தினார்.

அவரைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார் இந்த மணமகன்.

இன்று நம் வாழ்விலும் திரிகள் அணைந்தால், விளக்கு காய்ந்து போனால், நான் ஒரு புண்ணியமும் செய்யவில்லையே என வருத்தம் மேவினால் தளர்ந்து போக வேண்டாம். ஏனெனில் நாம் இருப்பதுபோல் நம்மை ஏற்றுக்கொள்வார் அந்த மணமகன்!


Wednesday, August 28, 2019

திருமுழுக்கு யோவானின் பாடுகள்

இன்றைய (29 ஆகஸ்ட் 2019) திருநாள்

திருமுழுக்கு யோவானின் பாடுகள்

அண்மையில் புதிய ஏற்பாட்டு கலிலேயப் பகுதியில் பெண்கள் அணியும் ஜிமிக்கி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புழக்கத்தில் இருந்தது என்று சொல்லப்படுகின்றது.

ஏரோதியாவின் மகள் சலோமியின் காதுகளில் இருந்த இரண்டு ஜிமிக்கிகளில் ஒன்று அவர் நடனமாடும் போது தவறி விழுந்து இன்று நம் கைகளில் கிடைத்திருக்கிறதோ! இருக்கலாம்!

இன்று திருமுழுக்கு யோவானின் பாடுகள் திருநாளைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவான் ஏரோது அரசனால் கொல்லப்படும் நிலையே அவர் அனுபவித்த பாடு.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 6:17-29) நாம் அதிகமாக வாசிக்கக் கேட்ட ஒன்றுதான்: ஏரோது, ஏரோதியா, சலோமி, யோவான்.

இந்த நிகழ்வு ஒரு வாழ்வியல் உருவகம் என்றே கருதுகிறேன். இந்நிகழ்வில் யோவான் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நான்கு பேருமே பாடுகள் பாடுகின்றனர். இப்பாடுகளை நாமும் நம் வாழ்வில் படுகின்றோம். இந்நால்வரின் துன்பங்கள் நம் துன்பங்களாகவும் இருக்கின்றன.

1. இரண்டு நல்லவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தலின் துன்பம்

நமக்கு வாழ்க்கையில ஒரு நல்லது ஒரு கெட்டது என்று சொல்லி ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு அந்த ஒரு நல்லதைத் தேர்ந்தெடுத்து விடுவோம். ஒரு தட்டில் உணவும் இன்னொரு தட்டில் கல்லும் வைத்தால் நாம் உண்பதற்கு உணவைத் தேர்ந்துகொள்வோம். ஆனால், வாழ்க்கையின் தெளிவுகள் எல்லாமே அப்படி எளிதாக அமைந்துவிடுவதில்லை. இரண்டும் நல்லவையாக இருந்தால் அல்லது நல்லவை மாதிரி தெரிந்தால் என்ன செய்வது? தன் சகோதரனுடைய மனைவி ஏரோதியாவை வைத்திருப்பது நல்லது அல்லது என்று ஏரோதுக்குத் தெரிகிறது. ஆகையால் யோவானின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்கிறார். அதே நேரத்தில் ஏரோதியா தன்னோடு இருப்பதும் நல்லது என்றும், தான் அவள்மேல் கொள்ளும் காதல் உண்மை என்றும் தெரிகிறது. தொடர்ந்து, திருமுழுக்கு யோவான் வாழ்வதும் நல்லது என்று நினைக்கிறார். விருந்தினர்களைத் திருப்திப்படுத்துவதும் நல்லது என நினைக்கிறார். இரண்டு நல்லவைகளில் நாம் எந்த ஒன்றை எடுத்தாலும் அது நல்லது என்கிறது அறநெறியியல். ஆனால், ஏரோதின் தெரிவு யோவானின் உயிரை விலையாகக் கேட்கிறது.

2. கண்களில் விழும் தூசி தரும் துன்பம்

ஒரு குழுமத்தில் இருக்கிறோம் என வைத்துக்கொள்வோம். அல்லது ஒரு பள்ளிக்கூடத்தில் நிறையப் பேரோடு வேலை செய்கிறோம். ஐம்பது பேர் இருக்கின்ற அந்த இடத்தில் ஒருவர் நம்மை ஏதோ சொல்லிக் காயப்படுத்திவிட்டார். அந்த வார்த்தை நம் கண்களில் ஒரு தூசி போல விழுந்துவிடுகிறது. நாம் கசக்கினால் கண்கள் கலங்கும். கசக்காமல் விட்டால் தூசி வெளியே வராது. கண்களை உறுத்திக்கொண்டே இருக்கும். மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் இருக்கும் துன்பங்கள் இவை. ஏரோதியாவின் கண்களில் விழுந்த தூசிதான் திருமுழுக்கு யோவான். 'என் கணவர் பிலிப்பை விட்டுவிட்டு நான் ஏரோதிடம் கூடி வாழ்வதால் எனக்கும் பிரச்சினையில்லை, என் முன்னாள் கணவருக்கும் பிரச்சினையில்லை, என் இந்நாள் கணவருக்கும் பிரச்சினையில்லை, என் குடும்பத்தில், சமூகத்தில் யாருக்கும் பிரச்சினையில்லை. உனக்கு என்ன பிரச்சினை?' என்று அன்றாடம் யோவானைப் பார்க்கும்போதெல்லாம் தன் மனத்துள் கேட்டுக்கொள்கிறாள் ஏரோது. நேரும் வந்தவுடன் அதைச் சரியாகப் பயன்படுத்தி தூசியை அகற்றி விடுகிறாள். ஆனால், பாவம்! தூசியை அகற்றும்போது கண்ணையே குத்திக்கொள்கிறாள்.

3. 'நான் என்ன செய்வது?' என்று கேட்கும் துன்பம்

யாராவது நண்பரை டீக்கடைக்குக் கூட்டிச் சென்று, 'என்ன வேண்டும்?' என்று கேளுங்கள். அவர் அங்கிருக்கும் போர்டைப் பார்ப்பார், அடுத்தவர் குடிக்கும் குவளையைப் பார்ப்பார், அல்லது 'நீயே ஏதாச்சும் சொல்லு' என்பார். 'எனக்கு டீ பிடிக்குமா? காஃபி பிடிக்குமா?' என்றே பலருக்குத் தெரிவதில்லை. ஐஸ் க்ரீம் கடைக்குப் போனால் இன்னும் ஆபத்து. தங்களுக்கு என்ன வேண்டும், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருப்பவர்கள் மிகவும் பரிதாபத்துற்குரியவர்கள். சலோமி அப்படித்தான் இருக்கிறாள். அவளுக்கு என்ன வேண்டும் என்பது அவளுக்குத் தெரியவில்லை. நடனம் ஆடத் தெரிந்த அவளுக்கு நாட்டின் பாதியை ஆளத் தெரியாதுதான். ஆனால், அதுவே அவளுக்குத் தெரியவில்லை. தாயிடம் ஓடி, 'நான் என்ன கேட்கலாம்?' எனக் கேட்கிறாள். இந்த நேரத்தில் எனக்கு என்ன வேண்டும்? என் வாழ்விலிருந்து எனக்கு என்ன வேண்டும்? நான் செய்யவிருப்பது என்ன? என்று தெளிவாக இருப்பவர்களே இத்துன்பத்திலிருந்து தப்ப முடியும்.

4. நீதியா? சமரசமா? என எழும் துன்பம்

என்னிடம் ஒருவர் வேலை செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருடைய வேலைக்கு நான் தர வேண்டியது ஐந்நூறு ரூபாய். ஆனால், அவர் என்னிடம் முன்னால் நிறைய உதவிகள் பெற்றிருக்கிறார். நான் என்ன செய்கிறேன்? அதை மனத்தில் வைத்துக்கொண்டு முந்நூறு ரூபாய் கொடுக்கிறேன். அப்படிச் செய்யும்போது நான் நீதியோடு சமரசம் செய்துகொள்கிறேன். 'அரசன் செய்யும் தவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்' என்ற நீதியின் வேட்கை ஒரு பக்கம். 'யார் என்ன செய்தால் என்ன? இதில் என்ன தவறு?' என்ற மனச்சான்றைச் சமரசம் செய்து கொள்ளும் ஆசை ஒரு பக்கம். இந்த எண்ணம் ஒருவேளை யோவானுக்கும் வந்திருக்கலாம். ஆனால், சமரசம் செய்துகொள்ள அவர் மறுக்கிறார்.

மேற்காணும் நான்கு துன்பங்களும் நாம் அனுபவிக்கும் வாழ்வியல் பாடுகள். பாடுகளில் வெல்வது என்பது ஒரு காலை ஊன்றி இருப்பது. இரண்டு படகுகளில் கால் வைக்கும் எவரும் தன் பயணத்தை முடிப்பதில்லை. இரண்டு மான்களைத் துரத்தும் எவரும் ஒரு மானையும் பிடிப்பதில்லை.

புனித அகுஸ்தினார்

இன்றைய (28 ஆகஸ்ட் 2019) புனிதர்

புனித அகுஸ்தினார்

இன்று நாம் புனித அகுஸ்தினாரின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம். நேற்று நாம் கொண்டாடிய மோனிக்காவின் ஒரே மகன் இவர். தவமாய்த் தவமிருந்து பெற்ற மகன் மனிக்கேயம் என்ற தப்பறைக் கொள்கையிலிருந்து மீண்டு கிறிஸ்தவனாக திருமுழுக்கு பெற மாட்டானா என்று இவள் தன் மகனுக்காக வேண்டினாள். ஆனால், என்ன அற்புதம்! கிறிஸ்தவனாக மட்டுமல்ல. ஓர் அருள்பணியாளராகவும், ஓர் ஆயராகவும் கடவுள் இவரை உயர்த்துகின்றார். கடவுளுடைய கணக்கேட்டில் பாவத்தின் பக்கங்கள் உடனடியாகக் கிழிக்கப்பட்டுவிடும் என்பதற்கு இதுவே சான்று.

நான் மூன்று ஆண்டுகளாக நிறுத்தியும் தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்ற 'ஒப்புகைகள்' மொழிபெயர்ப்புப் பணியை விரைவில் முடிக்க அகுஸ்தினாரின் துணையை இன்று வேண்டுகிறேன்.

அகுஸ்தினாரின் 'ஒப்புகைகள்' நூலிலிருந்து நான் இவரிடம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் மூன்று:

அ. தன் இறந்தகாலத்தோடு ஒப்புரவு

ஒருவர் மற்றவரை மன்னிக்க வேண்டுமென்றால், கடவுளின் மன்னிப்பைப் பெற வேண்டுமென்றால் தன்னை மன்னிப்பதும், தன்னோடு ஒப்புரவு செய்துகொள்வதும் மிகவும் அவசியம் என்பதை அகுஸ்தினார் மிக நன்றாக உணர்ந்திருந்தார். தன் இறந்தகாலத்தோடு ஒப்புரவு செய்துகொள்ளாத ஒருவர் நிகழ்காலத்தில் வாழவும், எதிர்காலத்திற்காக எதிர்நோக்கவும் முடியாது என்பது இவருடைய புரிதலாக இருக்கிறது. சிறுவயதில் தான் வாழ்ந்த தான்தோன்றித்தனமான வாழ்வு, பாலியல் ஈர்ப்பு மற்றும் பிறழ்வு, மனிக்கேயம் என்ற தப்பறைக் கொள்கையின் மேல் நாட்டம் என்று ஒரு பக்கம் இருந்தாலும், தன்னுடைய அறிவு, கற்பிக்கும் திறமை, போதகப் பணி, பேச்சுத் திறமை, அனைவருடனும் நட்புடன் பழகும் பண்பு, தன்னுடைய காலத்தைவிட முற்போக்கான சிந்தனை, மற்றும் படைப்பாற்றல் ஆகியனவும் தனக்கு இருந்தன என்று ஏற்றுக்கொள்கின்றார். அதாவது, நம்முடைய குறைகள் நம்மிடம் இருப்பது போல நம்முடைய நிறைகளும் நம்மிடம் இருக்கின்றன என்பதை பல நேரங்களில் நாம் மறந்துவிடுகிறோம். ஆனால், அகுஸ்தினார் தன்னை தன்னுடைய நிறை-குறையோடு அப்படியே ஏற்றுக்கொள்கின்றார். தன் குற்றவுணர்வை அறவே களைகின்றார். இவ்வாறு தன்னோடு முதன்முதலாக ஒப்புரவு செய்துகொள்கின்றார். இன்று நான் என்னுடைய இறந்தகாலத்தோடு ஒப்புரவு ஆகியிருக்கின்றேனா? நான் அப்படி பிறந்திருக்கலாம், இப்படி பிறந்திருக்கலாம், என்னுடைய பெற்றோர் படித்தவர்களாக இருந்திருக்கலாம், நான் வேறு ஏதாவது படித்திருக்கலாம், நான் அங்கேயே இருந்திருக்கலாம், இங்கேயே இருந்திருக்கலாம் என்று புலம்பும்போதெல்லாம் என் இறந்த காலத்தோடு ஒப்புரவு செய்துகொள்ள மறுக்கிறேன். நான் ஒப்புரவு செய்ய மறுக்கும் ஒவ்வொரு நேரமும் என்னால் நிகழ்காலத்திலும் முழுமையாக வாழ முடியவில்லை. தன்னுடை கடந்த காலம் கடந்துவிட்டது என்றும், அதைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்பதை மிக அழகாக அறிந்தவர் அகுஸ்தினார்.

ஆ. மேலானது வரும் போது கீழானது மறைந்துவிடும்

எடுத்துக்காட்டாக, எனக்கு திருடுகின்ற பழக்கம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இது வெளியில் தெரிகின்ற ஒரு பழக்கம். ஆனால், இதை உந்தித் தள்ளுவது என்னிடம் இருக்கின்ற பேராசை, 'என்னுடையதும் என்னுடையது, உன்னுடையதும் என்னுடையது' என்னும் மனப்பாங்கு. திருட்டுப் பழக்கத்தை ஒழிக்க நான் என்ன செய்ய வேண்டும்? 'என்னுடையதும் உன்னுடையது, உன்னுடையதும் உன்னுடையது' என்று நான் அடுத்தவருக்குக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். இப்படி நேர்முகமாகச் செய்யும்போது எதிர்மறையானது மறைந்துவிடும். எதிர்மறையானதை ஒழிப்பதிலேயே நான் கருத்தாயிருந்தால் மட்டும் அதை ஒழித்துவிட முடியாது. ஏனெனில், நம்முடைய மூளை நேர்முகமான கட்டளைகளையே வேகமாகவும் உறுதியாகவும் நிறைவேற்றும். அகுஸ்தினார் தன்னுடைய கீழான இயல்புகளைக் களைய மேலான இறைவனைப் பற்றிக்கொள்கின்றார். படைப்புப் பொருள்களை விட்டு விட்டு படைத்தவரையே பற்றிக் கொள்கின்றார். மேலான இறைவன் வந்தவுடன் கீழான அனைத்தும் மறைந்துவிடுகின்றன. மேலும், இந்தப் பயணத்தில் அகுஸ்தினார் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவே இல்லை. தொடர்ந்து முன்னேறுகிறார். இன்று நான் என் வாழ்வில் விட வேண்டிய கீழானது எது? அதற்கு எதிர்மாறான மேலான ஒன்றை நான் பற்றிக் கொள்கின்றேனா? துணிச்சலோடு எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் முன்னேறுகின்றேனா?

இ. திறந்த மனம்

'இதுதான் நான்' என்று வெளிப்படையாகத் தன்னை உரித்துக் காட்டுகின்றார் அகுஸ்தினார். ஹிப்போ நகரத்தின் ஆயராக, பெரிய மறைவல்லுநராக, சிறந்த போதகராக இருந்த ஒருவர் தன்னுடைய குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது ஏன்? 'ஒப்புகைகள்' என்னும் இந்நூல் மனிக்கேயத்திற்கு எதிரான கோட்பாட்டு விளக்கமாக, கிறிஸ்தவத்தை உயர்த்திக் காட்டுவதாக இருந்தாலும் யார் ஒருவர் இதற்காக தன்னுடைய வாழ்க்கையின் அழுக்குகளை மற்றவர் முன் துவைக்க முன்வருவார்? தான் பேரிக்காய் திருடியதைக் கூட மிகவும் கலைநுணுக்கத்தோடு எழுதுகின்றார். நான் திருடியது பேரிக்காய் எனக்கு வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, என்னுடைய திருட்டுப் பழக்கத்திற்காக என்று அவர் சொல்லிவிட்டு, நான் பல பெண்களோடு உறவு கொண்டது அவர்கள் எனக்கு வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, என்னிடமிருந்து அந்த பாவ ஈர்ப்பினால்தான் என்று மிக அழகாக பொருத்திப் பார்க்கிறார். தன் பிரச்சினைகளுக்குத் தனக்குள்ளே விடை காணுகின்றார். இன்று என்னுடைய குறைகளை நான் மற்றவர்முன் ஏற்றுக்கொள்வேனா? 'குறைகள் அற்றவன் நான்' என்று காட்டிக்கொள்ள நான் எத்தனை முறை முயற்சி செய்கின்றேன்.

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 23:27-32) இயேசு பரிசேயர்களை, 'வெள்ளையடித்த கல்லறைகளே' எனச் சாடுகின்றார். அகுஸ்தினார் ஒருபோதும் தன்னை வெள்ளையடித்துக்கொள்ளவே இல்லை. தன்னுடைய எலும்பு, அழுக்கு என எல்லாவற்றையும் அப்படியே எடுத்துக் காட்டுகின்றார். இவ்வாறாக, போலித்தனம் களைகின்றார். நேர்மையில் துலங்குகின்றார்.

மேலும், இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 தெச 2:9-13), பவுல் சொல்வதுபோல கடவுளின் வார்த்தையே கடவுளின் வார்த்தைகளாகவே ஏற்றுக்கொண்டு மனம் மாறினார்.

இன்றைய திருப்பாடலும் அகுஸ்தினாரின் இறைவேண்டலாகவே இருக்கிறது: 'ஆண்டவரே, நீர் என்னை ஆய்ந்து அறிந்திக்கின்றீர்!' (திபா 23:27-42)

நிற்க.

உன்னை மிகத் தாமதமாக அன்பு செய்தேன்.
ஓ அழகே!
என்றும் பழமையான, என்றும் புதுமையான அழகே!
உன்னை மிகத் தாமதமாக அன்பு செய்தேன்.
நீ என்னுள் இருந்தாய்.
ஆனால் நான் வெளியே இருந்தேன்.
எனக்கு வெளியே நான் உன்னைத் தேடினேன்.
அன்பு செய்யத் தெரியாததால்
கண்ணுக்குத் தெரிந்த உன் படைப்புக்களை
அன்பு செய்வதில் மும்முரமாயிருந்தேன்.
நீ என்னோடு இருந்தாய்.
ஆனால் நான் உன்னோடு இல்லை.
படைக்கப்பட்டவை உன்னிடமிருந்து என்னைப் பிரித்து விட்டன.
ஆனால் அவைகளிலும் நீ இருந்தாய்.
ஏனெனில் நீ இன்றி எவையும் இல்லையே.
நீ என்னை அழைத்தாய்.
நீ என்னை நோக்கிக் கத்தி என் செவிட்டுக்காதில் உன் குரல் விழச் செய்தாய்.
நீ மின்னலாய் ஒளிர்ந்து என் இருள் போக்கினாய்.
உன் நறுமணத்தால் என்னை நனைத்தாய்.
உன்னை நான் சுவாசித்தேன்.
இப்போது உனக்காக மட்டுமே நான் ஏங்குகிறேன்.
உன்னை நான் ருசித்தேன்.
இப்போது உனக்காகவே நான் பசித்திருக்கிறேன்.
நீ என்னைத் தொட்டாய்.
உன் அமைதியால் நான் எரிந்தேன்.
ஓ அழகே!
என்றும் இளமையே! என்றும் புதுமையே!
உன்னை மிகத் தாமதமாக அன்பு செய்தேன்.

To listen to this song in English please click the link below:

O Beauty Ever Ancient

Monday, August 26, 2019

தாய் தன் குழந்தைகளை

இன்றைய (27 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (1 தெச 2:1-8)

தாய் தன் குழந்தைகளை

கடந்த ஆண்டு எங்கள் இறையியல் கல்லூரியில் 'விவிலியத்தில் மறைத்தூதுப்பணி' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், 'திருத்தூதர் பவுல் திருமணம் செய்தவரா?' என்ற கேள்வி ஒருவரால் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அருள்பணியாளர், 'திருமணம் செய்தவர் என்பதற்கும் சில சான்றுகள் உள்ளன. திருமணம் செய்யாதவர் என்பதற்கும் சில சான்றுகள்' உள்ளன என்று சொன்னார். பவுலின் தனிப்பட்ட வாழ்வு பற்றி நமக்கு ஒன்றும் தெரியாததால் நாம் இதை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.

இன்றைய முதல் வாசகத்தில் தன்னுடைய பணியைப் பற்றி எழுதுகின்ற பவுல், 'தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பது போல கனிவுடன் நடந்துகொண்டோம்' என்கிறார். இந்த வரியைப் பார்க்கும்போது பவுல் தன்னுடைய தாயை மனத்தில் கொண்டிருந்தாரா அல்லது தன்னுடைய மனைவியை மனத்தில் கொண்டிருந்தாரா அல்லது பொதுவான ஒரு தாயை மனத்தில் கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. வழக்கமாக தாய்மையோடு அதிகமாக இணைக்கப்படும் மதிப்பீடு தியாகம். ஆனால், பவுல் சற்றே மாறுபட்டு, 'கனிவு' என்பதே 'தாய்மை' என்கிறார்.

கனிவு என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

இந்த வரிக்கு முன்பாக, பவுல், 'மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை' என்கிறார். பெருமை கொள்கின்ற உள்ளம் தன்னையே உயர்த்தி நிற்கும். ஆனால், கனிவு கொள்கிற உள்ளம் தாழ்ந்து நிற்கும். இதுதான் தாய்மை. கனிந்து தரையில் விழப்போகும் பழம் தாழ்ந்தே இருக்கும். தன்னுடைய குழந்தையை நோக்கித் தாழ்ந்து பணிகின்ற தாய்தான் அதற்கு வழிகாட்ட முடியும், அதை அள்ளி அணைத்துக்கொள்ள, அதன் அழுகையைத் தணித்துக்கொள்ள முடியும்.

தன்னுடைய நற்செய்திப் பணியின் முக்கிய மதிப்பீடாக கனிவை முன்வைக்கிறார் பவுல். இன்று நான் செய்கின்ற எல்லாப் பணிகளிலும் கனிவு தெரிகிறதா? அல்லது பெருமை தெரிகிறதா? கனிவு தெரிந்தால் மட்டுமே பணி சிறக்க முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 23:23-26) மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயரைத் தொடர்ந்து சாடுகின்ற பவுல், அவர்கள் சமயத்தின் முக்கியக்கூறான கனிவை மறந்துவிட்டு, வீணான பாரம்பரியங்களையும், தூய்மைச் சடங்கையும் பற்றிக்கொண்டிருப்பதைச் சாடுகின்றார்.

இன்று நாம் கொண்டாடும் புனித மோனிக்கா, புனித அகுஸ்தினாரின் தாய், கனிவிற்கு நல்ல எடுத்துக்காட்டு. தன் வயிற்றின் கனியாகிய அகுஸ்தின் கனியும் வரை இவர் கண்ணீரால் கரைந்தார். இவரின் கண்ணீரின் சூட்டில் அகுஸ்தின் என்னும் காய் கனிந்தது. இவர் தன் மகனைப் பார்த்துக் கனிவுடன் குணிந்ததால் தான், அந்த மகன் கடவுளைப் பார்த்து துணிவுடன் எழுந்தான்.

இன்று நான் என் பணியிலும், வாழ்விலும் கொண்டிருக்க வேண்டியது இந்த ஒரு மதிப்பீடே: கனிவு.

என் சொல், செயல், எதிர்நோக்கு அனைத்திலும் இது பிரதிபலிக்க வேண்டும்.

நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் இந்த மோனிக்கா போல ஏதோ ஒன்றிற்காய் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்க, நான் இவரின் கண்ணீரைக் கூட்டலாமா?

கனிவில் வளர என்ன செய்ய வேண்டும்?

அ. யாரையும் தீர்ப்பிடக் கூடாது. தீர்ப்பிடும் மனம் தன்னையே தாழ்த்தாது. தனக்கென்று ஒரு அளவுகோல் வைத்துக்கொண்டு எல்லாரையும் அதைக் கொண்டு மதிப்பிடும். மோனிக்கா ஒருவேளை இப்படிப்பட்ட அளவுகோலை வைத்திருந்தால், தன் மகனைவிட தான் புனிதமானவர், தன் மகன் சாபத்திற்குரியவர் என்று அவரை அவமானப்படுத்துவதில் கருத்தாயிருந்திருப்பார். தன் மகனுடைய பிறழ்வான உணர்வுகள், நல்ல படிப்பு, நல்ல அறிவு, நல்ல நட்பு வட்டம் என அனைத்தையும் ஒன்றுபோல எடுத்துக்கொள்கின்றார். தன் மகனின் படிப்பிற்காக அவரை உச்சி முகரவும் இல்லை. தன் மகன் தவறான உறவில் இருந்ததற்கா எட்டி உதைக்கவும் இல்லை. தீர்ப்பிடாத உள்ளம்தான் இப்படிக் கனிவோடு இருக்க முடியும்.

ஆ. நான்தான் மையம் என்பதை விட்டு நகர வேண்டும். என்னைப் போலவே அல்லது என்னைவிட நிறைய மையங்கள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தாய் ஒருபோதும் தன் குழந்தையைவிட அதிகம் தெரிந்தவள் என்று காட்டுவதே இல்லை. தன் மகள் வரையும் 'அ' என்ற எழுத்தை அப்படிப் பாராட்டுகிறாள். ஏன்? அவள் தன் மையம் கொண்டிருப்பதில்லை. அவளின் மையம் குழந்தையே.

இ. சட்டதிட்டங்கள், வரைமுறைகள், வரையறைகள் அனைத்தையும் விட்டு வெளியேற வேண்டும். இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட நிலை வரைதான் அன்றி இறுதி வரை அவை வருவதில்லை. 'நீங்கள் நிறைய நண்பர்கள் வைத்திருக்கலாம். சொத்து சேர்த்திருக்கலாம். பெரிய வேலையில் இருக்கலாம். ஆனால் எத்தனை பேர் உங்கள் இறுதி ஊர்வலத்திற்கு வருகிறார்கள் என்பது அன்றைய நாளின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தே (க்ளைமேட்டை) பொறுத்தே' என்பது அமெரிக்காவில் நான் லிஃப்ட் ஒன்றில் வாசித்த வாசகம். ஆக, கனிவு கொண்டிருப்பவர் தன் வாழ்க்கையின் வரையறையைத் தானே நிர்ணயம் செய்வார்.

கனிவு நோக்கி நாம் நகர மோனிக்கா நமக்கு உதவி செய்வாராக!

Sunday, August 25, 2019

குருட்டு வழிகாட்டிகள்

இன்றைய (26 ஆகஸ்ட் 2019) நற்செய்தி (மத் 23:13-32)

குருட்டு வழிகாட்டிகள்

நாங்கள் ஆன்மீக இயல் படித்துக்கொண்டிருந்தபோது எங்களுக்கு வகுப்பெடுத்த அருள்தந்தை தொனேதஸ் ஜெயராஜ், சேச, அவர்கள் அடிக்கடி இந்த எடுத்துக்காட்டைச் சொல்வார்: குரங்கு மரத்தின் மேலே ஏற ஏற அதனுடைய அடிப்பகுதி எல்லாருக்கும் தெரியும், நன்றாகத் தெரியும்.

இதன் பின்புலம் இதுதான். பூனை மரத்தில் ஏறினாலும் குரங்கு மரத்தில் ஏறினாலும் கீழிருந்து பார்த்தால் ஒன்றுபோலத்தான் தெரியும். ஆனால், கொஞ்சம் உற்று நோக்கினால் குரங்கின் அடிப்பகுதி மிகவும் அசிங்கமாக இருக்கும். சுத்தத்தில் குரங்கைவிட பூனை ஒரு படி மேல்.

ஒருவர் மேலே செல்லச் செல்ல அவர் அதிகம் பார்க்கப்படுவார். அதிகம் விமர்சனம் செய்யப்படுவார்.

சின்ன விடயத்துக்குக் கூட மற்றவர்கள் நம்மை பின்பற்ற ஆரம்பிப்பார்கள். சிலர் என்னிடம் கேட்பதுண்டு. 'ஃபாதர் நீங்க எந்த ஃபோன் வச்சிருக்கிறீங்க?' 'நாங்க எந்த ஃபோன் வாங்கலாம்?' 'நீங்க எங்க சட்டை தைப்பீங்க?' 'நாங்க உங்ககூட வரலாமா?'

நாம் மேலே செல்லச் செல்ல நாம் அடுத்தவர்மேல் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்துகிறோம். அது ஆசிரியப் பணி, அருள்பணி, அரசியல் பணி என எந்தப் பணியாக இருந்தாலும்.

ஆனால், இதை நாம் மறந்துவிடும்போது குருட்டு வழிகாட்டிகள் ஆகிவிடுகின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு 'வெளிவேடக்காரரே, மறைநூல் அறிஞரே, பரிசேயரே' என சாடுகின்றார். 'குருட்டு வழிகாட்டிகளே,' 'குருடரே,' 'குருட்டு மடையரே' என்று அவர்களைச் சாடுகின்றார். சாதாரண அளவில் பார்த்தால் இயேசு ஒரு தச்சன். இவர்கள் இயேசுவின் சமகாலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். சட்டநூல்களைக் கற்றவர்கள். நிறைய விவாதம் செய்தவர்கள். ஏறக்குறைய இன்றைய ஹார்வர்ட், யேல், பிப்லிகும் போன்ற நிறுவனங்களில் படித்த படிப்பை ஒத்தவர்கள். ஆனால், அவர்கள் அறிவற்றவர்கள், தன்னறிவற்றவர்கள், தெளிவற்றவர்கள் என்கிறார் ஆண்டவர். இப்படி இருக்கும் ஒருவர் மற்றவருக்கு வழிகாட்டும்போது அவரும் பிறழ்வடைய வாய்ப்புண்டு.

இன்று நாம் எந்த நிலையில் இருந்தாலும், எந்த அழைத்தலில் இருந்தாலும் தன்னறிவு மிகவும் அவசியம். தன்னறிவு இல்லாமல் நாம் மற்றவர்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்த முயலும்போது அது மிகவும் பெரிய ஆபத்தில் போய் முடியும்.

தன்னறிவு, அறிவுத் தெளிவு - இவையே நாம் வேண்டும் வரமாகட்டும்.

Friday, August 23, 2019

புனித பர்த்தலமேயு

இன்றைய (24 ஆகஸ்ட் 2019) திருநாள்

புனித பர்த்தலமேயு

இன்று நாம் திருத்தூதரான புனித பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். இவரை நத்தனியேல் என்று யோவான் நற்செய்தியாளர் அழைக்கிறார். இதுதான் இவருடைய இயற்பெயராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், 'பர்த்தலமேயு' என்றால் அரமேயத்தில் 'தலமேயுவின் மகன்' என்றுதான் பொருளே தவிர வேறொன்றுமில்லை. 'நத்தனியேல்' என்றால் 'கடவுளின் கொடை' அல்லது 'கடவுள் கொடுத்தார்' என்று பொருள்.

இயேசுவைக் கண்ட பிலிப்பு தன் நண்பரான நத்தனியேலிடம் போய், 'அவரை நாங்கள் கண்டுகொண்டோம்' என்று சொல்ல, அவரோ, 'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?' என்று தயக்கம் காட்டுகிறார். ஆனால், 'வந்து பாரும்' என்று பிலிப்பு அழைத்தவுடன் இயேசுவைச் சென்று பார்க்கிறார்.

'வந்து பாரும்!'

நமக்கு உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் அல்லது மருத்துவமனையில் இருந்தால், அல்லது நம் வீட்டில் குழந்தை பிறந்திருந்தால், அல்லது ஒருவருக்கு பரிந்துரைக் கடிதம் கொடுப்பதாக இருந்தால், அல்லது ஒருவருக்கு உதவி செய்ய நினைத்தால், அல்லது மேலதிகரியாக இருக்கும் எனக்குக் கீழ் இருக்கும் ஒருவர் தவறு செய்தால், 'வந்து பாரும்' என்று என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். மேலும், 'அவன் வந்து பார்னு நிக்கிறான்' என்ற வாக்கியத்தில். 'வந்து பார்' என்பது நேருக்கு நேராக நிற்கும் துணிச்சலையும் குறிப்பிடுகிறது.

இன்று நாம் 'வந்து பாரும்' என்ற வார்த்தைகளை இரண்டு கோணங்களில் யோசிப்போம்.

அ. பிலிப்பு நத்தனியேலிடம் சொன்னது போல, இயேசுவை 'வந்து பாரும்' என நான் எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? நான் இயேசுவை மெசியாவாகக் கண்டுணர்கிறேன். அல்லது அவருடைய அனுபவத்தை நான் பெற்றிருக்கிறேன். நான் எத்தனை பேருக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்?

ஆ. நத்தனியேல் பிலிப்பைப் பின்தொடர்ந்தது போல, 'வந்து பாரும்' என்ற அழைப்பு எனக்கு வந்தவுடன் நான் இயேசுவை எத்தனை முறை சென்று பார்த்திருக்கிறேன்? 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற எண்ணத்திலோ, அத்திமரத்தின் கீழ் அமர்ந்து இறைவாக்குகள் படிப்பதோ போதும் என்று எண்ணவில்லை நத்தனியேல். உடனே புறப்படுகின்றார். இந்தத் தயார்நிலையும், இயேசுவை ஏற்றுக்கொள்ளும் கபடற்ற உள்ளமும் என்னிடம் இருக்கிறதா?

'வந்து பாரும்' என்ற அழைப்பை நான் ஏற்றுச் செல்லும்போதெல்லாம் அவரிடம் 'இன்னும் பெரியவற்றை நான் காண்பேன்.'


Thursday, August 22, 2019

வாற்கோதுமை அறுவடை

இன்றைய (23 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (ரூத் 1:1,3-6,14-16,22)

வாற்கோதுமை அறுவடை

'அப்பத்தின் வீடு' என்றழைக்கப்படும் பெத்லகேமில் கொடிய பஞ்சம் உண்டாகிறது. பஞ்சம் பிழைக்க ஒரு குடும்பம் புலம்பெயர்கிறது. போன இடத்தில் அடுத்தடுத்த இழப்புக்கள். கணவர் எலிமலேக்கும் அவருடைய மகன்களும் இறக்க, மனைவி நகோமியும் மருமகள்கள் ஓர்பாவும் ரூத்தும் மிஞ்சுகின்றனர். ஆண்களைவிட பெண்கள் இழப்புக்களைத் தாங்கக் கூடியவர்கள் என்பது இங்கே தெளிவாகிறது. நகோமி தன் சொந்த ஊர் திரும்பி விழைகின்றார். இதற்கிடையில் மருமகள்களை அவரவர் தந்தையரின் இல்லத்திற்கு அனுப்புகின்றார். ஓர்பா தன் பிறந்தகம் செல்ல, ரூத்து நகோமியைப் பற்றிக் கொள்கிறார்.

'நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன். உமது இல்லமே எனது இல்லம். உம்முடைய இனமே எனது இனம். உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்' என்று நகோமியிடம் ரூத்து சொல்லும் வார்த்தைகள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன.

இவர்கள் பெத்லகேம் நகரை அடையும்போது வாற்கோதுமை அறுவடை தொடங்குகிறது.

பஞ்சத்தால் வழியனுப்பப்பட்டவர்கள் அறுவடையால் வரவேற்கப்படுகின்றனர்.

வாழ்க்கை சற்றென்று மாறிவிடுகின்றது.

நமக்குத் தேவையானதெல்லாம் பொறுமையே.

கணவனோடும் மகன்களோடும் சென்ற நகோமி மருமகளோடு மட்டுமே திரும்பி வருகிறாள். இழப்புக்களை தூர நாட்டில் விட்டுவிட்டாள். இனி அவள் கைகள் வாற்கோதுமையாலும் விரைவில் குழந்தையாலும் நிரப்பப்படும்.

வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் வெகு சாதாரணமாக நடந்து செல்கின்றனர் இவ்விரு கைம்பெண்கள்.

இழப்புக்களால் இவர்கள் வாடிவிடவும் இல்லை.

அறுவடையால் இவர்கள் ஆனந்தப்படவும் இல்லை.

நம்முடைய உணர்வுகளால் மற்றும் உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படாமல் அல்லது அலைக்கழிக்கப்படாமல் வாழக் கற்றுக்கொள்வது அவசியம்.

இந்த மனப்பக்குவம் வர ஒரு மந்திரத்தைச் சொல்லித் தருகிறது இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 22:34-40): 'கடவுளை அன்பு செய்,' 'உன்னை அன்பு செய்,' 'பிறரை அன்பு செய்.' என்னை நான் அன்பு செய்வதன் வேர் கடவுளாகவும், விழுது பிறராகவும் இருத்தல் வேண்டும். கடவுளுக்கும் பிறருக்கும் மையமாக, வேருக்கும் விழுதுக்கும் இடையே தண்டாக இருக்க வேண்டியது நான்தான். கடவுளும், பிறரும் கடந்து போவர். இறுதிவரை என்னோடு இருப்பது நான் மட்டுமே.

ஆக, நான் வெறுங்கையோடும் வாற்கோதுமையோடும் நடக்க வேண்டும் என்ற எதார்த்தம் எனக்குப் புரிந்தால் அதுவே தன்னன்பு, தன்மதிப்பு, தன்னம்பிக்கை.

Wednesday, August 21, 2019

காயங்கள்

இன்றைய (22 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (நீத 11:29-39)

காயங்கள்

இன்றைய முதல் வாசகத்திலும் நற்செய்தி வாசகத்திலும் (காண். மத் 22:1-14) இரண்டு கோரமான நிகழ்வுகளை வாசிக்கின்றோம். முதல் வாசகத்தில், இப்தா என்னும் நீதித் தலைவர் தான் அவசரப்பட்டு அளித்த வாக்குறுதி ஒன்றினால் தன் ஒரே மகளையே ஆண்டவருக்குப் பலியாக்குகின்றார். நற்செய்தி வாசகத்தில், அரசனால் திருமண விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் பணியாளர்களைக் கொலை செய்கின்றனர்.

முன்னவர் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவதால் கொலை நிகழ்கிறது. பின்னவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாததால் கொலை நிகழ்கிறது.

ஆக, வார்த்தையைக் காப்பாற்றுவது என்பது எல்லா நேரத்திலும் தேவையான ஒரு மதிப்பீடு அல்ல. சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி மகளையேக் கொல்லத் துணிந்தார் இப்தா. பாவம் அந்தப் பெயரில்லாப் பெண். 'ஆண்டவருக்கு வாக்கு கொடுத்து விட்டீர்கள் என்றால் உங்கள் வாக்கின்படியே எனக்குச் செய்யுங்கள்' என்கிறாள் அந்த இளவல்.

இப்தா மக்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தாலும் மகளுக்கு அவளுடைய வெற்றி ஆபத்தாய் முடிகிறது.

ஏன் இப்தா இப்படிச் செய்தார்?

இப்தாவைப் பற்றி விவிலியம் நான்கு அடைமொழிகளைத் தருகிறது: (அ) வலிமை மிக்க போர் வீரர், (ஆ) விலைமாதின் மகன், (இ) சகோதரர்களால் விரட்டப்பட்டவர், மற்றும் (ஈ) வீணர்கள் இவரோடு சேர்ந்து திரிந்தனர். தான் ஒரு விலைமாதின் மகன் என்ற எண்ணமும், தன் தாயைக் கருவுறச் செய்தவன் மேலிருந்த கோபமும், சகோதரர்களால் விரட்டப்பட்ட தனிமையும் இப்தாவின் உள்ளத்தில் நிறைய வன்மத்தையும் அநாதை உணர்வையும் உண்டாக்கியிருக்கலாம். மேலும், 'எனக்காக யாராவது இருக்க மாட்டார்களா?' என்ற ஏக்கம் வீணர்களின் பக்கம் இவரைத் தள்ளிவிடுகிறது. ஆக, குடும்பத்திலும் காயம், சமூக உறவிலும் காயம். எல்லாருக்கும் பயந்து வாழ்கின்ற சூழல். இப்படிப்பட்டவர்கள் எல்லாரையும் பயன்பாட்டுப் பொருளாகத்தான் பார்ப்பார்கள். ஏனெனில், இவர்களை மற்றவர்கள் பயன்படுத்துவதால் நிறைய காயத்திற்கு உள்ளாகிவிடுகின்றனர். தாங்கள் பெற்றதை அடுத்தவர்களுக்கு அப்படியே திரும்பக் கொடுக்க நினைத்திருப்பர்.

ஆகையால்தான் தன் ஒரே மகளையும் பலிப்பொருளாகப் பார்க்கிறார். மேலும், அவர் வடிக்கும் கண்ணீர் போலியானது. மேலும், இப்படிப்பட்ட குணம் உடையவர்கள் எல்லாரையும் திருப்திப்படுத்த எண்ணுவர். அதுவும் ஆபத்தானது. தானே உறுதித்தன்மை இல்லாமல் இருந்தாலும் தன் கடவுளையும் தன் ஊர் மக்களையும் திருப்திப்படுத்த நினைக்கிறார்.

ஆக, ஒருவர் தன்னுடைய மனத்தின் காயங்களைச் சரியாகக் கையாளவில்லை என்றால், தன்னுடைய சேர்க்கையின்மேல் கவனமாக இல்லை என்றால், அவருடைய போர்க்குணம் மூர்க்க குணமாக மாறி, எல்லாரையும் பயன்பாட்டுப் பொருளாகப் பார்க்கும் நிலைக்கு ஆளாக்கிவிடும்.

இன்று அருள்பணியாளர்களின் பாலியல் பிறழ்வு பற்றிப் பேசும் போது, அவர்களுடைய மணத்துறவு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. ஏனெனில், தனக்கு ஒரு பெண் அல்லது ஆண் குழந்தை பிறந்து இருந்தால் அருள்பணியாளருக்கு இதன் வலி தெரியும். தன் குழந்தைக்கு யாரும் செய்ய விரும்பாத ஒன்றை அவருக்கு யாரும் செய்ய மாட்டார். இல்லையா?

இன்றைய நற்செய்தியில் நாம் காணும் விருந்தினர்களுக்கும் மனக்காயங்கள் இருக்கின்றன.

அரசன் விருந்திற்கு அழைக்கிறான். அதைவிட என்ன பெரிய பாக்கியம் இருக்க வேண்டும்? அல்லது அழைப்பு வந்தபோதே ஏற்க மறுத்திருக்கலாம். ஏன், அழைப்பை ஏற்றுவிட்டு அப்புறம், 'வர மாட்டேன்' என்று சொல்ல வேண்டும்? அரசன் மேல் அப்படி என்ன கோபம்? அரசனின் கோபத்தை ஏன் அவர்கள் அப்பாவி பணியாளர்கள்மேல் காட்ட வேண்டும்? அல்லது இப்படிச் செய்வதால் அரசனின் கோபத்தை இன்னும் தூண்ட நினைத்தார்களா?

ஆனால், தங்கள் கோபத்தால் தாங்களே அழிந்துபோகின்றனர்.

புத்தரிடம் ஒருமுறை, 'கோபத்திற்கு என்ன தண்டனை?' என்று கேட்கப்பட்டபோது, 'ஒருவர் கொள்ளும் கோபமே அவருக்குத் தண்டனை. ஏனெனில் அது அவரை அழித்துவிடும்' என்கிறார்.

இன்றைய நாளில் நம்முடைய காயங்களை எண்ணிப் பார்க்கலாம்.

இப்தாவின் கோபம், தனிமை, அநாதை உணர்வு, கூடா நட்பு, பணியாளர்களின் கோபம் நம்மிடமும் இருந்தால் அவற்றைச் சரி செய்ய முற்படலாம்.

இல்லையென்றால், நாமும் நம் உறவுகளும் அன்றாடம் பலியிடப்பட வேண்டிய சூழல் வந்துவிடும்.

காயங்களுக்கு மருந்திடுபவர் கடவுளே.

Tuesday, August 20, 2019

முணுமுணுத்து

இன்றைய (21 ஆகஸ்ட் 2019) நற்செய்தி (மத் 20:1-18)

முணுமுணுத்து

எதிர்பார்ப்புக்கள் அதிகமானால் முணுமுணுப்புக்கள் அதிகமாகும். இல்லையா?

'ஆம்' என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

காலையிலிருந்து திராட்சைத் தோட்டத்தில் வெயிலையும், நாளின் சுமையையும் தாங்கிய அந்தச் சில நபர்கள் தங்களுக்கு இன்னும் கொஞ்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததில் தவறில்லை. தாராளமான அந்தத் தோட்டக்காரர் நீதியானவர் என்பதையும் அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை.

ஊதாரி மைந்தன் எடுத்துக்காட்டில் வரும் மூத்த மகன், இன்றைய எடுத்துக்காட்டில் வரும் இந்த நீண்ட நேர உழைப்பாளிகள் இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பாவமாக இருக்கும். பல நேரங்களில் இவர்களை மிகவும் எதிர்மறையாகவே விமர்சிக்கிறோம். ஆனால், இவர்களின் வலி நியாயமானதே.

ஆனால், வாழ்க்கையில் எல்லாமே லாஜிக் படி நடப்பதில்லை என்பதற்கு இவர்கள் நல்ல எடுத்துக்காட்டுக்கள்.

வாழ்வின் ஆச்சர்யங்களுக்கு தயாராக இல்லாதவர்கள் வாழ்வைப் பற்றி முணுமுணுப்பார்கள்.

நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பது திருமறைகளில் இருக்குமே தவிர வாழ்வில் நடப்பதில்லை. ஆகையால்தான், கடவுளும், 'நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?' என்று காயினிடம் கேள்வியாகச் சொல்கிறாரே தவிர, 'நல்லது செய்தால் உயர்வடைவாய்' என்று உறுதியாகச் சொல்லவில்லை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். நீத 9:6-15), மக்கள் கிதியோனின் மகன் அபிமெலேக்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டதை உருவகமாகச் சாடுகின்றார் யோத்தாம் என்னும் இளைய மகன். முள்செடியை மரங்கள் அரசனாக ஏற்றுக்கொண்டார்கள் என்கிறார். சில நேரங்களில் பயத்தினால் நாம் முட்செடியைத் தேடித் தேர்ந்துகொள்கிறோம். பின் முட்செடியுடனேயே வாழப் பழகிவிடுகிறோம். முட்செடி நாம் எவ்வளவு தண்ணீர் ஊற்றி, உரமிட்டுப் பராமரித்தாலும் தன் இயல்பை மாற்றிக்கொள்வதில்லை. ஆக, முட்செடியோடு வாழப் பழகுவதும் நல்லதே.

வாழ்க்கையின் ஆச்சர்யங்களை அதிர்ச்சியாகப் பார்க்காமல், ஆச்சர்யமாகப் பார்த்தால், வாழ்க்கையில் கருணையும் கிடைக்கும், நீதியும் கிடைக்கும் என்று ஏற்றுக்கொண்டால், நம் கைகளில் உள்ளதைப் பார்க்குமுன் அடுத்தவர் கைகளில் உள்ளதைப் பார்க்காமல் இருந்தால் முணுமுணுப்புக்கள் குறையும்.

'தோழா! நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?' என்று கேட்கிறார் நிலக்கிழார்.

'நீ இருக்கிறவன்.நான் இல்லாதவன். நீ இடுகிறவன். நான் நீட்டுகிறவன்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டே மௌனமாக வெளியேறுகின்றான் இவன்.

'ஒரு மணி நேரம் வேலை செஞ்ச எங்களுக்கும் அதே கூலிதான்!' என்று கேலி பேசுகிறான் உடன் ஊர்க்காரன்.

'கஷ்டப்படாம வந்த காசு கையில ஒட்டாது' என்று ஒப்புக்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறான் இவன்.

இவன் இன்றும் நம்மிடைய இருக்கிறான். சில நேரங்களில் அவன் நீங்களாகவும் நானாகவும் இருக்கிறான்.

Sunday, August 18, 2019

விட்டகலவில்லை

இன்றைய (19 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (நீத 2:11-19)

விட்டகலவில்லை

கடந்த சில நாள்களாக நாம் வாசித்து வந்த யோசுவா நூல் முடிந்து அதன் தொடர்ச்சியாக நீதித் தலைவர்கள் நூலுக்குள் நாம் நுழைகிறோம். நீதித் தலைவர்கள் என்பவர்கள் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளோ அல்லது நடுவர்களோ அல்ல. மாறாக, இவர்கள் அவரவர் குலங்களின் தலைவர்கள். போர்த்தளபதிகள் அல்லது போராளிகள்.

நீதித் தலைவர்கள் நூலில் உள்ள நிகழ்வுகள் எல்லாம் 'பாவ வட்டம்' என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளன. அது என்ன 'பாவ வட்டம்'?

இஸ்ரயேல் மக்கள் சிலைவழிபாடு செய்து கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்கின்றனர் - பாவத்திற்குத் தண்டனையாக கடவுள் எதிரிகளை அனுப்புகின்றார் - எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு மக்கள் கடவுளிடம் குரல் எழுப்புகின்றனர் - கடவுள் அவர்கள்மேல் இரக்கம் கொண்டு நீதித் தலைவர்களை அனுப்புகின்றார் - எதிரிகள் அழிந்து நிலம் அமைதி பெறுகிறது - மீண்டும் அவர்கள் பாவம் செய்கின்றனர்.

இப்படியாக அவர்களுடைய பாவ வட்டம் சுற்றிக் கொண்டே இருக்கின்றது.

பாவம் என்பது நீரில் இருக்கும் பாசி போல. நீரில் மூழ்கிக் கொண்டிருக்கின்ற ஒருவர் அதைப் பிடிக்கிறார் என வைத்துக்கொள்வோம். சரியான நேரத்தில் அதை அவர் விடவில்லை என்றால் அது அவரைப் பிடித்துக்கொள்ளும்.

'அவர்களுடைய தீய பழக்கங்களையும் முரட்டுத்தனமான நடத்தையையும் அவர்கள் விட்டகலவில்லை' என்று பதிவு செய்கிறார் ஆசிரியர். நீதித் தலைவர்கள் நூலில் சிலைவழிபாடுதான் மிகப்பெரிய தீமையாகப் பார்க்கப்படுகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 19:16-22) நிறைவுள்ளவராக விரும்பி இயேசுவிடம் வருகின்ற செல்வரான இளவல், இயேசுவின் பதில் கேட்டு வருத்தத்தோடு செல்கின்றார். பாதி வழி வந்த அவரால் மீதி வழி வர இயலவில்லை. ஏனெனில், அவர் 'சொத்து' என்னும் சிலைவழிபாடு செய்துவந்தார்.

என்னை இறைவனிடமிருந்து திருப்பும் எல்லாமே சிலைதான். அப்படி நான் திரும்பும் ஒவ்வொரு பொழுதும் நான் சிலைவழிபாடு செய்கிறேன். நானாக மீண்டும் அவரிடம் திரும்பாத பட்சத்தில் அவர் வம்படியாக என் கழுத்தைப் பிடித்துத் திருப்புகிறார் - அவருடைய நேரத்தில், இடத்தில்.

இன்று நான் எவற்றை நோக்கித் திரும்பி நிற்கிறேன்?

சிலைகளை நோக்கித் திரும்பினால் முகவாட்டமும் வருத்தமும்தான் மிஞ்சும்.

அவருடைய இரக்கமே என்னை மீண்டும் அவரிடம் திருப்பும்.


Friday, August 16, 2019

தெளிவான தெரிவு

இன்றைய (17 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (யோசு 24:14-29)

தெளிவான தெரிவு

இன்றைய முதல் வாசகத்தில் யோசுவாவின் இறப்பு பற்றி வாசிக்கின்றோம். யோசுவாவின் இறப்புச் செய்தி நீதித் தலைவர்கள் (1-2) நூலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. தன் வாழ்வின் இறுதியில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குத் தான் கூட்டிவந்த மக்களை செக்கேமில் ஒன்று சேர்க்கின்றார் யோசுவா.

இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் வந்தபோது அங்கே ஏற்கனவே இருந்த மக்களோடு புரிந்த திருமணம், மற்றும் பழக்க வழக்கங்கள் வழியாக, மற்றவர்களின் கடவுளர்களையும் உள்வாங்கிக்கொள்கின்றனர். எல்லாக் கடவுளும் ஒன்றுதானே என்ற எண்ணம் கொண்டு, மற்ற கடவுளர்களைத் தங்கள் கடவுளுக்கு இணையாக்குகின்றனர். எப்போதெல்லாம் சிலைவழிபாடு அல்லது பிறதெய்வ வழிபாடு நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் கடவுள் அவர்களைக் கொடுiமாகத் தண்டிக்கிறார்.
இப்படி அவர்கள் தண்டனைக்கு உள்ளாகக்கூடாது என நினைக்கின்ற யோசுவா, அவர்கள் தங்களிடையே உள்ள தெய்வங்களை இன்றே விட்டுவிடுமாறு அழைப்பு விடுக்கின்றார். அவர்களுக்கு முன்மாதிரியாக, 'நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்' என்கிறார். மக்களும் யோசுவாவின் முன்மாதிரியைப் பின்பற்றுகின்றனர்.

இது இவர்களுக்கு பெரிய இழப்பாக இருந்திருக்கும். அல்லது அரை மனதாக இருந்திருக்கும். நம்முடைய சாதாரண மனித உறவுகளை விடவே மலைப்பாக இருக்கும்போது கடவுளர்களை விட்டுவிடுவது சுலபமா? ஆனால் சில நேரங்களில் நாம் கடவுளர்களை எளிதாகக் கைவிட்டுவிடுகிறோம்.

தாங்கள் பற்றிக்கொண்டிருந்த அனைத்துப் பொம்மைகளையும் ஆற்றில் தூக்கி எறிகின்றனர் மக்கள்.

இந்த மனநிலையைத்தான் சிறுகுழந்தைகளின் மனநிலை எனப் பாராட்டுகிறார் இயேசு.

இன்று நான் எடுக்க வேண்டிய தெரிவு என்ன?

அதைத் தெளிவாக எடுக்க என்னால் முடிகிறதா?


Thursday, August 15, 2019

அருள்கொடை

இன்றைய (16 ஆகஸ்ட் 2019) நற்செய்தி (மத் 19:3-12)

அருள்கொடை

இன்றைய முதல் வாசகத்தோடு (காண். யோசு 24:1-13) நம் சிந்தனையைத் தொடங்குவோம். இஸ்ரயேல் மக்கள் யோசுவாவின் தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர். ஒவ்வொரு குலத்தாரும் தத்தம் இடத்தில் குடியேறுகின்றனர். இந்த நேரத்தில் எல்லாரையும் ஒன்றுகூட்டுகின்ற இறைவன் தாம் செய்த அனைத்து செயல்களையும் ஒரு குறும்படம் போல் அவர்கள் முன் ஓடவிடுகின்றார்.

என்னைப் பொறுத்தவரையில் இது ஒவ்வொருவரின் மனத்திரையில் ஓடிய குறும்படம் என நினைக்கிறேன். நம் வாழ்வில் அடிக்கடி நம்முடைய பழைய வாழ்வியல் தருணங்கள் வந்து செல்லும். படம் போல மின்னி மறையும். அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் இம்மக்களின் அனுபவமும்.

இறுதியில் ஆண்டவராகிய கடவுள், 'இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று. உங்கள் அம்பாலும் அன்று. நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீர்கள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே!' என்று நிறைவு செய்கிறார்.

'உங்கள் வாளாலும் அன்று, அம்பாலும் அன்று' - இதை நம் வாழ்வில் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. இப்படி நினைவுபடுத்தும்போது அவர் நம் வாழ்வில் செயலாற்றியது நமக்கு நினைவிற்கு வரும்.

இன்றைய நற்செய்தியிலும், கணவர் மனைவி உறவு பற்றிப் பேசிவிட்டு, மணத்துறவை முன்வைக்கும் இயேசு, அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்.

கடவுள் கலக்காத எதுவும் - அது உறவானாலும் உரிமைச் சொத்தானலும் உழைப்பானாலும் - வீண் என்றே சொல்லலாம். ஏனெனில், மனிதர்கள் தங்களிலேயே நிறைவற்றவர்கள். நிறைவற்றவர்கள் நிறைவான எதையும் தர முடியாது.

'விண்ணரசின் பொருட்டு மண உறவு கொள்ள முடியாத நிலைக்குத் தங்களையே ஆளாக்குபவர்கள் பேறுபெற்றவர்கள்' என்கிறார் இயேசு.

பிளவுபடா உள்ளம் அவருடைய அருள்கொடை.

Wednesday, August 14, 2019

மரியாளின் விண்ணேற்பு

இன்றைய (15 ஆகஸ்ட் 2019) திருநாள்

மரியாளின் விண்ணேற்பு

'தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்.
தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி இருக்கிறார்.
தமக்கு ஏற்புடையரானோரய்த் தம் மாட்சியில் பங்குபெறச் செய்தார்.' (உரோ 8:30)

குருக்களின் மாலைச் செபத்தில் மேற்காணும் இறைவார்த்தைகளே வாசகமாக கொடுக்கப்பட்டுள்ளன.

தன்னுடைய கணவரை வாகன விபத்தில் இழந்த இளம்பெண் ஒருத்தி, ஒரு வாரமாக வேலைக்குச் சென்று, கூலி வேலை செய்து, தன்னுடைய மூன்று குழந்தைகளைக் காப்பாற்ற வழி தெரியாமல், தன் கணவனின் இழப்பையும் காணாமல் தன் கணவனின் கல்லறைக்குச் சென்று தன்னையே தீக்கு இரையாக்கினாள் என்ற செய்தியை இன்று காலை வாசித்தேன்.

இந்தப் பெண் செய்தது நியாயமா? நியாமில்லையா? என்று சமூக வலைதளங்களில் நிறையப் பேர் வாதாடிக்கொண்டிருந்தனர்.

என்னதான் நாம் வாதாடினாலும் இப்பெண் நமக்குத் திரும்பக் கிடைக்கப்போவதில்லை.

இன்று ஒரு பெண்ணின் விண்ணேற்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

ஒரு பெண்ணால் அடைக்கப்பட்ட விண்ணகத்தின் வாயில்களை இன்னொரு பெண்ணால் திறக்கக் கடவுள் திருவுளம் கொண்டார் என்கிறது இன்றைய அழைப்புப் பல்லவி.

தீக்கிரையான அந்தப் பெண் அந்த முடிவை எடுக்க என்ன காரணம்?

தன்னையும் தாண்டித் தன் வாழ்க்கையை அவளால் ஏன் பார்க்க முடியவில்லை?

மரியாளின் விண்ணேற்பு தரும் புரிதல் இதுதான்: கொஞ்சம் விரிவாக அல்லது அகலமாகப் பார்ப்பது.

'எல்லாரும் இறக்கத்தானே போகிறோம். சும்மா இருந்தா என்ன?' என்று கேட்பதும் தவறு.

'சும்மாதான் இருக்கிறோம். இறந்தா என்ன?' என்று கேட்பதும் தவறு.

இப்போது இருக்கின்ற நிலையைவிட இன்னொரு நிலை நன்றாக இருக்கும் என்ற எதிர்நோக்கே நம்மை உந்தித் தள்ளுகிறது. விண்ணகம் பற்றிய எதிர்பார்ப்பே நம்மை மண்ணகத்தில் நன்றாக வாழச் செய்கிறது.

ஆக, நாளையைப் பற்றிய எதிர்நோக்கு உள்ளவரே வாழ முடியும். அந்த எதிர்நோக்கு நேர்முகமாக இருந்தால்தான் ஒருவர் வெற்றியாளராக முடியும்.

மரியாள் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வை நேர்முகமாகப் பார்த்தார்.

சத்திரத்தில் இடமில்லாத நிலையில் இந்த உலகமே தன் வீடு என்று பார்த்தார்.

திராட்சை இரசம் தீர்ந்து போன வெற்றுக் கற்சாடிகளை திராட்சை இரசம் ததும்பும் குடுவைகளாகப் பார்த்தார்.

கல்வாரியில் தன் மகனுடைய இறப்பில் ஒட்டுமொத்த மனுக்குலத்தின் மீட்பைப் பார்த்தார்.

நேர்முகமாகப் பார்த்தலும், எதிர்நோக்குதலும் வாழ்வை நீட்டிக்கின்றன.

ஆங்கிலேயர்கள் இல்லாத ஒரு நாட்டை நம் முன்னோர்கள் எதிர்நோக்கியதால்தான் விடுதலைக்காக  அவர்களால் போராட முடிந்தது.

கொஞ்சம் நேர்முகப்பார்வை. இன்னும் கொஞ்சம் எதிர்நோக்கு. நிறைய பொறுமை.

இதுவே விடுதலை. இதுவே விண்ணேற்பு.

Tuesday, August 13, 2019

கல்லறை இருக்குமிடம்

இன்றைய (14 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (இச 34:1-12)

கல்லறை இருக்குமிடம்

சில ஆண்டுகளுக்கு முன் நான் உடல்தானம் செய்யலாம் என்று எண்ணியபோது என்னுடைய நண்பர்கள் சிலர், 'ஐயயோ! அதெல்லாம் வேண்டாம்! இறந்த ஒருவரை அடக்கம் செய்து அந்த இடத்தில் சென்று நாம் நிற்க, செபிக்க என்று ஒரு கல்லறையில் அடக்கம் வேண்டும்!' என்றார்கள்.

இன்று பட்டினத்தார் ஜீவ சமாதி அடைந்த நாளைக் கொண்டாடுகிறோம். வள்ளலார், பட்டினத்தார் போன்றவர்கள் திடீரென்று அப்படியே கல்லாக, சிலையாக, லிங்கமாக மாறிவிடுகின்றனர். அவர்கள் நினைவை நாம் ஜீவ சமாதி அடைந்த இடங்களில் கொண்டாடுகிறோம்.

இறந்தபின்னும் நாம் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் நீட்சியே நாம் அடக்கம் செய்யப்படவும் கல்லறை கட்டப்படவும் நினைப்பது. இது நம் எண்ணம் மட்டுமல்ல. எகிப்து நாட்டின் பாரவோன்கள் அன்றே இவற்றைச் செய்தார்கள். உடலைப் பதப்படுத்துவது, மம்மிகள் ஆக்குவது, பிரமிடுகளில் அடக்கம் செய்வது என்று நிறையக் காரியங்கள் செய்தனர்.

இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்த விடுதலை வீரர் மோசே இறக்கும் நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்;. 'அவருடைய கல்லறை இருப்பது எந்த மனிதருக்கும் தெரியாது' என்று பதிவு செய்கிறார் ஆசிரியர். ஒன்றை நாம் பார்க்கும்வரை தான் அது நினைவில் இருக்கிறது. அப்படி என்றால் மோசேயின் நினைவு மக்களுக்கு இருக்கக்கூடாது என்று கடவுள் நினைத்தாரா?

பின் லேடன் கொலை செய்யப்பட்டபோது அவருடைய கல்லறை எங்கும் இருக்கக் கூடாது என்று நினைக்கின்ற அமெரிக்க அரசு அவரது உடலைக் கடலில் ஆழ்த்தி மீன்களுக்கு இரையாக்கியது.

ஆக, கல்லறை அழிக்கப்படுதல் ஒரு கொடுமையான உணர்வு.

இன்று கல்லறைகள் சேதப்படுத்தப்படும்போதும் நம்முடைய நினைவு சேதப்படுவதாக எண்ணுகின்றோம்.

நாம் என்றும் அடுத்தவருடைய நினைவில் இருக்க வேண்டும் என்று சொல்லி அதற்கேற்ற செயல்களைச் செய்யச் சொல்கிறது நம்முடைய ஈகோ. ஆனால், ஒருகாலத்தவரைப் பற்றிய நினைவு மறுகாலத்தவருக்கு இருப்பதில்லை என்கிறார் சபை உரையாளர்.

மிகவும் குறுகிய நாள்கள் வாழ்கின்ற நாம் மிகவும் குறுகிய நாள்களே நினைவிலும் வாழ்கின்றோம்.

இதுவே நம் வாழ்வின் வேகத்தையும் முக்கியத்துவத்தையும் அதிகரிக்கிறது.

இதை உணர்ந்த இன்றைய புனிதர் மாக்ஸிமிலியன் கோல்பே தன்னுடைய உடன் சிறைக்கைதி ஒருவருக்காக உயிரை இழக்கத் துணிகின்றார்.

நாம் இவ்வுலகில் வாழும் காலம் முழுவதும் மனமொத்திருந்தால் அங்கே எல்லாம் சாத்தியமாகும் என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 18:15-20) மொழிகிறார் இயேசு.

மோசேயின் கல்லறை இன்று இல்லை என்றாலும் அவரின் நினைவு எங்கும் இருக்கிறது. கல்லறைகளையும் கடந்து நினைவுகள் சாத்தியம் என்பதைத் தன் எளிய, தாழ்ச்சியான வாழ்வால் காட்டுகின்றனர் மோசேயும் கோல்பேயும்.


சிறுபிள்ளை

இன்றைய (13 ஆகஸ்ட் 2019) நற்செய்தி (மத் 18:1-5, 10, 12-14)

சிறுபிள்ளை

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?' என்ற கேள்வி இயேசுவிடம் முன்வைக்கப்படுகின்றது. நம்பிக்கையின் தந்தை ஆபிரகாமையோ, இஸ்ரயேலின் பிதாமகன் யாக்கோபையோ, விடுதலை நாயகன் மோசேவையே, போராளி யோசுவாவையோ, பேரரசர் தாவீதையோ முன்வைக்காத இயேசு, சிறுகுழந்தையை முன்வைக்கின்றார்.

ஆனால், மேற்காணும் நபர்கள் யாவரும் குழந்தை உள்ளம் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை.

மோசேயின் குழந்தை உள்ளத்தை இன்றைய முதல் வாசகத்தில் (காண். இச 31:1-8) பார்க்கிறோம். தான் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதையும், தனக்கு வயதாகிறது என்பதையும், தன்னுடைய இடத்திற்கு இன்னொரு ஆள் வந்துவிட்டார் என்பதையும் எந்தவொரு கிளர்ச்சியோ, முணுமுணுப்போ இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார் மோசே.

இந்த மனநிலை மோசேக்கு எப்படி வந்தது?

எவர் ஒருவர் தன்னுடைய வேலைக்கான கனிகளை எதிர்பாராமல் வேலை செய்கிறாரோ, எவர் ஒருவர் தன்னுடைய அடையாளங்களைக் கடந்து நிற்கிறாரோ, எவர் ஒருவர் தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்கிறாரே அவருக்கு மட்டுமே இந்த மனநிலை வரும்.

இதுவே குழந்தை மனநிலை.

இந்த மனநிலையை நாம் பெற்றால் நாமும் விண்ணரசில் பெரியவர்களே!

Friday, August 9, 2019

புனித லாரான்ஸ்

இன்றைய (10 ஆகஸ்ட் 2019) திருநாள்

புனித லாரான்ஸ்

இன்று மறைசாட்சியான புனித லாரன்சின் திருநாளைக் கொண்டாடுகிறோம். உரோமைத் திருஅவை வரலாற்றில் மிக முக்கியமான நபர் இவர்.

கடந்த சில நாள்களுக்கு முன், 'பத்தில் ஒன்று கொடுப்பது' என்ற ஒரு தலைப்பில் பாடம் கற்றேன். இந்த வகுப்பை எடுத்த ஆசிரியர், 'கொடுத்தல் என்பது ஒருவரின் ஆன்மீக முதிர்ச்சியைக் காட்டுகிறது. கொடுத்தல் என்பது நம்பிக்கையின் அளவுகோல். அதிகமாக நம்பிக்கை கொள்பவர் அதிகம் கொடுக்கிறார். குறைவாக நம்பிக்கை கொள்பவர் குறைவாகக் கொடுக்கிறார்' என்றார். அவர் சொன்னதை ரொம்ப சீரியஸாக எடுத்து, இப்போது பத்தில் ஒன்று, இரண்டு என்று கொடுக்கவும் துணிந்திருக்கிறேன். ஆனாலும் உள்ளத்தின் ஓரத்தில், 'சேர்த்து வை. நாளைப் பயன்படும்' என்று மின்னல் ஒன்றும் அவ்வப்போது வெட்டுகிறது.

ஒருவரின் நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே ஒருவரின் கொடுத்தல் அமைகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதன் அடிப்படையில்தான் நற்செய்திக் கதைமாந்தர் கைம்பெண் தன்னிடம் உள்ள அனைத்தையும் போட்டுவிடுகிறாள்.

புனித லாரன்ஸ் மற்றும் இவர் போன்றவர்களின் மறைச்சாட்சியத்தைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கிறது. இருப்பதிலிருந்து கொஞ்சம் கொடுக்கலாம். ஆனால், இருப்பதை அப்படியே கொடுக்கும் பக்குவம் இவர்களுக்கு எப்படி வந்தது? இவர்கள் எந்த அளவிற்கு கடவுளை நம்பினார்கள் என்றால் இந்த அளவுக்கு இவர்களால் கொடுக்க முடியும்?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 9:6-10), கொடுத்தலின் அவசியம் பற்றி கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்ற பவுல், 'குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார்' என்றும், 'எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் கடவுள் உங்களுக்குத் தருவார்' என்றும், 'ஏழைகளுக்கு வாரி வழங்கும்போது நீதி நிலைக்கிறது' என்றும் சொல்கிறார்.

ஆக, கொடுத்தலுக்கு மூன்று காரணங்கள் உள்ளன: (அ) நிறைவாகப் பெற வேண்டும் என்பதற்காகக் கொடுக்க வேண்டும் - இந்தத் தன்னலத்திற்காகவாவது கொடுக்க வேண்டும், (ஆ) கொடுத்ததால் வரும் சின்னக் குறையை கடவுள் உடனடியாக நிறைவு செய்துவிடுகிறார், (இ) கொடுத்தல் நம் தலையைக் காக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 12:24-26), கோதுமை மணி உருவகத்தை முன்மொழிகின்ற இயேசு, கோதுமை மணி தன்னையே அழித்தால்தான், அளித்தால்தான் அது விளைச்சலைத் தரும் என்கிறார்.

பத்தில் ஒரு பங்கு கொடுக்க நினைத்துக்கொண்டிருந்தவர் நடுவில் பத்தையும் கொடுக்கத் துணிந்தார் புனித லாரன்ஸ்.

'என் வேலை, என் சம்பளம், என் உணவு, என் படிப்பு, என் பொழுதுபோக்கு' என இருக்கும் ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் திருமணம் முடித்தவுடன் ஒருவர் மற்றவருக்குக் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். எடுத்தல் மறைந்து கொடுத்தல் மலர்கிறது. உணர்வு முதிர்ச்சி இல்லாத ஒருவரே எப்போதும் எடுத்துக்கொள்ள நினைக்கிறார்.

எடுத்துக்கொள்தல் குறைத்து கொடுத்துக் கொள்ளக் கைகளை விரிப்போம்.

தன் முழு உடலையும் எரிப்பதற்கெனக் கொடுத்த லாரன்ஸ் நம்மைத் தூண்டி எழுப்புவாராக!


Thursday, August 8, 2019

உலகம் முழுவதையும்

இன்றைய (9 ஆகஸ்ட் 2019) நற்செய்தி (மத் 16:24-28)

உலகம் முழுவதையும்

'ஒருவர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் அவருடைய ஆன்மாவை -வாழ்வை அவர் இழந்துவிட்டால் அதனால் அவருக்கு என்ன பயன்? தம் ஆன்மாவுக்கு - வாழ்வுக்கு ஈடாக அவர் எதைக் கொடுப்பார்?'

பிரான்சிஸ் சேவியர் தன்னுடைய வகுப்பறையில் பேராசிரியராக உரையாற்றிவிட்டு வெளியே வந்தபோது, இனிகோ சொன்ன மேற்காணும் நற்செய்தி வார்த்தைகள் அவருடைய வாழ்வின் போக்கையே மாற்றிப்போடுகின்றது.

உலகில் உள்ள எல்லாமும் நமக்கு வாழ்வு தந்துவிடுவதில்லை.

காலையில் நன்றாக உண்கிறோம். மதிய நேரத்தில் பசித்துவிடுகிறது.

காலையில் புதிய ஆடை அணிகிறோம். மாலையில் அழுக்காகிவிடுகிறது.

காலையில் புதிய புத்தகம் ஒன்றை வாசித்து அறிவை வளர்க்கிறோம். மாலையில் அதைவிட புதிய கருத்து ஒன்று வந்துவிடுகிறது. அல்லது நாம் வாசித்தது பழையதாகிவிடுகிறது.

காலையில் நம் உறவினர் அல்லது நண்பரைச் சந்திக்கின்றோம். எவ்வளவோ பேசுகின்றோம், சிரிக்கின்றோம். ஆனால், மாலையில் ஏதோ ஒரு வெறுமை நம்மை கவ்விக்கொள்கின்றது.

ஆக, உடல் சார், மூளைசார், உள்ளம்சார் எதுவும் நமக்கு நிறைவைத் தருவதில்லை. அல்லது அவை நிறைவைத் தருவன போலத் தோன்றினாலும் விரைவிலேயே அவை சலிப்பையும் வெறுமையையும் தந்துவிடுகின்றன.

இம்மூன்றையும் கடந்த ஆன்மா சார் ஒன்றை இன்றைய நற்செய்தி நமக்கு முன்வைக்கின்றது.

'ஆன்மா சார்' அல்லது 'கடவுள் சார்' நிலையில் நிறைவு மட்டுமே உண்டு. இதை அடைவதற்குத் தொடர் முயற்சி தேவை. அந்த முயற்சியின் முதல் படி இழப்பது.

மேற்காணும் மூன்று நிலையிலும் நாம் கூட்டுகிறோம் அல்லது சேர்க்கிறோம். உணவை, உடையை, அறிவை, உறவைக் கூட்டிக்கொண்டே போகிறோம். ஆனால், கூட்டுவதில் அல்ல குறைப்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது.

வாழ்க்கை இதை நமக்கு நன்றாக உணர்த்துகிறது. குழந்தையாய் இவ்வுலகிற்கு வந்தபோது வெறுமையாய் வருகிறோம். ஏனெனில் இறைமையிலிருந்து நாம் வருகிறோம். அப்புறம் வரிசையாகச் சேர்த்துக்கொண்டே போகிறோம். உடை, உணவு, இருப்பிடம், படிப்பு, நண்பர்கள், உறவினர்கள் என கூடிக்கொண்டே போகிறது. இறுதியில், உணவு ஒவ்வாமை, ஒரு கட்டில் அளவு இடம், ஒரு வேளை உணவு, மிகக் குறைவான உடை, மிகக்; குறைவான நண்பர்கள், உறுப்புகள் செயல் இழப்பு என இறுதியில் இறைமையாகவே மாறிவிடுகிறோம்.

இந்த இறுதியை முதலிலேயே மனத்தில் வைத்து வாழ்பவர்கள் தங்கள் ஆன்மாவை இழக்கமாட்டார்கள். இவர்கள் வாழ்வின் முக்கியமானவற்றின்மீது மட்டுமே அக்கறை காட்டுவார்கள். முக்கியமானவற்றை முதன்மைப்படுத்துதலே நாம் சுமக்கும் சிலுவை.

Wednesday, August 7, 2019

அவசரம்

இன்றைய (8 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (எண் 20:1-13)

அவசரம்

'ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு' என்று நம் மொழியில் பழமொழி உண்டு. ஆங்கிலத்தில், 'haste makes waste' என்கின்றனர். ஆத்திரமும் அவசரமும் இணைந்தே செல்கிறது. ஏனெனில் நம்முடைய ஆத்திரத்தில் நாம் அவசரமும் படுகிறோம். ஆத்திரத்திலும் அவசரத்திலும் நம்முடைய புத்தி வேலை செய்ய மறுக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களின் ஆத்திரமும் அவசரமும் அவர்களின் தலைவர்களான மோசே மற்றும் ஆரோனின் புத்தியையும் தடுமாறச் செய்யும் நிகழ்வைப் பார்க்கிறோம்.

இஸ்ரயேல் மக்கள் மோசேக்கு எதிராகவும் கடவுளுக்கு எதிராகவும் முணுமுணுக்கும் நிகழ்வு பெரும்பாலும் உணவை மையமாக வைத்தே இருக்கிறது. 'இறைச்சி இல்லை,' 'மீன் இல்லை' என்று புலம்பியவர்கள் இன்று, தானிய நிலம், அத்தி மரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எவையும் இங்கு இல்லை என்று சொல்லி, இறுதியாக, 'குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லையே' என்று புலம்புகின்றனர். கடவுள் மற்றும் மோசே மேல் உள்ள ஆத்திரத்தில் அவர்களுக்கு புத்தி மழுங்கிவிடுகிறது. ஆகையால்தான், பாலைநிலத்தில் நீர்ச்சத்துள்ள தாவரங்கள் சாத்தியமில்லை என்று அவர்களுடைய புத்தி யோசிக்க மறுத்துவிடுகிறது. இந்த ஆத்திரமும் அவசரமும் மோசேயையும் பாதிக்கிறது. ஆகையால்தான், 'கோலை எடுத்துக்கொள் ... பாறை தண்ணீரைத் தரும்படி அதனிடம் பேசுங்கள்' என ஆண்டவர் சொல்ல, மோசே அவசரத்தில் பாறையிடம் பேசுவதற்குப் பதிலாக இரண்டு முறை அதனைக் கோலால் அடித்துவிடுகின்றார்.

மக்களின் ஆத்திரம், மோசேயின் ஆத்திரமாய் மாற, அது இப்போது கடவுளின் ஆத்திரமாக மாறுகிறது.

'நீங்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாமல் போனதால் இந்தச் சபையை நான் அவர்களுக்குக் கொடுக்கும் நாட்டில் கொண்டுபோய்ச் சேர்க்க மாட்டீர்கள்' என்று மோசேயும் ஆரோனும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையமுடியாதபடி செய்துவிடுகின்றார் ஆண்டவராகிய கடவுள். ஆனால், ஆண்டவர் இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் மோசேயும் எலியாவும் இயேசுவுக்குத் தோன்றும் நிகழ்வில்தான் மோசே முதன் முதலாகவும், இறுதியாகவும் வாக்களிக்கப்பட்ட நாட்டில் கால் பதிக்கின்றார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் பாடுகளை முன்னுரைக்கின்றார். 'நீர் கடவுளின் மெசியா' என்று நம்பிக்கை அறிக்கை செய்த பேதுரு, அவசரத்தில், 'ஆண்டவரே இது உமக்கு நேராது' என்று இயேசுவைக் கடிந்துகொள்ள, இயேசு அவரை, 'அப்பாலே போ சாத்தானே' என்று கடிந்துகொள்கின்றார்.

இவ்வாறாக, அவசரத்தில் இஸ்ரயேல் மக்கள், மோசே, கடவுள், பேதுரு என எல்லாருமே தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

ஆத்திரமும் அவசரமும் நம்முடைய வாழ்வை நாம் இனிமையாகவும் முழுமையாகவும் வாழ்வதற்குத் தடையாக இருக்கின்றன.

ஆத்திரத்திலும் அவசரத்திலும் நாம் செய்யும் ஒவ்வொன்றையும் திரும்பவும் செய்ய வேண்டிய நிலை வந்துவிடுகிறது. அந்த நேரத்தில் நம்முடைய நேரம் இரண்டாவது முறை செலவழிவதோடு, நம்முடைய ஆற்றலும் நிறையவே செலவழிகிறது. இதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி?

ஆத்திரமும் அவசரமும் களைவது.

ஆத்திரம் களைய வேண்டுமெனில் எதிர்பார்ப்புக்களைக் களைய வேண்டும்.

அவசரம் களைய வேண்டுமெனில் பரபரப்பைக் களைய வேண்டும்.

அத்திப்பழம், திராட்சை, மாதுளை இல்லை என்றால் என்ன? இன்று இல்லை என்றால் பரவாயில்லை, நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இஸ்ரயேல் மக்கள் கொஞ்சம் கோபம் குறைத்து பொறுமை காத்திருந்தால் மோசேயின் தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைந்திருப்பார்கள்.

ஆண்டவரின் மெசியா நிலை அவரின் பாடுகள் வழியாகவே வரும் என்று பேதுரு ஒரு நொடி நினைத்திருந்தால் இயேசுவின் கடிந்துரைக்கு ஆளாயிருக்க மாட்டார்.

குறைவான எதிர்பார்ப்பு, நிறைவான பொறுமை - வாழ்வில் வெற்றி தரும்.


Tuesday, August 6, 2019

உளவு பார்த்தல்

இன்றைய (7 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (எண் 13:1-2,25-33, 14:1,26-30,34-35)

உளவு பார்த்தல்

இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறி ஏறக்குறைய கானான் நாட்டிற்கு அருகில் வந்துவிட்டனர். வுhக்களிக்கப்பட்ட நாடு என்பது இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் ஒரு தட்டில் வைத்து வழங்கிய ஒரு கொடை அல்ல. மாறாக, அதை அவர்களே வென்று உரிமையாக்கிக் கொள்ளும் கட்டாயமும் அவர்களுக்கு இருந்தது. இப்பின்புலத்தில் குலத்திற்கு ஒன்று என ஆள்களைத் தெரிவு செய்து 12 பேரை உளவுபார்க்க அனுப்புகின்றார் மோசே.

அவர்கள் நாற்பது நாள்கள் உளவு பார்க்கின்றனர்.

உளவு பார்த்தல் ஒரு முக்கியமான வேலை. வேற்று நாட்டில் வேற்று உருவில் தங்கி சொந்த நாட்டிற்குத் தரவுகளை அனுப்ப வேண்டும். ஆள்மாறாட்டம், வேடம், நம்பிக்கைத் துரோகம் என பல விடயங்கள் இதில் அடங்கியிருந்தாலும், போர் தந்திரத்தில் ஒன்றாக இது கருதப்படுவதால் இப்படிச் செய்வது தர்மம் என்றும் கருதப்பட்டது. இன்றும் ஒரு நாடு மற்றொரு நாட்டை உளவு பார்க்க ஆள் அனுப்புகிறது. மேலும், இன்று நம்முடைய கணிணியை வேறொங்கோ இருந்து ஒருவர் உளவு பார்க்க முடியும். நாம் கைகளில் தூக்கித் திரியும் அலைபேசிகளைக் கொண்டும் மற்றவர்கள் நம்முடைய இருப்பு, இருத்தல், இயக்கம் ஆகியவற்றையும் உளவுபார்க்க முடியும்.

மோசே அனுப்பிய 12 பேரில் 2 பேர் நேர்முகப் பார்வையோடும், 10 பேர் எதிர்மறைப் பார்வையோடும் வீடு திரும்புகின்றனர்.

'நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக்கொள்வோம். ஏனெனில் நாம் அதை எளிதில் வென்றுவிட முடியும்' என்று சொல்கின்றனர் 2 பேர் (யோசுவா, காலேபு).

'நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது ... அவர்கள் நம்மைவிட வலிமை மிக்கவர்கள் ... தன் குடிமக்களையே அது விழுங்குகிறது ... மனிதர்கள் நெடிய உருவத்தினர் ... அரக்கர்கள் ... அவர்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள்' என்று சொல்கின்றனர் 10 பேர்.

இதில் கொடுமை என்னவென்றால், இந்தப் பத்துப் பேரின் சொற்களைக் கேட்டவுடன் மக்கள் அழுது புலம்ப ஆரம்பிக்கின்றனர். இரவு முழுவதும் அழுகின்றனர்.

அதிகம் பேர் சொல்வதையே உண்மை என எண்ணும் பக்குவம் அன்றும் இருந்திருக்கிறது. 'எல்லாரும் சரி' என்று சொல்லிவிட்டால் அது சரி ஆகிவிடுமா?

கடவுள் மக்களைக் கடிந்துகொள்கின்றார். மேலும் எதிர்மறையாக எண்ணிய யாரும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் வரமுடியாது என்று சபிக்கின்றார்.

ஏன்?

இவர்கள் கடவுள் தங்களோடு இருப்பதை மறந்துவிட்டு, தங்களின் வலிமையை மட்டுமே முன் நிறுத்தினர். இதுதான் இவர்களுடைய பிரச்சினை. ஆனால், யோசுவாவும், காலேபும் இறைவன் தங்களோடு இருப்பதால் எளிதில் வென்றுவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர்.

இந்த நாள்களில் எனக்குத் தோன்றுவதும் இதுதான்.

இறைவன் இல்லாத எதுவும் வெறுமையாக அல்லது சுமக்க முடியாத பளுவாக மாறிவிடுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவுக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிற பெண்ணும், எல்லாமே எதிர்மறையாகத் தோன்றினாலும், நேர்முகமாக இயேசுவை மட்டும் பற்றிக்கொள்கின்றார்.

இன்று என்னுடைய பார்வை நேர்முகமாக இருக்கிறதா? அல்லது எதிர்மறையாக இருக்கிறதா?

என்னால் இறைவனின் கரத்தை எல்லாவற்றிலும் பார்க்க முடிகிறதா?

எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக நான் இறைவனைப் பிடித்துக்கொள்கிறேனா?


Monday, August 5, 2019

உருமாற்றம்

இன்றைய (6 ஆகஸ்ட் 2019) திருநாள்

ஆண்டவரின் உருமாற்றம்

இன்று நம் ஆண்டவரின் உருமாற்றம் அல்லது தோற்றமாற்றத் திருநாளைக் கொண்டாடுகிறோம். தன்னுடைய உள்வட்ட உறவுநிலையில் இருந்த மூன்று சீடர்களின் முன் உருமாறுகின்றார் இயேசு.

'மாற்றம் ஒன்றே மாறாதது'

அன்றாடம் நம் உடலிலும் உள்ளத்திலும் நிறைய மாற்றங்கள் நடக்கின்றன. இம்மாற்றங்கள் பெரும்பாலும் தாக்கத்தை நம்மேல் ஏற்படுத்துவதில்லை. ஆனால், தாக்கத்தை ஏற்படுத்தாத எந்த மாற்றமும் நல்லதல்ல.

இயேசுவின் இயல்பு சீடர்களின் கண்களுக்கு உயர்ந்ததாய்த் தெரிகிறது.

இருப்பதை விட உயர்ந்து நிற்க நினைப்பதும் உருமாற்றமே.

Sunday, August 4, 2019

விந்தை மனிதர்கள்

இன்றைய (05 ஆகஸ்ட் 2019) நற்செய்தி (மத் 14:22-36)

விந்தை மனிதர்கள்

இன்றைய முதல் வாசகம் (காண். எண் 11:4-15) யாவே இறைவனுக்கும் மோசேக்கும் நடக்கும் உரையாடலின் ஒரு பகுதியாக இருக்கிறது. மக்களின் முணுமுணுப்பைக் கேட்டுக் கடவுளிடம் புலம்புகிறார் மோசே. 'எனக்கு ஏன் இந்தக் கேடு? என்மேல் எல்லாப் பளுவையும் சுமத்தியது ஏன்?' என்று புலம்புகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அப்பம் பலுகச் செய்யும் நிகழ்வில் சீடர்கள் இயேசுவிடம், 'எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை!' என்று புலம்புகின்றனர்.

மோசே தன்னுடன் இருக்கும் கடவுளை மறந்துவிட்டார்.

சீடர்கள் தங்களுடன் இருக்கும் இயேசுவை மறந்துவிட்டார்கள்.

புpரச்சினை என்று வரும்போது இவர்கள் தங்களுக்கு வெளியே பார்க்காமல், அல்லது தங்களைவிட மேலான கடவுளைப் பார்க்காமல் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்கின்றனர். ஆகையால் தான் இவர்கள் புலம்புகின்றனர்.

இவர்களின் புலம்பலுக்கு மற்றொரு காரணம், இந்த உலகமே இவர்கள் தலைமேல் இருப்பதாக நினைத்துக்கொண்டதும்தான். 'எல்லாவற்றையும் என்றால் செய்ய முடியும்!' அல்லது 'என்னால் மட்டுமே செய்ய முடியும்!' ஏன்ற எண்ணம்தான் இவர்களிடம் மேலோங்கி இருந்தது.

ஏந்த ஒரு பளுவும் நாம் ஒரு கை, இறைவன் ஒரு கை என்று இருந்தால் எளிதாகத் தூக்கிச் சுமக்க முடியும். இல்லையா?

யாவே இறைவனும் மோசேயுடன் வழிநடக்கின்றார்.

இயேசுவும் அப்பங்களைப் பலுகச் செய்கின்றார்.

இன்று நம் வாழ்வில் நம் புலம்பல்கள் எவை?

'என்னால் மட்டும் அல்ல. அவராலேயே எல்லாம்!' என்று ஒரு நொடி நினைத்தால் நலம்.


Thursday, August 1, 2019

ஆண்டவரின் மாட்சி

இன்றைய (1 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி

நாம் கடந்த சில வாரங்களாக வாசித்து வந்த விடுதலைப் பயண நூல் இன்று நிறைவுபெறுகிறது.

'ஆண்டவர் கனிவுடன் உங்களைச் சந்திக்க வருவார்' என்ற வார்த்தைகளோடு தொடக்கநூல் நிறைவுபெற்றது.

சீனாய் மலையில் மோசேக்குத் தோன்றி, ஒளிரும் மேகமாய் நகரும் நெருப்புத்தூணாய் இஸ்ரயேல் மக்களோடு வலம் வந்து, சீனாய் மலையில், 'நாம் உங்கள் கடவுளாக இருப்போம். நீங்கள் எம் மக்களாக இருப்பீர்கள்' என்று வாக்களித்த கடவுள், இறுதியில் அவர்களோடு கூடாரம் அடித்துக்கொள்கின்றார்.

கடவுள் இறங்கி வருகின்றார்.
இந்த நிகழ்வு இயேசுவில் நிறைவுபெறுகிறது.

தூரமாய் நின்ற கடவுள் நெருங்கி வருகிறார்.

கடவுளின் பிரசன்னம் அனைத்தையும் நிறைவுபெறச் செய்கிறது. ஏனெனில், உணவு, உடை, உறைவிடம், உறவுகள், சாதனைகள், படிப்பு, வேலை தராத நிறைவை இறைவன் நமக்குத் தருகிறார். அவருடைய திருவுறைவிடத்திற்குள் நுழையும்போதே நாம் அமைதி பெறுகிறோம். இந்த இறைவனைக் காணாத, அனுபவிக்காத இதயங்களுக்கு இறைவனின் பிரசன்னத்தை நம் வழியாக அடையாளப்படுத்துவது நலம்.

இதையே இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில், இதை உணர்ந்தவர்கள், 'புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளர்' என்கிறார் இயேசு.

எனக்குள் உறையும் இறைவன் எனக்குள் இருப்பவற்றை நல்லவையாக மாற்றி வெளிக்கொணர்கிறார்.